/* up Facebook

Feb 17, 2015

கேத்தி கெல்லி, தனது மூன்று மாதச் சிறை தண்டனையை மத்தியச் சிறையில் இன்று தொடங்கினார். தமிழில் கொற்றவைகேத்தி கெல்லி, ஆக்கப்பூர்வ அகிம்சாவழி (Creative Nonviolence) எனும் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் சமாதானத்திற்கான வீரர்கள் (Veterans for Peace) அமைப்பின் சர்வதேச ஆலோசனை மன்றத்தின் உறுப்பினரும் ஆவார்.

அமெரிக்காவின் இராணுவ மற்றும் பொருளாதார போர்களுக்கெதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஆக்கப்பூர்வ அகிம்சாவழி அமைப்பின் கேத்தி கெல்லி, மிசௌரியில் உள்ள வொயிட்மேன் விமானப் படைத் தளம் பயன்படுத்தும் ட்ரோன்களுக்கெதிரான (ஆளில்லா வான்வழி வாகனம்) தனது பிரச்சாரத்திற்காக மத்தியச் சிறையில் தனக்கு வழங்கப்பட்ட மூன்று மாத சிறை தண்டனையை இன்று தொடங்குகிறார். சிறைக்குள் செல்லும்முன் கேத்தி கெல்லியுடன் மெடேயா பெஞ்சமின் கண்ட பேட்டி இதோ:

மெடேயா: குறிப்பாக ட்ரோன்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் உணர்ந்தது ஏன் ஏன்று சொல்ல முடியுமா?

கேத்தி: இராணுவத்தின் சிறப்பு கூட்டு நடவடிக்கைப் படைப் பிரிவுகளை ட்ரோன்களோடு, வான்வெளி தாக்குதல் திறன்களையும் இணைக்கும் 21ஆம் நூற்றாண்டின் இராணுவவாதமானது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. இராணுவத்திற்கு இனியும் பரந்த தளங்கள் தேவையில்லை, ஏனென்றால் இந்தப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவர்கள் இப்போது மக்கள் தொகையை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம். மேலும் பயங்கரமான அச்சத்தையும் விதைக்கலாம். ட்ரோன்களைப் பயன்படுத்தும் செயலானது குரோதத்தையும் மோதலையும் உருவாக்குகிறது. மேலும், அப்பாவிப் பொதுமக்களை கொன்று குவிக்கும் செயலும் தொடர்கிறது.

நீண்ட காலங்களாக போர்களால் மக்கள் கொல்லப்பட்டு வந்திருக்கின்றனர். ஆனால் தற்போதைய காலங்களில் ட்ரோன்களின் உதவியோடு கொல்லப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் அப்பாவி மக்களே. ரிப்ரீவ் எனும் பிரிட்டிஷ் அமைப்பின் அறிக்கையின்படி, கொல்வதற்காக ட்ரோன்களால் இலக்காகத் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நபருக்கும், அப்பாவி மக்களில் 28 பேர் கொல்லப்படுகின்றனர்.

ஆயுதமாக்கப்பட்ட ட்ரோன்கள் இங்கு, அமெரிக்காவில் உள்ள தேசிய பாதுகாப்புத் தளங்களிலும், விமானப் படை தளத்திலும் இருந்து இயக்கப்படுகின்றன. ஆஃப்கானிஸ்தான் போன்று ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் இடங்களில் வாழும் மக்களை ஒரே ஒரு பொத்தானை அழுத்தி அவர்கள் கொல்கிறார்கள். உள்நாட்டு இராணுவ வீரர்களுக்கு எவ்வித சேதமுமின்றி, ஆளில்லா வான்வெளி வாகனம் மூலம் மற்றொரு நாட்டு மக்களை கொல்ல முடியும் தொழில்நுட்பத்தைக் கண்டு பலரும் மதிமயங்கிப் போகின்றனர். ஆனால் போர் முனைகளில் போரிடும் வீரர்களைப் போன்றே ட்ரோன்களை இயக்கும் வீரர்களும் மன வேதனையும், மன அழுத்தத்தையும் கொள்கிறார்கள் என்பதைக் காண நேர்கிறது.

