/* up Facebook

Feb 28, 2015

சுகப்பிரசவம் - மகப்பேறு மருத்துவ நிபுணர்களான சென்னை ஷமீக் அக்தார், ஸ்ரீ கலா பிரசாத், திருச்சி பி. கமலம், பிரசவ கால உடற்பயிற்சி ஆசிரியர் ரேகா சுதர்சன்.


பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர உணர இன்றைய காலகட்டத்தில் எத்தனை தாய்களால் முடிகிறது? 

இயற்கையான சுகப்பிரசவம் நிகழ வாய்ப்பு இருக்கும் நிலையிலும்கூட அறுவைச் சிகிச்சை செய்யச் சொல்லும் வற்புறுத்தல்கள் மருத்துவர்கள், கர்ப்பிணிகள் என இரு தரப்பிலுமே மிகுதியாகிவிட்டன. சுகப்பிரசவம் நடப்பதில் பிரச்னை என்று வந்தால் மட்டுமே அறுவைச் சிகிச்சைக்குப் போக வேண்டும் என்கிற புரிதல் அனைத்து தாய்மார்களுக்கும் உருவாக வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் இங்கே விளக்குகிறார்கள் பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர்களான சென்னை ஷமீக் அக்தார், ஸ்ரீ கலா பிரசாத், திருச்சி பி. கமலம், பிரசவ கால உடற்பயிற்சி ஆசிரியர் ரேகா சுதர்சன்...

1 கருத்தரிப்பதற்கு முன் கலந்தாய்வு . . .

திருமணமாகி கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன் - மனைவி இருவரும் மருத்துவரிடம் ஒரு கலந்தாய்வுக்குச் செல்வது நல்லது. இந்தக் கலந்தாய்வில் பெண் மற்றும் அவரது கணவரின் குடும்பச் சூழல், குடும்ப வரலாறு ஆகியவற்றை மருத்துவர் தெரிந்துகொள்வதோடு, தம்பதியில் யாருக்கேனும் ஏதேனும் பரம்பரை நோயோ, பெண்ணுக்கு தைராய்டு, சர்க்கரை நோய், இதய நோய், ஹெபடைடிஸ் பி, ரத்த அழுத்தம், வலிப்பு நோய், ஹெச்.ஐ.வி. போன்ற நோய்களோ இருக்கின்றனவா என்பதையும் கண்டறிவார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரசவத்துக்கு ஒரு தம்பதி தயாராக இது உதவும்.

2 உணவை விரும்பு . . .

கருவுற்ற நாளில் இருந்து தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு உடலில் நீர்ச் சத்து குறைந்து எடை குறையலாம். சுகப்பிரசவத்துக்கு தாயின் உடல்நிலை இன்றியமையாதது. அதேபோல், குழந்தையின் எடை 3 முதல் 3.5 கி.கி. வரை இருந்தால்தான் குழந்தையின் தலை வெளியே வர ஏதுவாக இருக்கும். இதனால், உணவு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.

3 எதைச் சாப்பிடலாம் . . .

முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக்கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். திட உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் பழச்சாறு போன்ற திரவ உணவுகளையேனும் எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சமயங்களில்பெண்கள் உணவை வெறுத்தால், அதுவே ஊட்டச் சத்துக் குறைவை உருவாக்கி ரத்த சோகைக்கு வழிவகுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் தாயின் உடல் - மன வலிமையையும் குறைத்துவிடும். ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நல்ல ஊட்டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம். நீர்ச் சத்துக்கு இளநீர், வாந்தியை எதிர்கொள்ள மாதுளை, இரும்புச் சத்துக்குப் பேரீச்சை ஆகியவை இந்த நாட்களில் பேருதவி செய்யும். 4-வது மாதத்தில் இருந்து இரும்புச் சத்து மிக்க கீரை, காய்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைந்தால் ஹீமோகுளோபினின் அளவும் குறையும். இந்த ஹீமோகுளோபின்தான் உடலின் பிற பாகங்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்ல உதவுகிறது. இதன் அளவு குறையும்போது குழந்தைக்கும் தேவையான பிராண வாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படும். இதனால் போதிய இரும்புச் சத்து உள்ள உணவுகளையோ, மாத்திரைகளையோ எடுத்துக்கொள்வது தேவையாகிறது. நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ள காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், மலச்சிக்கல் பிரச்னையை முறியடிக்க முடியும். கீரை, ஓட்ஸ், புதினா, உலர் திராட்சை, கொத்தமல்லி, பேரீச்சை போன்ற உணவுப் பொருட்களில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. கொண்டைக்கடலை, ராஜ்மா, பயறு வகைகளில் கால்சியம், புரதச் சத்து அதிகம் இருக்கிறது. உருளை, கேரட், வேர்க்கடலை, பாதாம் பருப்பு வகைகளில் புரதம் இருக்கிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நூக்கோல் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. அன்றாட உணவில் இவற்றைச் சமச்சீரான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தது தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடித்தால், தாய்க்கு நல்லது. குறிப்பாக பனிக்குடத்துக்கு நல்லது!

4 குனி, வளை, நிமிர் . . .

சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக்கொள்ளும். பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல்லது. அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இதனால், உடல் தசைகள் வலுப்பெற்று, குழந்தை சரியான நிலையில் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். பிரசவமும் சுலபமாகும். தினமும் காலையில், முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம்.

5 சபாஷ் சரியான எடை . . .

கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம். இவை இரண்டுமே இல்லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்கிறது என அர்த்தம். இதனால், கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த வீக்கம் கணுக்காலுக்குக் கீழே மட்டும் இருக்கும். அதுவும் நன்றாகத் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டியும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உப்பின் அளவைக் கண்டறிந்து, அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இத்துடன் ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பேறுகாலத்தின்போது வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டியது அவசியம்.

6 படுக்கையும் உறக்கமும் . . .

கர்ப்பிணிகள் முதல் நான்கு மாதங்கள் மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் சாலச்சிறந்தது. இரவில் எட்டு மணி நேரத் தூக்கமும், பகலில் ஒரு மணி நேரத் தூக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம். முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத்தைத் தவிர்ப்பது நலம்.

7 ஒரே மருத்துவர் . . .

பொதுவாக முதல் 28 வாரங்களுக்கு மாதம் ஒரு முறையும் அதற்குப் பிறகு 28 முதல் 36 வாரங்கள் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும் 36-வது வாரம் முதல் பிரசவம் வரை வாரம் ஒரு முறையும் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே ஒரே மருத்துவரை அணுகுவது நல்லது. நம் உடல்நிலையைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சையை அளிக்க மருத்துவருக்கு எளிதாக இருக்கும்.

8 தவறாத மருந்துகள் . . .

தாய், சேய் இருவருக்கும் டெட்டனஸ் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க நான்கு வார இடைவெளியில் இரண்டு தடவையாக ரண ஜன்னி ஊசி போடவேண்டும். ஃபோலிக் அமில மாத்திரைகளை திருமணமான முதலே பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், இது கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஏற்படக் கூடிய சில பிறவிக் குறைபாடுகளைத் தடுக்கும். ரத்தசோகை பாதிப்பு உடையவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை அல்லது ஊசி தேவைப்படலாம். தவிர, அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப தேவைப்படும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது முக்கியம்.

9 கூடாது... கூடாது... கூடவே கூடாது . . .

வயிறு பெரிதாக பெரிதாக அதிக எடையைத் தூக்குவது, ஓடுவது, குடத்தை இடுப்பில் வைப்பது, நாற்காலியின் மீது ஏறுவது போன்ற கடுமையான செயல்களில் ஈடுபடவே கூடாது. தரையில் கால்களை நன்றாக ஊன்றி நடக்க வேண்டும். கால்களைத் தொங்கப் போட்டபடி உட்காரக் கூடாது. அடிக்கடி கால்களை நீட்டி, மடக்க வேண்டும். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காரக் கூடாது. ஒரே மாதிரியான வேலைகளைத் தவிர்க்க வேண்டும். உடல் முழுவதுக்கும் அசைவு கொடுக்கக் கூடிய பல்வேறு வேலைகளில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் தசைப்பிடிப்பு, கால்கள் மரத்துப்போதல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இப்போதைய பெண்கள் பிரசவத்தின்போது காலை மடக்கவே மிகவும் கஷ்டப்படுகின்றனர். இந்திய டாய்லெட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கால்களை எளிதாக நீட்டி, மடக்க முடியும். நொறுக்குத் தீனிகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நலம். இது மனச் சங்கடங்களைத் தவிர்க்க உதவும்.

10 அகமே சுகம் . . .

தாயின் உடல்நலன் எவ்வளவு முக்கியமோ மனநலனும் அவ்வளவு முக்கியம் சுகப்பிரசவத்துக்கு. இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்துக்கு மிகப் பெரிய எதிரி பெண்களுக்குப் பிரசவ வலி மீது உருவாகி இருக்கும் பயம். இந்தப் பயத்தை எதிர்கொள்வதற்கு தாயும் தன்னளவில் தயாராக வேண்டும்; குடும்ப உறுப்பினர்களும் தாயைத் தயாராக்க வேண்டும். 'இது ஒரு பிரச்னையே இல்லை; உனக்கு எதுவென்றாலும் உதவ நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்’ என்று ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்கு நம்பிக்கை அளிக்க குடும்பத்தினர் தவறக் கூடாது. தாயின் மனநிலையை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். தாயும் நல்ல உணவைப் போலவே நல்ல இசை, நல்ல புத்தகங்கள் என மனதை இதமாக வைத்துக்கொள்ளும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல் நலம். தியானம் மனதை ஒருமுகப்படுத்த உதவுவதோடு தேவையில்லாத பயம் - கவலைகளை நீக்கி பிரசவத்தைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும்.

...மேலும்

Feb 27, 2015

கழிப்பறை வசதியற்ற அரசாங்க மகளிர் கல்விநிலையங்கள் - சதீஸ் கார்க்கி


மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 2014ஆம் ஆண்டு இந்திய முழுவதும் உள்ள அரசாங்கங்கப் பள்ளிகளின் கழிப்பிட வசதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வின் படி தேசத்தில் உள்ள 1,01,443 பெண்கள் பள்ளிகள் கழிப்பறை வசதியாற்றவையாகவும், கழிப்பறைகள் பழுதடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் 87,984 மகளிர் பள்ளிகள் உள்ளன. இந்த ஆய்வின் அறிக்கை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகார்பபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரம் அடைந்த பின் கடந்த 67 ஆண்டுகளில் கல்வித்துறையில் முன்னேற்றம் அடைந்தாலும் கழிப்பறை வசதி இல்லாமல்,பயன்படுத்த முடியாத நிலையில் 1,89,427 அரசாங்க பள்ளிகள் இயங்கிகொண்டிருகின்றன. இதில் தொடக்கப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும். இந்த ஆய்வின் அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது.

இதனை நாம் வேறொரு கோணத்தில் உதாரணத்தோடு அணுகுவோம். கழிப்பறை வசதி இல்லாமல்,பயன்படுத்த முடியாத நிலையில் 1,89,427 அரசாங்க (பெண்கள்) பள்ளிகள் இயங்கிகொண்டிருகின்றன என்பதனை நினைவில் கொள்க. உதரணமாக 1,89,427 பள்ளிகளிலும் தலா 100 பெண்கள் கல்வி கற்கின்றனர் என்றால் ஒட்டுமொத்த மாணவிகளின் எண்ணிக்கை 1,89,42,700 ஆக இருக்கும். உதரணமாக  1,89,427 பள்ளிகளிலும் தலா 5 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 9,47,135 ஆக இருக்கும். 

இதனை சரியாக குறிப்பிட வேண்டும் என்றால் 1,89,42,700 மாணவிகள், 9,47,135 ஆசிரியர்கள் கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்,. இந்த எண்ணிக்கையில் மாற்றுதிரனாளி மாணவிகளும், கர்ப்பிணி ஆசிரியர்களும் அடங்கும். இத்தகைய பள்ளிகளில் இருக்கும் துப்புரவு பணியாளர்கள், இதர பணியாளர்களின் எண்ணிக்கையை சேர்த்து கொண்டால் அதன் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.

இத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவிகள், பணியாற்றுகின்ற ஆசிரியர்கள்  பெரும்பாலும் பள்ளிசுவர்களின் பின்புறம், மரங்களின் மறைவில்,புதர்களின் மறைவில்/ பின்புறம் தான் உடல் உபாதைகளை (சிறுநீர்,மலம்) கழிக்கிறார்கள். தொடர்ந்து இத்தகைய இடங்களில் கழிப்பதால் இவ்விடம் கொசுக்களுக்கும், சிறு புச்சிகளுக்கும் இருப்பிடமாக மாறுகிறது. மேலும் இவ்விடத்திற்கு உடல் உபாதைகளை கழிக்க வரும் மாணவிகள், ஆசிரியர்களை கொசு, இதர புச்சிகள் கடிக்கின்றன, இதனால் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. தொடர்ந்து இத்தகைய இடங்களில் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது, கழிவுகளை மிதித்து வகுப்பறைக்கு செல்வதானால் பள்ளி வளாகம் சுகதரமற்ற நிலையில் இருக்கிறது(இயங்குகிறது). 

மறைவான இடங்கள் இல்லாத, பள்ளியை சுற்றிலும் கட்டிடங்கள் இருக்கின்ற பள்ளிகளில் பயிலும் மாணவிகள், பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் உடல் உபாதைகளை கழிக்க வழியில்லாமல் அதனை கட்டுபடுத்தி கொள்கின்றனர். இதனை நாம் வேறொரு கோணத்தில் கவனிப்போம். பெரும்பாலான பள்ளிகள் காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை  4.30 மணிக்கு நிறைவுபெறுகிறது. காலை 8.30 மணிக்கு பள்ளி தொடங்குகிறது என்றால் 7.30 மணிக்கே விட்டிலிருந்து மாணவிகள், ஆசிரியர்கள் புறப்படுகிறார்கள், இவ்வாறே 4.30 மணிக்கு பள்ளி நிறைவடைந்த பிறகு விட்டிற்கு வந்து சேர மணி 5.30 ஆகிறது. காலை 7.30 மணியுலிருந்து மாலை 5.30 மணி வரை(10 மணி நேரம்) மாணவிகள்/ஆசிரியர்கள் உடல் உபாதைகளை கழிக்க செல்லாமல் தொடர்ந்து (தினத்தோறும்) கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கின்ற காரணத்தால் சிறுநீரகத்தில் கல் தோன்றுகிறது. (வேறு சில உடல்ரிதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறார்கள்) 

அரசாங்க பள்ளிகளின் நிலைமையை போலவே சென்னையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியிலும் கழிப்பறைகள் பழுதடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது, இக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளும், பணியாற்றும் ஆசிரியர்களும் மறைவான இடத்தில தான் உடல் உபாதைகளை கழிக்கிறார்கள். இக்கல்லூரியில் மொத்தம் 4,300க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்கின்றனர், காவலராக, இதர பணியாளராக ஆண்கள் பணிபுரிகிறார்கள். ஆண்களும் உடல் உபாதைகளை கழிக்க மறைவான இடத்தையே நாடுகிறார்கள். இவ்வாறு மறைவான இடத்தில பெண்கள் உடல் உபாதைகளை கழிக்கும்பொழுது ஆண்களின் குரலோ, காலடி சத்தமோ கேற்க்கும் பட்சத்தில் அப்பெண்கள் அடையும் பயத்தையும், மன வேதனையும் விவரிக்க இயலாத துயரத்தை அடைகிறார்கள். 

மாதவிடாய் காலங்களில் (காயிதே மில்லத் கல்லூரி, 1,89,427 பள்ளிகள்) மாணவிகள், ஆசிரியர்கள் உடை மாற்றிக்கொள்ளவோ, தூய்மைபடுத்திக் கொள்ளவோ வசதிகள் இல்லாமல் அவதிப் படுகிறார்கள்.குளிர் காலங்களில் வெட்பநிலை மாற்றத்தால் உடல் உபாதை அதிகமாக வெளியேற்றப்படும், உடல் உபாதைகளை கழிக்க முடியாமல் இக்காலங்களில்(குளிர்) மாணவிகள், ஆசிரியர்கள் மிகவும் அவதிப் படுகிறார்கள். 

மழைக்காலங்களில் மாணவிகள், ஆசிரியர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உடல் உபாதைகளை கழிக்க மறைவான இடங்களுக்கு செல்லமுடியாமல் தவிக்கிறார்கள். இத்தகைய இடங்களில் கழிக்கப்படும் உடல் உபாதைகள் மழைநீருடன் கலந்து வளாகத்துக்குள் தேங்கி நிற்கிறது, இதனால் பள்ளி,கல்லூரி வளாகம் மாசடைகிறது. மேலும் இவ்வாறு தேங்கும் மாசடைந்த தண்ணீரில் வசிக்கும் கொசுக்களின் முலம் (டெங்கு)காய்ச்சல் மாணவிகள், ஆசிரியர்களுக்கு பரவுகிறது 

இத்தகைய வேதனைகளை சுமந்து கொண்டு மாணவிகளால் எவ்வாறு முழுமனதுடன் கல்வி கற்க இயலும்?, ஆசிரியர்களால் எவ்வாறு சிறப்பாக பண்ணியாற்ற இயலும்?

ஆதாரம்:

...மேலும்

Feb 26, 2015

கொடிது கொடிது பெண்களாய் பிறப்பது கொடிது... - நிர்மலா கொற்றவை


இந்தியா என்றாலே அதன் பன்மைக் கலாச்சாரமும், ‘ஒழுக்க நெறியும்’, குடும்ப அமைப்பின் மகத்துவமும் புகழ்ந்துரைக்கப்படும் நிலை மாறி இப்போது இந்தியா என்றால் அது ஒரு வல்லுறவு தலைநகரமாக, பெண்களுக்குப் பாதுகப்பற்ற நாடாக , பெண்களின் அடிப்படை உரிமைகளான வாழும் உரிமை, உடல் நலம், திருமண உரிமை ஆகியவைகூட மறுக்கப்படும் நாடாக உலக வரைபடத்தில் காட்சி அளிக்கிறது. வளர்ந்து வரும் நாடு இந்தியா என்று சொல்வதைக் காட்டிலும் பெண்கள் விஷயத்தில் பிற்போக்குத்தனம் பெருகி வரும் நாடாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகி விடாது. 

