/* up Facebook

Apr 1, 2015

"உம்மத்" நாவல் மீதான விமர்சனக் குறிப்பு - விஜி (பிரான்ஸ்)


இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னர் யுத்தத்தின் கொடூரம் ,அதன் விளைவுகள் பற்றி யுத்தத்தின் நேரடிப்பங்காளர்களினாலும் அனுபவித்தவர்களினாலும் எழுதப்பட்ட பல்வேறுவகையான படைப்புகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. 1977 இல் நடந்த இனக்கலவரத்தின் பின்னர் வெளிவந்த அருளர் அவர்களால் எழுதப்பட்ட ‘லங்கா ராணி’ மற்றும் போராட்டத்தின் இடைக்காலங்களில் வெளிவந்த கோவிந்தன் அவர்களால் எழுதப்பட்ட ‘புதியதோர் உலகம்’ என்கின்ற நாவல்களையும் ஆரம்பப்புள்ளிகளாகக் கொள்ளலாம். தொடர்ந்து போராட்டம், யுத்தம் பற்றிய பலவித படைப்புகள் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களால் விமர்சனமாக, அனுபவக்குறிப்புகளாக, நாவல்களாக, கவிதைகளாக, கதைகளாகவும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
இந்தவகையில் குறிப்பாக ஷோபாசக்தியின் நாவல்கள், புஷ்பராணியின் அகாலம், விமல்குழந்தைவேலின் கசகறணம், தமிழ்கவியின் ஊழிக்காலம், முஸ்டீனின் ஹராம்குட்டி, நௌஷாத்தின் கொல்வதெழுதுதல்90 போன்ற படைப்புகளுடன் கருணாகரன், யோ.கர்ணன், சயந்தன் போன்று பலரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இந்தவரிசையில்; ஸர்மிளா ஸெய்யித் அவர்களால் எழுதப்பட்ட “உம்மத்” என்ற நாவலும் முக்கியத்துவம் பெறுகின்றது. போராட்டத்தை, யுத்தத்தை, அதன் பாதிப்பை இதற்குள்ளேயே வாழ்ந்த ஒரு முஸ்லிம் பெண் எவ்வாறு பார்க்கின்றார் என்பதுதான் இந்நாவலின் சிறப்பாகும்.

“உம்மத்” என்ற நாவல் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களின் வாழ்வைச் சித்தரிப்பதாக இருக்கின்றது. யுத்தம் என்பது வெற்றி, தோல்வியை தருகிறதோ இல்லையோ அது மிகவும் மோசமான அழிவையும், மாறாவடுக்களையும் மட்டுமே விட்டுச்செல்லும். எந்த மனிதநேயமுள்ள மனிதனாலும் உயிர்களை அழிக்கவல்ல யுத்தத்தை வரவேற்கமுடியாது. இந்த நாவலில் வருகின்ற யோகா, தெய்வானை என்கின்ற இரண்டு பெண்களும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். அதன் பாதிப்புகளைத் தங்களது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும்படி சபிக்கப்பட்டவர்கள். இவர்களை முன்வைத்தே இந்த நாவலானது விரிந்துசெல்கின்றது. இந்நாவலானது யோகா, தெய்வானை போன்ற இருவரின் கதைமட்டுமல்ல. போராடுவதற்கு சென்று மீளவும் சொந்தவாழ்க்கைக்கு திரும்பிய பல்லாயிரம் பெண்களின் உண்மைக்கதையுமாகும்.

போராட்டம் ஆரம்பித்த காலங்களில் இயக்கத்திற்கு சென்றவர்கள் உண்மையில் எதையாவது தமிழீழத்திற்காகச் செய்யவேண்டும் என்கின்ற மனநிலை மட்டுமே இருந்தது. அதைத்தொடர்ந்த காலங்களில் இயக்கங்களில் இணைந்தவர்களுக்கு பலகாரணங்கள் இருக்கின்றன. தமிழ்த்தேசியத்திற்காக, இராணுவ கொடுமைகளை கண்டு ஆத்திரமுற்றவர்கள், ஆயுதக்கவர்ச்சி, ஹீரோயிசம், வீட்டில் பெற்றோருடனோ, சகோதரர்களுடனோ சண்டைபிடித்தவர்கள், காதற் தோல்வி, பாடசாலையில் வாத்தியாருடன் சண்டை போன்றவற்றுக்கான தீர்வாக, சரணடையும் இடமாக இயக்கமே இருந்திருக்கிறது.

தெய்வானை படுவான்கரை என்கின்ற பகுதியில் இருக்கின்ற கொக்கட்டிச்சோலையை பிறப்பிடமாகக் கொண்டவள். அங்கு இராணுவத்தினரால் இறால் வளர்ப்புத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், மகிழடித்தீவு படுகொலைகள் போன்ற அடாவடித்தனங்களைக் கண்டு ஆத்திரம்கொண்டு இயக்கத்திற்குச் செல்கிறாள்.

