/* up Facebook

Mar 25, 2015

ஆணாதிக்க அறிவியலே அழிவு அறிவியல் - பார்பாரா மெக்லின்டாக்


பார்பாரா மெக்லின் டாக், மரபியலின் இரண்டு முக்கியத் திருப்பு முனைகளைச் சாதித்தவர். 1927ல் கார்னல் பல்கலைக்கழகத்தில் தனது அயராத உழைப்பில் குரோமோசோம் விட்டு குரோமோசோம் தாவும் மரபணுக்களின் முக்கியப் பண்பைக் கண்டுபிடித்து வெளியிட்டார். ஒருவகை மரபணு மற்றொரு வகை மரபணுவைக் கட்டுப்படுத்தும் எனும் அடுத்த திருப்புமுனைக் கண்டுபிடிப்பை சோள-தாவர மரபணுக்கள் வழியே அடைந்த மெக்லின்டாக்கின் ஆய்வு முடிவுகளை அன்று 1930களின் விஞ்ஞான உலகம் ஏற்கவில்லை. கிரிகர்மெண்டலுக்கு நேர்ந்ததைப் போலவே தனக்கு, ஆண்களே அதீத ஆதிக்கம் செலுத்திய அறிவியல் உலகால் கிடைத்த அவமானங்களைத் தாங்கமுடியாமல் 1951லிருந்து தனது ஆய்வு முடிவுகள் எதையும் வெளியிடாமல் மெக்லிண்டாக் நிறுத்திக் கொண்டார்.

தாவும் மரபணு (Jumping Gene)  மற்றும் கட்டுப்படுத்தும் மரபணு (Controlling Gene)ஆகிய இரண்டுமே சரிதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, மக்காசோளத்தின் மரபணு வரைபடத்தை (The Genetic Map) 1931ல் அடைந்தார். எக்ஸ்-கதிர்களை (எலும்பு முறிவு போன்றவற்றிற்கு) ஒருவருக்கே அதிகம் பயன்படுத்தும்போது அது செல் பெருக்கத்தை மரபணுக்களில் தூண்டி புற்றுநோய் நோக்கி இட்டுச்செல்லும் என்பதையும் கண்டுபிடித்தார் மெக்லின் டாக். கதிர்வீச்சு இரு குரோமோசோம்களை ஒன்றிணைய வைத்து மரபணுக்களில் தூண்டுதலை மேற்கொள்ளும்போதுதான் புற்றுநோய் தோற்றம் கொள்கிறது எனும் அவரது கண்டுபிடிப்பும் குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் அவரது இத்தகைய தன்னிச்சையான கண்டுபிடிப்புகளை மறுத்து ஏராளமான கட்டுரைகளை அணுஆயுத ஆதரவுவாதிகள் வெளியிடுவதை அவர் உணர்ந்தார். ஆயுதங்களின் வழியே விஞ்ஞானிகள் சாதிக்கத் துடிக்கும் கதிர்வீச்சு அபாயம் புற்றுநோயைக் கொடுத்து பேரழிவை ஏற்படுத்தும் எனும் அவரது கருத்து அவரைத் தனிமைப்படுத்தியது. ஆனால் உலகப்போருக்குப் பிறகான உலக மனநிலை அவரது எச்சரிப்புகள் எவ்வளவு நியாயமானவை என்பதை உணரத் தவறவில்லை. பின்நாட்களில் தருவிக்கப்பட்ட நவீன கருவிகள், தாவும் மரபணுவும், கட்டுப்படுத்தும் மரபணுவும் உண்மையே என்பதையும் நிரூபித்தபோது 1983ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பார்பாரா மெக்லின்டாக்கிற்கு வழங்கப்பட்டது.

தனி ஒருவராக அப்பரிசைப் பெற்ற முதல் பெண் விஞ்ஞானி ஆனார் மெக்லின்டாக். உலக அமைதிக்காகவும் உணவு உற்பத்தி, மருத்துவம் என அமைதி மற்றும் சமுதாய வளர்ச்சி சிந்தனை வழியிலேயே அறிவியலின் களம் கண்ட இந்த மாமேதை இறுதிவரை திருமணமும் செய்யாமல் அறிவியலுக்கே தனது வாழ்வை அர்ப்பணித்து தனது தொன்னூறாவது வயதில் 1992ல் காலமானார். ஆக்கப்பூர்வ அறிவியலின் தாய் என போற்றப்படும் மெகலின் ஒரு பெண்ணியப் போராளியாகவும் சித்தரிக்கப்படுகிறார். 1987ல் அவரது ஒட்டுமொத்த  ஆய்வுகள் அடங்கிய நூல் The Discovery and Characterization of Transportable Elements; The collected Papers of barbara McClintock வெளியான பின்னணியில் அளித்த விரிவான நேர்காணல் இது.

