/* up Facebook

Feb 11, 2015

சினிமா கதாநாயகி: நிஜத்தை எப்போது பிரதிபலிப்பாள்? - யதி


பெயர்தான் கதாநாயகி. ஆனால், திரைப்படங்களில் பெரும்பாலும் ஊறுகாய் கதாபாத்திரம்தான் அவளுக்கு.

ஆரம்பக் காலங்களில் வந்த இதிகாசப் படங்களில் கணவனே கண்கண்ட தெய்வம் என்று சாமியாராக இருந்தாலும் கணவனுக்கு பணிவிடை செய்வது, அரசனாக இருந்தால் பத்தோடு பதினோராவது மனைவியாக இருக்க சபிக்கப்பட்டாள் கதாநாயகி.

அடுத்தக்கட்டமாக தமிழ்ச் சினிமா, சமூகப் படங்கள் என்கிற அவதாரமெடுத்தபோது, புறக்கணிப்பு, புகுந்த வீட்டில் கொடுமை என துன்பப்பட்டு அடியும் உதையும் வாங்கினாள் நம் கதாநாயகி. பின் மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமையான கணவனால் உதாசீனப்படுத்தப்பட்டாள்.

அடுத்த தலைமுறை இயக்குனர்கள், அவளை, தன்னை வேறொருவனுடன் சந்தேகிக்கும் கணவனிடம் போராட வைத்தார்கள். இப்போது போராட எல்லாம் வேண்டியதில்லை. கொஞ்சமே கொஞ்சமாக உடை உடுத்த வைத்தால் போதும் என்று வரையறுக்கப்பட்டு இருக்கிறாள், நம் கதாநாயகி!

திமிர் பிடித்த பணக்காரக் கதாநாயகிகளை, கதாநாயகன்கள் காதலித்து, கைப்பிடிக்கும் கதைகள் இங்கு ஏராளம். அதாவது, அவள் திமிரை அவன் அடக்கிவிட்டானாம். இதனால் அனைவருக்கும் சொல்லப்படுவது என்னவென்றால், தைரியம், துடுக்குப் பேச்சு, திமிர் இவையெல்லாம் பெண்களுக்கு ஆகாதது. ஆனால், அதே திமிர்தான் ஆண்மகனின் அழகு.

கதாநாயகனும், வில்லனும் சந்தித்துக்கொள்ள, பல மாமாங்கங்களாக ஒரே சீன்தான் தமிழ் சினிமாவில். கதாநாயகியை வில்லன் பாலியல் தொந்தரவு செய்வான். உச்சக்கட்டமாக வில்லனின் கை அவள் மீதுபடும் வேளையில், எங்கிருந்தாலும் பறந்து வந்து, வில்லனின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி, ஹீரோ காப்பாற்றுவான். பெண்கள் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள முடியாது, எங்கிருந்தோ ஒரு ஆண்மகன் வந்துதான் காப்பாற்ற முடியும் என்பதை, இந்த சீன் சொல்லும் அறமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு குடும்பத்தின் மானம், மரியாதை, கௌரவம் எல்லாம் கதாநாயகியின் கையில்தான் இருக்குமாம். ஆனால், அவளுக்கான உரிமை, சுதந்திரம் மட்டும் கிடைக்கவே கிடைக்காது.

