/* up Facebook

Mar 4, 2015

இன்றேனும் சரிநிகர் சமானமா மகளிர்?


சரிநிகர் சமானம் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், நாட்டின் நிலை என்ன? அன்னையர் குலம் என்று அருமையான சொல்லாடலால் அர்ச்சிக்கப்படுகின்ற பெண்களின் நிலை என்ன? ஆணுக்கு நிகராக பெண்கள் இல்லை என்ற கசப்பினைத் தள்ளி வைத்துவிட்டு, குறைந்த அளவு பெண் ஒரு மனுஷியாக மதிக்கப்படுகிறாரா?

பெண்கள் மத்தியிலேகூட பெண்ணென்றால் ஒருபடி தாழ்வு என்கிற மனோபாவத்தை விதைத்த மதத்தின் மடியைப் பிடித்து எப்பொழுதாவது கேள்வி எழுப்பி இருக்கிறோமா?

 மதத்தில் சொல்லப்பட்டவை எல்லாம் மகேசனால் சொல்லப்பட்டவை! அதில் மதியைச் செலுத்தி சிந்தனையால் அலசக்கூடாது என்கிற மண்ணாங்கட்டி மனோபாவம் மக்கள் மத்தியில் நடமாடும் வரை உள்ளக்கிளர்ச்சி வெடித்துக் கிளம்புவது எப்பொழுது?

பாவயோனியில் பிறந்தவள் பெண் என்கிற கீதையும், துரோகச் சிந்தனை உடையவர்கள் பெண்கள் எனும் மனுதர்மமும் நமது மூளையின் ஒரு பகுதியில் புகுந்து குடித்தனம் நடத்தும்வரைக்கும் வீரமும் விவேகமும் எங்கிருந்து வெடித்துக் கிளம்பும்? கிளர்ச்சி வெடிக்காதவரை கிழட்டுத்தனம்-தான் மீதி மிச்சமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் நாளைக் கடைப்பிடிப்பது வெறும் சடங்காகிவிடக் கூடாது. சரித்திரத்தை மாற்றி எழுதும் சாரம் அதில் வெடித்துக் கிளம்ப வேண்டும்.

முதலில் நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதுதான் முக்கியமானது. இதோ ஒரு வரைபடம். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்துத்துவ கொடூரம்

கர்நாடக மாநிலத்தில் ஒரு கல்லூரியில் தோழிகளுடன் புகைப்படம் எடுத்த முஸ்லிம் இளைஞரின் மர்ம உறுப்பினைச் சேதப்படுத்தி, அவரைக் காட்டில் வீசிச் சென்றுள்ளனர்.

கர்நாடக மாநில சூரத்கல் (மங்களூர் மாவட்டம்) நகரில் உள்ள ஒரு கல்லூரியில் முகமது யூசுப் என்ற மாணவன் கல்லூரியின் ஆண்டு இறுதி நாளின்போது தனது தோழர் தோழிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் அவரது நண்பர்களுள் ஒருவர் பதிந்துள்ளார்.

இந்தப் படம் வெளியான மறுநாள் அவரின் கைப்பேசியில் சிலர் தொடர்புகொண்டு தனியாகச் சந்திக்கும்படி அழைத்துள்ளனர். அவர் மறுத்துவிட்டு வீட்டுக்கு வெளியே நின்று நண்பர்களுடன் பேசியுள்ளார். அப்பொழுது காரில் வந்த சிலர் முகவரி கேட்பதுபோல் அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். திடீரென அவரைக் காரில் இழுத்துப் போட்டுக்கொண்டு அங்கிருந்து வேகமாகச் சென்றுள்ளனர். சூரத்கல் நகரைவிட்டு 6 கிலோ மீட்டர் தொலைவில் காரை நிறுத்தி, அவரிடம் அந்தப் படம் பற்றி விசாரித்துள்ளனர். அவரும் நாங்கள் அனைவரும் நண்பர்கள், கல்லூரி இறுதி நாளான நேற்று இந்தப் படத்தை எடுத்தோம் என்று கூறியுள்ளார். அதற்கு அவர்கள் நீ ஒரு முஸ்லிம். எங்கள் பெண்களுடன் எப்படிப் படம் எடுக்கலாம் என்று கேட்டுத் தாக்கியுள்ளனர். சாலையை விட்டு சிறிது தூரம் தூக்கிச் சென்று ஆடைகளை அவிழ்த்து மர்ம உறுப்பில் தாக்கிவிட்டு ஆடைகளை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

