/* up Facebook

Feb 24, 2015

தியாகேஸ்வரியின் ”உண்மையின் ஒளி” கவிதை நூலின் வெளியீட்டுவிழா – சஞ்சயன்


தியாகேஸ்வரியின் ”உண்மையின் ஒளி” கவிதை நூலின் வெளியீட்டுவிழா இன்று ஒஸ்லோவில் நடைபெற்றது. ஒலிபரப்பாளராகவும், ஆசிரியராகவும் அறியப்பட்ட இவர் ஒரு கவிஞர் என்பது பலரும் அறியாதது.

நிகழ்ச்சிகளை தமிழில் சுதாகரன் சோமலிங்கம் மிகவும் நேர்த்தியாக தொகுத்துவழங்க, நோர்வேஜிய மொழியில் செல்வி பவனிதா தர்மரட்ணம் தொகுத்து வழங்கினார்.

நோர்வேஜிய நாட்டவர்களுக்கு புரிவதற்காகவே தேர்ந்த ஆங்கிலப்பேச்சாளராக சிவபாலன் காசிநாதர் அழைக்கப்பட்டிருந்தார் என்றே நம்புகிறேன். இவ்வாறான ஆங்கில மொழியாலான உரைகள் நோர்வேக்கு புதிது.

தியாகேஸ்வரியின் சில கவிதைகளை நோர்வேஜிய மொழிக்கு ஹம்சாயினி குணரட்ணம் அவர்கள் மொழிபெயர்த்திருந்தார். கவிதைகளை மொழிபெயர்ப்பது என்பது மிகச் சிரமமான விடயம். கட்டுரைகளைப்போன்று கவிதைகளை மொழியர்க்கமுடியாது என்பதும், இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுவதைவிட அவை மீள் மொழியாக்கம் செய்யப்படவேண்டும் என்றும் கருதுபவன் நான்.

கவிதையோ அல்லது நாவலோ அதன் உயிர்ப்போடு மொழியாக்கம் செய்யப்படும்போதே படைப்பாளியின் கருத்தும், உணர்வுகளும் பாரிய மாற்றங்கள் இன்றி வேற்றுமொழி வாசகனால் புரியப்படும். இது மிக மிக கடினமான விடயம். இதற்கு மொழிப்புலமை மட்டுமல்ல, துறைசார் நிபுணத்துவமும், ஆக்கத்தின் அடிப்படை உணர்ச்சிகளை, எழுதப்பட்ட சூழ்நிலையை, பின்புலத்தை, கலாச்சாரத்தை புரிந்துகொள்ளக்கூடிய மனநிலையும் வாய்க்கவேண்டும். அதேவேளை புதிய மொழியில் கவிதைகள் படைக்கப்படும் மொழிநுட்பத்தை அறிந்திருக்கவேண்டியதும் அவசியம்.

இன்றைய நிகழ்வில் நூலில் உள்ள பல கவிதைகள் தமிழில் வாசிக்கப்பட்டதை மிகவும் ரசித்தேன். கவிதைகளை வாசித்தவர்கள் அனைவருமே மிகவும் சிறப்பாக வாசித்தனர். பார்த்தீபனின் உணர்ச்சி மிக்க குரலில் வாசிக்கப்பட்ட கவிதையும் அழகு, அது வாசிக்கப்பட்ட விதமும் அழகு.

புத்தக வெளியீடுகளில் சிலர் புத்தகத்தை தவிர்த்து தனிமனித புகழ்ச்சிகளுக்குள் செல்வதானது நூலின் மீது செலுத்துப்படவேண்டிய கவனத்தை திசைதிருப்புவதாகவே இருப்பதாக உணர்கிறேன். அண்மைக்கால நூல்வெளியீடுகளிலும் இதனை அவதானிக்கக்கூடியதாக இருந்திருக்கிறது. இது வளமான பாதையா என்பதற்கான பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
மதுவந்தனா ரட்ணராஜாவின் தமிழும், குரலின் அழகும் இன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. அவருக்கு 14 – 15 வயதிருக்கலாம். ஆனால் அவரின் தமிழ் உச்சரிப்பும், ஏற்ற இறக்கங்களும் அத்தனை அற்புதமாய் இருந்தன. மயக்கும் குரல் உங்களுடையது, மதுவந்தனா. பாராட்டுக்கள்.

சிவபாலன் அய்யாவின் ஆங்கில உரை நோர்வேக்கு புதிது. ரத்தினச் சுருக்கமாக அவர் உரையில் பல விடங்களை தொட்டுச்சென்றார். கவிதையில் படிமங்கள், உருவகங்கள் பற்றிய அவரது கருத்து கவனிக்கத்தக்கது.

