/* up Facebook

Mar 28, 2015

ஆன் செக்ஸ்டன்: பெண்ணியத்தின் மற்றுமொரு குறியீடு - நசார் இஜாஸ்


ரஷ்யாவின் நகரத் தெருக்களில் பாடசாலைச் சீருடையோடு பள்ளி நாட்களை கடத்த நடையில் சந்தேசத்தை இனிமையாகப் பின்னிக் கொண்டு செல்கிறார் ஆன் செக்ஸ்டன். உயர் தர வகுப்பில் கற்றுக் கொண்டிருக்கும் அழகிய தருணங்கள் அது. தான் படித்துக் கொண்டிருக்கும் காலத்திலிருந்தே எழுத்தின் மீதான அதீத ஆர்வம் ஆன் செக்ஸ்டனை அதன்பால் செதுக்கிக் கொண்டிருந்தது.  எழுத்துக்கள் அத்தனையும் அவளது மனதிலிருந்து காகிதங்களில் சொறியத் தொடங்கியதிலிருந்து அத்தனையும் பால்யத்தின் பாதங்களைக் கட்டுடைத்து ஒரு திசை தெரியாத இலக்கற்ற வெளியை நோக்கி ஒருவரைப் பயணிக்கச் செய்து விடும் வல்லமை கொண்டது.

தனது பத்தொன்பதாவது வயதில் ஆல்பிரட் கேயா என்பவரைக் காதலிக்கத் தொடங்கியவர் ஒரு கட்டத்தில் அவரைத் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டுச் சென்றார். வாழ்க்கைப் பயணம் தன் போக்கில் செவ்வனே பயணித்துக் கொண்டிருக்கையில் இரண்டு வருடங்கள் வேகமாகக் கடந்தோடின. ஆன் செக்ஸ்டன் இரு குழந்தைகளின் தாயானாள்.

வாழ்க்கைக் கட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கையில் அவளுடைய கரப்பப் பையை அகற்றியே ஆக வேண்டிய நிலை அவளை ஆட்பறிக்கத் தொடங்கியது. அவளால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கர்ப்பப்பையை அகற்றுவதென்பது அவளால் இயலாத விடயம். தான் ஒரு போதும் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாள். எனினும் பின்னர் அதை ஏற்றுக் கொண்ட ஆன் செக்ஸ்டன் தன் உடலில் பாதிக்கு மேல் களவாடப்பட்டு விட்டதாக உணர்ந்தாள். தனது வாழ்க்கையை கசப்பானதாக எண்ணத் தொடங்கினாள்.

குடும்ப வாழ்வு அவளுக்குள் இருண்மையைக் கட்டமைப்பதாய் ஒரு வித்தியாசமான உணர்வு அவளுக்குள் ஏற்படத் தொடங்கியது. வாழ்க்கையே வேறு ஒரு வித்தியாசமான போக்கில் செல்வதாய் உணர்ந்தாள். தாய்மை என்பது பெண்ணுக்குப் பாதுகாப்பைத் தரும் ஒரு விடயம் என எடுத்துக் கொண்ண முடியாது. அது ஒரு பயங்கரமான சித்திரவதை கணவனும், பிள்ளைகளும் பெண்ணின் உடலை களவாடுகின்றனர் என ஆன்செக்ஸ்டன் ஒரு கட்டத்தில் குறிப்பிடுகிறார்.

மன ரீதியாக பாதிப்புகளுக்காளான ஆன் செக்ஸ்டன் அடிக்கடி மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று வந்தார். அதற்கும் மேலதிகமாக தனது மன ரீதியான பாதிப்புக்கு சரியான மருந்தாக எழுத்து மாத்திரமே இருக்க முடியும் என அதிகமாக நம்பினார். மனச் சோர்வுக்குப் பின் அவளுடைய எழுத்துக்கள் கர்ப்பப்பையையும், தனக்கேற்பட்ட உடலியல் சிதைவைப் பற்றியுமே கவிதையின் பாடுபொருளாக அமைந்தன. 1967 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தான் எழுதிய கவிதைத் தொகுப்பொன்றிற்காக புலிட்சர் விருதையும் வென்றார்.

