/* up Facebook

Mar 11, 2015

பாட்டாளி வர்க்கப் பெண்களையும் இணைத்துக் கொண்டால் மட்டுமே சோஷலிசம் வெற்றி பெறும் (1896) - கிளாரா ஜெட்கின்

- தமிழில் கொற்றவை

தனியுடைமையின் தோற்றத்தோடு பெண் மீதான சமூக ஒடுக்குமுறையும் ஒத்துப் போகிறது என்பதை பாஷோஃபென், மார்கன் மற்றும் இதர நபர்களின் ஆய்வுகள் நிரூபிக்கின்றன.  கணவர் எஜமானராகவும் மனைவி எஜமானர் அல்லாதவராகவும் குடும்பத்திற்குள்ளாக நிலவும் இந்த முரண்பாடே, பெண்கள் பொருளாதார ரீதியாக ஆணைச் சார்ந்திருக்கும் நிலைமைக்கும், பெண் மீதான சமூக அநீதிக்கும் காரணம்.  எங்கல்ஸைப் பொறுத்தவரை, சமூக அநீதி என்பது வர்க்க ஆதிக்கத்தின் தொன்று தொட்ட வடிவமாகும்.  மேலும், “குடும்பத்திற்குள் கணவன் பூர்ஷுவாவாகவும் மனைவி பாட்டாளியாகவும் திகழ்கிறார்” என்பது எங்கல்சின் கூற்று.  இருப்பினும், உலகின் நவீன பொருளில் பெண் விடுதலைப் பிரச்சினை என்பது எழவே இல்லை. முதலாளித்துவத்திற்கு முந்தைய காலத்தில் பெண்கள் கூட்டத்திற்கு வாழ்வாதாரம் மற்றும் அவர்கள் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தையும் கொடுத்திருந்த பழைய குடும்ப பொருளாதார அமைப்பை சிதைத்து; நவீன உலகின் பெண்கள் பிரச்சினை என்பதை கேள்விக்குறியதாக்கிய சமூக மாற்றத்தை உருவாக்கியது முதலாளித்துவ உற்பத்தி முறையே. இருப்பினும், நாம், நம்காலத்தைய பெண்களின் நடவடிக்கைகளை பண்டைய காலத்தின் பெண்களின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய கருத்துகளாக (பயனின்மை மற்றும் அற்பத்தனம் நிறைந்த கருத்துகள்) மாற்றி விடக்கூடாது. பண்டைய குடும்ப அமைப்பு முறை இருந்தது வரை, ஒரு பெண் பயனுள்ள நடவடிக்கைகள் மூலம் தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக உணர்ந்தாள். அதனால், தனிநபராக அவளது வளர்ச்சி மட்டுபட்டதாக இருந்தாலும், தன் மீதான சமூக அநீதியை அவள் உணர்ந்திருக்கவில்லை. 

மறுமலர்ச்சி காலம், புயலும் அழுத்தமும் நிறைந்த நவீன தனிநபர் ஆளுமையை விழித்துக்கொள்ள வைத்து மிகவும் மாறுபட்ட கோணங்களில் முழுமையாக வளர்ச்சிபெறச் செய்த காலம். நண்மை தீமை என இரண்டிலும் தேர்ந்தவர்களாக, மதம், அறநெறி ஆகியவற்றின் கட்டளைகளை உதறித் தள்ளிவிட்டு, சொர்க்கம் நரகம் என இரண்டையும் சமமாக தூற்றும் நபர்களை நாம் காண்கிறோம். சமூக, கலைத்துவ, அரசியல் வாழ்வு என அனைத்திலும் மையங்களாக பெண்களை நாம் காண்கின்றோம். இருப்பினும் பெண்கள் இயக்கம் என்பதற்கான தடயத்தைக் கூட காண முடியவில்லை.  இது இயல்பானதே, ஏனென்றால், அப்போதுதான் உழைப்புப் பிரிவினையின் விளைவால் பண்டைய குடும்ப பொருளாதார அமைப்பு நொறுங்கத் தொடங்கி இருந்தது.   ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் குடும்பத்திற்குள்ளாக வாழ்வாதாரத்தையும், வாழிவின் பொருளையும் காண முடியாமல் போனது. ஆனால் பெண் விடுதலைப் பிரச்சினைக்கு, அச்சொல்லுக்கு அவர்கள் கொடுக்கும் பொருளில், அப்போதைய காலகட்டத்தில் கான்வெண்டுகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மதரீதியான உத்தரவுகளாலும் அப்பிரச்சினையை தீர்க்க முடிந்தது. 

இயந்திரங்கள், நவீன உற்பத்தி முறையில், குடும்ப ரீதியான உற்பத்திகளை மெல்ல பலவீனப்படுத்தியது. ஆயிரக்கணக்கில் மட்டுமல்ல மில்லியன் கணக்கிலான பெண்களுக்கு இக்கேள்விகள் எழுந்தன: நம் வாழ்வாதாரத்தை இப்போது நாம் எங்கு தேடுவோம்? அர்த்தமுள்ள வாழ்வை மேலும் மனநிம்மதியை கொடுக்கும் வேலையை நாம் இனி எங்கு போய் கண்டுபிடிப்பது? தங்களது வாழ்வாதாரத்தையும், வாழ்வின் பொருளையும் குடும்பத்திற்கு வெளியேயும், ஒட்டுமொத்தமாக சமூகத்திலும் தேடும் நிலை பெண்களுக்கு உருவானது. சமூக அநீதியானது தங்களது அடிப்படை நலன்களுக்கும்கூட எதிராக நிற்கிறது என்பதை அப்போதுதான் அவர்கள் உணர்ந்தார்கள். அத்தருணத்தில் எழுந்ததே நவீன பெண் விடுதலைப் பிரச்சினை என்னும் கேள்வி.  பெண் விடுதலைப் பிரச்சினையை மேலும் கூர்மையானதாக்க, நவீன உற்பத்தி முறையின் செயல்பாடுகள் குறித்த புள்ளி விவரங்கள் இதோ: 1882இல், ஜெர்மனியில் 23 மில்லியனனில்  5 ½ மில்லியன்  பெண்கள் மற்றும் இளைஞிகள் முழுமையாக வேலை வாய்ப்பு பெற்றிருந்தனர்; அதாவது மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இனியும் குடும்பத்திற்குள்ளாக தங்களது வாழ்வாதாரத்தைக் காண முடியவில்லை.  1895இன் சென்சஸ்படி, விவசாயத் துறையில் பணியில் இருந்த பெண்களின் எண்ணிக்கை, அதன் பரந்த பொருளில், 1882இலிருந்து 8% மேலாக உயர்ந்திருக்கிறது; குறுகிய பொருளில்  6 %. அதேவேளை விவசயாத்தில் பணியமர்ந்த ஆண்களின் எண்ணிக்கை 3 சதவிகிதம் குறைந்தது, அதாவது 11% என்றளவில்.  தொழிற்சாலை, சுரங்கம் ஆகிய துறைகளில் பெண்களின் எண்ணிக்கை 35% உயர்ந்துள்ளது, ஆண்கள் எண்ணிக்கையோ 28% மட்டுமே.  சில்லறை வர்த்தகத்தில், பெண்களின் எண்ணிக்கை  94%, ஆண்களோ 38% மட்டுமே. பெண்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்கவேண்டும் என்று  இதர ஆரவார அறிவிப்புகளைக் காட்டிலும் இந்த வரண்ட எண்ணிக்கைகள் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

