/* up Facebook

Mar 14, 2015

இந்தியாவின் மகன்கள் : செ.கார்கி


‘இந்தியாவின் மகள்’ என்ற பிபிசி ஆவணப்படம் வெளியாகி இந்திய ஆணாதிக்க சமூகத்தின் மனச்சாட்சியை பேயாகப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கின்றது. இஸ்ரேலைச் சேர்ந்த உத்வீன் என்பவர் தயாரித்து இயக்கிய இப்படம், பிபிசி-யில் பெண்கள் தினத்தன்றே வெளியிடுவதாக இருந்தது. எங்கே வெளியானால் உலகம் போற்றும் இந்துப் பண்பாடு பல்லிளித்து விடுமோ என மிரண்டு போன காவிக்கும்பல் நீதிமன்றத்தில் தடையாணை வாங்கிவிட்டது. வாங்கி என்ன பயன், காவிக்கும்பலின் கதறலைக் கண்டு கொள்ளாத பிபிசி ஆவணப்படத்தை வெளியிட்டு விட்டது.

mukesh singh - nirbaya caseஇதன் மூலம் இந்தியா பெண்களை தெய்வமாகப் போற்றும் நாடு என்று உலகின் ஏதாவது ஒரு மூலையில் எவனாவது ஒரு இளிச்சவாயன் நம்பிக்கொண்டிருந்தால் அவன் அங்கிருந்தே துப்பப்போகும் எச்சிலில் ஒட்டுமொத்த இந்திய ஆணாதிக்கவாதிகளின் முகமும் நாறி நாற்றமெடுக்கப் போகின்றது.

முகேஷ் சிங்கின் பேட்டி வெளிவந்த பிறகு தாம் பெரிதும் காயம்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார். அய்யா பெரிய மனுசன் ஏன் காயம்பட்டார் என்று நமக்குத் தெரியவில்லை. உங்களது உள்ளக்கிடக்கையைத்தானே அவன் வெளிப்படுத்தி இருக்கிறான். முகேஷ் சிங் எதனையும் புதிதாகச் சொல்லவில்லை. உங்களது முன்னோர்களும், அடிப்பொடிகளும் ஆதரவாளர்களும் ஏற்கெனவே சொன்னதுதான்.

முதலில் இந்திய ஆணாதிக்க சமூகத்தின் ஒட்டு மொத்த மனசாட்சியாய் பேசிய காமக்கொடூரன் முகேஷ் சிங்

“அன்றைய இரவு அவர்கள் எங்கள் பேருந்தில் ஏறினார்கள். என் சகாக்கள் அந்தப் பெண்ணை தங்கள் இச்சைக்கு ஆட்படுத்தினார்கள். காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்கிற அவலக்குரலை தாண்டியும் இவர்கள் தொடர்ந்து காரியத்தில் குறியாக இருந்தார்கள். அந்தச் சிறுவன், ராம்சிங், அக்ஷய், பவன் மாறி மாறி புணர்ந்தார்கள். அதற்குப் பிறகு எதையோ கையைவிட்டு உருவினார்கள், பார்த்தால் அது அவளின் குடல். அப்படியே அவளை வெளியே வீசிவிட்டோம். அவர்களின் ஜாக்கெட், வாட்ச் ஆகியவற்றை என் சகாக்கள் அணிந்து கொண்டார்கள். ஆபத்து எதுவும் ஏற்படும் என்று எண்ணவில்லை”

“எல்லா இடங்களிலும் நடக்கிற ஒன்றுதான் இது. பணக்காரர்கள் பணத்தைக் கொண்டு சாதிக்கிறார்கள். எங்களிடம் தைரியம் இருந்தது. முடித்துவிடலாம் என்று எண்ணினோம். அந்த இரவில் அவர்களைக் கண்டோம். ஏன் இந்த நேரத்தில் ஒரு ஆணுடன் வெளியே வந்தாய்? எனக்கேட்டோம். அந்தப் பையன் எங்களை அறைந்தான். அதற்குப் பிறகே இப்படிச் செய்ய ஆரம்பித்தார்கள். அவனைக் கடுமையாக நாங்கள் தாக்கினோம். அந்தப் பையன் பேருந்தில் ஒரு இடுக்கில் ஒளிந்து கொண்டான்”

“இந்தப் பெண் எங்களை எதிர்க்காமல் போயிருந்தால் இப்படி ஆகியிருக்காது. வன்புணர்வு நடக்கிற பொழுது ஒத்துழைக்காமல் போனதால்தான் இப்படி ஆனது. அவள் எதிர்க்காமல் இருந்திருந்தால் அப்படித் தாக்கியிருக்க மாட்டோம், அந்தப் பையனை மட்டும் அடித்திருப்போம்”

“இந்தத் தண்டனையால் இன்னமும் பெண்கள் ஆபத்துக்குத்தான் உள்ளாகப் போகிறார்கள். முன்பெல்லாம் வன்புணர்வு நடந்தால் அப்படியே மிரட்டி மட்டும் அனுப்புவார்கள், இனிமேல் காட்டிக்கொடுத்தால் தூக்கு என்று கதையை முடித்து விடுவார்கள்”