மாவடிவேம்பைச் சேர்ந்த யோகா எனும் பெண்ணோ பெற்றோருடன் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளத் துணியும் சமயத்தில் இயக்கத்தில் இணைகிறாள். இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெற்ற சண்டையில் கால்களை இழக்கிறார்கள். தெய்வானை காலை இழந்ததால் வாசிக்கவும், யோசிக்கவும் செய்கிறாள். இதனால் அவளது மனதில் தான் இருக்கும் இயக்கமான விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனங்கள் எழுகின்றது. அதனை உறுதிப்படுத்துவதுபோல் அக்காலகட்டத்தில் நடைபெற்ற “கல்லறவ” படுகொலை, சிங்கள மக்களை கொல்லுவதற்கு குண்டுவைத்தல் போன்றவற்றை அறிகிறாள். இதன்காரணமாக சமாதானக்காலத்தில் வீட்டுக்கு திரும்பிவந்த தெய்வானை மீண்டும் இயக்கத்திற்கு செல்லவில்லை. தெய்வானை காலை இழந்திருந்ததால் இயக்கமும் வற்புறுத்தாமல் விட்டுவிட்டது. யோகா இறுதி யுத்தம் வரை இயக்கத்துடன் இருந்து பின்னர் புனர்வாழ்வுபெற்று வீட்டுக்கு திரும்புபவள்.

பின்னர் இவர்கள் இருவரும் சமூகத்துடன் ஒன்றிப்பதற்கும், வாழ்வில் ஒரு ஆதாரத்தைத் தேடுவதற்குமான போராட்டமாகவே இந்நாவல் நீழுகின்றது. இந்த போராட்டத்திலேயே மூன்றாவது பெண்ணாகத் தவக்குல் இணைந்துகொள்கிறாள். தவக்குல் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஏறாவூர் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண். இவள்  அரச சார்பற்ற நிறுவனமொன்றில் வேலைசெய்கிறாள். அதனூடாகவே கஸ்ரப்படும் பெண்களுக்கு உதவுவதில் மிகவும் நாட்டம் கொண்டவளாக இருக்கின்றாள்.

தவக்குல் அடிக்கடி வேறு கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் வேலைகாரணமாக தனியாக செல்வதும், இரவு நேரங்களில் வீட்டுக்கு வந்து சேருவதும், அவளது போட்டோக்கள் பத்திரிகைகளில் வெளிவருவதும் அச்சமூகத்திலுள்ள கலாச்சார காவலர்களால் பொறுக்கமுடியாதுள்ளது. அதனால் அவள்மீது வீண்பழிகளை சுமத்துவதும், சமயரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என விரட்டுவதுமாக அல்லல்படும் தவக்குல்லுக்கு அவளது பெற்றோர், சகோதரிகள் மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள்.

மதங்களின் பெயரில் எமது சமூகங்கள் வைத்திருக்கும் கட்டுப்பாடுகள், கலாசாரங்கள் அனைத்தும் பெண்கள் மீதே திணிக்கப்படுகின்றன. இது எல்லாச் சமூகங்களுக்கும் சிறிய ஏற்றத்தாழ்வுகளுடன் பொதுவானது. இந்தக் கலாசார கட்டுமானங்களை மீறும் பெண்கள் தண்டிக்கப்படுகிறார்கள். தண்டனைகள் சமூகத்திற்கு ஏற்ப மாறுபடும். இங்கு இயக்கத்திற்கு சென்றதனால் யோகா தனது குடும்பத்தாரால் தண்டிக்கப்படுவதையும், தவக்குல் தீவிர மதவாதிகளினால் தண்டிக்கப்படுவதையும் கதையாசிரியர் தெளிவாக காட்டுகிறார்.

இன்னுமொரு முக்கியவிடயத்தை இந்நாவல் உணர்த்துகிறது. மட்டக்களப்புப் பிரதேசமானது முஸ்லிம், தமிழ் மக்கள் புட்டும், தேங்காய்ப்பூவும்போல் வாழும் பிரதேசம் என அழைக்கப்படுவது வழக்கம். இன்று அங்கிருந்த ஒற்றுமையும், இணக்கப்பாடும் இல்லாதொழிக்கப்பட்டு, சமூகங்களுக்கிடையே நம்பிக்கையின்மையும், விரோதமும் வளர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முதற்காரணம் தமிழ்த்தேசியத்தின் பெயரில் முஸ்லிம் சமூகத்தின்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளும், விரட்டியடிப்புகளுமேயாகும். இந்த விடயங்களை ஸர்மிளா நாவல் நெடுகிலும் தொட்டுச்செல்வதைக் காணலாம்.