மற்ற நாடுகள் இந்த ஆயுதங்களை வாங்குவதன் மூலம் நடைபெறும் ட்ரோன் பரவலாக்கம் குறித்தும் எனக்கு மிகுந்த கவலையாக உள்ளது. 1945இல், ஒரே ஒரு நாட்டிடம் மட்டும் அணு ஆயுதம் இருந்தது, ஆனால் இப்போதைய உலகைப் பாருங்கள். ட்ரோன் பரவலாக்க விஷயத்திலும் இதுவே நடைபெறும் என்றே நான் நினைக்கிறேன்.

அதேவேளை, ட்ரோன்கள் மீதான சமூக ஆர்வலர்களின் கவனத்தால் குறிப்பிடத்தக்க வெற்றியை நம்மால் அடைய முடியும் என்றும் நான் கருதுகிறேன். இத்திசையில் முன்னேறுவது தவறானது என்பதை மக்களுக்கு உணர்த்துவது இதன் மூலம் சாத்தியம். இது சர்வதேச சட்டங்களை மீறுவதாகமும். மேலும், அமெரிக்காவின் தளவாடங்களுக்கு அருகில் வசிக்கும் மற்ற மக்களையும் இலக்காக்கும் ஆபத்துகளையும் இது கொண்டிருக்கிறது.

இந்த விஷயத்தில் நாம் ஏற்கனவே ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். இந்த ட்ரோன் இயந்திரங்களை வாங்கிய மிக்‌ஷிகனில் உள்ள பேட்டில் க்ரீக் தேசிய விமானப் படை போன்ற தளங்கள் ஷேம்பைனைக் குலுக்கி பெருமையைக் கொண்டாடின. பேட்டில் க்ரீக் தளத்தில் ஆயுதமாக்கப்பட்ட ட்ரோன்களை இயக்குவதற்கான பயிற்சியில் பெரும் படைத் தளபதிகள் ட்ரோன் செயல்திட்டம் குறித்துப் பேச தயங்குகின்றனர்.

மெடேயா: வொயிட்மேன் விமானப் படை தளம் குறித்து எங்களுக்குச் சொல்ல முடியுமா. மேலும், மூன்று மாத சிறைத் தண்டனை கிடைக்கும் அளவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

கேத்தி: மிசௌரியில் நாப் நாஸ்டரில் உள்ள வொயிட்மேன் படைப்பிரிவு ஒன்று, ட்ரோன் போர்முறையின் மையப் புள்ளியாக்கப்பட்டுவிட்ட ஆஃப்கானிஸ்தான் மீது ஒரு ஆயுதமாக்கப்பட்ட ட்ரோனை இயக்குகிறது. இந்த ட்ரோன் தாக்குதல்கள் குறித்த எந்தவிதத் தகவல்களையும் வொயிட்மேன் விமானப் படை தளம் தெரிவிக்காது. ஆனால் அமெரிக்க குடிமக்களாக நாம் நம்முடைய பெயரால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளும் உரிமையை பெற்றிருருக்கிறோம்.

நான் ஆஃப்கானிஸ்தானில் நீண்ட காலங்களை செலவழித்துள்ளேன், நம்முடைய ட்ரோன்களால் பாதிப்புக்குள்ளான இளம் வயது மக்களோடு, அச்சத்தால் காபூலுக்கு ஓடிச் சென்று, பின்னர் உறவுகளை சந்திக்கக்கூட தாயகம் திரும்ப அஞ்சும் இளம் மக்கள், நீடித்த, துன்பகரமான போர் நிறைந்த ஒரு எதிர்காலத்தை மட்டுமே கண்டு துன்புறும் இளம் மக்களோடு நான் வாழ்ந்திருக்கிறேன்.

வொயிட்மேனில் உள்ள தளபதியின் கவனத்திற்கு இக்குறைகளை எடுத்துச் செல்ல விரும்பினோம். அதனால் நான் எல்லை தாண்டி அத்தளத்திற்குள் நுழைந்தேன். ஒன்றாக நின்று ரொட்டியை துண்டாக்குவது ஆஃப்கான் மக்களின் ஒரு குறியீட்டு நடவடிக்கை, அதனால் நானும் ஒரு ரொட்டித் துண்டையும், வொயிட்மேன் விமானப்படை தளத்தில் அன்றைக்கு எத்தனை மக்கள் கொல்லப்பட்டனர் என்று கேட்டு ஒரு கடிதமும் எடுத்துக்கொண்டு சென்றேன். அந்த எல்லையைத் தாண்டி ஓரிரு அடி எடுத்து வைத்திருப்பேன். கைது செய்யப்பட்டேன்.

