/* up Facebook

Mar 10, 2015

யுத்தவலியின் அடையாளமே இன்றைய பெண்களின் போராட்டம் - காயத்ரி நளினகாந்தன்


இலங்கையில் முடிவடைந்த யுத்தத்திற்கு பலரினாலும் பல வடிவம் கொடுக்கப்பட்டது இதனை ஒரு சாரார் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்றும் இன்னொரு சாரார் இன ஒழிப்புக்கான யுத்தம் என அடையாளப்படுத்தியுள்ளனர் எது எப்படியிருந்தாலும் இன்று அதன்  கொடூரமான விளைவை எதிர்நோக்கி நிற்பவர்கள் பெண்களே என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

30 வருடகாலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் மக்கள் தத்தமது மட்டங்களில் பல்வேறு இழப்புக்களை சந்தித்துள்ளார்கள் எனினும் அதில் இருந்து மீள பலவாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றபோதும் பெண்களுக்கு மீள்வதறகான வாய்ப்பு இன்னும் உரியவர்களால் வழங்கப்படவில்லை அவர்கள் இன்னமும் யுத்தத்தின் வலியை சுமந்தவாறு தமது வாழ்க்கையை நகர்த்துகின்றார்கள்.

குறிப்பாக காணமற்போனோர்கள் தொடர்பாக இன்று தமது உறவுகளை தொலைத்து நிற்பவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் இவர்கள் தமது கணவர்மாரையும் மகன்மாரையும் சகோதரர்களையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் இப்பெண்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு தமது உறவுகளுக்காக கண்ணீருடன் காத்திருப்பார்கள். இவர்கள் இழந்து நிற்கும் ஒவ்வொரு உறவும் இவர்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்வுபட்டவர்கள் குறிப்பாக பொருளாதாரத்தை ஈட்டுபவர்கள் மற்றும் சமூகப்பாதுகாப்பு  சமூக அந்தஸ்து போன்றவற்றை வழங்கியவர்கள்  என்ற அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை தொலைந்த உறவுகளுடன் ஏதோ ஒருவகையில் தங்கியும் தரித்தும் நிற்கின்றார்கள்.
 இதன்  விளைவால் இன்று தொலைந்த உறவுகள் மேற்கொண்ட அனைத்து பொறுப்புக்களையும் பெண்கள் என்ற ரிதியில் இவர்களுக்கு உள்ள பொறுப்புக்களையும் சேர்த்து சுமக்கும்.  இவர்கள் மத்தியில் சுமத்தப்பட்டுள்ள மற்றுமொரு பொறுப்பு காணமற்போன உறவுகளை மீட்டுத்தருமாறு பல ஆணைக்குழுக்கள் மற்றும் அமைப்புக்கள் முன்னால் சாட்சியம்  அளிப்பதும்  வீதியில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டுவருவதும் ஆகும்.

அண்மையில் காணமற்போனோர் அடையாளம் தெரியாதோரால் கொலை செய்யப்பட்டோர்  தொடர்பான அமைப்பு ஒன்றை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அவர்களுடன் கலந்துரையாடல் செய்தபோது அவர்கள் இதுவரைகாலமும் அமைப்புக்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் அடங்களாக 25ற்கு  மேற்பட்ட தடவை சாட்சியம் அளித்துள்ளதாகவும் 10ற்கு மேற்பட்ட போராட்டங்களை செய்துள்ளதாகவும் கூறினார்கள். எனினும் பெரியளவில் முன்னேற்றம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறினர். இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் காணமற்போனோர் தொடர்பான பிரச்சனை அவர்களின் சொந்தப்பிரச்சனையாக மட்டுமே தமிழ் சமூகம் பார்க்கின்றதே ஒழிய இதனை ஒட்டுமொத்த தமிழர் பிரச்சனையாக பார்க்கத்தவறிவிட்டது குறிப்பாக வீதியில் இறங்கி போராடுபவர்கள் அனைவரும் காணமற்போன கொலைசெய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவுகள் மட்டுமே வேறு எவரும் அதில் கலந்து அப்போராட்டத்தை பலப்படுத்த முன்வருவதில்லை.

ஆயினும் இங்கு கடத்தப்பட்டும்இ கொலைசெய்யப்பட்டும் காணாமற்போயுள்ளவர்களில் எவர்  ஒருவரும் தமது சொந்தப்பிரச்சனையால்  இவர்களுக்கு இந்த நிலை ஏற்படவில்லை இவர்கள் ஏதோ ஒருவகையில் தமது இனத்தின் விடுதலைக்காக அல்லது சமூகத்தின் மீது அவர்கள் கொண்ட கொள்கையை நிலைநிறுத்த செயற்பட்டதன் விளைவாக அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆயினும் இவர்களிளை மீட்கும் பொறுப்பை அவர்களின் உறவுகளிடம் மட்டும் சுமக்க விடுவது நியாயமா? அவர்களோடு மட்டுப்படுத்தியிருப்பது எமது சமூகத்தின் பொறுப்பற்றத தன்மையை சுட்டிக்காட்டுகின்றது.