வைத்தியர் தரும் மாத்திரைகளை தொடர்ந்தேர்ச்சையாகப் பாவித்து வந்த ஆன்செக்ஸ்டனின் உடலில் பாரிய மாற்றங்கள் வெளிப்படத் தொடங்கின. உடல் எடை கூடி பருமனாகத் தொடங்கியதை உணரத் தொடங்கினாள் ஆன் செக்ஸ்டன். இந்த வித மாற்றங்கள் அவருக்குள் நெருடலை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.

தனது உடல் பருமனாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த ஆன்செக்ஸ்டன் தனது உடல் எடையைக் குறைப்பதற்காக பலவிதமான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினாள். எத்தனையோ நாட்கள் பட்டினியில் இருந்தாள். அவைகளும் அவளுக்கு வேதனையை விலை பேசி விற்று விட்டது. பல நாட்கள் பட்டினியாய் இருந்ததற்காக அவளுடைய நரம்பு மண்டலங்கள் பாதிப்படைந்து விட்டன. எனினும் தனக்கேற்பட்டுள்ள உடல் ரீதியான பாதிப்புகளை வெளிக் கொணராமல் கவிதையின் நடைமுறையில் பாரிய மாற்றங்களையும், நவீனத்தின் பின்புலத்தையும் கட்டமைத்துக் கொண்டிருந்தார் ஆன் செக்ஸ்டன். அவை அவருக்கு தொடர்ந்தேர்ச்சையான வெற்றியைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

கவிதையை வித்தியாசமான பாணியில் விதைத்துக் கொண்டிருந்த ஆன்செக்ஸ்டன் கவிதைகளை இசையோடு பாடத் துவங்கியதோடு அதில் மாற்றங்களையும் ஏற்படுத்த முயன்றார். எனினும் அத்தருணத்தில் தனது கவிதைகளின் கட்டமைப்பையும், நெறிமுறைகளையும் பற்றிய குழப்பம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

ஏதோ ஒரு சிந்தனையில் தூங்கிப் போன ஆன்செக்ஸ்டன் பொழுதுகள் புலர்ந்து ரொம்ப நேரத்திற்குப் பிறகு படுக்கையிலிருந்து போர்வையை விலக்கியபடி எழுந்து கொண்டாள். அவளுடைய சிந்தனைகள் அன்றைய தினமும் நிம்மதியற்றேயிருந்தன. என்ன செய்வதென்று தெரியாத ஒரு கட்டத்தில் அவளுக்கு அழுது விட வேண்டும் போல் இருந்தது. வாழ்க்கையை எவ்வாறு பிரித்தரிவது எனத் தெரியாமல் குழப்பத்தில் மீண்டும் மீண்டும் மிரண்டு போயிருந்தாள்.

எழுந்து கொண்டவள் குளியலறைக்குச் சென்று தன்னைச் சீர்படுத்தி தனது உற்ற நண்பன் மெக்ஸின் குனினை சந்திப்பதற்காக தனது காரையும் எடுத்துக் கொண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றாள். குறித்த நேரத்தில் அவரை சந்தித்து பல்வேறுபட்ட தளங்களில் பல்வேறுபட்ட தகவல்களைப் பல்வேறு பரிமானங்களில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். நேரம் கடந்து போன நிலையில் இருவரும் மதிய உணவை ஒன்றாக ஒரே மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
சாப்பிட்டு முடித்தவர்கள் சிறிது நேர ஓய்வின் பின் ஆன் செக்ஸ்டனின் கவிதைகளில் ஒன்றை வாசித்து அது பற்றி விவாதிக்கத் தொடங்கினர். அந்த உரையாடல் அவளுக்குள் ஒரு வித நெருடலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். திடீரென அவளுடைய மனச்சோர்வு அதிகமாகிப் போவதாக உணர்ந்தாள். நெருடல்கள் நிறைந்த மனநிலையோடு தான் வழமையாக சந்திக்கும் வைத்தியரிடம் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினாள் ஆன்செக்ஸ்டன். அப்போதும் மனச்சோர்வு குறைந்தபாடில்லை.
தனக்கு ஏற்பட்டுள்ள உடற்சிதைவும், தனது கவிதைகளில் ஏற்படும் சிக்கலும், குழப்பமுமே இத்தனைக்கும் காரணம் என்பதை அவள் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தாள். தனது உடலைக் கவனித்துக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்தினாள். ஆன போதிலும் மனச்சோர்வு குறைந்தபாடில்லை.

