/* up Facebook

Feb 21, 2015

நீதிக்கான பறை முழக்கமும் – அது தரும் அதிர்வுகளும்


இலங்கையில் தமிழ் சூழலில் விசேடமாக மட்டக்களப்பில் 1990 களுக்குப் பின்பிருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான செயற்பாடுகள்; குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெற்று வருகின்றமையைக் காண்கின்றோம்.

ஆரம்பத்தில் 1990 களின் தொடக்கத்தில் பெண்ணிலைவாதம் பற்றிய கருத்துநிலை சார்ந்த ஆய்வுகள் அவை பற்றிய உரையாடல்கள் குறிப்பிட்ட வட்டங்களுக்குள்ளே தொடங்கப்பெற்று அவை மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டு காலப்போக்கில் எழுத்து,ஆய்வு,உரையாடல் என்பதையும் தாண்டி சாதாரண மக்களை நோக்கி இத்தகைய உரையாடல்களை நிகழ்த்தும் போக்கு விரிவடைந்தமையை அறிய முடிகின்றது.

மட்டுநகரில் 1990 களில் ஆரம்பித்த சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் தொடக்க கால நிகழ்ச்சிகளையும், 1995 களின் பின்னர் சூரியா கலாசாரக் குழுவினர் உருவாக்கப்பட்டு அதனூடாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளையும் அவற்றின் வரலாறுகளையும் அறியும் போது இந்த விடயத்தைப் புரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக 1995களுக்குப் பின்பிருந்து மட்டக்களப்பில் பல்வேறு வெகுசன வெளிகளில் பெண்ணிலைவாதம் சார்ந்த உரையாடல்கள் நிகழ்த்தப்படும் நிலை மேற்கிழம்பியமை குறிப்பிடத்தக்கது.

இவ்விதமான தொடர் செயற்பாடுகளால் புதிய எண்ணக்கருக்களின் முன்மொழிதல்களையும், பெண்களுக்கு எதிரான பாராபட்சங்களை இல்லாமல் செய்வதற்கான ஆக்கபூர்வமான போராட்டத்தினை வலுவூட்டும் கள அனுபவங்களையும் மட்டக்களப்பின் பெண்ணிலைவாதச் செயல்கள் வழங்கியுள்ளன எனலாம்.பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமான உண்மையான விடயம் மூடி மறைக்கப்படும் பண்பாட்டிலிருந்து, பாதிக்கப்பட்ட பெண்ணினுடைய பாதிப்பிற்கான உண்மைக் காரணத்தினைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட கண்ணுக்குப் புலப்படாத அரங்க ஆற்றுகை 1995 களின் பின்னர் மட்டக்களப்பில் பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய முக்கிய விடயமாக உள்ளது.

போர் சூழ்ந்த காலமாகவும், உண்மைகளை மூடி மறைத்து புனைவுகளை உண்மைகளாகப் பதிய வைக்கும் பண்பாடும் வலுவாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு அச்சுறுத்தல்கள், ஆபத்துக்களை எதிர்நோக்கியவாறு மிகவும் துணிச்சலுடன் பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் மறைந்து நிற்கும் அரங்கினூடாகச் செயலாற்றி பாதிக்கப்பட்ட பெண்களின் பாதிப்பிற்கான உண்மைகளைக் கண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைக்கப் பாடுபட்டார்கள்.

இத்துடன் மக்கள் கூடும் இடங்களிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த பகுதிகள் என அடையாளங்காணப்பட்ட இடங்களிலும் பெண்ணிலைச் செயற்பாட்டாளர்கள் (சூரியா கலாசாரக் குழுவினர்) தெருவெளி ஆற்றுகைகளிலீடுபட்டு பெண்ணிலைவாதக் கருத்துக்களைப் பரவலாக்கினார்கள்.

மிகவும் அசாதாரணமான காலத்தில் ஆக்கபூர்வமாக வன்முறையற்ற மனித வாழ்க்கைக்காக அரங்க ஆற்றுகைகளூடாகப் போராடுவது எப்படி என்கின்ற அனுபவத்தை, படிப்பினைகளை வழங்கும் செயலாக மட்டக்களப்பில் 1995 களுக்குப் பின்னர் இடம்பெற்ற பெண்ணிலைவாத அரங்க அனுபவங்கள் இருந்து வருகின்றன.

பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு மற்றும் வன் கொடுமைகள் நமது சமூகத்தின் சகல மட்டத்திலும் இடம்பெற்ற சூழலில் ஸ்ரீலங்காப் படைகள் புரிந்த வன்கொடுமைகள் மாத்திரமே வன்கொடுமைகள் என்பது போன்றதான நிலைமை கட்டமைக்கப்பட்ட ஊடகப்பண்பாடு தமிழில் மிகப்பெரும்பாலும் ஆதிக்கஞ்செலுத்திய காலத்தில் உற்றார், உறவினர், நண்பர்கள் முதலானோர்களால் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய விதத்தினை வன்கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்ட பெண்கள் வன்கொடுமைகளுக்குள்ளான போது அணிந்திருந்த ஆடைகளின் காட்சி சாட்சியாக வெளிக்காட்டியிருந்தது. 

மட்டுநகரில் பிரசித்தி பெற்ற அரசடிச் சந்தியில் 1996களில் இக்காட்சி நடத்தப்பட்டிருந்தது. அப்போது இக்காட்சியைப் பார்த்த பலரதும் மனச்சாட்சிகள் அதிர்ந்தன. ஆண்கள் மத்தியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் பயங்கரத்தை உணர்வு ரீதியாக உணர்த்திய ஒரு காட்சியாக அது அமைந்திருந்தது. பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெண்ணிலைவாதம், பெண்விடுதலை குறித்த கவனயீர்ப்பினை அப்போது இக்காட்சி தூண்டியிருந்தது. நகர்புறப் பாடசாலைகளிடையே பெண் விடுதலை குறித்து உயர் வகுப்புக்களில் ஆசிரியர்களும், மாணவர்களும் உரையாடல்களை நிகழ்த்த இக்காட்சி அக்காலத்தில் காரணமாக இருந்தது.

இப்பயணத்தில் ஒரு பரிமாணமாக 2004,2005 காலப்பகுதியில் மட்டக்களப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான ஆண்கள் குழுவின் உருவாக்கமும் அக்குழுவினரின் தெருவெளி அரங்க ஆற்றுகைகளும் மேற்கொள்ளப்பட்டன.

சமூகத்தின் சகல மட்டங்களையும் சேர்ந்த ஆண்கள் பலருடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான களப்பயிற்சிகள் ஊடாக அந்தக் குழுவினர் உருவாக்கம் பெற்றதுடன் இக்குழுவினரின் பங்குபற்றுகையுடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக செலுத்தப்பட வேண்டிய அவதானமும் அக்கறையும் குறித்த உரையாடல் இந்த ஆண்கள் குழுவின் (மூன்றாவதுகண் நண்பர்கள் குழு) ஆற்றுகையூடாக பொது வெளிகளில் பரவலாக நிகழ்த்தப்பட்டது.

இக்குழுவில் இயங்கிய ஆண்கள் பலரும் தற்போது அவர்கள் சார்ந்த துறைகளில் பெண்ணிலைவாத கருத்தியலுடன் இயங்கி வருகின்றவர்களாக உள்ளனர்.

பெண்ணிலைவாத செயற்பாட்டுத் தளத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக் எதிரான ஆண்களின் செயல்வாத ஆற்றுகை எனும் விடயம் மட்டக்களப்பின் பெண்ணிலைவாதச் செயற்பாடுகளில் மற்றொரு புதிய பரிமாணமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்றுப் பின்புலத்தில் 2015இல் மற்றொரு புதிய அறை கூவலாக கடந்த கால அனுபவங்களின் தொடர்ச்சியாக 'நீதிக்கான பறை' எனும் நிகழ்ச்சி மட்டக்களப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்களால் மீண்டும் முழங்கப்பட்டிருக்கின்றது.

