/* up Facebook

Apr 30, 2015

பண்டைய காலத்தில் காது வளர்த்தல் - வைகை அனிஷ்


காது குத்துதல் என்பது முதன் முதலில் பழக்கமாகிப் பின்னர் அது வழக்கமாகிச் சடங்காக மாறியிருக்கிறது. ஆனால் பண்டைய காலத்தில் காதுவளர்க்கும் முறை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களிடம் இருந்தது. அதன் பின்னர் அனைத்து சமூகத்தினரும் அதனைப் பின்பற்றியுள்ளார்கள். இந்த காது வளர்க்கும் பழக்கம் பெண்களிடம் மட்டுமல்ல, ஆண்களிடத்திலும் இருந்தது தான் வியப்பிற்குரியது.

பெண் குழந்தைகள் பிறந்த சில தினங்களில் கூடைமுடையும் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வரவழைத்து அக்குழந்தையின் காதில் துளையிட்டு அதில் பஞ்சைத் திரியாக வைத்துவிடுவார்கள். அதில் ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விடுவார்கள். அத்துளை பெரியதாவதற்காகப் பஞ்சின் அளவை அதிகரித்து அதிகரித்து அதனுள்ளே சோளத்தட்டையின் உட்பகுதியை வைத்துத் தொடர்ந்து பல நாட்கள் கட்டுவார்கள். அதனால் பெரிய ஓட்டை உருவாகிவிடும். அதன் பிறகு அதனுள் இருந்த புண் ஆறிய உடன் ஒரு சிறிய ஈயக்குணுக்கு போட்டு விடுவார். குணுக்கு போடும் காலத்தில் விளக்கெண்ணெய் வைத்துக் காதை இழுத்துவிடுவர். அந்தக் குணுக்கின் கணம் காரணமாகத் காதின் மடல் நீண்டு தொங்கிய நிலைக்கு வந்துவிடும். அதன் பிறகு அதனுள் இருந்த புண் ஆறிய பின்பு, ஒரு சிறிய கனமான இரும்பு வளையத்தைப் போட்டு விடுவர். கனம் காரணமாக நீண்டு தொங்கிய நிலைக்கு காது வந்துவிடும். அதில் ஒரு சிறிய வளையம் அல்லது தண்டட்டி போன்ற அணிகலன்களை அணிந்து கொள்வர். காது துளையிட வரும் ஆசாரிக்கு பருப்புச் சோறு போட்டு விருந்தளித்து, தானியங்களையும் வேட்டி, துணிமணிகளையும் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைப்பர்.

இவ்வாறு காதுகளை நீண்டு வளர்க்கும் வழக்கம் சமண சமயத்தின் தாக்கத்தால் கி.பி. 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தென் தமிழகத்தில் சமண, பௌத்த சமயத்துறவிகள் தங்கள் காதுகளை நீளமாக வளர்த்துக் கொண்னடர். அவர்களைப் பின்பற்றி தங்கள் காதுகளை நீளமாக வளர்த்துக் கொண்டிருக்கலாம்.

இக்காது வளர்க்கும் வழக்கம் பெண்களிடம் மட்டும் அல்லாமல் அக்காலத்தில் ஆண்களிடம் இருந்துள்ளன. தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள ரகசிய அறையில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் மன்னர் இராசராச சோழன் தனது காதுமடல்களை நீளமாக வளர்த்து அதில் வளையம் போன்ற அணிகலன்களை அணிந்திருப்பது போன்றே காட்சியளிக்கிறார்.

காதுகளில் காது அணிகலன்களான கொப்பு, முருக்கச்சி, ஒணப்புத்தட்டு, எதிர்தட்டு, குறுக்குத்தட்டு, தண்டட்டி, முடிச்சு நாகவட்டம் ஆகிய அணிகலன்களையும், கழுத்தில் கருப்புப் பாசி, சிவப்புப்பாசி, ஒரு தங்கத் தாயத்து தங்கக் குண்டு, தங்கக் காசு போன்றவற்றை ஒரு கருப்புக் கயிற்றில் கோத்து அதனை அணிந்து கொள்வர். இது பல மணி தாயத்து எனப்படும். மேலும் சரடு, வெள்ளிக்காரை போன்ற அணிகலன்களையும் கழுத்தில் அணிந்திருப்பர். கைகளில் வளையலும், கால்களில் தண்டை, கொலுசும் அணிந்திருப்பர். அதன் பின்னர் அரசளிவாளி என காதில் ஒவ்வொரு இடத்திலும் வளையங்களைப் பொருத்தினர். ஆண்களும், பெண்களும் காதுகளில் அணிகலன்களை அணிந்துள்ளனர். அவர் காதுகளில் 39 வகையான காதணிகளை அணிந்திருந்ததாக அறியமுடிகிறது.

சங்க இலக்கியத்தில் காதணி வகைகள்

அட்டிகை, இட்டடிக்கை, ஓலை, மாணிக்கஓலை, கடிப்பினை, கடுக்கன், கன்னப்பூ, குண்டலம், குணுக்கு, குதம்பை, குறடு, குழை, குவளை, கொப்பு, சன்னாவ தஞ்சம், சின்னப்பூ, செவிப்பூ, தடுப்பு, கொப்பு, சன்னாவ தஞ்சம், சின்னப்பூ, செவிப்பூ, தடுப்பு, தண்டட்டி, தாளுருவி, திரிசரி, தோடு, பொன்தோடு, மணித்தோடு, நவசரி, நவகண்டிகை, நாகபடம், பஞ்சசரி, பாம்படம், பாம்பணி, புகடி, மகரி, மஞ்சிகை மடல், மாத்திரை, முடுச்சு, முருகு, மேலீடு, வல்லிகை, வாளி முதலியவனவாகும். கடிப்பு என்னும் அணிகலனை அணிந்து வர காதுமிக நீண்டதாக ஆகின்றது. தற்காலத்தில் மாட்டல், பூங்கொப்புமணி, பூட்டுக்காப்பு, தொங்கல், மாட்டல், அட்டியல், பொன்மனி, திருச்சூலி, அலுக்குத்து, சரப்பளி போன்ற ஆபரணங்கள் காதுகளில் குத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும். தற்பொழுது கால மாற்றத்தினால் காது வளர்க்கும் முறை குறைந்து காதுகுத்துதல் மற்றும் இடைக்காது குத்தும் முறையாக மாறியுள்ளது. இவ்வாறு அனைத்து சமூகத்தினரிடையும் காது குத்தும் வழக்கம் ஒரு விழாவாகவே எடுத்து நடத்தப்படுகிறது.

காலில் அணியும் அணிகலன்கள்

இவ்வாறான அணிகலன்களை தமிழன்னைக்கு அணிகலன்கள் அணிவித்து அழகு பார்த்துள்ளான் இளங்கோவடிகள். அதனைப்பற்றி பின்வருமாறு பாடல் ஒன்றில் சிலப்பதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

காதொளிரும் குண்டலமும் கைக்குவளை
யாபதியும் கருணை மார்பில்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில்
மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிர் பூந்தாளிணையும் பொன்முடி
சூளாமணி பொலியச் சூட்டி
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் 
தாங்கு தமிழ் நீடு வாழ்க

காலின் அடியில் பாதத்தின் மீது பொருந்துமாறு அணிவது காலணிகள் சிலப்பதிகாரத்தில் மிகச்சிறப்புடன் கூறப்படுகிறது. இவை இருபது வகைகள் ஆகும். அரியகம், அரவம், சுழல், வீரக்கழல், கொடைக்கழல், பொன்கழல், கண்டை, காற்சரிகை, கால் கொலுசு, சிலம்பு, ஊசிமணி, ஞெகிழகம், பரியகம், பரிவடிம்பு, படாகம், புகங்கக் கடகம், புனையாரம், தண்டை, நூபுரம், வெள்ளித்தலை என்பன ஆகும். கால்விரல்களில் அணியும் அணிகலன்களை பெண்களே அணிகின்றனர். அங்கு பொன் அணிகலன்களோ, மணிகள் பதித்தோ அணிவதில்லை அவைகளில் காய்கள், மீன்வாய் போன்ற வடிவங்களில் அணிகின்றனர். அவை பத்து வகைகளாகும். கால் மோதிரம், காலாழி, தாழ்செறி, நல்லணி, பாம்பாழி, பில்லனை, பீலி, மகரவாய், முஞ்சி, முட்டி, மெட்டி என்பன

கான்மோதிரம்: கால்பெருவிரலில் அணியப்படுவது
பாம்பாழி: பாம்பு சுருட்டியதுபோல் உள்ள கால்விரல் மோதிரம்
பீலி: கால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணியப்படுவது
முஞ்சி: முஞ்சி என்பதை இன்று மிஞ்சி என அழைக்கிறார்கள்
மெட்டி: இன்று திருமணங்களில் அணிவிக்கப்படுகிறது.

நன்றி - கீற்று
...மேலும்

Apr 29, 2015

கவிஞர் அவ்வை நிர்மலாவின் 'அணுத்துளி' - நா.இளங்கோ


ஹைக்கூ ஒரு புதுமையான கவிதை வடிவம். ஜப்பான்தான் ஹைக்கூவின் தாயகம். பிறந்தகத்திலிருந்து புகுந்தகம் வந்தபிறகு ஹைக்கூ.விடம் எத்தனையோ மாற்றங்கள். ஜப்பான் ஹைக்கூ.க்குக் கன்னிப் பெண்ணின் அழகு. தமிழ் ஹைக்கூ.வுக்குத் தாய்மையின் அழகு. துளிப்பா, குறும்பா, சிந்தர், ஹொக்கு என்றெல்லாம் தமிழில் ஹைக்கூ.வுக்குப் பல செல்லப்பெயர்கள் உண்டு. சிறிய கவிதை வடிவங்கள் தமிழின் மரபிலும் உண்டு. குறள் வெண்பா, மூன்றடி அகவல், வஞ்சி விருத்தம் என்றெல்லாம். ஆனால் அந்தக் கவிதை வடிவங்களில் இருந்து மாறுபட்டது ஹைக்கூ. மூன்றடிக் கவிதை ஹைக்கூ.. வாமனனை ஞாபகப்படுத்தும் வடிவம். கவிதை அளவில் சிறியதென்றாலும் அது எடுக்கும், விஸ்வரூபம்.

கவிதை வாசகனிடம் வெளிப்படையாகப் பேசுகிற விஷயங்களை விடப் பேசாமல் விடுகிற விஷயங்கள் ஏராளம். கவிதை பேசாமல் விட்டனவற்றைக் கவிதைக்குள்ளே தேடி வாசிப்பதில்தான் வாசகனின் வெற்றியும் கவிதையின் வெற்றியும் அடங்கியுள்ளது. தமிழின் மரபுக் கவிதைகளுக்கும் புதுக் கவிதைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் போலவே, புதுக் கவிதைகளுக்கும் ஹைக்கூக். கவிதைகளுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. புதுக் கவிதையை மூன்றடியில் எழுதிவிட்டால் அது ஹைக்கூ. ஆகிவிடாது.

ஹைக்கூ எளிமையானது இனிமையானது. இந்த எளிமைதான் ஹைக்கூக் கவிதை வடிவத்திற்கு ஒரு ஜனநாயகத் தன்மையைக் கொடுத்துள்ளது. கவிதை எல்லோருக்கு மானது, ஒவ்வொருவர் மனதிலும் கவிதை இருக்கிறது, அதை வடித்தெடுப்பவன் கவிஞனாகிறான். இதுவரை உலகத்தில் எழுதப்பட்ட கவிதைகளை விட எழுதப்படாமல் ஒவ்வொருவர் மனதிலும் பிறந்து தவழ்ந்து வெளிவராமல் செத்துப்போன கவிதைகள் மிகுதி. அவற்றில் உலகின் தலைசிறந்த கவிதைகள் ஏராளமிருக்கலாம். இனி ஒரு கவிதையையும் சாகவிடமாட்டோம் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது.

சென்ற நூற்றாண்டின் 80களுக்குப் பிறகுதான் தமிழில் ஹைக்கூத் தொகுதிகள் வெளிவரத் தொடங்கின. தமிழில் ஹைக்கூவுக்கு 30 ஆண்டுக்கால வரலாறுதான். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த ஹைக்கூ நூல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும். பெருகும் ஹைக்கூ நூல்களின் வளர்ச்சி ஒரு வகையில் அச்சத்தை உண்டாக்குகிறது என்றாலும் அச்சப்பட நாம் யார்? அதைக் காலம் பார்த்துக் கொள்ளும் என்ற மெல்லிய ஆறுதல் நம்மைத் தேற்றுகிறது.

கவிஞர் அவ்வை நிர்மலா, காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியப் பணியோடு பல நூறு கவிஞர்களையும் பேச்சாளர்களையும் மாணவியர்களிலிருந்து உருவாக்கி வளர்த்த பெருமை அவருக்குண்டு. இவர் சிறந்த கல்வியாளர், ஐந்து முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலம் மட்டுமன்றிப் பிரஞ்சு, இந்தி, தெலுங்கு, மராட்டி முதலான மொழிகளைப் பயின்றவர். கவிதை, நாவல், சிறுகதைகள், நாடகம் எனப் படைப்பிலக்கியத்தின் பல்வேறு வகைமைகளிலும் தொடர்ச்சியாக நூல்களை எழுதி வெளியிட்டு வருவதோடு மிகச்சிறந்த ஆய்வாளராகவும் திகழ்பவர். அவ்வையார் கல்லூரியில் நான் சில மாதங்கள் பொறுப்பு முதல்வராகப் பதவிவகித்த காலங்களில் தமிழ்த்துறைத் தலைவராயிருந்து அவர் ஒருங்கிணைந்;து நடத்திய கருத்தரங்குகளும் பயிலரங்குகளும் அவரின் ஆளுமைத் திறனுக்குத் தக்கதோர் சான்றுகளாகும்.

கவிஞர், அணுத்துளி என்ற இந்தக் கவிதைத் தொகுதியை ஹைக்கூவில் படைத்துள்ளார். வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க பல நல்ல ஹைக்கூக்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இந்தவகை ஹைக்கூக்களைப் பொதுவில் சென்ரிய+ என்றழைப்பது பழக்கம்.. சென்ரிய+ என்பது சமூக அக்கறையோடு எழுதப்படும் ஹைக்கூ கவிதைகள், அவ்வளவுதான். இந்தத் தொகுப்பில் பல சென்ரியூக்களும் சில ஹைக்கூக்களும் உண்டு. கவிதைகள் பல்வேறு தலைப்புகளின் கீழ் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தனியே தலைப்புகள் இல்லை. ஹைக்கூக் கவிஞர்கள் கவிதைகளுக்குத் தலைப்பிடுவதை விரும்புவது இல்லை. தலைப்பிட்டால் அது வாசகனின் வாசிப்பு அனுபவத்தில் கவிஞன் தேவையின்றித் தலையிட்டதாகிவிடும். ஒரு கவிதையை என்னவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது வாசகனுக்குத் தெரியும். எனவேதான் கவிஞர் அவ்வை நிர்மலாவும் தமது கவிதைகளுக்குத் தலைப்பிடவில்லை.

அணுத்துளி:

இந்நூல் இயற்கை, சமூகம், அரசியல் என்று இன்றைக்குப் பரவலாகப் பாடுபொருளாகும் அத்துணைச் செய்திகளையும் பாடவும் செய்கிறது சாடவும் செய்கிறது. கவிஞர்களுக்குத்தான் இந்த வசதியிருக்கிறது. அவர்கள் எதையும் சாடலாம், பாடலாம்.

