/* up Facebook

Feb 8, 2015

பக்கிரி சாயபுவும் ஒரு பார்ப்பனப் பெண்ணும்.. - அ.மார்க்ஸ்


தஞ்சாவூர் நாயக்கர் வரலாற்றைப்  புரட்டிக் கொண்டிருந்தேன். விஜய ரகுநாத நாயக்கனின் ஆட்சியில் (1600 -1645) நடந்த ஒரு நிகழ்வு கவனத்தை ஈர்த்தது:

தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அருகில் இரு சமாதிகள் உள்ளன. ஒருசமாதி ஒரு முஸ்லிம் ஆணுடையது எனவும் மற்றது ஒரு பார்ர்ப்பனப் பெண்ணுடையது எனவும் கூறுவர். அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்றும் கூறுவர். வல்லத்திலுள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்தின் வழி வழிப் பராமரிப்பில் அச்சமாதிகளும் அதை ஒட்டிய கிணறு முதலியனவும் உள்ளன. தஞ்சை சரபோஜி கல்லூரியில் படித்த போதும், பணியாற்றியபோதும் பலமுறை அவ்வழியே செல்லும்போது கண்ணில் பட்ட அச் சமாதிகளை அருகில் சென்று பார்த்ததில்லை.

இச் சமாதிகள் குறித்து வல்லத்தில் உள்ள ஒரு செப்பேடு விரிவான கதை ஒன்றைச் சொல்கிறது. தொல்லியல் துறையைச் சேர்ந்த சந்திரவாணன் இதுகுறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தொல்லியல் துறை வெளியிட்டுள்ள கருத்தரங்கத் தொகுதி -1 ல் அது உள்ளது.

செப்பேடு விவரிக்கும் கதையின்படி அந்த முஸ்லிம் ஆணும் பார்ப்பனப் பெண்ணும் கணவன் மனைவியர் அல்லர்.ஆது வேறொரு கதையைச்  சொல்கிறது. அது:

ஆனந்தவருடம் (1614), கார்த்திகை மாதம் 13ம் நாளில் அன்று வல்லத்தையும் தஞ்சாவூரையும் பிரித்திருந்த  காட்டின் வழியே,  தஞ்சாவூரிலிருந்து வல்லத்தை நோக்கி "பக்கிரிசா" போகச்சே, வல்லத்திலிருந்து தஞ்சாவூருக்கு ஒரு ""பிறாமனத்தி(ய)ம்மாள்" போனாள். அப்போது  கள்ள(ர்) வந்து அவளை "பரிக்க" முயன்றனர். அவள் தன்னைக் காப்பாற்றுமாறு "பக்கிரி சாயபு காலில விளுந்தாள்".

பக்கிரிசாயபு அவர்களை நோக்கி, "பிறாமனத்தி உங்களுக்கு தெய்வமதுவாரி. அவளெ தொட வெண்டா மென்று" சொல்லித் தடுத்தார். ஆத்திரமடைந்த கள்ளர்கள் அவரைக் குத்திக் கொன்றனர். இதைக் கண்ட அந்த பார்ப்பனப் பெண், “எனக்கொசர அல்லொ பக்கிரி சாயபெ குத்திப் போட்டார்கள்  யென்று அவள் நாக்கெ பிடுங்கிக் கொண்டு செத்து போனா".

அதே கணத்தில் அவளைப் பாலியல் வன்முறை செய்யத் துணிந்த கள்ளர்களின் கண் பார்வைகள் பறிபோயின. அவர்கள்,"நாங்கள் அரிஞ்சு அரியாமல் செய்து பொட்டோம். யெங்கள்க்கு கன்னு வெளிச்சம் தந்திகளெ ஆனா உங்களுக்கு கோவில் கட்டிவிச்சு, கெனரும் வெட்டிவிச்சு குளமும் வெட்டிவிக்கிறொம்" என வேண்டிக் கொண்டனர்.

நாங்கு சாமங்களுக்குப் பிறகு அவர்களுக்குக் கண் பார்வை வந்தது. இந்தச் சம்பவத்தை அறிந்த விஜய ரகுநாத மன்னன் 1500 குழி நிலத்தைமானியமாக இந்தத் திருப்பணிக்குத் தந்தான்.