இருப்பினும், பெண் விடுதலை பிரச்சினை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையில் தம்மளவில் தாமே ஒரு  பண்டமாய் இருக்கும் அந்த வர்க்கங்களில் மட்டுமே இருக்கிறது. இயற்கைப் பொருளாதாரம் (தீவிரமாக பலவீனப்படுத்தப்பட்டு, காற்று பிடுங்கப்பட்ட நிலையில் இருந்தாலும்) உடைத்தாயிருக்கும் விவசாய வட்டங்களில் இக்கேள்வி எழுவதில்லை.  ஆனால், நவீன உற்பத்தி முறையின் குழந்தைகளாய் இருக்கும் அந்த வர்க்க சமூகத்தில் மட்டுமே நாம் பெண்கள் பிரச்சினை குறித்த கேள்வியை காண நேர்கிறது. பாட்டாளி வர்க்கப் பெண்கள், பூர்ஷுவாப் பெண்கள், அறிவுஜீவிகள் மற்றும் மேற்பத்தாயிரங்கள்* (upper Ten Thousand) என அவரவருக்கு ஒரு பெண்கள் பிரச்சினை இருக்கின்றது. அந்தந்தப் படிநிலைகளின் வர்க்கச் சூழலைப் பொறுத்து அப்பிரச்சினை வெவ்வேறு வடிவங்களை எடுக்கின்றது. 

