/* up Facebook

Feb 14, 2015

ஆதலினால் காதல் செய்வீர் !


காதலை கேவலமாக சித்தரிப்பதும் சரி, காதலை அதீத புனிதமாக கற்பிப்பதும் இரண்டுமே தவறு . அது ஒரு உணர்வு அவ்வளவு தான்.

அதில் என்ன வகைப்பாடு வேண்டி கிடக்கிறது ? அதுவும் "கள்ளக்காதல்" என்ற பதத்தை நாளிதழில் படிக்க நேரிடும்போதெல்லாம் அத்தனை முரணாக தோன்றும். காதல் என்பது ஒருவரிடம் தோன்றும் உணர்வு அதில் நல்ல காதல் எது கள்ளக் காதல் எது ? ஒருவனுக்கு ஒருத்தியை வரையறை செய்துள்ள சமூகத்தில் அந்த ஒருவனை அல்லது ஒருத்தியை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதிக்காத நிலையில், காதலை கள்ளக்காதல் என வரையறுப்பது இந்த சமூத்தின் கேடு.

வாழ்கையில் துணை என்பதை விட... ஒரு நீண்ட கால உறவு என்ற அழுத்தமுடன், சமூக நிர்பந்தங்களுடன் ஒரு தனிமனிதனை கொட்டிலடைக்கும் மனநிலைக்கு தள்ளுகிறது " அரேஞ்டு மாரேஜ் " என்ற அமைப்பு.பிடிக்காத ஒத்தே வராத துணையோடு (?) சமூக நிர்பந்தத்தில் வாழும் அட்ஜஸ்ட்மென்ட் தான் வாழ்கையா ? அதில் யாருக்கு என்ன நன்மை இருக்கிறது ?

இன்றும் பழங்குடியினரிடம் தனக்கு பிடிக்கவில்லை எனில், அந்த வாழ்கைத் துணையை புறந்தள்ளிவிட்டு அடுத்த துணையை தேட, அப்பெண்கள் தயங்குவதில்லை. அப்பெண்களின் குழந்தையோடு திருமணம் செய்துகொள்ளும் ஆண் , அந்த பெண்ணையும் அக்குழந்தையையும் இயல்பாக குடும்பமாக சுவீகரிக்க முடிகிறது. அங்கே குடும்பம் என்ற அமைப்பு சிதறவில்லை. வலுவாகவே கட்டுக்கோப்புடன் இயங்குகிறது. ஆனால் நாம் எத்தனை பூடகமான சமூகமாக இயங்குகிறோம்?

இந்து ஆணாதிக்க சாதிய வெறி பிடித்த சமூகம், பெண்ணையும் ஆணையும் அவர்களது தனிமனித ஒழுக்கத்தையும் வரையறை செய்து உயர்த்திப் பிடிக்கும் ஒழுக்க நியதிகள், உண்மையில் சதி என்பதை புரியாது மதம் சொல்லிவிட்டது என வரையறைக்குள் இயங்கும் நாம் உண்மையில் நாகரிக சமூகம்?! ஆனால் பெண்களின் உரிமைகளோடு கூட்டுவாழ்கையாக நிலங்களை பகிர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருக்கும் பழங்குடியினரின் வாழ்கை, நாகரிகமற்ற வாழ்கை !?
ஆக, காவிகள் எதற்காக காதலை வெறுக்கிறார்கள் என்ற நியாயம் இப்போது புரியுமென நினைக்கிறேன்.தன் துணையை தானே தேர்ந்தடுப்பது தவறு என என்னும் பெற்றோர்கள், இனி நடுத்தர குடும்பங்களில் அதிகம் இருக்கமாட்டார்கள் என்ற நிலை ஒரு விதத்தில் ஆறுதல் தருகிறது.

அதே சமயம் இந்த சமூகம், காதலை சாதி கடந்து அனுமதிப்பதில்லை என்பதும், அதுவே காதல் திருமணம் செய்துகொண்டவரில் ஒருவர், தாழ்த்தப்பட்ட சாதியாக இருந்தால் அத்தம்பதியரின் திருமணம் எப்படியேனும் முறியடிக்கப்பட வேண்டும் என்ற வன்மமும் கொண்ட சமூகம் இது என்பதை காதலர் தின கொண்டாட்டத்தில் மறந்துவிடுகிறோம்.

நம் காதலை கொண்டாடும் தருணத்தில் , கொலை செய்யப்பட்ட இளவரசன்களும் விமலாதேவிகளும் காதலிக்க தகுதி அற்றவர்களா என்பதையும் தன் வாழ்கை துணையை தானே முடிவு செய்தது, அத்தனை பெரிய குற்றமா என்ற கேள்வியையும் வசதியாக மறந்து விடுகிறோம். என்னை பொருத்தவரை காதல் , பெண்களின் விடுதலையை உறுதி செய்யும். சாதியை புறம் தள்ளும். தனக்கான துணையை தேர்ந்தெடுக்க வழி கிட்டும். காதல் திருமணம், ஆணாதிக்க சமூகத்தை உடைக்கும் , சாதியத்தின் முகவரியை அழிக்கும் .

ஆதலினால் (பெண்களே) காதல் செய்வீர் ! 
ஆதலினால் காதல் செய்வீர் !

நன்றி Meena Somu வின் முகநூலிலிருந்து.0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்