மேலே நாம் குறிப்பிட்டுள்ள பெண்ணிலைவாதச் செயற்பாடுகள் அனைத்திலும் முக்கிய பங்கு வகித்த ஓவியரும்,பெண்ணிலைவாதியுமான கமலா வாசுகி அவர்களின் இணைப்பில் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்காக செயலாற்றி வரும் செயற்பாட்டாளர்களான ககோதரிகள் சிலரும் ஒன்றிணைந்து 'நீதிக்கான பறை' எனும் ஆற்றுகையினை கடந்த 14.02.2015 சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நிகழ்த்தியிருந்தார்கள்.

உலகளாவிய வகையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை, பாராபட்சங்களை இல்லாது ஒழிப்பதற்காக நடத்தப்பட்டு வரும் நூறு கோடி மக்களின் எழுச்சி எனும் நிகழ்ச்சியை முன்னிட்டு இப்பறை முழக்கம் இடம்பெற்றிருந்தது.

பெண்களின் விடுதலைக்காக இயங்கிக் கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்கள், நூறு கோடி மக்களின் எழுச்சியை விளங்கி அதில் கலந்து கொள்ள வந்த சிவில் சமூகப் பிரஜைகள்,கலைஞர்கள், கடற்கரைக்கு வந்த மக்கள், கிராமத்தவர்கள் எனப்பலர் இந்நிகழ்ச்சியினைப் பார்வையிட்டிருந்தனர்.

மட்டக்களப்பில் கடந்த இரண்டு தசாப்தங்களாக பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ச்சியாகச் செயலாற்றி வரும் சகோதரிகள் பறையினைத் தோளில் தொங்கவிட்டு ஓர் ஒழுங்கில் பல்வேறு பறைத் தாளங்களையும் வாசித்து பல்வேறு வடிவங்களில் சுமார் 50 நிமிடங்கள் ஆற்றுகை செய்து ஆற்றுகை நிறைவில் ஒருமித்து இது நீதிக்கான பறை என்று முழங்கி முடித்தார்கள்.

கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராகப் பேசி,எழுதி இயங்கி பல்வேறு அனுபவங்களையும் பெற்றுள்ள நாங்கள் அதனால் அடைய முடியாத நிலைமைகளை மேலும் எடுத்துக் காட்டுவதற்காக இந்த நீதிக்கான பறையினை முழங்க முன்வந்துள்ளோம் இம்முழக்கத்திலாவது பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிரான கவனம் செலுத்தப்படட்டும் என்று எதிர்பார்க்கிறோம். எனக் கருத்துரைத்திருந்தனர்.

ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் பெண்ணிலை வாதிகளின் போராட்ட உத்தி வித்தியாசமானது அது பழிக்குப்பழி வாங்கும் தன்மையற்றது, ஒவ்வொரு உயிரினதும் பெறுமதியினை பிரதானமாகக் கருதுவது,வன்முறையற்றது, மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவர்களையும் சேர்த்துச் செல்லும் இயல்புடையது, ஆக்கபூர்வமான வகைகளில் முன்னெடுக்கப்படுவது. கலைத்துவமும், படைப்பாக்கமும் கொண்டது. தெளிவான எண்ணக்கருவுடன் மேற்கொள்ளப்படுவது. இந்த வகையிலான ஓர் போராட்டமாகவே நீதிக்கான பறை ஆற்றுகை இடம்பெற்றுள்ளது.

பறை தமிழ் இனத்தின் ஆதிக்குடிகளின் இசைவாத்தியம் என்பது மானுடவியலாளரின் கருத்து, மனிதர்களுக்கு தாள ஒலிகளால் செய்தி கூறுவதற்குப் பறையே பயன்படுத்தப்பட்டுள்ளது. மங்கலச் செய்திகளைக் கூறுவதற்காகவும் அமங்கலச் செய்திகளைக் கூறுவதற்காகவும், மற்றும் பொதுவான சம்பவச் செய்திகளைக் கூறுவதற்காகவும் பல்வேறு  தாளஒலிகளைக் கண்டு பிடித்து அவற்றைத் தொகுத்து ஒழுங்குபடுத்தி செயல்முறைக் கற்பித்தலாக நம்முன்னோர் இவ்வாத்திய இசையாற்றுகை மரபினை வளர்த்து முன்னெடுத்துள்ளார்கள் என்பதை அறிகின்றோம்.

