/* up Facebook

Apr 1, 2015

ஆப்கன் பெண்களுக்கான ஒரேவாய்ப்பு லண்டாய் கவிதைகள் - த. ஜீவலட்சுமி


“என்கூட வந்தாலும் பாப்பாரையா
செருப்பு நல்லாத் தைக்கணுமே பாப்பாரையா
தைச்சாலும் தைப்பேண்டி சக்கிலிப் பெண்ணே
நான் உன்ன விட்டு பிரிய மாட்டேன்
மாதவிக் கண்ணே”

இது  ஊரில் நிலாப்பிள்ளை இரவில் பாட்டிகள் பாடும் கும்மிப் பாட்டு. நானறிந்த வரை இதைப் பாடியவர்கள் யாரும் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களில்லை. இது அவர்களுக்கு மூதாதை வழி கடத்தப்பட்டது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யாரோ ஒருத்தியின் கலகக்குரல் இன்று நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது. வாழ்வின் மெய்நிலையோடு களத்து மேட்டிலும் வாய்க்கால் வரப்புகளிலும் பாடப்பட்ட இப்பாடலுக்கு வலிமையும் வீச்சும் அதிகம். இவை மண்ணின் அசலை நகலெடுத்து காலங்களுக்கு கடத்துபவை. அதிலும் பெண்மொழி எப்பொழுதும் தனக்குரிய நேர்மையுடனும் அதிகார எதிர்ப்புணர்வுடனும் காலந்தோறும் தன்னை வலிமையோடு முன் வைத்தே வந்து இருக்கிறது.ரஷ்யப் புரட்சியிலும் இந்திய சுதந்திரப் போரிலும் இப்படியான வாய்மொழி கலகக் குரல்கள் காத்திரமான பங்களிப்பை செய்துள்ளன.

குரல்வளை நெரிக்கப்படும் தருணங்களில் எல்லாம் பெண்மையின் பெரும் எத்தனிப்போடு வெளிப்படும் இக்கலகக் குரல்களின் உச்சமாக ஆப்கன் பெண்களின் லண்டாய் வாய்மொழிக் கவிதைகள் உள்ளன. கவிதையின் அரசியல் செயல்பாட்டை இந்த நூற்றாண்டில் இதைவிடத் துல்லியமாக சொல்லிவிடும் படைப்புகள் இல்லையென்று சொன்னால் அது மிகையில்லை. தாலிபான்களின்  மத பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரச பயங்கரவாதத்திற்கும்  இடையே துப்பாக்கி முனையில் குண்டு மழைகளுக்கு மத்தியில் ரணத்தை சுவாசிக்கும் ஆப்கன் பெண்களின் வலியும் வலிமையுமாய் ஒலிக்கின்றன. லண்டாய் கவிதைகளை அவர்களின் வாழ்வியல் பின்னணியோடு தமிழ் இலக்கிய உலகின் முன் வைத்துள்ளார் கவிஞர் ச.விசயலட்சுமி.பெருவெளிப் பெண் என்னும் கவிதைத் தொகுப்பையும் பெண்ணெழுத்து என்கிற சிறந்த ஆய்வு நூலையும் அளித்தவர் தன் கவிதைகளை வெளியிடாமல் மொழிபெயர்ப்பு செய்திருப்பதன் மூலம் லண்டாய் கவிதைகளின் முக்கியத்துவம் விளங்குகிறது. மொழிபெயர்ப்பு வரிசையில் தமிழ்க் கவிதைப் பரப்பில் இதுவரை யாரும் செய்திடாத மிக முக்கியமான படைப்பான  லண்டாய் கவிதைகளை முன் வைத்ததன் மூலம் தமிழ்ப் பரப்பிற்கு பெரும் பங்காற்றியுள்ளார் விசயலட்சுமி.