மேலும் மனதில் உறவுகளை இழந்த கனத்துடனும் குடும்பதின் பொருளாதார சுமையையும் தாங்கியவாறு நடைபிணமாக தமது காலத்தை கழிக்கும் இவர்களின் பிரச்சனைக்கு தீர்வினை பெற்று தருவதில் அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் காலத்தை வீணடிக்கும்  அதோ வேளை தமிழ் அரசியல்வாதிகள் தமது அரசியல் லாபத்திற்காக இவர்களை பயன்படுத்திக்கொள்ளவும் தவறவில்லை. அவ்வப்போது அரசியல்மேடைகளிலும்இ தேர்தல் களங்களிலும் வாக்கு வேட்டைக்காக இவர்களை பற்றி பேசினார்களே தவிர இவர்களின் விடுதலைக்காக காத்திரமான பங்கை இன்னும் முன்னெடுக்கவில்லை என்பது நிதர்சனம். இதனை அண்மையில் திருக்கோணமலையில் நடந்த காணாமற்போனோர் பற்றிய ஆணைக்குழுவிற்கு எதிராக போராட்டம் ஒன்றை சிவில் அமைப்பு ஒன்று ஒழுங்கு படுத்தியிருந்த போது அதற்கு ஆதரவாக அனந்தி சசிதரன் கலந்துகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுhர் பிரமுகர்கள் சிலர் மாற்றுக்கருத்துடன் செயற்பட்ட விதம் இவர்கள் இந்த பாதிக்கப்பட்ட பெண்களை அரசியல் பகடைகாய்களாக பயன்படுத்த முயல்வதையும் இவ்விரு பகுதியினரதும் பிரசன்னம் சிவில் அமைப்பின் சுயாதீனத்தை விமர்சனத்துக்குள்ளாக்கி பலவீனப்படுத்தும் செயலாக மாற்ற முனைந்துள்ளனர்   என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

மேலும் இவர்கள் எதிர்நோக்கும் உளவியல் சார்ந்த பிரச்சனை முக்கியமாகும். எமது சமூகத்தில் இறந்தவர்களுக்கு செய்யும் ஆத்மசாந்திக்கிரிகை என்பது உறவினர்களுக்கு ஒரு உளவியல் நிவாரணம் ஆனால் இந்த மக்களினால் இதனை மேற்கொள்வதற்கு கூட முடியாதவர்களாக திணருகின்றார்கள். தாயார் ஒருவர் 1990 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தனது மகனுக்காக ஆத்மசாந்தி கிரியை தற்போது மேற்கொண்டதாகவும் இனிமேல் தான் நிம்மதியாக கண்மூடுவேன் என கதறினானர். இதே போன்று குற்றவாளிகள் தண்டனைக்குட்படுத்தப்படவில்லை என்ற ஏக்கமும் அவர்களிடம் மேலோங்கி காணப்பட்டது.மேலும் குற்றவாளிகளினது சுகந்திர நடமாட்டமானது  தற்போதைய நல்லாட்சியினை கேள்விக்குட்படுத்துவதாகவும் காணப்படுகின்றது.

இவர்களது வேண்டுகோளாக  இருப்பது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா இருப்பின் துரிதமான விடுதலை இது அரசாங்கத்திற்கு பெரிய சாவலான காரியமாக அமையாது குறைந்தது இவர்கள் தொடர்பாக நடவடிக்ககைகளை மேற்கொள்ள ஒரு நாள் தொடக்கம் ஒரு மாத காலம் போதுமானது. இருப்பினும் இந்தப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவராது இருப்பதற்கு உரிய காரணங்களை கூட இன்னும் அரசாங்கம் வெளியீடாத நிலையில் அனைத்து தமிழ் சிவில் அமைப்புகளும் தங்களுக்கான நிகழ்ச்சி நிரலைத்தவிர்த்து பொது நிலையில் செயற்படுவதுடன் தமிழ் சமூகம் இவர்களை தனித்து விடாது இவர்களின் போராட்டங்களில் மனமாற்றத்துடனான தனிமனித பங்களிப்பை ஆர்வத்துடன் ஆதரித்து இச்சமூகத்திற்குவழங்குவதன் மூலமே இவர்களாது நியாயமான போராட்டத்தை வெற்றியடையச்செய்யும் தந்திரோபாயமாகும் என்பதே யதார்த்தமாகும்.

நன்றி தினக்குரல்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்