/* up Facebook

Apr 17, 2015

மதம் பிடித்த பேச்சு - நிர்மலா கொற்றவை


வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில் இந்திய அரசியல் வெளியில் இப்போது உச்சபட்ச நகைச்சுவை பேச்சுகளை கேட்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால் உலக அரங்கில் ‘இந்திய அறிவின்’ மானம் கப்பலேறிக் கொண்டிருக்கும் வேளையில் அப்பேச்சுக்களை உதிர்ப்பவர்கள் இந்து மதம் என்னும் மதம் பிடித்த தன்மையில் அவற்றை மிகவும் பொறுப்புள்ள பேச்சாக கருதுவதே.

இந்து-இந்திய தேசிய உணர்வை வலுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட அப்பேச்சுகள் கலாச்சார காவல், சமஸ்கிருதமயமாக்கல், கல்விகளில் இந்துத்துவத்தை உட்புகுத்துதல் எனத்  தொடங்கி, விஞ்ஞானத்திற்குள் புகுந்து இப்போது ஒரு பெண்ணின் கருவறைக்கு ஆணை பிறப்பிப்பதில் வந்து நின்றிருக்கிறது.

அதிகாரத்திற்காக பிறப்பிலேயே பேதங்களைக் கற்பித்து, அதை சட்டமுமாக்கி பல்லாயிரம் ஆண்டுகளாக மனித சமூகத்தையே சாதி என்னும் கொடிய நஞ்சினுள் மூழ்கடித்து வைத்திருக்கும் இந்துத்துவவாதிகள் எல்லாவற்றிலும் தாங்களே முதலானவர்கள், மேன்மையானவர்கள் என்று கூச்சலிட்டுக் கொண்டிருப்பது ஒன்றும் நமக்குப் புதிதல்ல. தங்களின் மதம் பிடித்த பேச்சுகளால் இவர்கள் ஆழமாக விதைத்திருக்கும் வெறுப்புணர்வு என்பது சீர் செய்யவே முடியாத அளவுக்கு சமூகத்தில் புரையோடிப்போய் உள்ளது. குறிப்பாக இந்து - முஸ்லிம் என்னும் எதிர் எதிர் கட்டமைப்பு, இந்துக்களே இந்தியர்கள், இஸ்லாமியர்கள் வந்தேறிகள் என்பதே அதன் அடிப்படை. அவ்வெறுப்பை மூலதனமாக்கி இவர்கள் செய்யும் அரசியல் மனித சமூகம் சகித்துக்கொள்ள முடியாதளவுக்கு கொடூரமானதாக இருக்கிறது.

சங் பரிவார்கள் இன்னும் இதர சமாஜ்கள், சேனைகள் மூலம் ஆண்டாண்டு காலமாக ஊட்டி வளர்த்து வந்த இந்துத்துவ வெறியானது இப்போது நேரடியாக ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும்பொழுது எந்த எல்லைக்குச் செல்லும் என்பதை சொல்லவும் வேண்டியதில்லை. சமீபத்தில் கேரளாவில் நடந்த கலாச்சார காவல் தாக்குதல், காதலனுடன் சென்ற ஒரு பெண்ணை பஞ்சாயத்தில் அனைவரின் முன்னால் முலைப்பால் கொடுக்கச் சொன்ன பஞ்சாயத்து தீர்ப்புகள், மீண்டும் ராமர் கோவில் கட்டுவோம் என்னும் முழக்கங்கள் என மத-கலாச்சார அளவில் அரங்கேரும் அராஜகங்கள் ஒருபுறம் இருக்க, இப்போது அரசு இயந்திர பிரதிநிதிகளும் சர்வ சாதாரணமாக இந்து மதம் பிடித்த பேச்சுகளை உதிர்க்கும் நிலைவந்தாகி விட்டது. பிரச்சினை என்னவென்றால், அவை சர்வதேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில், தளங்களில்கூட எவ்வித குற்ற உணர்வுமின்றி பேசப்படுகின்றன. எல்லாவற்றிலும் இந்து இந்திய அடையாளமிருக்க வேண்டும் என்னும் ஒரு வெறி இவர்களை சிந்திக்க விடாமல் செய்கிறது.

