/* up Facebook

Mar 9, 2015

டாக்டர் முத்துலட்சுமியின் கல்விக்கூட அனுபவங்கள்..

உலக மகளிர் நாள் மார்ச் - 8

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களுள் ஒருவரும், தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலெட்சுமி (ரெட்டி) அவர்கள், அந்நாளின் தடைகளைத் தாண்டி கல்வி கற்ற வரலாறு. அவருடைய சுயசரிதை நூலிலிருந்து...

எனது பள்ளி நாட்கள்
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அந்தக் காலத்தில் எந்தப் பெண்ணும் ஆங்கிலம் கற்கவில்லை. அன்று புதுக்கோட்டைத் திவானாக இருந்து புகழ்பெற்ற அரசியல் மேதை அ.சேஷய்ய சாஸ்திரிகள் பெண்களுக்காக நிறுவிய ஒரு பெண்கள் பள்ளி இருந்தது. தொடக்க காலத்தில் அது ஆரம்பப் பள்ளியாக மட்டுமே இருந்தது. அந்நாட்களில் பெற்றோர்கள் பெண்களைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். ஆகவே பெண்களை ஊக்குவிக்க திவான் உதவித்தொகை அளித்தார். அந்த உதவித்தொகை சில அணாக்களோ, ரூபாய்களோதான். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், புதுக்கோட்டை மாநிலத்தின் வெளியிலிருந்து வந்த பெண்கள். பெண் குழந்தைகள் பள்ளிக்குப் போகும்போது, ஜனங்கள் அவர்களை வெறித்துப் பார்ப்பார்கள். அப்பார்வையிலிருந்து தப்ப, அவர்கள் திரைபோட்டு மூடிய வண்டியில் சென்றனர். அப்படியும், மக்கள் கூட்டம் அவர்களைச் சூழ்ந்துகொண்டுவிடும். ஆனால் சில பிராமணப் பெண்களும் நானும் பள்ளிக் கல்வியை ஆண்களுக்கான ஒரு பள்ளியில் தொடர்ந்தோம். காரணம், அங்கே திறமை வாய்ந்த ஆசிரியர்கள் இருந்தனர்; அவர்கள் திறமையாகக் கற்பித்தார்கள். எனக்கு நான்கு வயதாக இருந்தபோது, புதுக்கோட்டையிலேயே ஒரு திண்ணைப் பள்ளியில் என்னைச் சேர்த்தனர்.

அங்கே நான் தமிழ் எழுத்துகளைக் கற்றேன். அங்கே என்னைச் சேர்த்தபோது, எனக்குப் பால் கணக்கு, வண்ணான் கணக்கு எழுதும் அளவுக்குத் தமிழ் தெரிந்தால் போதும் என்று எங்கள் அப்பா அவர்களிடம் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.