தென்னாசியாவில் ஏற்பட்ட சமஸ்கிருதமயமாக்கமும் வர்ணாச்சிரமப் பண்பாட்டின் கட்டமைப்பும், அதையடுத்து வந்த மேலைத்தேய காலனீயத்தின் நவீன மயமாக்கலும் பறையிசையின் பாண்டித்தியம் பெற்ற பூர்வீகக் குடிகளை சிறைக்குடியாகக் கீழ்மைப்படுத்தியது, பறையிசையினை தீண்டத்தகாதவரின் கலையாகக் கட்டமைத்தது வாழ்விற்கு முழங்கிய மங்கலப் பறையோசைகளை ஒலிக்க விடாது சாவிற்கு ஒலிக்கும் அமங்கல இசையினை மாத்திரம் இசைக்க அனுமதி வழங்கி அமங்கல ஒலியே பறையிசை என எண்ணும் விதமாகப் பொதுப்புத்தியில் பதிய வைத்தது.

பறை முழங்குவோரில் பெரும்பாலானவர்கள் காலங்காலமாகத் தம்மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் மேலாதிக்க ஒடுக்கு முறைகளுக்கு எதிராகத் தம்மனதிற்குள் கனன்று கொண்டிருக்கும் கோபத்துடனும், வெறுப்புடனும் பறையில் ஒங்கி அறைவதைப் போன்றே தம் ஆற்றுகைகளை நிகழ்த்துகின்ற அதேவேளை பறையினை இசைப்பதில் தமக்கிருக்கின்ற அலாதியான படைப்பாக்கத் திறனையும் வல்லமையினையும் வெளிப்படுத்துவதில் மிகவும் உற்சாகமாக செயலாற்றுவார்கள். இப்பறையிசையின் வித்துவம் மிக்க சமூகத்திலும் பெண்களுக்கு அப்பறையினை முழங்க அனுமதி வழங்கப்படவில்லை. ஒடுக்குமுறையினுள்ளும் பெண்கள் ஒடுக்கப்படும் நிலையினையே இது வெளிக்காட்டுகின்றது.


எனவே ஒரே நேரத்தில் சகல விதமான ஒடுக்கு முறைகளையும் எதிர்கொள்பவர்களாகப் பெண்கள் விளங்குகின்றார்கள் குறிப்பாக ஒடுக்கப்படும் சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் காணப்படுகின்றார்கள் இவ்விதமாக அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் முகம் கொடுக்கும் பெண்களின் விடுதலை முழு மனித குலத்தினதும் விடுதலைக்கான அறைகூவலாக அமையும் என்பது உண்மையாகும்.

இந்த வகையில் நமது தொன்மையின் அடையாளமாகவும் அதே நேரம் ஒடுக்கு முறையின் குறியீடாகவும் உள்ள பறையினை ஒடுக்கப்படும் பெண்களின் விடுதலைக்காகச் செயலாற்றும் பெண்கள் ஒடுக்கு முறையின் அனைத்து ரணங்களையும் தாங்கி கலையுணர்வுடன் எடுத்து அனைத்து மனிதரதும் வாழ்விற்காக நீதி கோரி முழக்கமிடுவது எல்லா வகையான ஒடுக்குமுறைகளிலுமிருந்து மனிதர்கள் விடுதலை பெறும் நோக்குடன் நடத்தப்படும் பெண்ணிலை வாதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மற்றொரு போராட்ட வடிவமாகவே அமைந்திருக்கின்றது.

இந்த நீதிப் பறையின் முழக்கங்கள் ஒவ்வொரு மனிதரதும் செவிகளூடாகச் சென்று உடலிலிலும் உள்ளத்திலும் அதிர்வுகளை உண்டுபண்ணி மாற்றங்கள் ஏற்படும் போதுதான் இவ்வுலகத்திற்கு நிலையான சமாதானம் வாய்க்கப்பெறும்.

துரை.கௌரீஸ்வரன்,
மட்டக்களப்பு.

நன்றி - http://www.battinews.com/

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்