/* up Facebook

Apr 21, 2015

உனக்கு மட்டும்: காதலும் திருமணமும் கட்டாயமா?


எனக்கு இருபத்தைந்து வயதாகிறது. இதுவரை, எந்தப் பெரிய சிக்கலையும் என் வாழ்க்கையில் சந்தித்தது இல்லை. நானாக உருவாக்கிக் கொண்டதும் இல்லை. என் வாழ்வின் பெரும்பாலான முடிவுகளை நானே எடுத்திருக்கிறேன். அவை இதுவரை என்னை வருத்தப்படுத்தியதில்லை. தனியார் துறையில் நல்ல வேலையில் இருக்கிறேன். மொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருந்ததால் நான்கு மொழிகளைக் கற்றுக் கொண்டேன். புத்தகங்கள் வாசிப்பது மட்டும்தான் என் ஒரே பொழுதுபோக்கு. என் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் என எல்லோருக்கும் என்னைப் பற்றிய பெருமிதம் அதிகம். ஆனால் இப்போது முற்றிலும் புது விதமான ஒரு சூழலை எதிர்கொள்கிறேன். அதற்குக் காரணம் என் ‘25’ வயது.

இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. இனிமேல் காதலிப்பேனா என்றும் தெரியாது. காதல் இல்லாத திருமணத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் என் பெற்றோர் சமூகத்தின் வழக்கமான முறைப்படி எனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் விருப்பமில்லாவிட்டாலும் அதை முழுவதுமாகத் தவிர்க்க முடியாத நிலையில் இருக்கிறேன்.

பொருத்தமான மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டமாக இருப்பதால் அவர்கள் முயற்சி தீவிரமடைந்திருக்கிறது. முதலில் இதை இயல்பாக எடுத்துக்கொண்டவர்கள் இப்போது பதற்றம் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். மாப்பிள்ளை கிடைக்காததற்கு என் மீது குறைகாணவும் ஆரம்பித்திருக்கிறார்கள். என் வாசிப்பு, சிந்தனை, வித்தியாசமான போக்கு ஆகியவை அவர்களுக்கு உறுத்துகின்றன. நான் திருமணத்தில் ஆர்வமில்லாமல் இருப்பதைப் பெரிய குறையாகப் பார்க்கிறார்கள். இருபத்தி மூன்று ஆண்டுகளாக என்னைக் கொண்டாடிய என் குடும்பம் இப்போது கொண்டாட மறுக்கிறது. எந்தக் காரணங்களுக்காக எனக்குக் குடும்பத்தில் மரியாதை கிடைத்ததோ அதே காரணங்கள் இப்போது அவர்களைத் தொந்தரவுக்குள்ளாக்குகின்றன.

அவர்களின் இந்த மாறுதல் எனக்கு மறைமுகமான நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அப்பா, தங்கை, தம்பி என குடும்பத்தில் எல்லோரும் திடீரென்று என்னை வித்தியாசமாகப் பார்ப்பதாகவும், சில சமயம் அலட்சியப்படுத்துவதாகவும் உணர்கிறேன். நான் குடும்பத்துக்காகச் சொல்லும் ஆலோசனைகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இது உன் வீடு இல்லை, இந்த வீட்டைவிட்டு நீ செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது எனச் சில நேரங்களில் நேரடியாகவும், பல நேரங்களில் மறைமுகமாகவும் எனக்கு உணர்த்துகிறார்கள். “நீ ஏன் யாரையும் காதலிக்கவில்லை?”என்ற தங்கையின் ஜாலியான கேள்விகூடச் சமயத்தில் குத்தலாகவே வெளிப்படுகிறது.

என்னுடைய எந்தத் திறமைகளையெல்லாம் பார்த்து என் அம்மா பெருமைப்பட்டுக்கொண்டு இருந்தாரோ, இப்போது அதே திறமைகளைப் பார்த்து பயப்படுகிறார். நான் புத்தகத்தை எடுத்துப் படிக்கும்போதெல்லாம் என் அம்மாவின் கண்களில் மிரட்சியைப் பார்க்கிறேன். ஆனால், என்னை நினைத்து மிரட்சியடையவோ, கவலைப்படவோ தேவையில்லை என என் அம்மாவுக்குப் புரியவைப்பது அத்தனை சுலபமில்லை.

என்னுடன் படித்த பெரும்பாலான நண்பர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அதனால் நட்பு வட்டத்தில் இருப்பவர்களைச் சந்திக்கும்போதும் ‘எப்போது திருமணம்?’ என்ற கேள்வியையே எதிர்கொள்கிறேன். இந்தக் கேள்வி என்னை சலிப்படைய வைக்கிறது. என் பணியிடத்திலோ அல்லது மற்ற இடங்களிலோ, என்னைச் சமூகத்தின் வரையறைகளை மதிக்காத திமிர்பிடித்த பெண் போலப் பார்க்கிறார்கள். அதனால்தான் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறேன் என்று நினைக்கிறார்கள்.

இங்கே ஒரு பெண் சுயமாகச் சிந்திப்பது, திறமைசாலியாக இருப்பதெல்லாம் அவளது வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களிலும் அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்தியாவின் குடும்ப அமைப்பில் உள்ள இந்தப் பிரச்சினையை ஒரு பெண்ணாக நான் அதிகம் சந்திக்கிறேன். அந்த யதார்த்தம் எனக்குப் புரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினமாக இருக்கிறது.

இருபத்தைந்து வயதில் காதலிக்காமல், திருமணத்தைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கும் ஒரு பெண் இந்தச் சமூகத்தில் வாழத் தகுதியற்றவளா? இந்தக் கேள்வி என்னை என் அன்றாட வாழ்க்கையில் அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது.

- ஹம்ஸா,சென்னை.

நன்றி - தி ஹிந்து

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்