அந்தக் காலத்தில், பனை ஓலைகளில் எழுதப்பட்ட எழுத்துகளை எங்களுக்குக் கற்பித்தார்கள். பொதுவாக, தலைமை ஆசிரியர் எனப்படும் ஒரு மூத்தவர், உயரமான மண் மேடையில் உட்கார்ந்திருப்பார். கூரான ஆணியால் பனைஓலைகளில் எழுதிக் காட்டுவார். ஒரு சட்டாம்பிள்ளை நாங்கள் எழுதுவதை மேற்பார்வையிடுவார். மாணவிகளுக்கு அடி கொடுக்க மாட்டார்கள். எழுத்துகள் அடங்கிய பனை ஓலைகளை ஒன்றுசேர்த்து, ஒரு நூலாக விற்பதிலிருந்து அவர்களுக்குச் சிறு வருமானம் கிட்டும். அந்தக் காலத்தில் கடிகாரம் கிடையாது. சூரியன் உதிக்கும் முன் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும். காலை 10 மணிக்கு மேல் உணவு இடைவேளை விடுவார்கள். மீண்டும் பகல் உணவுக்கு 2 மணிக்கும், கடைசியாக மாலை 5.30 அல்லது 6 மணி அளவில்தான் வீட்டுக்குப் போக முடியும். சூரியனின் நிலையை வைத்தே நேரத்தைக் கணக்கிடுவார்கள் அல்லது மணல் கடிகாரம் கொண்டு கணக்கிடுவார்கள். அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களுடன் எல்லா இந்துப் பண்டிகை நாட்களும் எங்களுக்கு விடுமுறைதான். நான் ஆண்கள் படிக்கும் பள்ளியில் இருந்ததால் ஆங்கில எழுத்துகளைக் கற்க முடிந்தது. எல்லா ஆசிரியர்களுக்கும் என்னை மிகவும் பிடித்ததால், என் தந்தையிடம் கேட்காமலேயே எனக்கு ஆங்கிலம் கற்பித்தனர். நான் என்னுடைய முதல் பாரம் என்று அழைக்கப்பட்ட ஆறாம் வகுப்பில் தேறும்வரை இதைப் பற்றி அவர் அறியவில்லை.

அந்தக் காலத்தில், குழந்தைப் பருவத் திருமணம் நடைமுறையில் இருந்து வந்ததால், 8 வயதுக்கு மேல் பெண்களைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. என் ஆசிரியரின் வற்புறுத்தலின் பேரில் 13 வயதுவரை பள்ளிப் படிப்பைத் தொடர எனக்கு அனுமதி கிடைத்தது. கீழ்நிலை நடுத்தேர்வில் வெற்றி பெற்றேன். அதற்குப் பிறகு, வளர்ந்த பெண் என்பதால் என்னைப் பள்ளிக்குச் செல்லக் கூடாது என்று நிறுத்திவிட்டனர். என் அப்பா, படிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு, ஒரு தனி ஆசிரியரை வைத்து, மாதம் அவருக்கு இரண்டு ரூபாய் கொடுத்து, நாலாவது படிவத்திற்குரிய பாடங்களை வீட்டிலேயே ஒரு வருடம் கற்பிக்க ஏற்பாடு செய்தார்.

அந்நாட்களில் பெண்களுக்கென்று விடுதிகள் இல்லை. எங்கள் ஊரிலேயே இருந்த ஆண்கள் கல்லூரியில் நான் சேருவதற்கு என் அப்பா விண்ணப்பித்தார். ஆனால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவருக்குக் குடும்பத்தையும் அதைச் சார்ந்தவர்களையும் பராமரிக்க இயலாத அளவு மிகக் கொஞ்சமே ஓய்வூதியம் கிடைத்தது. அந்த நிலையில் மற்றொரு இடத்தில் குடும்பம் வைத்துச் செலவு செய்ய அவரால் முடியாது. தொடர்ந்து கல்வி பயிலுவதைப் பற்றி நான் பிடிவாதமாக இருந்ததால் எனது அப்பா அப்போது மேற்கத்திய நாகரிகத்தைப் பின்பற்றும் மேன்மைதாங்கிய புதுக்-கோட்டை மகாராஜாவிடம் வேண்டுகோள் விடுத்தார். உடனே அவர் மெட்ரிகுலேஷனில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மேல்படிப்புக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்றும் இதை மூன்று மாதங்களுக்குப் பின்பற்றி பரிசோதனை செய்து பார்க்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தார். சில வாரங்களுக்குள்-ளேயே நான் என் வகுப்பில் இருந்த மற்ற மாணவர்களைவிடப் பல படிகள் உயர்ந்திருப்-பதை என் பேராசிரியர்கள் அறிந்துகொண்டனர்.

