/* up Facebook

Mar 8, 2015

சர்வதேச பெண்கள் தினத்தின் வரலாற்றுப் பரிணாமம் - அலெக்ஸ் இரவி

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தின் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரிந்த பெண் ஊழியர்கள் தமது வேலை நேரத்தை 12 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்துமாறும் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகவும் சேவை நிலைமைகளை மேம்படுத்துமாறும், வாக்குரிமையைப்பெறவும் 1857 மார்ச் 8ம் திகதி இப்போராட்டம் நடத்தப்பட்டது. அதே சமயம் ரஷ;யாவின் ‘சார்’ மன்னனின் மாளிகையைச் சுற்றி வளைத்த பெண்கள் தமது கணவன்மாரை போர்களத்திலிருந்து தமது வீடுகளுக்குத் திருப்பி அழைத்துத் தருமாறும், உண்பதற்கு பாண் வழங்குமாறும் கோரி மார்ச் 08ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

இப்பெண்கள் அரச அடக்குமுறைக்கு எதிராக தமது பலத்தை வெளிப்படுத்தி சமூக அரசியல் பொருளாதார நிலைமைகளில் பாரிய மாற்றம் கோரி வீதிப் போராட்டங்களை நடத்தினர். 1910ல் சோசலிசத்துக்கான இரண்டாவது சர்வதேச மாநாட்டில், ‘க்ளேரா செட்டிக்கன்’ என்ற தொழிலாளர் தலைவி சமத்துவத்திற்காக பெண்கள் நடத்திய போராட்டத்தை ஞாபகப்படுத்துவதற்கு சர்வதேச பெண்கள் தினத்தைப் பிரகடனப்படுத்துமாறு பிரேரித்தார். எனவே தொழிலாளர் போராட்டத்தையும் அத்தோடு இணைந்த வாக்குரிமைக்கான அரசியல், போராட்டத்தையும் மார்ச் 08 பெண்கள் தினத்தில் நினைவுகூர்கின்றோம். இந் நிலைமையின் கீழ் சோசலிச சர்வதேசத்தின் ஜேர்மன் தேசத்து ‘க்ளேரா செட்டிக்கன்’ சகோதரியினால் மார்ச் 08ம் திகதி சர்வதேச பெண்கள் தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. 1980 களில் நிலவிய அடக்கு முறைப் பின்னணியிலேயே இலங்கைப் பெண்கள் சர்வதேச பெண்கள் தினத்தை நினைவுகூர ஆரம்பித்தனர். பொலிசாரின் அடக்குமுறை முன்னே எமது இலங்கைப் பெண்கள் பின்வாங்கி ஓடவில்லை. 