மேற்பத்தாயிரங்களைப் பொறுத்தவரை பெண்கள் பிரச்சினை என்ன மாதிரியான வடிவத்தை எடுக்கிறது?  தன்னுடைய ஆளுமையை சுதந்திரமாக வளர்த்து, தன் விருப்பம்போல் அவர்கள் வாழ முடியும். இதற்கு அப்பெண்கள், தனியுடமைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இருப்பினும், மனைவி என்ற அவளுக்களிக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில், அவள் இன்னமும் ஆணையே சார்ந்திருக்கிறாள். பலவீனர்களாக்கப்பட்ட பாலினத்தின் காப்புநிலையைப் பொறுத்தவரை, குடும்பச் சட்டத்தில் இன்னமும் இருப்பது என்னவெனில்: கணவரே உங்களது எஜமானர் என்பதே. மேலும், கணவருக்கு மனைவி சட்டபூர்வமாக அடிமைப்படுத்தப்படும் மேற்பத்தாயிரங்களில் குடும்பங்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன? அதன் உருவாக்கத் தன்மையினாலேயே, அத்தகையதொரு குடும்பங்களில் தார்மீக அறங்கள் விடுபட்டுப் போய்விடுகின்றன.  அத்தகைய திருமணங்களில் தனிநபர் அளுமைக்குப் பதில் பணமே பிரதானமாய் இருக்கின்றது. அதன் தாரக மந்திரம்: மூலதனம் இணைக்கும் ஒன்றை, உணர்ச்சிபூர்வமான அறநெறிகள் பிரித்துவிடக் கூடாது. (சபாஷ்!) ஆக இத்திருமணங்களில், ஒரு நண்மைக்காக இரண்டு விபச்சாரங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இறுதியில் அந்த சட்ட விதிகளுக்குட்பட்டு குடும்ப வாழ்வு தொடர்கிறது.  பெண்கள் தன்னுடைய கடமைகளை இனியும் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை என்று எங்கெல்லாம் ஒரு நிலை நிலவுகிறதோ, அங்கெல்லாம் அவள் ஒரு மனைவியாக, தாயாக, பணியாட்களுக்கும் மேலான இல்லாளாக (இல்லத்தரசி என்பது வெறும் பாசாங்கான சொல் – மொ.ர்) தானே பொறுப்பேற்றுக் கொள்கிறாள். அந்த மேல்தட்டு பெண்கள் உண்மையிலேயே தங்கள் வாழ்விற்கு ஓர் அர்த்தம் கற்பிக்க விரும்பினால், முதலில் அவர்கள் தங்களது சொத்துகளை சுதந்திரமாகவும், தடையின்றியும் அப்புறப்படுத்தும் உரிமைக்காக குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறாக, மேற்பத்தாயிரங்களின் பெண்கள் இயக்கம் எழுப்பும் கோரிக்கைகளில், இதுவே மையக்கருவாக இருக்கின்றது.  இப்பெண்கள், தங்களது வர்க்கத்தின் ஆண்மை உலகத்தை எதிர்த்து தங்கள் போராட்டத்தை மெய்ப்பிக்க, தனியுரிமை பெற்ற தோட்ட நிறுவங்களுக்கெதிராக பூர்ஷுவாக்கள் போராடிய அதே யுத்தத்தை மேற்கொள்கிறார்கள். அதாவது, தனியுடமையின் அடிப்படையில் நிலவும் அனைத்து சமூக பாகுபாடுகளையும் களையும் யுத்தம். இந்த கோரிக்கை தனிநபர் உரிமைகளைப் பற்றியதல்ல என்பது ரீஷ்டாகில் திரு. ஃபான் ஸ்டும்மின் வக்காலத்திலிருந்து நன்கு தெளிவாகிறது. தனிநபர் உரிமைக்காக திரு. ஃபான் ஸ்டாம் எப்போது வக்காலத்து வாங்கியிருகிறார்? இந்த ஜெர்மானியர், ஒரு மனிதர் என்பதைக் காட்டிலும், ஏதோ மூலதனமே உயிர் பெற்று இரத்தமும் சதையுமாக நடமாடுவது போல் அல்லவா இருக்கிறார் (மிகச் சரி!). ஒருவேளை இந்த மனிதர் மலிவான ஒரு முகமூடியோடு தோன்றியிருக்கிறார் என்றால், முதலாளித்துவ உடன்படிக்கை பேழையின் முன் நடனமாடும்படி நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்று அர்த்தம். அதற்குப் பதிலீடாக, தனது தாளத்திற்கு ஏற்றவாறு நடனமாடவில்லை என்றால், தொழிலாளர்கள் ரேஷன் முறையில் வாழும் நிலைக்கு தள்ள தயாராக இருப்பவர். அதுமட்டுமின்றி, ஒரு முதலாளியாக அரசானது சமூக அரசியலில் தலையிடும் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களையும்கூட அந்நிலைக்குள்ளாக்கினால் அதை பெரும் புன்னகையோடு வரவேற்பவர்.  வாரிசு உரிமையின் அடிப்படையில் பெண்கள் அசையும் சொத்துக்களை பெற வகை செய்வதைத் தவிர வேறு எதற்காகவும் திரு.ஃபான் ஸ்டும் பாடுபட்டதில்லை, ஏனென்றால் மரபுரிமையாக சொத்துகளைப் பெற்ற தந்தையர் இருக்கின்றனர், ஆனால் பிள்ளைகள் விஷயத்தில் அவர்கள் கவனமாக இருக்கவில்லை; ஆம், பெண் பிள்ளைகளை மட்டுமே தங்கள் வாரிசுகளாக விட்டுச் சென்று விட்டனர். கீழான பெண் இனத்தையும் முதலாளித்துவம் மதிக்கின்றது, தனது நல்வாய்ப்புகளை தாரைவார்க்கவும் அது தயாராக இருக்கிறது. தனியுடமையின் விடுதலைக்கான இறுதிக் கட்டம் அதுவே.
குட்டி பூர்ஷுவாக்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பூர்ஷுவா அறிவுஜீவிகள் வட்டத்தில் பெண்கள் பிரச்சினை என்பது என்னவாக இருக்கிறது? இங்கு குடும்பத்தைக் கலைப்பது சொத்தல்ல, முதலாளிதுவ உற்பத்தி முறையின் உள்ளார்த அறிகுறிகளே அதற்கு முக்கியக் காரணம். இந்த உற்பத்தி முறை எந்த அளவுக்கு வெற்றி நடை போடுகிறதோ, அந்த அளவு நடுத்தர வர்க்கமும், குட்டி பூர்ஷுவாக்களும் தங்களது அழிவை நோக்கி புரட்டி அடிக்கப்படுகின்றனர். பூர்ஷுவா அறிவுஜீவி வட்டத்திற்குள், வாழ்நிலைமைகள் மோசமடைய இன்னொரு சூழ்நிலையும் காரணமாக உள்ளது: முதலாளித்துவத்திற்கு புத்திசாலித்தனம் நிறைந்த, அறிவியல்பூர்வமாக பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் தேவை. அதனால் அது மூளை வேலைச் செய்யும் பாட்டாளிகளை அதிகளவில் உற்பத்தி செய்தது. இதனால், முந்தைய நிலையில் சமூகத்தில் மிகவும் மதிப்பு பெற்றதாக, இலாபம் ஈட்டக்கூடிய நிலையில் இருந்த தொழில்முறை வர்க்கம் (Professional Class) மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. அதே விகிதத்தில், திருமணங்களும் குறைந்து வருகிறது; ஒருபுறம் பொருளாயத அடிப்படைகள் மோசமாகி வருகின்றன, மற்றொரு புரத்தில் வாழ்வு பற்றிய எதிர்பார்ப்புகள் பெருகி வருகின்றன. இதனால் திருமணம் செய்துகொள்வதற்கு முன் ஒருவன் இரண்டு முறைக்கு மூன்று முறை சிந்திக்க வேண்டியுள்ளது. ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கான வயது வரம்பு உயர்ந்துகொண்டே வருகிறது. மேலும் திருமணம் செய்து கொள்ள வேண்டிய எந்த நிர்பந்தமும் ஒரு வயது முதிர்ந்த பிரம்மச்சாரிக்கு இருப்பதில்லை, ஏனென்றால் முறைப்படியான மனைவி இல்லாமலேயே ஒரு சுகமான வாழ்வை வாழ்வதற்கான அத்தனை சலுகைகளையும் வழங்கும் சமூக நிறுவனங்கள் போதுமான அளவுக்கு உள்ளன. பட்டினிதர ஊதியத்தின் மூலம் பாட்டாளி வர்க்கத் தொழிலாளர்களை சுரண்டும் முதலாளித்துவமானது ஆண்களின் தேவைகளுக்கேற்ற எண்ணிக்கையில் விலைமாதர்கள் அளிப்பு (சப்ளை) இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. இவ்வாறாக, பூர்ஷுவா வட்டங்களில், திருமணமாகாத பெண்களின் எண்ணிக்கை எப்போதும் உயர்ந்தே வருகின்றது. அம்மட்டங்களின் மனைவிகளும், மகள்களும் தங்களது வாழ்வாதாரத்திற்காகவும், மனநிறைவுக்காகவும் சமூகத்திற்குள் தள்ளப்படுகின்றனர். இந்த மட்டங்களில், மேல்தட்டு வர்க்கங்களில் உள்ளதுபோல், பெண்கள் ஆண்களுக்கு நிகராக, அதாவது சொத்துடைமையாளர்களாக இருப்பதில்லை.  அவ்வர்க்கத்துப் பெண்கள் ஆண்களுக்கு நிகராக தங்களது பொருளாதார சமத்துவத்தை இரண்டு கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலமே பெறமுடியும்: சமமான தொழில்முறை பயற்சிக்கான கோரிக்கை மற்றும் இரண்டு பாலினங்களுக்கும் சமமான வேலை வாய்ப்பு.  பொருளாதார அடிப்படையில் சொல்வதானால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் அனைத்து வகையான வேலைகளுக்கும் தடையற்ற அனுகல் மற்றும் இடையூறற்ற போட்டி ஆகியவற்றை மெய்ப்பித்துக் காட்டுதல். இந்த கோரிக்கையை நடைமுறைபடுத்தும்போது பூர்ஷுவா மற்றும் அறிவுஜீவி வட்டத்தின் ஆண் பெண் முரண்பாட்டை கட்டவிழ்த்து விடுகின்றது. தொழில்முறை உலகில் பெண்களும் போட்டியிடுவதே பூர்ஷுவாப் பெண்களின் உரிமைப் போராட்டங்களுக்கு எதிரான ஆண் எதிர்ப்பிற்குக் காரணமாகும். இது மிக எளிமையாக விளங்கிக் கொள்ளகூடிய விஷயம்தான் – போட்டி பயம். மற்றபடி, பெண்களின் மூளை உழைப்பிற்கு எதிராக சொல்லப்படும் பெண்கள் சிறிய மூளை படைத்தவர்கள் அல்லது அவள் இயல்பிலேயே தாயாக விரும்புபவள் போன்றவை வெறும் பாசாங்கு. இந்த போட்டியே, மேல்தட்டுப் பெண்கள் தங்களுக்கான அரசியல் உரிமையைக் கோருவதை நோக்கித் தள்ளுகிறது. அரசியல் உரிமை பெற்றாலாவது, அரசியல் ரீதியாக போராடி, தங்களது பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக எழுப்பப்பட்டிருக்கும் அத்தனை தடைகளையும் தகர்த்தெரிய முடியும் என்பது அவர்களது எண்ணம். 