நான் விசாரனைக்காக சென்றபோது, இராணுவ வழக்குறைஞர் நீதிபதியிடம் சொல்கிறார், “கனம் கோர்ட்டார் அவர்களே, செல்வி. கெல்லிக்கு அவசரமாக மறுவாழ்வு தேவைப்படுகிறது.” ஆனால் என்னைப் பொறுத்தவரை, நமது நாட்டின் கொள்கைகளுக்குத்தான் புனர்வாழ்வு தேவைப்படுகிறது. ஆஃப்கான் மீதான போருக்காக நாம் ஏற்கனவே 1 லட்சம் கோடி செலவு செய்துள்ளோம். மேலும் 12,000 கோடி செலவு செய்ய உள்ளோம். இந்த வருடத்திற்கு மட்டும் பெண்டகனுக்கு 5,700 கோடி தேவைப்படுகிறது. இன்று உலகமே எதிர்கொண்டுவரும் பருவநிலை மாற்ற நெருக்கடிகள் மற்றும் உலகளாவிய வறுமை போன்ற தீவிர பிரச்சினைகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தீர்ப்பதற்குத் தேவைப்படும் வளங்களை நாம் வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

மெடேயா: வொயிட்மேன் தளத்தின் எல்லைக்கோட்டை தாண்டியபோது, இத்தகைய நீண்டகால தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும்தானே?

கேத்தி: என்னுடைய சகாவான பிரையன் டெர்ரேல் முன்னதாக வொயிட்மேன் விமானப் படைத்தளத்திற்குள் எல்லைத் தாண்டி நுழைந்ததற்காக ஆறு மாத சிறை தண்டனைக்குள்ளானார். என்னையும் அதே நீதிபதிதான் விசாரித்தார், அதனால் எனக்கும் 6 மாத சிறைத் தண்டனையே என நினைத்திருந்தேன். மூன்று மாதம் என்று சொன்னதும் உண்மையில் வியப்படைந்தேன். நான் ஏதும் குற்றம் புரிந்ததாகக் கருதவில்லை; என் செயல் குறித்து எனக்கு பெருமையே. ஆனால் தண்டனை அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்த்தேன், ஒருவேளை, ஒரு மாற்றத்திற்கு நீதிபதி நல்லவராகத் தெரிகிறாரோ என்று எண்ணிக் கொண்டேன்.

மெடேயா: அப்படியென்றால் நீங்கள் இதை மீண்டும் செய்வீர்கள் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா?

கேத்தி: ஓ! நிச்சயமாக. ஆம், குறைகள் நிகழும் இடங்களிலேயே இப்பிரச்சினைகள் பற்றி நேரடியாக முறையிடுவது முக்கியம் என்று கருதுகிறேன். அப்படியென்றால் இப்பிரச்சினை இராணுவ தளத்தில் எழுப்ப வேண்டிய ஒன்றுதானே.

அதேபோல், இப்பிரச்சினைகளை அரசாங்கத்தின் அனைத்துக் கிளைகளுக்கும் எடுத்துச் செல்வதும் முக்கியம் என்றெண்ணுகிறேன். கோட் பிங் அமைப்பு காங்கிரஸின் அரங்கிற்குள் நுழைந்து அதிபர் ஒபாமாவுக்கு சவால் விடுத்ததைக் கண்டு நான் குதூகலமடைந்தேன், ஏனென்றால் நிர்வாக மற்றும் சட்டத் துறைகளுக்கு அழுத்தம் கொடுப்பது அவசியமானது. ஆனால் நாம் நீதித்துறையையும் குறிவைக்க வேண்டும். நாம் ஒவ்வொரு அலகாக முயற்சிக்க வேண்டும், மேலும் நமது குறைகளை வெளிப்படுத்த அரசியலமைப்பு நமக்கு வழங்கியிருக்கும் உரிமையை நாம் எப்போதும் வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