“ஒருவன் புணர்ந்த பெண்ணின் கண்ணை நோண்டி எடுத்தான். பெண்கள் மீது ஆசிட் வீச்சு அடிக்கடி நடக்கின்றது. எரித்துக் கொல்கிறார்கள், அவர்கள் செய்தது தவறில்லை என்றால் நாங்கள் செய்ததும் தவறில்லை” (நன்றி: விகடன் செய்திகள்)

இதற்குமேல் இந்திய ஆண்களின் ஆணாதிக்க வக்கிரத்தை இவ்வளவு வெளிப்படையாக யாரும் பேசமுடியாது. பேட்டியின் எந்த இடத்திலும் சிறு அளவு குற்ற உணர்வுகூட குற்றவாளியிடம் வெளிப்படவில்லை என்பது இந்திய ஆண்களின் கெட்டிதட்டிப் போன ஆணாதிக்க வக்கிரமே அன்றி வேறோன்றும் கிடையாது.

முகேஷ் சிங்குகள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். அவர்கள் சிறுவர்களாக, நடுத்தர வயதுடைய ஆண்களாக, கிழவர்களாக இப்படி எல்லா வயதிலேயும் இருக்கிறார்கள்.

முகேஷ் சிங்குகள் எல்லா கட்சியிலேயும், எல்லா மதங்களிலேயும், எல்லா சாதிகளிலேயும், எல்லா வர்க்கங்களிலேயும் இருக்கிறார்கள். அதனால் தான் கட்சி வேறுபாடு இன்றி அனைத்து ஆணாதிக்கவாதிகளும் அவர்களுக்கு கூஜா தூக்கும் பெண்ணியவாதிகளும் சேர்ந்து நின்று பிபிசி-ன் ஆவணப்படத்தை எதிர்க்கிறார்கள்.

இந்தியாவைப் பற்றி தவறான கருத்தை இந்த ஆவணப்படம் ஏற்படுத்திவிடும் என்று அவர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றப் போராடும் இந்த கருத்துச் சொல்லிகளில் 99% சதவீதம் அல்ல 100% பேரும் உலுத்துப்போன சாதி, மதவெறியர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

முகேஷ் சிங்கின் பேட்டியில் இருந்து நாம் தெரிந்துகொள்வது இதைத்தான். இரவு நேரங்களில் ஆண்களுடன் வெளியே வரும் பெண்கள் மோசமானவர்கள், அவர்கள் வக்கிரம் பிடித்த ஆணாதிக்கவாதிகளால் கொடூரமாக கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டாலும் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்கவேண்டும். எதிர்ப்பு தெரிவித்தால் அவளின் குடல் உருவப்படும். தன்னைப் போன்றவர்களை சட்ட ரீதியாக கொல்ல நினைத்தால் இனி வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட எந்தப் பெண்ணும் உயிரோடு இருக்க முடியாது, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை கொல்வது ஒன்றும் தவறல்ல. ஏனென்றால் தனக்கு முன்னால் பல பேர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை கண்ணை நோண்டியும், ஆசிட் அடித்தும், ஏன் எரித்துக்கூட கொலை செய்திருக்கிறார்கள்.

முகேஷ்சிங் தனக்குள் வைத்திருக்கும் இந்தக் கருத்துக்கள் மனுவின் கருத்துக்கள், இந்திய பார்ப்பனிய ஆணாதிக்க சமூகத்தின் கொடை. இந்தக் கருத்துக்களை நாம் தினம் தினம் கேட்கிறோம். என்ன, முகங்கள் மட்டும்தாம் வேறுபடுகின்றன. நிர்பயா சம்பவத்திற்கு கருத்துச் சொன்ன சில பேரின் கருத்துக்களை பார்த்தாலே இதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

“இந்தியாவில் தான் (நகர்ப்புறங்களில்) இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன. பாரதத்தின் கிராமப்புறங்களில் அல்ல. மற்றும் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வது பெண்ணின் வேலை,வெளியே சென்று பணம் ஈட்டுவது ஆணின் வேலை என்பதே திருமண ஒப்பந்தம்” - மோகன் பகவத்.

“பாதிக்கப்பட்ட பெண் கடவுள் பெயரை உச்சரித்து, அந்த ஆண்களின் காலில் விழுந்து நீங்கள் எனக்குச் சகோதரர்கள் போல், என்னிடம் கருணை காட்டுங்கள் என்று மன்றாடியிருந்தால் இது நடந்திருக்காது” - ஆஸாராம் பாபு.