இதுவரை நான் மிக மிக அடிப்படையான, பொருளாதார அடிக்கட்டுமானத்தைப் பற்றி மட்டுமே கூறி வந்துள்ளேன். இப்பின்னணியில், அவ்வியக்கங்களைப் பொருளாதார உந்துதல் மட்டுமே கொண்டதாகக் கருதினால், பூர்ஷுவா பெண்கள் இயக்கத்திற்கு நாம் அநீதி இழைத்தவர்களாகி விடுவோம். இல்லை, அவ்வியக்கங்களில் ஆழமான ஆன்மீக மற்றும் தார்மீக அம்சங்களும் உண்டு. பூர்ஷுவா பெண்மணி தனக்காகப் பொருள் ஈட்டுவது மட்டுமின்றி ஆன்மீக வளர்ச்சியையும் கோருகிறார். அதன் மூலம் தனது ஆளுமையை வளர்த்துக்கொள்ள விரும்புகிறார். இந்தப் படிநிலைகளில்தான் நாம் இதுபோன்ற துயர்நிறைந்த, இருப்பினும் உளவியல் ரீதியாக ஆர்வமூட்டும்  ‘நோரா’ வகைப் பெண்களைப் பார்க்கின்றோம். பொம்மை வீட்டில் பொம்மை போல் வாழ்வது சலித்துபோய், பண்பாட்டின் நவீன வளர்ச்சியைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் பெண்கள் அவர்கள். பூர்ஷுவாப் பெண்கள் கேட்கும் பொருளாதார, அறிவார்ந்த மற்றும் தார்மீக உரிமைகள் நியாயமானதே.

பாட்டாளி வர்க்கப் பெண்களைப் பொறுத்தவரை, மலிவான தொழிலாளர் சக்திக்கான ஓயாத தேடலில் சுரண்டலில் ஈடுபடும் முதலாளித்துவத்தின் தேவையே பெண்கள் பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. இந்தக் காரணத்திற்காகவே பாட்டாளி வர்க்கப் பெண்கள் நம் காலத்தைய பொருளாதார வாழ்வின் இயங்குமுறையில் பின்னிப்பிணைக்கப்பட்டு, பட்டறைகளுக்கும், இயந்திரங்களுக்கு மத்தியிலும் தள்ளப்பட்டு விட்டார்கள். வாழ்வாதாரத்திற்காக தன் கணவனுக்கு உறுதுணையாக இருக்கவே அவள் பொருளாதார வாழ்வில் நுழைந்தாள். ஆனால், முதலாளித்துவ உற்பத்தி முறையோ அவளை ஒரு நியாயமற்ற போட்டியாளராக மாற்றி விட்டது. தன் குடும்பத்திற்கு வளத்தை கொண்டுவர அவள் விரும்புகிறாள், ஆனால் அது துன்பகரமாகிப் போகிறது. ஒரு பாட்டாளி வர்க்கப் பெண் தன் குழந்தைகளுக்கு நல்லதொரு இனிமையான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கவும் வேலையை நாடுகிறாள், ஆனால், பிள்ளைகளிடமிருந்து ஏறக்குறைய பிரிக்கப்பட்டு விடுகிறாள். இயந்திரத்தின் துணைகொண்டு பணி செய்யத் தேவைப்படும் வலுவை வெளிப்படுத்தியதன் மூலம் பெண்ணும் ஆணுக்கு நிகரான தொழிலாளியானார்; உற்பத்தியில் ஆண்களுக்கு நிகராக பெண்களின் பணியும் அதே அளவிலான ஈட்டை கொடுத்தது. இவ்வாறாக, பெண்கள் மலிவான உழைப்பு சக்தியாக இருப்பதும், எல்லாவற்றிற்கும் மேல் அரிதிலும் அரிதாகவே முதலாளித்துவ சுரண்டல் என்னும் கொடிய முள்ளை எட்டி உதைக்கத் துணிவாள் என்பதாலும் முதலாளித்துவமானது பெண்களை அதிகமாகப் பணிக்கு அமர்த்துகிறது. இதன் விளைவாகத்தான் பாட்டாளி வர்க்கப் பெண்கள் சுதந்திரம் பெற்றார்கள். ஆனால், உண்மையாகவே, அதற்காக இவர்கள் கொடுத்த விலை அதிகம், பெற்றது மிகக் குறைவே. குடும்ப காலத்தில், பெண்ணை பழக்கப்படுத்துவதற்கு கணவன் எப்போதாவது சாட்டையைப் பயன்படுத்தும் உரிமை இருக்கிறதென்றால் (பவேரியாவின் தேர்தல் சட்டங்களை நினைத்துக் கொள்ளுங்கள்!) இப்போது முதலாளித்துவம் தேள்களைக் கொண்டு பழக்கப்படுத்துகிறது.  கடந்த காலத்தில், மனைவி மீதான கணவனின் ஆதிக்கம் தனிப்பட்ட உறவுகளின் மூலம் சீர்படுத்தப்பட்டது. ஒரு முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையில் பண-உறவு மட்டும்தானே நிலவுகிறது. பாட்டாளி வர்க்கப் பெண் தனது பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றிருக்கலாம், ஆனால் ஒரு மனுஷியாகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது மனைவியாகவோ அவள் தனது ஆளுமையை வளர்த்துக்கொள்ள எந்த வாய்ப்பும் இருக்கவில்லை. மனைவியாகவும், தாயாகவும் அவளது கடமைக்குக் கூலியாக, முதலாளித்துவ உற்பத்தி தனது மேஜையிலியிருந்து கீழே போடும் ரொட்டித் தூள்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. 

இவ்வாறாக, பூர்ஷுவா பெண்கள் தங்கள் வர்க்க ஆண்களுக்கெதிராக தொடுக்கும் போராட்டமும் பாட்டாளி வர்க்கப் பெண்கள் நடத்தும் விடுதலைப் போராட்டும் ஒன்றல்ல. மாறாக, தனது வர்க்க ஆண்களோடு இணைந்து முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக நடத்தும் போராட்டமாக அது இருக்க வேண்டும். சந்தையில் தடையின்றி பங்கெடுக்கும் அவளது உரிமைக்கெதிராக எழுப்பப்பட்டுள்ள தடைகற்களை தகர்த்தெறிய அவள் தனது வர்க்க ஆண்களுக்கெதிராகப் போராட வேண்டியதில்லை. முதலாளித்துவத்தின் சுரண்டலும், நவீன உற்பத்தி முறையின் வளர்ச்சியும் அத்தகைய போராட்டத்தில் ஈடுபடுவதிலிருந்து அவளை விடுவித்து விடுகிறது. அதற்கு மாறாக, பாட்டாளி வர்க்கப் பெண்களை அதிகமாகச் சுரண்டும் புதிய வகை தடைக்கற்கள் எழுப்பப் படுகின்றன. மனைவி, தாய் என்னும் அவளது உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் மற்றும் நிரந்தரமாக பாதுகாக்கப்பட வேண்டும். தடையற்ற போட்டி என்பதல்ல அவளது இறுதி இலக்கு, ஆனால் பாட்டாளி வர்க்க அரசியல் ஆட்சியே அவளது இறுதிக் குறிக்கோள். முதலாளித்துவ சமூகத்திற்கு எதிராகப் பாட்டாளி வர்க்கப் பெண் தனது வர்க்கத்தின் ஆணோடு கைகோர்த்து போராடுகிறாள்.  அதை உறுதி செய்ய, அவள் பூர்ஷுவாப் பெண்கள் இயக்கத்தின் கோரிக்கைகளுக்கும் செவி சாய்க்கிறாள். ஆனால், இக்கோரிக்கைகளை பூர்த்தி செய்வதை, அவ்வியக்கம் யுத்தத்திற்கு, அதே ஆயுதங்களுடன், பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து செல்வதற்கான ஒரு வழி என்றே கருதுகிறாள்.