சிவதாஸ் மாஸ்டரின் உரையின் முக்கிய பகுதியாக கவிதையும் இரண்டாம் தமிழ்ச்சமுதாயமும் என்ற கருத்தைக் கொள்ளலாம். இரண்டாம் சமுதாயம் மொழியாழுமையைக்கொண்டது. அவர்கள் கவிதைகளை மொழியாக்கம் செய்ய முன்வரவேண்டும் என்றும், தமிழாசிரியர்கள் இலக்கிய உலகிற்கு இரண்டாம் சமுதாயத்தனரை அறிமுகப்படுத்த கடமைப்பட்டவர்கள் என்றும் கூறியது மிக முக்கியமான கருத்து. தமிழ் ஆசிரியர்களான ஒருவித சவாலாகவே நான் இதை நோக்குகிறேன். தங்களது மாணவ மாணவியர் 6 புள்ளிகளை பரீட்சையில் எடுப்பதைவிட, ஒரு மாணவன் அல்லது மாணவி தமிழ் இலக்கிய ஆர்வம் கொண்டவராக உருவாகுவார் எனின் அதுவே அந்த ஆசிரியரின் பெருவெற்றி என்று நான் கருதுவேன்.

பேராசிரியர் சண்முகரட்ணத்தின் உரை கவிஞரின் பல பக்கங்களை எடுத்துக்கூறினாலும், யதார்த்தமான வாழ்வியல் சிக்கல்களுக்கு ஆன்மீகம் தீர்வாகுமா என்று கேள்விபெயழுப்பினார். இன்றையநாளின் மிகச் சிறந்த கேள்வி இது என்றே நான் கூறுவேன்.

இன்றைய நிகழ்வில் உரைகள், வாழ்த்துக்கள்;, விமர்சனங்கள், பாடல்கள், நடனங்கள் என்று பல நிகழ்ச்சிகள் நடந்தேறின.
என்னைப் பொறுத்தவரையில் இருவழித்தொடர்பாடல்களையே அதிகமாக விரும்புபவன் நான். இன்றைய விழாவனாது ஒருவழித்தொடர்பாடலையே கொண்டிருந்தது. நூல்பற்றிய உரையாடல் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

எமது சமூகத்தில், அதுவும் ஒரு பெண்ணால் தனது வாழ்வியல் அனுபவங்களை கவிதைக்குள் அடக்குவது என்பது இலகுவான செயலன்று. மிகுந்த மனஉரம் இன்றி, வெளியிலிருந்து தன்னைநோக்கி சுயவிமர்சனம்செய்யாது இதனைச் செய்யமுடியாது.

இந் நூலினை நான் இதுவரை வாசிக்கவில்லை. ஆனால் இன்றைய நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதைகளில் பல ஒரு மனிதரின் வாழ்வியல் அனுபவங்கள் என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல.
வாழ்வு என்பது எதிர்பார்ப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் இடைப்பட்ட ஒரு போராட்டம் என்பதை நாம் அறிவோம். இதற்கு ஆண், பெண் என்ற வேறுபாடில்லை. அனைவரும் வாழ்க்கையின் பகடைக்காய்கள் என்பதே யதார்த்தம்.

ஒரு மனிதன் மீதான நம்;பிக்கை பொய்த்துப்போகும்போது எற்படும் பிரளயமானது மற்றைய மனிதரின் வாழ்வினை அலைபோல் அடித்துப்போய் ஒரு கரையில் தூக்கியெறியும்போது அதை எதிர்த்து நிற்கும் மனிதனின் மனநிலையை புரிய நாமும் அப்படியானதோர் ஏமாற்றத்திற்கு உட்பட்டிருக்கவேண்டுமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

நானும் இன்றைய கவிஞரின் பல கவிதைகளின் உள்ளடக்கத்தை கடந்துவந்தவன் என்பனாலோ என்னவோ பல இடங்களில் என் வாழ்வினை கவிஞரின் கவிதைகளினூடாக காணக்கிடைத்ததாகவே கருதுகிறேன். கவிஞர் ஒரு பெண். நான் ஒரு ஆண். ஆனால் வாழ்வியில் தந்துபோன அனுபவங்கள் இருவருக்கும் சமமாகவே இருக்கிறது.

புத்தகவெளியீடுகள் தனியே ஒருவழி தொடர்பாடலாக இருப்பதை நான் விரும்பவதில்லை. வாசகனும் படைப்பாளியும் சங்கமிக்கும் ஒரு இருவழித்தொடர்பாடலாகவே நூல்வெளியீகள் இருக்கவேண்டும் என்று விரும்புபவன் நான். இந்த வகையில் இன்றைய நாள் ஏமாற்றமானதே. நடைமுறைச் சிக்கல்கள் இதற்குக் காரணமாய் இருந்திருக்கவேண்டும் என்றே நம்புகிறேன்.

இருப்பினும் மிகவும் அழகானதோர் இலக்கிய மாலையைத்தந்த தியாகேஸ்வரிக்கு எனது நன்றிகள். நோர்வேயின் இலக்கிய உலகினுள் புதியதொரு பெண்கவிஞர் தனது வாழ்வியலை மூலக்கருத்தாகக்கொண்டு உள் நுழைந்திருப்பது மகிழ்ச்சியைத்தருகிறது.

நன்றி - Nortamil

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்