• ஒவ்வொன்றாயத் தேடி
சில்லறைகள் சேர்ந்த உண்டியல்
ஹைக்கூ நூல்

வீட்டிலிருக்கும் உண்டியலில் அவ்வப்போது கிடைக்கும் சில்லறைக் காசுகளை ஒவ்வொன்றாய் இட்டுச் சேமிப்பதைப்போல் ஹைக்கூக் கவிதைத் தொகுதிகளிலும் அவ்வப்போது எழுதிய கவிதைகளை ஒவ்வொன்றாய் இட்டு நிரப்பித் தொகுப்பாக்குகின்றோம் என்பதனை இக்கவிதைச் சுட்டுகிறது. ஹைக்கூ கவிதைகள் ஒவ்வொன்றும் வேறுவேறு சூழல்களில் வேறுவேறு மனநிலைகளில் எழுதப்படுகின்றன என்பதனால் இத்தகு தொகுப்பிலுள்ள கவிதைகளை நாவல் படிப்பதுபோல் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுதல் கூடாது. ஒவ்வொரு கவிதையாகப் படித்து அறிந்து உள்வாங்கி அனுபவித்தல் வேண்டும்.

இந்திய அரசியல், இன்றைய கவிஞர்களிடம் படும்பாடு உண்மையில் பரிதாபகரமானது. அரசியல் ஒரு சாக்கடை, படித்தவர்களும் பண்பாளர்களும் அதன் பக்கம் போகவேகூடாது. அதுகுறித்து வெளிப்படையாகப் பேசவும் கூடாது என்றிருக்கும் சராசரி இந்தியப் பொதுப்புத்திக்குள் கவிதைகள் மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்து உயிர்வாழ்கின்றன. இன்றைய கவிஞர்களுக்கு அரசியல் விமர்சனங்கள் தண்ணீர் பட்டபாடு. கவிஞர் நிர்மலாவும் இத்தொகுதியில் இந்திய அரசியலை கவிதைச் சவுக்கெடுத்து விளாசு விளாசு என்று விளாசுகிறார். எத்தனை படைப்பாளிகள் விளாசி என்ன பயன்? கடைசியில் நாம்தான் ஒதுங்கிப் போகவேண்டியிருக்கிறது. கீழ்க்காணும் கவிதைகளைக் கவிஞர் நிர்மலாவின் அரசியல் சாடல்களுக்குச் சான்றாகக் காட்டலாம்.

• நாளைய கொள்ளைக்கு
இன்றைய இலஞ்சம் 
ஓட்டுப்பணம்

• தர்க்கமிடும் மக்களுக்குத்
தற்காலிக வாயடைப்பு
இலவசங்கள்

• ஈழத் தமிழரின்
ஓயாத் துயரம்
இந்திய அரசியல்

• இந்திய வாகனத்தில்
எத்தனையோ டயர்கள்
ஜாலியன் வாலாபாக்

• ஆட்சி மாற்றம்
மக்களுக்குக் கட்டிக்கொடுக்கிறது
ஆகாசக்கோட்டை

இவை உதாரணங்கள் தாம். தொகுப்பினுள்ளே மிகப்பல கவிதைகள் இதே தொனியில் இன்றைய இந்திய அரசியலை விமர்சனம் செய்கின்றன.

வாழ்க்கை குறித்த அச்சம் மனிதர்களை எப்படியெல்லாம் வாட்டி வதைக்கின்றது. இந்த அச்சம்தான் சோதிடமாக, வாஸ்துவாக, குறிகேட்பதாக, மூட நம்பிக்கைகளாக, கடவுள்களாக நம்மைச் சூழ்ந்து நம்வாழ்க்கைத் தீர்மானிக்கும் அசுரசக்திகளாக வலிமை பெறுகின்றன. கவிஞர் நிர்மலா பகுத்தறிவுச் சிந்தனையாளர், இத்தகு அச்சங்களிலிருந்து விலகியவர். பூனைக் குறுக்கே போனால் ஆகாது என்ற நம்பிக்கை நம்மிடையே நெடுங்காலமாக நிலவிவருகிறது. இந்த நம்பிக்கையை ஒட்டியது பின்வரும் கவிதை.

• காலையில் கண்ணில்பட்ட
மனிதனைப் பழிக்கிறது
அடிபட்ட பூனை

பூனையைப் பழிக்க நமக்கு உரிமை இருக்கிறபோது, காலையில் எதிர்பட்ட மனிதனின் அபசகுணம் குறித்து அடிபட்ட பூனை ஏன் பழிகூறக்கூடாது? என்று கவிஞர் நையாண்டி செய்கிறார்,

அணுத்துளி என்ற இத்தொகுதிக்குள் ஜப்பானிய ஹைக்கூவை நினைவுபடுத்தும் சில கவிதைகளும் உண்டு. இத்தகு ஹைக்கூக்கள் இயற்கை தரும் பரவசத்தில் நம்மைக் கரையச் செய்வன. பின்வருவன ஜப்பானிய ஹைக்கூவின் தந்தை பாNஷh கவிதைகளை நினைவுபடுத்தும் சிறப்புடையன.

• விரல் நுனிகளில்
கசியும் கொம்புத்தேன்
புல்லாங்குழல்

• உழவனின் வியர்வைக்குத்
தலைதாழ்ந்து வணக்கம் 
நெற்கதிர்

கவிஞர் அவ்வை நிர்மலாவின் அணுத்துளி நம்மை நோக்கி எழுப்பும் கேள்விகள் ஏராளம். சில கவிதைகள் விடை சொல்கின்றன. சில கவிதைகள் மௌன சாட்சியாய் நிற்கின்றன. சில ஹைக்கூக்கள் நம்மைக் கவிதைவரை அழைத்துச் செல்லவில்லை என்றாலும் அதனால் பெரிய குறையொன்றுமில்லை. ஒரு படைப்பாளியின் எல்லாப் படைப்புகளுமே அசாதாரணமாயிருக்க வேண்டும் என்று நினைப்பது பேராசை. நிறைவாகக் கவிஞர் அவ்வை நிர்மலாவின் கவிதை ஒன்றை மேற்கோள் காட்டி அணிந்துரையை நிறைவு செய்கிறேன்.

• வெடிக்கக் காத்திருக்கும்
கன்னிவெடி 
கவிதை

நல்ல சமூக அக்கறையோடு படைக்கப் பட்டிருக்கும் அணுத்துளி கவிஞர் அவ்வை நிர்மலாவின் மற்றுமோர் வெற்றிப்படைப்பு. நல்ல தமிழ் நூல்களைப் போற்றிப் பாராட்டும் தமிழுலகம் இந்நூலையும் உவந்து ஏற்கும்.

நன்றி - கீற்று
...மேலும்

Apr 28, 2015

இலங்கை போரில் கணவரை இழந்தவர்கள் பற்றி அல்-ஜசீரா வெளியிட்டுள்ள ஆவணப்படம்...மேலும்

Apr 26, 2015

பார்ப்பனர் என சுட்டுவதுகூட சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது! - மு.வி.நந்தினி


சமீபத்தில் கல்யாண் ஜுவல்லரியின் அச்சு விளம்பரம் ஒன்றில் அரச கமீரத்துடன் அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யாவுக்கு ஒரு சிறுவன் குடை பிடிப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. சிறுவர் பணிக்கு அமர்த்தப்படுவது ஒழிக்கப்பட்ட இந்த காலத்தில் இப்படியான விளம்பரங்கள் அதை ஊக்குவிப்பதாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். அந்த விளம்பரத்தின் நுண்ணிய அரசியலே குடை பிடிக்கும் சிறுவன் கறுப்புத் தோலுடயவான சித்தரித்ததில்தான் இருந்தது. அதையும் சுட்டிக் காட்டி ஊடகங்களில் விமர்சனம் எழுந்த பிறகு. ஐஸ்வர்யா தன்னுடைய பங்கை விளக்கினார். நகைக்கடை நிறுவனம், வேறு வழியில்லாமல் மன்னிப்புக் கேட்டது. பிரச்னை முடிந்துவிட்டது! ஆனால் என்னால் அந்த விளம்பரத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதில் இருந்த சிறுவன், என் மகனை நினைவு படுத்தினான். அரச குமாரிக்கு குடை பிடிக்கும் சிறுவனாக என் மகனை ஒரு கணம் நினைத்துப் பார்த்தபோது, என் மனம் வலித்தது. நிச்சயம் இந்த விளம்பரத்தை வடிவமைத்தவர்கள், எம்மைப் போன்ற கறுப்பினத்தவராக இருந்திருக்க முடியாது. வெள்ளைத் தோலில், சாதியின் உச்சியில் நிற்பதாக பரவசம் கொள்ளும் பார்ப்பன மேட்டிக்குடிகளாகத்தான் இருக்க முடியும்.

நூறாண்டுகளுக்கு முன் உங்களுக்கு குடை பிடித்ததை, சமத்துவ சமூகம் நிலை நாட்டப்பட்டுவிட்டதாக சொல்லப்படும் இந்த நூற்றாண்டிலும் நினைவு படுத்தி எங்களை இழிவு படுத்துகிறீர்கள் மிஸ்டர் பரத்வாஜ். ஆனால் மனிரத்னம்  இயக்கிய ’ஓ காதல் கண்மணி’ படத்தில் பார்ப்பனர்கள் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டுள்ளது என்கிற ஒற்றைவரியை சினிமா விமர்சகர்கள் சொல்லும்போது அது உங்களுக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. உடனே தமிழ் சினிமாவில் வர்க்கமும் சாதியும் என்று கட்டுரை எழுதுகிறீர்கள். உங்கள் கொந்தளிப்புக்கு களம் அமைத்துக் கொடுக்கிறது தி இந்து.  உங்களுடைய பல சினிமா விமர்சனங்களில் பிற்போக்குத்தனமான போக்குகளை சுட்டி எழுதுவீர்கள், பெண்களைப் பற்றிய மோசமான சித்தரிப்புகளையும் நீங்கள் கோடிட்டி காட்டுவீர்கள். உங்கள் மீது மதிப்பிருந்தது. ஆனால் தி இந்துவின் நடுப்பக்கத்தில் நீங்கள் எழுதிய கட்டுரை, உங்களுடைய பார்ப்பன ஒரிஜினை, பார்ப்பன மேலாதிக்கத்தை அருமையாக எனக்கு உணர்த்திவிட்டது மிஸ்டர் பரத்வாஜ்!

தமிழ் சினிமாவில் பார்ப்பனர்கள் கேலிக்குரியவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள், பார்ப்பன பின்னணியில் கதைக்களம் அமைவது சினிமாக்காரர்களுக்குப் பிடிக்கவில்லை. ’ஓ காதல் கண்மணி’யில் முக்கிய கதாபாத்திரங்கள் பார்ப்பனர்களாக சித்தரிக்கப்படுவதில் என்ன தவறு இருக்கிறது, இறுதியாக வர்க்கமும் சாதியும் சினிமாவில் சாதியைக் காட்டுவதாலோ, சினிமா விமர்சனத்தில் அதை சுட்டுவதலோ அழிந்துவிடுவதில்லை என்று முடிகிறீர்கள். அந்தக் கட்டுரையில் வேலையில்லா பட்டதாறி படத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள்.

இதில் ஒரு முத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்…தனுஷுக்கு அருண் சுப்ரமணியன் என்கிற பார்ப்பன வில்லன்  வெகுஜெனங்களை திருப்தி படுத்துவதற்காக தேவைப்படுகிறார் என்றும் இதனால்தான் நம் கதாநாயகர்கள் ஒழுங்காக படிக்காதவர்களாக இருந்தும், ஆங்கிலம் பேசத் தெரியாதவர்களாக இருந்தும் ப்ளூ காலர் வேலைக்குச் செல்பவர்களாக காட்டப்படுகிறார்கள் என்றும் கட்டுரையின் ஒரு பத்தியில் வருகிறது. நீங்கள் பார்ப்பனர் அல்லாதவர் மீது எத்தகைய காழ்ப்பில் இருக்கிறீர்கள் என்பதை கோடிட்டு காட்டும் வரிகள் இவை. அதாவது இடஒதுக்கீடுக்கு எதிரான கருத்தை வலியுறுத்துகிறீர்கள். ஆமாம் எங்களால் ஆங்கிலம்  பேச முடியாது, அல்லது சரிவர பேச முடியாது,  பள்ளி- கல்லூரிகளில் சராசரியாக 60 சதவீத மதிப்பெண் பெறுவதே எங்கள் தலைமுறையினருக்கு பெரிய சாதனையாக இருக்கும். ஏனெனில் என் அம்மா-அப்பா எட்டாம் வகுப்பை தாண்டாதவர்கள், என் தாத்தாவுக்கு படிக்கத் தெரியாது, என் தாத்தாவின் தாத்தாவின் வரலாறே எனக்குத் தெரியாது(வரலாறு எழுதுமளவுக்கு எழுத்தறிவு எங்கள் பரம்பரைக்கே கிடையாது!). இப்படியிருக்க என்னால் ஆங்கிலம் பேசவோ, 90 சதவீத மதிப்பெண் பெறவோ நிச்சயம் முடியாது. அதற்காக எங்களை கீழானவர்கள் என்று நீங்கள் வலியுறுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

காலம்காலமாக எங்களை சிறுமைப் படுத்தினீர்கள். இப்போதும் அதிகார மையங்களில் அமர்ந்து எங்களை சிறுமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள், இதற்கு எதற்கு முற்போக்கு வேடம்? உங்கள் வேடம் களைந்தது மிஸ்டர் பரத்வாஜ்!

...மேலும்

Apr 25, 2015

பெரியார் பார்வையில் தாலி - செல்வ கதிரவன்


“தாலி பெண்களுக்கு வேலி” என்கிற சொல்லாடல் தமிழகத்தில் தொன்றுதொட்டு வழக்கில் இருந்து வருகின்றது. தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் முதலிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் அணிவிக்கும் தாலி குறித்தானவை ஆகும். கி.பி.பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் தமிழ் நாட்டில் தாலி புனிதப் பொருளாகக் கருதப்படுவதாகக் கூறுகிறார்கள். இன்றும் கூட தாலி கட்டப்படாத திருமணம் என்பது எங்கோ ஒன்றிரண்டுதான் அபூர்வமாக நடக்கின்றது. தாலிக் கயிறு கட்டுவதற்குப் பதிலாக தங்கச் சங்கிலியில் தாலியை மாட்டுவது என்கிற மாற்றத்தை மட்டும் கொண்டு வந்திருக்கிறார்கள் அவ்வளவு தான்... தாலி கட்டாத கல்யாணங்களை ஜீரணிக்கிற அளவிற்கு நம்மவர்களிடம் மனப்பக்குவம் இன்னும் வரவில்லை என்பதே நிஜம். கட்டிய தாலி கழன்று விழுந்துவிட்டால் அவ்வளவுதான்... நமது பெண்கள் தமது கணவருக்கு ஆபத்து வந்திடுமோ என்கிற பயத்தில் கலங்கி கண்ணீர் விட்டுவிடுவார்கள்.

கழுத்தில் தாலிக் கயிறு அணிந்திராத மணியம்மையாருடன் பெரியார்

தாலி சென்டிமெண்ட் காட்சிகள் திரைப்படங்களில் தொடார்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. தொலைக்காட்சி நெடுந்தொடர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இளம் காளையர் வனத்திற்குச் சென்று புலிகளைக் கொன்று அதன் பற்களால் மணப் பெண்ணிற்கு தாலி செய்து கட்டுவார்கள் என்கிற செவி வழிச் செய்தியும் உண்டு. இன்று தாலிகளின் அமைப்பு சாதிக்குத் தகுந்தவாறு வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன.

கணவனை இழந்தவளை ‘தாலி அறுத்தவள்’ என்று கேவலமாகக் கருதுகிற நடைமுறை எல்லா சாதியினரிடமும் இருப்பதை இங்கு காணமுடிகிறது. ஆனால் மனைவியை இழந்தவனுக்கு எவ்விதமான அடை மொழிகளும் அறவே கிடையாது. இப்படி தாலி குறித்த கனமான கருத்தியலை தாம் இளைஞராக இருந்த காலத்திலேயே தகர்த்தவர் தந்தை பெரியார் ஆவார். இந்தியச் சிந்தனையாளர்களில் தாலியை நிராகரித்துப் பேசியவர் தந்தை பெரியார் ஒருவரே.

தாலி மீது தந்தை பெரியாருக்கு எவ்வித மரியாதையும் இருந்ததில்லை. தாலியின் புனிதத்தை உடைக்கிற பணியை தனது வீட்டில் இருந்தே அவர் ஆரம்பித்தார்.