என் வகுப்பு மாணவர்களிடையே காலம்சென்ற புகழ் வாய்ந்த பேச்சாளரும் அரசியல்வாதியுமான திரு. சத்தியமூர்த்தி, உதவி நீதிபதியான திரு.ராஜகோபால் மற்றும் பிற்காலத்தில் பிரபலம் ஆன சிலரும் இருந்தனர். எனக்கு அவர்கள் எல்லோருடைய பெயர்களும் நினைவில் இல்லை. வகுப்பில் நான் எப்போதுமே ஆங்கிலத்திலும் வரலாறு பாடத்திலும் மிகவும் நல்ல மதிப்பெண்கள் பெறுவேன். ஒரு பெண் வகுப்பில் முதலாக வருவதைப் பற்றிப் பொறாமை கொண்ட மாணவர்கள், மாணவிகள் பேராசிரியர்களிடம் சலுகை பெறுவதாக மறைவில் முணுமுணுத்தனர். காலம்சென்ற கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ண அய்யரும் மற்ற பேராசிரியர்களும் என்னிடம் அன்பாகவும் எனக்கு ஆதரவாகவும் இருந்தனர். இவர்களிடம் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் பேறு எனக்குக் கிட்டியது என் அதிர்ஷ்டம்.

நான் என்னுடைய படிப்பைத் தொடருவதில் முனைப்பாக இருந்தேன். எனக்குப் பதினாறு வயதானபோது, மெட்ரிகுலேஷன் தேர்வுக்கு முன்பு, எனக்குக் கிட்டப் பார்வை ஏற்பட்டது. அப்போது கண்களை முறையாகப் பரிசோதனை செய்ய முடியவில்லை என்பதால் எனக்குத் தகுந்த கண்ணாடி கிடைக்கவில்லை. எனக்கு 20 வயதாகி, 1907ஆம் ஆண்டு சென்னை வந்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகு ஒரு தகுதி வாய்ந்த கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சரியான கண்ணாடி கிடைத்ததால் என் பார்வைத் திறன் அதிகரித்தது. என் மருத்துவப் படிப்பைத் தொடர இது உதவியது.

அந்தக் காலத்துச் சில சுவையான அனுபவங்களைப் பற்றிக் கூற விரும்புகிறேன். இயல்பாகவே பையன்கள் என்னைப் பார்க்க விரும்பினர். நான் திரைபோட்டு மூடிய ஒரு வண்டியில் சென்றாலும்கூட எங்கே வண்டியை நிறுத்தினாலும் அவர்கள் என்னைச் சூழ்ந்துகொள்வார்கள். சில குறும்புக்கார பையன்கள் அநாமதேயக் கடிதம் எழுதி என்னுடைய அறைக்குள் தூக்கி எறிவார்கள். கல்லூரியில் நான் இளைப்பாற ஒரு சிறிய அறையை மாடிப்படிக்கு அருகே கொடுத்திருந்தனர். நான் எப்படியும் பையன்-களுடன் எந்த விளையாட்டிலும் பங்கெடுத்துக்-கொள்ள முடியாது.

நான் கல்லூரியில் இன்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சிபெற்ற நேரத்தில் நான் மிகவும் பலவீனமாகி இரத்தசோகையும் ஏற்பட்டது. எனவே, என்னை ஒரு வருடம் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்கு ஷேக்ஸ்பியர், டென்னிஸன், மில்டன், ஷெல்லி போன்றவர்களைக் கற்பித்தார். நான் படிப்பதற்காக அவர் கல்லூரி நூலகத்திலிருந்து அடிஸன், கோல்ட் ஸ்மித், மங்கோ பார்க் பிரயாணம் போன்றவற்றைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டுவருவார். என்னை எந்த நாவல்களையும் படிக்கவிட மாட்டார். தினமும் என்னைக் காலையில் மச்சுவாடிக் குளத்துக்கு நடைப்பயிற்சிக்காக அழைத்துச் செல்வார். எங்கள் தோட்டத்திலேயே பூப்பந்து விளையாட ஓர் இடத்தை ஏற்பாடு செய்தார். பொதுமக்களுக்கு அதைப் போல ஒரு பெண்ணுக்குச் சுதந்திரமும், இடமும் கொடுத்துப் பழக்கமில்லை.