கே: நோபல் அங்கீகாரம்! இப்போது ஒட்டுமொத்த ஆய்வு முடிவுகளின் அதிகாரப்பூர்வ வெளியீடு. எப்படி உணர்கிறீர்கள் பார்பாரா?
ப: எனது ஆய்வு முடிவுகள் முப்பதுகளிலேயே (1930கள்) ஏற்கப்பட்டிருந்தால் மரபியலின் பாதை பல மைல்களைக் கடந்து இன்று புற்றுநோயை அறவே அழித்துவிட்டிருக்க முடியும் என்று தோன்றுகிறது. உலக மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ற நமது உணவு உற்பத்தி முறையிலும் இன்று நிறைவு கண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் யுத்தங்களின் ஆயுதப் பெருக்க சிந்தனையிலேயே காலம் தள்ளிவிட்டார்கள்.

கே: விவசாயக் கல்வியை வாழ்வின் குறிக்கோளாகத் தேர்வு செய்தவர் நீங்கள் உங்களுக்கு இசையில் கொள்ளை ஆர்வம் இருந்தது. ஆனால் மரபியல் பக்கம் எப்படி வந்தீர்கள்?
ப: குடும்பத்தில் படித்தவர்கள் என்று யாருமே கிடையாது. படித்தால் மதசம்பிரதாய பியானோ வகுப்புகள் மட்டுமே படித்தார்கள். நான் பதினாறு வயதில் பள்ளி இறுதிப் படிப்பை முடித்து கார்னல் பல்கலைக்கழக விவசாயத் துறையில் இணைய என் விருப்பத்தை வெளியிட்டபோது இரண்டு வகை எதிர்ப்புகளை எதிர்கொண்டேன். ஒன்று என் தாயினுடையது. அறிவியல் படித்தால் கண்டிப்பாக உன்னைத் திருமணம் செய்ய யாரும் முன்வர மாட்டார்கள் என்று அவர் மிகுந்த கவலை கொண்டார். அப்புறம் பல்கலைக்கழகத்தின் அந்த 1919ல் பெண்கள் யாருமே விவசாயக் கல்வியில் அனுமதிக்கப்படவில்லை. அறிவியல் கற்கவும் அதில் சாதிக்கவும் பெண்களை சமூகம் அனுமதிக்காத அந்த காலகட்டத்தில் என் தந்தை பல்கலைக்கழக அதிகார மையத்தோடு கடும்போராட்டம் நடத்தி எனக்கு இடம் கிடைக்கச் செய்தார். அங்கே கூட அதிகம் அறிவியலில் என்னை அனுமதிக்காமல் ஜாஸ் இசையில் எனது ஆர்வத்தைப் பார்த்து அதில் நான் பயணிக்க நிர்பந்தித்தார்கள். இசை எனக்கு இப்போதும் ஒப்பற்ற துணையாக விளங்குவது உண்மைதான் என்றாலும், எனது ஆர்வம் தாவரஇயலை நோக்கிய ஆய்வுப் பயணமாக மாறியது. 1923ல் பலவகை போராட்டங்களுக்கு மத்தியில் நான் அப்பல்கைலக்கழகத்தின் முதல் பெண் இளஅறவியல் பட்டம் வென்று இறுதித் தேர்வு நாளில் அப்போதைய ஆரம்பகால மரபியல் வகுப்பு ஒன்றில் இணைந்தேன். மரபியலாளர் ஹட்சன் எனது ஆர்வத்தையும் வகுப்பில் என் பங்களிப்பையும் குறித்து அறிந்து தன்னோடு இணைந்து ஆய்வுகளில் உதவுமாறு ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தது தான் திருப்புமுனை.