பெரியாருடைய வயது பத்தொன்பது ஆகும் போது பதின்மூன்று வயது நாகம்மாளை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அந்தக் காலத்தில் சிறு வயதிலேயே திருமணம் முடித்து விடுவார்கள்.

ஒரு நாள் இரவு நாகம்மாளிடம் தாலியைக் கழற்றித் தந்துவிடுமாறு சொன்னார் பெரியார். நாகம்மாள் பதறிப் போய் தாலியைக் கழற்ற மறுத்தார்.

“நான் பக்கத்தில் இருக்கும் போது தாலி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன...? நான் ஊரில் இல்லாத போதுதான் தாலி இருக்கக் கூடாது. இது தெரியாதா உனக்கு...?” என்று இஷ்டப்படி அளந்து விட்டிருக்கிறார் பெரியார். நாகம்மையும் பெரியார் பேச்சை நம்பிவிட்டார். நாகம்மை தாலியைக் கழற்றிக் கொடுக்க அதனை வாங்கி சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு தூங்கி விட்டார். விடிந்ததும் அந்தச் சட்டையோடு வெளியில் போய்விட்டார் பெரியார்.

நாகம்மாளுக்கு தாலி பற்றிய நினைப்பு வர... வெறும் கழுத்தைக் கண்டால் வீட்டார் திட்டுவார்களே... என்று புடவையால் கழுத்தை மறைத்திருக்கிறார். எவ்வளவு நேரம் இப்படி நாடகமாட முடியும்...? ஒரு கட்டத்தில் மாமியார் பார்த்துவிட்டு “எங்கே தாலி” என்று கேட்டிருக்கிறார். கணவன் சொன்னதை நாகம்மாள் திருப்பிச் சொல்ல... “புருசனுக்கு ஏற்ற பெண்டாட்டி” எனக் கூறிச் சிரித்திருக்கிறார்.

1930 மே மாதத்தில் ஈரோட்டில் மணவிழா ஒன்றிற்கு பெரியார் தலைமை தாங்கி இருக்கிறார். இந்த திருமணத்தில் தாலி கட்டுகிற சடங்கு தவிர்க்கப்பட... பெரியார் இதனைப் பெரிதும் பாராட்டிப் பேசி இருக்கிறார்.

“கல்யாண காலத்தில் பெண்ணிற்கு மாப்பிள்ளை தாலிக் கயிற்றைக் கழுத்தில் கட்டி ஆணுக்கு அவள் அடிமையென நடத்துவது என்பது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்து வருவது மாதிரி...”

பெரியார் பேசிய இந்தப் பேச்சு இன்றைய நாளில் கூட எவரும் பேசப் பயப்படுகிற விசயமாகும். இவ்வாறு வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்கிற பாணியில் பேசுகிற துணிவு இன்றைய தலைவர்கள் எவருக்கும் கிடையாது என்கிற போது 1930ல் பேசுவது சாதாரண காரியமா...?

“பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதென்பது கல்யாணம் ஆனது ஆகாதது என்கிற அடையாளத்தை காட்டுவதற்கும்... இன்னார் பெண்டாட்டி என்ற உரிமையை நிலை நாட்டுவதற்கும் பிறத்தியான் அப்பெண்ணை காதலிக்காதிருப்பதற்கும் என்றே கருதப்பட்டு வருகிறது. அப்படியானால் ஆண்களில் கல்யாணம் ஆனவன் ஆகாதவன் என்பதற்கும், இன்னாருடைய புருசன் என்பதற்கும் பிற மாதா காதலிக்காதிருக்கும் பொருட்டும் அடையாளம் அவசியம் வேண்டுமல்லவா..? அதற்காக கல்யாணத்தில் ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலிக் கயிறு கட்ட வேண்டும். அப்படியானால் பெண்களை மட்டும் ஏமாற்றி கழுத்தில் தாலிக் கயிற்றை கட்டி... அடிமைப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்க ஒழிக்கத்தக்க சடங்காகும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.”

பெரியாரின் இந்தக் கறாரான கருத்தைத்தான் “போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கிடுவோம்” என்று மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரைப்பாடலாக்கினார்.

“தாலி புனிதமானது” என்கிற பெரும்பான்மையோரின் எண்ண ஓட்டங்களை எதிர்த்துப் பேச இன்று கூட மனது இடந்தராது. இன்றே இப்படி என்றால் எண்பது வருடங்களுக்கு முன்பு தாலியை, மாட்டின் கழுத்தில் கட்டப்படும் கயிற்றோடு ஒப்பிட்டப் பெரியாரின் பேச்சு சாதாரண நிகழ்வு அல்லவே...!

நன்றி - கீற்று
...மேலும்

Apr 24, 2015

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை : ஒரு பெண்ணியப் பார்வை - ஏ.எம்.சாலன்


கடந்த சில வருடங்களாக நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடு மைகள் பெருகி வருவதை வெகுசன ஊடகங்கள் அவ்வப்போது எடுத்துக் காட்டுவதைக் காண முடிகிறது. பல வருடங்களுக்கு முன்னர் அங் கொன்றும் இங்கொன்றுமாக வெளியே தெரி யாமல் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்தக் கொடுமை இப்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நம் நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிக் கொண் டிருந்தாலும்கூட, அவற்றை எடுத்துப் பரிசோதித்துப் பார்க்கும் பொழுது, குறிப்பாக அதற்கு அதிக மாகப் பலியாகிக் கொண்டிருப்பது தலித் பெண் களாக இருப்பது தெரிய வருகிறது. இவர்களுடன் ஆதிவாசிப்பெண்களையும் சேர்த்துக் கொள்ள லாம்! இவர்கள் போக, ஆங்காங்கே சில இளம் பெண்கள்.

இவற்றுக்குப் பல உதாரணங்களைக் காண முடியும். சமீபத்தில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு தலித் பெண்கள் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாகி, பின்னர் மரத்தில் கட்டித் தொங்க விடப்பட்டது, நாடறிந்த சேதி. இது நடைபெற்றது 2014, மே மாதம் 14-ஆம் தேதி. பாலியல் வன் கொடுமைக்கு ஆளானது 14-ம், 15-ம் வயதான இரண்டு சிறுமிகள். இக்கொடுமைக்கு ஆளாகி இறந்து போன அப்பெண்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்வதற்காக வேண்டி பி.எஸ்.பி. கட்சியின் தலைவரும் உ.பி. மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி சென்றிருந் தார். கண்டு, சந்தித்துவிட்டுத் திரும்பிய அவர், கீழ்க் கண்டவாறு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந் தார்.

“அடித்தட்டு வர்க்கத்தைச் சார்ந்த பெண் களுக்கு எதிராகப் பெருகிவரும் இக்கொடுமை யினைத் தடுத்து நிறுத்துவதற்கு இயலாத சமாஜ் வாதிக் கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு உ.பி. மாநிலத்தில் ராஷ்டிரபதி ஆட்சியைக் கொண்டு வரவேண்டும்” என்று.

முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் அவர்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்து போன சிறுமிகளின் வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று, புகார் கொடுக்கப் போன போது, அந்த வேளையில் ‘டியூட்டி’யி லிருந்த காவலர்கள், ‘நீங்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள்?’ என்று, சாதியைப் பற்றி விசாரித் தார்களாம்!

இந்தச் சேதியைக் கொல்லப்பட்ட சிறுமியின் அப்பா, அந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினரைக் கண்டு தெரிவிக்கவே, அவர், கேசை ஊக்ஷஐ விசாரணைக்கு விடுமாறு சொல்லியிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சொல்லியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அமைச்சராக இருந்த மாண்புமிகு. திரு.ராம்விலாஸ் பாஸ்வான், திரு.ராகுல்காந்தி போன்றவர்களும் இந்தக் கொடுமை நடைபெற்ற கிராமத்திற்கு சென்று வந்துள்ளார்கள்.

இதே மாதிரி, மும்பையிலும் வெகுசன ஊடகம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணம் அடைந்திருந்தார்.

உ.பி. மாநிலத்தில் பதாயும் கிராமத்தில் நடை பெற்றது போல் சிதாயூர் மாவட்டத்தில், பேனிப்பூர் கிராமத்தில் பதினோரு வயது தலித் சிறுமி, மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தார். தன் மகளைத் திருமணம் பண்ணித் தருமாறு கேட்ட போது, செய்து கொடுக்க மறுத்ததினால், தன் மகளை இவ்வாறு கொன்று கட்டித் தொடங்க விட்டு விட்டதாக, அந்த ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்ற பையன் உட்பட ஆறு பேருக்கு எதிராக அப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித் திருந்தார்.

இது மாதிரி பிரேஸ்பூர் கிராமத்தில் 15 வயது இளம்பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொண்டுபோய், பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக வேண்டி காசிம் என்பவரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.

இரண்டு இளம் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, மரத்தில் கட்டித் தூக்கப்பட்ட வழக்கு உ.பி. மாநிலத்தில் சுரணை யுள்ள மக்களிடையே மிகப் பெரிய கலக உணர்வைத் தூண்டிவிட்ட அதே வேளையில், நம்மையெல்லாம் நடுங்கவும் வெட்கப்படவும் செய்யும் படியான இன்னொரு குரூரமான சம்பவமும்,

உ.பி. மாநிலத்திலுள்ள அலிகட் என்ற இடத்தில் நிகழ்ந்தது. அதாவது, நீதிபதியாகப் பணியாற்றி வரும் பெண்ணொருவரை, அவர் தங்கியிருந்த (அலு வலர்கள் தங்குமிடம்) இடத்திற்குச் சென்று, பாலியல் வன்கொடுமையை நிகழ்த்திவிட்டு, படுக்க வைத்து, கட்டாயப்படுத்தி அவர் வாய்க்குள் பூச்சிக் கொல்லி மருந்தை ஊற்றி, கொலை செய்யவும் முயற்சி நடைபெற்றது. உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண் நீதிபதியின் நிலை என்னவாயிற்று என்றே தெரியவில்லை!

இறுதியில், அவருடைய சகோதரர் அளித்த புகாரின் பேரில் சீனியர் மாவட்ட சூப்பிரண்டு நிதின் திவாரி அவர்கள், வழக்கைப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

இதுமாதிரி டெல்லியில் மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை, ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸிற்குள் வைத்து, நான்கு, ஐந்து ‘இருகால் மிருகங்கள்’ பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, வெளியே தூக்கி யெறிந்ததைக் கண்டு, மக்கள் தன்னெழுச்சியாக அணிதிரண்டு பொங்கி எழுந்ததைப் பார்த்து அன்றைய மத்திய அரசே நடுநடுங்கிப் போனது, நாடறிந்த சேதி. இவ்வாறு வடஇந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க, கேரளத்தில், எர்ணா குளம் மாவட்டத்தில், பரவூர் என்ற ஊரைச்

சேர்ந்த இளம் பெண்ணொருவரை, அவரது தாய் தந்தையரே கட்டாயப்படுத்தி பலருக்குக் ‘கூட்டிக் கொடுத்த’க் குற்றத்திற்காக, அப்பெண்ணின் பெற் றோரும், அதில் சம்பந்தப்பட்டவர்களில் சிலரும் சட்ட ரீதியாகத் தண்டிக்கப்பட்டனர். (பரவூர் பெண் வாணிபக் கேஸ்). இந்தக் கேஸ் கேரளத்தில் ரொம்பவும் பிரபலமான ஒன்றாகும்.

இதுபோன்று, எர்ணாகுளத்தில், ஆலுவா என்ற ஊருக்குப் பக்கத்தில், கிழக்கம்பலம் என் றொரு இடம் உள்ளது. இங்கு கார்மண்ட் பாக்டரி ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பாக்டரியில் வேலை பார்ப்பதற்காக வேண்டி ஜார் கண்ட்டிலிருந்து பல இளம்பெண்கள் அழைத்துக் கொண்டு வரப்பட்டிருந்தார்கள். இவர்களை வேலைக்குச் சேர்ப்பதற்கு முன்னால், கன்னிப் பெண்கள் தானா, என்று பரிசோதித்துப் பார்த்துக் கொண்டார்கள். கன்னிகள் என்று உறுதியான பின்னரே அனைவரும் வேலையில் அமர்த்தப் பட்டார்கள். அதே பெண்கள், ஊருக்குத் திரும்பும் வேளையில் நடத்திய பரிசோதனையில் அனை வரும் கர்ப்பிணிகள் எனத் தெரிய வந்தது. இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பெண்களில் ஒருவர், தன் முகவரியை வெளிப்படுத்தாமல் கிழக்கம்பலத்தி லுள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். இதுதான், மேற்கண்ட வழக்கிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. உடனே இந்த வழக்கு மகளிர் கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜார்கண்ட் மாநில அஜயந்தா மகளிர் கமிஷன் நியமித்த அஜயந்தாசிங் அளித்த அறிக்கை, இது.

சமீபத்தில், தமிழ்நாட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர், திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் தன் உடன்பிறந்த சகோதரியின் மகளிடம் (அப்பெண் 9-ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி) தகாத முறையில் நடந்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி யதுடன் நின்றுவிடாமல், தன் நண்பர் ஒருவரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு போய், அவருக்கும் அப்பெண்ணின் உடம்பை விட்டுக் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறார். இந்தக் குற்றத்திற் காக வேண்டி அவர், சமீபத்தில் கைது செய்யப் பட்டார்.

இம்மாதிரி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றிய சேதி, நம் நாட்டைக் கடந்து வெளிநாடு களுக்கும் எட்டியிருக்கிறது.

பொதுவாக நம் நாட்டில் பெண்களுக்கு எதிராகப் பெருகி வரும் பாலியல் வன்கொடுமை களைப் பற்றி, வெகுசன ஊடகங்கள் வாயிலாகத் தெரிந்துகொண்ட வெளிநாடுகளில் சில, இந்தி யாவில் நடைபெற்று வரும் பாலியல் தொல்லை களைக் கணக்கிலெடுத்துக் கொண்ட, தங்கள் பிரஜைகளின் நலனைக் கருதி, இந்தியாவுக்குள் உல்லாசப் பயணம் வருவதை சட்டரீதியாகத் தடுத்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம், நம் நாட்டுப் பெண்கள் மட்டுமின்றி, வெளிநாடு களிலிருந்து உல்லாசப் பயணம் வரும் வெளி நாட்டுப் பெண்களும் கூட, நம் நாட்டில் ஆங் காங்கே பல உல்லாசக் கேந்திரங்களில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்.

இம்மாதிரி நம் நாட்டில் நடைபெற்று வரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைப் பற்றிய சேதி, ஐக்கிய நாட்டு சபை வரையில் எட்டியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இது சம்பந்தமாக, ஐக்கிய நாட்டு சபை செக்ரட்டரி ஜெனரல் திரு.பான்கிமூன், உ.பி-யில் இரண்டு தலித் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட குரூரமான அந்தப் பாலியல் வன்முறை, தன்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகத் தெரி வித்திருந்தார்.

இதுபோல் நிகழ்ந்து வரும் சம்பவங்களைப் பற்றி முன்னாள் உ.பி. முதல்வர் திரு.முலாயம்சிங் யாதவ் அவர்களின் கருத்து, இந்த இடத்தில் எடுத்துக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதாவது ‘எங்களுடைய ஆண் பிள்ளைகள், ஆண் பிள்ளைகள் தான்!’ என்று, செய்த தவறை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் பார்த்து, மார் தட்டிக் கொண்டு பெருமைப்பட்டிருந்தார்.

அதோடு நின்றுவிடவில்லை, அவர் ‘கிட்டத் தட்ட 21 கோடி சனத்தொகையுள்ள எங்கள் உ.பி. மாநிலத்தில், இம்மாதிரி நடைபெறும் சம்பவங்கள் ஒன்றும், அவ்வளவு பெரிய விஷயமல்ல!’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வார்த்தைகளின் அடிப்படையில்தான் ஐக்கிய நாட்டு சபை செக்ரட்டரி ஜெனரல் திரு.பான்கிமூன் மேற்கண்ட செயலைக் கண்டித் திருந்தார்.

