/* up Facebook

Mar 8, 2015

முகேஷ் சிங் மட்டுமா குற்றவாளி?


’பாலியல் பலாத்காரத்துக்குப் பெண்கள்தான் பொறுப்பு. பெண்கள் கண்ணியமான ஆடை அணிய வேண்டும். இரவு ஒன்பது மணிக்கு மேல் வெளியில் செல்லும் பெண் ஒழுக்கமானவள் அல்ல’ என்ற ரீதியில் நிர்பயா பாலியல் பலாத்காரக் குற்றவாளி முகேஷ் சிங் தெரிவித்துள்ள கருத்துகள் கடும் கண்டனங்களைச் சந்தித்துள்ளன.

முகேஷ் சிங்கின் பேட்டி இடம்பெற்ற ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்துக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி அந்தப் படத்தை வெளியிட்ட பி.பி.சி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ’இந்தியா குறித்து தவறான பிம்பங்களை ஏற்படுத்தும் மேற்கத்திய மனநிலை’ என்றும் சிலர், இந்த ஆவணப்பட இயக்குனரையும் பி.பி.சி.யையும் விமர்சிக்கிறார்கள்.

சிறைக்குள் இருந்த முகேஷ் சிங்கைச் சந்தித்து பேட்டி எடுத்தது தொடர்பான சட்டரீதியான சிக்கல்களைத் தாண்டி, தண்டனைக்குப் பிறகும் முகேஷ்சிங்கின் மனநிலை மாறாமல் இருப்பது குறித்தே பலரும் கவலைகொள்கிறார்கள். இந்தியாவே கண்ணீர் சொரிந்த நிர்பயாவின் நிலைக்காக முகேஷ்சிங் மனம் வருந்தவில்லை.

மாறாக பாலியல் பலாத்காரம் செய்யும்போது என்னவிதமான  மனநிலையில் இருந்தாரோ, இப்போதும் அதே மனநிலையில்தான் இருக்கிறார் என்பதால் முகேஷ்சிங்கை மிகக் கடுமையாகப் பலரும் விமர்சிக்கிறார்கள். உண்மைதான். ஆனால் நிர்பயா படுகொலைக்குப் பின்னான ஆண்டுகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நம் இந்திய அரசியல்வாதிகள் அவ்வப்போது உதிர்த்த ‘கருத்து முத்துகளை’யும் பார்த்துவிடுவோம்.* “ 21 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், அது மிகக்குறைவான நிகழ்வுதான்” - முலாயம் சிங் யாதவ்

* “உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, கூகுளில் தேடினால் மற்ற இடங்களிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடப்பதை அறியலாம்”- அகிலேஷ் யாதவ்.

* “வீட்டுக்கு வீடு ஒரு போலீஸ்காரரைப் பாதுகாப்புக்கு போட்டாலும் பாலியல் பலாத்காரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மகாராஷ்ட்ராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாகவே உள்ளன’’ - மகாராஷ்டிரா (அப்போதைய) உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டில்.

* “பாலியல் பலாத்காரச் சம்பவங்களைக் கடவுளாலும் தடுக்கமுடியாது” - உத்தரப்பிரதேச முன்னாள் ஆளுநர் அஜிஷ் குரேஸி.

* ”பூமி உள்ள வரை பாலியல் பலாத்காரம் நடந்து கொண்டு தான் இருக்கும்” - திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் தீபக் ஹால்தார்.

* ”மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களின் மனைவிமார்களைப் பாலியல் பலாத்காரம் செய்ய நமது கட்சித் தொண்டர்களை அனுப்புவேன்” - திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி தபஸ் பால்

* ”கர்நாடக முதல்வர் சித்தராமையா மகளை யாராவது பாலியல் பலாத்காரம் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்திருப்பார்களா?” - கர்நாடக மேலவை எதிர்க்கட்சித்தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா (பாரதிய ஜனதா)

* ”நான் பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவின் மனைவியை பலாத்காரம் செய்தால் என்ன நடக்கும்?” - கர்நாடகா மூத்த காங்கிரஸ் தலைவர் இவான் டிசோசா 