சமஸ்கிருத வாரம் என்பதைக் கட்டாயமாக்கும் ஒரு சுற்றரிக்கை விட்டார்கள், பின்னர் கிறிஸ்துமஸ் தினத்தை நல்லாட்சி தினமாக அறிவித்து, பலமான எதிர்ப்புகள் விமர்சனங்கள் கிளம்பியபோது சால்ஜாப்புகள் சொல்லி சமாளித்தார்கள். மஹாபாரதம் கதையல்ல நிஜம் என்று சொன்ன இந்திய வரலாற்று கவுன்சிலின் தலைவர் சுதர்ஷன் ராவ், கூடுதலாக 5000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி, காஸ்மிக் ஆயுதங்கள் இருந்திருக்கும் என்று புராணங்களை ஆதாரமாகக் கொண்டு இவைகள் இந்திய வரலாற்று உண்மைகள் என்கிறார். இந்து தேசியராக பிரச்சினைக்குரிய விதத்தில் அறியப்பட்ட தினநாத் பாத்ரா என்பவர் பள்ளிக்கூட பாட புத்தகங்களை எழுதுவதற்கான அலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வித்துறையில், வரலாற்று துறையில் மதத்தின் தாக்கம் இப்படியிருக்க, காவல்துறையில் இந்து கலாச்சார தாக்கம் என்ன செய்திருக்கிறது தெரியுமா? சுதந்திர தினத்தன்று போர்பந்தரில் “பெண்களே பொதுவெளியில் நாகரீகமான உடையணிந்து வாரீர்” என்று சுவரொட்டிகளை காவல்துறையே அடித்து ஒட்டயுள்ளது. சொல்லப்பட்ட காரணம் பெண் விடுதலை!
இப்படிப்பட்ட வேடிக்கைகளுக்கு மகுடம் சூட்டும் விதமாக, வேத காலத்திலேயே பறக்கும் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன என்னும் காப்டன் ஆனந்த் போடாசின் ‘முத்தாய்ப்பான’ பேச்சு. இது நடந்தது இந்திய தேசிய அறிவியல் காங்கிரசில்! சமஸ்கிருதம் மூலம் பண்டைய அறிவியல் என்பதே அக்கருத்தரங்கின் ஆய்வுப்பொருள். சர்வதேசிய முக்கியத்துவம் வாய்ந்த, அதுவும் அறிவியல் துறையில் இப்படிப்பட்ட மத-மொழிச்சார்புடைய ஒரு தலைப்பு இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பா.ஜ.கவின் ஆட்சியில்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்பின் அடிப்படியிலேயே ஒருவன் தாழ்ந்தவனாகின்றான், தீண்டத்தகாதவனாகின்றான் என்று சொல்லிவந்த இந்த இந்துதுவ மடங்கள் தற்போது ‘கர் வாப்சி’ விழாக்களை நடத்திக்கொண்டு இந்தியாவில் பிறக்கும் எவரும் இந்துக்களே என்று ‘அரவணைக்கும்’ முழக்கங்களை வைக்கத் தொடங்கியுள்ளன. இந்திய தேசியத்தின் பெயரால் பயங்கரவாத எதிர்ப்பு என்னும் போர்வையில் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி வந்தவர்கள் பதின்பருவ வயது பெண்களுக்குக்கூட இந்துத்துவ வெறியேற்றி ஆயுதப் பயிற்சி கொடுத்து வருகின்றன.  இதற்கு ஆதாரமாக வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இப்படி பல்வேறு மட்டங்களில் இந்துத்துவ பிரச்சாரத்தை செய்துவந்த இவ்வரசானது தற்போது தனது  ‘சாத்வீகப்’ பார்வையை பெண்களின் கருவறை மீது செலுத்தியுள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையை நிறுவும் விதமாக “இந்து மதத்தைக் காக்க வேண்டி, இந்து பெண்கள் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று பா.ஜ.க எம்.பி சாக்‌ஷி மஹாராஜ் பேசியுள்ளார். ‘சாதியத் தூய்மையைக் காக்க வேண்டுமா பெண்ணின் கருவறைக்குப் பூட்டு போடு, மதப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமா பெண்ணின் கருவறைக்கு ஆணையிடு’ இதுவே மதவாதிகளின் சூத்திரம்.

மக்களே, இந்தியா சுதந்திரம் பெற்ற நாடாக இருந்தாலும் மதம் என்னும் நிறுவனம் நம் ஒவ்வொருவரின் மீதும் செலுத்தும் அதிகாரத்தை, நிகழ்த்தும் அட்டூழியத்தை இனியும் சகித்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? மதவாத அரசியலுக்கு, அது எம்மதமானாலும் சரி, அதை பின்பற்றுவது பாவம் என்று உங்கள் இறை நம்பிக்கை உங்களை வழிநடத்தவில்லையா?

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்