திரு.பான்கிமூனின் வார்த்தைகள் பத்திரிகை களில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருந்தது.

“கடந்த இரண்டு வருடங்களில், உலகில் பல நாடுகளில், பல்வேறு இடங்களில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருக் கின்றன. குறிப்பாக, நைஜீரியா முதல் பாகிஸ்தான் வரையிலும்; கலிபோர்னியா தொட்டு இந்தியா வரையிலும்! ஆனால் கக்கூஸ் வசதி இல்லாத தினால் ‘வெளிக்கிருப்பதற்காக’, வெட்ட வெளிக்குச் சென்ற இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடு மைக்கு ஆளான இந்திய நாட்டுச் சம்பவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிற்று” என்கிறார், திரு.மூன்.

மேற்கண்ட வன்கொடுமைகளை ஒட்டி மேகாலயா மாநிலத்தில் தன் மீது நிகழ்த்தவிருந்த பாலியல் வன்கொடுமையைத் தடுத்த பெண் ணொருவர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான தையும் இந்த வேளையில் நாம் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த மாதிரிக் கொடுமைகள் அநேகமாக நம் நாட்டு இளம் பெண்களைக் குறி வைத்தே நடைபெறுகின்றன. இவ்வாறு பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகள் நம் நாட்டு நியாயாதிபன்மார்களுக்கு இடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இளம்பெண்கள் மீதான திராவகம் வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 6 வாரங் களுக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீசு அனுப்பவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

நாடு முழுவதும் இளம்பெண்களுக்கு எதிரான திராவகம் வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வரு கின்றன. குறிப்பாக தன்னை விரும்பாத, திருமணம் செய்துகொள்ள மறுக்கும் இளம்பெண்கள் மீதும், பழிக்குப் பழி வாங்குவதற்காகவும் திராவகம் வீசும் சம்பவங்கள் அனைத்து மாநிலங்களிலும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வாகிவிட்டது. இது குறித்து, ஏற்கனவே தனது கண்டனத்தை தெரி வித்த சுப்ரீம் கோர்ட்டு, கடைகளில் அனை வருக்கும் திராவகம் விற்பனை செய்யக்கூடாது என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் திராவகம் விற்பனை செய்யும் கடைக்காரர், வாங்குபவர் என்ன காரணத்திற்காக அதனை வாங்குகிறார் என்பதை பதிவேடு மூலம் பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வின் முன்பாக (25-7-2014) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப் போது இளம்பெண்கள் மீதான திராவகம் வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து நீதி பதிகள் மிகுந்த கவலையும் வேதனையும் தெரி வித்தனர்.’ (தகவல்: தினத்தந்தி நாளிதழ் 26-7-2014)

இந்தக் கொடுமைகளுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில், அனைத்து அமைப்புகளும் ஆகஸ்ட் 31-ம் தேதி பந்த் நடத்தியது.

இவைகளுக்கெல்லாம் காரணம் என்ன? இவற்றுக்கான தீர்வு என்ன? இவைகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், எங்கிருந்து தொடங்குவது? யார் தொடங்கி வைப்பது? நீதிநியாயத் துறையா? அரசியல் கட்சிகளா? அல்லது சமூக இயக்கங் களா? அல்லது மகளிர் அமைப்புகளா? - என்ற கேள்விகள் நம்மைப் போட்டுத் துளைத்துக் கொண்டிருக்கிற வேளையில் சமீபத்தில் (ஜுன், 4-ல்) கேரள மாநிலத்தில், எர்ணாகுளம் மாவட்டத்தில் இளம்பெண்கள் உட்பட பல பெண்கள் அணி திரண்டு ஒரு போராட்டத்தை நடத்தினார்கள். ‘அரை நிர்வாணப் போராட்டம்!’ நகரத்தின் மத்தியில், பிரதானச் சாலை வழியே பெண்கள் அரை நிர்வாணத்துடன் ஊர்வலமாக நடந்து சென்று ‘பெண்களின் மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமைக்கு ஒரு முடிவு கட்டுங்கள்’ என, யார் யாரையெல்லாமோ எச்சரிக்கை செய்யும் விதத்தில் இந்த ஊர்வலம் நடைபெற்றது. வெட்கத்தை விட்டு, பெண்கள் தெருவில் இறங்கி நடத்திய போராட்டமாக இருந் தாலும்கூட நம் நாட்டில் முக்கியமான பொறுப்பு களிலும், நாற்காலிகளிலும் உட்கார்ந்து கொண்டு, ஒன்றும் தெரியாதவர்களைப் போல் நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை யாகவே அமைந்தது. இது ஒரு தொடக்கப்புள்ளி தான். என்றாலும்கூட, நாடெங்கும் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் பாலியல் வன்கொடுமை களுக்கு எதிரான, அபூர்வமான ஒரு கண்டன ஊர்வலம் இது. இது தான், சரியான தொடக்கமும் கூட! கொடுமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட வர்கள் ஒன்றாக அணிதிரளாமல் நம் நாட்டில் நியாயம் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு பெண்கள் நடத்திய கலகம் இது, என்று கூடச் சொல்லலாம்!

நன்றி - கீற்று
...மேலும்

Apr 23, 2015

தாலி - சில கருத்துக்கள், சில உண்மைகள், சில கேள்விகள்! - இ.பு.ஞானப்பிரகாசன்


திராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது”. பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிற ஒரு மரபை எதிர்த்தால் சமூகத்தில் பரபரப்பு ஏற்படத்தான் செய்யும்; அஃது இயல்பு. ஆனால், அந்தப் பரபரப்பையும் தாண்டி இந்து சமய அமைப்புகளிடமும் அந்தக் கட்சிகளிடமும் காணப்படுகிறதே ஒரு பதற்றம், அஃது ஏன்?

தமிழ்நாட்டில் தாலி, கற்பு போன்றவற்றைப் பற்றி யாராவது ஏதாவது பேசினால் உடனே போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் எழுவது வாடிக்கைதான். முன்பு, தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு பேசியபொழுது நடந்த ஆர்ப்பாட்டங்களையும் கண்டனங்களையும் யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால், அவையெல்லாம் எந்தக் கட்சிச் சார்பும் இல்லாமல், பொதுமக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள். ஆனால், இந்தத் ‘தாலி அகற்றும் நிகழ்ச்சி’க்கு எதிராக நடக்கும் எல்லாக் கண்டன ஆர்ப்பாட்டங்களும் இந்து சமய அமைப்புகளால் மட்டுமே நேரடியாக நடத்தப்படுகின்றன என்பது இங்கு நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று!

தாலி என்கிற கோட்பாட்டுக்கு (concept) மக்களிடையே இன்றும் பழைய ஆதரவு அப்படியே இருக்குமானால், முன்பு குஷ்புக்கு எதிராக நடந்தது போல் இப்பொழுதும் பொதுமக்களே திரண்டு வீரமணி அவர்களுக்கு எதிராகவும் திராவிடர் கழகத்துக்கு எதிராகவும் கலகத்தில் இறங்கியிருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. (நடந்திருந்தால் இன்றைய ஊடகப் பெருவெளிச்சத்திலிருந்து அது தப்பியிருக்காது). நடந்த அத்தனை ஆர்ப்பாட்டங்களும் பா.ஜ.க, இந்து முன்னணி போன்ற சமயச்சார்புக் கட்சிகளாலேயே நடத்தப்பட்டிருப்பதும், மக்கள் அமைதி காப்பதும், தாலி இன்று அவ்வளவு ஒன்றும் பெரிய புனிதச் சின்னமாக நம் மக்களால் கருதப்படவில்லை என்பதாகவே எண்ண வைக்கின்றன.

இப்படி, மக்களே அமைதியாக இருக்கும்பொழுது இந்து சமயக் கட்சிகள் மட்டும் இதற்காகக் குதியோ குதி எனக் குதிப்பது அவர்களின் உண்மை முகத்தை அவர்களே அம்பலப்படுத்திக் கொள்வதாகத்தான் இருக்கிறது.

தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்துபவர்களை வக்கிரம் பிடித்தவர்கள் என்றும், தி.க-வினர் அனைவருமே எந்தவிதமான ஒழுக்கமோ கட்டுப்பாடோ இல்லாதவர்கள் என்றும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாலியை அகற்றிக் கொண்ட பெண்கள் குடும்பப் பெண்களே இல்லை என்றும், இன்னும் இன்னும் பல்வேறு விதங்களிலும் ஒழுக்கமும் பண்பாடும் மணக்க மணக்கப் பல அருமையான கருத்துக்களைத் திருவாய் (!) மலர்ந்தருளியிருக்கிறார்கள் இந்து சமய அமைப்புகளைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, இராம.கோபாலன் முதலானோர். தவிர, பெரியார் படத்தைச் செருப்பால் அடிப்பது, அதன் மீது சிறுநீர் கழிப்பது போன்ற அருஞ்செயல்களின் மூலம் இவர்கள் நாகரிகத்தின் உச்சக்கட்டத்துக்கே சென்று விட்டார்கள்.

உடனே, “ஏன், பெரியார் மட்டும் ராமரைச் செருப்பால் அடிக்கவில்லையா? பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் விடவில்லையா? அது மட்டும் நாகரிகமா?” என நம் நண்பர்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி! ஆனால், அப்படிக் கேட்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்! ராமர், பிள்ளையார் போன்ற கடவுள் உருவங்களைத்தான் பெரியார் செருப்பால் அடித்தாரே தவிர, தன் மாற்றுக் கருத்தாளர்களின் படங்களையோ, கடவுள் நம்பிக்கையாளர்களின் படங்களையோ, இந்து சமயத் தலைவர்களின் உருவங்களையோ அவர் அப்படிச் செய்யவில்லை.

சரி, கடவுள் உருவங்கள் மீதே ஆனாலும் ஏன் அப்படிச் செய்ய வேண்டும் எனக் கேட்டால், பெரியார் கடவுள் இல்லை என்றார்; மக்கள் நம்பவில்லை. கடவுள் நம்பிக்கையும் சமயமும், அவை நம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள ஏற்றத்தாழ்வுகளும்தாம் நம் இன்னல்கள் அனைத்துக்கும் காரணம் என்று பெரியார் எடுத்துக் கூறினார். ஆனாலும், அதற்காகக் கடவுளைப் புறக்கணிக்க மக்கள் ஆயத்தமாக இல்லை; அஞ்சினர். கடவுள் இல்லை என்பதற்குச் சான்றாக அறிவியலாளர்களின் அறிஞர்களின் கூற்றுக்களை மக்களிடையே விளக்கினார். ஆனாலும், கடவுள் மீதான அச்சம் மக்களுக்கு விலகவில்லை. எனவேதான், கடவுள் உருவங்களைச் செருப்பாலேயே அடிப்பது, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் விடுவது என நேரடியாகச் செயலிலேயே செய்து காட்டி, இப்படிக் கடவுளை நேரடியாகவே தாக்கியும் தனக்கு கடவுளால் எந்தத் துன்பமும் நேரவில்லை என்பதை மக்கள் பார்த்தால் கடவுள் சிலைக்கு எந்த ஆற்றலும் இல்லை; அது நம்மை ஒன்றும் செய்யாது என மக்கள் உணர்வார்கள் என்ற நம்பிக்கையில் பெரியார் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தினார். (ஆனால், அப்படியும் இது குறித்து மக்களிடையே பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை என்பது வேறு கதை).

ஆக, கடவுள் என்கிற கோட்பாடு தவறு என்று எவ்வளவு எடுத்துக் கூறினாலும் புரியாத, படிக்காத அன்றைய தமிழ் மக்களுக்குச் செயல்முறையில் புரிய வைப்பதற்காகப் பெரியார் நடத்திய அத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கும், தங்கள் சமயம் சார்ந்த ஓர் அடையாளம் மக்களிடமிருந்து பிரிக்கப்படுவதை ஏற்க முடியாமல் பெரியார் படத்தை இவர்கள் இப்படி இழிவுபடுத்துவதற்கும் இடையே பெருத்த வேறுபாடு உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

இந்த அழகில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமாம்! எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பா.ஜ.க-வினரே, உங்கள் கனவில் கூட அது பலிக்கப் போவதில்லை!

கடவுளையும், சமய நம்பிக்கை சார்ந்த சடங்குகளையும் மறுப்பது உலகெங்கும் உள்ளதுதான். கடவுள் இருக்கிறார், சமயச் சடங்குகளில் பொருள் இருக்கிறது என்பது ஒரு தரப்பினரின் நம்பிக்கை என்றால், அதை நம்பாமல் இருப்பது மறு தரப்பினரின் உரிமை. அப்படிப் பார்த்தால், தாலியை அணிவதும் அகற்றுவதும் அவரவர் விருப்பம். அப்படித் தாலியை மறுக்கக்கூடாது, கழற்றக்கூடாது எனச் சொல்வதாயிருந்தால் தாலியை மறுக்கும் பெண்ணுக்குக் கணவர்தான் சொல்ல வேண்டும். மாறாக, அதைச் சொல்ல நீங்கள் யார்? இந்திய மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையே தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்கள் என நினைப்பா மனதில்?

கேட்டால், இந்து சமயக் கட்சியினர் எனும் முறையில் இந்து சமய அடையாளத்துக்கு எதிரான நடவடிக்கையைக் கண்டிக்கிறோம் என்பீர்கள். தெரியாமல்தான் கேட்கிறேன், இந்து சமயப் பண்பாட்டையும் அடையாளங்களையும் காப்பதில் உண்மையிலேயே அவ்வளவு அக்கறையா உங்களுக்கு?

அப்படியானால், முந்நூற்றுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கிய இராசபக்சவுக்கு ஏன் கடந்த இலங்கை அதிபர் தேர்தலில் ஆதரவளித்தீர்கள்? கோயிலை இடித்தால் ஆதரவு, தாலியை அகற்றினால் எதிர்ப்பா? கோயிலா தாலியா – இரண்டில் எது பெரிய பண்பாட்டுச் சின்னம்?

சரி, தாலிதான் கோயிலை விடப் பெரிய இந்துச் சமய அடையாளம் என்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்படிப் பார்த்தாலும், நடந்த இனப்படுகொலையில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கணவனை இழந்ததன் மூலம் அவர்கள் விருப்பத்துக்கு மாறாகவே தாலியறுக்கப்பட்டிருக்கிறார்களே, அவர்களுக்காக நீங்கள் ஏன் இன்று வரை பெரிதாக எந்தக் குரலும் எழுப்பவில்லை?

“ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரை, இந்தியா எடுக்கும் முடிவைத்தான் நாங்களும் பின்பற்றுவோம். ஏனென்றால், அண்டை நாடு என்கிற முறையிலும், அந்த நாட்டில் பாதிக்கப்படுகிற அதே தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிற நாடு என்கிற வகையிலும் இதில் முடிவெடுக்க முழு உரிமையும் இந்தியாவுக்குத்தான் உண்டு” என்று உலக நாடுகளும், ஐ.நா முதலான பன்னாட்டு அமைப்புகளும் ஒரே குரலில் கூறுகின்றன. எனவே, இன்று நீங்கள் நினைத்தால் ஒரே நாளில் ஈழத்தில் இடிக்கப்படும் கோயில்களையும் அறுக்கப்படும் தாலிகளையும் காப்பாற்றலாமே! அதை விட்டுவிட்டு சமய நம்பிக்கை இல்லாத காரணத்தால் தாங்களாகவே முன் வந்து தாலியை அகற்றிக் கொள்பவர்களுக்கு எதிராகப் போராட வேண்டிய தேவை என்ன?