‘குழந்தைக்காக கணவனின் கொடுமைகளைச் சகித்துக் கொள்ளுதல்’ என்ற விதி, கதாநாயகி மூலம் சில படங்களில் சொல்லப்பட்டது. அவன் செய்யும் அத்தனைக் கொடுமைகளையும் சகித்து, பின் கிளைமாக்ஸில் ஒருவழியாக கணவன் திருந்தி மன்னிப்புக்கேட்க, அப்போதுகூட, ‘அய்யோ... அப்படி எல்லாம் சொல்லாதீங்க’ என்று பதறி அவன் கால்களைப் பற்றிக் கொள்பவள் நம் கதாநாயகி. சில படங்களில் வில்லனின் மனைவி பாத்திரமும், இதையேதான் ப்ளே செய்யும். கொடூரங்கள் செய்கிற தன் கணவன் என்றாவது ஒருநாள் திருந்திவிடுவான் எனக் காத்திருந்து, இறுதியில் கதாநாயகனால் அவன் திருத்தப்பட, கிளைமாக்ஸில் ஹீரோவுக்கு கையெடுத்து நன்றி சொல்லி, அவனிடம் அடி வாங்கி கிழிந்து கிடக்கும் தன் கணவனைத் கைத்தாங்கலாக அழைத்துச் சொல்வாள்.

கதாநாயகிகளின் ஒழுக்கத்தைக் கேள்வி கேட்கும்போது, அவள் பதிலளிக்காமல் அழுதுகொண்டே அங்கிருந்து நகரும் காட்சிகளும் இங்கே கிளிஷே. சமூக மதிப்பீடுகளைச் சொல்லி எளிதில் வீழ்த்தக்கூடிய கதாநாயகிகள் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படி, ஒழுக்கம் குறித்து கேள்வி எழுப்பப்படுவதுதான் பெண்ணுக்கு நேரும் உச்சக்கட்ட அவமானம், தண்டனை என்று உருவாக்கி வைத்துள்ளனர். பெண்கள், சினிமா படங்களிலும்கூட தாங்கள் ஒழுக்கமானவர்கள் என நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

கதாநாயகன், தாய்தான் தெய்வம் என்பான், சமூக அவலங்களைத் தட்டிக் கேட்பான், தங்கை திருமணத்துக்கு தலைகீழாக நின்று மெனக்கெடுவான், நண்பனுக்காக வீண் பழியை ஏற்பான். ஆனால், காதலியின் காதலை மட்டும் ஏற்க மாட்டான். தன் கடமைகளுக்கு இடையூறாக எண்ணி கதாநாயகியை மட்டும் தள்ளி வைக்க, அவளோ வேறு வேலை, வெட்டி இன்றி இவன் பின்னாடியே உருகி உருகிச் சுற்றுவாள். ஏன், பெற்றோர் மீதான மரியாதை, படிப்பு, சமூக அக்கறை, எதிர்கால லட்சியம் இதெல்லாம் பெண்களுக்கு இருக்காதா? பொறுப்பு என்றால் அது ஹீரோவுக்கு மட்டும்தானா? உண்மையில் ஹீரோ அந்தஸ்தை அடைய தன் சம கதாபாத்திரத்தை ஒரு படி கீழே இறங்கச் செய்து, அதில் இவன் ஏறி நிற்கிறான் என்பதே உண்மை.

மிகக் கொடுமையான காட்சியமைப்பு அது. நாம் பல திரைப்படங்களில் பார்த்தது. ஒரு பெண்ணைக் கற்பழித்தவனுக்கே  திருமணம் செய்து வைப்பது. பாலியல் வன்புணர்வுக்கு இப்படி ஒரு அநியாய நியாயத்தைச் சொன்னவை நம் திரைப்படங்கள். அவன் ரௌடியாக இருந்தாலும், கதாநாயகி காந்திய வழியில் சென்று அவனைத் திருத்தி அவனுடன் வாழ்வதையே தம் லட்சியமாகக் கொண்டிருப்பாள்.

சினிமா பொழுதுபோக்கு மீடியமாக இருக்கலாம். ஆனால், அதைப் பார்த்து ஃபாலோ செய்பவர்கள் அதிகம் பேர் என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தனை பவர்ஃபுல்லான ஒரு மீடியம், பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுத்தால் என்ன என்றுகூட கேட்கவில்லை. பெண்களை அவமதிக்க, அசிங்கப்படுத்தக் கற்றுக்கொடுக்காமல் இருந்தால் போதும் படைப்பாளிகளே!

நன்றி - ஆனந்த விகடன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்