கே.: ஆனால் மரபியலில் உங்களால் முனைவர் பட்ட ஆய்வை முடிக்க முடியவில்லையே. தாவரவியலில் அல்லவா உங்கள் முதுகலை அறிவியல் பட்டமும் முனைவர் ஆய்வும் அமைத்திருந்தது?
ப: 1920களில் உலகஅளவில் கார்னல் பல்கலைக்கழகத்தில் மட்டுமே தாவர-இனப்பெருக்கத்துறை (Plant breeding Department) எனும் மரபியல்துறை இருந்தது. அங்கே மரபியல் – இனப்பெருக்க பாடத்தை முனைவர்பட்ட துறையாக எடுத்துச்செயல்பட பெண்கள் அனுமதிக்கப் படவில்லை.

கே: அங்கே தாவரவியல் விரிவுரையாளராக மரபியல் ஆய்வுக்குழு ஒன்றை நீங்கள் கட்டமைத்தீர்கள் அல்லவா. உயிர்செல்கள் குறித்த கல்வியை (cytology) தாவர வளர்ச்சி இயலோடு இணைந்து மரபணு செல்கல்வியான சைட்டோ ஜெனிடிக்ஸ் (Cyto genetics) துறையை தோற்றுவித்த பின்னணியை விளக்க முடியுமா?
ப:  எங்கள் துறைத்தலைவர் ரோலின்ஸ் ஏ.எமர்சன் எனக்கு அளித்த ஆதரவு ஒரு முக்கிய காரணம். தாவரவியல் இனப்பெருக்க ஆய்வு மாணவர்களை உடல்செல் கல்வியாளர்களோடு இணைந்து செயல்பட வைக்கும் நிர்பந்தம் 1927-ல் ஏற்பட்டது. அப்போது கார்னல் பல்கலைக்கழகம் என்னை ஒரு முழுநேர ஆய்வு மேலாளராக கிட்டத்தட்ட நியமித்தது. ஹரியட் கிரைட்டன், ஜார்ஜ்பீடில், மார்க்வஸ் ரோடஸ் என சிலர் என் முயற்சிகளுக்கு ஆதரவாக என்னிடம் ஆய்வு மாணவர்களாக இணைந்தனர். குறிப்பாக கிரைட்டன் என்னோடு மக்காசோளத்தின் குரோமோசோம் ஆய்வுகளில் முழுமையாக ஈடுபடமுன் வந்தார்.

கே: அங்கே நீங்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தாமஸ்மார்கன் நோபல் பரிசு பெற காரணமானது அல்லவா?
ப: மார்கனின் ஈக்களில் குரோமோசோம்கள் ஒன்றிற்கு ஒன்று தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் என்பதற்கான புள்ளிவிபரங்கள் மற்றும் வெற்று அனுமானங்களை எங்கள் மக்காசோளத்தின் குரோமோசோம் மீதான ஆய்வை வைத்து நாங்கள் அறிவியலாக 1929இல் கண்டடைந்தோம். குரோமோ சோம்கள் உடற்கூறியல் அடிப்படையிலேயே இடமாற்றம் பெறுவதை என்னால் நிரூபிக்க முடிந்தது. 1931ல் எனது ஆய்வுமுடிவுகளைக் கொண்டு அவரது கண்டுபிடிப்பு ஊர்ஜிதமாகி 1933ல் மார்கன் நோபல்பரிசு பெற்றார். மரபணுக்களின் நெகிழ்தன்மை குறித்த அப்போதைய அறிவியலின் பழைய புரிதல்கள் மீதான என் முதல் தாக்குதல் அது. அதே கண்டுபிடிப்பு ஒரு செல் உயிரியிலிருந்து மரபணுக்கள் மேலும் சிக்கலான பிற்கால உயிரிகளைப் பரிணாமவியலின் அடிப்படையில் எப்படி உருவாக்கம் செய்தன என்பதை ஆராயவேண்டியிருந்தது ஒருபுறம். மறுபுறம் ஒரேவகை மரபணு ஒரு இடத்தில் தண்டாகவும் மறுஇடத்தில் நிறம் கொண்ட தழையாகவும் எப்படி உருமாற்றம் கொள்கிறது என்பதையும் ஆராய வேண்டியநிலை. ஆனால், நான் கார்னலில் ஒரு மரபியல் ஆய்வகத்தை கட்டமைக்க முயற்சித்தபோது என்னை ஒரு பெண் என்கிற ஒரே காரணத்திற்காக பல்கலைக்கழகம் தூக்கியெறிந்தது.