இந்தக் கேள்விகளுக்குக் கண்டிப்பாக பா.ஜ.க-வையோ இன்ன பிற இந்து சமய அமைப்புகளையோ சேர்ந்தவர்கள் யாரும் பதிலளிக்கப் போவதில்லை. ஆனால், இதைப் படிக்கும் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் இந்திய மக்கள் அனைவருமே இந்தக் கோணத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

இராமருக்குக் கோயில் கட்டுகிறேன் என்பது, மொத்த இந்தியாவுமே இந்து நாடு என்பது, எதற்கெடுத்தாலும் “இந்து, இந்து, இந்து” எனப் பேசுவது என இந்துப் பண்பாட்டையே காக்கப் பிறப்பெடுத்த திருக்குமாரர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் பா.ஜ.க-வினருக்கும் பிற இந்து சமய அமைப்புகளுக்கும் உண்மையிலேயே இந்து சமயத்தின் மீது அக்கறை இருக்கிறதா? இருந்திருந்தால் இவர்கள் இந்துக் கோயில்களை இடித்த இராசபக்சவுக்கு ஆதரவளிப்பார்களா? தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் நாமெல்லாம் இந்துக்கள் என்று கூறி பா.ஜ.க-வில் சேர அழைக்கும் இவர்கள், இவர்கள் கூற்றுப்படி பார்த்தால் அதே இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட வேண்டிய ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பது ஏன்? அவர்கள் கோரிக்கையான தமிழீழத்தை எதிர்ப்பது ஏன்? அவர்கள் தாலி அவர்கள் விருப்பத்துக்கு எதிராகவே வலுக்கட்டாயமாக அறுக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பது ஏன்?

இவற்றையெல்லாம் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்! இந்தக் கருத்துக்களை இந்தியா எங்கும் உள்ள இந்துக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்! “எவ்வளவுதான் அட்டூழிங்கள் நிகழ்த்தினாலும் நம் சமயம் சார்ந்த ஒரே அரசியல் பிரதிநிதி இவர்கள்தானே” என்கிற நினைப்பில் இவர்களை ஆதரிக்கும் இந்துக்களுக்கு இந்த உண்மையைப் புரிய வைக்க வேண்டும்! இங்கு எல்லாமே அரசியல்தான் – பதவிதான் – பணம்தான்! மற்ற எதற்காகவும் யாரும் இங்கு அரசியல் சேவை புரிய வரவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்!

அப்படியானால் தாலி அகற்றுவதை இந்து அமைப்புகள் எதிர்ப்பது ஏன்?

தாலி கட்டுவது தமிழர் வழக்கமா ஆரியர் வருகைக்குப் பின் ஏற்பட்ட பழக்கமா என்பது குறித்துத் தமிழறிஞர்களிடையியே முரண்பாடான கருத்துக்கள் நிலவினாலும், பொதுமக்கள் பார்வையில் அஃது இந்து சமயத்துக்கு மட்டுமே உரிய ஒரு வழக்கமாகத்தான் கருதப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட, இந்து சமயத்தின் முதன்மையான அடையாளங்களில் ஒன்றான தாலியைத் தமிழர்கள் புறக்கணித்தால் தமிழ்நாட்டில் தங்கள் நிலைமை என்னாகும் என்கிற பதற்றத்தினால்தான் இந்து அமைப்புகள் இதை எதிர்க்கின்றனவே தவிர, மற்றபடி இந்துப் பண்பாட்டின் மீதோ, தமிழ் மக்கள் மீதோ இவர்களுக்கு எந்தவிதத்திலும் அக்கறையும் இல்லை, சர்க்கரையும் இல்லை.

அதே நேரம், திராவிடர் கழகம் ஒன்றும் பெரிய தமிழர் நலக் கட்சியும் இல்லை. ஈழத்தில் தமிழினமே படுகொலை செய்யப்பட்டபொழுது, அதை நிறுத்தும் ஆற்றல் தன்னிடம் இருந்தும் செய்யாமல் கருணாநிதி வேடிக்கை பார்த்த வேளையில், அவரை ஒரு வார்த்தை கூடக் கண்டிக்காமல், மாறாக அவருடைய அந்தச் செயலுக்குச் சாக்குச் சாக்காகச் சாக்குப்போக்குச் சொல்லிக் கொண்டிருந்தவர்தான் மானமிகு தலைவர் வீரமணி அவர்கள். அப்பேர்ப்பட்டவர் இத்தனை ஆண்டுகளாகப் போராட்டம் எதுவும் நடத்தாமல், திடீரெனப் பெரியாரியச் சிந்தனைகள் இன்று கிளர்ந்தெழுந்து தமிழர் நலனுக்காக மீண்டும் இப்படிப் போராட்டமெல்லாம் நடத்துகிறார் எனக் கூறினால், அதை நம்பும் அளவுக்கு இந்தப் பெரியார் மண்ணில் யாரும் இளித்தவாயர்கள் இல்லை.

இப்படி, ஒரு கருத்தியலைத் தவறு என்பவர்கள், சரி என்பவர்கள் ஆகிய இருவேறு தரப்பினரும் குறிப்பிட்ட அந்தக் கருத்தியலின் தன்மைக்காகவோ, மக்கள் நலன் கருதியோ அல்லாமல் தங்கள் நலனுக்காகவே அவற்றைக் கூறுவதாகத் தென்படும் நிலையில், மக்களாகிய நாம் நாமாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவதுதான் சரியாக இருக்க முடியும். எனவே, இந்த இரு தரப்பினரில் ஒருவரையும் நம்பாமல் ‘தாலி கட்டும் வழக்கம்’ சரியா தவறா, அது வேண்டுமா வேண்டாவா என்பது பற்றித் தமிழ் அறிஞர்கள், வரலாற்று வல்லுநர்கள் ஆகியோரின் சான்றுடன் கூடிய கருத்துக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டும், மேற்கொண்டு தாங்களாகவே சிந்தித்தும் மட்டுமே முடிவுக்கு வருமாறு நம் தமிழ் மக்களைக் கோருகிறேன்!

தாலி தமிழர் பண்பாடா?

தாலி என்கிற கோட்பாட்டைத் தமிழர்கள் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், முதலில் அது தமிழ்ப் பண்பாடாக இருக்க வேண்டும்! அது தமிழ்ப் பண்பாடுதானா என்று கேட்டால், ஆம் என்றும், இல்லவே இல்லை என்றும் இரு வேறு முரண்பட்ட கருத்துக்களைத் தக்க சான்றுகளுடன் கூறுகிறார்கள் தமிழ் அறிஞர்கள் பலர்.

“புதுநாண் நுழைப்பான் நுதி மாண் வல் உகிர்ப் பொலங்கல ஒரு காசு” என்று அள்ளூர் நன்முல்லையாரும், “வாலிழை மகளிர் விழவணி கூட்டும்” என்று வெள்ளிவீதியாரும் குறுந்தொகையில் பாடியிருப்பது, தாலி கட்டும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது என்பதற்கான அத்தாட்சி எனத் தமிழ் விக்கிப்பீடியா கூறுகிறது.

ஆனால், அகநானூற்றிலும், தொல்காப்பியத்திலும் பழந்தமிழர்த் திருமணங்கள் எப்படி நடந்தன என்பதைக் காட்சியாகவே விவரிக்கும் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே மருந்துக்கும் காணப்படாததால் தமிழர்த் திருமண முறையில் தாலிக்கு இடமே இல்லை என்று தமிழறிஞர்கள் பலரும் அடித்துக் கூறியுள்ளார்கள்.

“கி.பி 10-ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது” என்கிறார் வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார்.

“பழந்தமிழர்களிடத்தில் தாலி வழக்கு இல்லவே இல்லை” என்கிறார் வரலாற்று வல்லுநர் மா.இராசமாணிக்கனார்.

காலஞ்சென்ற அறிஞர்களின் கருத்துக்கள் இப்படி இருக்க, நிகழ்கால அறிஞர்களில் தலைசிறந்த ஒருவரான புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் தொ.பரமசிவன் ஐயா அவர்கள் “கி.பி 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலிப் பேச்சே கிடையாது” என்கிறார். போதாததற்கு, “தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருட்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை” என்றும் தனது ‘பண்பாட்டு அசைவுகள்’ நூலில் அவர் நெற்றியடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்காலத் தமிழறிஞர்களில் தலைசிறந்த இன்னொருவரான இராம.கி அவர்களோ, தாலி தமிழர் பண்பாடுதான் என்பதை நிறுவும் முயற்சியாக ‘தாலி’ என்கிற தலைப்பில் வரலாற்று ஆய்வுத் தொடர் ஒன்றையே இணையத்தில் படைத்துள்ளார்!

ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலி) முதலான பல்வகைத் தாலிகள் பண்டைத் தமிழரிடத்தில் இருந்ததைச் சங்கப் பாடல் சான்றுகளுடன் எடுத்துக்காட்டும் ஐயா அவர்கள், இவையெல்லாம் இருந்திருக்கும்பொழுது மணமான பெண்கள் அணியும் தாலி மட்டும் ஏன் இருந்திருக்காது என்று கேள்வி எழுப்புகிறார். ஆண் பிள்ளைகளும், இளைஞர்களும் அக்காலத்தில் ஐம்படைத்தாலி என்கிற ஒன்றை அணிகிற வழக்கம் இருந்ததைப் பாடல் சான்றுகளோடு நிறுவியுள்ளார். இராம.கி அவர்களுக்கு முன்பே ஐம்படைத்தாலி பற்றித் தமிழறிஞர்கள் ஏராளமானோர் – தாலி தமிழர் பண்பாடு இல்லை என்போர் உட்பட – தங்கள் நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள், அப்படி ஒரு மரபு இருந்ததை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், மணமான பின் ஆண்களும் அந்தக் காலத்தில் தாலி அணியும் வழக்கம் இருந்ததாகவும் ஒரு பாடலை இராம.கி ஐயா சுட்டிக்காட்டுகிறார்! அது மட்டுமின்றி, கணவனை இழந்தாலும் பெண்கள் கைம்பெண்களாக ஒதுக்கப்படும் வழக்கம் அக்காலத்தில் இல்லை; அவர்கள் ‘மங்கலப் பெண்கள்’ என்றுதான் பாடல்களில் குறிப்பிடப்படுகிறார்கள் என அந்தப் பாடல் வரிகளை அவர் மேற்கோள் காட்டுகிறார்.

ஆனால், அவரே அதே தொடரின் இன்னோர் இடத்தில், சங்க காலத்துக்குப் பிற்பட்ட நூலான சிலப்பதிகாரத்தில்தான் தாலி முதன்முறையாகத் திருமணச் சடங்கில் குறிப்பிடப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவதோடு, “சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படும் அந்த மேட்டுக்குடித் திருமணம் தமிழர் வழக்கத்தையும், ஆரியர் வழக்கத்தையும் கலந்து விரவியே குறிக்கிறது என்பதையும் இங்கு அழுத்திச் சொல்ல வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தத்தில், ‘தாலி தமிழர் பண்பாடுதான்’ என உறுதியாகக் கூறப் போதுமான சான்றுகள் இன்று வரை கிட்டவில்லை. அதற்காக, ‘அது தமிழர் பண்பாடே இல்லை’ என உறுதியாக மறுக்கவும் முடியாதபடி சில சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. இது வரை தமிழறிஞர்கள் இது குறித்து ஓர் ஒருமித்த கருத்துக்கு வரவில்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் உறுதி! தாலி என்கிற இந்தக் கோட்பாடு தமிழ் நாகரிகத்தில் எவ்வாறு கடைப்பிடிக்கப்பட்டதோ, அந்த முறையில் நாம் இன்று அதைப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் அது.

பண்டைக் காலத்தில் மணமாகும் முன்னும், பின்னும் ஆண்களும் தாலி அணிந்திருந்திருக்கிறார்கள். ஆனால், இன்று அப்படி இல்லை. சிலப்பதிகாரக் காலத்தில் (பண்டைக் காலத்தில் இல்லை) மணமான பெண்கள் தாலி அணியும் வழக்கம் இருந்திருப்பது உறுதியாகத் தெரிந்தாலும் அது பெண்களின் சமூகநிலையைத் தீர்மானிப்பதாக இல்லை. கணவனை இழந்தாலும் பெண்கள் மங்கலகரமானவர்களாகவே கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இன்றைய தாலிக் கோட்பாட்டின்படி தாலி இழந்த பெண் கைம்பெண்.

ஆக, தாலி தமிழர் பண்பாடாகவே இருந்தாலும், தமிழர் பண்பாட்டில் அது கடைப்பிடிக்கப்பட்ட முறைக்கு முற்றிலும் மாறான வகையில் இன்று கடைப்பிடிக்கப்படுகிற சூழ்நிலையில் அதை நாம் தமிழர் பண்பாடு என எப்படிச் சொல்ல முடியும்? எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? மரபின் பெயரால் நாம் ஒன்றை ஏற்றுக் கொள்வதாயிருந்தால், அது கொஞ்சமாவது அந்த மரபை எதிரொலிப்பதாக (reflect) இருக்க வேண்டும். அப்படி இல்லாத, முற்றிலும் மாறான அல்லது மாறிப் போய்விட்ட ஒன்றை நாம் அந்த மரபினுடையதாக ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அது வடிகட்டிய முட்டாள்தனம்.

இன்றைய இந்திய, தமிழ் சமூகத்தில் தாலி!

இன்றைய இந்திய, தமிழ்ச் சூழலைப் பொறுத்த வரை தாலி என்பது தேவையில்லாத ஒரு சுமைதான்.

தாலி என்பது வேற்று ஆண்களிடமிருந்து பெண்ணைப் பாதுகாக்கவா அல்லது, வழிதவறிப் போய்விடாமல் இருக்க வேண்டும் எனப் பெண்ணுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பதற்காகவா என்றால், இரண்டுக்கும்தான் என்றுதான் பழமையாளர்கள் கூறுகிறார்கள். இவை சரியா தவறா என்பது அப்புறம் இருக்க, இந்தக் காலத்தைப் பொறுத்த வரை இவை இரண்டுக்குமே தாலி பயன்படுவதில்லை என்பதுதான் கண்கூடு.

பால் மணம் மாறாக் குழந்தை முதல் பல் போன பாட்டி வரை எல்லாப் பெண்களுமே பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படும் இன்றைய காலக்கட்டத்தில், தாலி அணிந்திருப்பதால் மட்டும் எந்தப் பெண்ணையும் எந்தக் காமவெறி நாயும் விட்டு வைக்கப் போவதில்லை.

அதே போல, நினைவு தெரியாத காலத்திலேயே சிறு பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்து விடும் பழக்கம் கொண்ட விடுதலைக்கு முன்பான இந்திய சமூகத்தில் வேண்டுமானால், சிறு வயது முதலே ஒரு பெண்ணுக்கு, அவளுக்கென ஒருவன் இருக்கிறான் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டிய தேவை இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட காலத்தில் தாலி தேவைதான். ஆனால், அந்தப் பழக்கம் முற்றிலும் (!) இல்லாத இன்றைய நாளில், வளர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே பெரும்பாலான திருமணங்கள் நடைபெறுகிற, அப்படி மணமான உடனே பெண் கணவன் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விடுகிற இன்றைய காலக்கட்டத்தில் “உனக்குக் கணவன் ஒருவன் இருக்கிறான். உனக்குத் திருமணம் ஆகிவிட்டது” என்பதை எந்தப் பெண்ணுக்கும் ‘நினைவூட்டியபடியே இருக்க’த் தேவை இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சமூகத்தில் திருமணத்துக்குப் பின் ஆண் மட்டும் வழக்கம் போல இருக்கலாம்; ஆனால், பெண்ணுக்கு மட்டும் மணமாகி விட்டதற்கான நிலையான ஓர் அடையாளம் இருந்தாக வேண்டும் என்பது பெண்ணின் ஒழுக்கத்தின் மீது அந்தச் சமூகம் கொண்டிருக்கும் நம்பிக்கையின்மையைக் காட்டுவதாகவே அமைகிறது.