மெடேயா: ஜனவரி மாத தொடக்கத்தில் நீங்கள், சித்திரவதைக்கெதிரான சாட்சிகள் அமைப்போடு இணைந்து குவாண்டனாமோ சிறைச்சாலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தினீர்கள். துணை அதிபர் டிக் செனேவின் வீட்டிலேயே ஒரு போராட்டம் நடத்தினீர்கள். இதுபோன்ற கொள்கைகளை வகுப்பவர்கள் எவ்வித பொறுப்பையும் எடுத்துக்கொள்ளாத நிலையில் உங்களைப் போன்றவர்கள் சிறை தண்டனைக்குள்ளாவதை நீங்கள் எவ்விதமாகப் பார்க்கிறீர்கள்?

கேத்தி: நான் எவரையும் சிறைச்சாலைக்குள் காண விரும்புவதில்லை, ஏனென்றால், சிறைத் தண்டனை அமைப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் சிறை வைக்கப்படுவதை நான் காண விரும்புவதில்லை. புனர்வாழ்வில் நம்பிக்கை கொண்டவள் நான். கொலைகாரர்களாக, போர் ஆதாயம், அரசியல் நட்பாதாயம் தேடும் பேராசை மிக்க நபர்கள் மற்றும் எண்ணற்ற மக்களின் வாழ்வை பலியிடும் நபர்களுக்கு எங்கணம் மறுவாழ்வளிப்பது? அதை அறிந்துகொள்வது கடினமானது. குவேக்கர்களின் பாணியில் நான் தொடர விரும்புகிறேன், செனே, ரைஸ் மற்றும் புஷ் போன்றோரிடம் கொஞ்சம் நாகரீகம், நல்லெண்ணம் மற்றும் ஆற்றலைக் காண விரும்புகிறேன். சொல்ல முடியாது! இவர்களின் உதாரணப் போக்குகள் எதிர்கால தலைவர்களுக்கு சில அறிவுறுத்தலை வழங்கக்கூடும், அவர்களைப் போன்று இருக்கக்கூடாது என்ற அறிவுறுத்தலை அது வழங்கக்கூடும். யாருக்குத் தெரியும், அவர்களின் செயல்களால் விளையப் போவது என்னவென்று?

மெடேயா: சிறைச்சாலைகளுக்கு எதிரானவராக இருக்கும் நீங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சிறைத் தண்டனைக்கு உள்ளாகும் நிலைக்கு உங்களை வலிய உட்படுத்திக் கொண்டீர்கள் என்பது சுவாரசியமானதே. போரை எதிர்த்து எத்தனை முறை சிறை சென்றிருப்பீர்கள்?

கேத்தி: மத்திய சிறையில் இது எனக்கு நான்காவது முறை. மாகாண அளவிலான சிறைகளுக்கும், இதர காவற்கூடங்களுக்கும் நான் பலமுறை சென்றிருக்கிறேன், எண்ணிக்கை கிடையாது.

மெடேயா: எதிர்ப்பு தெரிவிக்க எத்தனையோ வழிகள் இருக்க, நீங்கள் ஏன் சிறை செல்லும் போராட்ட வழிமுறைகளையே கையாள்கிறீர்கள்?

கேத்தி: அமைதிக்காக போராடும் ஆர்வலர்கள் சிறைக்குச் சென்று, அவ்வமைப்பின் துன்பியல் நிலை குறித்தும், தண்டிப்பு முறை குறித்தும் தெளிவான உணர்வைப் பெறுவதென்பது முக்கியமானது. சிறைக் கைதிகளின் உண்மை நிலை குறித்தும், அவர்களுக்களிக்கப்படும் பயங்கரமான தண்டனை நடைமுறைகள் குறித்தும் என்னால் படித்து அறிந்துகொள்ள முடியும், ஆனால் அக்கதைகளை மனம் திறந்து கொட்டும் நபருக்கருகில் நான் அமர்ந்திருக்காவிட்டால் அது எனது இதயத்தையும் மனதையும் ஒன்றாகப் பற்றுவதில்லை. இதற்கு முன்னர் நான் பல முறை சிறை சென்றிருக்கிறேன், சிறையிலிருந்து வெளிவரும்போது ஏற்படும் உணர்வு எத்தகையது என்பதை நான் அறிவேன். கூரையின் மேல் ஏறி “இக்கூடாரங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை எவரேனும் அறிவீர்களா?” என்று கத்த வேண்டும்போல் இருக்கும்.