லண்டாய் கவிதைகள் உலகின் தொடர்பு எல்லைக்கு அப்பால் வைக்கப்பட்டுள்ள ஆப்கன் பெண்களின் உலகத்துடனான ஒரே  தொடர்பு. அன்றாட உரையாடல்களுக்கும் பொழுதுபோக்கிற்குமான கருவியாக தொலைபேசிகள் மாறிவிட்ட இன்றைய சூழலில் தன் இருப்பை,வாழ்தலை, அரசியல் செயல்பாட்டை உலகிற்கும் தனக்குமான தொடர்பை நிறுவும் ஒரே வாய்ப்பாக ஆப்கன் பெண்களுக்கு தொலைபேசி இருக்கிறது என்பதையும் அவர்கள் தம் வாழ்வின் ஆறாத்துயரங்களை கவிதைவழி கடப்பதையும் நூலின் வழி உணரச் செய்துள்ளார் ஆசிரியர்.

இந்நூல் லண்டாய் கவிதைகளை மட்டும் அப்படியே மொழியாக்கம் செய்துவிடவில்லை. ஆப்கன் வரலாறு,  பெண்களின் வாழ்நிலை ஆகியவற்றை மிகத்துல்லியமாக பொறுப்புணர்வோடு நமக்கு விவரிக்கிறது. கி.மு.322-கி.மு 298 ஆம் ஆண்டு காலகட்ட படையெடுப்பு வரலாறு தொடங்கி 1973 வரையிலான முடியாட்சி காலகட்டத்தையும் 1978-ல் சவூர் புரட்சி மூலம் மக்களாட்சி மலர்ந்ததையும் 1979-89 வரை ருஷ்ய ஆதரவோடு  இடதுசாரி ஆதரவோடு நல்லாட்சி பெற்றிருந்த காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் 1992-ல் முஜாகிதீன் உதவியோடு அதிபரை வீழ்த்தியது, பின் தாலிபான் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த  மத அடிப்படைவாத நடவடிக்கைகளை நமக்கு விவரிக்கிறார். தாலிபான் ஆட்சிக் காலம் துவங்கி இன்றுவரை பெண்கள் மீது தொடுக்கப்படும் மனிதத்தன்மையற்ற அடக்குமுறைகளை வாசகனுக்குத் தெரிவிப்பதன் மூலம் லண்டாய் பாடல்களின் வலிமிகு பின்னணியை ஆசிரியர் நமக்கு உணர்த்துகிறார்.

பெண்கள் ரத்த உறவினர் இன்றி வெளியே செல்லக் கூடாது, அவர்கள் தெருக்களைப் பார்க்காவண்ணம் வீடுகளின் ஜன்னல்கள் திரையிடப்படவேண்டும், பெண்கள் பெயரைக் கொண்ட இடங்கள் இருக்கக் கூடாது, பொதுவெளிகளுக்கு பெண் வரக் கூடாது, மிதிவண்டி ஓட்டக் கூடாது எனத் தொடரும் அடக்கு முறைப் பின்னணி கொண்ட தாலிபான்களின் அச்சுறுத்தலில் தான் மக்களாட்சி நாடான ஆப்கன் இன்றும்  வருகிறது.

ஆசிய ஐரோப்பியக் கண்டங்களை இணைக்கும் மிக முக்கிய புவியியல் மையமாகவும் எண்ணெய் வளம், போதைப் பொருள்கள் விளைநிலமாகவும் இருப்பதால் ஆப்கன் அமெரிக்க சுரண்டல் ஏகாதிபத்தியத்தின் வெறியாட்டக் களமாக இருக்கிறது. தாலிபான்களின் தீவிரவாத செயல்பாடுகள் மூலம் ஒட்டு மொத்த  முஸ்லிம் மத கலாச்சார நடவடிக்கைகளை முடக்கி அதன் மூலம் தனது பண்பாட்டு விழுமியங்களை இஸ்லாமிய நாடுகளில் பரப்பி அவர்களின் பொருளாதாரத்தை சுரண்டவும் அரசியலில் தலையீடு செய்யவும் அமெரிக்கா முயற்சித்து வருகிறது.அமெரிக்காவின் இந்த சுரண்டல் அரசியலை  “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்”  தரவுகள் மூலம் நிறுவுவதை இக்கவிதைகள்  பாதிக்கப் பட்ட பெண்களின் உணர்வுகளாக பாடப்படும்போது வாசக மனத்தை உலுக்குகிறது.