“தனக்குத் திருமணம் ஆன பிறகு, அது தெரியாமல் யாராவது தன்னிடம் வந்து காதல் புரிய முற்பட்டாலோ, திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தாலோ, நம் பெண்கள் உண்மையைத் தெரிவித்துக் கண்டிப்பாக அந்தக் கோரிக்கையைப் புறக்கணித்து விடுவார்கள்” என்கிற நம்பிக்கை ஒரு சமூகத்துக்கு இருக்குமானால், அந்தச் சமூகம் தன் பெண்களுக்குத் திருமண அடையாளத்தைக் கட்டாயப்படுத்துமா என்பதைத் தமிழ்ப் பெண்களும் இந்தியாவின் பிற பகுதிப் பெண்களும் கூடச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆக, அப்படி ஒரு நம்பிக்கை தங்கள் மீது இந்தச் சமூகத்துக்கு, இந்த இந்து சமயத்துக்கு, இந்த இந்து சமய அமைப்புகளுக்கு இல்லாததால்தான், “பெண்ணுக்கு நிலையான மனம் கிடையாது” என்கிற பிற்போக்குத்தனமான ஆரியக் கருத்தியலின் மீதான நம்பிக்கை நம் ஆண்களுக்கு இன்னும் அகலவில்லை என்பதன் அறிகுறியாகத்தான் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் தாலி நம்மிடையில் வழக்கத்தில் இருக்கிறது என்பதை நம் பெண்கள் உணர வேண்டும்!

இப்படித் தங்கள் நடத்தையைக் கேள்விக்குறியாக்கும் அடையாளமான தாலியைத் தாங்களே புனிதப் பொருளாகக் கருதுவதும், தொட்டுத் தொட்டு வணங்குவதும், பொட்டிட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்வதும் எப்பேர்ப்பட்ட அருவெறுப்பான ஒரு வழக்கம், தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்ளும் பழக்கம் என்பதைச் சிந்திக்க இந்தக் கணினிக் காலக்கட்டத்திலாவது பெண்கள் முன்வர வேண்டும்!

ஆக, தமிழர் பண்பாடு என உறுதியாகக் கூற முடியாத, அப்படியே தமிழர் பண்பாடாக இருப்பினும் தமிழர் பண்பாட்டுக்கு உரிய வகையில் இல்லாமல், முற்றிலும் மாறான ஆரிய முறையிலேயே கடைப்பிடிக்கப்படுகிற, இந்தக் கால வாழ்க்கை முறைக்குப் பொருந்தாத, உங்கள் கற்புக்குக் களங்கம் கற்பிக்கிற தாலியை என் அருமை அக்கா தங்கைகளே, கழற்றி எறியுங்கள்! சமயத்தின் பெயரால் எவனாவது அச்சுறுத்தினால் மேற்கண்ட கேள்விகளைக் கொண்டு கருத்தால் அடியுங்கள்!

உசாத்துணை: நன்றி விக்கிப்பீடியா, வளவு.

நன்றி - கீற்று
...மேலும்

Apr 22, 2015

32வது பெண்கள் சந்திப்பு


...மேலும்

தாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்


கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி  என்ற பேச்சே கிடையாது

தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.

மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.

ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியைக் (வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.

தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம்.

நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.

தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே.

கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர்.

தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன. மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது.

நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது.

எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர்.
புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு)

இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து (திருத்தொண்டர் புராணம்)
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும்.

ஒரு ஜாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில ஜாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது.

இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார்.

அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன. பின்னர், 196இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.

கடைசியாக ஒரு செய்தி, சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.
...மேலும்

Apr 21, 2015

உனக்கு மட்டும்: காதலும் திருமணமும் கட்டாயமா?


எனக்கு இருபத்தைந்து வயதாகிறது. இதுவரை, எந்தப் பெரிய சிக்கலையும் என் வாழ்க்கையில் சந்தித்தது இல்லை. நானாக உருவாக்கிக் கொண்டதும் இல்லை. என் வாழ்வின் பெரும்பாலான முடிவுகளை நானே எடுத்திருக்கிறேன். அவை இதுவரை என்னை வருத்தப்படுத்தியதில்லை. தனியார் துறையில் நல்ல வேலையில் இருக்கிறேன். மொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருந்ததால் நான்கு மொழிகளைக் கற்றுக் கொண்டேன். புத்தகங்கள் வாசிப்பது மட்டும்தான் என் ஒரே பொழுதுபோக்கு. என் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் என எல்லோருக்கும் என்னைப் பற்றிய பெருமிதம் அதிகம். ஆனால் இப்போது முற்றிலும் புது விதமான ஒரு சூழலை எதிர்கொள்கிறேன். அதற்குக் காரணம் என் ‘25’ வயது.

இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. இனிமேல் காதலிப்பேனா என்றும் தெரியாது. காதல் இல்லாத திருமணத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் என் பெற்றோர் சமூகத்தின் வழக்கமான முறைப்படி எனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் விருப்பமில்லாவிட்டாலும் அதை முழுவதுமாகத் தவிர்க்க முடியாத நிலையில் இருக்கிறேன்.

பொருத்தமான மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டமாக இருப்பதால் அவர்கள் முயற்சி தீவிரமடைந்திருக்கிறது. முதலில் இதை இயல்பாக எடுத்துக்கொண்டவர்கள் இப்போது பதற்றம் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். மாப்பிள்ளை கிடைக்காததற்கு என் மீது குறைகாணவும் ஆரம்பித்திருக்கிறார்கள். என் வாசிப்பு, சிந்தனை, வித்தியாசமான போக்கு ஆகியவை அவர்களுக்கு உறுத்துகின்றன. நான் திருமணத்தில் ஆர்வமில்லாமல் இருப்பதைப் பெரிய குறையாகப் பார்க்கிறார்கள். இருபத்தி மூன்று ஆண்டுகளாக என்னைக் கொண்டாடிய என் குடும்பம் இப்போது கொண்டாட மறுக்கிறது. எந்தக் காரணங்களுக்காக எனக்குக் குடும்பத்தில் மரியாதை கிடைத்ததோ அதே காரணங்கள் இப்போது அவர்களைத் தொந்தரவுக்குள்ளாக்குகின்றன.

அவர்களின் இந்த மாறுதல் எனக்கு மறைமுகமான நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அப்பா, தங்கை, தம்பி என குடும்பத்தில் எல்லோரும் திடீரென்று என்னை வித்தியாசமாகப் பார்ப்பதாகவும், சில சமயம் அலட்சியப்படுத்துவதாகவும் உணர்கிறேன். நான் குடும்பத்துக்காகச் சொல்லும் ஆலோசனைகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இது உன் வீடு இல்லை, இந்த வீட்டைவிட்டு நீ செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது எனச் சில நேரங்களில் நேரடியாகவும், பல நேரங்களில் மறைமுகமாகவும் எனக்கு உணர்த்துகிறார்கள். “நீ ஏன் யாரையும் காதலிக்கவில்லை?”என்ற தங்கையின் ஜாலியான கேள்விகூடச் சமயத்தில் குத்தலாகவே வெளிப்படுகிறது.

என்னுடைய எந்தத் திறமைகளையெல்லாம் பார்த்து என் அம்மா பெருமைப்பட்டுக்கொண்டு இருந்தாரோ, இப்போது அதே திறமைகளைப் பார்த்து பயப்படுகிறார். நான் புத்தகத்தை எடுத்துப் படிக்கும்போதெல்லாம் என் அம்மாவின் கண்களில் மிரட்சியைப் பார்க்கிறேன். ஆனால், என்னை நினைத்து மிரட்சியடையவோ, கவலைப்படவோ தேவையில்லை என என் அம்மாவுக்குப் புரியவைப்பது அத்தனை சுலபமில்லை.

என்னுடன் படித்த பெரும்பாலான நண்பர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அதனால் நட்பு வட்டத்தில் இருப்பவர்களைச் சந்திக்கும்போதும் ‘எப்போது திருமணம்?’ என்ற கேள்வியையே எதிர்கொள்கிறேன். இந்தக் கேள்வி என்னை சலிப்படைய வைக்கிறது. என் பணியிடத்திலோ அல்லது மற்ற இடங்களிலோ, என்னைச் சமூகத்தின் வரையறைகளை மதிக்காத திமிர்பிடித்த பெண் போலப் பார்க்கிறார்கள். அதனால்தான் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறேன் என்று நினைக்கிறார்கள்.

இங்கே ஒரு பெண் சுயமாகச் சிந்திப்பது, திறமைசாலியாக இருப்பதெல்லாம் அவளது வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களிலும் அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்தியாவின் குடும்ப அமைப்பில் உள்ள இந்தப் பிரச்சினையை ஒரு பெண்ணாக நான் அதிகம் சந்திக்கிறேன். அந்த யதார்த்தம் எனக்குப் புரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினமாக இருக்கிறது.

இருபத்தைந்து வயதில் காதலிக்காமல், திருமணத்தைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கும் ஒரு பெண் இந்தச் சமூகத்தில் வாழத் தகுதியற்றவளா? இந்தக் கேள்வி என்னை என் அன்றாட வாழ்க்கையில் அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது.

- ஹம்ஸா,சென்னை.

நன்றி - தி ஹிந்து
...மேலும்

Apr 20, 2015

"மார்க்சியத் தத்துவம்" : நூல் அறிமுகம் - நிர்மலா கொற்றவை

மார்க்சியக் கல்வியளித்தலுக்காக பல தோழர்கள் தனிநபர்களாக, அமைப்புகளாக, பதிப்பகங்களாக தம்மையே அர்பணித்துள்ளனர். அந்த மாபெரும் கல்விக் கடலில் சமீபத்தில் நான் கண்டெடுத்த  இரு முத்துகள்: அ. கா. ஈஸ்வரன் எழுதிய மார்க்சியத் தத்துவம் எனும் நூலும், தோழர் த. ஜீவானந்தம் அவர்கள் எழுதிய மார்க்ஸின் மூலதனம் - வாசிப்பிற்கு ஒரு திறவுகோல் எனும் நூலுமாகும். பிந்தைய நூல் பற்றிய ஒரு சிறு குறிப்பை நான் ஏற்கனவே புத்தகக் கண்காட்சியை ஒட்டி எழுதிவிட்டதால் மார்க்சியத் தத்துவம் பற்றிய தோழர் ஈஸ்வரனின் நூலுக்கு ஒரு அறிமுகம் எழுத விழைகிறேன். 

இணையத்தில் மார்க்சிய உரையாடலை நிகழ்த்துவோர் அ.கா. ஈஸ்வரனை அறியாமல் இருக்க முடியாது. இவர் இதற்கு முன்னரே “சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும்” என்ற நூலினையும் “மதத்தைப் பற்றி மார்க்சியம்” என்ற நூலையும் எழுதியுள்ளார். மார்க்சிய அறிவூட்டலுக்கான அவரது மூன்றாவது பங்களிப்பு “மார்க்சியத் தத்துவம்” எனும் நூலாகும். மார்க்சியம் அறியாதோருக்கு அதனை அறிந்திடவும், மார்க்சியம் அறிந்தோருக்கு மீண்டும் ஒருமுறை அதனை தத்துவார்த்தமாகத் தொகுத்துகொள்ளவும் இந்நூல் வகை செய்யும்.  

மனித சமூகத்தைப் பற்றிய விளக்கமும், அச்சமூகத்தை ஓர் உயர்நிலையிலான சமூகமாக மாற்றவும் வழிகாட்டும் சமூக விஞ்ஞானத்தை சுருக்கமாகத் தொகுத்துக் கொடுப்பதென்பது சவாலுக்குறியதாகும். அதிலும் குறிப்பாக நிறைய வாசிப்பவர்களுக்கு அது பெரும் சவாலாகும். அதிகம் படிக்கப் படிக்க அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லிவிட வேண்டும் எனும் ஒரு உத்வேகம் எழும். அதனை மட்டுப்படுத்தி சுருக்கமாகக் கொடுக்கும்போது பாடப்பொருளின் உள்ளடக்கத்தை கணிதவியல் சூத்திரம் போன்று கவனமாகக் கையாள வேண்டியிருக்கும். ஈஸ்வரன் அப்பணியை சிறப்பாக செய்துள்ளார். 

மார்க்சியம் அரசியல் பொருளாதாரத்தை மட்டுமே பேசுவதாக விமர்சிப்பவர்களுக்கு அதன் தத்துவார்த்த சிறப்பையும் நுட்பமாக விளக்கக்கூடியதாக இந்நூல் இருக்கிறது. தத்துவம் என்றால் என்ன என்பதில் தொடங்கி அதன் பொருள்முதல்வாதத் தன்மையை வரலாற்றுபூர்வமாக விளக்கிச் செல்கிறது இந்நூல். மற்ற தத்துவங்களிலிருந்து மார்க்சியம் எவ்வகையில் வேறுபடுகிறது என்பதை அறியாதவர்களுக்கு, அல்லது அறிந்தும் அதனை திரிப்பவர்களுக்கு கராரான பதிலளிக்கக்கூடியதாக இந்நூல் இருக்கிறது.

உயிரற்ற சடப்பொருள்களின் வளர்ச்சியே வளர்ச்சி என்று நம் மூளைகளைச் சலவை செய்திருக்கும் இந்த பொருளாதார அமைப்பானது மனிதர்களின் மேம்பட்ட வாழ்விற்கு வகை செய்யும் உலக கண்ணோட்டத்தின் மீது ஆர்வமோ, கவனமோ செலுத்த முடியாத அளவுக்கு நம்மை திசை திருப்புகிறது; அல்லது அப்பொருளாதார அமைப்பிற்கு ஏற்றதொரு உலகக் கண்ணோட்டத்தை கருத்துமுதல்வாத அடிப்படையில் பிரச்சாரம் செய்கிறது. இதிலுள்ள பிரச்சினை என்னவெனில், எல்லா பிரச்சினைகளையும் தனித்ததொரு பிரச்சினையாக, தனிநபர்களின் நடவடிக்களிலிருந்து எழுபவையாக அது சித்தரிக்கிறது. நல்லெண்ண அடிப்படையிலான சில சீர்திருத்தங்கள் மூலமோ அல்லது அமைப்புரீதியான சில சட்டதிட்டங்கள் மூலமாகவோ எல்லாவற்றையும் சரிசெய்துவிட முடியும் எனும் ஒரு பொய்யான நம்பிக்கையை அது விதைக்கிறது. 

நடப்பு பொருளாதார அமைப்பான முதலாளித்துவத்தாலோ அல்லது அதற்கு முந்தைய தனியுடைமை பொருளாதார அமைப்புகளின் விளைவாகவோ மேற்சொன்ன கட்டமைப்புகளை எப்படியெல்லாம் உருவாகின்றன, உருவாகி வந்திருக்கின்றன என்பதை வரலாற்றுபூர்வமாகவும், தத்துவார்த்தபூர்வமாகவும் புரிந்துகொள்ள ஈஸ்வரனின் மார்க்சியத் தத்துவம் எனும் நூல் நமக்கு உதவுகிறது.

தத்துவம், அரசியல், பொருளாதாரம், புரட்சி ஆகியவற்றை இனியும் நாம் தனித்துக் காணமுடியாது மனிதர்களின் பொருளாயத நடவடிக்கைகளில் ஒவ்வொன்றும் ஊடறுக்கும் விஷயமே. அவ்வகையில் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் எனும் மூன்றாவது பிரிவு விளக்கும் கண்ணோட்டங்கள் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதிலும் குறிப்பாக, அறிவு, படைப்பாக்கம், பண்பாடு பற்றிய தன்னிலை அகங்காரமும், அடையாளச் சிக்கல்களும் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில்  மேற்கட்டமைப்பு – சமூக உணர்வுநிலையின் வடிவங்கள் எனும் பகுதியில் பண்பாடு, கலைகள், அறநெறி பற்றிய மார்க்சியக் கண்ணோட்டமானது அனைவரும் கற்றறிய வேண்டிய ஒன்றாக இருக்கிறது.  