கே: கார்னலிலிருந்து எப்போது வெளியேறினீர்கள். மக்காசோளமே உங்களது தொடர்ஆய்வுகளின் ஆய்வுப் பொருளாக இருந்து வந்தது ஏன்? பிரத்யேக காரணம் உண்டா?
ப: 1936ல் கார்னல் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன். கலிபோர்னியாவில் கொஞ்சகாலம் மார்கனோடு இணைந்து பணியாற்ற முயன்றேன். பிறகு மிசோரி… அப்புறம் ஜெர்மனி. ஆனால் எல்லா இடங்களிலுமே அறிவியல் கண்டுபிடிப்புகளை பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக காசாக்கும் – பணம்கொட்டவைக்கும் – முயற்சிகளுக்கே ஆதரவு இருப்பதைப் பார்த்தேன். இப்போதும் நிலைமை மாறிவிடவில்லை. யாருடனும் இணைந்து செயல்பட முடியவில்லை. போகும் இடங்களில் எல்லாம் ஆய்வகப் பணிகளில் நான் ஒருத்தி மட்டுமே பெண். மணிக்கணக்கில் உருப்பெருக்கிகளோடு காலம்தள்ளி நான் அடையும் முடிவுகளை வைத்து தங்களது ஆய்வுக் கட்டுரைகளை அவர்கள் வெளியிட்டுக் கொள்வதே ஒரு வாடிக்கையாக ஆகிக் கொண்டிருந்தது. ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு மரபணுவியல் ஆபத்தான பாதையில் பயணிக்கத் தொடங்கியபோது நான் மான்ஹாட்டன் அருகே கோல்டு ஃபிரிஸ் ஹார்பர் ஆய்வகத்தில் எனது மக்காசோளங்களுடன் தனித்து விடப்பட்டேன். எனக்கென்று ஒரு ஆய்வகமும் தனியே வேலை செய்ய அனுமதியும் கிடைத்ததற்கு ஏதோ பெண் அரசியலுக்கு கிடைத்த வெற்றி என நினைத்துவிட  வேண்டாம். இரண்டாம் உலகயுத்தம் ஏறக்குறைய எல்லா ஆண்களையும் அறிவியலின் யுத்ததளவாட அழிவு அறிவியலுக்குள் இழுத்துக்கொண்டதால் என் மாதிரி ஒருத்தருக்கு தன்னிச்சையாய் செயல்படும் ஒருவெளி (space) கிடைத்தது. மக்காசோள மரபணுக்களின் மீதான என் ஆய்வுகள் முற்றுப்பெறாமல் தொடர்ந்ததால் நான் அதையே பின்தொடர்ந்தேன். உருப்பெருக்கியில் மக்காசோளத்தின் குரோமோ சோம்களை கச்சிதமாக கண்காணிப்பதில் எனக்கு எல்லாரையும் விட அதிக நிபுணத்துவம் இருந்தாக நான் நம்பினேன்.