மயங்கிக் கிடந்த முகமது யூசுப்பை அந்த வழியாகச் சென்ற சிலர் பார்த்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காவல் துறையின் விசாரணையின்போது, எனது வகுப்பில் நான் மட்டும்தான் முஸ்லிம், மற்ற அனைவரும் இந்துக்கள். எல்லோரும் நண்பர்கள் போலத்தான் பழகினோம். கல்லூரி இறுதி நாள் என்பதால் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அடுத்த நாள் காலை ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்தப் படம் தொடர்பாக பேச அழைத்தார். நான் மறுத்துவிட்டு வீட்டின் வெளியே பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது சிலர் என்னைக் காரில் தூக்கிக்கொண்டு வந்து புகைப்படம் பற்றி விசாரித்து அடித்துத் துன்புறுத்தினர். பிறகு எனது ஆடைகளை அவிழ்த்து காட்டில் தூக்கி வீசிச் சென்றனர் என்று முகமது யூசுப் கூறியுள்ளார்.

அவரது வாக்குமூலத்தை அடுத்து, ராம் சேனா அமைப்பைச் சேர்ந்த சிலரை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். (மதம் யானைக்குப் பிடித்தாலும், மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்து ஆபத்தே!  அறிவையும் ஆரோக்கியச் சிந்தனையையும் அரித்துத் தின்னும் மகா புழுவே மதம்!)

ஜீன்ஸ் அணிந்ததால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்

பிகார் மாநிலம் தர்பங்கா நகர் ஆணையர் இல்லத்தின் முன்பு அதிகாலை பெண் ஒருவர் ஆடையின்றி கை கால்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். சாலையில் சென்றவர்கள் இதைக் கண்டு காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் வந்து அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்தப் பெண்ணின் கையில் ஒரு கடிதம் கட்டப்பட்டு இருந்துள்ளது. அந்தக் கடிதத்தில் இனி இந்த நாட்டுப் பெண்கள் கலாச்சாரத்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்துப் பெண்கள் அணியும் ஆடைகளை மட்டும் அணிய வேண்டும். ஜீன்ஸ், டீசர்ட் இதர மேல்நாட்டினர் அணியும் ஆடைகளை அணிந்தால் இந்தப் பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைதான் அனைவருக்கும் ஏற்படும். பெண்களை எச்சரிப்பதற்காகவே இந்தப் பெண்ணை உயிரோடு விட்டிருக்கிறோம். இன்றிலிருந்து எந்தப் பெண்ணும் இந்துப் பெண்கள் அணியும் ஆடைகளை அணியாமல் வேறு நாட்டுப் பாணியில் ஆடை அணிந்தால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.

அந்தப் பெண்ணைப் பற்றி தகவல் சேகரித்த காவல் துறையினர், தர்பங்காவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் இந்தப் பெண் பணிபுரிகிறார். கடந்த வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊரான ஜார்கண்ட் சென்றுவிட்டு திங்கள்கிழமை மீண்டும் வேலைக்குத் திரும்புவதாக இருந்தது. ஆனால், திங்கள்கிழமை அவர் வேலைக்கு வரவில்லை. ஞாயிறன்று பேருந்தில் வந்த இவரை சிலர் கடத்திச் சென்று தாக்கி இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

மேலும், அவர் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்திற்கும் அவரது வீட்டிற்கும் தகவல் கொடுத்துவிட்டதாகவும், மயக்கம் தெளிந்த பிறகு முழு விவரம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.

