/* up Facebook

Mar 26, 2015

தலிபான்கள் பூமியில்... - எம்.கண்ணன்


மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட கொடூரக் கொலைக்கெதிராக ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிளர்ந்தெழுந்திருக்கின் றனர். ஆப்கானிஸ் தானில் பார்குந்தா என்ற இளம் பெண் புனித நூலை எரித்ததாக கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதவெறியர்கள் திரண்டு, அந்த பெண்ணை கடுமையாக அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். பின்னர் காபூல் ஆற்றங்கரையில் தீ வைத்து எரித்து அப்பெண்ணை கொலை செய்திருக்கின்றனர். இந்தக் கொடூரம் நிகழ்ந்த பின்னரும், பார்குந்தாவின் இறுதிச் சடங்கில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என அடிப்படைவாத மதவெறியர்கள் மிரட்டியிருக்கின்றனர்.

இதையெல்லாம் கண்டு மனம்வெதும்பிய ஆயிரக்கணக்கான பெண்கள், தங்கள் உயிரையும் துச்சமென மதித்து, பார்குந்தாவின் சவப்பெட்டியை தாங்களே சுமந்து சென்று இறுதிச் சடங்கை செய்திருக்கின்றனர். இதுமத அடிப்படை வாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மேலும் பார்குந்தா குர்ஆனை எரித்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந் திருக்கிறது. பார்குந்தா ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கிழித்தது பெர்சிய மொழி புத்தகத்தின் சில பக்கங்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் காபூலில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் திரண்டு ஆப்கானில் பெண்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டும், பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தான் சோசலிச நாடாக இருந்தது. அப்போது பெண்களுக்கு முழுச் சுதந்திரம் இருந்தது. பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டது. முகத்தை மூடாமல் பெண்கள் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றனர். பலதுறைகளிலும் சிறந்து விளங்கினர். சோவியத் ஒன்றிய படைகள் 1989ல் ஆப்கானை விட்டு வெளியேறியது.

அதன் பின்னர் முஜாகிதீன் குழுக்கள் ஆட்சியை பிடித்தன. இந்த குழுக்கள் மிகவும் பிற்போக்குத்தனமாக பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதித்தன. அன்று தொடங்கிய பெண்களுக்கு எதிரான அடக்குமுறையும், அடிமைத்தனமும் இன்றும் கொடூரமாக தொடர்கிறது. அதே நேரம் அங்கு இன்னும் நம்பிக்கை ஒளி பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது. தலிபான்கள் பெண்களுக்கு எதிராக இழைத்த கொடுமைகளை ஆவணப்படுத்தி தைரியமாக வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியது இடதுசாரி பெண் போராளி மலாலை ஜோயா தலைமையிலான பெண்கள் புரட்சிகர அமைப்பு.

மலாலை ஜோயா மதப்பழமைவாதத்தை மட்டும் எதிர்க்கவில்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து போராடி வருகிறார். அதனாலேயே இதுவரை 7 முறை அவரை கொலை செய்வதற்கான முயற்சி நடைபெற்றிருக்கிறது. அதிலிருந்து தப்பித்து பெண் அடிமைத்தனம், ஏகாதிபத்தியம், வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றிற்கெதிராக போராடி வருகிறார்.எப்போதும் மரணத்தை சந்திக்கக் கூடும் என்ற நிலையிலும், “எனக்கு மரணத்தைக் கண்டு பயம் இல்லை; அநீதிக்கு எதிராக மவுனம் காக்கப்படுவதை கண்டே நான் அஞ்சுகிறேன். எந்த நேரமும் என்குரலை நசுக்கவும் என்னைக் கொல்லவும் உங்களால் முடியும்.

ஆனால்நான் வாழவே விரும்புகிறேன். ஒரு பூவைப் பிய்த்து எறிய முடிகிற உங்க ளால், வரப் போகும் வசந்த காலத்தைத் தடுத்து நிறுத்த முடியாது’’ என்றுமதப் பழமைவாதிகளின் செவிட்டில் அறைந்தது போல, தனது மன உறுதியை உரக்கச் சொல்லி, களம் கண்டு வருகிறார். அந்த வழியிலேயே இன்றும் ஆப்கானிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மதப் பழமைவாத ஆதிக்கத்திற்கு மத்தியில் சமஉரிமை கேட்டு வீதியில் இறங் கியிருக்கின்றனர். இந்த போராட்டம் வீறு கொண்டு எழும்.

எங்கெல்லாம் மதவெறி ஆதிக்கம் செலுத்துகிறதோ, அங்கெல்லாம் மதத்தின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்தும் கயமைத்தனம் இந்த நவீன யூகத்திலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, இஸ்லாமிய பழமைவாத கருத்துக்களை விமர்சித்து வருகிறார். அவரை பழமைவாதிகள் விரட்டி வருகின்றனர். அதே போல் சல்மான் ருஷ்டியின் கருத்துக்களை ஆதரித்து பேசிய காரணத்திற்காக தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் மதப் பழமைவாதிகளால், பெண் எழுத்தாளர் சைனுப்பிரியா தாலா தாக்கப்பட்டிருக்கிறார். இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்துமதப் பெண்கள் 10 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என மதத்தின் பெயரால் கட்டளையிடுகின்றனர். நாட்டின் பிரதமரோ கண் மற்றும் காதுகளுடன் வாய்மூடி மவுனியாக இருக்கிறார். அவசரச் சட்டத்திலேயே ஆட்சி நடத்தும் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு அவசரச் சட்டம் கொண்டு வர மறுக்கிறார். காரணம், அதன் பின்னணியிலும், மதப்பழமைவாதத்துடன் கூடிய பெண்ணடிமைத்தனம்தான் முன்னிலையில் இருக்கிறது. பெண் சாமிகள் இருக்கும் கோவில்களில் கூட பெண் கள் கருவறைக்குள் செல்லமுடியாது என்ற அவலம் இன்றும் தொடர் கிறது.மத பழமைவாதத்தின் பெயரால் பெண்களை அடிமையாக வைத்திருக்கும் சமூக அவலத்திற்கெதிரான போராட்டம் ஆப்கானிஸ் தான், இந்தியா என்ற எல்லை வித்தியாசமின்றி உலகெங்கிலும் பரவிட வேண்டும். தலிபான்களுக்கு எதிராக மட்டுமல்ல, தாலி குறித்துப் பேசவே கூடாது என்பவர்களுக்கு எதிராகவும் போராட வேண்டிய தேவை தற்போது உள்ளது. இதை பெண்கள் மட்டுமல்ல, சமூகம் முழுமையும் சேர்ந்து நடத்த வேண்டியுள்ளது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்