லண்டாய் கவிதைகள்  இரண்டு வரி கொண்டவை. பெரும்பாலும் அவை  அவர்களின்  பஷ்டுன் மொழியிலேயே இயற்றப்படுகின்றன. ஆப்கன் பெண்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள ஒரே வாய்ப்பாக லண்டாய் பாடல்களை உணர்கிறார்கள். லண்டாய் பாடுவதால் தங்கள் உயிர் பறிக்கப்படும் என்றபோதும் அவர்கள் கவலை கொள்வதில்லை. இந்தக் கூடடைக்கப்பட்ட பறவைகளின் சரணாலயமாக மிர்மன் பஹீர் அமைப்பு இருக்கிறது. இதனைக் கவிஞரல்லாத சாகிர் ஷெரிப் என்ற பெண் பாராளுமன்ற உறுப்பினர் நிறுவியுள்ளார். இந்த அமைப்பை கவிஞர்கள் தொலைபேசி வழி தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் இக்கவிதைகளை தங்கள் வலைதளத்தில் வெளியிடுகிறார்கள்.  சனிக்கிழமைகளில் பெண்கள் ரகசியமாகக் கூடி தங்கள் கவிதைகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இவ்வமைப்பு காபூலில் 100 உறுப்பினர்களையும் காபூலுக்கு வெளியே முந்நூறு உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இவ்வமைப்பின் செயல்பாடுகள் மிக ரகசியமாக உள்ளதெனவும் கூறும் ஆசிரியர் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். மேலும் மிர்மன் பஹீர் அமைப்பின் உறுப்பினரான சர்மினாவின் மரணமும் அவள் வீட்டைத் தேடிச்செல்கையில் எலிசா சந்திக்கிற பிரச்சனைகளும் மீனா முஸ்காவின் வாழ்க்கையும்  இன்றைய லண்டாய்  கவிஞர்களின் வாழ்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவற்றை ஆசிரியர் விவரிக்கும் பாங்கு நாவலை ஒத்து இருக்கிறது. அந்த வாழ்வின் வலிகளில் மீள ஏலாமல் வாசிப்பு  மனம் துயருகிறது.
லண்டாய் கவிதைகள் எந்த மாய உலகிற்குள்ளும் பயணிப்பதில்லை. அவர்கள் வாழ்வின் அழகியலோடு வலிகளைப் பதிவு செய்கின்றனர். இப்பெண்கள் பெரும் திறனுடையவர்கள். அவர்கள் மொழியை, இலக்கிய வடிவை மிகச் சரியான அரசியலோடு கையாள்கிறார்கள். அந்த லாவகம் இன்னும் தமிழ்க் கவிதைகளில் பரவலாகப் பார்க்க முடியாத ஒன்று.

“இங்கே தாலிபானுடன் யுத்தம் செய்கிறவர்கள் மலையின் பின்புறம் அவர்களுக்குப் பயிற்சியும் தருகிறார்கள் “. இதைப் பாடியவர் 17 வயது சம்ஸா என்ற பெண். இந்த வரிகளின் பின் உலக அரசியல் இருக்கிறது. பெண் பொதுவெளியில் நடமாடவே அனுமதிக்கப்படாத தேசத்தில் 17 வயதுப் பெண் தாலிபான்களையும் அவர்கள் பின்னிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் இவ்வளவு தெளிவான புரிதலோடு வெளிப்படுத்துவது அவர்கள் அரசியல் அறிவைப் பறை சாற்றுகிறது.

லண்டாய் வழி  இப்பெண்கள் அரசை, உலக மக்களை, கடவுளைக் கேட்கின்றனர். தங்களைப் பணத்திற்காக விற்கும் குடும்பத்தினரை எள்ளல் செய்கின்றன சில கவிதைகள். சில தம்முடல் மதத்தின் அடையாளமல்ல எனப் பறைசாற்றுகின்றன.