2-.12.2014 அன்று உத்தரப்பிரதேசத்தில் கூடிய இந்து மகாசபா தன்னுடைய தீர்மானத்தில் இந்த நாட்டில் உள்ள பெண்கள் ஜீன்ஸ், டீசர்ட் மற்றும் மேலைநாட்டு ஆடைகளை அணியக் கூடாது; அப்படி அணிந்தால் அவர்களுக்கு ஏற்படும் நிலைக்கு அவர்களே பொறுப்-பாவார்கள் என்று தீர்மானம் இயற்றியிருந்தனர்.

சம்பவம் நடந்த இரண்டு மாநிலங்களிலுமே ராம்சேனா மற்றும் இந்து மகாசபா அமைப்புகள் இந்துப் பெண்களோடு முஸ்லிம்கள் பேசக் கூடாது, நாகரிக ஆடைகளுக்குத் தடை என்று கூறி பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்வியும், கைநிறைய சம்பாதிப்பும் ஒரு பக்கம் ஓரளவு ஓங்கி வளர்ந்தாலும், மதவாதப் பிற்போக்கு ஆக்டோபஸ் தன் கோரக் கரங்களால் அவற்றைத் துவம்சம் செய்வதை யாரே மறுக்க முடியும்? ஓர் ஆண் எப்படி உடுக்க வேண்டும் என்று ஒரு பெண் சொன்னால் இந்த உலகம் எப்படியெல்லாம் எரி நாக்கால் வார்த்தை அமிலங்களை உமிழ்ந்திருக்கும்! ஆனால், பெண்ணொருவர் எத்தகைய உடையை அணிய வேண்டும் என்று கூறும், அதிகாரம் செலுத்தும் உரிமையை ஆணுக்கு யாரும் வழங்கிடவில்லை. அவனே அதனை எடுத்துக் கொண்டான். காரணம், இந்தச் சமுதாயமே அவனுடையதாகத்தானே இருக்கிறது.

பெண் தலைமை மட்டும் போதுமா?

தெற்காசியப் பிராந்தியத்தில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் பெண் அரசியல் தலைமையை முதலில் ஏற்றன. ஆனால் இந்த நாடுகளில்தான் பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. (அதிகாரத்தில் அமர்ந்தால் மட்டும் போதாது; அக்கறையோடு செயல்படுவதுதான் முக்கியம்)

இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஆண், பெண் பாகுபாடு, பெண்ணடிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிகவும் அதிகரித்துள்ளன. 2014ஆம் ஆண்டு உலகப் பெண்களுக்கான சேவை அமைப்புகளின் சிறப்பு மாநாடு பிரேசிலில் சாவுபோலா என்ற நகரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட புள்ளி விவரக் குறியீடுகளின்படி இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிகவும் அதிக அளவில் நடக்கிறது. சமூகக் கட்டுப்பாடுகள் பெண்களை ஆண்களுக்கு எதிரான புகார் கூறவோ அல்லது நீதி கேட்கவோ விடுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

உலக அளவில் ஆண்_பெண் சமத்துவத்தில் இந்தியாவுக்குரிய இடம் 120. வங்காளதேசம் 112ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 115ஆம் இடத்திலும் உள்ளன. ஜி20 அமைப்பைச் சேர்ந்த 20 நாடுகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு என்ன கூறுகிறது?
பெண்கள் வாழ்வதற்கு மிகவும் மோசமான நாடு இந்தியா என்பதுதான் அந்த ஆய்வு.