கே: ஸ்பிரிஸ் ஹார்பர் ஆய்வகத்தில் பத்தாண்டுகள் மக்காசோளத்தோடு கிரிகர்மெண்டல் பட்டாணிகளை வைத்து உழைத்ததுபோல அயராது பாடுபட்டீர்கள் அல்லவா, மற்றவர்களின் ஆய்வுகளுக்கும் உங்களது ஆய்வுகளுக்குமான வித்தியாசம் என்ன?
ப: என்னை கிரிகர் மெண்டலுடன் ஒப்பிடுவதை நான் விரும்பி ஏற்பதே கிடையாது. நான் நவீன உருபெருக்கிகளோடு ஆய்வுகளை மேற்கொண்டவகை ஹேஷ்யமாக உத்தேச கருத்தாக உருவாகிய ஒன்றை துரத்தியபடியே நான் பயணித்தேன். எனக்கு ஸ்பிரிஸ் ஹார்பரில் தொந்தரவு செய்ய மாணவரோ உதவியாளரோ யாருமே கிடையாது. என் சோளங்களை காப்பாற்றி காக்கைகளை விரட்ட ஒரு தாதியம்மாவை மட்டும் நியமித்தேன். மற்றபடி தனித்தே வாழ்வது என் வாழ்வின் தொடக்கத்திலிருந்தே என் உடன் வந்ததுதான்.சோளத்தில் பிறகும் ஆய்வுகள் மேற்கொண்டிருந்தனர். இரண்டாம் உலகப்போர் மூண்டிருந்த காலகட்டத்தின் ஆணாதிக்க அறிவியல் உலக அழிவு அறிவியலாக உருவெடுத்து வருவதை உணராதவர் இல்லை. ஹென்றி வாலஸ் போன்றவர்கள் சோளமாவு வருவதை உணராதவர் இல்லை. ஹென்றி வாலஸ் போன்றவர்கள் சோளமாவு தயாரிப்பதில் உணவுத் தேவையை முன்வைத்து அதீத ரக புதுவகை ரசாயன விதைப்புகளை ஆராய்ந்தனர். ராக்பெல்லர் நிறுவனம் மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்தை தன் லாபங்களுக்காக சூறையாட அப்போதே தனது வேலையைத் தொடங்கிவிட்டிருந்தது. ஏன்.. அமெரிக்க விஞ்ஞானிகள் அணுகுண்டு சோதனைகளின் போது அணுக்கதிர் வீச்சு ஆயுதவிமானங்களில் சோளத்தை வைத்து உணவின் நச்சாக்கத்தை சோதித்து அதற்கு நோபல்பரிசு வரை போகவில்லையா. டார்வின், மெண்டல் என நமது பரிணாமவியல் மரபியல் துறையின் ஆரம்ப ஆசான்கள் கூட சோளத்தில்தான் சிலகாலம் பணிபுரிந்துள்ளனர். இவர்களது ஆய்வுகளிலிருந்து எனது ஆராய்ச்சி முற்றிலும் வேறுபட்டது. குரோமோசோம்களின் நகராததன்மை மார்கனின் முடிவு. நானோ சோள குரோமோசோம்கள் இடம்பெயர்வதை என் உருப்பெருக்கிகளில் துல்லியமாகக் கண்டேன். மரபணுக்கள் ஒரு குரோமோ சோமிலிருந்து மற்றொன்றிற்கு தாவவும் செய்கின்றன. மூளை, குடல் என எல்லா செல்களிலும் ஒரேமாதிரி குரோமோசோம்கள் இருந்தும் அவை முற்றிலும் வேறுவேறுபணிகள் செய்வதை எனது ஆய்வுகள் வழியே ஒரு குறிப்பிட்ட மரபணு தனது பண்புகளில் சிலவற்றை ஒரு மின்சுவிட்ச் போடும்போது  ஒளியேற்றவும் அணைத்துக்கொள்ளவுமான தனிப்பண்பைக் கொண்டுள்ளது என்பதே எனது அசைக்க முடியாத கண்டுபிடிப்பு. பிற மரபணுக்களிடம் என்னால் காணமுடிந்தது.

கே: இந்த முடிவுகள் மரபியலை பரிணாமவியலோடு இணைப்பதாக இன்று நிறுவப்பட்டுள்ளதே, அன்று ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கு முன் இதை நீங்கள் விளக்கிய போது என்ன எதிர்வினை வந்தது?
ப:  கிட்டத்தட்ட பில்லியன் ஆண்டுகளுக்குமுன் சிக்கலான வடிவங்களில் ஒற்றைசெல் உயிரிகளின் தோற்றம் பிறகு  குறிப்பிட்ட பணிகளைச் செய்யும் அல்லது நிறுத்தும் மரபணுக்களின் தோற்றத்தால் சுமார் 550 மில்லியன் வருடங்களுக்கு முன் அடுத்த படி நிலையில் மேலான உயிரி தோற்றவியலை நோக்கி எனது ஆய்வு முடிவுகள் விஞ்ஞான உலகை சிந்திக்கத் தூண்டின. 1951 ஜூன் மாதம் நான் என் முடிவுகளை முப்பதுபக்க ஆய்வுக் கட்டுரையாக வாசித்தளித்து குதித்துத் தாவும் மரபணுக்களை விளக்கிய போது அதை அவர்கள் ஏற்கமறுத்தார்கள். கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் பரவாயில்லை. மரபணுக்களின் நிலைத்தன்மை கோட்பாட்டை உறுதிசெய்து எனக்கு எதிராகப் பெரிய பிரச்சாரத்தை தொடங்கினார்கள். பெண் என்பதால் அடிப்படைகளை விளங்கிக் கொள்வதில் எனக்கு சிக்கல் இருப்பதாக எல்லாம் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியோடு எழுதியபோது எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் ஒன்றிரண்டல்ல. நான் அறிவியலாளர்களிடமிருந்து முற்றிலும் விலகுமாறு நிர்பந்திக்கப்பட்டேன். அடுத்த இரண்டு பத்தாண்டுகள் எனது ஆய்வுகள் தொடர்ந்தாலும் முடிவுகளைப் பிரசுரிக்காமல் நான் தனிமைப்படுத்தப்பட்டேன். சகோதரி மெய்ட்னர், மரபணு வடிவயியலை அடைந்த பிராங்கிளின் என என்போல் புறந்தள்ளப்பட்டவர்கள் பலர்.