ஆனால் இந்தியா பற்றி நாம் இப்படி தொடங்கும்போது இவர்கள் அவநம்பிக்கைவாதிகள், கேடுகெட்ட பெண்ணியவாதிகள், விளம்பரப்பிரியர்கள், வேலையற்ற கம்யூனிஸ்டுகள் என்று வசைபாடப்படுவோம்.  ஏன்றால் ‘நல்லதே நினை, நல்லதே நடக்கும்’ என்னும் மாயாவாத மதவாத நம்பிக்கைகளை சாஸ்வதம் என்று நம்பும் ‘ஆன்மீக’ நாடல்லவா இது. ஆகவே, நாம் எப்போதும் எதிர்மறைகளையோ, குறைகளையோ பேசக்கூடாது. 2 வயது பெண் குழந்தைகளின் பாலுறுப்பை கீறி ஒரு ஆண் தனது  ‘ஆண்மையை’ திணித்து இரத்தம் பீறிட வல்லுறவு செய்து கொன்றாலும் ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ என்று பாடுவதோ அல்லது அப்பாடல் பாடப்படும் சபாக்களுக்கோ சென்று தாள-சுருதிகள் பிழையின்றி போடப்படுகிறதா, ஆலாபனைகளில் பிருகா சரியாக விழுகின்றதா என்று கவலை கொள்வதே உத்தமம்.

பெண்களுக்கெதிரான வன்முறைகள், அவர்களுக்கிழைக்கப்படும் கொடுமைகள் பற்றிய புள்ளி விபரங்கள் போதுமான அளவுக்கு அன்றாடம் வெளியிடப்பட்டு வருகின்றன. உலகளவில் பெண்கள் வாழ்வதற்கான பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் இன்றும் பட்டிமன்ற தலைப்பாக ‘இந்தியா 2020இல் வல்லரசாகுமா 2040இல் வல்லரசாகுமா’ என்றே விவாதம் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் நம்மைப் பொறுத்தவரை மங்கல்யான் ஏவுகனைகளை வெற்றிகரமாகத் தொடர்ந்து விண்ணில் ஏவும் அரசே வல்லரசு. நம் நாட்டு வளங்களை அந்நிய மூலதனத்திற்குத் தாரை வார்க்கும் ஒப்பந்தங்களைப் போடுவது, ‘சக்தி வாய்ந்த’ அனு உலைகளை அமைப்பதுமே வல்லரக்கான இலக்கணம். நாடு இத்தகைய வளர்ச்சிகளை துய்த்துக் கொண்டிருக்கும்போது ஆங்காங்கே சில நூறு பெண்கள் கொடுமைக்குள்ளாவது ஒரு விஷயமா. அதிலும் பாருங்கள்! பெண்கள் பலவீனமான பாலினம், அவர்களை பலவீனமாகப் படைத்தது ஆண்டவன் குற்றம், அதற்கு யார் என்ன செய்ய முடியும்? மேலும், வல்லரசில் பெண்களுக்கு என்ன இடம் இருக்கிறது? அரசு என்றாலே அது ஆண்பால்தானே?  என்னதான் இந்தியா தாய் நாடாக இருந்தாலும், இந்தியா ஒரு வல்லரசி நாடாவதை எவர்தான் விரும்புவர்?

இந்தியப் பெண்களின் அவல நிலைக்குப் பின்னால் இருக்கும் இந்திய மனநிலை இதுவே. மற்ற நாடுகள் மட்டும் என்ன ஒழுங்கா? இதைவிட மோசமானக் கொடுமைகள் நடக்கவில்லையா என்று கேட்போரும் உண்டு. ஆனால் நாம் இந்தியர்கள் என்றளவில் நாம் வாழும் நாட்டில் பெண்களின் நிலையை உயர்த்த சிந்திப்பது அவசியம்தானே. ஆனால் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும், பெண்களை உடன்கட்டை ஏறச் செய்து, வரதட்சனை என்னும் கொடிய தீயில் பெண்களை காவு கொடுத்து, இன்னும் இதர கொடுமைகள் செய்து  இன்றைக்கும் ஒரு பெண் குழந்தை என்பதே பெரும் சுமையாக கருதும் நிலை இந்தியாவைத் தவிர வேறெங்கும் நிலவுமா என்பது சந்தேகமே.

இந்தியாவில் பெண்கள் நிலை குறித்து ஒற்றை வரியில் சொல்வதானால், பெண் என்பவள் அடக்கப்பட வேண்டியவள், அவள் ஆளப்பட வேண்டியவள், அவள் ஆணுக்கான, ஆணின் தலைமையிலான குடும்பத்திற்கு ஒரு பணிப் பெண்.  பெண்களுக்கெதிரான அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படையாய் இருப்பது இக்கருத்தியலே.

பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதே ஒரு பொய், ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் படிக்கிறார்கள், வேலை வாய்ப்பில் அவர்களுக்கே முக்கியத்துவம், நிறைய சம்பாதிக்கிறார்கள், நவநாகரீகமாகத் திரிகிறார்கள், சொல்லப்போனால் ஆண்கள்தான் பாவம், ஆண்கள்தான் அடங்கிப் போகிறார்கள் என்பதே பெரும்பாலாரின் வாதமாய் இருக்கிறது. நம் நாட்டில் எங்கே சாதி இருக்கிறது? தலித்துகள் எங்கே ஒடுக்கப்படுகிறார்கள்? எல்லாத் துறையிலும் அவர்கள்தான் இப்போது பெருகி வருகிறார்கள். பிராமணர்கள்தான் ஒடுக்கப்படுகிறார்கள் என்று பேசுபவர்களுக்கும் மேற்சொன்னவர்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை. எந்த ஒரு மேலாதிக்கத்தையும் மேலாதிக்கமாகப் பார்க்காமல் உயர்வு தாழ்வு என்பதை ஒரு இயற்கையான நடைமுறையாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை கொண்டவர்கள் அவர்கள். அதனால்தான் அவர்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கின்றனர், அல்லது அந்நிலை அவர்களுக்குத் தகும் என்கிற வாதத்தை முன்வைக்கின்றனர்.

பேருந்தில் ஒரு இளைஞி வல்லுறவுக்காட்பட்டாலும் சரி, வீட்டிற்குள் ஒரு பாட்டி வல்லுறவுக்காட்பட்டாலும் சரி இவர்கள் பெண்களின் உடையையும், கலாச்சாரத்தையுமே குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால், வரதட்சனைக் கொடுமையால் ஒரு பெண் கொல்லப்படும்போதோ அல்லது ஏழ்மையால் ஒரு பெண் தன் மனதில் இரும்பைக் காய்ச்சி ஊற்றி தன் பிள்ளைகளின் வாயில் விஷத்தை ஊற்றிக் கொல்லும்போதோ இத்தகைய கதாகாலட்சேபவாதிகளால் பெண்களிடம் குற்றத்தைக் காண முடியவதில்லை. வெறும் அனுதாபங்களோடு நிறுத்திக்கொள்வார்கள். அல்லது ‘மற்றையோர்’ நிலையிலிருந்து குற்றவாளிகளை தூக்கிலிடச் சொல்லி பரிந்துரைப்பார்கள்.

உண்மையில், இந்தியாவில் பெண்களின் நிலைக்கு அத்தகைய குற்றவாளிகளைவிட நிலவும் தந்தை ஆதிக்க சமூக அமைப்பிற்கும், ஏற்றத்தாழ்வு மிக்க பொருளாதார அமைப்பிற்கும் நிபந்தனையற்ற ஆதரவு தருபவர்களே முதன்மை காரணம். குறிப்பிட்ட குற்றத்திற்கு தனிநபர் காரணமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பெண்களுக்கெதிரான குற்றங்கள் பெருக ஆணாதிக்க சமூக அமைப்பே காரணம். அதைக் களைவதற்காகப் பெண்கள் பெண்ணியம், பெண் உரிமை என்று பேசும்போதும், போராடும்போதும் அதை ஏளனப்படுத்துவோரும், அப்பெண்களை ஆபாசமாகப் பேசுவோரும் ஆணின் அதிகார மனதிற்கு மறைமுகமாக தீனி போடுகின்றனர்.

குறிப்பிட்ட சதவிகிதம் பெண்கள் கல்வியில், பொருளாதார ரீதியில் சில படிகள் முன்னேறியுள்ளனர், உண்மைதான்; பல்வேறு துறைகளில் முதன்மைப் பங்கு வகிக்கின்றனர் என்றாலும் பாலினம் என்ற அடிப்படையில் அவளது உடலுக்கு எவரும் பாதுகாப்பை உறுதி செய்திட முடிவதில்லை. அச்சமின்றி அவள் சுதந்திரமாகப் பொதுவெளியில் நடமாட முடியாது. ஆண்களைப் போல் இரவு 12 மணிக்கு தெருவோர தேனீர் கடையில் கூட்டமாக நின்று அரசியல் பேச முடியாவிட்டாலும் பரவாயில்லை, இயற்கைத் தேவையான சிறுநீர் கழிக்க பகிலிலாவது அவள் அச்சமின்றி பொது வெளியை பயன்படுத்த முடியுமா? பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பு பெருகியிருக்கலாம், விண்கல தொழில்நுட்ப பிரிவில் முக்கியப் பணி ஆற்றியிருக்கலாம், ஏன் ஒரு பெண் ஜனாதிபதியாகக்கூட ஆகி இருக்கலாம் ஆனால் பள்ளிகளில், குறிப்பாக அரசு பள்ளிகளில், பொது வெளியில், ஏழைகளாக இருந்தால் வீட்டிலாவது சுகாதாரமான கழிப்பறை இருக்கிறதா?  இதுதான் ‘வியத்தகு இந்தியா’வில் பெண்கள் நிலை.

எத்தனை குற்றங்களைதான் நாம் பட்டியலிடுவது? 60 வயது முதியவர் 3 வயது சிறுமியை வல்லுறவு செய்தார் என்பதில் தொடங்கி சமீபத்தில் ஒடிசாவில் 16 வயது சிறுவன் 6 வயது சிறுமியை வல்லுறவு செய்தது, வேலூரில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 11 வயது சிறுமியை வல்லுறவு செய்து கொன்றது (இன்னும் விசாரணையில் உள்ளது), வாடகை டாக்சியில் பெண்கள் வல்லுறுவு (தொடர்ச்சியாக), இவ்வளவு ஏன் கௌஹாத்தில் ஐ.ஐ.டி என்னும் ‘பெருமை’ வாய்ந்த கல்வி நிறுவனத்தில், ஒரு பேராசிரியர் அலுவலக உதவியாளர் பெண் ஒருவரை வல்லுறவு செய்தது… இன்னும் எத்தனை எத்தனை. வரதட்சனை பிரச்சினையில் கர்பிணிப் பெண் அடித்துக் கொலை. ஆதிவாசிகள் உரிமைப் போராட்டத்தில் காவல் துறையினரால், இராணுவத்தினரால் வல்லுறவு சித்திரவதை, சாதிய ரீதியான கௌரவக் கொலை…. தேசிய குற்ற ஆவணங்கள் மையத்தின் பதிவின் படி ஒவ்வொரு 1.7 நிமிடங்களுக்கும் பெண்களுக்கெதிரான வன்முறை பதிவு செய்யப்படுகிறது, அதோடு ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒரு வல்லுறவு புகார் மற்றும் ஒவ்வொரு 4.4 நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி குடும்ப வன்முறைக்குள்ளாகிறாள் என்று தெரிவிக்கிறது.

இவ்வளவு குற்றங்கள் நடந்தும் தண்டனைகளை கூட்டுவது பற்றியும், பெண்களையே பொறுப்பேற்கச் சொல்வதுமாகத்தான் அரசு பெண்கள் பிரச்சினையை கையாண்டு வருகிறது. 2013இல் நீதியரசர் வர்மா குழு பரிந்துரைத்த எந்த சட்டபூர்வ சீர்திருத்தங்களும் நடைமுறைபடுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி பெண்களுக்கான பாதுகாப்பு திட்டத்திற்காக நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 1000கோடி ரூபாய் (2013-14) மேலும் ஒரு 1000 கோடி (2014-15) ரூபாய் பணம் இன்னமும் பயன்படுத்தப்படவில்லை என்று பாராளுமன்ற குழு கேள்வி எழுப்பும் நிலையில்தான் பெண்களுக்கான பாதுகாப்பு பிரச்சினை உள்ளது. 660 நிர்பயா மையங்கள் அமைக்கப்படும் அதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவியும், மறு வாழ்வும் அளிக்கப்படும் என்று ஜூலை 3ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால் இதுவரை அவ்வறிவுப்பு காகிதத்தில் மட்டுமே உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, குற்றமிழைத்தவருக்கு தண்டனை இவையெல்லாம் உடனடி நடவடிக்கைகள். அவற்றை காலதாமதமின்றி செயல்படுத்த வேண்டும். ஆனால், பெண்களின் நிலையை உயர்த்த, அவர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ அடிப்படை சிந்தனை மாற்றங்களை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். பாலின உணர்வூட்டல் (gender sensitizing) கல்வியை வகுக்க வேண்டும். பாலியல் கல்வி என்பது வேறு.  பாலினக் கல்வி என்பது வேறு பாலியல் கல்வி என்பது இயற்கையான பாலியல் அடையாளம்  பற்றிய உயிரியல் கல்வி, ஆனால் பாலினக் கல்வி என்பது ஆணாதிக்க சமூகத்தில் ஆணாதிக்க சிந்தனையோடு சமூகமயமாக்கப்பட்ட மனங்களுக்கு சமத்துவ சிந்தனையை போதித்தலாகும். இதுவே நிரந்தர தீர்வை வழங்கும்.

நன்றி: தினகரன் நாளிதழ்

(இந்தியாவில் பெண்கள் நிலை என்று எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு மேற்சொன்ன தலைப்பை கொடுத்திருப்பது அப்பத்திரிகையினரின் முடிவாகும்)

...மேலும்

Feb 25, 2015

‘இந்திய திரைப்படங்களால்,பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் சாதாரண விடயங்களாகப்படுகின்றனவா?’ -இராஜேஸ்வரி பாலசுப்பிரமயணியம்.


(29.1.15ல் லண்டன் கார்டியன் பத்திரிகையில் வெளிவந்த நிர்பால் தலிவால் என்பவரின் கட்டுரையின் சாரம் இங்கே தமிழிற்தரப் படுகிறது).

அவுஸ்திரேலியாவில்,அண்மையில் பாலியல் குற்றச்சாட்டிலிருந்து ஒரு இந்திய செக்கியுரிட்டி கார்ட்,அவரது வழக்கறிஞர் முன்வைத்து வாதாடிய மேற்குறிப்பிட்ட கருத்துக்களால் சிறைக்குப் போவதிலிருந்து தப்பியிருக்கிறார். குற்றவாளியாகக் கருதப்பட்டவரின் நடவடிக்கைகளான,தனக்குப் பிடிக்காத பெண்ணைவிடாமற் பின் தொடர்நது திரிவது.தேவையற்ற மோபைல் குறிப்புகளை அனுப்புவது என்பவை இந்தியத் திரைப்படக் கதாநாயர்கள்,தனக்குப்புடிக்காத ஒரு பெண்ணை எப்படித் தன் வழிக்குக்கொண்டுவருவது என்ற பேபர்முயுலாவுடன் இளைஞர்களின் ‘மிகச் சதாரண’பழக்கவழக்கமாகக் காட்டப்படுகிறது.

An inspirational tale … Darr: A Violent Love Story

லண்டன் ஆபிரிக்கன் அன்ட் ஓரியன்டல் ஸ்ரடி பல்கலைக்கழகத்தில் இந்திய சினிமா பற்றிய பேராசிரியராகவிருக்கும்,றேச்சல் டு;வயர் என்ற பெண்மணி,’ இந்தியாவிலிருந்து வெளியாகும் பல படங்களில்,ஒரு ஆணை உதாசீனம் செய்யும் ஒரு பெண்ணை,அந்த ஆண் விடாப்பிடியாகத் தொடர்வதும்,அவளையடைய பல விடயங்களை முன்னெடுப்பதும்,ஆண்மையைக் காட்டும் விடயங்களாகப் பிரதிபலிக்கப் படுகிறது’ என்று சொல்லியிருக்கிறார்..

அவரது’பொலிவுட் இந்தியா’ என்ற புத்தகத்தில் ’60ம் ஆண்டில் இந்தியாவில் வெளிவந்த பல பிரபலமான படங்களை முற்கோள்களாகக் காட்டுகிறார். அந்தக்காலத்துப் பிரபல கதாநாயர்களான,ஷாமி கபூர்,அவரது குறம்புத்தனமான (திரைப்படப்) பாலியற் சேட்டைகளுக்குப் பிரபலமானவர்.
அவர் கதாநாயராகவரும் படங்களில்,தன்னை உதாசீனம் செய்யும் கதாநாயகிக்கு முன் பாலியல் குறம்புத்தனம்செய்வார், ஆடிப்பாடுவார்.கால கெதியில் அவரை உதாசீனம் செய்த கதாநாயகி அவரின் காலடியில் விழுவாள்.

இந்தவகையான கதையமைப்புக்களும் கருத்துக்களும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.சில படங்கள், இப்படியான கதையமைப்புக்களின் அடுத்த முகத்தையும் காட்டுகின்றன.

1993ல் ஜாஷ் ஷோப்ராவின் நெறியாள்கையில் வெளிவந்த ”டார்- வன்முறையான காதற்கதை’ என்ற திரைப்படத்தில்.இன்று திரையுலகத்தில் பிரபலமாகவிருக்கும் ஷாருக் கான்,மிகவும் காதல் வெறிபடித்த வில்லனாக நடித்தார். இந்தப்படத்தில், சுனில் என்றவருக்க நிச்சயப்படுத்தப்பட்ட கிரான் என்ற பெண்ணைத்தீரமாகக் காதலிக்கிறார். அவரது திறமையானநடிப்பால் பலரைக்கவர்ந்தார்.நடிப்புக்கு விருதும் பெற்றார்.