* ’பாலியல் பலாத்காரங்களுக்கு செல்போன்கள்தான் காரணம். எனவே பள்ளி, கல்லூரிகளில் பெண்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும்' - கர்நாடக அரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் குழு பரிந்துரை

* ”பெண்கள், சிலர் தங்களை தொட்டால் புகார் அளிக்கின்றனர். சிலவேளையில் தொடாவிட்டால் கூட புகார் அளிக்கின்றனர். பிறகு இது பிரச்சினையாக எழுகிறது. பலாத்காரம் பெண்ணின் சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ எவ்வாறு நடந்தாலும் அது தண்டிக்கப்பட வேண்டும். ஏதாவது ஒரு பெண் திருமணம் ஆகியோ அல்லது ஆகாமலோ வேற்று ஆணுடன் உறவு வைத்தால் அப்பெண் தூக்கிலிடப்பட வேண்டும்” -  சமாஜ்வாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான அபு ஆஸ்மி. 

* ’செல்போன், ஆபாச உடை, டிவி, மேற்கத்திய கலாசாரம் ஆகியவைதான் பெண்கள் மீதான பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காரணம்’ - உத்தரபிரதேச போலீசார் அறிக்கை.

* “1990களில் அரசியல் நெருக்கடி காரணமாக பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்ட தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தோம். அப்போது எனது கிராமத்தைச் சேர்ந்த லால்ஜி மன்ஜி என்பவர் என்னிடம் வந்து தெக் நாராயண் யாதவ் என்பவர் மீது புகார் தெரிவித்தார். தனது இரு மகள்களையும் நாராயண் பலாத்காரம் செய்தார் என்றும், தன்னுடைய நிலத்தை பறித்துக் கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார் என்றும் புகார் தெரிவித்தார். நாராயண் யாதவ் செல்வாக்கு மிக்க சமுதாயத்தை சேர்ந்தவர். அப்போது எம்எல்ஏவாகவும் இருந்தார். எனவே அந்த சமூகத்தின் ஓட்டுகளை இழந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்கினோம். பின்னர் நான் தேர்தலில் தோல்வி அடைந்தேன். மக்கள் என்னைக் கண்டு கேலி செய்து சிரித்த போதும் நான் சிறிதும் வருந்தவில்லை. எனது பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எனக்கு நன்றாக தெரியும். அரசியல் கூட்டாளிகள் சிலருக்கு கோபத்தையும் ஏற்படுத்தும். இருந்த போதிலும் எனது கருத்துகளை வெளியிடுவதில் எனக்கு எந்த அச்சமும் கிடையாது” - பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜி 

* “யாரும் வேண்டுமென்றே கற்பழிப்பதில்லை. வஞ்சகத்தால்தான் பலாத்காரம் நடந்து விடுகிறது'' - சத்தீஷ்கர் மாநில உள்துறை அமைச்சர் ராம்சேவக் பாய்க்ரா. (பாரதிய ஜனதா கட்சி)

* ‘‘நாடு முழுவதும் பலாத்கார சம்பவங்கள் பெருகுவதற்கு காரணம், கிரகங்களின் மோசமான நிலைதான்'' சத்தீஷ்கர் மாநில முன்னாள் அமைச்சர் நாங்கி ராம் கன்வார் (பாரதிய ஜனதா கட்சி)

* ““நிர்பயா உண்மையிலேயே இரவு 11 மணிக்கு நண்பருடன் படம் பார்க்கச் சென்றாரா? சக்தி மில் சம்பவத்தை எடுத்துக்கொண்டால், பெண் பத்திரிகையாளர் 6 மணிக்கு அதுபோன்ற தனிமையான இடத்திற்கு ஏன் சென்றார்? எனவே, பெண்களின் ஆடைகள், நடத்தை மற்றும் அவர்கள் பொருத்தமற்ற இடங்களுக்கு செல்வதாலும் பாலியல் பலாத்காரங்கள் நடக்கின்றன” - தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகளிர் உரிமை ஆணைய உறுப்பினருமான ஆஷா மிர்கே.

* ‘‘பலாத்காரம் என்பது சில நேரங்களில் சரியானது. சிலநேரங்களில் தவறானது” - மத்தியப் பிரதேச பா.ஜ.க. அமைச்சர் பாபுலால் கவுர்.