வன்கொடுமைப் பட்டியல்

2011ஆம் ஆண்டில் இந்தியத் துணைக் கண்டத்தின் நிலை என்ன? இதோ ஒரு வன்கொடுமைப் பட்டியல்:

1. வீட்டில் கணவன் மற்றும் அவர்களின் உறவினர்களால் -_ 118,866
2. உடல்ரீதியான தொல்லைகள் _ 70,739
3. ஆட்கடத்தல் _ 51,881
4. வன்புணர்ச்சி _ 33,707
5. வேறு தீங்குகள் _ 34,353

வன்முறைக் குற்றங்கள்

2003    50,703
2005    60,000
2007    70,000
2009    77,000
2011    82,000
2013    119,000

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் ஒழிக்கப்பட்ட சிசுக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம். அதில் பெண் சிசுக்கள் மட்டும் 80 லட்சம். பாரதத்தாய் என்பார்கள், புண்ணிய பூமி என்பார்கள், நதிகளையெல்லாம் அன்னைக்கு ஒப்பிடுவார்கள். ஆனால், அந்த அன்னையர் குலத்தை இந்தப் புண்ணிய பூமிப் புத்திரர்கள் எப்படியெல்லாம் நடத்துகிறார்கள் என்பதற்கு இவை போதாதா? இன்னும் தேவையா?

இந்தியப் பெண்களின் சமூக நிலை (வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம்)

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் 61 பெண்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்-பட்டுள்ளனர். 543 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் 15 தேர்தல்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்கள் தேர்வாகி உள்ளனர்.

சுதந்திரத்திற்குப் பின் நடைபெற்ற முதல் தேர்தலில் (1952) 5 விழுக்காடு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 2009 தேர்தலில் 59 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2014இல் அதிக அளவாக 11.3 விழுக்காடு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1996ஆம் ஆண்டு முதல் இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட முன்வரைவு நிலுவை ஊறுகாய் ஜாடியில் அமுங்கிக் கிடக்கிறது; அது வேறு ஒன்றும் இல்லை; நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதுதான் அது. (மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு மக்களவையில் வெளியே நிறுத்தப்பட்டுவிட்டது.)

19 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இதில் உள் ஒதுக்கீடு தேவை என்ற உரத்த குரலை இந்தியத் துணைக் கண்டத்தில் கொடுத்தது தமிழ்நாட்டில்தான். ஆம், திராவிடர் கழகமே ஒலித்தது. வடக்கில்கூட லாலுபிரசாத் போன்றவர்கள் அதனை வலியுறுத்தினார்கள். இடதுசாரிப் பெண்மணியான பிருந்தாகாரத் கூட (சி.பி.எம்.) என்ன சொன்னார்? (பெண்கள் சுதந்திரத்தில் இந்தியாவில் தமிழ்நாட்டுக்கே முதலிடம், கடைசி இடம் மேற்கு வங்காளம் -_ காரணம் புரிகிறதா?)

நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், இதற்குச் சட்டத்தில் இடம் இல்லை (ஃப்ரண்ட் லைன் 6.6.2008) என்று தட்டிக் கழித்தார். பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பதுகூட சட்டத்தில் இடம் இல்லாததுதானே? அதற்காகச் சட்டம் கொண்டுவரும் பொழுது உள் ஒதுக்கீட்டுடன் கூடியது என்ற சொற்களையும் இணைத்து விடுவதில் என்ன தயக்கம் என்பதுதான் நமது கேள்வி. இதன் அவசியத்தை அண்ணல் அம்பேத்கர் வாயால் கேட்கலாமே. தேசிய சர்க்கார் என்றால், பார்ப்பன சர்க்கார்தானே! 1937இல் தேசியம் வெற்றிபெற்ற ஏழு மாகாணங்களும் பார்ப்பன முதல் மந்திரிகள் ஆதிக்கத்தில்தானே இருந்து வந்திருக்கிறது. நாளைக்கு எல்லா மக்களுக்கும் ஓட்டுக் கொடுத்து, அதன்மூலம் ஒரு சர்க்காரை ஏற்படுத்தினாலும், அதிலும் பார்ப்பனர்கள்தானே ஆட்சி செலுத்துவார்கள்? இது மாத்திரமா? பெண்களுக்கு ஸ்தானம் வழங்கினாலும் பாப்பாத்திகளே மெஜாரிட்டியாய் வருவார்களே (குடிஅரசு 30.9.1944) என்னே அம்பேத்கர் அண்ணலின் தொலைநோக்கு!

