/* up Facebook

Mar 19, 2015

கருத்துரிமையை எப்படிக் காப்பது? - ரொமிலா தாப்பர்


கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமை என்பது மனித உரிமைகுறித்த சர்வதேசப் பிரகடனத்தின் ஒரு பகுதி. இந்த உரிமை இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளது. என்றாலும் இது ‘உதிரிக் குழுக்கள்’ என்று நாசூக்காகக் குறிப்பிடப்படும் சிலரால் தொடர்ந்து மீறப்பட்டுவருகிறது. இப்படிச் சொல்லப்படுவதால், ஆட்சியில் இருப்போர் இதுபற்றிக் கவலைப்படுவதில்லை. எனவே, இது குடிமைச் சமூகத்தின் கவலைக்குரிய விஷயமாகியிருக்கிறது.

இந்த உரிமையைக் காப்பாற்றுவதாக அரசு வாக்குறுதி அளித்தாலும் நாம் இதற்கு எதிர்வினை ஆற்றித்தான் ஆக வேண்டும். நமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நமக்கு அவசியமாகிறது. இது சமூகத்தில் தனிநபரின் சுதந்திரத்தைக் காப்பாற்றக்கூடிய உரிமை என்பதால், இந்த உரிமை பகிரங்கமாக விவாதிக்கப்பட வேண்டும்.

மத உணர்வுகள் புண்படுவதாகக் கூறிச் சிலர், சிலவற்றை ஆட்சேபிக்கிறார்கள். அந்த மதத்தில் உள்ள அனைவரையும் அது பாதிக்கிறதா அல்லது அதன் ஒரு பகுதியினரை மட்டும் பாதிக்கிறதா என்ற கேள்வி இங்கு எழுகிறது. இந்தச் சமூகம் என்பது என்ன? யார் அதன் பிரதிநிதிகள்? நாமும் சமூகத்தின் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள், கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படும்போது அது நம்மைக் கடுமையாகப் பாதிக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியாக வேண்டிய நேரம் இது. பிறரது உரிமைகளை நாம் நசுக்கவில்லை; நமது உரிமைகளை நாம் பாதுகாத்துக்கொண்டாக வேண்டும்.

நாவலுக்கு எதிர்ப்பு

‘புண்படுத்தப்பட்ட உணர்வு’ என்பதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை நாம் கேள்விக்கு உட்படுத்தியாக வேண்டும். ‘சமய நிந்தை’தான் இதற்குக் கரணமா, அல்லது சமூக மதிப்பீடுகளுடன் தொடர்புடைய பிற காரணங்கள் சமயத்தை முகமூடியாகப் பயன்படுத்துகின்றனவா? பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’, குழந்தைப் பேறு இல்லாத ஒரு தம்பதியரின் வேதனையை அபாரமான நுண்ணுணர்வோடும் மென்மையாகவும் சொல்லும் நாவல். நாவலில் வேறு விஷயங்கள் உள்ளார்ந்து செயல் படுகின்றனவா? இதற்கான எதிர்ப்பு இன்று சட்டபூர்வமாக வழக்கொழிந்துவிட்ட பழைய இந்து சமய மரபு ஒன்று புதுப்பிக்கப்படுவதுகுறித்த கவலையிலிருந்து எதிர்ப்பு பிறக்கிறதா? அல்லது நாவல் சமய மரபைக் குறை கூறுவதால் எதிர்க்கப்படுகிறதா?