அண்மையில் (2013)தனுஷ்,நடித்த ரான்ஞ்ஞானா படத்திலும்,கதாநாயகன் குண்டன் கதாநாயகி ஷோயாலை விடாமற்காதலிக்கிறார். தனது காதலை விளங்கப்படுத்த அவரின் மணிக்கட்டில் காயத்தை ஏற்படுத்துகிறார். அவளது திருமணத்தைக்குழப்புகிறார்.கதாநாயகியன் கணவராக நிச்சயிக்கப்பட்டவர் அடித்துக் கொலை செய்யப் படுகிறார். கடைசியில் குண்டனும்
அடித்துக்கொலை செய்யப்படுகிறார். காதல் வில்லன் குண்டனும் இறக்கிறார். அடுத்த பிறவிலும் அவளைக்காதலிப்பேன் என்று இறக்க முதற் சொல்கிறார். இதெல்லாம் இளைஞர்களின் மனதில் பாரிய விளைவுகளை ஏற்படுத்துபவை.

தங்களுக்கு அப்படியான ஒரு சந்தார்ப்பம் வந்தால் அப்படியே நடந்துகொள்ளலாம் என்று சிந்திக்கப்பண்ணுபவை.இப்படியான படங்கள் யாதார்த்திற்கு அப்பாலான உலகத்தை இளைஞர் இப்படங்கள் மனதில் பதியப்பண்ணுவதால்’ஈவ் ரீசிங்’—- பாலியல் சேட்டைகள் சாதாரணமானவையாக எடுத்துக்கொள்கிறார்கள’ என்ற தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்..

டெல்லியைச் சேர்ந்த கனிகாக காஹலட் என்ற ஒரு ஊடகவியலாளர் குறிப்பிடும்போது,’தற்காலத்து,நவீனத்தமான திரைப்படங்கள் என்று கூறிக்கொள்பவையும் விடாமல் பழைய காதற்கதைகளையே திருப்பித் திருப்பிப் படமாக்குகிறார்கள். உதாரணமாக அண்மையில் வந்த ‘ஹப்பி என்டிங்’என்ற படதை;தைப்பார்த்தேன்,ரசித்தேன். ஆனால் அந்தப் படத்திலும் நல்ல பெண்கள் செக்ஸை விரும்மாட்டார்கள்.ஆண்கள்தான் அதை முன்னெடுக்கவேண்டும் என்ற பார்மியுலாவே இருக்கிறது.
மேற்கண்ட படம் சுதந்திரமாகவாழும் ஒரு ஜோடியைப்பற்றியது.இதிலும், செக்ஸ் பற்றிய விடயத்தில் பெண்கள் தயக்கமாகவிருக்கம்போது அதை வெற்றி கொளவது ஆண்மையானது என்ற கருத்தே சொல்லப் படுகிறது’.

அவர் தொடர்ந்து சொல்லும்போது, இந்தியத்திரைப்படங்கள் தொடர்ந்தும் ஒரேமாதிரியான கருத்துக்களை, அதாவது, பெண்கள் படுக்கையில் ‘இல்லை’ என்று சொல்வது ‘ஆமாம்’ என்பதற்கு அர்த்தம் என்றுதான் பிரதிபலிக்கிறார்கள். இது மிகவும் அபாயமான கருத்தாகும். அதாவது,பெண்கள் ‘இது வேண்டாம்’ என்பதை ‘இது வேண்டும்’ என்று ஆண்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற இரட்டைக்கருத்துக்கள் அபாயமான விளைவுகளையே கொண்டுவரும்’.

ஆனால் இந்தியத் திரையுலம் ஒரு விதத்தில் சமுதாயத்தை அடையாளப்படுத்துகிறது என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும். அவர் மேலும் குறிப்பிடும்போது@ ‘இந்தியத் திரைப்படக்கதாநாயகர்கள்,பெரும்பாலான இந்திய ஆண்களைப் பிரதிபலிக்கிறார்கள். இந்திய ஆண்கள் தங்களின் சந்தோசத்திற்கு இந்தச்சமுதாயம்(பெண்கள்) நிறையத்தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குடும்ப அமைப்பில் அவர்கள்தான் தலைவர்கள்,முக்கியமானவர்கள்,பெண்கள் அவர்களின்(ஆண்களின்) உடல் உள விருப்பங்களை முற்று முழதாக நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இந்தியப் படவுலகு ஆண்களின் கையிலிருக்கிறது. ஆண்களின் பாத்திரப்படைப்பால்,அவர்கள் ஷாருக் கான்,அல்லது ஷயிவ் கான், அல்லது அமீர்கானாக இருக்கலாம் இவர்களாற்தான் படங்கள் வெற்றியடைகின்றன. திரையுலகு ஆண்களின் கையிலிருக்கிறது. இந்தியாவில் எதுவுமே ஆண்களின் கைகளிற்தானிருக்கிறது’
...மேலும்

Feb 24, 2015

தியாகேஸ்வரியின் ”உண்மையின் ஒளி” கவிதை நூலின் வெளியீட்டுவிழா – சஞ்சயன்


தியாகேஸ்வரியின் ”உண்மையின் ஒளி” கவிதை நூலின் வெளியீட்டுவிழா இன்று ஒஸ்லோவில் நடைபெற்றது. ஒலிபரப்பாளராகவும், ஆசிரியராகவும் அறியப்பட்ட இவர் ஒரு கவிஞர் என்பது பலரும் அறியாதது.

நிகழ்ச்சிகளை தமிழில் சுதாகரன் சோமலிங்கம் மிகவும் நேர்த்தியாக தொகுத்துவழங்க, நோர்வேஜிய மொழியில் செல்வி பவனிதா தர்மரட்ணம் தொகுத்து வழங்கினார்.

நோர்வேஜிய நாட்டவர்களுக்கு புரிவதற்காகவே தேர்ந்த ஆங்கிலப்பேச்சாளராக சிவபாலன் காசிநாதர் அழைக்கப்பட்டிருந்தார் என்றே நம்புகிறேன். இவ்வாறான ஆங்கில மொழியாலான உரைகள் நோர்வேக்கு புதிது.

தியாகேஸ்வரியின் சில கவிதைகளை நோர்வேஜிய மொழிக்கு ஹம்சாயினி குணரட்ணம் அவர்கள் மொழிபெயர்த்திருந்தார். கவிதைகளை மொழிபெயர்ப்பது என்பது மிகச் சிரமமான விடயம். கட்டுரைகளைப்போன்று கவிதைகளை மொழியர்க்கமுடியாது என்பதும், இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுவதைவிட அவை மீள் மொழியாக்கம் செய்யப்படவேண்டும் என்றும் கருதுபவன் நான்.

கவிதையோ அல்லது நாவலோ அதன் உயிர்ப்போடு மொழியாக்கம் செய்யப்படும்போதே படைப்பாளியின் கருத்தும், உணர்வுகளும் பாரிய மாற்றங்கள் இன்றி வேற்றுமொழி வாசகனால் புரியப்படும். இது மிக மிக கடினமான விடயம். இதற்கு மொழிப்புலமை மட்டுமல்ல, துறைசார் நிபுணத்துவமும், ஆக்கத்தின் அடிப்படை உணர்ச்சிகளை, எழுதப்பட்ட சூழ்நிலையை, பின்புலத்தை, கலாச்சாரத்தை புரிந்துகொள்ளக்கூடிய மனநிலையும் வாய்க்கவேண்டும். அதேவேளை புதிய மொழியில் கவிதைகள் படைக்கப்படும் மொழிநுட்பத்தை அறிந்திருக்கவேண்டியதும் அவசியம்.

இன்றைய நிகழ்வில் நூலில் உள்ள பல கவிதைகள் தமிழில் வாசிக்கப்பட்டதை மிகவும் ரசித்தேன். கவிதைகளை வாசித்தவர்கள் அனைவருமே மிகவும் சிறப்பாக வாசித்தனர். பார்த்தீபனின் உணர்ச்சி மிக்க குரலில் வாசிக்கப்பட்ட கவிதையும் அழகு, அது வாசிக்கப்பட்ட விதமும் அழகு.

புத்தக வெளியீடுகளில் சிலர் புத்தகத்தை தவிர்த்து தனிமனித புகழ்ச்சிகளுக்குள் செல்வதானது நூலின் மீது செலுத்துப்படவேண்டிய கவனத்தை திசைதிருப்புவதாகவே இருப்பதாக உணர்கிறேன். அண்மைக்கால நூல்வெளியீடுகளிலும் இதனை அவதானிக்கக்கூடியதாக இருந்திருக்கிறது. இது வளமான பாதையா என்பதற்கான பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
மதுவந்தனா ரட்ணராஜாவின் தமிழும், குரலின் அழகும் இன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. அவருக்கு 14 – 15 வயதிருக்கலாம். ஆனால் அவரின் தமிழ் உச்சரிப்பும், ஏற்ற இறக்கங்களும் அத்தனை அற்புதமாய் இருந்தன. மயக்கும் குரல் உங்களுடையது, மதுவந்தனா. பாராட்டுக்கள்.

சிவபாலன் அய்யாவின் ஆங்கில உரை நோர்வேக்கு புதிது. ரத்தினச் சுருக்கமாக அவர் உரையில் பல விடங்களை தொட்டுச்சென்றார். கவிதையில் படிமங்கள், உருவகங்கள் பற்றிய அவரது கருத்து கவனிக்கத்தக்கது.

சிவதாஸ் மாஸ்டரின் உரையின் முக்கிய பகுதியாக கவிதையும் இரண்டாம் தமிழ்ச்சமுதாயமும் என்ற கருத்தைக் கொள்ளலாம். இரண்டாம் சமுதாயம் மொழியாழுமையைக்கொண்டது. அவர்கள் கவிதைகளை மொழியாக்கம் செய்ய முன்வரவேண்டும் என்றும், தமிழாசிரியர்கள் இலக்கிய உலகிற்கு இரண்டாம் சமுதாயத்தனரை அறிமுகப்படுத்த கடமைப்பட்டவர்கள் என்றும் கூறியது மிக முக்கியமான கருத்து. தமிழ் ஆசிரியர்களான ஒருவித சவாலாகவே நான் இதை நோக்குகிறேன். தங்களது மாணவ மாணவியர் 6 புள்ளிகளை பரீட்சையில் எடுப்பதைவிட, ஒரு மாணவன் அல்லது மாணவி தமிழ் இலக்கிய ஆர்வம் கொண்டவராக உருவாகுவார் எனின் அதுவே அந்த ஆசிரியரின் பெருவெற்றி என்று நான் கருதுவேன்.

பேராசிரியர் சண்முகரட்ணத்தின் உரை கவிஞரின் பல பக்கங்களை எடுத்துக்கூறினாலும், யதார்த்தமான வாழ்வியல் சிக்கல்களுக்கு ஆன்மீகம் தீர்வாகுமா என்று கேள்விபெயழுப்பினார். இன்றையநாளின் மிகச் சிறந்த கேள்வி இது என்றே நான் கூறுவேன்.

இன்றைய நிகழ்வில் உரைகள், வாழ்த்துக்கள்;, விமர்சனங்கள், பாடல்கள், நடனங்கள் என்று பல நிகழ்ச்சிகள் நடந்தேறின.
என்னைப் பொறுத்தவரையில் இருவழித்தொடர்பாடல்களையே அதிகமாக விரும்புபவன் நான். இன்றைய விழாவனாது ஒருவழித்தொடர்பாடலையே கொண்டிருந்தது. நூல்பற்றிய உரையாடல் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

எமது சமூகத்தில், அதுவும் ஒரு பெண்ணால் தனது வாழ்வியல் அனுபவங்களை கவிதைக்குள் அடக்குவது என்பது இலகுவான செயலன்று. மிகுந்த மனஉரம் இன்றி, வெளியிலிருந்து தன்னைநோக்கி சுயவிமர்சனம்செய்யாது இதனைச் செய்யமுடியாது.

இந் நூலினை நான் இதுவரை வாசிக்கவில்லை. ஆனால் இன்றைய நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதைகளில் பல ஒரு மனிதரின் வாழ்வியல் அனுபவங்கள் என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல.
வாழ்வு என்பது எதிர்பார்ப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் இடைப்பட்ட ஒரு போராட்டம் என்பதை நாம் அறிவோம். இதற்கு ஆண், பெண் என்ற வேறுபாடில்லை. அனைவரும் வாழ்க்கையின் பகடைக்காய்கள் என்பதே யதார்த்தம்.

ஒரு மனிதன் மீதான நம்;பிக்கை பொய்த்துப்போகும்போது எற்படும் பிரளயமானது மற்றைய மனிதரின் வாழ்வினை அலைபோல் அடித்துப்போய் ஒரு கரையில் தூக்கியெறியும்போது அதை எதிர்த்து நிற்கும் மனிதனின் மனநிலையை புரிய நாமும் அப்படியானதோர் ஏமாற்றத்திற்கு உட்பட்டிருக்கவேண்டுமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

நானும் இன்றைய கவிஞரின் பல கவிதைகளின் உள்ளடக்கத்தை கடந்துவந்தவன் என்பனாலோ என்னவோ பல இடங்களில் என் வாழ்வினை கவிஞரின் கவிதைகளினூடாக காணக்கிடைத்ததாகவே கருதுகிறேன். கவிஞர் ஒரு பெண். நான் ஒரு ஆண். ஆனால் வாழ்வியில் தந்துபோன அனுபவங்கள் இருவருக்கும் சமமாகவே இருக்கிறது.

புத்தகவெளியீடுகள் தனியே ஒருவழி தொடர்பாடலாக இருப்பதை நான் விரும்பவதில்லை. வாசகனும் படைப்பாளியும் சங்கமிக்கும் ஒரு இருவழித்தொடர்பாடலாகவே நூல்வெளியீகள் இருக்கவேண்டும் என்று விரும்புபவன் நான். இந்த வகையில் இன்றைய நாள் ஏமாற்றமானதே. நடைமுறைச் சிக்கல்கள் இதற்குக் காரணமாய் இருந்திருக்கவேண்டும் என்றே நம்புகிறேன்.

இருப்பினும் மிகவும் அழகானதோர் இலக்கிய மாலையைத்தந்த தியாகேஸ்வரிக்கு எனது நன்றிகள். நோர்வேயின் இலக்கிய உலகினுள் புதியதொரு பெண்கவிஞர் தனது வாழ்வியலை மூலக்கருத்தாகக்கொண்டு உள் நுழைந்திருப்பது மகிழ்ச்சியைத்தருகிறது.

நன்றி - Nortamil
...மேலும்

Feb 23, 2015

சாதியொழிப்பில் அம்பேத்கர் பயன்படுத்திய கருத்தியல் ஆயுதங்கள்பற்றி ஒரு பார்வை

அம்பேத்கரின் இரண்டாவது ஆயுதம் சாதியொழிப்பில் அம்பேத்கர் பயன்படுத்திய கருத்தியல் ஆயுதங்கள்பற்றி ஒரு பார்வை

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மாபெரும் போராளியாக இருக்கும் அதே நேரத்தில், உலகெங்கும் மதிக்கப்படும் மகத்தான அறிஞராகவும் இருப்பது டாக்டர் அம்பேத்கரின் தனிச்சிறப்பு. சாதிக்கு எதிரான யுத்தத்தில் அம்பேத்கரின் கைகளில் இரண்டு ஆயுதங்கள் இருந்தன. ஒன்று, இடைவிடாத களச்செயல்பாடு. இன்னொன்று, கருத்தியல் ஆயுதம். இந்த இரண்டு ஆயுதங்களையும் தன் வாழ்நாள் முழுவதும் கூர்மையாகத் தீட்டிக்கொண்டும், லாவகமாகப் பயன்படுத்தியும் வந்திருக்கிறார் அவர். கருத்தியலைப் பொறுத்தவரை அவரது வலுவான ஆயுதங்களுள் ‘இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் தோற்றம் வளர்ச்சி’ என்ற ஆய்வுக் கட்டுரையும், ‘சாதியை அழித்தொழித்தல்’ நூலும் அடங்கும்.

‘இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் தோற்றம் வளர்ச்சி என்கிற ஆய்வுக் கட்டுரை’ மே 9, 1916-ல் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடந்த மானுடவியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது. அம்பேத்கர் தனக்கு முன்னதான ஆய்வாளர் களின் கருத்துகளை ஏற்றும் எதிர்த்தும் இதில் தெளிவாக்குகிறார்.

சாதியும் அகமண வழக்கமும் ஒன்றே!