543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற அவையில் 33 விழுக்காடு என்கிறபொழுது பெண்களின் எண்ணிக்கை 181 என்பது, அடேயப்பா எத்தகைய கம்பீரமான தோற்றம்? இன்றைக்கு அதில் தோற்றோம் என்ற நிலை ஏன்? கட்சிகளைக் தாண்டி ஆண் ஆதிக்க ஆக்டோபஸ் அகங்காரமாகச் சிரிக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா?
தந்தை பெரியார் தொலைநோக்கோடு 1928ஆம் ஆண்டிலேயே அடித்துச் சொன்னார்.
ஆண்கள் பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன், என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள், பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வ-தெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சிகளே ஒழிய வேறல்ல; எங்காவது நரிகளால் கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா? (குடிஅரசு 12.8.1928)
பெண்கள் மனதிற்குள் அல்ல _ உரத்த குரலில் ஒரு முறைக்கு நான்கு முறை முழக்கமாகப் படிக்க வேண்டும் இந்தக் கருத்தினை!

மத்திய அரசுத் துறைகளில் பெண்கள்

2001 2011
மொத்த          விழுக்காடு மொத்த        விழுக்காடு
எண்ணிக்கை                                     எண்ணிக்கை 


1. தகவல்
தொழில்நுட்பத்துறை 75,451             12.02                   79,740             12.21

2.    ரெயில்வே 61,788              3.73                    70,030             4.63

3.    ராணுவம்/மற்றும்
காவல்துறை 36,412              6.92                     53,132           9.01

4.    இதர துறைகள் 11,059               11.98                  93,187          8.06

அரசு மற்றும் தனியார் துறைகளில் பெண் ஊழியர்கள் அதிக அளவில் உள்ள மாநிலங்களில் முதலிடம் மேற்கு வங்கம், இரண்டாமிடம் கர்நாடகா, மூன்றாமிடம் தமிழ்நாடு, நான்காமிடம் கேரளா.

பெண் ஊழியர்கள் கடந்த 60 ஆண்டுகளில் ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், ஒரிசா, பிகார் போன்ற மாநிலங்களில் வெறும் 8 விழுக்காடு மாத்திரமே அரசுத் துறையில் பணியாற்றுகின்றனர்.

இந்த மாநிலங்களில் 2000த்திற்குப் பிறகுதான் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

இந்திய அளவில் அரசுப் பணியைத் தவிர, தனியார் தொழிற்கூடம் மற்றும் விவசாய தொழில்புரிபவர்களில் ஆண்கள் 63 விழுக்காடு பெண்கள் 27 விழுக்காடு மட்டுமே.

இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களில்   நீதிபதிகள் எண்ணிக்கை 622; இதில் பெண் நீதிபதிகள் 51 மட்டுமே.

இந்தியாவில் பள்ளியில் சேரும் பெண் குழந்தைகளில் 70.2 விழுக்காடு பேர் 10ஆம் வகுப்புக்கு முன்பே தங்கள் படிப்பை இடையில் கைவிடும் நிலை!

மேலும் பள்ளியில் பயிலும் 10 பெண் பிள்ளைகளில் 9 பெண் குழந்தைகள் தங்கள் பள்ளிப் படிப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை.

இடைநிறுத்தத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுவது _ கல்விக்கூடங்களில் போதிய கழிவறைகள் இல்லை, குழந்தைகள் திருமணம், பாலினப் பாகுபாடுகள்.
(ஆதாரம்: காப்புரிமை 2014, மலர் பப்ளிகேசன்ஸ் லிமிடெட்)

செவ்வாய் கிரகத்தில் குடியேற விண்ணப்பங்கள் வரவேற்கப்படக் கூடிய ஒரு காலகட்டத்தில்தான் _ இந்தியாவில் நாம் குமுறிக் குமுறி அழுதுகொண்டு இருக்கிறோம்.

