/* up Facebook

Feb 16, 2015

`ராதிகா சந்த்வனமு’


இந்திய குற்றவியல் சட்டத்தின்படி, ஆபாசமானது என்று கூறி தடைசெய்யப்பட்ட முதல் நூல் முட்டு பளனி (Muddu Palani) என்ற பெண்மணி எழுதிய `ராதிகா சந்த்வனமு’ (Radhika Santwanamu).

முட்டு பளனி, 17ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மாராட்டிய மன்னர் பிரதாபசிம்ஹாவின் (1736 -1763) விருப்ப நாயகிகளில் ஒருவர். பெண்களால் எழுதப்பட்ட மிக அரிதான காமசெவ்வியல் நூல்களில் `ராதிகா சந்த்வனமு’ -வும் ஒன்று. இது எழுதப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிறகு தடை செய்யப்பட்டது தான் சோகமான சுவாரசியம். ராதிகா சந்த்வனமு நூலை, 1887-ல் தெலுங்கு மொழியறிஞர் சி பி ப்ரவுன் தான் முதல் முறையாக பிரசுரித்தார். அவரின் உதவியாளர் வெங்கடநரசு 1907-ல் திரும்பவும் இதை பதிப்பித்தார்.

அதற்குப் பிறகு, மொழி அறிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான, கண்டுகுரி வீரேசலிங்கம் பந்துலு, தனது தெலுங்கு இலக்கியத் தொகுப்பில் ராதிகா சந்த்வனமு (முதல் பதிப்பு) நூலையும் சேர்த்தார். இந்த நூல் தெலுங்கையும், சமஸ்கிருதத்தையும் சிறப்பாக கலந்து எழுதப்பட்டிருப்பதாக சிலாகித்த பந்துலு, அதன் `உள்ளடக்க’த்தால் அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டார். இந்த நூலை எழுதியவர் ஒரு `ஆசைநாயகி’ என்பதால் இதில் வியக்க ஒன்றுமில்லை என்றும் `கருத்து’ கூறினார்.

சிறந்த பாடகியும், நடனமணியும், மெத்த படித்தவருமான பெங்களூர் நாகரத்னம்மா 1910-ல் இந்நூலின் புதிய பதிப்பை வெளியிடும் வரை பிரச்சனை எதுவுமில்லை. (நாகரத்னம்மாவைப் பற்றி – தேவதாசி இனத்தைச் சேர்ந்தவர், மெட்ராஸ் தேவதாசிகள் சங்கத்தை ஏற்படுத்தி இப்பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்)

இதுவரை பதிப்பிக்கப்பட்ட `ராதிகா சந்த்வனமு’ நூலில் உள்ள பிழைகளைக் களைவதோடு, வீரேசலிங்கத்தின் இரட்டைவேடத்தை தோலுரித்து காட்டவும் புதிய பதிப்பை நாகரத்னம்மா வெளிட்டார்.

முட்டு பளனியின் நூலை கண்டனம் செய்யும் வீரேசலிங்கம், இந்த நூலை விட பாலுறவை விரிவாகப் பேசுகின்ற, ஆண்கள் எழுதிய பிற நூல்களை எப்படி ஏற்றுக் கொண்டார்? மட்டுமல்ல, அந்த நூல்களை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் சேர்க்கவும் பரிந்துரைத்தாரே என்று பதிப்பின் முன்னுரையில் நாகரத்னம்மா காட்டமாக கேள்வி எழுப்பினார். ஒரு பெண் எழுதியதால் மட்டுமே காமசெவ்வியல் நூலானது வெட்கங்கெட்டு போய்விட்டதா என்று சாடினார்.