தொடக்க காலச் சமுதாயங்களில் புறமண வழக்கம் தான் உண்டு என்பதைக் காட்டி, இந்தியர்களுக்கு அகமண முறை அந்நியமானது என்கிறார். (புற மணம்: வெவ்வேறு இனக் குழுக்களிடையே ஏற்படும் திருமண உறவு, அக மணம்: ஒரே குழுவுக்குள் ஏற்படும் திருமண உறவு). ஆனால், ‘நம்மிடையே சாதிகள் உள்ளனவே இது எதனால்?’ என்ற கேள்வியை எழுப்பி, ‘ஆய்ந்து பார்த்தோமானால் இந்தியாவைப் பொறுத்த மட்டில், புறமணத்தைவிட அகமணத்துக்கு உயர்வான இடம் அளிக்கப்பட்டதன் விளைவுதான் சாதிகளின் உருவாக்கம்’ என்று விடையளிக்கிறார்.
திருமண வயதொத்த ஆண்கள்-பெண்கள் சமநிலை குலையும் நிலையில் அகமண ஒழுக்கம் அழிந்துபோகும்’ என்பதை விவரித்து ‘இந்தச் சமநிலை குலையாமல் பாதுகாப்பதிலேயே சாதியச் சிக்கல் என்பது சுழல்கிறது’ என்பதைச் சான்றுகள் வழியாக நிறுவுகிறார்.
திருமணம் ஆன ஆண் இறந்துபோனால், அவனது மனைவியைத் தீயில் தள்ளுவதும் (சதி) அல்லது கட்டாயமாக விதவைக் கோலத்தைப் பூணச் செய்வதும் நடைமுறைகள். பெண் இறந்து ஆண் இருந்தால் – ‘குழுவுக்கு ஆண் முக்கியமானவன்; அதனினும் அகமண வழக்கம் முக்கியமானது’ என்பதால் பெண்களுக்குச் செயல்படுத்தும் மேற்கண்ட முறைகள் ஆண்களுக்குப் பேணப்படுவதில்லை. மாறாக, அவனாக விரும்பித் துறவு மேற்கொள்வது நடக்கலாம் என்பதை அம்பேத்கர் விளக்குகிறார். குழுவுடன் அந்த ஆணை இணைத்துக் கொள்ள, திருமணப் பருவம் எய்தாத ஒரு பெண் குழந்தையை மணம் முடித்தல் நடைபெறுகிறது.
இந்த நடைமுறைகளின்படி ‘சாதியும் அகமண வழக்கமும் ஒன்றே’ என்றாகிறது. இதுபோன்ற வழி வகைகள் இருப்பது சாதியை ஒத்தது. சாதி இந்த வழிவகைகளை உள்ளடக்கிக்கொண்டு இயங்குகிறது’ என்ற முடிவுக்கு அவர் வருகிறார்.
தாழிடப்படும் கதவுகள்
மேல்நாட்டு அறிஞர்கள், இந்தியாவில் சாதி உருவாவதற்குக் கீழ்க்கண்ட காரணங்களைச் சொல் கிறார்கள்: 1. தொழில், 2. பழங்குடியினர் அமைப்புகளின் எச்சங்கள், 3. புதிய நம்பிக்கைகளின் தோற்றம், 4. கலப்பின விருத்தி, 5. குடிப்பெயர்வு. ‘இவையெல்லாம் பிற சமூகங்களில் இல்லையா? இருந்தால் உலகின் பிற சமூகங்களில் ஏன் சாதி உருவாகவில்லை?’ என்ற கேள்வியை எழுப்பி, ‘கூர்ந்து நோக்கும் நமக்கு அவை வெறும் கற்பனைக் காட்சிகளாகவே தெரிகின்றன’ என்று மறுக்கிறார் அம்பேத்கர். அவ்வாறெனில், சாதி எவ்வாறு உருப்பெற்றிருக்கும்? ‘கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளும் கொள்கை’யை (குளோஸ்டு டோர் பாலிஸி) சாதியின் தோற்றத்துக்குக் காரணமாக அம்பேத்கர் முன்வைக்கிறார்.
இங்கு இரண்டு கேள்விகளை அம்பேத்கர் எழுப்புகிறார்.
இந்த மக்கள் பிறரோடு கலவாமல் தனித்தியங்கு மாறு கட்டாயப்படுத்தப்பட்டார்களா?
(அல்லது) அவர்களாகவே தனித்து இருப்பதற்காகக் கதவுகளைத் தாழிட்டுக்கொண்டார்களா?

இரண்டுமே நடந்திருக்கிறது என்று அம்பேத்கர் விடையளிக்கிறார்.
போலச் செய்தல்
சாதியத்தின் பரவலாக்கலுக்குக் காரணமாகப் ‘போலச் செய்தல்’ என்கிற ஒன்றின் வழியாகத்தான் அகமண முறை, கதவடைப்பு போன்றவை நிகழ்ந்து, சாதியம் பரவியது என்று அம்பேத்கர் நிறுவுகிறார். ஆக, சாதி என்பதை ஒற்றையாக அம்பேத்கர் பார்க்க
வில்லை. சாதிகள் என்று பார்க்கிறார். ‘பார்ப்பனர்கள் தங்களைத் தனியாக ஒரு சாதியென்று ஆக்கிக் கொண்டதன் விளைவாகப் பார்ப்பனரல்லாதோர் என்றொரு சாதி உருவாக நேர்ந்தது’ என்கிறார். விலக்கி வைக்கப்பட்டவர்கள் தாங்களே ஒரு தனிச் சாதியாக ஆகும்படி தூண்டுதல் என்பது ஒரு கள்ளத்தனமான செயல்திட்டம். இந்தத் திட்டத்தின் விளைவாகத்தான் பல்வேறு சாதிகள் உருவாகியுள்ளன என்கிறார் அம்பேத்கர்.
இரு நிலைகளில் அவரது கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாக, தனது ஆய்வுக்கு உட் படுத்தும் பொருளைத் தன் நிலையிலிருந்து அதாவது, தான் அனுபவித்த வேதனைகள், அவமானங்கள் ஆகியவற்றின் வழியாக அடையாளம் கண்டு வளர்த்தெடுத்தல். இதனூடாக, ஆய்வுப் பொருள் சார்ந்து உலகளாவிய நிலையில் உள்ள தரவுகளை ஒப்பிட்டுக் காட்டி விவாதித்தல்; அறிவுஜீவிகளின், கோட்பாட்டாளர்களின் பார்வையிலிருந்து மட்டு மல்லாமல், தான் எடுத்துக்கொள்ளும் ஆய்வுப் பொருண்மை பொதுமக்களின் பார்வையில், பயன் பாட்டில் எவ்வாறு உள்ளது என அணுகுதல்; எடுத்துக்
காட்டாக, சாதியம் சார்ந்த வெகுமக்களின் நம்பிக்கை, அவர்களின் செயல்பாடுகள் (போலச் செய்தல், கதவடைத்துக்கொள்ளுதல்) போன்றவற்றைக் கணக்கில் கொண்டு அணுகுதல். அம்பேத்கரின் இவ்வகை அணுகுமுறையை அவரது பல்வேறு ஆய்வுகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். இந்த ஆய்வுரை மானுடவியல் மாணவர்களுக்கு மானுடவியல் சார்ந்த முறையியலோடு நிகழ்த்தப்பட்டது நினைவில் கொள்ளத் தக்கது.
இரண்டாவதாக, அம்பேத்கர் சாதிகளின் தோற்றம், வளர்ச்சியை நிறுவுவதற்குப் பாலின அரசியலைக் கைக்கொள்கிறார். அதாவது, பெண்ணினம், ஆணினம் சார்ந்து. திருமணம் செய்துகொண்ட பின்புதான் ஒரு பெண்ணும் ஆணும் சமூக அங்கீகாரம் பெறுகிறார்கள். தம்பதியரில் யாராவது ஒருவரின் இறப்புக்குப் பின் உயிரோடு இருப்பவர்களைச் சமூகம் எப்படி நடத்துகிறது? மேலும், புறமணம், அகமணம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, மணமுறையில் இணையும் பெண், ஆண் சார்ந்து சாதியத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் அம்பேத்கர் நிறுவுகிறார். சாதியத்தின் பரவலுக்குச் சமயம் சார்ந்த சடங்கியல் அதிகாரம், கதவடைப்பு, அகமண முறை, போலச் செய்தல் போன்ற செயல்பாடுகளை எடுத்துக்காட்டி நிறுவுகிறார்.

இத்தகைய பண்பாட்டு ஆய்வு, நம் அனைவரையும் பாதிக்கும் அதிகார அமைப்பாகச் சாதியை அடையாளப் படுத்துவது மட்டுமல்ல; சாதிப் பிரச்சினையைத் தலித் பிரச்சினை என்பதோடு சுருக்கிவிடாமல், சாதி ஒழிப்புப் போராட்டத்தில் அனைவருக்கும் உள்ள பங்கை உணர்த்துவதாகவும் இருக்கிறது.
கோ. பழனி,
பம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள்’ என்ற நூலின் பதிப்பாசிரியர், உதவிப் பேராசிரியர்,
சென்னைப் பல்கலைக்கழகம்,
தொடர்புக்கு: elaezhini@gmail.com​

Thank you Hindu
...மேலும்

Feb 22, 2015

பிப்ரவரி 22: கஸ்தூரிபா காந்தி எனும் தியாகப்பெண்மணி நினைவு தினம் - சிறப்பு பகிர்வு


கஸ்தூரிபா காந்தி எனும் தியாகப்பெண்மணி மறைந்த தினம் இன்று ,காந்தியடிகளை விட சில மாதம் மூத்தவரான இவரை காந்தியடிகள் 13 வயதில் திருமணம் செய்து கொண்டார் . படிப்பறிவில்லாத இவருக்கு ஆங்கிலம் சொல்லித்தருகிற வேலையை காந்தியே செய்தார் . முதலில் அடக்குமுறையை நிகழ்த்துகிற ஒரு சராசரி இந்திய கணவனாக இருந்த காந்தி படிப்படியாக அடைந்த மாற்றத்துக்கு கஸ்தூரிபா காந்தி முக்கிய காரணம் .

பல சமயங்களில் தனக்கு ஒப்புமை இல்லையென்றால் வாதாடி தனக்கான உரிமையை நிலைநாட்டிக்கொள்ளும் குணம் அவருக்கு இருந்தது. காந்தி பொது வாழ்வில் பெண்கள் ஈடுபட எது தடை என யோசித்து பார்த்த பொழுது அவர்களுக்கு பாதுகாப்பின்மை தான் முக்கிய காரணம் என உணர்ந்தார் . ஆகவே முன்னுதாரணமாக ,1906 இல் பிரம்மச்சரியத்தை தன் ,மண வாழ்வில் கஸ்தூரிபா காந்தி விருப்பத்தோடு ஏற்றுக்கொண்டார் .தென் ஆப்ரிக்காவில் ஆஸ்ரமம் அமைத்து காந்தி தங்கிருந்த பொழுது ,லாரன்ஸ் எனும் காந்தியின் முதன்மை செயலாளர் ஆன தமிழர் ஒரு நாள் சிறுநீர் கழிக்கும் சட்டியை சுத்தம் செய்ய மறந்து வெளியேறி விட்டார் .காந்தி இவரை அதை சுத்தம் செய்ய சொன்னார் ;இவரோ மறுத்தார் .

பின் இறுகிய முகத்தோடு அவ்வேலையை செய்ய போனபொழுது சிரித்த முகத்தோடு வேலையை செய்ய வேண்டும் என காந்தி சொல்ல ,இவர் ஒரு பரிதாபமான பார்வை பார்க்க ."இப்படி என்றால் வீட்டை விட்டு வெளியேறு என்றார் .தென் ஆப்ரிக்காவில் எங்கே நான் போவது என கேள்வி எழுப்பினார் இவர் .பின் அதை செய்தும் முடித்தார் . மகன்கள் மற்றும் காந்திக்கிடையே நடந்த பல போராட்டங்களில் சிக்கிக்கொண்டு அல்லடினார் இவர். எனினும் பெரும்பாலும்  இவர் காந்தியடிகள் பக்கமே நின்றார் .

பல்வேறு போராட்டங்களில் கலந்து சிறை சென்றார் உடல்நிலை சரியில்லாமல் போன பொழுது உப்பையும்,பருப்பையும் துறக்க இவர் மறுத்த பொழுது காந்தியே துறந்து இவரையும் அவ்வாறே செய்ய வைத்தார் . இலங்கைக்கு போயிருந்த பொழுது நோயால் மங்கிப்போய் இருந்த இவரின் முகத்தை பார்த்து இவர் காந்தியின் அம்மா என ஒரு நபர் அறிவித்து விட காந்தி ,"ஆம் !அவர் என் அம்மாவை போன்றவர் தான் !"என்றார் .

வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் சிறை சென்ற பொழுது உடல்நலம் குன்றி நிமோனியாவால் பாதிக்கபட்ட அவருக்கு ஆங்கில மருத்துவ முறையின் மீது பெரிய நம்பிக்கை இல்லாத காந்தியடிகள் பெனிசிலின் போட அனுமதி மறுத்து விட்டார் . கஸ்தூரிபா காந்தியின் உயிர் இதே தினத்தில் அடங்கியது .
- பூ.கொ.சரவணன்

...மேலும்

பெண்களின் கல்வியும் சமுதாய முன்னேற்றமும் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்


(அண்மையில் தனது நூற்றாண்டைக் கொண்டாடிய இராமநாதன் மகளீர் கல்லுரியின் நூற்றாண்டு விழா மலரில் இந்தக் கட்டுரை வெளிவந்திருக்கிறது)

மக்களின் கல்வியறிவு, உலகத்தில் நடக்கும் எந்த மாற்றத்திற்கும் அடித்தளமாகிறது. அது சமயத்துடன் சம்பந்தப்பட்டதாகவிருக்கலாம் அல்லது விஞ்ஞானத்துடன் சம்பந்தப்பட்டதாகவிருக்கலாம்,அவைகளின் வளர்ச்சிக்கம் மாற்றங்களுக்கும் ஒரு சமுதாயம் மேற்கொள்ளும் கல்வி அமைப்பு இன்றயமையாததது. அதிலும் பெண்களின் கல்வி ஒரு காத்திரமான அறிவுத்தளத்தில் சமுதாயம் வளர உதவுகிறது. சமுதாயத்தின் மூலமான ஒரு குடும்பம் நல்லமாதிரியமைய அந்தக்குடும்பத்தைக் கொண்டு நடத்தும் பெண்ணின் அறிவு உதவி செய்கிறது. இன்றைய கால கட்டத்தில் பெண்களின் படிப்பு பல வித்திலும் வளர்ச்சியடைந்திருக்கிறது. வீட்டில் அடைந்து கிடந்த பெண்கள் விண்வெளிப் பிரயாணம் செய்ய அவர்களின் கல்வி துணைசெய்கிறது. குடும்பத்தின் பொருளாதாரம் சீர் சிறப்பாகவிருந்து நிம்மதியான வாழ்க்கைவாழ, பெண்கள் படிப்பதும் வேலைக்குப்போவதும் தவிர்க்கமுடியாத அம்சமாக இன்று கருதப்படுகிறது.

கடந்த இருநாறு வருடங்களாகத் தொடரப்படும் பெண்கள் கல்வியால் இலங்கை பல விதத்திலும் மற்றைய தென்னாசிய நாடுகளை விட முன்னேறியிருக்கிறது. உதாரணமாக,குழந்தைகள் ஆரோக்கியமாக வளரப் பெண்களின் படிப்பும் அதனால் அவர்கள் பெறும் பல்விதமான அறிவும் மிகவும் இன்றியமையாதது என்பதற்கு, இலங்கையில் பெண்களின் படிப்பு நிலை உயர, தாய்சேய் நலமும் உயர்ந்திருக்கிறது என்று சுகாதரா திணைக்கள அறிக்கைகள் சொல்கின்றன.

பெண்கள் சமுதாயத்தின் கண்கள் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்தக்கண்கள் தங்களுக்கும், தங்கள் சமுதாய முன்னேற்றத்துக்கும் வளம் கொடுக்கும் நல்ல பல பாதைகளை அவர்கள் பெறும் கல்வி மூலம் கண்டு தெரிந்து கொள்கிறார்கள். செல்வத்தில் பெரும் செல்வம் கல்விச் செல்வம் என்பதை உணர்ந்து கொண்ட எங்கள் மூதாதiயோர் தங்களால் முடிந்தவரை அந்தச் செல்வத்தைப் பெண்களுக்கும் கொடுக்க நினைத்துப் பல கல்வி நிலையங்கைப் பெண்களுக்காக அமைத்தார்கள். அவற்றில் இராமநாதன் பெண்கள் கல்லூரியும் ஒன்றாகும். இலங்கையின் தமிழ்ப் பெண்களின் கல்விக்கு அத்திவாரமிட்ட பல பழைய ஸ்தாபனங்களில் ஒன்றான, இராமநாதன் பெண்கள் கல்லூரியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் அத்தனைபேருக்கும் எனது வாழ்த்துக்களைச் சொல்லிக்கொண்டு, பெண்களின் கல்வியால் அவர்களின் குடும்பம் மட்டுமல்ல அவர்கள் வாழும் சமுதாயமும்,எப்படிப் பயன்பெறுகிறது என்பதையிட்டு இச்சிறு கட்டுரையை படைக்கிறேன்.

பெண்களுக்கான கலை, கலாச்சார, சமய அறிவு பற்றிய கல்வியின் முக்கியத்துவத்தை,மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே உரோமா ஆதிக்கவர்க்கம் உணர்ந்;திருந்தது. உரோம ஆடசியில் மேன்மட்ட வர்க்கத்துப் பெண்களுக்கு பல தரப்பட்ட கல்விகள் கொடுக்கப்பட்டன. அந்த கால கட்டத்துக்கு (முன்னரே கி;மு.5ம் நூற்றாண்டு) கால கட்டத்தில் இந்தியாவில் பெண்களுக்காக, ரக்ஸில்(இன்றைய பாகிஸ்தான்),நாலந்தா போன்ற இடங்களில் சமயம், கலைகள்பற்றிய விபரங்கள் படிப்பக்கப்பட்டன என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆண்களுக்கான கல்வி குருகுல முறையில் இருந்தபோது பெண்களுக்காகத் தனியாகக் கல்வி நிலையங்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றன.

கி;மு., இரண்டாம் நூற்றாண்டில் மனுதர்மசாஸ்திரம் குடும்பத்துப்பெண்கள் எப்படி வாழவேண்டும் என்ற விதிமுறைகளை முன்னேடுத்தது.’ வயதுக்கு வந்த பெண்களோ அல்லது வயது போன பெணகள் என்றாலும் எக்காரணம் கொண்டும் ஆண்துணையற்று வெளியே போகக்கூடாது எனபதை வலியுறுத்தியது.
‘பெண்கள்,சிறுவயதில், தகப்பனின் கட்டுப்பாட்டிலும், மணம்முடித்ததும் கணவனின் கட்டுப்பாட்டிலும்,; விதவையானால் மகனின் கட்டுப்பாட்டிலும் வாழவேண்டும் என்று வலியுறுத்தியது. அதனால் பல இந்துப்பெண்கள் வெளியே சென்று படிக்க அனுமதிக்கப் படவில்லை. ஆனாலும் பெண்களின் படிப்பு ரக்ஸரிலிலும்,நாலந்தாவிலும் 13ம் நூற்றாண்டுவரை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த இடங்கள் புத்த மதத்துடன் சம்பந்தப் பட்டதால் அங்கு புத்த மதம், கலை கலாச்சாரம் பற்றிய கல்விகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம்.