உள்ளடக்கத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள தலைப்புகள் நம்மை இவ்வுலகக் கண்ணோட்டத்திற்குத் தயார்படுத்துகின்றன, அக்கண்ணோட்டத்தைக் கொண்டு மனித வாழ்வை எப்படி மேம்படுத்திக்கொள்வது என்பதை அதன் இறுதிப் பக்கங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. அது ஒரு புரட்சிகர மாற்றமாகவே இருக்கும் என்பதையும், இந்த நிகழ்முறையில் புரட்சிகர அமைப்புக்கான தேவை என்ன என்பதையும் அப்போது நாம் புரிந்துகொள்வோம்.

அப்புரிதலை ஏற்படுத்த மிகச் சிறந்தவகையில் தங்களது எழுத்தின் மூலம் பங்களிக்கும் அ.கா. ஈஸ்வரன் மற்றும் தோழர் த. ஜீவானந்தம் போன்றோரு, அவர்களது நூல்களை பதிப்பிக்கும் பதிப்பாளர்களும் பாராட்டுக்குறியவர்கள். 

மார்க்சியத் தத்துவம் 
ஆசிரியர்:  அ.க. ஈஸ்வரன்
வெளியீடு: பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர்.
விலை: ரூ. 100/-
தொடர்பிற்கு: 94866 41586
...மேலும்

ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி தோழர் பெ.மணியரசன்

தோழர் பெ.மணியரசன், - 0தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்


பெண்கள் தாங்களே முன்வந்து தங்கள் தாலிகளை அகற்றும் நிகழ்வொன்றை அண்ணல் அம்பேத்கர் 125ஆம் ஆண்டுப் பிறந்த நாளில் 14.04.2015 அன்று சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. 

இந்நிகழ்வு இந்துக்களின் புனிதச் சின்னத்தை - புனிதச் சடங்கை இழிவுபடுத்துகிறது என்றும் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், இந்து மதத்தின் பெயரில் இயங்கக் கூடிய சில அமைப்பினர் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் மனுச் செய்துள்ளனர். வேப்பேரி உதவிக் காவல் ஆணையர் 12.04.2015 அன்று தாலி அகற்றும் நிகழ்வுக்குத் தடை விதித்துள்ளார். 

காவல்துறையின் தடையை அகற்றக்கோரி திராவிடர் கழகத் துணைத் தலைவர் திரு. கலி. பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்கள் வழக்கை 13.04.2015 மாலை 4 மணி முதல் 7 மணி வரை விசாரித்து, தாலி அகற்றும் நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடந்த அனுமதி வழங்கியுள்ளார். திராவிடர் கழகத்தினர்க்குக் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவும் ஆணையிட்டுள்ளார். 

நீதிபதி து. அரிபரந்தாமன் இத்தீர்ப்பை எழுத்து வடிவில் வழங்கும் போது, இரவு 9 மணி. அடுத்த சில நிமிடங்களில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் திரு. சோமையாஜி சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி சத்தீசுகுமார் அக்னிகோத்ரி முன்சென்று நீதிபதி து. அரிபரந்தாமன் கொடுத்த தீர்ப்பை நீக்கிடக்கோரி மேல்முறையீடு செய்ய அனுமதி கோரினார். மறுநாள் (14.04.2015) காலை 7 மணிக்கு மேல்முறையீட்டை எடுத்துக் கொள்வதாகவும், விசாரணை தமது வீட்டில் நடக்கும் என்றும் நீதிபதி அக்னிகோத்ரி கூறினார். 

மறுநாள் காலை 6.30 மணிக்கு உயர் நீதிமன்றப் பதிவு அலுவலகத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. காலை 7.45 மணிக்கு நீதிபதி சத்தீசு அக்னிகோத்ரி, நீதிபதி எம். வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணையைத் தொடங்கியது. காலை 9 மணிக்கெல்லாம் தனிநீதிபதி அளித்த அனுமதிக்கு இடைக்காலத் தடை விதித்தது இரு நீதிபதி அமர்வு. 

இதற்குள் அன்று (14.04.2015) காலை 7 மணிக்கெல்லாம் சென்னைப் பெரியார் திடலில் கணவன் - மனைவி விருப்ப அடிப்படையில் தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டனர், திராவிடர் கழகத்தினர். இருபத்தோரு பெண்கள் தாலி அகற்றினர். 

நீதிமன்றத் தடை வந்தபின் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, மாட்டுக்கறி விருந்துண்ணும் நிகழ்ச்சியைத் தள்ளி வைத்து, உயர் நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்று நடத்துவோம் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி. 

உடனே பாரத் இந்து முன்னணி, சிவசேனை என்ற பெயர்களில் இயங்கும் பிரிவினர், திராவிடர் கழகத்தினர் இந்து மதத்தை இழிவுபடுத்திவிட்டனர், தாலியின் புனிதத்தை அவமதித்துவிட்டனர் என்று முழங்கிக் கொண்டு வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் பாரத் இந்து முன்னணியினர் சாலை மறியல் செய்து கைதாகினர். குமணன்சாவடியில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியினர் அரசுப் பேருந்துகளின் மீது கல்வீசிக் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். 

14.04.2015 மாலை 3.30 மணியளவில் பெரியார் திடல் வாசலில் தானியில் வந்த சிவசேனையைச் சேர்ந்த நான்கு பேர் “ஜெய் காளி, ஓம் காளி” என்று வடமொழியில் கூச்சல் போட்டுள்ளனர். திராவிடர் கழகத்தினர்க்கும் சிவசேனைக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் தடியடி நடத்தி இருதரப்பினரையும் விரட்டியுள்ளனர். இருதரப்பினரும் காயம்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். சிவசேனையினர் வந்த தானியில் (ஆட்டோவில்) இருந்த, தரையில் வீசினால் வெடிக்கக்கூடிய பட்டாசு ரக வெடிகுண்டுகள், கடப்பாரை, சுத்தியல் போன்றவற்றைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

“இந்து” என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்திய இந்த சிறு கும்பல்களின் பின்னணியில் பாரதிய சனதாக் கட்சி இருக்கிறது என்பது, 14.04.2015 அன்றே அம்பலமானது. பா.ச.க.வின் இந்தியச் செயலாளர்களில் ஒருவரான எச். இராஜா தாலி அகற்றல் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். “திருட்டுத்தனமாகத் தாலி அகற்றும் போராட்டம் நடந்துள்ளது” என்று எச். இராஜா தம் வழக்கப்படி தடித்தனமாகப் பேசியுள்ளார். இந்து முன்னணி இராம கோபாலன் “வீரமில்லாத வீரமணி” நான்கு சுவர்களுக்குள் தாலி அகற்றும் போராட்டம் நடத்தியுள்ளார் என்று சாடியுள்ளார். 

தாலிகளை அகற்றிய 21 குடும்பத்தினரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் வேறு மதத்திற்குப் போகவில்லை. தங்கள் முன்னோர்கள் கடைபிடித்த பழக்க வழக்கங்களில், ஆண் - பெண் சமத்துவத்திற்கு முரணாக உள்ள சில ஒப்பனைகளை அவர்கள் தாங்களாகவே முன்வந்து நீக்கிக் கொள்கிறார்கள். இதில் தலையிட, இதனைத் தடுக்க எச். இராஜாவுக்கோ, இராம கோபாலனுக்கோ வேறு சில விடலைகளுக்கோ இந்துமதம் உரிமை வழங்கியுள்ளதா? இல்லை. 

இந்து மதத்தில் எச். இராஜா, இராம கோபாலன் போன்றவர்கள் யார்? அவர்களுக்கு என்ன இடம் வழங்கப்பட்டிருக்கிறது? இந்து மதத்தில் ஏராளமான கடவுள்கள் உண்டு. சைவம், வைணவம் போன்ற பல பிரிவுகள் உண்டு. இந்து மதத்திலிருந்து ஒருவரை நீக்கி வைக்க, தள்ளி வைக்க எந்த பீடத்திற்கும் அதிகாரம் கிடையாது. 

இந்து மதத்தில் புரையோடிப் போயிருந்த எத்தனையோ தீய நம்பிக்கைகளை - பழக்க வழக்கங்களை இந்து மதத்தில் தோன்றிய சீர்திருத்தவாதிகள் எதிர்த்து அவற்றுக்கெதிரான சட்டங்களை இயற்றும்படிச் செய்துள்ளார்கள். 

கணவன் இறந்தவுடன் மனைவியைக் கட்டாயப்படுத்தி, அவன் பிணம் எரியும் நெருப்பில் அவளைத் தள்ளிக் கொல்லும் உடன்கட்டை ஏறுதல், பருவமடையாத பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது, அக்குழந்தையின் கணவன் இறந்துவிட்டால், ஆயுள்வரை அப்பெண் விதவையாக இருந்து அழிவது, கோயில்களில் நிலக்கிழார்கள், மைனர்கள் போன்றவர்களின் வரம்பற்ற பாலுறவுக்காக தேவதாசிகளாகப் பெண்களுக்குப் பொட்டுக்கட்டி விடுவது போன்ற எத்தனையோ பெண்ணடிமைத்தன நிகழ்வுகள் புனிதச் சடங்கு என்ற பெயரில் இந்து மதத்தில் இருந்தன. இந்து மதத்தைச் சேர்ந்த இராஜாராம் மோகன்ராய், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற எத்தனையோ பேர் முயன்று போராடி, இவற்றையெல்லாம் தடை செய்யும் சட்டங்கள் வரச் செய்தனர். 

வள்ளல் பெருமான், சிலை வணக்கத்தையே எதிர்த்து ஒளி வணக்கத்தைக் கொண்டுவந்தார். இராம கோபாலன், எச். இராஜா வகையறாக்களின் தலைச் செருக்கையும், தலைகால் புரியாத களியாட்டத்தையும் பார்த்தால், வள்ளலார், தெய்வச் சிலைகளை இழிவுபடுத்திவிட்டார், சிலை வணக்க இந்துக்கள் மனத்தைப் புண்படுத்திவிட்டார் என்று கூக்குரலிட்டு, வள்ளலாரின் சன்மார்க்க சங்கங்களைத் தடை செய்யக் கோருவார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. 

இந்துக்களில் ஆரியர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு இனத்தினர் இருக்கிறார்கள். பா.ச.க., இந்து முன்னணி, சிவசேனை போன்றவை முன்வைக்கும் இந்து மதம் ஆரிய இந்துத்துவா! அது தமிழ்ச் சைவ சித்தாந்தமோ, தமிழ்த் தென்கலை வைணவமோ அல்ல! 

அண்ணா தி.மு.க.வும் செயலலிதாவும், எந்த இந்துப் பிரிவை ஆதரிக்கின்றனர் என்பதுதான் தமிழர்கள் முன் உள்ள வினா! ஆரிய இந்துப் பிரிவையா? தமிழர்களின் சைவ சிந்தாந்தம் மற்றும் தென்கலை வைணவக் கொள்கைகளைக் கொண்ட இந்துப் பிரிவையா?
செயலலிதா கட்சி, ஆரிய இந்துப் பிரிவை ஆதரிக்கிறது என்பதுபோல்தான் அதன் செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.

நான்கு சுவர்களுக்குள் - தங்கள் சொந்த இடத்தில் திராவிடர் கழகத்தினர் தாலி அகற்றும் நிகழ்வை நடத்துவதற்குக் காவல்துறையினர் ஏன் தடை விதிக்க வேண்டும்? அத்தடையை நீக்கித் தனி நீதிபதி கொடுத்த ஆணையின் மீது தடை வாங்க இரவு 9 மணிக்குத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, மூத்த நீதிபதி கதவைத் தட்டி, கோரிக்கை வைத்து மறுநாள் 6.30 மணிக்கு வழக்கைப் பதிவு செய்து, 7.30 மணிக்கெல்லாம் நீதிபதி அக்னி கோத்ரி வீட்டில் இருநீதிபதி அமர்வை நடக்கச் செய்து தடை வாங்கியிருக்கிறார். மற்ற பொது நல வேலைகளில் செயலலிதா ஆட்சி இவ்வாறு முனைப்பாக நடந்து கொண்டதுண்டா? இல்லை. 

நீதிபதி அக்னிகோத்ரி அமர்வும், அமைதியாக நடக்கும் கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைக்கு இந்திய அரசமைப்புச் சட்டப்படி அனுமதி உண்டு என்பது இந்தியக் கலாச்சாரம் தொடர்பான விடயங்களில் பொருந்துமா என்று கேட்டு, வழக்கை ஒத்தி வைத்துள்ளார். இந்தியக் கலாச்சாரம் என்பதில்தான் ஆரிய ஆதிக்கம் ஒளிந்துள்ளது.
ஆரியப் பார்ப்பனியத் தலைமையிலான இந்து மதப்பிரிவைத்தான் செயலலிதா ஆதரிக்கிறார்; 

தமிழர்களின் இந்து மதத்தை அவர் ஆதரிக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. தமிழக அரசின் இந்த பாகுபாட்டு அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

தில்லியிலும் ஆரியப் பார்ப்பனிய ஆட்சி; தமிழ்நாட்டிலும் ஆரியப் பார்ப்பனியத்திற்கு ஆதரவான ஆட்சி என்ற துணிச்சலில்தான் பார்ப்பனிய இந்துத்துவா புள்ளிகள் தலைகால் தெரியாமல் வெறிப்பேச்சு பேசுகின்றனர். வெடிகுண்டுகளை புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தில் வீசிச் சென்றனர். இப்போது, தி.க. அலுவலகத்திற்கே வெடிகுண்டுடன் வந்துள்ளனர். வெடிகுண்டு, கடப்பாரை, சுத்தியல் சகிதம் வந்த அந்த வன்முறைக் கும்பலை பெரியார் திடல் வாசல்வரை வர விட்டு, வடநாட்டு மொழியில் கூச்சல்போட காவல்துறை அனுமதித்துள்ளது. தமிழகக் காவல்துறைக்கு இவ்வாறு தவறான வழிகாட்டியது யார்?

தாலி என்பது கடந்த காலத்தில், ஏன் சங்க காலத்தில்கூடத் தமிழர்கள் திருமணத்தில் இடம் பெற்றுள்ளது. அப்பொழுது, இந்து மதம் கிடையாது. ஆனால், இன்று பெண்ணுக்குத் தாலி போடுவது ஆணாதிக்கத்தின் அடையாளம் தவிர, வேறல்ல. எனவே, தமிழ்ப் பெண்கள் தாலி போட்டுக் கொள்ள தாங்களே முன்வந்து மறுப்புத் தெரிவிக்க வேண்டும். 

அடுத்து, ஒருவர் தன் உடம்பில் என்ன அணிகலனை அணிந்து கொள்வது அல்லது அணிந்து கொள்ளாமல் தவிர்ப்பது என்று முடிவு செய்ய அந்தத் தனிநபருக்கு முழு உரிமை உள்ளது. இவ்வாறான உரிமையைக் காலம்காலமாக இந்துமதம் அனுமதிக்கிறது. கடவுள் மறுப்பு கூட இந்துமதக் கோட்பாட்டில் ஒரு பகுதிதான். தங்களின் பழைய சமூக ஆதிக்கத்தை மீண்டும் புதுப்பிக்கத் துடிக்கும் பார்ப்பனியப் புள்ளிகளின் சதிவலையில் தமிழர்களாய் உள்ள இந்துக்கள் வீழ்ந்துவிடக் கூடாது. தாலி வேண்டாம் என்று பரப்புரை செய்ய - தாங்களே முன்வந்து தாலியை அகற்ற நூற்றுக்கு நூறு உரிமை இருக்கிறது. அதே வேளை வலுக்கட்டாயமாகத் தாலியை அகற்றவோ, தாலி கட்டுவதைத் தடுக்கவோ யாருக்கும் உரிமையில்லை.