பூர்ஷுவா சமூகமானது அடிப்படையில் பூர்ஷுவாப் பெண்கள் இயக்கத்திற்கு எதிரானதல்ல. பெண்கள் தொடர்பான சட்டங்கள் தனியார் துறை அளவிலும் சரி, பொதுச் சட்டம் என்கிற வகையிலும் சரி பல அரசுகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளதே இதற்கு சான்று. ஜெர்மனியில் இந்த சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்துவதற்கு விதிவிலக்காக நீண்ட காலம் பிடித்தமைக்கு காரணங்கள் இரண்டு: முதலில், சுதந்திரமான நிபுணத்துவ தொழில்களில் போட்டியைக் கண்டு ஆண்கள் அஞ்சுகின்றனர். இரண்டாவதாக, ஜெர்மனியில் பூர்ஷுவா ஜனநாயகத்தின் மிக மிக மெதுவாகன, பலவீனமான வளர்ச்சி, பாட்டாளி வர்க்கம் மீதான அச்சத்தின் காரணமாக அது தனது வரலாற்று கடமையை ஆற்றுவதில்லை.  அத்தகைய சீர்திருத்தங்கள் சமூக ஜனநாயகத்திற்கே சாதகமாக அமையும் என்பதே அதன் அச்சம்.  பூர்ஷுவா ஜனநாயகம் அத்தகைய அச்சம் தன்னை ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொண்டால் சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ள அது தயாராகும்.  இங்கிலாந்து ஒரு நல்ல உதாரணம்.  பலம் நிறைந்த பூர்ஷுவாக்கள் அதிகமாக வாழும் நாடு இங்கிலாந்து, ஆனால் பாட்டாளி வர்க்கத்தைக் கண்டு அஞ்சி ஜெர்மனி பூர்ஷுவாக்களோ சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதிலிருந்து விலகிச் செல்கின்றனர். ஜெர்மனியைப் பொறுத்தவரை, பரவலான அற்பவாத கண்ணோட்டங்கள் வரவிக் கிடப்பதும் கூடுதல் காரணம்.  அற்பவாத தப்பெண்ணங்களின் இழை ஜெர்மன் பூர்ஷுவாக்களின் முதுகுப் புறம் வரை நீண்டுவிட்டது. பூர்ஷுவா ஜனநாயகத்தின் இந்த அச்சம் அதனைக் காண முடியாத வகையில் கிட்டப் பார்வை கொண்டதாக உள்ளது. பெண்களுக்கு அரசியல் சம உரிமை கொடுப்பது எவ்வகையிலும் அதிகாரத்தின் உண்மை நிலையை சமன்படுத்தாது. இறுதிவரை பாட்டாளி வர்க்கப் பெண் பாட்டாளி முகாமிலும், பூர்ஷுவாப் பெண்கள் பூர்ஷுவாவா முகாமிலுமே தஞ்சமடைகிறார்கள். குறைந்தபட்சம், நாம் பூர்ஷுவாப் பெண்களின் சோஷலிசப் போக்குகளால் முட்டாள்களாகிவிடக் கூடாது, ஏனென்றால் பூர்ஷுவாப் பெண்கள் ஒடுக்கப்படும் வரை மட்டுமே அது நிலைத்திருக்கும்.

பூர்ஷுவா ஜனநாயகம் தன்னுடைய கடமையை புரிந்துகொள்ள மறுக்கும் வரை, பெண்களின் அரசியல் சமத்துவத்தை வலியுறுத்தும் கடமை சமூக ஜனநாயகத்திற்கு உள்ளது. நமக்கான நிலையை விட நாம் அதிகமாக எதையும் கேட்கவில்லை. அதேபோல், வெறும் கொள்கைக்காகவும் இந்த கோரிக்கையை வைக்கவில்லை, பாட்டாளி வர்க்க நலன் கருதியே இதைக் கோருகிறோம்.  ஆண்களின் வாழ்க்கை தரத்தின் மீது பெண்களின் பணி தனது தீர்மானகரமான செல்வாக்கை எந்த அளவுக்கு செலுத்துகின்றதோ, அந்த அளவுக்குப் பெண்களை பொருளாதார போரில் உடனடியாக ஈடுபடுத்துவது அவசியமாகிறது. அரசியல் போராட்டம் தனிநபரின் இருப்பை எந்தளவுக்கு பாதிக்கிறதோ, அரசியல் போராட்டத்தில் பெண்கள் பங்கேற்பது அந்த அளவுக்கு அவசியமாகிறது. வரலாற்றில், முதல் முதலில் சோஷலிச எதிர்ப்பு சட்டங்கள் வர்க்க நீதி, வர்க்க அரசு மற்றும் வர்க்க ஆட்சி என்றால் என்னவென்பதை தெளிவுபடுத்தி இருக்கும். தங்கள் குடும்பங்களில் அவ்வளவு மூர்க்கமாக தலையீடு செய்த சக்தியைக் குறித்து கற்றுக் கொடுத்தது அந்த சட்டமே. நூற்றுக்கணக்கான பெண் போராளிகள்கூட செய்ய முடியாத ஒரு காரியத்தை சோஷலிச எதிர்ப்புச் சட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.  உண்மையில், நாம் சோஷலிச எதிர்ப்பு சட்டத்தின் தந்தைக்கும், அச்சட்டத்தை நடைமுறைபடுத்துவதில் பங்கேற்ற அரசின் அனைத்து உறுப்புகளுக்கும் (அமைச்சர் முதல் காவல்துறை வரை) நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறோம். அற்புதமான பிரச்சாரத்தை அவர்கள் தமக்கெதிராகவே மேற்கொண்டுள்ளனர். இப்போது, சமூக ஜனநாயகவாதிகள் நன்றி கெட்டவர்கள் என்று எவரேனும் குற்றம் சாட்ட முடியுமா? (வேடிக்கை.)