தனிநபரும் சமூகமும் அருகருகே வைத்துக் காட்டப் படுவதுதான் ‘மாதொருபாகன்’ கதையாடலின் உள்ளார்ந்த அம்சம். நாவலில் வரும் தம்பதியர் மகிழ்ச்சியான மண வாழ்க்கை வாழ்பவர்கள். ஆனால், பிள்ளைப் பேறு இல்லாததால் குடும்பத்தாலும் சமூகத்தாலும் இவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எப்போதும்போலவே பெண் மீதுதான் அதிகம் குற்றம் சுமத்தப்படுகிறது. அவள்தான் தீர்வுகாண வேண்டியிருக்கிறது. அன்றைய மரபின்படி ஏற்றுக்கொள்ளத் தக்க ஒரு தீர்வை நாடும்படி அவளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. அது ஒழுக்கக் கேடு என அப்போது கருதப்படவில்லை என்று நாவலில் கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் பிராமணியச் சமூக விதிமுறைகளுக்கு வெளியே நிலவிய சம்பிரதாயச் சட்டங்கள் முறையானவையாகவே கருதப்பட்டு, சமூகத்தின் அனுமதியையும் பெற்றிருந்தன என்பதை இன்றுள்ள மக்கள் உணரவில்லை. இந்த அனுமதி நாவலில் வெளிப்படையாகவே கூறப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு செயல், இன்றைய சட்டத்துக்கு முரணாக இருக்கிறது. நாவலின் மூலம் அது இன்று அங்கீகாரம் பெற்றுவிடக் கூடாது என்ற எண்ணத்தால் எதிர்ப்பு எழுகிறதா? இந்து மதம் அதை அனுமதிப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதால்தான் எதிர்க்கப்படுகிறதா? கடந்த காலத்தில் புழக்கத்தில் இருந்ததாகச் சொல்லப்படும், இன்றைய சட்டத்துக்குப் புறம்பான ஒரு செயல்பாட்டைப் பற்றி எழுதுவது இன்றைக்கு அதற்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக ஆகாது. எந்த வகையிலும் சமய நிந்தையாகவும் ஆகாது. ஏனென்றால், அது அன்றைய சமூகம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட ஒரு செயல்பாடு என்றுதான் நாவல் கூறுகிறது.

வேறு காரணங்கள் இருக்கின்றனவா?

நாவலில் வரும் தீர்வு கணவன் மீதான களங்கமாகப் பார்க்கப்படலாம். இது (மனைவி வேறொருவரின் உதவியால் கருவுறுவது) கணவனின் மலட்டுத் தன்மையைச் சுட்டுவதாக அமைகிறது. எப்போதும் பெண்ணையே குற்றம்சாட்டும் ஆணாதிக்கச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது இது. தீவிரமான தந்தைவழிச் சமூக அமைப்புள்ள இன்றைய சமூகத்தில் இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. கணவனின் சம்மதம் கடைசிவரையிலும் தெளிவற்று இருப்பதால், இறுதியில் மனைவியே தனிப்பட்ட முறையில் முடிவெடுக்கிறாள். தந்தைவழிச் சமூக அமைப்புக்கு முரணானதாக இது பார்க்கப்படுகிறதா? எதிர்ப்பின் அடியில் ஒளிந்திருக்கும் காரணம் இதுதானா? அல்லது கணவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் முக்கியமான ஒரு விஷயத்தில் முடிவெடுக்கும் பெண்ணின் உரிமையை எதிர்ப்பதை மறைக்கும் முகமூடிதான் இந்தக் காரணமா?

இவ்விஷயத்தில் ஒரு பெண் தானாகவே முடிவெடுக்கும் சுதந்திரத்தை மறுப்பதும், இயல்பான திருமண உறவாகச் சித்தரிக்கப்படும் உறவைக் கண்டிப்பதும்தான் எதிர்ப்பின் நோக்கம் என்றால், இதில் மதத்தை ஏன் கொண்டுவர வேண்டும்? இந்து மதத்துக்கு இழுக்கு என்று ஏன் சொல்ல வேண்டும்? அப்படிச் செய்தால்தான் இன்று கூடுதல் விளம்பரம் கிடைக்கும் என்பதுதான் காரணமா?

எழுத்தாளரை வாயடைக்கச் செய்வதுதான் இந்த நடவடிக்கையின் நோக்கம். ஒருவரை மவுனமாக்குவதற்குப் பல வழிகள் உள்ளன. உடல்ரீதியான தாக்குதல் என்பது எத்தகைய மோதலிலும் நெறிகளுக்குப் புறம்பானது. உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் ஒருவரை மவுனமாக்குவது இன்னொரு வழி. சமயத்தை இழிவுபடுத்தி விட்டார் என்று சொல்லி, ஒரு எழுத்தாளரை வாயடைக்கச் செய்வது இப்படிப்பட்டதுதான். பெருமாள்முருகன் தன்னைத் தானே மவுனமாக்கிக்கொண்டது அவர் எவ்வளவு மென்மையானவர் என்பதைக் காட்டுகிறது.