இவையெல்லாம் மக்கள் பிரதிநிதிகளான நம் அரசியல் தலைவர்கள் உதிர்த்த கருத்து. ‘பெண்கள் கண்ணியமான ஆடை அணியாததால்தான் பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன’ என்று யேசுதாஸ் போன்ற சமூகப் பிரபலங்களும் அவ்வப்போது கருத்து உதிர்க்கத் தயங்குவதில்லை. அரசியல்வாதிகள், சமூகப் பிரபலங்களே இப்படி என்றால் பிற்போக்குத்தனத்திலேயே ஊறிப்போன மதவாதிகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

சில ஆண்டுகளுக்கு முன்பு ‘வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்’ என்று கருத்து தெரிவித்தார் காஞ்சி ஜெயேந்திரர். அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின் அவரது முறைகேடான பாலியல் உறவுகள் குறித்த செய்திகள் வெளியாகி, அவரது ஒழுக்கமே சந்தி சிரித்தது. வீட்டைத் தாண்டி வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களா, மடத்துக்கு உள்ளேயே இருந்த காஞ்சி ஜெயேந்திரர் ஒழுக்கம் கெட்டவரா என்பதற்குக் காலம் பதில் சொன்னது. சங்கராச்சாரி மட்டுமில்லை, பெண்களுக்கு எதிரான பிற்போக்குக் கருத்துகளை உதிர்ப்பதில் எல்லா மதத்தலைவர்களும் ஒன்றுதான். போதாக்குறைக்கு ‘பொம்பளை சிரிச்சாப் போச்சு’ என்று எம்.ஜி.ஆர். தொடங்கி ‘பொம்பளை பொம்பளையா இருக்கணும்’ என்று ரஜினி வரைக்கும் சினிமா ஹீரோக்களும் ’பெண்கள் எப்படி இருக்கவேண்டும்’ என்று வகுப்பு எடுக்கத் தயங்குவதில்லை.

‘பெண்கள் கண்ணியமான ஆடைகளையே அணியவேண்டும்’, (அதிலும் எது கண்ணியம், எது கண்ணியமான ஆடை என்பதையும் ஆண்கள்தான் தீர்மானிப்பார்கள்), பெண்கள் ஜீன்ஸ் போடக்கூடாது, பெண்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது, பெண்கள் ஆண் நண்பர்களுடன் எந்த இடத்துக்கும் போகக்கூடாது, பெண்கள் இரவு 9 மணிக்கு மேல் வெளியில் போகக்கூடாது என்று காலம்காலமாய்ப் பெண்கள் எதைச் செய்யவேண்டும் என்பதை இவர்களே தீர்மானிக்கிறார்கள். ஈவ்டீசிங் தொடங்கி பாலியல் பலாத்காரம் வரைக்கும் எல்லாக் குற்றங்களுக்குமான பொறுப்பைப் பெண்கள்மீது தூக்கிப் போடுபவர்கள், ஆண்கள் எப்படி இருக்க வேண்டும், ஏன் ஆண்கள் இப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து எதுவும் பேசுவதில்லை.

இதன் அடிப்படையில் வந்ததுதான் முகேஷ் சிங்கின் கருத்து. அது ஏதோ தனிப்பட்ட முகேஷ் சிங் என்ற குற்றவாளியின் கருத்து இல்லை. சமூகத்தின் விளைபொருள். பெண்கள் குறித்து நம் இந்தியச் சமூகம் உருவாக்கிவைத்திருக்கும் மனநிலை.

இதை மாற்றாமல், முகேஷ் சிங்கைவிட பலசமயங்களில் மோசமான கருத்துகளைச் சொல்லும் நம் அரசியல்வாதிகள், சமூகப் பிரபலங்கள், மதத் தலைவர்கள், அடிப்படைவாதிகள், சினிமாக்கள் இவர்களைக் குறித்துப் பேசாமல் நாம் முகேஷ் சிங்கைத் திட்டி ஒன்றும் ஆகப்போவதில்லை.

- சுகுணாதிவாகர்

நன்றி - விகடன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்