மற்றொரு சம்பவத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  அகஸ்ட் பெபலின் பெண்களும் சோஷலிசமும் என்னும் புத்தக வெளியீடு. அப்புத்தகத்தின் நேர்மறை அம்சங்களுக்காகவோ அல்லது குறைபாடுகளை வைத்தோ நாம் அதனை எடை போடக் கூடாது. மாறாக, அது எழுதப்பட்ட காலத்தைக் கொண்டு அதனை மதிப்பிட வேண்டும். அது புத்தகத்திற்கும் மேலானது, அது ஒரு நிகழ்வு – பெரும் சாதனை (மிகச் சரி!). முதல் முறையாக அப்புத்தகம் பெண்கள் பிரச்சினைக்கும் வரலாற்று வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக் காட்டியது. முதல் முறையாக, அப்புத்தகம் வாயிலாக ஒரு மேல்முறையீடு வைக்கப்பட்டது: பெண்களை நம் சக போராளியாக சம்மதிக்க வைத்தால் மட்டுமே நாம் எதிர்காலத்தைக் கைப்பற்ற முடியும். இதை அங்கீகரிப்பதில், நான் ஒரு பெண்ணாகப் பேசவில்லை, கட்சித் தோழராகப் பேசுகிறேன். 

பெண்கள் மத்தியில் நமது பிரச்சாரத்திற்கு என்ன நடைமுறை முடிவுகளை நாம் எடுக்கவிருக்கிறோம்? இந்தக் கட்சி காங்கிரசின் கடமை விரிவான நடைமுறை ஆலோசனைகளை வைப்பதல்ல, மாறாகப் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு பொதுவான வழிகாட்டுதலை வகுப்பதே ஆகும். நம்மை வழிகாட்டும் சிந்தனையாக: பெண்களுக்காக நாம் சிறப்பு மிக்க பிரச்சாரம் எதையும் மேற்கொள்ள வேண்டியதில்லை, அதற்கு பதில் சோஷலிச கிளர்ச்சியை மேற்கொள்ள வேண்டும். பெண்களின் அற்ப, தற்காலிக நலன்கள் முக்கியத்துவம் பெற நாம் அனுமதிக்கக் கூடாது. நவீன பாட்டாளி வர்க்கப் பெண்களை நமது யுத்தத்தில் பங்குபெறச் செய்வதே நமது கடமை!  (உண்மை)  பெண்கள் மத்தியில் மேற்கொள்ள வேண்டிய கிளர்ச்சிக்கென தனியான திட்டங்கள் எதுவும் தேவையில்லை. இன்றைய சமூக அமைப்பிற்குள் நாம் அடைய வேண்டிய பெண்களுக்கான சீர்திருத்தங்கள், நமது கட்சியின் குறைந்தபட்ச திட்டத்திலேயே உள்ளது. 

பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து பிரச்சினைகளையும் பெண்களுக்கான பிரச்சாரத்தில் உள்ளடங்கி இருக்க வேண்டும். முக்கியப் பணி என்னவென்றால், பெண்களின் வர்க்க உணர்வை விழித்தெழச் செய்து அதை வர்க்கப் போராட்டமாக ஒருங்கிணைப்பதே ஆகும். பெண் தொழிலாளர்களை சங்கமயமாக்குதல் (unionization) மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருக்கிறது. 1892ஆம் வருடம் முதல் 1895ஆம் ஆண்டு வரை மத்திய வணிகச் சங்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்டப் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை 7,000ஆக வளர்ந்தது. அதனோடு வட்டார சங்கங்களில் இணைந்திருக்கும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால், பெரும் தொழில் நிறுவனங்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்தது 700,000 என்பதை உணரலாம். அப்படியென்றால் நம் முன் கிடக்கும் மாபெரும் ஒருங்கிணைக்கும் பணி எத்தகையது என்பதை அறியலாம். பல பெண்கள் குடிசைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பதால், அவர்களை ஒருங்கிணைப்பது கடினமான காரியமே.  அதேபோல் தங்கள் தொழிற்சாலை பணி என்பது தற்காலிகமானதே, திருமணத்திற்குப் பின் அதை விட்டுவிடலாம் என்றெண்ணும் இளம் பெண்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை நாம் தெளிவுபடுத்த வேண்டும். பல பெண்களுக்குத் தொழிற்சாலை மற்றும் வீடு என இரண்டிலும் உழைக்கும் நிர்பந்தம் இருக்கிறது. இவையெல்லாவற்றையும் விட சட்டபூர்வமாக நிர்ணயித்த பணி-நாட்களைப் பெண் தொழிலாளர்கள் பெற வேண்டும். இங்கிலாந்தில், குடிசைத் தொழில் ஒழிப்பு, சட்டபூர்வமான பணிநாளை நிறுவுதல் மற்றும் உயர் கூலி ஆகியவை பெண் தொழிலாளர்களை சங்கமயமாக்குதலுக்கான முன்நிபந்தனைகள் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஜெர்மனியிலோ, இந்தத் தடைகளுடன் கூடுதலாக தொழிற்சங்கமயமாக்குதல் மற்றும் கூட்டம் கூட்டுதலுக்கான சட்டங்கள் வேறு இருக்கின்றன. பேரரசின் சட்டத்தில் பெண் தொழிலாளர்கள் கூட்டணி அமைப்பதற்கான முழு சுதந்திரம் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட பின்னரும், கூட்டாட்சி அரசுகள் அதை போலியாக்கி வருகின்றன. சங்கம் அமைக்கும் உரிமை சக்சோனியில் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை பேசக்கூட நான் தயாராக இல்லை (அங்கு அதை பேசும் உரிமை இருப்பதுப்போல்).  ஆனால் பவேரியா மற்றும் புருஷியா ஆகிய இரண்டு பெரிய கூட்டாட்சி அரசுகளில், பெண்கள் வணிகச் சங்கங்களில் பங்கேற்பது மேலும் மேலும் சாத்தியமற்றதாகும் வகையில் சங்கச் சட்டங்கள் கையாளப்படுகின்றன. மிக சமீபத்தில் புருஷியாவில், “தாராளவாதிகளின்” நிரந்தர வேட்பாளரான அமைச்சர் திரு. ஃபான் பென்னிக்செனின் மாவட்டத்தில் சங்கமயமாக்குதல் மற்றும் கூட்டம் கூட்டுதலுக்கான சட்டத்தை விளக்குவதில் மனித சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் சாதித்து விட்டனர். பவேரியாவில் பொதுக் கூட்டங்களில் பெண்கள் பங்கேற்கத் தடை. மன்றத்தில் பேசுகையில் திரு. ஃபான் ஃப்ரெய்லிட்ஷ் சங்கமயமாக்குதலுக்கான சட்டத்தைக் கையாள்கையில் படிவம் மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினர்களின் உள்நோக்கமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றார்.  கனவிலும் ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பவேரியா அதிர்ஷ்டம் வாய்ந்தது. ஏனென்றால் திரு. ஃபான் ஃப்ரெய்லிட்ஷ் காவல்துறை அமைச்சராவதற்கு முன்பே இறந்துவிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணம் என்னவென்பதை துல்லியமாக அறிந்துகொள்ளும் அதிர்ஷ்டம் அதற்கு வாய்த்திருந்தது. எனக்கு அது வியப்பாகவே இல்லை, ஏனென்றால் கடவுளிடமிருந்து அலுவலைப் பெறும் ஒருவர் கூடவே நுண்ணறிவையும் ஆசீர்வதிக்கப் பெறுகிறார். மேலும், நம் கால ஆன்மீகவாதத்தில், திரு. ஃபான் ஃப்ரெய்லிட்ஷ் இவ்வாறாக அதிகாரபூர்வ நுண்ணறிவைப் பெற்று, நான்காம் பரிமாணத்தின் மூலம் எப்போதோ இறந்துவிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணங்களை கண்டுபிடித்துள்ளார். (வேடிக்கை.)