“பல நாடுகளுடன் ஒப்பிடும் போது இத்தகைய குற்றங்கள் இந்தியாவில் மிகக்குறைவு என்ற போதிலும் இந்த நிகழ்ச்சியைத் தங்களுடைய பரபரப்புப் பசிக்குத் தீனியாக்கி இந்தியர்களே கற்பழிப்பை வழக்கமாகக் கொண்டுவிட்ட காமாந்தகர்கள் என்பதுபோல மிகைப்படுத்தித் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் சித்தரிப்பது நெறிதவறிய செயல், நமக்கு நாமே இழைத்துக்கொள்ளும் அநீதி”- துக்ளக் சோ.

“லட்சுமணன் கோட்டைத் தாண்டுவது பெண்களுக்கு நல்லதல்ல” – மத்திய பிரதேச மாநில அமைச்சர் கைலாஷ் விஜய் வார்கியா.

“பாலியல் வன்கொடுமைகளுக்குப் பெண்களும் சம அளவில் பொறுப்பு, அவர்கள் ஆண்களைத் தூண்டும்படியான ஆடைகளை அணியக்கூடாது” - சட்டீஸ்கர் மாநிலத்தின் பெண்கள் ஆணையத்தின் தலைவி விபாரா (நன்றி: காலச்சுவடு)

முகேஷ்சிங்கின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறும் போது “பெண் ரத்தினம் போன்றவள். அவளை கைக்குள் பொதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவளை இப்படித் தெருவில் போட்டால் நாய்கள் கவ்விக் கொண்டுதான் போகும். ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்கவே முடியாது. இரவில் என்வீட்டுப் பெண்களை வெளியே தனியாக அனுப்பி வைக்க மாட்டோம். குடும்ப உறுப்பனர்களைத் தவிர்த்த வெளி நபர்களுடன் சுற்றுகிற பெண்கள் நல்லவர்களே இல்லை. இவர்கள் சேர்ந்து பழகினாலே அது செக்ஸுக்குத்தான். நம்முடைய கலாசாரம் சிறந்த கலாசாரம். இதில் பெண்களுக்கு இடமில்லை”. (நன்றி: விகடன் செய்திகள்)

மதங்கள் ஒருபுறம் ஆண்களுக்கு கட்டற்ற ஆணாதிக்க சுகந்தரத்தை வழங்குகின்றது. அது பெண்களை அடக்கி ஆள வேண்டும் என்று சொல்கிறது. மறுபுறம் புதிய பொருளாதாரக் கொள்கைகள் பெண்ணின் உடலை நுகர்வுக்குரிய ஒரு பண்டமாக தொடர்ந்து முன் நிறுத்துகின்றன.

தேசிய குற்றவியல் புலனாய்வு பிரிவின் புள்ளிவிவரங்களின்படி, 1971-1991 ஆம் ஆண்டுவரை 115415 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகிவுள்ளது. அதுவே 1992-2001 வரை 154664 ஆகவும், 2002- 2011 வரை 198139 அதிகரித்துள்ளது. சராசரியாக ஆண்டுக்கு 198139. 1971-2011 வரை 873. (நன்றி;விக்கிபீடியா)

புதிய பொருளாதாரக் கொள்கைகள் புகுத்தப்பட்ட பின்பே பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மதங்களால் அடிமையாக்கப்பட்ட பெண்சமூகம் உலகமயமாக்கலால், நுகர்வுப்பண்டமாக மாற்றப்பட்டு வேட்டையாடப்படுகின்றது. ஆண்களின் ஆணாதிக்க சிந்தனையை உலகமயமாக்கல் போனோகிரபிக்களால் வக்கிரமாக்குகின்றது.

இந்தியாவில் இதுபோல லட்சக்கணக்கான கோடிக்கணக்கான முகேஷ்சிங்குகள் உருவாக்கப்பட்டுக் கொண்டுருக்கிறார்கள் இவர்களை உங்களால் எப்படி தடுக்கமுடியும்? இவர்கள் அனைவரும் இந்த சமூகக் கட்டமைப்புக்குள் இருந்துதான் உருவானார்கள். இந்த சமூக அமைப்பு பெற்றெடுத்த பிள்ளைகள். அப்படி இருக்கும் போது இந்த சமூக கட்டமைப்பை நொறுக்காமல் எப்படி இதைத் தடுப்பீர்கள்?

அதைச் செய்யாமல் பேட்டியை ஒளிபரப்பியது சரியா அல்லது தவறா என்று ஊடகங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, உங்களது சமூகக் கடமையை ஆற்றப்போகிறீர்களா அல்லது பெண்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் தீர்வு என்பது ஒட்டுமொத்த சமூக மாற்றத்துடன் சேர்ந்ததுதான் என்பதை உணர்ந்து, இந்த உலுத்துப்போன சமூக கட்டமைப்பை தகர்க்கப் போகிறீர்களா? இதை நீங்கள் செய்யத் தவறும் பட்சத்தில் ஒவ்வொரு நொடியும் ஒரு பெண் இதுபோன்ற ஆணாதிக்க வக்கிரம் பிடித்தவர்களால் பாதிக்கப்படத்தான் போகிறாள். ஒரு போதும் நீங்கள் அதை மாற்ற முடியாது.

நன்றி - கீற்று

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்