கல்வெட்டு மேலும் சொல்வது: இந்த மானியம்,” கல்லும்”, காவிரிப் “பில்லும்” உள்ளவரை நடப்பிக்க வேண்டும் எனவும், இந்தச் சாவுகள் நடந்த இப்பாதை காசி ராமேச்வரப் பாதை போன்றும்,”மக்கா மதினத்து” பாதை போன்றும் புனிதமானது என்றும்,, இந்த மானியத்திற்கு யாராவது அழிவு ஏற்படுத்தினால் (“மரிச்சால்”), “துலுக்கனாகப்பட்டவனா” யிருந்தால் அவன் ”பன்னியை அருத்துத் தின்னான்”, மரிச்சவன் சூத்திரனாக இருந்தால் “கெங்கை கரையில் பசுவெ கழுத்தெ அருத்தான்”. அதாவது இந்த மாநியத்தைத் தடுப்பவர்கள் இத்தகைய பாவத்திற்கு ஆளாவார்கள்என்பது பொருள். . இந்த மானியத்தை எல்லாவித உரிமைகளோடும் நாயக்க மன்னன் அளித்தான் எனச் செப்பேடு ஓய்கிறது.
“தஞ்சாவூர் நாயக்க வரலாறு” எனும் நூலில் (தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக வெளியீடு, 1999) நூலாசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியன்  இந்தச் செப்பேடு குறித்து விரிவாக எழுதியுள்ளார். இந்தச் சம்பவம் முற்றிலும் உண்மையாக நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு எனவும், இப்படி அதிர்ச்சியில் கண்பார்வை இழந்துப் பின்னர் பார்வை மீண்டும் துளிர்ப்பது அறிவியலுக்குப் புறம்பான ஒன்றல்ல எனவும் முடிக்கிறார்.

வரலாறு என்ற பெயரில் மன்னர்களைப் புகழ்பாடித் தொழுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளவர் நூலாசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியம். அவருக்குச் செப்பேடு சொல்லும் செய்தியில் எந்த ஐயமும் தோன்றாததில் வியப்பில்லை. எனினும் நமக்குச் சில அய்யங்கள் தோன்றுகின்றன. அவை:

அரசன் அளித்த மானியத்தை ஆவணப்படுத்தும் இச் செப்பேடு சொல்வதிலிருந்து ஒரு வேறுப்பட்ட கதையைக் காலம் காலமாக மக்கள் நம்பி வருவது எப்படி? அருகருகே சமாதியில் உறையும் அந்தச் சாயபுவும் பார்ப்பனியும் தம்பதியர் என வழி வழி நம்பிக்கை உள்ளபோது அவர்களிடையே அத்தகைய உறவு இல்லை எனச் செபேடு சொல்கிறது எது உண்மை?
வழியில் மறித்து வன்புணர்வு செய்ய முயன்ற கள்ளர்கள்தான் இருவரது மரணத்திற்கும் காரணமானவர்கள். அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டதாகச் செப்பேட்டில் பதிவு இல்லை. அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படவில்லை எனில் அது ஏன்?
அந்தப் பார்ப்பனப் பெண் எந்தத் துணையும் இன்றி கள்ளர் பயம் மிக்க ஒரு காட்டுப் பாதையில் தன்னந் தனியே வர நேர்ந்தது ஏன்?
அவள் ஒரு பார்ப்பனி. அவளை இந்து முறைப்படி சிதை அமைத்து எரிக்காமல் பக்கிரி சாயபுவுக்கு அருகில்  முஸ்லிம் முறைப்படி சமாதி அமைத்தது ஏன்?

இந்தக் கேள்விகளுக்குத் துல்லியமான பதில்களை அளிக்க இயலாதபோதும், விஜய ரகுநாத நாயக்கன் காலத்திய தஞ்சையின் சமூக அரசியல் வரலாற்றை கூர்மையாக நோக்கினால் இந்த நிகழ்வின் சமூகப் பொருளாதாரக் காரணிகளை நாம் அறிய இயலும். ஒரு வேளை ஒரு முஸ்லிமும் பார்ப்பனப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து வாழ்ந்ததை (லவ் ஜிகாத்???) பொறுக்காமல் அவர்களைக் கொன்று சாமியாக்கினார்களா?

தெரியவில்லை. செப்பேட்டு சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும் ஒரு மாற்று மதப் பெண்ணைக் காப்பதற்காக ஒரு முஸ்லிம் தன் உயிரை ஈந்த வரலாறு போற்றத் தக்க ஒன்று.. ஆனால் வரலாறு எழுதுபவர்கள் இந்த அம்சத்தை வலியுறுத்தாமல் இதையும் அரசனின் மாட்சிகளில் ஒன்றாக முன்வைத்துச் செல்வதுதான் வேதனை.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்