இருப்பினும், பாட்டாளி வர்க்கப் பெண்கள் தாமாகவே ஆண்களோடு இணைவதற்கான சாத்தியத்தை இச்சுழல் ஏற்படுத்துவதில்லை. அதுவரை அவர்கள் காவல்துறை அதிகாரம் மற்றும் நீதித்துறை தந்திரங்களுக்கெதிராக போராட வேண்டும்.  மேல்தளத்தில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் உண்மையில் கிடைத்தது வெற்றியே. ஏனென்றால் பாட்டாளி வர்க்கப் பெண்கள் இயக்கங்களை தகர்த்தெறிய எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் அவளது வர்க்க உணர்வையே கிளர்ந்தெழச் செய்துள்ளது. பொருளாதார மற்றும் அரசியல் சாம்ராஜ்ஜியத்தில் நாம் சக்தி வாய்ந்த பெண்கள் அமைப்புகளை நிறுவ வேண்டுமென்றால், குடிசைத் தொழிலை ஒழித்து, குறைந்த பணி நேரம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஆளும் வர்க்கம் அடிக்கடி சொல்லும், ஒருங்கிணைக்கும் உரிமைக்காகப் போராடி பெண்கள் விடுதலை இயக்கத்தை கட்ட முதலில் முற்பட வேண்டும்.  

பெண்கள் மத்தியில் என்ன வகையான பிரச்சாரம் மேற்கொள்ளவது என்பது குறித்து இந்தக் கட்சி காங்கிரசில் நாம் தீர்மானிக்க முடியாது. முதலில், பெண்கள் மத்தியில் எப்படிப் பணி புரிவது என்பதை நாம் கற்க வேண்டும். உங்கள் முன், பெண்கள் மத்தியில் சங்கச் சிந்தனையை ஊக்குவிக்கவும், பொருளாதார ரீதியான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவும், மேலும் அதனை சீராக திட்டமிட்ட வகையில் நடத்துவதற்காகவும் பெண் மேலாளர்களை நியமிப்பது தொடர்பான தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிதான திட்டமல்ல; ஃப்ராங்க்ஃபர்ட் கட்சி காங்கிரசில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயமே. மேலும், சில பகுதிகளில் ஏற்கணவே வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஒரு திட்டம். இத்திட்டத்தை பெரிய அளவில் அறிமுகப்படுத்துவதன் மூலம் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்குள் அதிகளவிலான பாட்டாளி வர்க்கப் பெண்களை இழுக்க முடிகிறதா என்பதை காலமே சொல்லும். 

வெறும் பேச்சளவில் மட்டுமே நமது பிரச்சாரங்கள் எடுத்துச் செல்லப்படக் கூடாது. பெருமளவிலான செயலற்ற மக்கள் நமது கூட்டங்களுக்கு வருவதுகூட கிடையாது, மேலும் எண்ணற்ற மனைவிமார்கள், தாய்மார்கள் ஆகியோர் நமது கூட்டங்களுக்கு வரமுடியாது. சோஷலிஸ்ட் பெண்கள் மேற்கொள்ளவிருக்கும் சோஷலிச பிரச்சாரத்தில், பாட்டாளி வர்க்கப் பெண்கள் தாய் மற்றும் மனைவி என்னும் தங்கள் கடைமையிலிருந்து அன்னியப்படுத்தும் விதமாக நிச்சயமாக நாம் செயல்படக்கூடாது. மாறாக, பாட்டாளி வர்க்க விடுதலையை முன்னிட்டு அவள் முன்பிலும் மேலாக அப்பணிகளைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும். எந்தளவுக்கு தன் குடும்பத்திற்குள் ஆரோக்கியமான சூழல் நிலவுகின்றதோ, இல்லத்தில் அவளது செயல்திறன் மேலானதாய் இருக்கிறதோ, அந்தளவுக்கு அவள் வெளியில் போராடத் தயாராவாள். தனது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியாளராகவும், வார்த்தெடுப்பவராகவும் அவளால் செயல்பட முடியும். அவர்களுக்கு சிறந்த அறிவொளியூட்டி, நம்மைப்போல் அவர்களையும் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான போராட்டத்தில் உற்சாகத்துடனும், மனவிருப்பத்துடனும் பங்கேற்கும் வகையில் இணைக்க வைக்க முடியும். இவ்வாறு, பின்னர் ஒரு பாட்டாளி: “என் மனைவி, எனது குறிக்கோள்களின் தோழர், எனது போராட்டங்களின் சகா, எதிர்கால போராட்டங்களில் என் குழந்தைகளின் தாய்!” என்று பெருமை பொங்க பேசுவார்.  நமது பெண் தோழர்கள் கூட்டங்கள் வாயிலாக வர்க்க உணர்வை ஊட்டுவதுபோல் அத்தகைய எண்ணற்ற தாய்மார்கள் மற்றும் மனைவிமார்கள் தங்கள் கணவர்கள் மற்றும் குழந்தைகள் மனதில் வர்க்க உணர்வை ஊட்டுவார்கள் (நிச்சயம் உடன்படுகிறேன்).

மொஹமதை நோக்கி மலை வரவில்லையென்றால், மலையை நோக்கி மொஹமது செல்ல வேண்டும்: திட்டமிட்ட எழுத்துபூர்வமான பிரச்சார யுத்தியோடு நாம் பெண்கள் மத்தியில் சோஷலிசத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கென நாம் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும். துண்டுப் பிரசுரம் என்றவுடன், முழு சோஷலிச திட்டத்தையும், நமது நூற்றாண்டின் விஞ்ஞானபூர்வ சிந்தனைகள் முழுவதையும் ஒரு கால் பக்க அளவு சுருக்கி அச்சடித்துக் கொடுக்கும் மரபார்ந்த பிரசுரங்களை நான் குறிப்பிடவில்லை. சிறிய பிரசுரங்களாக, ஒரு கண்ணோட்டத்திலிருந்து, குறிப்பாக வர்க்கப் போராட்டத்தின் கண்ணோட்டத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் ஒரே ஒரு விஷயம் குறித்த ஒரு விவாதமாக அது இருக்க வேண்டும். அதுவே முக்கியப் பணி. அதுமட்டுமின்றி, பிரசுர தயாரிப்பில் நாம் ஒரு அலட்சிய போக்கைக் கடைபிடித்து விடக்கூடாது. வழமைபோல் அல்லாமல் மோசமான காகிதம், மோசமான அச்சுமுறை ஆகியவற்றை நாம் கைவிட வேண்டும். பாட்டாளி வர்க்கப் பெண்களால் அத்தகையதொரு மோசமான துண்டுப் பிரசுரம் கசக்கி தூக்கி எறியப்படும். ஏனென்றால், அச்சில் வந்த சொற்களுக்கு ஒரு பாட்டாளி வர்க்க ஆண் கொடுக்கும் மதிப்பை நாம் அப்பெண்களிடம் எதிர்பார்க்க முடியாது. மதுவிலிருந்து முற்றிலுமாக விலகி இருக்கும் அமெரிக்க ஆங்கில நபர்கள் வெளியிடும் நான்கு முதல் ஆறு பக்கங்கள் கொண்ட அழகான சிறு கையேடுகளாக நாம் அவற்றைக் கொண்டு வரவேண்டும். “இது மிகவும் அழகாக இருக்கிறதே, நான் இதை எடுத்துச் சென்று பத்திரப்படுத்தலாமே” என்று பாட்டாளி வர்க்கப் பெண் தனக்குத்தானே நினைக்கக்கூடும். (பலமான கைதட்டல்கள்) முக்கியமான வாக்கியங்கள் பெரிய எழுத்துக்களில் அச்சடிக்கப்பட வேண்டும். அப்படி இருந்தால், பாட்டாளி வர்க்கப் பெண் படிக்க அஞ்சமாட்டாள், மேலும் அவளது கவனத்தையும் அது தூண்டும்.