ஆதி காலத்திலேயே, மனுதர்மசாஸ்திரம் பெண்களின் கட்டுப்பாட்டை வலியுறுத்தினாலும், தமிழ்நாட்டில் பல பெண்கள் கல்வியறிவுடனிந்ததற்கான பல சான்றுகள் உள்ளன.தமிழச்சங்க காலத்தில் பல படித்தபெண்கள் வாழ்ந்திக்கிறார்கள் என்பதற்கு அவ்வையார் போன்ற பெண்கள் சான்று பகர்கிறார்கள். பெண்கள் பல நாடுகளலும் பல தரப்பட்ட சமயவேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதற்கு காரைக்கால் அம்மையார், ஆண்டாள் போன்னேர் உதாரணமாகவிருக்கிறார்கள்.அதேபோல், இஸ்லாம் பரவுவதற்கு நபிகள்நாயத்தின் துணைவியார் கதிஜா அம்மையார் பெரும் பணி செய்திருக்கிறார் என்று ஆய்வகள் சொல்கின்றன. கிறிஸ்தவ சமயத்தின் ஆரம்பத்தில் மேரி மக்டலினின் பணியும் முக்கியமானது.
வட இந்தியா மொலாயர் ஆட்சியிலிருந்தபோது,பதினோராம் நூற்றாண்டில் பலதரப்பட்ட கல்விகளுக்கும் முன்னிடம் கொடுக்கப்பட்டது.டெல்கி, லக்னோ,அலகபாத் போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டன..

பிரித்தானியராட்சியிலிருந்த நாடுகளுக்குப் கிறிஸ்தவ சமயத்தை, பரப்புவதற்குக் கல்வியை மிகவும் முக்கியமான விடயமாகப் பாவித்தார்கள்.
பிரித்தானியர் ஆடசி செய்த இடங்களில் ஆங்கில்கல்வியுடன் மதமும் பரப்பப்பட்டது. முக்கியமாக, இந்தியாவில், கிழக்கிந்தியக் கொம்பனி அடியெடுத்தகாலத்தில் அவர்கள்pற் பலர் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்தார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளின் தேவைக்கு மட்டுமல்லாது, தங்களுக்கு வேலை செய்பவர்களுக்கு ஆங்கில அறிவும் தேவை என்பதால் பல கல்வி நிலையங்களை ஆரம்பித்தார்கள். பெண்கள் கல்விக்கூடங்கள் பலவற்றையும் ஆரம்பித்தார்கள்.

1857ல் பம்பாய(முமு;பாய்);,கல்கத்தா, மட்ராஸ்(சென்னை); போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தார்கள். இவற்றில்,கிறிஸ்தவ, பார்ஸி சமயப்பெண்கள் கணிசமான வித்திலும் இந்துப்பெண்கள் மிகக்குறைந்த விகிதத்திலும் சோர்ந்து படித்தார்கள். 1885ல் இந்திய காங்கிரஸ ;கட்சியின் பெண்கள் அமைப்பு உருவானது. சரோஜினி நாயிடு, அன்னிபெஸன்ட் அம்மையார் போன்றோர் பெண்களின் கல்வியின் முக்கியம் பற்றிப் பல பிரசாரங்களை மேற்கொண்டார்கள். இப்படி, இந்தியாவில் பெண்கள் கல்வி வளரத் தொடங்கியது.1882ம் ஆண்டு இந்தியாவில் படித்த பெண்களின் தொகை 2 விகிதமாகவும் இந்தியா சுதந்திரம் பெற்றபோது 6 விகிதமாகவுமிருந்தது. அதிலும் பெரும்பாலானவர்கள், மேல்மட்டத்தைச்சேர்ந்த குடும்பத்துப் பெண்களாகும்

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கான பாடசாலை அமெரிக்க மிஸனரியால் 1813ல் தொடங்கப் பட்டது. பெண்களுக்காக தென் ஆசிய நாடுகளில் உண்டாக்கப்பட்ட முதலாவது பாடசாலையிதுவாகும். 1834ல் வேம்படி மகளீர் பாடசாலை தொடங்கப்பட்டது.1896ல் சுண்டிக்குளிப் பெண்கள் கல்லூரி தொடங்கப்பட்டது..
பல பாடசாலைகளில் கிறிஸ்தவ சமயப்படிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டதால், இந்து சமயத்தைச் சேர்ந்த பெண்களுக்கு,சைவசமயத்தையும் அதனையொட்டிய கலா கலாச்சாரங்களையும் படிப்பிக்க இராமநாதன் பெண்கள் கல்லூரி சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் 1913ல்அமைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் சமய, கலா கலாச்சாரத்தின வளர்ந்த கல்லூரியில் நாளடைவில் பல தரப்பட்ட உயர் கல்விகளும் போதிக்கப்பட்டு, வடமாணத்தில் பெண்களின் படிப்புக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் அடித்தளம்போட்ட கல்வி நிலையங்களில் ஒன்றாக முன்னிலை வகிக்கிறது இராமநாதன் பெண்கள் கல்லூரி.

ஓரு சமுதாயம் எப்படி வளர்கிறது என்பதை அவதானிக்க அந்நாட்டில் பெண்களின் கல்வியும் அந்தக்கல்வி மூலம் பெண்கள் சமுதாயத்துக்குச் செய்யும் பல தரப்பட்ட பணிகளையும் வைத்து அளவிடலாம்.
கடந்த இருநாறு வருடங்களாகப் பெண்களின் உயர்கல்வியின் நிலை படிப்படியாக உயர்ந்து, இன்று பல நாடுகளில் ஆண்களைவிடப் பெண்கள் நல்ல விதத்தில் சித்தியடைவதும் பரவிக்கொண்டு வருகிறது.
1981(அல்லது82) ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் கல்விஅமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, தென்னாசியாவில் உயர்கல்வியை நாடும் பெண்களின் தொகையில் இலங்கை முன்னிடம் வகித்தது. அதிலும் வடபகுதிப் பெண்கள் பலர் இலங்கையின் தென்பகுதிப் பெண்களைவிட (விகிதாசாரப்படி), கூடிய கல்வித்தரத்தில் இருந்தார்கள் என இவ்வறிக்கை சொன்னது.

அண்மைக்காலத்தில் எடுத்த கணிப்பின்படி, இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகையும் 21.283.913 என்றும் அதில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிககையை விடக் கூடுதலாக இருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது..அதில்,பெண்களின் சனத்தொகை,10.864.073,ஆண்களின் சனத்தொகை,10.419.840 ஆகும். இலங்கையில் பெண்களின் கல்வி தென்னாசிய நாடுகளை விட மிகவும் உயர் நிலையிலுள்ளது. இலங்கையின் செலவாணியில் 5.4 விகிதம் கல்விக்காகச் செலவிடப்படுகிறது.

இலங்கை சுதந்திரம் அடைந்தபின் திரு கன்னங்கரா அவர்களாற் கொண்டவரப் பட்ட கல்வித்திட்டத்தால்,1931ல் இலங்கையிலுள்ள அத்தனை மக்களுக்கும் கல்வி கொடுக்கப்படவேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது. இன்று இலங்கையில்,9830 பாடசாலைகளில் 4.030.000 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இலங்கையின் ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வியை எடுத்துக்கொண்டால் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களில் 92 விகிதமானவர்கள் உயர்கல்வியை நாடுகிறார்கள். ஆண்கள்,பெண்கள் என்று பிரித்துப் பார்த்தால் மேற்படிப்பு படிக்கும் ஒட்டுமொத்த ஆண்கள் 95.8 என்றும், பெண்களின் தொகை 93 விகிதம் என்றும் இலங்கைக் கல்வி மந்திரியின் செயலகம் அறிவிக்கும்போது, இந்த உயர்வு இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் சமமாக இல்லை என்றும் தெரிகிறது.கடந்த முப்பது வருடங்களாக நடந்த போhரின் பல காரணத்தாலும் வேறு பல காரணங்களாலும் இலங்கையிற் சில பகுதிகளில் கல்வி நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக,மட்டக்களப்பில் மேற் படிப்பு படிக்கும் பெண்களின் 81.3 விகிதம்,அம்பாரைப்பகுதியில் 87.2 விகிதம், நுவரெலியாப் பகுதியில் 80.1 விகிதம் மட்டுமே.

2010ம்ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்குப் போனவர்களில் 58விகிதம் பெண்களாகும் இது பல காரணங்களால் நடந்திருக்கலாம், உதாரணமாக, இலங்கையில் தொடர்ந்து நடந்தபோரால் பல இளவயது ஆண்கள் இறந்தார்கள்.சிலர் மேற்படிப்பற்றுப் படையிற் சேர்ந்தார்கள் வசதியான குடும்பத்து ஆண்கள் மேற் படிப்புக்காக வெளிநாடு சென்றார்கள்.
மேற்படிப்பைத் தொடரும் பெண்களில் கூடுதலானவர்கள்(78.80 விகிதம்) விஞ்ஞான பாடங்களற்ற துறைகளை(ஆர்ட்ஸ், கொமேர்ஸ்) நாடுவதால்,பல்கலைக்கழகப்படிப்பு முடிந்தததம் பெண் பட்டதாரிகளுக்குள் வேலையில்லாத்தட்டுப்பாடு நிறைந்திருக்கிறது.

சைவசமயத்தைச் சேர்ந்த பெண்களுக்காகத் தொடங்கப் இராமநாதன் பெண்கள் கல்லூரியில் ஆதிகாலத்தில் சமயம், கலை, கலாச்சாரம் போன்ற படிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நாளடைவில் அங்கு விஞ்ஞான பாடங்களும் போதிக்கப்பட்டன.

ஆதிகாலம் தொடக்கம்,காலத்துக் காலம் பெண்களின் படிப்பு பல திருப்பு முனைகளைக்கண்டிருக்கிறது. படித்த பெண்கள் அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தின் சமய வளர்ச்சிக்கும், கலை கலா வளர்ச்சிகளுக்கும் உதவியிருக்கிறார்கள். எங்கள் தமிழ்ச்சமுதாயம் முப்பது வருடப்போரால் துயருற்று வாடியது. எங்களின் கல்வி,கலை கலா வளர்ச்சிகள் மிகவும் பாதிக்கப்பட்டன.இன்று அமைதியான சூழ்நிலையில் மக்கள் தங்கள் வாழ்க்கையைச் சீர்திருத்திக்கொள்ளவும், தங்கள் குழந்தைகளுக்குத் தங்களால் முடிந்த அளவு உயர் கல்வியைக் கொடுக்கவும் பாடுபடுகிறார்கள். இந்தக்கால கட்டத்தில் பழம் பெருமைவாய்ந்த இராமநாதன் கல்லூரியின் கடமைபல. அவற்றில் படிக்கும் மாணவிகள் எதிர்நோக்கும் சவால்கள் பல. பெண்களுக்கு முன்னால் விரிந்து கிடக்கும் பல தடைகiயும் தாண்டித் தன்னையும் தான்வாழ்ந்துகொண்டிருக்கும் சமுதாயத்தையும் மேன்படுத்துபவர்கள் தமிழ்ப்பெண்கள். அந்த அடிப்படையில் இராமநாதன் கல்லூரி மாணவிகளும் தங்களின் வளர்ச்சிக்கும் தமிழ்ச்சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிக்கம் உதவி செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
...மேலும்

Feb 21, 2015

நீதிக்கான பறை முழக்கமும் – அது தரும் அதிர்வுகளும்


இலங்கையில் தமிழ் சூழலில் விசேடமாக மட்டக்களப்பில் 1990 களுக்குப் பின்பிருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான செயற்பாடுகள்; குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெற்று வருகின்றமையைக் காண்கின்றோம்.

ஆரம்பத்தில் 1990 களின் தொடக்கத்தில் பெண்ணிலைவாதம் பற்றிய கருத்துநிலை சார்ந்த ஆய்வுகள் அவை பற்றிய உரையாடல்கள் குறிப்பிட்ட வட்டங்களுக்குள்ளே தொடங்கப்பெற்று அவை மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டு காலப்போக்கில் எழுத்து,ஆய்வு,உரையாடல் என்பதையும் தாண்டி சாதாரண மக்களை நோக்கி இத்தகைய உரையாடல்களை நிகழ்த்தும் போக்கு விரிவடைந்தமையை அறிய முடிகின்றது.

மட்டுநகரில் 1990 களில் ஆரம்பித்த சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் தொடக்க கால நிகழ்ச்சிகளையும், 1995 களின் பின்னர் சூரியா கலாசாரக் குழுவினர் உருவாக்கப்பட்டு அதனூடாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளையும் அவற்றின் வரலாறுகளையும் அறியும் போது இந்த விடயத்தைப் புரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக 1995களுக்குப் பின்பிருந்து மட்டக்களப்பில் பல்வேறு வெகுசன வெளிகளில் பெண்ணிலைவாதம் சார்ந்த உரையாடல்கள் நிகழ்த்தப்படும் நிலை மேற்கிழம்பியமை குறிப்பிடத்தக்கது.

இவ்விதமான தொடர் செயற்பாடுகளால் புதிய எண்ணக்கருக்களின் முன்மொழிதல்களையும், பெண்களுக்கு எதிரான பாராபட்சங்களை இல்லாமல் செய்வதற்கான ஆக்கபூர்வமான போராட்டத்தினை வலுவூட்டும் கள அனுபவங்களையும் மட்டக்களப்பின் பெண்ணிலைவாதச் செயல்கள் வழங்கியுள்ளன எனலாம்.பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமான உண்மையான விடயம் மூடி மறைக்கப்படும் பண்பாட்டிலிருந்து, பாதிக்கப்பட்ட பெண்ணினுடைய பாதிப்பிற்கான உண்மைக் காரணத்தினைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட கண்ணுக்குப் புலப்படாத அரங்க ஆற்றுகை 1995 களின் பின்னர் மட்டக்களப்பில் பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய முக்கிய விடயமாக உள்ளது.

போர் சூழ்ந்த காலமாகவும், உண்மைகளை மூடி மறைத்து புனைவுகளை உண்மைகளாகப் பதிய வைக்கும் பண்பாடும் வலுவாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு அச்சுறுத்தல்கள், ஆபத்துக்களை எதிர்நோக்கியவாறு மிகவும் துணிச்சலுடன் பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் மறைந்து நிற்கும் அரங்கினூடாகச் செயலாற்றி பாதிக்கப்பட்ட பெண்களின் பாதிப்பிற்கான உண்மைகளைக் கண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைக்கப் பாடுபட்டார்கள்.

இத்துடன் மக்கள் கூடும் இடங்களிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த பகுதிகள் என அடையாளங்காணப்பட்ட இடங்களிலும் பெண்ணிலைச் செயற்பாட்டாளர்கள் (சூரியா கலாசாரக் குழுவினர்) தெருவெளி ஆற்றுகைகளிலீடுபட்டு பெண்ணிலைவாதக் கருத்துக்களைப் பரவலாக்கினார்கள்.

மிகவும் அசாதாரணமான காலத்தில் ஆக்கபூர்வமாக வன்முறையற்ற மனித வாழ்க்கைக்காக அரங்க ஆற்றுகைகளூடாகப் போராடுவது எப்படி என்கின்ற அனுபவத்தை, படிப்பினைகளை வழங்கும் செயலாக மட்டக்களப்பில் 1995 களுக்குப் பின்னர் இடம்பெற்ற பெண்ணிலைவாத அரங்க அனுபவங்கள் இருந்து வருகின்றன.

பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு மற்றும் வன் கொடுமைகள் நமது சமூகத்தின் சகல மட்டத்திலும் இடம்பெற்ற சூழலில் ஸ்ரீலங்காப் படைகள் புரிந்த வன்கொடுமைகள் மாத்திரமே வன்கொடுமைகள் என்பது போன்றதான நிலைமை கட்டமைக்கப்பட்ட ஊடகப்பண்பாடு தமிழில் மிகப்பெரும்பாலும் ஆதிக்கஞ்செலுத்திய காலத்தில் உற்றார், உறவினர், நண்பர்கள் முதலானோர்களால் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய விதத்தினை வன்கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்ட பெண்கள் வன்கொடுமைகளுக்குள்ளான போது அணிந்திருந்த ஆடைகளின் காட்சி சாட்சியாக வெளிக்காட்டியிருந்தது. 

மட்டுநகரில் பிரசித்தி பெற்ற அரசடிச் சந்தியில் 1996களில் இக்காட்சி நடத்தப்பட்டிருந்தது. அப்போது இக்காட்சியைப் பார்த்த பலரதும் மனச்சாட்சிகள் அதிர்ந்தன. ஆண்கள் மத்தியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் பயங்கரத்தை உணர்வு ரீதியாக உணர்த்திய ஒரு காட்சியாக அது அமைந்திருந்தது. பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெண்ணிலைவாதம், பெண்விடுதலை குறித்த கவனயீர்ப்பினை அப்போது இக்காட்சி தூண்டியிருந்தது. நகர்புறப் பாடசாலைகளிடையே பெண் விடுதலை குறித்து உயர் வகுப்புக்களில் ஆசிரியர்களும், மாணவர்களும் உரையாடல்களை நிகழ்த்த இக்காட்சி அக்காலத்தில் காரணமாக இருந்தது.

இப்பயணத்தில் ஒரு பரிமாணமாக 2004,2005 காலப்பகுதியில் மட்டக்களப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான ஆண்கள் குழுவின் உருவாக்கமும் அக்குழுவினரின் தெருவெளி அரங்க ஆற்றுகைகளும் மேற்கொள்ளப்பட்டன.

சமூகத்தின் சகல மட்டங்களையும் சேர்ந்த ஆண்கள் பலருடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான களப்பயிற்சிகள் ஊடாக அந்தக் குழுவினர் உருவாக்கம் பெற்றதுடன் இக்குழுவினரின் பங்குபற்றுகையுடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக செலுத்தப்பட வேண்டிய அவதானமும் அக்கறையும் குறித்த உரையாடல் இந்த ஆண்கள் குழுவின் (மூன்றாவதுகண் நண்பர்கள் குழு) ஆற்றுகையூடாக பொது வெளிகளில் பரவலாக நிகழ்த்தப்பட்டது.