சுதந்திர வர்த்தக வலயத்தின் சார்பிலும் தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலாளப் பெண்களின் சார்பிலும் பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாக நாம் பெண்கள் தினத்தை நினைவு கூரியுள்ளோம். அன்று நிவ்யோர்க் பெண்கள் தமது மாபெரும் சக்தியை வெளிப்படுத்திக் காட்டியது போல நாமும் அச்சமின்றி யுத்தத்தையும் வன்முறையையும் எதிர்த்து வந்துள்ளோம். எமது சவால் சர்வதேச பெண்கள் தினத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையிலும் எமக்கெதிரான சவால்கள் மறைந்து போகவில்லை. போர் முடிவுக்கு வந்திருந்தாலும் பெண்கள் எதிர்நோக்கும் ஒடுக்குமுறையும் பொறுப்புக்களும் குறைந்தபாடில்லை. மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான எமது போராட்டம் மேலும் சிக்கல் வாய்ந்த கட்டத்தை நோக்கிப் பயணித்துள்ளது.அதே சமயம் அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பு பற்றியும் பாரதூரமான சவால்களை நாம் இன்று எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இடம் பெயர்ந்த தமிழ் முஸ்லீம் பெண்களின் கவலைக்கிடமான வாழ்வுக்கான தீர்வுகள் தொலைதூரத்திலேயே உள்ளன. தேசிய இனங்களுக்கிடையே சகவாழ்வு முறிவடைந்து சின்னாபின்னமாகி உள்ளது. எனவே ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பும் கடமைக்குத் தோள்கொடுக்கும் பணி வேறு எப்போதையும் விட இன்று அதிகரித்துள்ளது. இலங்கைப் பொருளாதாரத்தின் அடிநாதமாகிய பெண்கள் தொடர்ந்தும் சமவேலைக்குச் சம சம்பளம் என்ற கொள்கையை தொழிற் சட்டங்களில் உள்ளடக்க முடியாது உள்ளது: பெண்களின் நிபுணத்துவம் உரிய மதிப்பீட்டிற்கு உள்ளாக்கப்பட்டாமல் தொடர்ந்தும் பயிற்றப்படாத நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விசேட தொழில்நுட்ப தொழில்களில் பெண்கள் ஈடுபடுவதற்குரிய சூழலையும் தயாரிக்க முடியாது உள்ளது.பெண்களில் பெரும்பான்மையினர் தொடர்ந்தும் மரபுரீதியான தொழில்களில் மாத்திரம் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ‘அம்மா’ என்று அழைக்கப்படுவதன் மூலம் பெண்கள் வீட்டு வேலைகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தைப்பாதுகாக்கும் பொறுப்பு பெண்களுக்கே உரியது என்ற வாதத்தையே ஆண் ஆதிக்கம் தொடர்ந்தும் பெண்கள் மீது சுமத்தி வருகின்றது. இதன் காரணமாக வீட்டுப் பொறுப்புக்களை தாங்கியவாறு தொழிற்சாலையிலும், வயல்நிலத்திலும், அலுவலகத்திலும் சேவை செய்வது பெண்களின் பொறுப்பாகும் என்ற கருத்தியல் பிரபல்யம் வாய்ந்த முறையில் பிரசாரம் செய்யப்பட்டு பெண்கள் பொதுச் சமூக வாழ்விலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பெண்கள் வெறுமனே ஆண்களுக்குத் துணையாக இருக்கும் உயிர்களாக மாற்றப்பட்டுள்ளனர். சமூகத் தலைமைக்கு சுதந்திரமாகப் பிரவேசிப்பதற்குப் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசியல் துறையில் அவள் தனது கணவனுக்கு வெற்றிவாகை சூட்ட வேண்டும் அல்லது தனது மகனின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு துணைபோக வேண்டும் என்ற கருத்துக்களை நாம் புறக்கணிக்கின்றோம். இதுவரை பெண்கள் வென்றெடுத்த அனைத்து உரிமைகளையும் சுருட்டிக்கொள்வதற்கு இது வழிவகுக்கும் காரணத்தாலேயே இக்கருத்துக்களை நாம் நிராகரிக்கின்றோம்.

இதைப் புரிந்து கொள்வதற்கான சிறந்த சாட்சி, இம்முறை சர்வதேசப் பெண்கள் தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நியமனப்பத்திரங்களை ஒட்டுமொத்தமாகப் பரிசீலனை செய்வதாகும். நியமனப்பத்திரப்பட்டியல்களில் பெரும்பாலானோர் ஆண்களாகவே இருக்கின்றனர். ஒப்புநோக்கில் பெண்களில் பிரதிநிதித்துவம் 7மூ வீதத்திற்கும் குறைவு. இதன் மூலம் தமது வாக்கு வங்கியை அதிகரிப்பதை மாத்திரமே அரசியல் தலைமை எதிர்பார்க்கின்றது. இது தொடர்பாக பல வாதங்களை முன்வைத்த போதும் உண்மையை நாம் மூடி மறைக்க முடியாது. இலங்கையில் அரசியல் தலைமைத்துவத்திற்குப் பெண்கள் பிரவேசிப்பதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்காது தவிர்த்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் எமது பெண்களின் உழைப்பு பற்றிப்பேசினாலும் இதுவரை அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை.

அதே சமயம் சர்வதேச நியமங்களின்படி இப் பெண்களின் உரிமைகளைக் காக்கக்கூடிய மனித உரிமைகள்; சேவை நிபந்தனைகள் என்பவற்றை வென்றெடுப்பதிலும் இருதரப்பு ஒப்பந்தங்களில் வெற்றி பெற முடியவில்லை சுதந்திர வர்த்தக வலயத்தில் உழைக்கும் பெண்களின் நாட்சம்பளம் இன்றைய வாழ்க்கைச் செலவிற்கு ஈடுகொடுக்கக் கூடிய நிலையில் இல்லை, மனித உரிமைகள் பேணும் சூழ்நிலை தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதால் ஆடைத் தொழில்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன. தேயிலைத் தோட்டங்களில் போசாக்கின்மையை இல்லாதொழிப்பதற்கும். கிராமீயத் துறையில் பெண்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்தக்கூடிய வகையிலும் தேசியக் கொள்கைகள் உருவாக்கப்படவில்லை.