மெடேயா: நீங்கள் சிறையில் இருக்கும்போது எவ்வகையில் மக்கள் உங்களுக்கு ஆதரவளிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்களுக்கு கடிதம் எழுதுதல் அல்லது புத்தகம் அனுப்புதல் இது போன்று…

கேத்தி: எனக்கு நாவல்கள் மிகவும் பிடிக்கும், குறிப்பாக மற்ற நாட்டு நாவல்கள். சிகாகோவில் உள்ள Voices for Creative Nonviolence (ஆக்கபூர்வ அகிம்சா வழிக்கான குரல்கள்) அமைப்பை ஒருவர் தொடர்பு கொண்டு புத்தகங்களையும், கடிதங்களையும் எங்கு அனுப்ப வேண்டும் என்பதை அறியலாம். அதேபோல் உதவியும் அளிக்கலாம். சூழலியல் மற்றும் இராணுவவாதம் தொடர்பாக நாங்கள் ஒரு நடை பயணத்தை ஏற்பாடு செய்யவிருக்கிறோம்; தென் கொரியாவில் உள்ள ஜேஜு தீவு இராணுவமயமாக்கப்படுவதை எதிர்க்கும் இயக்கத்தில் சேர நாங்கள் எங்கள் தன்னார்வலர்களை அனுப்புகிறோம்; காபூலில் உள்ள ஆஃப்கன் அமைதி அமைப்பின் இளைஞர்களோடு இணைந்து பணி புரிந்து வருகிறோம்.

ஆதரவு காட்ட மற்றுமொரு சிறப்பு வழி உள்ளது. ஆஃப்கன் தன்னார்வலர்கள் தங்களது டூவெட் ப்ராஜெக்டில் – இல்லாதுபட்டவர்களுக்காக கம்பளிகள் உருவாக்கும் ஒரு செயல் திட்டத்தில் இணையலாம். காபூலில் ஒரு குளிர்காலத்தில், 26 மக்கள் உறைபனிக்கு ஒரே மாதத்தில் பலியானார்கள், அதில் 8 பேர் குழந்தைகள். அந்தப் புள்ளிவிவரங்களைப் படித்த பின்னர் ஏதும் செய்யாதிருப்பது சாத்தியமில்லை. அதனால் டூவெட் ப்ராஜெக்ட் தொடங்க நாங்கள் உதவினோம். பல்தரப்பட்ட பழங்குடி இனங்களிலிருந்து பெண்களை ஆஃப்கன் அமைதி தன்னார்வலர்கள் வரவழைத்தனர், மொத்தம் 60 பேர். கம்பளிக்கான பருத்தி, படுக்கை விரிப்புகள் மற்றும் நூல் போன்ற கச்சாப் பொருட்கள் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. மரணத்திற்கும் வாழ்விற்கும் இடையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அந்த கனமானக் கம்பளிகளை அவர்கள் தங்கள் வீடுகளில் நெய்து கொடுப்பார்கள். பின்னர், அத்தியாவசிய தேவை உள்ளவர்களுக்கு அக்கம்பளி மெத்தைகளை இளைஞர்கள் விநியோகிப்பார்கள். அவ்விளம் மக்களை நான் மிகவும் பாராட்டுகிறேன், ஏனென்றால் அவர்கள் சமூகசேவகர்கள் போல் பணி புரிகிறார்கள், களத்திற்கு சென்று தேவைகளை அறிந்து உதவி செய்கிறார்கள். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள தயையுள்ளம் கொண்டவர்கள் நன்கொடை அளித்து உதவியுள்ளார்கள். ஒவ்வொரு கம்பளி மெத்தைக்கும் 17டாலர்கள் செலவாகிறது, ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கம்பளிகளை விநியோகித்து இப்போது அது 40,000 டாலர்கள் மதிப்புள்ள திட்டமாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு (http://vcnv.org/the-duvet-project) நன்கொடை அளிப்பதன் மூலமும் மக்கள் உதவலாம்.
தமிழில்: கொற்றவை

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்