இக்குழுவில் இயங்கிய ஆண்கள் பலரும் தற்போது அவர்கள் சார்ந்த துறைகளில் பெண்ணிலைவாத கருத்தியலுடன் இயங்கி வருகின்றவர்களாக உள்ளனர்.

பெண்ணிலைவாத செயற்பாட்டுத் தளத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக் எதிரான ஆண்களின் செயல்வாத ஆற்றுகை எனும் விடயம் மட்டக்களப்பின் பெண்ணிலைவாதச் செயற்பாடுகளில் மற்றொரு புதிய பரிமாணமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்றுப் பின்புலத்தில் 2015இல் மற்றொரு புதிய அறை கூவலாக கடந்த கால அனுபவங்களின் தொடர்ச்சியாக 'நீதிக்கான பறை' எனும் நிகழ்ச்சி மட்டக்களப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்களால் மீண்டும் முழங்கப்பட்டிருக்கின்றது.

மேலே நாம் குறிப்பிட்டுள்ள பெண்ணிலைவாதச் செயற்பாடுகள் அனைத்திலும் முக்கிய பங்கு வகித்த ஓவியரும்,பெண்ணிலைவாதியுமான கமலா வாசுகி அவர்களின் இணைப்பில் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்காக செயலாற்றி வரும் செயற்பாட்டாளர்களான ககோதரிகள் சிலரும் ஒன்றிணைந்து 'நீதிக்கான பறை' எனும் ஆற்றுகையினை கடந்த 14.02.2015 சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நிகழ்த்தியிருந்தார்கள்.

உலகளாவிய வகையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை, பாராபட்சங்களை இல்லாது ஒழிப்பதற்காக நடத்தப்பட்டு வரும் நூறு கோடி மக்களின் எழுச்சி எனும் நிகழ்ச்சியை முன்னிட்டு இப்பறை முழக்கம் இடம்பெற்றிருந்தது.

பெண்களின் விடுதலைக்காக இயங்கிக் கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்கள், நூறு கோடி மக்களின் எழுச்சியை விளங்கி அதில் கலந்து கொள்ள வந்த சிவில் சமூகப் பிரஜைகள்,கலைஞர்கள், கடற்கரைக்கு வந்த மக்கள், கிராமத்தவர்கள் எனப்பலர் இந்நிகழ்ச்சியினைப் பார்வையிட்டிருந்தனர்.

மட்டக்களப்பில் கடந்த இரண்டு தசாப்தங்களாக பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ச்சியாகச் செயலாற்றி வரும் சகோதரிகள் பறையினைத் தோளில் தொங்கவிட்டு ஓர் ஒழுங்கில் பல்வேறு பறைத் தாளங்களையும் வாசித்து பல்வேறு வடிவங்களில் சுமார் 50 நிமிடங்கள் ஆற்றுகை செய்து ஆற்றுகை நிறைவில் ஒருமித்து இது நீதிக்கான பறை என்று முழங்கி முடித்தார்கள்.

கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராகப் பேசி,எழுதி இயங்கி பல்வேறு அனுபவங்களையும் பெற்றுள்ள நாங்கள் அதனால் அடைய முடியாத நிலைமைகளை மேலும் எடுத்துக் காட்டுவதற்காக இந்த நீதிக்கான பறையினை முழங்க முன்வந்துள்ளோம் இம்முழக்கத்திலாவது பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிரான கவனம் செலுத்தப்படட்டும் என்று எதிர்பார்க்கிறோம். எனக் கருத்துரைத்திருந்தனர்.

ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் பெண்ணிலை வாதிகளின் போராட்ட உத்தி வித்தியாசமானது அது பழிக்குப்பழி வாங்கும் தன்மையற்றது, ஒவ்வொரு உயிரினதும் பெறுமதியினை பிரதானமாகக் கருதுவது,வன்முறையற்றது, மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவர்களையும் சேர்த்துச் செல்லும் இயல்புடையது, ஆக்கபூர்வமான வகைகளில் முன்னெடுக்கப்படுவது. கலைத்துவமும், படைப்பாக்கமும் கொண்டது. தெளிவான எண்ணக்கருவுடன் மேற்கொள்ளப்படுவது. இந்த வகையிலான ஓர் போராட்டமாகவே நீதிக்கான பறை ஆற்றுகை இடம்பெற்றுள்ளது.

பறை தமிழ் இனத்தின் ஆதிக்குடிகளின் இசைவாத்தியம் என்பது மானுடவியலாளரின் கருத்து, மனிதர்களுக்கு தாள ஒலிகளால் செய்தி கூறுவதற்குப் பறையே பயன்படுத்தப்பட்டுள்ளது. மங்கலச் செய்திகளைக் கூறுவதற்காகவும் அமங்கலச் செய்திகளைக் கூறுவதற்காகவும், மற்றும் பொதுவான சம்பவச் செய்திகளைக் கூறுவதற்காகவும் பல்வேறு  தாளஒலிகளைக் கண்டு பிடித்து அவற்றைத் தொகுத்து ஒழுங்குபடுத்தி செயல்முறைக் கற்பித்தலாக நம்முன்னோர் இவ்வாத்திய இசையாற்றுகை மரபினை வளர்த்து முன்னெடுத்துள்ளார்கள் என்பதை அறிகின்றோம்.

தென்னாசியாவில் ஏற்பட்ட சமஸ்கிருதமயமாக்கமும் வர்ணாச்சிரமப் பண்பாட்டின் கட்டமைப்பும், அதையடுத்து வந்த மேலைத்தேய காலனீயத்தின் நவீன மயமாக்கலும் பறையிசையின் பாண்டித்தியம் பெற்ற பூர்வீகக் குடிகளை சிறைக்குடியாகக் கீழ்மைப்படுத்தியது, பறையிசையினை தீண்டத்தகாதவரின் கலையாகக் கட்டமைத்தது வாழ்விற்கு முழங்கிய மங்கலப் பறையோசைகளை ஒலிக்க விடாது சாவிற்கு ஒலிக்கும் அமங்கல இசையினை மாத்திரம் இசைக்க அனுமதி வழங்கி அமங்கல ஒலியே பறையிசை என எண்ணும் விதமாகப் பொதுப்புத்தியில் பதிய வைத்தது.

பறை முழங்குவோரில் பெரும்பாலானவர்கள் காலங்காலமாகத் தம்மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் மேலாதிக்க ஒடுக்கு முறைகளுக்கு எதிராகத் தம்மனதிற்குள் கனன்று கொண்டிருக்கும் கோபத்துடனும், வெறுப்புடனும் பறையில் ஒங்கி அறைவதைப் போன்றே தம் ஆற்றுகைகளை நிகழ்த்துகின்ற அதேவேளை பறையினை இசைப்பதில் தமக்கிருக்கின்ற அலாதியான படைப்பாக்கத் திறனையும் வல்லமையினையும் வெளிப்படுத்துவதில் மிகவும் உற்சாகமாக செயலாற்றுவார்கள். இப்பறையிசையின் வித்துவம் மிக்க சமூகத்திலும் பெண்களுக்கு அப்பறையினை முழங்க அனுமதி வழங்கப்படவில்லை. ஒடுக்குமுறையினுள்ளும் பெண்கள் ஒடுக்கப்படும் நிலையினையே இது வெளிக்காட்டுகின்றது.


எனவே ஒரே நேரத்தில் சகல விதமான ஒடுக்கு முறைகளையும் எதிர்கொள்பவர்களாகப் பெண்கள் விளங்குகின்றார்கள் குறிப்பாக ஒடுக்கப்படும் சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் காணப்படுகின்றார்கள் இவ்விதமாக அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் முகம் கொடுக்கும் பெண்களின் விடுதலை முழு மனித குலத்தினதும் விடுதலைக்கான அறைகூவலாக அமையும் என்பது உண்மையாகும்.

இந்த வகையில் நமது தொன்மையின் அடையாளமாகவும் அதே நேரம் ஒடுக்கு முறையின் குறியீடாகவும் உள்ள பறையினை ஒடுக்கப்படும் பெண்களின் விடுதலைக்காகச் செயலாற்றும் பெண்கள் ஒடுக்கு முறையின் அனைத்து ரணங்களையும் தாங்கி கலையுணர்வுடன் எடுத்து அனைத்து மனிதரதும் வாழ்விற்காக நீதி கோரி முழக்கமிடுவது எல்லா வகையான ஒடுக்குமுறைகளிலுமிருந்து மனிதர்கள் விடுதலை பெறும் நோக்குடன் நடத்தப்படும் பெண்ணிலை வாதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மற்றொரு போராட்ட வடிவமாகவே அமைந்திருக்கின்றது.

இந்த நீதிப் பறையின் முழக்கங்கள் ஒவ்வொரு மனிதரதும் செவிகளூடாகச் சென்று உடலிலிலும் உள்ளத்திலும் அதிர்வுகளை உண்டுபண்ணி மாற்றங்கள் ஏற்படும் போதுதான் இவ்வுலகத்திற்கு நிலையான சமாதானம் வாய்க்கப்பெறும்.

துரை.கௌரீஸ்வரன்,
மட்டக்களப்பு.

நன்றி - http://www.battinews.com/
...மேலும்

எது மதச்சார்பின்மை? - கவின் மலர்


ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரை இனி கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்துக்குச் செல்லக்கூடாது என தமிழக அரசின் தலைமைச் செயலர் எச்சரித்துள்ள நிலையில் அதற்குக் கூறப்படும் காரணங்களில் ஒன்று. எல்லோருக்கும் பொதுவான ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதே. ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. உமா சங்கர் இதைச் செய்யக்கூடாது என்றால் இந்து மதத்தை மட்டும் மிக வெளிப்படையாக தூக்கிப் பிடிக்கும் நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் செயல்படுவது சரியா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அரசு ஊழியர் தொடங்கி மாநிலத்தின் உச்ச பதவியில் இருப்போர் வரை இந்துக் கடவுளர்களின் படங்களை அலுவலகத்தில் வைத்திருப்பது எந்த வகையில் சரி என்பது பலரின் வாதம். நம் அரசு ஒரு மதச்சார்பற்ற அரசு என்கிறது அரசியல் சாசனம். ஆனால் அதன்படிதான் அரசோ, அரசு அதிகாரிகளோ, அரசாங்கத்தின் அமைச்சர்களோ, அரசு ஊழியர்களோ நடந்துகொள்கிறார்களா? அரசு அலுவலகங்களில் புதிதாக எந்த மதத்தின் வழிபாட்டுச் சின்னமும் அமைக்கப்படக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின்  மதுரை கிளையின் உத்தரவை குறிப்பிட்டு தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கையை தமிழகத்தின் அரசு அலுவலகங்கள் மதித்ததாகத் தெரியவில்லை. மதச்சார்பற்ற அரசு என்பது எந்த மதமும் சாராத அரசு. ஆனால் ஆனால் அதற்கு நேர் எதிராக, இந்து மதம் சார்ந்த பூஜைகள் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் அரசு அலுவலகங்கள் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஆயுதபூஜையோ சரஸ்வதி பூஜையோ நடத்தாத அரசு அலுவலகங்கள் இல்லை.

காவல் நிலையங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. 28/05/2005 தேதியிட்ட டிஜிபி அலுவலகத்தின் அறிக்கை இப்படிக் கூறுகிறது: புதிதாக கட்டப்பட்ட காவல்துறை அலுவலகங்கள், காவலர்களின் குடியிருப்புப் பகுதிகளிலும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற வழிபாட்டுத்தலங்கள் காணப்படுகின்றன. இவை நம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இது தேவையற்ற வேறுபாட்டையோ பதட்டத்தையோ உருவாக்க வாய்ப்புள்ளது. காவல்துறையின் எந்த அலுவலகத்தில் அல்லது குடியிருப்புப் பகுதிகளில் வழிபாட்டுத்தலங்கள் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.  நம்முடையது மதச்சார்பற்ற நாடு என்பதை நினைவில் வைத்து நம் கடமைகளை அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நிறைவேற்றவேண்டும். மேலும் காவலர் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் வழிபாட்டுத் தலத்தை பொதுமக்கள் பயன்படுத்த விரும்பினால் அவர்களை கட்டுப்படுத்த இயலாது. அத்துடன் ஓர் அலுவலகம் என்பது அலுவலகமாக மட்டுமே இருக்கவேண்டும். அதாவது வேலை செய்யும் இடமே வழிபடவேண்டிய ஒன்றுதான்.

ஆனால் இந்த அறிக்கைக்கு மாறாக, தமிழ்நாட்டில் பல காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடப்படுகிறது. (காவல் நிலையங்கள் மட்டுமல்ல அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது) தொடர்ந்து இதை எதிர்த்து பரப்புரை செய்துவரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் இந்தியா டுடே பேசியபோது “உமாசங்கர் ஐஏஎஸ் மதப் பிரச்சாரம் செய்வதை நாங்கள் ஏற்கவில்லை. அது தவறுதான். ஆனால் அவரை மட்டும் கேள்வி கேட்கும் அரசு தன்னளவில் மதச்சார்பற்றதாக இயங்குகிறதா? அதிகாரிகள், நீதிபதிகள் போன்றவர்கள் பகவத் கீதை சொற்பொழிவுகள் செய்வதெல்லாம் எந்தக் கணக்கில் வரும்? ஏ.ஆர். தவே என்கிற உச்ச நீதிமன்ற நீதிபதி ‘கீதையை தேசிய நூலாக்கவேண்டும்’ என்று பேசுகிறார். இவர் எல்லாம் நீதியை ஆராய்ந்து தீர்ப்பு எப்படி கூறுவார்? உச்ச நீதிமன்றம் இரவு 10 மணிக்கு மேல் அமைதிநேரம் என்று அறிவித்திருக்கிறது. ஆனால் கோயில் திருவிழாக்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. அதில் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள். இதையெல்லாம் ஏன் அரசு கேள்வி கேட்பதில்லை” என்று கேட்கிறார்.

அதிகாலையில் அரசு பேருந்துகளில் ஒலிக்கும் இந்து மத பக்திப் பாடல்கள் ஒலிப்பதையும் இந்து மதக் கடவுளர்களின் படங்கள் பேருந்துக்குள் மாட்டப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். நடத்துனரோ ஓட்டுனரோ இஸ்லாமியராகவோ கிறிஸ்தவராகவோ இருந்தாலும் தங்கள் மதப் பாடல்களை ஒலிக்கவிடுவதில்லை. ஆனால் இந்து மதம் சார்ந்த அனைத்துமே வெகு சாதாரணமாக நடைமுறைக்கு வந்துவிடுவது எப்படி என்பதே மதச்சார்பற்றவர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால் இவை எதுவும் தவறில்லை என்கிறார் பாஜகவின் தேசிய செயலர் எச். ராஜா. “இந்தியாவில் இந்துக்கள் தான் பெரும்பான்மை. ஆகவே இது இந்துநாடுதான். பெரும்பான்மையானோர் செய்வதை அரசும் செய்கிறது. அதை குற்றம் என்று சொல்வது சரியல்ல. பூஜை செய்வது நம் நாட்டின் பண்பாடு. அதை மதம் மாறிய இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் கூட பின்பற்றவேண்டும்.” என்று வித்தியாசமாக விளக்கம் தருகிறார்.

அரசின் கடைநிலை ஊழியர்களைவிட அரசை ஆளும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்தான் இன்னும் அதிகமாக கேள்விக்குட்படுத்தப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது சட்டமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எழுத்தாளர் ரவிக்குமார் மதச்சார்பற்ற தமிழக அரசின் சின்னமாக ஒரு கோவில் கோபுரம் எப்படி இருக்கமுடியும் என்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். “உலகளாவிய அளவில் கி.மு, கி.பி என்று வரலாற்றைப் பிரிப்பதே ஒர் மதம் சார்ந்த விஷயமாக இருப்பதாகக் கருதி தற்போது சி.இ (Common Era) என்றும் பிசிஇ (Before Common Era) என்றும் பிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். நாமும் அதுபோல மதச்சார்பற்றவர்களாக ஒவ்வொரு விஷயத்திலும் நடந்துகொள்ளவேண்டியுள்ளது. அனைத்து மதத்தவருக்குமான தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம் இருப்பது சரியல்ல.  அதற்கு பதிலாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும்’ என்று சொன்ன திருவள்ளுவரை சின்னமாக்குவதுதான் சரியாக இருக்கும். மற்ற எந்த மாநிலத்தின் சின்னமும் இத்தனை வெளிப்படையாக ஒரு மதம் சார்ந்து இல்லை. மேலும், அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் அரசு மருத்துவமனை வளாகங்களில் கோயில்கள் உள்ளன. இதுபோல பிற மதத்தினரும் வழிபாட்டுத்தலம் வேண்டுமென்று கேட்டால் கட்டித்தருவார்களா என்ன? ” என்கிறார்.

மதச்சார்பற்ற அரசின் ஓர் அங்கமாகிய அமைச்சர்கள் மண்சோறு சாப்பிடுவது தொடங்கி யாகம் வளர்ப்பது, அங்கப் பிரதட்சணம் செய்வது என்று அனைத்தையுமே செய்கின்றனர். இதை தனிப்பட்ட முறையில் செய்தால்கூட பிரச்சனை இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கும், அவர் சிறையிலிருந்தபோது பிணை கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் அமைச்சர்கள் இவற்றைச் செய்து அவை பத்திரிகைகளில் செய்தியாகும்படியும் பார்த்துக்கொள்கையில் அது பொதுவான விஷயமாகி விடுகிறது. திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த அந்தியூர் செல்வராஜ் கோவில் திருவிழாவில் தீமிதித்தபோது, அப்போதைய முதல்வர் அவரைக் கண்டித்தார். ஆனால் அதிமுக ஆட்சியிலோ இத்தகைய செயலே விசுவாசத்தை அளவிடும் கருவியாகிவிட்டது. வனத்துறை அமைச்சரான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் திருப்பூரில் உள்ள ராகவேந்திரா கோவிலில்  கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நரசிம்ம ஹோமம் ஆகியவை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சியும் கலந்துகொண்டார்.  ஈரோடு மேயரான மல்லிகா பரமசிவம் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் ஜெ. விடுதலைக்காக அங்கபிரட்சணம் செய்து தன்  ‘பக்தி’யை நிலைநாட்டினார்.