கே: புற்றுநோய் தொடர்பான உங்களது சில கருதுகோள்களே பிரச்சனைகளின் அடிப்படை என்கிறார்களே.
ப: அங்கேதான் எனது முக்கியமான கண்டுபிடிப்பு புறந்தள்ளப்பட்டது. கியூரியின் கதிர்வீச்சு ரேடியம் புற்றுநோயை குணப்படுத்தட்டும். ஆனால் ஆண்களின் அறிவியல் என்பது சிக்கல்களை உருவாக்கியபின் அதை தீர்ப்பதில் உள்ளது. நாங்கள் சிக்கல்களே தோன்றாத வகைஅறிவியலை முன்மொழிகிறோம். மரபணுக்களின் மீது கடுந்தாக்குதல் நடத்தி அவற்றில் பெருக்கத்தை தூண்டும் எக்ஸ்கதிர் உட்பட அணுக்கருவியலின் கதிர்வீச்சு நச்சாக்கத்தை நேரடியாக மரபியல் முறைப்படி ஆய்வுக்கு உட்படுத்தி இரு குரோமோ சோம்களை இயற்கைக்கு மாறாக ஒன்றிணைய வைத்து புற்றுநோயின் தோற்றுவாயை அணு உலை கதிர்வீச்சுகளும் அணு ஆயுதப்போரின் ஆணாதிக்க அறிவியல் நிரந்தர அழிவுப்பாதையாக விதைத்ததை உலகம் மிகவும் காலம் தாழ்ந்தே யோசித்துள்ளது. மிசோரி ஆய்வகத்தில் எக்ஸ் கதிர்வீச்சுக்கு சோலி குரோமோசோம்களைத் திறந்துவிட்டபோது முனை அறுந்து குரோமோ டைட்ஸ் என அவைமாறி அறுந்த பகுதிகளை இணைக்க எண்டோஸ்பெர்ம் முறையில் செல் பெருக்கம் உடனடியாகத் தூண்டப்படுவதால் புற்றுநோய் தோன்றுவதை நான் நிறுவினேன். இது ஒரு எதேச்சையான (Random) நிகழ்வல்ல என்பதையும் இரண்டாவதாகப் பெருஎண்ணிக்கையில் (Large Scale) தூண்டல் நடைபெற்று செல்பெருக்கம் முற்றிலும் திரும்ப முடியாத பாதையில் முடுக்கிவிடப்பட்டதையும் அப்போதே நிரூபித்தும் பல காரணங்களுக்காக அணு ஆயுத ஆதரவு அரசியல் தலைமை எனது ஆய்வுகளை நான் தொடராமலும் முடிவுகளை வெளியிடாமலும் முடக்கியது என்பது தான் உண்மை.

கே. தற்போதைய அறிவியலின் தேவை என்ன?
ப: அழிவுப்பாதை அறிவியலை முற்றிலும் நிறுத்திடவேண்டியுள்ளது. புவியின் வாழ்வாதாரத்தை ஊர்ஜிதம் செய்யும் அறிவியல் முறையே நமது தேவை. உணவு உற்பத்தி முதல் நோய்தடுப்பு வரை நாம் கவனத்தை திருப்பவேண்டும். கேளிக்கை தொழில்நுட்பமும், அணு ஆராய்ச்சி உட்பட பெருஞ்செலவு அறிவியலை ஆக்கப்பூர்வ முன்னேற்றத்தை நோக்கி செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு பெண்கள் அறிவியலைக் கையில் எடுக்க வேண்டும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்