அங்கு சென்றால் திரும்பி வரமுடியாது என்ற நிபந்தனையின் பேரில் அங்குக் குடியேறவும், செவ்வாய்க்கிரகத்தில் குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும் பெண்மணிகள் ஒரு பக்கத்தில் முந்திக் கொண்டு வருகிறார்கள். இங்கே பாரதக் கதைகளைப் பேசிக் கொண்டுள்ளோம். பழம்பெரும் பொத்தல் கலயத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருக்கிறோம்.

பெண்களே வீட்டு வேலைக்குச் செல்லுங்கள் _ என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா அன்று சொன்னார் என்றால், இன்று மத்தியில் ஆளும் ஆளும்கட்சியின் சூத்திரதாரராகிய ஆர்.எஸ்.-எஸின் தலைவர் மோகன் பகவத் என்ன கூறுகிறார்?

திருமணமான கணவன், மனைவி இருவரும் சரிசமமாக கல்வி கற்று வருவதால் அவர்களிடயே ஈகோ தோன்றிவிடுகிறது. இதுதான் விவாகரத்திற்குக் காரணமாகி விடுகிறது. மனைவி கணவனுக்குச் சேவகம் செய்வதையே கடமையாகக் கொள்ள வேண்டும். பெண்கள் இந்தக் கடமையிலிருந்து விலகிவிட்டால் அந்தப் பெண்களை விலக்கி விடுவது நல்லது என்று இந்தூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்தில்தான் ஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் இப்படிப் பேசினார்; இது _ ஆர்.எஸ்.எசை ஆன்மாவாகக் கொண்ட ஆளும் பி.ஜே.பி.யின் தாரக மந்திரமாகும். எழுதப்படாத சட்டம் என்றுகூட வைத்துக் கொள்ளலாம்.

பெண்களைச் சரிசமமாக மதிக்கும் இலட்சணம் இதுதான். இவை எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு பெண்ணைப் பற்றி தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைச் செல்வங்கள்தான்.

1928ஆம் ஆண்டிலேயே அந்த மாபெரும் சிந்தனையாளரின் சீலங்கள் எப்படி இருந்தன?

1. மக்கள் பிறவியிலும், ஆண்_பெண் என்ற தன்மையிலும் உள்ள உயர்வு, தாழ்வு என்கிற  வித்தியாசங்கள் கண்டிப்பாய் ஒழிக்கப்பட வேண்டும்.

2(அ). குடும்பச் சொத்தில் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சம உரிமை அளிக்கப்பட வேண்டும்.

(ஆ). புருசன் மரணமடைந்துவிட்டால் அவன் சொத்து முழுவதையும் பெண்சாதிக்கு சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும்.

(இ) பாகம் பிரியாத குடும்பங்களில் கணவன் இறந்து போனால், அக்கணவனுக்குள்ள சகல உரிமைகளும், சொத்துகளும் அவனது மனைவிக்கு சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும்.

3. எல்லாப் பொதுப் பள்ளிக்கூடங்களிலும் ஆண் பெண் என்கின்ற வித்தியாசம் இல்லாமலும் உயர்வு தாழ்வு என்கிற வித்தியாசம் இல்லாமலும் கட்டாயப் படிப்பு கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவையெல்லாம் 87 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் தலைமையில் 1928இல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்பதை எண்ணினால் ஆச்சரியப்படாமல் இருக்கவே முடியாது.

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது (குடிஅரசு 16.6.1935) என்று சொன்னவரும் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியாரே!
80 ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவுத் தந்தை பெரியார் தம் சிந்தனைச் சீலங்களையும், இந்த 2015இல் ஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் கூறும் கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்து தெளிவு பெறுவதுடன் இந்தியாவைப் பொறுத்தவரையில் பாசிச இந்துத்துவாவின் அழிவில்தான் பெண்ணுரிமைப் புரட்சி மலர முடியும் என்பதை உலக மகளிர் நாளான மார்ச் 8ஆம் நாளில் உணராவிட்டால் உணர்ந்து வீறு கொள்ளாவிட்டால் யாது பயன்?
- கவிஞர்.கலி.பூங்குன்றன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்