என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தின் காரணமாக, பெண்களுக்கான தனி செய்தித்தாளைக் கொண்டு வரும் யோசனையை நான் முன்வைக்க மாட்டேன். கிளைஷைட் (Gleichheit) இதழின் (பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டதல்ல, மாறாக புதுமை விரும்பிகளுக்காக வெளியிடப்பட்டது) பதிப்பாசிரியராக நான் இதைச் சொல்லவில்லை, மாறாக பெண் தொழிலாளர்கள் மத்தியில் பல பனுவல்களை விநியோகித்தவள் என்ற முறையில் சொல்கிறேன். செல்வி நௌக்-குனேவின் செயல்பாடுகளால் ஈர்கப்பட்டு ஒரு தொழிற்சாலையில் பல வாரங்களாக நாளிதழை விநியோகித்தேன். அறிவொளியூட்டக்கூடிய விஷயங்களில் அப்பெண்கள் ஆர்வம் காட்டவில்லை, கேளிக்கை பொழுதுபோக்கு செய்திகளை ஆர்வமாகப் படித்தனர். அதனால், மலிவான நாளிதழைக் கொண்டுவருவதற்கு பெரிய தியாகங்கள் செய்வது பயனற்றது.  

சோஷலிசத்தை, பாட்டாளி வர்க்கப் பெண்களிடம் மனைவி தாய் என்னும் அவள் பாத்திரம் அறிந்து எளிதாகக் கொண்டு சேர்க்கும் வகையில் சிற்றேடுகளை தொடர்ச்சியாகக் கொண்டு வரவேண்டும். ப்ராப் எழுதிய சக்திவாய்ந்த சிற்றேட்டைத் தவிர நம்மிடம் எதுவுமில்லை. நம்முடைய தினசரியும் இப்போது செய்வதைக் காட்டிலும் கூடுதல் பணி செய்ய வேண்டும். சில தினசரிகள் பெண்களுக்கென்று தனி இணைப்புகளை வெளியிடுகிறது.  மாக்தேபுர்க்கிலிருந்து வெளிவரும் ஃபோல்க்ஸ்டிம்மே தினசரி இம்முயற்சியில் ஓர் உதாரணமாகத் திகழ்கிறது. ஜ்விக்காவில் தோழர் கோல்ட்ஸ்டைன் அதனை திறம்பட பின்பற்றினார். ஆனால் இதுநாள்வரை, அத்தினசரி பாட்டாளி வர்க்கப் பெண்களை வெறும் சந்தாதாராக மட்டுமே பார்த்திருக்கின்றது. அவளது அறியாமையை போக்கி அறிவொளியூட்டுவதற்குப் பதிலாக அறியாமையை, அவளது மோசமான ரசனையற்ற தன்மையைப் புகழ்ந்து வந்திருக்கிறது. 

உங்களது ஆலோசனைகளுக்காக நான் எனது கருத்துகளை முன்வைக்க மட்டுமே செய்கிறேன். பெண்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது சிரமமானது மற்றும் சுமைகூடியதும்கூட, அது பெரும் அர்ப்பணிப்போடும், தியாகத்தோடும் நடைபெற வேண்டும். ஆனால் அத்தியாகங்களுக்கு நிச்சயம் ஒருநாள் பலன் கிடைக்கும், கிடைக்க வைப்போம். தேசிய இனம் மற்றும் தொழில்முறை வேறுபாடுகளைப் பார்க்காமல் ஒன்றாக இணைந்து போராடினால் மட்டுமே பாட்டாளி வர்க்கம் விடுதலை பெற முடியும்.  அதேபோல் பால் வேறுபாடு பார்க்காமல் பெண்களோடும் இணைந்து போராடினால் மட்டுமே அது தனது விடுதலையை உறுதி செய்ய முடியும். பாட்டாளி வர்க்கப் பெண்களைப் பெரும் திரளாக இணைத்து செயல்படுவதென்பது சோஷலிசத்தின் வெற்றிக்கும், சோஷலிச சமூக கட்டுமானத்திற்கும் முன்நிபந்தனை ஆகும். 

பெண்களின் தொழில்முறை நடவடிக்கைகளினால் தற்போதைய காலங்களில் தோன்றியுள்ள முரண்பாடுகளை சோஷலிச சமூகத்தால் மட்டுமே தீர்க்க முடியும். குடும்பம் என்பது ஒரு பொருளாதார அலகாக இருப்பது மறைந்து, ஒரு அறநெறி அலகாக மாறும்பொழுது மட்டுமே பெண்கள் சம உரிமை பெற்றவர்களாக, படைப்பாற்றல் மிக்கவர்களாக, இலட்சியவாதிகளாக, தனது கணவரின் முன்னேற்றத்திற்கான உற்ற தோழியாக சமமாக வாழ முடியும்; அதேவேளை அவளது ஆளுமையையும் வளரும். அப்போது அவள் ஒரு மனைவியாக, தாயாக தனது கடமையை ஓர் உயர்ந்த நிலையில் நிறைவேற்றுவாள். 


* மேற்பத்தாயிரம், அல்லது எளிமையாக மேற்பத்து என்னும் சொற்பதம் 1852ஆம் ஆண்டில், அமெரிக்க கவிஞர் நதானியல் பார்க்கர் வில்சால் நியு யார்க் மற்றும் இதர பெரு நகரங்களின் மேல்தட்டு வர்க்கத்தினரை குறிப்பதற்காக உருவாக்கப்பட்ட சொல்லாகும். (மொ.ர்)

மூலம்: Marxists.org 

ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் காங்கிரசில் கிளாரா ஜெட்கின் ஆற்றிய உரை

- தமிழில் கொற்றவை

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்