அதனால் என் அப்பாவைப் பழித்தனர். உயர்ந்த லட்சியங்களும், பெண்கள் கல்வியைப் பற்றிய முன்-னேற்றக் கருத்துகளும் கொண்ட என் அப்பாவை அந்த மாநிலத்தில் அனைவரும் மதித்ததால் அவர் எந்தப் பழிச்சொற்களையும் பொருட்படுத்தாமல் தன்னை நிலைநாட்டிக்-கொள்ள முடிந்தது. அது மட்டுமன்றி, அன்றைய மேன்மைதாங்கிய புதுக்கோட்டை அரசர், அவரது சகோதரர்கள், மேலும் நாட்டின் பிற அறிவுஜீவிகள் அனைவரும் அவருடைய செயல்களுக்கு ஆதரவு அளித்தார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்கள் சென்னையில் என்னுடைய மருத்துவப் படிப்புக்கு மருத்துவப் புத்தகங்களின் செலவு உட்பட உதவித் தொகையும் அளித்து என்னை ஆதரித்தனர்.

இந்தக் காலத்துப் பெண்களின் நலனுக்காக மற்றொரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியைப் பற்றியும் இங்கு கூற விரும்புகிறேன். என்னுடைய 10ஆவது, 11ஆவது வயதுக்குப் பிறகு நான் என்னுடைய சிலேட், புத்தகங்களுடன் எப்போது தெருவில் நடந்தாலும் இளைஞர்கள் தெரு முனையில் கூடி, பள்ளிக்குச் செல்லும் பெண்ணைப் பற்றி அவதூறான விமர்சனங்களைச் செய்வார்கள். இந்தச் சங்கடத்தைத் தவிர்ப்பதற்கு நான் நெல்லு மண்டி பாலையா பள்ளிக்குச் சந்து-பொந்துகள் மூலமாகச் சுற்று வழியில் செல்வேன். ஆனால் பள்ளியில் நுழைந்த-வுடனே எனக்கு வரவேற்புக் காத்திருந்த-தால் எல்லாமே மகிழ்ச்சிகரமாக ஆகிவிடும். இன்றுவரை நான் பாலையா பள்ளியிலும், கல்லூரியிலும் இருந்த எனது ஆசிரியர்களைப் பற்றிய மகிழ்ச்சியான நினைவுகளைப் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.

பழமையைக் கடைபிடிக்கும் பின்தங்கிய புதுக்கோட்டையிலும் என் சக மாணவர்கள் என்னைக் கௌரவப்படுத்தும் வகையில் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். கல்லூரி முதல்வரான திரு.ராதாகிருஷ்ண அய்யர் ஒருபெரிய கணித மேதை. அவர் என் அப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் என்னைப் போன்ற ஒரு நல்ல மாணவியை அதுவரை பார்த்ததில்லை என்றும், என் மேல்படிப்புக்குத் தான் உதவித்தொகை அளிக்கப்போவதாகவும் எழுதியிருந்தார். தமிழ்ப் பண்டிதரைத் தவிர மற்றவர்கள் எல்லாருமே பிராமணர்கள். ஆரம்ப நிலையில் முதலில் நான் ஆண்கள் கல்லூரியில் நுழைவதற்கு எதிர்ப்பு இருந்தாலும், நாட்கள் செல்லச்செல்ல என்னையும், எனது முன்னேற்றத்தையும் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு, யாரெல்லாம் என்னை முதலில் எதிர்த்தார்களோ அவர்களே என்னைப் பற்றிய தங்கள் கருத்துகளை மாற்றிக் கொண்டதோடு, அரசின் மாநில உதவித்தொகைக்குப் பரிந்துரைக்கவும் செய்தனர்.

நூல் : டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்