வீரேசலிங்கம் தரப்பால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சசிரேகா என்ற தெலுங்குப் பத்திரிகை நாகரத்னம்மா பதிப்பித்த இந்நூலை கடுமையாகத் தாக்கி கட்டுரை எழுதியது. ஒரு `விபச்சாரியால்’ எழுதப்பட்டு இன்னொரு `விபச்சாரியால்’ தொகுக்கப்பட்ட இந்த நூல், இளைஞர்களின் மனங்களைக் கெடுக்கக் கூடியது என்று இழிவாக விமர்சித்தது.

நூறாண்டுகளாக இந்நூல் இருந்ததை அனைவரும் வசதியாக மறந்துவிட்டு, திடீரென்று விழித்துக் கொண்டு நடவடிக்கைகளில் குதித்தனர். நூலைப் பிரசுரித்த வவில்லா ராமசுவாமி சாஸ்திரிலு அன் சன்ஸ் பதிப்பகத்தை காவல்துறை ரெய்டு செய்து, பல்வேறு தலைப்பிலான புத்தகங்களை (வீரேசலிங்கம் எழுதியவை உட்பட) கைப்பற்றியது. எதற்காம் ? `ராதிகா சந்த்வனமு’ நூலை மாத்திரம் குறிவைப்பதாக யாரும் நாக்கு மேல பல்லைப் போட்டு சொல்லிவிடக் கூடாதல்லவா, அதற்குத் தான் இந்த பாவ்லா. பிற்பாடு, இந்த புத்தகங்கள் எல்லாம் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, 8 நூல்கள் மட்டும் ஓர் ஆய்வுக் குழுவிடம் தரப்பட்டன.

இதற்கு நாகரத்னம்மாவும், தெலுங்கு அறிஞர்கள் பலரும் காட்டிய எதிர்ப்பு வீணாய் போனது. இந்த நூல்கள் தடை செய்யப்படுமானால், ஷேக்ஸ்பியரின் Venus and Adonis, The Rape Of Lucrece போன்றவற்றையும் தடை செய்வார்களா என்றெல்லாம் கேட்டும், ஆங்கிலேய கவர்னரைப் பார்த்து உதவி கோரியும் ஒன்றும் பலனில்லை. 8 நூல்களில் ராதிகா சந்த்வனமு –வை மட்டும் தடை செய்யுமாறு, 1911 இறுதியில் ஆய்வுக் குழு அரசிடம் கூறிவிட்டது. காமசெவ்வியல் நூலை ஒரு பெண் எழுதியதுதான் தலையாய குற்றமானது. 1912 ஜூலை 4 ஆம் தேதி ஆங்கிலேய அரசு இந்த நூலை தடை செய்து ஆணை பிறப்பித்தது. 

(இந்தியா விடுதலை பெறும் வரை இந்த தடை இருந்தது. 1947-48 –லில் டி.பிரகாசம் முதலமைச்சரான போது தடையை நீக்கினார்.)
காமத்தை ஆண்கள் எழுதினால் தப்பில்லை, `செவ்வியல் இலக்கியமாக’ கருதி, பல்கலைக்கழகத்தில் பாடமாகக் கூட வைக்கலாம்.

ஆனால், ஒரு பெண் எழுதிவிட்டால் எல்லாமே போச்சு. அற்புதமான மொழிநடையில், உண்மையான செவ்வியல் இலக்கியமாகவே இருக்கட்டுமே…. காமத்தை ஒரு பெண் எப்படி எழுதலாம்? ஆபாசம், அசிங்கம், இளைஞர்களை கெடுத்து விடும்… பெண் இதைத் தான் எழுத வேண்டும், இதை எழுதக் கூடாது என்று `மெத்த படித்த ஆதிக்க சமுதாயம்’ தானே தீர்மானிக்க வேண்டும் ?! மீறி எழுதுகிறாளா, நூலை தடை செய் ! நூற்றாண்டுகளைக் கடந்தாலும், இந்த ஆதிக்க மனோபாவத்தில் இன்றும் ஒன்றும் மாற்றமில்லை.

நன்றி - கீதா இளங்கோவன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்