துயரங்களோடு உறவுகளைப் பேணி நடந்தவள் ஒரு கட்டத்தில் அவளுடைய தாயையும், தந்தையையும் ஒரு கணம் மனக் கண்ணில் மீட்டினாள். அந்த நினைவகள் கண்களில் எதையோ உற்பத்தி செய்து கொண்டிருந்தது. கண்களின் ஓரம் சின்னதாய் ஈரம் கசிந்தது. அவளுடைய தாயை நினைத்து அதிகமாய் வருந்தத் தொடங்கினாள். கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணீரை மீளவும் துடைத்துக் கொண்டிருந்தபடி தனது அலுமாரியைத் திறந்து தனது தாயின் நினைவாக தான் அப்போது எடுத்துக் வந்திருந்த தாயின் சட்டையை எடுத்து முக்தோடு அப்பிக் கொண்டு முகர்ந்தாள். பின் அதை அணிந்த கொண்டு மெல்ல தனது கட்டிலில் முடங்குகிறாள். தனது தாயின் சட்டை அவளுடைய தாயுடனான நெருக்கத்தை அவளுக்கு ஏற்படுத்துவதாகவே உணர்ந்தாள்.

அப்படியே சிறிது நேரம் தூங்கி எழுந்தவள் மெல்ல தனது வீட்டின் கார் நிறுத்தியிருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள். தனது காரினுள் இருக்கும் வானொலிப் பெட்டியை மெல்ல ஒலி பரப்பினாள். காரின் நான்கு கண்ணாடிகளையும் மூடி விட்டு காரை இயங்கச் செய்தாள். ஏனோ கார் கதவைத் திறந்து வெளியே வந்தவள் கார் கதவை சாத்தி விட்டாள். காரும் வானொலிப் பெட்டியும் தத்தம் பணியைத் தொடர்ந்தேர்ச்சையாக செய்து கொண்டிருந்தது.

வெளியே வந்தவள், காரிலிருந்து வெளிவரும் காபன் மொனோக்ஸைட்டு வாயுவை சுவாசிக்கத் தொடங்கினாள். அவளுடைய உடலினுள் புகுத்தப்பட்டிருந்த உயிரை அந்தக் காபன் மொனோக்ஸைட்டு வாயு பறித்து அவளை இன்னொரு உலகுக்கு அனுப்பி விட்டது. வாழ்வியலின் போராட்டங்கள் அத்தனையையும் துணிவோடு எதிர் கொண்டவள் இப்போது தனது உயிரை மாய்த்துக் கொண்டாள். தொடர்ந்தேர்ச்சையான மன அழுத்தமும், உடல் ரீதியாக ஏற்பட்ட சிதைவுகளுமே இவரது மரணத்துக்குக் காரணம் என பத்திரிகைகள் பறை சாட்டிக் கொண்டிருந்தன.
தனக்கும் கவிஞர் சில்வியா சில்வியா ப்ளாத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தது. எனினும் சில்வியா ப்ளாத் தனியே கேஸ் சிலின்டரின் வாயுவை சுவாசித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதையே ஆன்செக்ஸ்டன், என்னை மட்டும் தனிமையில் விட்டு விட்டு நீ மட்டும் சாவின் வழியில் பயணித்து விட்டாய். சில்வியா நீயொரு திருடி எனத் தன் கவிதையில் குறிப்பெழுதியிருந்தார்.

இப்போது அவளுடைய இரு குழந்தைகளும் அழுது கொண்டிருந்தார்கள். அவள் அவளுக்கு நேர்ந்த தான் அனுபவித்த மனச்சோர்வை பிள்ளைகளுக்குப் பரிசளித்து விட்டுச் சென்று விட்டாள் போலிருக்கிறது. அவர்களும் தற்போது அந்த மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்