அண்மையில் கோயம்புத்தூரின் உள்ள விவசாய ஆராய்ச்சி மையம், விவசாயிகளுக்காக மழை முன்னறிவிப்பு நாட்காட்டி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த ஆண்டு, எந்த மாதத்தில் மழை எவ்வளவு பெய்யக்கூடும் என்று அறிவியல்ரீதியாக ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ள கையேட்டில் பக்கம் 66 முதல் 80 வரை பஞ்சாங்கம் மூலம் கணிக்கப்பட்டு, மழை எப்போது பெய்யும் என்கிற தகவலும் வெளியிடப்பட்டுள்ளதாக கொளத்தூர் மணி கூறுகிறார். “அறிவியல்ரீதியான விஷயங்களை மட்டுமே செய்யவேண்டிய அரசு, பஞ்சாங்கத்தை ஏன் நாடவேண்டும்?” என்று கேட்கிறார். சென்ற ஆண்டு மழை பெய்யாமல் இருந்தபோது தமிழக அரசு சில கோயில்களை தேர்ந்தெடுத்து அங்கு மழைக்காக யாகம் நடத்த உத்தரவிட்டது. அதில் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். “இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை (Secular) கொள்கைக்கும் 51A(h) பிரிவில் உள்ள அடிப்படை கடமைகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை (Seientific Temper) கேள்வி கேட்கும் அறிவை மனித நேயத்தை, சீர்திருத்தத்தைப் பரப்புவது அடிப்படை கடமை என்று இருக்கும்போது,அதை செய்யத் தவறுவதைவிட பெருங் குற்றமும் உண்டோ?” என்கிறது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் அறிக்கை. 

2011 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வெற்றிபெற்றதால் வேண்டுதலை நிறைவேற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கே சரிதா தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கவுரியம்மன் திருக்கோயிலில் தனது நாக்கை வெட்டி காணிக்கை செலுத்தியதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அரசு வேலையை அளித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. மதம் சார்ந்த நம்பிக்கையை ஊக்கப்படுத்துவது மற்றும் கட்சி சார்ந்து செய்த செயலுக்கு அரசு வேலை தருவது என்று இரு தவறுகளை ஒரே நேரத்தில் செய்தார் ஜெயலலிதா. 

மத்தியில் ஆளும் பாஜகவோ மிக வெளிப்படையாக இந்துத்துவத்தை திட்டமாகக் கொண்டு செயல்படுகிறது. தன்னை திராவிடக் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் அதிமுகவின் ஆட்சியில் நிர்வாகத்தின் செயல்பாட்டில், மதச்சார்பின்மையை பூதக்கண்ணாடி வைத்து தேடவேண்டி உள்ளது  “முன்பெல்லாம் அரசு புதிய கட்டடத்துக்கு அஸ்திவாரம் போட்டால் ‘அடிக்கல் நாட்டப்பட்டது’ என்பார்கள். எப்போதெல்லாம் ‘பூமி பூஜை’ என்கிறார்கள். இது எப்படி மதச்சார்பற்ற அரசாக இருக்கமுடியும்?உமாசங்கரை அரசு கேள்வி கேட்பதற்கு முன், அதற்கு முதலில் அது தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளட்டும் ” என்கிறார் கொளத்தூர் மணி.

(நன்றி :இந்தியா டுடே)Posted by கவின் மலர் at 1:56 pm No comments:   Links to this post
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest

Wednesday, January 28, 2015

சென்னை திரைப்பட விழா
தன்னை கொன்றுவிடுவார்கள் என்று தெரிந்து அந்தப் பெண் வீட்டைவிட்டு தப்பிக்க எண்ணுகிறாள். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவளுடைய போராட்டங்கள் அத்தனையையும் வீணாக பெற்ற தந்தையாலும் சகோதரனாலும் கொல்லப்படுகிறாள். The Paternal House திரைப்படத்தின் இந்தக் காட்சி ஓடிக்கொண்டிருந்த சென்னை ஐநாக்ஸ் திரையரங்கம் அதிர்ச்சியில் உறைந்தது. படம் முடிந்து வெளியே வந்து உடனே உட்லேண்ட்ஸ் அரங்கத்திற்கு விரைந்தால் அங்கே கண்ணீர் மல்க வைக்கிறது ஒரு படம்.  அப்படியே கேசினோ அரங்கத்திற்குச் சென்றால் அங்கே வயிறு நோக சிரிக்க வைக்கிறது இன்னொரு படம். பின் ரஷ்ய கலாசார மையத் திரையரங்கில் மனம் நெகிழ வைக்கும் ஒரு படம் என வித விதமான உணர்வுகளுக்குள் ரசிகர்களை மூழ்கடித்தது சென்னை சர்வதேச திரைப்படவிழா.
 டிசம்பர் 18 தொடங்கி 25 ந் தேதி வரை கொண்டாட்டமாக நடந்து முடிந்திருக்கிறது திரைப்பட விழா. அரங்கங்கள் இளைஞர்களால் நிரம்பி வழிந்தன. பலருக்கு எந்தப் படத்தைப் பார்ப்பது என்று குழப்பம். ஒரே நேரத்தில் நல்ல படங்கள் வெவ்வேறு திரையரங்களில் திரையிடப்பட்டதால் எதைப் பார்ப்பது என்கிற குழப்பம். ஒரே நேரத்தில் எந்தப் படமும் பிடிக்காமல் வெளியே வந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்த கூட்டத்தையும் காண முடிந்தது. விழாவில் திரை ரசிகர்களும் திரைத்துறையினரும் கலந்துகொண்டு திரைப்படங்கள் பார்த்தனர். அன்றாடம் இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், சந்தானபாரதி, ராம் போன்றவர்களைக் காண முடிந்தது. 
55 நாடுகளிலிருந்து 170 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ஹங்கேரி, இரான், ஃபிரான்ஸ், உலக சினிமா, டச்சு ரொமாண்டிக் படங்கள், சமகால ஜெர்மன் படங்கள், இந்தியன் பனோரமா, ரெட்ரோஸ்பெக்டிவ், தமிழ் திரைப்படங்கள், மாணவர்களின் படங்கள் ஆகிய வகைகளில் படங்கள் திரையிடப்பட்டன.
சென்ற ஆண்டு விழாவில் சிறந்த படமாக தேர்வுசெய்யப்பட்ட தங்கமீன்கள் படத்தின் இயக்குநர் ராம் இந்தியா டுடேயிடம் “இதுபோன்ற விழாக்களில் நான் இந்திய மொழி படங்களையே அதிகம் பார்க்க விரும்புகிறேன். உலக படங்கள் விசிடியில் கிடைக்கிறது. ஆனால் பிற மாநில மொழி படங்களைப் பார்க்க முடிவதில்லை. அக்குறையை இத்தகைய விழாக்கள்தான் போக்குகின்றன. 35 வயதிற்கும் குறைவான இளைஞர்களின் படங்களே இப்போதெல்லாம் அதிகமாக விழாக்களுக்கு வருகின்றன.  அவர்களுடைய சிந்தனையும் நம் சிந்தனையும் எப்படி இருக்கின்றன என்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.  உலக நாடுகளின் அரசியல், பொருளாதாரம் பண்பாடு என்று எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள இவ்விழாக்கள் உதவுகின்றன. குறிப்பாக இடதுசாரி நாடுகளாக இருந்தவற்றில் உலகமயம் எப்படி இயங்குகிறது போன்றவற்றையெல்லாம் நாம் படவிழாக்கள் மூலமே தெரிந்துகொள்கிறேன்.” என்கிறார்.
படங்களின் தேர்வு குறித்து வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.  இயக்குநர் பாலாஜி சக்திவேல் “விழாவில் நான் பார்த்தவரை தனிமனித உணர்வுகளை சித்தரிக்கும் படங்களே அதிகம் இடம்பெற்றிருந்தன. அரசியல் படங்கள் மிகவும் குறைவாக இருந்தது. அந்தக் குறையை போக்க வந்த படமாக மராத்திய படமான ஃபன்ரி இருந்தது. அப்படத்திற்காக இந்தியா பெருமைப்பட்டுக்கொள்ளலாம். படவிழாவில் இதுபோன்ற அரசியல் படங்கள் சம அளவில் இருக்கவேண்டும். ஆனால் இருக்கும் ஒன்றிரண்டு படங்களும் கறுப்பர்களை மோசமானவர்களாக சித்தரிக்கும் படங்களாக இருந்தன. சென்ற ஆண்டு அதிக அளவில் பாலியல் சார்ந்த படங்கள் இருந்தன. இந்த முறை அப்படி அல்ல என்பது நல்ல விஷயம். ஏற்பாடுகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டைவிட சென்ற ஆண்டு சிறப்பாக இருந்தது” என்றார். பல ரசிகர்களும் இதை வழிமொழிகிறார்கள். கேசினோ அரங்கத்தில் ஒவ்வொரு முறை செல்லும்போதும் அங்கு பார்க்கிங் கட்டணம் செலுத்தவேண்டி இருந்ததை பலர் சுட்டிக்காட்டினர். 

தொடர்ச்சியாக 12 வது ஆண்டாக நடைபெறும் விழாவுக்கு இந்த முறை வெளியூர்களில் இருந்தெல்லாம் ரசிகர்கள் வந்திருந்தனர். பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்த அரவிந்த் கார்த்திக் “படங்களின் தேர்வு இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். சில படங்கள் வணிகத் தன்மையுடன் இருந்தன. குறிப்பாக இவ்விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்படிருந்த தமிழ்ப்படங்களில் ஒன்றிரண்டு தவிர மற்ற படங்கள் இதில் திரையிட தகுதி இல்லாதவை. வெவ்வேறு மொழி திரைத்துறையினர் வரும் விழாவுக்கு சிறந்த தமிழ்ப் படங்களை தேர்வுசெய்யவேண்டாமா?” என்று கேட்கிறார். ”குற்றம் கடிதல் படம் விருதுக்குரிய படமாக தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி” என்கிறார் பாலாஜி சக்திவேல். 

இரண்டாம் பரிசு பெற்ற படம் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை. நடுவர் குழுவின் சிறப்புப் பரிசை கதை திரைக்கதை வசனம் இயக்கமும், பூவரசம் பீப்பியும் பெற்றன. மெட்ராஸ், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களை நடுவர் குழு கண்டுகொள்ளவில்லை என்பது வியப்பான விஷயம்தான். ஜிகர்தண்டா திரையிடப்படவே இல்லை. ஆனால் யூத் ஐகான் விருது அதன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குக் கிடைத்தது. விழாவில் பேசிய அவர் “ஜிகர்தண்டா இவ்விழாவில் நுழையவில்லை என்கிற வருத்தத்தை எனக்குக் கிடைத்த இந்த விருது ஈடு செய்கிறது” என்றார். 

எழுத்தாளரும், திரைத்துறையைச் சேர்ந்தவருமான லஷ்மி சரவணகுமார் “இவ்விருதுகளை தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவில் உள்ளவர்கள் தமிழ் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களாக இருக்கக்கூடாது. உலக படவிழாக்களில் எல்லாம் பிற மொழி கலைஞர்களைத்தான் நடுவர் குழுவில் வைத்திருப்பார்கள். சுகாசினி போன்றவர்கள் துபாய் படவிழாக்களுக்கெல்லாம் நடுவராகச் செல்கிறார்கள். ஆகவே அவர்களுக்குத் தெரியும்தானே பிற இடங்களில் உள்ள நடைமுறை? இங்குமட்டும் ஏன் நம் ஆட்களே விருதை தேர்ந்தெடுக்கவேண்டும்? இது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது” என்கிறார்.

சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் கோவா திரைப்படவிழாவோ அல்லது கேரள திரைப்பட விழாவோ மிகவும் அபிமான விழாக்களாக உள்ளன. தமிழ்நாட்டிலிருந்து பலர் அங்கு செல்கின்றனர். இந்த முறை கேரள விழாவுக்கான அனுமதிச் சீட்டு பெற இணையத்தில் விண்ணப்பிப்பதில் பல கோளாறுகள். அதன் காரணமாக அங்கு செல்லமுடியாத பலரும் சென்னை விழாவை தவறவிடக்கூடாது என்று வந்தனர். ஆனால் அவர்கள் அந்த விழாக்களுக்கும் சென்னை விழாவுக்குமான வேறுபாட்டை சுட்டிக்காட்டுகின்றனர். “படம் முடிந்தவுடன் நடக்கும் கலந்துரையாடல் ஒரு விழாவின் முக்கியமான விஷயம். ஆனால் சென்னை விழாவில் அது நடப்பதே இல்லை.” என்கிறார் லஷ்மி சரவணகுமார். 

பிற படவிழாக்களில் ‘பார்வையாளர்கள் விருது’ என பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு படத்துக்கு விருது வழங்கப்படும். அப்படியொரு விருது இங்கு வழங்கப்படுவதில்லை. இது குறித்து கேட்டபோது இந்தியன் சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனின் தலைவர் தங்கராஜ் “இது நல்ல யோசனைதான். வரும் ஆண்டுகளில் இதை நடைமுறைக்குக் கொண்டு வர முயல்வோம்” என்கிறார். இந்த ஆண்டு ‘அம்மா’ விருது என்கிற பெயரில் இந்த விழாவுக்கு தன்னார்வலர்களாக வந்து பணியாற்றும் சென்னை எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கிய படங்களில் இருந்து ஒரு படத்திற்கு விருது அளிக்கின்ற்னர். இந்த ஆண்டு மனோஜ் இவ்விருதைப் பெற்றார். சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி, எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களும் இவ்விழாவுக்காக தங்கள் பங்கை உழைப்பாக அளித்துள்ளனர். 

இவ்விழா சினிமா துறையிலிருக்கும் துணை இயக்குநர்களுக்கு முக்கியமானதாகவே இருக்கிறது. நண்பர்களை சந்திக்கும் ஒரு இடமாக, சினிமா குறித்து கலந்துரையாடும் இடமாக இவ்விழா அரங்க வளாகங்களை அவர்கள் மாற்றிக்கொண்டனர். ஒரு வாரம் வேறு எதைப் பற்றியுமே சிந்திக்காமல் சினிமா குறித்து மட்டுமே யோசிப்பதை இவ்விழா உருவாக்கியிருக்கிறது என்கிறார் லஷ்மி சரவணகுமார்.

இந்திய அரசு நடத்தும் சர்வதேச திரைப்படவிழா 1989-91 வரையிலான திமுக ஆட்சியில் சென்னைக்கு வந்தது. அப்போது 13 ஆண்டுகள் கழித்து சுழற்சியில் சென்னைக்கு வந்தது. இப்போது 24 ஆண்டுகளாக இந்த விழா சென்னையில் நடக்கவே இல்லை. 13 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த திமுகவின் தலைவர் கருணாநிதி அந்த விழாவில் கலந்துகொண்டபின் அவருடைய ஆட்சி மத்திய அரசால் கலைக்கப்பட்டது. அதன்பின் இந்த விழாவை நடத்த ஒருபோதும் கழக அரசுகள் விரும்பவில்லை என்கிற செவிவழி செய்தி ஒன்று உண்டு. இந்நிலையில்தான் திரை ரசிகர்களுக்கு ஒரு விருந்துபோல சென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.

”எப்போதையும் விட இந்த ஆண்டு சிறப்பாக நடந்தது விழா. ஹலிதா ஷமீமுக்கு இந்த ஆண்டு பூவரசம் பீப்பி படத்துக்கான சிறப்பு விருது கிடைத்தது. அவர் 2ஆவது விழாவிலிருந்தே பத்தாண்டுகளாக கலந்துகொண்டிருக்கிறார். இத்திரைப்பட விழாதான் எனக்கு பட ஆர்வத்தைத் தூண்டியது. அதனால்தான் இந்தத் துறைக்கே வந்தேன் என்று கூறினார். இப்படி ஒரு சிலரையாவது உருவாக்கி இருக்கிறது இந்த விழா என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி” என்கிறார் தங்கராஜ்.

(நன்றி: இந்தியா டுடே)
...மேலும்

Feb 20, 2015

ஹிட்லரிடமிருந்து யூத மக்களின் விடுதலையை நினைவுபடுத்தும் நாள் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்


இன்று,(27.01.15) யூதமக்கள் வாழும் பல நாடுகளிலும்,ஜேர்மன் நாட்டதிபதி ஹிட்லரின் கொடுமையிலிருந்து,யூதமக்கள் விடுதலையான முதலாம் நாள் நினைவுபடுத்தப் படுகிறது., எழுபது வருடங்களுக்குமுன், போலாந்து நாட்டிலிருந்த,கொடுமையான ஜேர்மன் சித்திரைவதைமுகாமான ஆஷ்விட்ச் என்ற இடத்திலிருந்து,கிட்டத்தட்ட 50.000-100.000 யூத மதக்கைதிகள்,இரஷ்யப்படைகளால் விடுவிக்கப்பட்டதை இன்று யூத மக்கள் நினைவுபடுத்துகிறார்கள்.
ஆஷ்விட்ஷ் முகாமின் முன்னால் இன்று இரவு,உலகத்தலைவர்களாலும்,முகாமில் கைதிகளாயிருந்த முன்னூறுக்கும் மேற்பட்ட முதியோர்களாலும் அந்த முகாமில் நடந்த பல கொடுமையான சரித்திரத்தை நினைவுகூரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அந்தச் சித்தரைவதை முகாமிலிருந்து,யூதமக்கள் இரஷ்யப் படையால் விடுவிக்கப் பட்டதுபோல், வேறு பல முகாம்களிலிருந்தும் அடுத்த சில மாதங்களில் பல்லாயிரக்கணக்கான யூத மதக்கைதிகள்,பிரித்தானிய,அமெரிக்கப் படைகளால் விடுவிக்கப் பட்டார்கள்.,

ஹிட்லர் ஆடசிக்கு வந்ததும்,(30.01.1933) ‘தூய்மையான ஆரிய இனத்தை’ விருத்திசெய்யப் பலவழிமுறைகளையும் கண்டுபிடித்தான். ஆரம்பத்தில், ஜேர்மன் மக்களின் கடுமையான உழைப்பின் தயவில் வாழும் மனநோயளிகள்.அங்கவீமானவர்கள்,அத்துடன்,ஹோமோசெக்சுவல்ஸ்கள்,என்று கிட்டத்தட்ட 200.000 மக்கள்; தூய்மையான ‘ஆரியஇன’ விருத்திக்குத் தேவையற்றவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு அவர்களை கொலை செய்தான். அதைத் தொடர்ந்து அவனின் செயல்களை எதிர்க்கும் புத்திஜீவிகள்,மாhக்;சிய சிந்தனையுள்ளவர்கள்.ஜஹோவாவிற்னஸ் கிறிஸ்தவர்கள் என்று பலர் எண்ணிக்கையற்ற விதத்தில் கொலை செய்யப் பட்டார்கள்.