பணிந்துவிடக் கூடாது

ஒரு நூலை முடக்குவது, தடை செய்வது அல்லது எரிப்பது என்னும் கோரிக்கை இந்த நாட்டில் வழக்கமாகிவருகிறது. சுயசிந்தனை கொண்ட, தன் முன் உள்ள பிரச்சினைகளை வெளிப்படையாக விவாதிக்கக்கூடிய, தனக்கு நேர்ந்துவரும் வரலாற்றுரீதியான மாற்றங்களின் தன்மையைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு சமூகத்தின் எழுச்சியைத் தடுப்பது தான் இந்த எதிர்ப்புகளின் நோக்கம். சமய உணர்வு புண்படுத்தப்படுகிறது என்னும் பெயரால் இதுதான் நடக்கிறது. வரலாற்றுரீதியான இந்த மாற்றங்கள் மேலும் பல மாற்றங்களுக்கும் மோதல்களுக்கும் வித்திடும். இந்த மாற்றங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மாற்றங்களைத் தான் விரும்பும் திசையில் நிகழ்த்த விரும்பு பவர்களின் முயற்சிகளுக்கு நாம் பணிந்துவிடக் கூடாது.

நாம் என்ன செய்ய முடியும்? பெருமாள்முருகன் மேற்கொண்டுள்ள சுயதணிக்கையை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? அல்லது அவருக்கு ஆதரவாக நின்று, தன் முடிவை மாற்றிக்கொள்ளும்படி அவரைக் கேட்டுக்கொள்ள வேண்டுமா? அவர் தொடர்ந்து எழுத வேண்டும், தனது கருத்துச் சுதந்திரத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நாம் கோர வேண்டும். அவர் சென்னைக்குக் குடிபெயர்ந்ததும் புலம் பெயர்ந்த வாழ்வுதான். அவர் அப்படிச் செய்வதை நாம் விரும்பவில்லை.

முழுமையான கருத்துச் சுதந்திரம் என்பது இல்லை என்பது உண்மைதான். ஆனால், எழுத்தாளரின் துறையைச் சேர்ந்த பொறுப்புள்ள சிலரால் அது தீர்மானிக்கப்பட வேண்டும். அது இந்த விஷயத்தில் ஆரோக்கியமான விவாதத்தை உருவாக்கும். ஒருவர் எழுதுவதை எதிர்க்கும் உரிமையை எந்தச் சமூகத்துக்கும் மறுப்பது இதன் நோக்கம் அல்ல. எந்த அமைப்பும் ஒரு எழுத்தாளரை முடக்கும் நிலை வரக் கூடாது என்பதை வலியுறுத்துவதுதான் இதன் நோக்கம். சுயதணிக்கைதான் இதற்கான பதில் என்றால், அதையும் யார் முடிவுசெய்வது? துறை சார்ந்தவர்கள்தான் அதை முடிவுசெய்ய வேண்டுமே தவிர, அரசியல் கட்சிகளின் ‘உதிரி சக்திகள்’ கையில் அது போய்விடக் கூடாது. இத்தகைய சக்திகள் வன்முறையை வைத்து மிரட்டி எழுத்தாளரை மவுனமாக்க முயல்கின்றன. எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் அச்சுறுத்தப்படுகிறார்கள். நாம் வாய்மூடிச் சமூகமாக மாற வேண்டுமா?

உரிமையைக் காப்பாற்றுதல்

இத்தகைய அச்சுறுத்தல்களைக் கையாள்வதில் மேலும் பயனுள்ள வழிகளை நாம் யோசிக்க முடியுமா? கருத்துச் சுதந்திரத்தை, குறிப்பாக, எழுத்தாளர்களின் சுதந்திரத்தைக் காப்பதற்காக ஏதேனும் அமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும். வழக்கறிஞர்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் இந்த அமைப்பில் இருக்கலாம்.

எழுத்தாளர்களை அச்சுறுத்தும் அமைப்புகள், அவற்றின் உறுப்பினர்கள் ஆகியோரின் பெயர்களை வெளிப்படையாக அறிவிப்பதும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் பணியாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கையையும் நாட வேண்டும். இத்தகைய அமைப்பிலிருந்து வரக்கூடிய அறிக்கை மேலும் பல எழுத்தாளர்களுக்கு சர்ச்சைகளை எதிர்கொள்ளும் தைரியத்தை அளிக்கும்.
- ரொமிலா தாப்பர்,
புதுடெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாற்றுத் துறையின் முன்னாள் பேராசிரியர். பிப்ரவரி 17 அன்று ‘சஹ்மத்’ என்னும் அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் பெருமாள்முருகனை ஆதரித்து அவர் பேசியதன் சுருக்கம் இந்தக் கட்டுரை.

‘தி இந்து’ (ஆங்கிலம்), | தமிழில்: அரவிந்தன் |

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்