மேலும் , முஸ்லிம் சமூகம் தமது மத அடையாளங்களை மிகத் தீவிரமாக இறுகப்பிடித்திருப்பதற்கு யுத்தம் கொடுத்த நெருக்கடிகள் ஒரு காரணம் என அனைவரும் அறிந்ததே. ஆனால் தீவிரமதவாதிகளினால் ‘தப்பான பெண்கள்’ என அவர்களால் கருதப்படும் பெண்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள், சித்திரவதைகள் பற்றி கதையாசிரியர் கூறுவது அப்பிரதேசத்துப் பெண்ணான என்னை மிகவும் ஆச்சரியமும், வேதனையும் கொள்ளவைக்கின்றது. முஸ்லிம் சமூகத்துடனான உறுவுகள் எம்முடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தபோதும் இவற்றையெல்லாம் எம்மால் அறியமுடியாதவாறு இருட்டுத்திரை இரண்டுபக்கமும் போடப்பட்டுள்ளதா எனும் கேள்வி என்னுள் எழுகிறது. இது முஸ்லிம் சமூகத்துப்பெண்களை மேலும் ஒரு படி பின்தள்ளியுள்ளது என்றே கருதமுடிகிறது.

இந்த இடத்தில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்து பெண் ஒருவர் தனது சமூகக் குறைபாடுகளை, பெண் அடக்குமுறையை, கடவுளின் பெயரால் நடைபெறும் அட்டூழியங்களை விமர்சனத் தொனியுடன் படைப்பிலக்கியமாக்கி இருப்பது இதுவே முதற்தடவையெனலாம். இது போன்ற துணிவுமிக்க அவரது எழுத்துகளின் காரணமாகவே இந்த நாவலாசிரியர் அவரது ஊரைவிட்டு விரட்டப்பட்டிருக்கலாம். பொதுவாக இலங்கையில் எழுத்துலகில் இருக்கின்ற முஸ்லிம் பெண்களுக்கு இல்லாத அசாத்தியமான துணிவுதான் இதை எழுதவைத்துள்ளது. அந்தவகையில் ஸர்மிளாவை வாழ்த்தாமல் இருக்கமுடியாது.

தெருவோரச் சோதனைச் சாவடி ஒன்றில் காவலிருக்கும் சிங்களச் சிப்பாய் ஒருவன் மீது தெய்வானை கொள்ளுகின்ற காதல் அவள் ஒரு முன்னாள்போராளி எனும் வகையில் சிலருக்கு முரண்நகையாக தோன்றலாம். ஆனால் இந்த போராட்டத்திற்கு பின்னரான காலத்தில் முன்னாள் போராளிகள் எதிர்கொண்ட இழப்புகள், தோல்விகள், வேதனைகள், அபத்தமான வாழ்வு போன்றவை இது போன்ற நிலைமைகளை தோற்றுவிப்பதை மறுக்கமுடியாது. இதுபோன்ற பல விடயங்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில்ல் நடந்தேறியிருக்கின்றன.
“உம்மத்” மட்டக்களப்பு பிரதேசத்தில் முற்று முழுதாக நடைபெறும் கதையாக சித்தரிக்கப்பட்ட போதிலும் அதன் கதைமாந்தர்களின் உரையாடல்கள் மட்டக்களப்புப் பேச்சுத்தமிழில் இருந்து வெகுவாகவே அன்னியப்பட்டு நிற்கின்றன. அதிலும் அசல் யாழ்ப்பாண உச்சரிப்புடன் கொக்கட்டிச்சோலைத் தாயும், மாவடிவேம்புக் கிராமவாசிகளும் உரையாடுவதால் நாவல் யதார்த்தத்தில் இருந்து விலகிநிற்கின்றது. மற்றும் கதை சொல்லி நாவலின் அனேக இடங்களில் அளவுக்கதிகமான விளக்கங்களையும் பந்தி பந்தியாகக் காரணங்களையும் சொல்லுவதால் இது ஒரு தகவல் தொகுப்பாக மட்டும் தோற்றம்தருவதோடு, ஒரு சிறந்த இலக்கிய நாவலாக விரியும் சாத்தியப்பாடுகளை இழந்து நிற்கின்றது.

எது எவ்வாறாக இருந்தபோதும் இந்நாவல் எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டியது. யுத்தம் பெண்கள் மீது செலுத்தியுள்ள நேரடி, மறைமுக பாதிப்புகளையும், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் சொந்த வாழ்வியல் சவால்களையும், முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்கிடையேயான உறவுகளையும், விரிவுகளையும், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் மதத்தின் பெயரிலான ஜனநாயக மறுப்புகளையும் ஒருமித்துத் தருவதில் 450 பக்கங்களைக் கொண்ட இந்த ‘உம்மத்’ (சமூகம் அல்லது சமூகக் கூட்டம்) தோல்வியடையவில்லை என்பது எனது கருத்தாகும்.

உம்மத் (நாவல்)
ஸர்மிளா ஸெய்யித்
வெளியீடு : காலச்சுவடு

நன்றி :ஆக்காட்டி மார்ச்-ஏப்ரல் 2015

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்