நிதி உதவி வழங்கும் நாடுகளிலும் நிதி நிறுவனங்களிலும் நிலவும் நிபந்தனைகள் காரணமாக பெருந்தெருக்கள் அமைப்பது தொடர்பான உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளில் பெண் உழைப்பாளர்கள் சேர்க்கப்பட்டாலும் அவர்களுக்கு சமத்துவமற்ற சம்பளமும் சேவை நிபந்தனைகளுமே வழங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கெதிரான வன்முறையைக் குறைப்பதற்கு அல்லது இல்லாதொழில்பதற்கு நடைமுறையிலுள்ள சட்ட முறைமைகளில் சந்தர்ப்பங்கள் இருந்தாலும் அவற்றை உரிய முறையில் அமுலாக்கம் செய்வதற்கு முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. யுத்தம் காரணமாக பாலியல் இம்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் யுவதிகள் – பெண்கள் தொடர்பாக நியாயபூர்வமான விசாரணைகள் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இத்தகைய விசாரணைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படாமையால் இ;ப்பெண்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.

எனவே இவை மனிதத்துவத்திற்கு எதிரான குற்றச் செயல்களாகவே மாறியுள்ளன. இடம் பெயர்ந்த பெண்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புனர்வாழ்வை நாம் காண முடியாது. பல கலந்தாய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் யுத்தம் உட்பட பல்வேறு அனர்த்தங்களின் போது பெண்கள் மீது கூடிய அக்கறை கொண்ட நிவாரணங்களையே புனர்வாழ்வுக் கொள்கைகளையோ துரிதமாக அமுலாக்க அதிகாரிகள் முன்வருவதில்லை. ஏந்தவொரு மதக்கோட்பாடும் மதக்கொள்கைகளும் வழிபாட்டுமுறைகளும் பெண்களின் உரிமைகளுக்கு எதிராகப் போதனை செய்யவில்லை. சர்வமதங்களும் ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் என்றே தமது போதனைகளில் உறுதிப்படுத்தியுள்ளள. சித்திரவதைக்குள்ளான. அகால மரணமடைந்த, காணாமற்போன, கடத்தப்பட்ட அல்லது விளக்கமறியலில் வாடும் தமது கணவன்மார் சார்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு அயராது பாடுபடும் சிங்கள, தமிழ், முஸ்லீம் பெண்களுக்கு எமது பாராட்டுக்கள்.

மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் காப்பதற்கு அவர்கள் ஆற்றிவரும் செயற்பணியும் தைரியமும் மெச்சத்தக்கவை. பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எமது போராட்டம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட பொதுப் போராட்டத்துடன் ஒன்றினைப்பதாயின் தொழிலாளப் பெண்களின் போராட்டத்தின் வரலாற்றுப் பரிணாமத்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும். தேசிய இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்காக நாம் ஒன்றிணைவோம். சமத்துவம் கோலோச்சும் ஒரு சமூகத்தையும் கலாசார விழுமியங்களையும் கட்டிக்காக்கும் தலைமைத்துவத்தை நோக்கி நாம் முன்னேறுவோம். இனம், மதம், மற்றும் கலாசார வேறுபாட்டிற்கு அமைய பெண்களின் உரிமைகள் சமத்துவமற்ற முறைகளிலேயே அமுலில் உள்ளன. சகவலவித அசமத்துவங்களுக்கும் எதிராகப் பெண்கள் என்ற முறையில் ஒன்றிணைந்து முன்னேற 2010 மார்ச் 08 சர்வதேச பெண்கள் தினத்தில் திடசங்கற்பம் செய்வோம். ஒற்றுமையுடன் • உறுதிகூறுவோம்!!! • திடசங்கற்பம் செய்வோம்;!!! • துணிவு கொள்வோம்!!!

-2010 மார்ச் 08 100வது சர்வதேச பெண்கள் தினத்தை நினைவுகூர்வதற்கான அமைப்புக்குழு 191/1 சிறிதம்ம மாவத்தை கொழும்பு – 10.

நன்றி - இனியொரு இணையம் 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்