இந்தப் புரிதலோடு - தமிழ் மக்கள் செயல்பட வேண்டும். மத உணர்வைக்காட்டி, ஆதிக்க சதிவலையில் வீழ்த்த முயலும் ஆரிய - பார்ப்பனியக் கேடர்களுக்குத் தமிழ் மக்கள் இடம் கொடுக்கக் கூடாது.
...மேலும்

Apr 19, 2015

அவளே தேர்வு செய்யட்டுமே


சிவப்பழகு க்ரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இன்ன அளவு சிவப்பாகலாம் எனச் சொல்வதன் ஊடேயே சிவப்புதான் அழகு எனும் கருத்தை லாபி செய்வதே போல…வெள்ளை அல்லது இள நீல நிற இறுக்கிய பேண்ட் அணிந்து, மாடிப்படிகளில் எந்தப் பெண்ணாவது ஏறினாலோ, கேமிரா படிகளின் கீழ் இருந்து அவளின் ப்ருஷ்டபாகம் முன்னிறுத்தித் தெரியும்படி இருந்தாலோ, அவள் அளவுக்கதிகமாகத் துள்ளிக்கொண்டிருந்தாலோ அது பெண்களுக்கான நேப்கின் விளம்பரமேதான். அந்த நேப்கின் பயன்படுத்தினால் அப்படித் துள்ளித் திரிய முடியும் எனச்சொல்வதோடு மட்டுமல்லாமல் வாருங்கள் சந்தோஷமாக வாழ்வை அனுபவியுங்கள் டைப் வாசகங்களின் மூலம் ரெஸ்ட் தேவை இல்லை என்கின்றன இந்த விளம்பரங்கள். இதைப் பார்த்து நம் ஊர் அரை குறைகளும் அவற்றைக் காதலோடும், எதோ அதுவரை சிறைப்பட்டிருந்தது போலவும் இந்த நேப்கினால் மட்டுமே தனக்கு விடுதலை கிடைத்ததைப் போலவும் வாங்கிப் பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர்.

அந்த அளவுக்கு இயல்பானதா பீரியட்ஸ்?
இல்லை. ஒரு போதும் இல்லை. இதன் வலியை ஏற்கனவே பெண்கள் சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டோ, ஒரு வேளை சொன்னால் ரெஸ்ட் எடு என தன் மற்ற வேலைகளிலிருந்து முடக்கிப் போட்டுவிடுவார்களோ எனும் அச்சத்திலேயோ சொல்வதே இல்லை. ஊருக்குத் தெரிந்ததெல்லாம் அதன் ஒரு துளி மட்டுமே.
இதில் பிரச்சனை என்னவென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு தீர்வு.

அதை அவளேதான் கண்டுபிடித்து அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும். குளிக்க வேண்டுமா வேண்டாமா? அந்த சமயங்களில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைத் தணிப்பது சரியா? அல்லவா? சரி எனில் எப்படி அதைச் செய்வது என அவளேதான்…அவளே என்றால் ஒவ்வொருவளும், முடிவெடுக்க வேண்டும், அதற்கு முதலில் தன் உடலை அவளே உற்று கவனிக்க வேண்டும். ஆனால் அவற்றை ஊடறுப்பதாகவே உள்ளன விளம்பரங்களும், மற்றவர் அறிவுரைகளும்.

அது போன்ற சந்தர்ப்பங்களில் குளிக்கலாம் என்றும் குளிக்கக்கூடாது என்றும் இரு வாதங்கள். இரண்டுமே சரி அல்லது இல்லை. ஏனெனில் அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. குளியல் என்பது சுத்தப்படுத்த மட்டும் அல்ல. உடலைக் குளுமைப்படுத்தவும்தான். அந்த சந்தர்ப்பங்களில் உடல் சூடு அதிகமாக இருக்கும். நீரில் ஊறிக்குளித்தால் சூடு குறையும். ஆனால் அப்படிக் குளிர்வித்தால் அந்த நாட்களின் அளவு அதிகரிக்கும். இது சிலருக்கு.

அதீத சூட்டைக் கட்டுப்படுத்த ஊற வைத்த வெந்தயம் தின்பார்கள். ஆனால் அதுவும் கூட நாட்களை சற்றே அதிகரிக்க வைக்கும். இதுவும் கூட இயற்கைக்கு எதிரானது என, தெளிவானவர்கள் அந்த நாட்களை அப்படியே கடப்பதுண்டு. இது பின்னாட்களில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மைத் தள்ளி வைக்கும்.

நாப்கின்கள் எந்த அளவுக்கு ஒரு பெண்ணிடம் ஆலோசனை கேட்டு தயாரிக்கப்படுகிறது என்பதில் நிறைய சந்தேகம் உண்டு.

சுத்த உணர்வைத் தருவதற்காக இள மஞ்சள் நிறத்தில் இருக்கும் பருத்தியானது டயாக்ஸின் கொண்டு ப்ளீச் செய்யப்படுகிறது. நாப்கின்கள் நேரடியாக பொருத்தப்படுவதாலும் எல்லா நேரமும் ஈரத் தொடர்பில் இருப்பதாலும் அந்த கமிகல்கள் உடலினுள் புகக்கூடியதாகவே இருக்கிறது. இது புற்று நோயையும் இன்ன பிற கர்பப்பை தொடர்பான, தோல் தொடர்பான நோய்களை வரவேற்கிறது.

இதற்கு மாற்றாக மார்கெட்டில் இருக்கும் க்ளோரின் ஃப்ரீ முத்திரையுடைய நாப்கின்களில் கூட 100% டயாக்சின் இல்லை என்க முடியாது. குழந்தை நாப்கின் போலவேதான் பெண்களுக்கான நாப்கின்களும. சிறு குழந்தைகளுக்கு சிறுநீரை தேக்கி வைக்கும் வகையிலேயே பெண்களுக்கான நாப்கின் தயாரிக்கப்படுகிறது. அதாவது வெளியேறிய குழந்தையின் சிறுநீரின் நீர்மத்தன்மையை ஜெல்களாக மாற்றிவிட கெமிகல்கள் நேப்கின்களில் சேர்க்கப்படும்.

அதே கெமிகலே பெண்களுக்கான நாப்கின்களிலும். ஆனால் பெண்களின் உதிரப்போக்கில் நீர்மம் மட்டும் வெளியேறுவதில்லை. பிண்டங்களும்தான். இவை இந்த கெமிகல்களால் இன்னும் இறுகி அந்த கெமிகல் உறுப்புகளுக்குள்ளும் சென்று நோய் மட்டுமல்ல அரிப்பு, புண் தடிப்பு என எல்லாவற்றையுமே ஏற்படுத்துகிறது.

இது போக இப்போது புதிதாக, விலக்கு நாட்களின் துர்நாற்றத்தை மறைக்கிறது எனச்சொல்லி சில நாப்கின்கள். இதற்கும் கெமிகல்கள்தான் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் இந்த கெமிகல்கள் உடலுக்குள் ஊடுருவும் என்பதிருக்கட்டும். அதன் மணம் இயற்கை துர்நாற்றத்தோடு இணைந்து இன்னும் எரிச்சலையே உண்டுபண்ணுகிறது.

இவற்றை எல்லாம் பெண்கள் பேசாமலிருக்க கூச்சம் காரணம் இல்லை. இதன் வலியைச் சொன்னால், அது இவளது இயலாமையாகவே பார்க்கப்படும். போட்டியான உலகில், இவற்றை மறைத்தே தன் வேலையைச் செய்கிறாள். அல்லது ஆணுக்கு எதிராகக் குறை சொல்வதாகவே பார்க்கப்படும். இதில் ஆண் எங்கே வந்தான்? ஆனால், அனேக அறைகுறைகள் தன் வலி சொல்லும் பெண்ணை அப்படிப் பார்க்கவே கற்றிருக்கின்றனர். இதை ஆண் உணரவே முடியாது. குறைந்தபட்சம் இழிவு பேச்சு இல்லாமலாவது கடக்கட்டும் என்றே இத்தனை விளக்கங்களும் பெண்ணின் வலி மிகுந்த மறுபக்கமும். இதை புனிதம் என்று போற்றவும் வேண்டாம். தீட்டு என விலக்கவும் வேண்டாம். இரங்குவது போல இறக்கவும் வேண்டாம்.

நான் ஒன்பதாம் வகுப்பு படித்த காலங்களில் என்னோடு பவானி என ஒரு மாணவி படித்தாள். எங்களை விட மூன்று வயது மூத்தவள். சடங்கானவள்தான். பெரியவள்தான். அந்த சமயங்களில், அந்த வகுப்புகளில் அவ்வப்போது ஏதேனும் ஒரு மாணவி திடீரென வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுவாள். டீச்சர் வந்து அவளை ரெஸ்ட் ரூமுக்கு கூட்டிச் செல்வார். சிறிது நேரத்தில் அவள் வீட்டிலிருந்து பெண்கள் எவரேனும் அழுது கொண்டே வந்து இவளைக் கூட்டிச் செல்வார்கள். ஆனால் ஒவ்வொரு முறையுமே டீச்சர்கள் இந்த தகவல் பவானிக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். ஏனெனில் ஒவ்வொரு முறை இப்படியான செய்தியைக் கேள்விப்படும்போதெல்லாம் பவானி மலங்க மலங்க விழிப்பாள்…திடீரென…”ஊ….வென ஊளையிட்டபடி மயங்கி விழுவாள்”

காரணம், அவள் இலங்கையிலிருந்து தப்பிவந்தவள். அப்படி வருகையில் கடல் நீரால் சூழப்பட்ட மணல் திட்டு ஒன்றில் அடுத்த படகுக்காகக் காத்திருந்த சமயத்தில் அவள் பெரியவளாகி இருக்கிறாள். கற்பனை கூட செய்ய இயலாத கொடூர சம்பவம் அது. (ஏனெனில், சடங்கான இளம்பெண்கள்தான் சில கொடூர காமுகர்களின் முதல் தேர்வாம்.) அன்று அவள் அம்மாவும் மற்ற பெண்களும் அவளைப் பாதுகாக்க படாத பாடுபட்டிருக்கின்றனர். உடுத்தவே துணி இல்லாத கடல் வெளி மணற்திட்டில் இவளுக்கு என்ன உதவி செய்திருக்க முடியும்? சாதாரண நாட்களிலேயே பெண்களுக்கு எல்லாவித எரிச்சலையும் கஷ்டத்தையும் தரக்கூடிய நாட்கள் அவை. இந்த அழகில் போர்க்காலத்தைல் இதையும் சுமந்து தாண்டியவள் இவள்.

இது போன்றே அனேக பெண்களுக்கும் வெவ்வேறுஅனுபவங்கள்.

விலக்கு நாட்களில் இரத்தம் மட்டும் வெளியேறுவதில்லை. நம் அலுவலக வேலையைச் செய்து கொண்டிருக்கையிலேயே பிண்டம் வெளியேறும். கவனம் எப்படி வேலையில் இருக்க முடியும்? கழிப்பறை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எல்லா வேலைகளிலும் நினைத்தபடி வேலைக்கு விடுப்பு எடுக்க இயலாது. சிமெண்டு சட்டி தூக்கும் சிறுமி முதல் பெண் மந்திரிகள் வரை இதே தான்.

அது சரி. அது ஏன் முதல் நிகழ்வில் பெற்றோர், குறிப்பாக அம்மாக்கள் ஏன் அவ்வளவு அழுகை?
ஒவ்வொரு முறையும் பொறுப்பாக இருக்க வேண்டும். விலக்காக்விட்டதா என்பதை ஒரு ஒன்பது வயதுக் குழந்தையால் சட்டென கணிக்க இயலாது. அப்படியே கவனித்தாலும், பொறுப்பாக தன்னைத் தயாரித்துக்கொள்ள முடியாது. பள்ளிகளில் கழிப்பறை பிரச்சனை இருக்கட்டும். ஓட்டமும் ஆட்டமுமான பழைய துள்ளல் முடியவே முடியாது.

உண்மையில் அன்று அவளின் இயற்கை அவளை என்ன செய்யச் சொல்கிறதோ அதைச் செய்ய இயலாது. இயற்கை அவளுக்கு இடும் கட்டளைகள் வேறு, சமூகம் அவள் மீது திணிக்கும் சரி தவறுகள் வேறு. ஒரு டாக்டரானால், ஆபீசரானால் அவளுக்குக் கிடைக்கும் பெருமை வேறு. உடலைக் கொண்டாடிக்கொண்டிருந்தால் மரியாதை இல்லை. எனவே தூக்கிப் போடு. அந்த உடல் என்ன ஆனால்தான் என்ன? என அதில் கவனம் கொள்ள முடிவது இல்லை. அப்படியே அதைப் பொத்திப் பாதுகாத்தாலும் பெண்ணின் உடல் எனும் அந்தப் பொருள் குலப்பெருமை காக்கவும், ஆணின் குடும்பத்தின் சந்ததியைக் காக்கவும் பயனாகும் அந்த வஸ்து பாதுகாக்கப்பட வேண்டியது என ஆண் நினைக்கிறான். அப்படிப் பாதுகாக்கும் வேலைக்கு ஆண் தேவைப்படுவதாக அவன் நினைப்பதால், அந்த உடல் ஆணின் கட்டுக்குள் இருக்க வேண்டும். இந்த நிலையில் பெண்ணுக்கான வாசகங்களை / கருத்தை ஆணே வடிவமைப்பதாலும், அவள் எதைச்செய்வது எனும் திணறலில் இருக்க ....அந்த அவளின் உடலை ஒட்டி ஒரு அரசியலே அடங்குகிறது.


அவளின் மாதவிலக்கு என்பது ஒரு சந்தை. அதில் எவற்றையெல்லாம் விற்கலாம்? என்னவெல்லாம் சொல்லி விற்கலாம்? விலக்கு நாட்களுக்கு பேட்கள். அவை அரிப்பைத் தருகிறதா? அதற்கு க்ரீம்கள். க்ரீம்களைச் சுத்தம் செய்ய வேண்டுமா? Ph பேலன்ஸ் செய்யப்பட்ட கிருமி நாசினிகள். துர்நாற்றமடிக்கிறாதா? இதோ அதற்கென அதிக விலையில் பேட்கள்..

அவற்றைப் பயன்படுத்தினால் ஆணுக்குச் சமமாகத் துள்ளலாம், ஓடி ஆடலாம். ஏற்கனவே ஆணைப்போல தொந்தரவின்றி ஒரு வாழ்க்கை என்பதே அவள் கனவாக இருக்க, அவனே போல இருக்கலாம் இந்தச் சுமைகளைச் சுமந்தபடி எனச்சொல்லும் விளம்பரங்கள். ஆனால் இவற்றில் எதுவுமே இயற்கையை ஒட்டியோ, பெண்ணின் தேவைக்குத் தீர்வாகவோ இல்லை என்பது மட்டுமல்லாமல் இன்னும் தொந்தரவு தருவதாகவே என்ன காரணங்களால் எல்லாம் இவற்றை பயன்படுத்தக்கூடாது, பேசக்கூடாது என ஒரு விளம்பரம் வந்தால் நன்றாக இருக்கும்.

பெண்ணின் தாலி எப்படி அவள் மட்டுமே முடிவெடுக்க வேண்டியதோ அதைப் போலவே அந்த சமயங்களில் அவள் ஓய்வெடுக்க வேண்டுமா? நாப்கின் உபயோகிக்க வேண்டுமா? என்பதை அவளே முடிவெடுக்க, அவளே தேர்ந்தெடுக்க விட்டால் மட்டுமே… எதிர்கால சந்ததி என ஒன்றிருக்கும். என்ன செய்ய அவளிடம்தானே கர்பப்பை இருக்கிறது? அது அவளுடையது மட்டும்தானே?அதில் மற்றவர் ஆதிக்கம் செலுத்தினால் அந்த ஆதிக்கம் நேரடியானதாகவோ மறைமுகமானதாகவோ எப்படி இருந்தாலும் மனித குலத்திற்கே பெரும் நட்டம்.

அவள் முடிவெடுக்கட்டும். அந்த முடிவுக்கு மற்றவர் உதவட்டும் அப்படி இருந்தால் மட்டுமே இனி மனித எதிர்காலம். இதன் சீரி்யஸ்னஸ் உணர்ந்து மட்டுமே, அவளுக்கு உதவுவதுபோல அவள் மீது ஆதிக்கம் செய்யும் கன்ஸ்யுமரிசத்தில்ருந்து அவள் வெளிவர வேண்டும்.

அதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

நன்றி  சொல்வனம்
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்