/* up Facebook

Mar 17, 2015

இலங்கைச் சிறுமியின் மர்ம மரணம்! சரண்யாவுக்கு நடந்ததென்ன?


அண்மையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி, பின்னர் மர்மமான முறையில் இறந்துபோன 16 வயது பாடசாலை மாணவி சரண்யா தொடர்பில் காவல்துறை அடாவடித்தனமாகச் செயற்பட்டு வருவதையிட்டு  இலங்கையின் மாற்றுச் சிங்கள/ஆங்கில ஊடகங்கள் விசனம் தெரிவித்துள்ளன.

போரின் குழந்தை
சரண்யா செல்வராசா (வயது 16) மன்னாக்குளத்தில் தன் பாட்டியுடனும் இளைய சகோதரர்களுடனும் வசித்து வந்தார். முப்பதாண்டு காலம் தொடர்ந்த இலங்கையின் இனவன்முறைப் போரின் குழந்தைகளில் அவரும் ஒருவர். அவர் 7 வயதாக இருக்கும் போது போரினால் தன் தந்தையை இழந்தார். அதையடுத்து ஒரு விபத்தில் தன் தாயையும் இழந்து அனாதையானார். 

2009 ஆம் ஆண்டில்  இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கொடூரத்தின்பின் உயிர் தப்பி வந்த சரண்யா, வவுனியாவில் உள்ள அனாதை இல்லத்தில் வளர்ந்து வந்தார்.  போரின் பின்னர் நாட்டு நிலைமைகள் ஓரளவு சீரடையத் தொடங்கியபின் தன் பாட்டியின் பராமரிப்பில் தன் இளைய சகோதரர்களுடன் மன்னாக்குளத்தில் வசிக்கத் தொடங்கினார்.  தம் வீட்டுக்கு அண்மையில் இருந்த பாடசாலையில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.

திருவிழாவுக்குச் சென்ற சரண்யாவுக்கு நடந்ததென்ன?

இந்நிலையில், மூன்று வாரங்களுக்கு முன்பு  தம் உறவினர்கள் சிலருடன் மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் கோவில் திருவிழாவுக்குச் சென்றிருந்தார், சரண்யா. அங்கிருந்து திரும்பியவர், தமது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளார். பாட்டி வீட்டில் இல்லாத போது வந்து தனது பாடசாலை உடை மற்றும் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார். 

சிலதினங்கள் பாடசாலைக்குச் சமூகமளிக்காதிருந்த அவர், அதன் பின் வழமைபோல் பாடசாலைக்குச் சென்று அங்கு இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியிலும் பங்குகொண்டுள்ளார். அன்றிரவு அவர் சுகவீனமுற்று மயங்கி விழுந்துள்ளார். அதனையடுத்து அவர் மான்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அலைக்கழிக்கப்பட்ட பாட்டி
விடயத்தைக் கேள்வியுற்று மான்குளம் வைத்தியசாலையை அடைந்த சரண்யாவின் பாட்டியிடம், 'சரண்யா மனநிலைப் பிறழ்வுக்கு உள்ளாகி இருப்பதால் மல்லாவி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டது. அங்கே சென்று விசாரித்தபோது, கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கு நோயாளி கொண்டுசெல்லப் பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. அவர் சற்றும் மனம் தளராமல் கிளிநொச்சி வைத்தியசாலைக்குப் போய் விசாரித்தபோது, 'சரண்யா என்ற பெயரில் எந்த நோயாளியும் அனுமதிக்கப் படவில்லை' என்ற பதிலே கிடைத்துள்ளது. 

பல்வேறு அலைக்கழிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்ட அந்த வயோதிகப் பெண்மணி மீண்டும் மான்குளம் வைத்தியசாலையில் வந்து விசாரித்தபோது, கிளிநொச்சி வைத்தியசாலையின் 10 ஆம் இலக்க விடுதியில் வைத்து சரண்யாவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.  மீண்டும் அங்கே சென்று பார்த்தபோது, சரண்யா இருந்ததாகச் சொல்லப்பட்ட கட்டில் வெறுமையாகக் கிடந்தது. பக்கத்துக் கட்டிலில் இருந்த நோயாளி, சற்றுமுன்தான் சரண்யாவின் இறந்த உடல் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறியுள்ளார். இவ்வாறாக 03/03/2015 செவ்வாய்க்கிழமை மர்மமான முறையில் சரண்யா மரணமடைந்துள்ளார்.

காவல்துறையின் மிரட்டல்

சரண்யா  ஆகக் குறைந்த பட்சம் மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி இருப்பதை அவரின் பிறப்புறுப்பில் காணப்பட்ட மிக மோசமான காயங்களின் மூலம் தெரிய வந்திருப்பதாக  கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர் கான்ஸ்டபிள் ஒருவரின் முன்னிலையில் வைத்துத் தன்னிடம் கூறியதாக சரண்யாவின் பாட்டி  உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார். 


சரண்யாவின் இயற்பியல் நோட்டு
அதை அடுத்து அவர் காவல்துறையினரால் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றார். அவரது வீட்டை அடைந்த காவல்துறையினர், 'சரண்யா மனநலப் பிறழ்வினால் இறந்ததாகத்தான் வெளியே சொல்லவேண்டும், தவறினால் சிறையில் அடைக்கப்படுவார்' என்று மிரட்டப்பட்டுள்ளார்.  மேலும், கிளிநொச்சியில் வைத்தியர் 'பாலியல் வன்புணர்வு குறித்து எதுவுமே சொல்லவில்லை' என்று குறித்த கான்ஸ்டபிள் மறுப்புத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது. அத்துடன், சிறுமி சரண்யா சித்தப்பிரமையால் இறந்துபோனதாகவே வைத்தியசாலையில் மரண பரிசோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி மரணமடைந்த 16 வயதான தமிழ்ச் சிறுமி சரண்யாவின் மர்மமான மரணம் தொடர்பான உண்மைகளைக் குழிதோண்டிப் புதைப்பதில் காவல்துறை பெரும் முனைப்புக் காட்டி வருகின்றது. எனினும் ஊடகங்களின் வழியே இச்செய்து வெளியில் கசிந்ததை அடுத்து மக்களிடையே  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினரின் தலையீடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரனின் தலையீட்டை அடுத்து கனகராயன்குளம் காவல்துறை, சிறுமி வல்லுறவுக்கு உள்ளாகியிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளதோடு, மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு  வைத்திய அறிக்கை கிடைக்கும்வரை காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இச்செய்தி குறித்து ஏற்கெனவே Colombo Mirror  ஆங்கில இணையதளம் மற்றும் jdslanka.org எனும் சிங்கள இணையதளம் ஆகியன செய்தி வெளியிட்டிருந்ததோடு, காவல்துறையின் அடாவடித்தனங்களை வன்மையாகக் கண்டித்திருந்தன.

சரண்யாவின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது. தமது பேத்தியின் அநியாயச் சாவுக்கு எதிராக நீதிகோரும் அந்த வயோதிபப் பெண்மணியின் போராட்டம் வெற்றிபெறுமா, இலங்கையில் தொடரும் தமிழ் மக்களுக்கு எதிரான இத்தகைய கொடுமைகளின் பட்டியலில் மற்றுமோர் எண்ணிக்கையாக மட்டும் சேர்ந்துவிடுமா என்பதையிட்டு மனித உரிமைகள் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நன்றி - inneram.com

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்