கிழவர்களுக்கு விற்றதால்  பட்டுப்போன தன் வாழ்வை இப்படி எள்ளிப் பாடுகிறாள்  ஒரு பெண்,
“பசியில் துடிக்கும் நாய் மூக்கு சதைக் கொழுப்பை
குதறி எடுப்பது போல் என் கீழுதட்டிலிருந்து
ஒரு முத்தத்தைப பற்றிக் கொண்டது
அக்கிழட்டு ஆடு”.

இதோ ஏகாதிபத்தியத்தை சபிக்கும் கவிதை:

“என் தாயகத்தை எரித்தழிக்கும் குரூஸ் ஏவுகணைகளை அனுப்பியவன் எவனோ அவனின் வெள்ளை மாளிகையை அழித்து அவனையும் கொன்று விடு கடவுளே!”.
ஆப்கன் பெண்கள் கல்வி கற்க விரும்புகிறார்கள். சட்டங்கள் போடப்பட்டு கல்வி உரிமை அங்கே வழங்கப்பட்டாலும் பெண்கள் கல்வி கற்பதற்கான சமூகச் சூழல் இல்லை. பள்ளி செல்லும் பெண்கள் சுடப்படுவதும் கடத்தப்படுவதுமான வன்முறை வெறியாட்டங்களை மலாலா எழுதிய ‘நான் மலாலா’ விவரித்து இருப்பாள். அதை ஆப்கன் பெண் லீமா தன் கவிதையில் சொல்கிறாள்

“நீங்கள் என்னை பள்ளி செல்ல அனுமதிக்கவில்லை
நான் மருத்துவராக முடியாது
நினைவு கொள்ளுங்கள்
ஒருநாள் நீங்கள் நோயாளியாகக் கூடும் “.

அப்பெண்கள் உடலை சரியாகப் புரிந்துள்ளனர். அவர்கள் புர்காவை வெறுக்கிறார்கள் . பெண் உடல் மதத்தின் அடையாளமாக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஒரு பெண் தன்னுடலை இப்படிப் பிரகடனம் செய்கிறாள்.

“என் தேகம் வாடாத மருதாணி இலை
வெளியே பார்வையில் பச்சையாக
உள்ளேயோ பச்சை மாமிசமாக”

இப்படி லண்டாய் கவிதைகள் யாவும் கிளர்ச்சியின் அழகியலைத் தாங்கி வலியின் வலிமையோடு பாடப் படுகிறது.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த லண்டாய்  கவிதைகள் இதுவரை நாட்டுப்புற ஆய்விலோ, உலகக் கவிதை அரங்கிலோ அறியப்படாத வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் கொண்டவை. இவற்றை வாசிக்கும் போது மூலமொழியில் எப்படி இருந்திருக்குமோ என்ற ஐயத்திற்கு துளியும் இடமின்றி விறுவிறு நடையுடன் தேர்ந்த மொழியில் மொழியாக்கம் செய்திருக்கும் விசயலட்சுமி அவர்களின் மொழி ஆற்றல் பாராட்டுக்குரியது.

உலகின் எந்தப் பகுதியிலும் வெளிவந்திராத ஆப்கன் பெண்களின் கவிதைகளை அறிமுகம் செய்திருக்கிற ஆசிரியரின்  தேடலும் உழைப்பும் போற்றுதற்குரியது.

கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகள் வழி ஊடுருவி பொருளாதார அரசியல் நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கிற ஏகாதிபத்தியத்தின் கோர முகத்தையும் அதற்க்கு துணை போகிற மத அடிப்படைவாதத்தின் சீரழிவு நடவடிக்கைகளையும் சமூகம் சிந்தித்திராத  அடிப்படைவாதப் போர்  மண்ணில் வாழும் பெண் வாழ்வின் ரணங்களை அரசியலோடு பதிவு செய்யும் இப்படைப்பு  பாசிச சக்திகளின் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய உலகிற்கு இக்காலகட்டத்தில் முன் வைக்கப்படுவது சாலப் பொருத்தம். மக்களுக்கான கலையைப் படைப்பவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய படைப்பு.

லண்டாய் | ஆப்கன் பெண்களின் வாய்மொழிக் கவிதைகள் | தமிழில்: ச. விஜயலட்சுமி | தடாகம், சென்னை – 41

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்