அதைத் தொடர்ந்து,ஜேர்மனிய இனத்தைவிடத் தாழ்ந்த இனங்களாக அவன் கணித்த வேறு பல்லின மக்கள், ஜிப்சிகள், அதே கெதிக்கு ஆளானார்கள். ஹிட்லரின் பார்வையில், போலாந்து,இரஷ்ய,செக்கோசெலவாக்கிய மக்களும், தாழ்ந்த இனமாகக் கணிக்கப் பட்டிருந்தார்கள். ,ஐரோப்பாவின் பெரும்தொகையான-யூத இனமக்கள்-போலாந்தில் வாழ்ந்தார்கள். 1939ல் போலாந்தைப் பிடித்தான். அங்குவாழ்ந்த மூன்று கோடிக்கும் அதிகமான யூதமக்கள் ஹிட்லரால் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். அங்கு ஒருசொற்ப நாட்கள் யூத எதிர்ப்பாளர்கள் ஹிட்லரின் நாஷிப் படையுடன் வார்ஷோ நகரிற் போராடி அழிந்தார்கள். 1940ல் பிரான்ஸ் நாட்டையும் தன் பிடிக்குள் கொண்டுவந்த ஹிட்லர்,அவனின் பார்வையில்’ தாழ்த்தப்பட்ட இனமான’ இரஷ்யா பக்கம் திருப்பினான்.

அத்துடன்,பலகாலமாகவே,பிரித்தானியருக்கு இந்தியா என்றொரு பெரியநாடு காலனித்துவ அதிகாரத்துக்குள் இருப்பதுபோல் தனக்கும் இரஷ்யாபோன்ற பெரியநாடு வசப்படவேண்டுமென்ற கனவு கண்டான்.அத்துடன், இரஷ்யாவில்.கார்ல் மார்க்ஸின் (யூதன்!) அரசியற் கோட்பாடு, (கம்யூனிசம்!) அரசுசெய்வதை அடியோடு அழிக்கவும் கங்கணம் கட்டினான்.இரஷ்யாவின் பல நகரங்களை ஆக்கிரமித்த அவன் படைகள் இரண்டு மூன்று வருடங்கள் மனிதர்கள் நினைத்துப் பார்க்க மடியாத கொடுமையெல்லாம் இரஷ்யர்களுக்குச் செய்தது.

இரஷ்யாவில் அவன் படைகள் செய்த அக்கிரமத்தாலும், பல நகரங்கள் பிடிபட்டு ஆக்கிரமிப்புக்குள்ச்; சிக்குண்ட படியாலும், எங்கும் ஓடமுடியாது பனியில் அகப்பட்டும் கிட்டத்தட்ட 25கோடி இரஷ்ய மக்கள், இரஷ்யாவின் பல நகர்களிலிருந்தும் இரண்டு,மூன்று வருடகாலகட்டத்தில் இறந்து மறைந்தார்கள்.இவர்களிற் பெரும்பாலோர் யூத மதத்தைச் சேர்ந்தவர்களாகும்.

அதைத்தொடர்ந்து,இரஷ்ய,போலாந்து கைதிகளைச் சிறைப்படுத்த, அவர்களின் கையாலேயே ஆஷ்விட்ச் வித்திரவதைமுகாமை 1940ல் அமைத்தான். 1941ம் ஆண்டுதொடக்கம்,ஆரம்பத்தில்,50.000-200.000வரையான கைதிகளை சிறைபிடித்துச் சித்திரவதை செய்து கொலை செய்ய ஆஷ்விஷ்சில் 7000 மேலான ஜேர்மன் சிறையதிகாரிகள் வேலைசெய்தார்கள்.

ஆப்படியான பல முகாம்களில்,; யூத மக்களுக்கு,’விசேட’ தண்டனை கொடுக்க முடிவு செய்தான். ஐரொப்பாவில் அவன் ஆக்கிரமித்த பதினெட்டு நாடுகளிலிருந்தும், (நோர்வே, பிரானஸ், இரஷ்யா, ஹொலண்ட,போன்ற பல) யூதமக்கள், ஜேர்மனியில் பல இடங்களிலும் அமைக்கப்பட்ட சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டு,அவர்களை ‘நச்சுவாயு’மூலம் பல்லாயிரக்கணக்கில் கொலை செய்தான். ஆஷ்விட்ச் முகாமில் மட்டும் ஒன்றரைக்கோடி மக்கள்,(இரஷ்யர்,புத்திஜீவிpகள், போலாந்து நாட்டவர் உட்பட) கொலை செய்யப் பட்டதாக ஆவணங்கள் சொல்கின்றன.

ஐரோப்பாவில் பல நாடுகளிலும் வாழ்ந்த யூதமக்களில் (கிட்டத்தட்ட,ஆறு கோடியினர்), 60 வீதமானவர்கள் ஹிட்லராற் கொலை செய்யப் பட்டார்கள். இதில் ஒன்றரைக்கோடியினர் குழந்தைகளாகும். கைதிகள் சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டதும், அவர்களுக்கு அடையாள இலக்கம் கொடுத்து, வயது, வலிமைத்தரம்,ஆண.;பெண் என்று பிரிக்கப்பட்டு,முதியோரும்,குழந்தைகளும் உடனடியாகக் கொலைசெய்யப்பட்டார்கள்.வலிமைபடைத்தோர் சிறையில் கொடுக்கப்படும் வேலைகளுக்கும்,வெளியில் ரெயில்வேத் தடங்கள் போடும் வேலைகளுக்கும் பயன்படுத்தப் பட்டார்கள்.ஒருவேளை உணவாக வெறும் கஞ்சியோ அல்லது ஒரு துண்டு பாணோ கொடுக்கப்பட்டது.இவர்கள் ஆண்பெண் என்ற வித்தியாசமின்றி மிருகங்கள்மாதிரி அடைக்கப்பட்டார்கள்.மலசலவசதி எதுவும் கிடையாது.
இதனால் நோய் நொடியால் பல்லாயிரம் கைதிகள் இறந்தார்கள்.

ஹிட்லரின் மிகக் கொடுமையான வைத்தியர்களில் ஒருத்தனான டொக்டர் மிங்கிலே என்பவன் தங்களிடம் பிடிபட்ட யூதக்கைதிகளை பலவிதமான,கொடுமையான வைத்திய பரிசோதனைக்கு ஆளாக்கினான்;.
உணவில்லாமல் ஒரு மனிதன் எத்தனை நாட்கள் உயிர்வாழமுடியும்? மனிதனின் இரத்தக்குழாயை வெட்டி இரத்தத்தைக்கசிய விட்டால் ,அந்த மனிதனின் உடலில் உள்ள குருதி ஒட்டுமொத்தமாக வெளியேறி அவன் இறக்க எவ்வளவு நேரம் எடுக்கும்? மனித உடலின் முக்கிய உறுப்புக்களை ஒவ்வொன்றாக அகற்றினால் அதன் விளைவுகள் என்ன? யூதர்கள்,பொதுவுடமைவாதிகள் போன்றோரின் மூளைளை வெட்டிப்;பார்த்து,அவை எப்படி அமைந்திருக்கின்றன? என்பது போன்ற பல பயங்கரப் பரிசோதனைகளை மிங்கிலே முன்னெடுத்தான்தான்.

கற்பவதிகளான சிறைக்கைதிகளின் வயிற்றைப் பிழந்து அந்தச்சிசு எவ்வளவு காலம்,உணவின்றி உயிரோடு வாழும் என்று பரிசோதனை செய்தான். இரட்டைக்குழந்தைகளுக்கு வித்தியாசமான பயங்கரக் கிருமிகளை உள்கொடுத்து அவை எப்படி உடம்பில் வளர்கிறது?எப்படி மனிதக் கலங்களைச் சிதைக்கிறது என்பதுபோல் பல தரப்பட்ட, மனித குலம் கற்பனைசெய்ய பயங்கரமான மருத்துவப் பரிசோதனையை அவன் செய்தான்.
யூதமக்களின் உடற்தோலை உரித்தெடுத்து காலணி போட்டு மகிழ்த்தார்கள். இளம் பெண்களைப் பல்விதமான பாலியற் கொடுமைகளுக்கு உட்படுத்திக்கொலை செய்தார்கள்.பணம் படைத்த யூதர் சிலர்; ஹிட்லரின் கொடுமை ஆரம்பிக்க முதலே அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் ஓடிவிட்டார்கள்.

ஹிட்லரின் அழிவுக்குப் பின். 8.5.1947ம் ஆண்டு ஜேர்மனி; நேட்டோ(அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ) நாடுகளின் கண்காணிப்புக்குள் அடக்கப் பட்டது. பெரும்பாலான யூதர்கள் கடவுளால் யூதருக்குக்கொடுக்கப்பட்ட ‘புனிதபூமியாக’ அவர்களாற் கருதப்பட்ட பாலஸ்தீனத்திற்கும் கணிசமான பகுதியினர் அமெரிக்காவுக்கும் சென்றார்கள்.

அதுவரையும் அங்கு காலனித்துவ ஆதிக்கம் செய்த பிரித்தானியபடை வெளியேறியதும்,14.5.1948ல் இஸ்ரேல்;நாடு,யூதருக்கான(கடவுளாற் கொடுக்கப்பட்ட புனிதபூமி) நாடாகத் தனது சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தியது.
1947-48 வரைக்குமான கால கட்டத்தில,ஜேர்மனியில் ஹிட்லரின் கொடுமைக்குத் தப்பிய 70.000 யூதமக்கள் இஸ்ரேல் நாட்டில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.

அதே கால கட்டத்தில,பாலஸ்தீனத்தில் தொடரும் அரசியற் பிரச்சினைகளால்,பணம் படைத்த 30.000 பாலஸ்தீனியர் வேறு பல நாடுகளிலும் போய் வசதியாக வாழ்க்கை அமைத்துக்கொள்ள,கிட்டத்தட்ட 200.000 பாலஸ்தினிய அராபிய மக்கள் சில நாட்களிலேயே தங்கள் நாட்டில் அகதிகளாக்கப் பட்டார்கள். பல நாடுகளிலுமிருந்து அகதிகளாகப் பாலஸ்தினியா போன யூத மக்கள் தங்களுக்கென்று ஒரு நாடான’இஸ்ரேலில் வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, தங்கள் பாலஸ்தினியத் தாய்நாட்டிலிருந்து அகதிகளாக அண்டைய முஸ்லிம் நாடுகளுக்குச் சென்ற பாலஸ்தீனிய மக்கள்.சிரியா,ஜோர்தான்,லெபனான் போன்ற நாடுகளில் இன்னும்,அறுபத்தாறு வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். 2013ம் ஆண்டின் கணிப்பின்படி பாலஸ்தினிய அகதிகளின் தொகை 1.524.698ஆகும்.

பலநாடுகளிலுமிருந்து, இஸ்ரேலுக்கு வரும் யூதமக்கள் மதத்தால் ஒன்றுபட்டாலும், மொழியால், நிறத்தால், இனத்தால் வேறுப்பட்டவர்கள். ஆனால் பாலஸ்தீனிய மக்களோ மொழியால், இனத்தால், சமயத்தால் ஒன்று பட்டவர்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு ஸ்திரமான நாட்டை எடுத்துக்கொள்ள இன்னும் முடியாமலிருக்கிறது. யூதரின் இஸ்ரேல் பிகடனப் பட்ட அடுத்த நாள் பக்கத்து அராப் நாடுகள் இஸ்ரேலடன் போர் தொடுத்தன். தோல்வி கண்டன.

அதேபோல் 1966லிலும் ஆறுநாட்போர் இஸரேலுக்கும் அராப் நாடுகளுக்கும் நடந்தது.இஸ்ரேல் அமெரிக்க உதவியுடன் வெற்றி பெற்றது. பாலஸ்தீனிய மக்கள்,இஸ்ரேல் நாடு பிரகடனப்படுத்தப் பட்ட நாளிலிருந்து பல நாடுகளிலம், அவர்கள் வாழும் பாலஸ்தீனத்தினத்திலும் சொல்லவொண்ணாத் துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

யூதமக்கள் ஹிட்லரால் அனுபவித்த இனஅழிப்புக் கொடுமையை முன்னெடுத்து நினைவு விழாக்கள் வைக்கும்; பிரித்தானிய பத்திரிகைகளும்,புத்தி ஜீவிகளும, கடந்த கால கட்டத்தில் நடந்த பல தரப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை நினைவு கூரவேண்டும் என்று ஒரு ஆங்கிலேய புத்திஜீவி பி.பி.சி. நிகழ்ச்சி ஒன்றில் கேட்டார்.

‘1915ம் ஆண்டு காலகட்டத்தில் ஒட்டமான் (துருக்கிய) ஏகாதிபத்தியம்,ஒன்றரைக்கோடி கோடி ஆர்மேனிய சிறுபான்மை மக்களைக்கொலை செய்து இனஅழிப்பு செய்தது. அதேமாதிரி பல்லாயிரக்கணக்கான கிரேக்க மக்கள்,அசிரிய மக்களையும் இன ஒழிப்பு செய்தது.
1803 தொடக்கம் 1847 வரையிலான கால கட்டத்தில்,பிரித்தானிய ஏகாதிபத்தியம் தாஸ்மேனியாவைச் சேர்ந்த ஆதிக்குடிகளான’பார்லிவர் மக்களை ஒருத்தர் மிகுதியிpல்லாமல் அழித்து முடித்தது.
1900-1902-காலகட்டத்தில் தென்னாபிரிக்காவில் நடந்த ‘போயர்’ சண்டையில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் கறுப்பு இனமக்களைச் சிறைப்பிடித்து,ஜேர்மன் ஆஷ்விட்ச் சித்திரவதை முகாம்மாதிரி ஒன்றில் வைத்து அழித்து முடித்தது. இவையெல்லாம் நினைவு படுத்தப்படவேண்டியவை’ என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மேற்கத்திய நாடுகள் பல இன்று இந்தநாளை நினைவு படுத்த ஒன்று சேரும்போது,யூத மக்களின் விடுதலைக்கு வித்திட்ட இரஷ்யா,அரசியற் காரணங்களால் இந்த நிகழ்ச்சிகளிலிருந்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

யூதமக்களைப்போல் பல கொடுமைகளை ஜேர்மனியரால் அனுபவித்த போலாந்து மக்கள், போருக்குப்பின் ஸ்டாலினின் பொதுவுடமை ஆட்சியை எதிர்த்தபோது நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஹிட்லர்காலத்தில் யூதர் மட்டுமல்லாமல் பல இன, பல சமயத்தைச்சேர்ந்த சாதாரண அப்பாவி மக்களுக்கு நேர்ந்த கொடுமைகள் கண்டிக்கப்படவேண்டியவை. இனி அப்படி நடக்கக்கூடாது, நடக்க விடக்கூடாது என்ற சபதத்தைச் செய்யப் பண்ணக்கூடியவை.

ஆனாலும் இன்றும் பல கொடுமைகள், இனஅழிப்பு நடவடிக்கைகள் மதரீதியாகவும் இனரீதியாகவும் இன்று பலநாடுகளிற் தொடர்கிறது. நாங்கள் வாழும் கால கட்டத்தில் பலவிதமான கொடுமைகளையும் அழிவுகளையும் சாதாரணமக்கள் பல நாடுகளிலும் எதிர்நோக்கும்போது,சிலவேளைகளில், மேற்கு நாடுகள் தெரிந்தும் தெரியாமலிருக்கும்போது நீதிக்குக்குரல் கொடுக்கவும் ‘பணவசதி தேவையா என்று கேட்கத்தோன்றுகிறது.

1994ம் ஆண்டு சித்திரை மாதம் தொடக்கம்,ஆடிமாதம் வரைக்குமான நூறு நாட்களில்; ஆபிரிக்காவின் ருவாண்டா என்ற நாட்டில்,பெரும்பான்மையினமான ஹ¬ட்டு இனத்தினர் சிறுபான்மை மக்களான ருட்சி இனமக்களை,இனஒழிப்பு செய்ய மனித வேட்டையாடினார்கள்.கிட்டத்தட்ட ஒருகோடி ருட்சி மக்கள் கொலை செய்யப் பட்டதாகக்; கணிக்கப்பட்டது.அது அந்த மக்களின் ஒட்டுமொத்தத்தொகையில் எழுபது விதமாகும். ஓட்டு மொத்த ருவாண்டா நாட்டின் சனத் தொகையில் 20 விகிதமாகும். அத்தனை மக்களும் மிருகத்தமாகக் கொலை செய்யப் பட்டார்கள். ருவாண்டா பெல்ஜிய நாட்டின் காலனிகளில் ஒன்று. நூறு நாட்கள் அங்கு நடந்த இனஒழிப்பு மிருகவெறியைத்தடுக்க அவர்களோ,அல்லது ஐக்கியநாடுகள் சபையோ ஆனமான நடவடிக்கை ஒன்றும் எடுக்கவில்லை

கடந்தவருடம் பாலஸ்தீனிய பாடசாலைகளுக்குக் குறிவைத்து, இஸ்ரேலிய விமானங்கள்; குண்டுபோட்டுக் குழந்தைகள் இறக்கும்போது மேற்கத்திய’மனிதம்’ ஓரக்கண்ணால் விடயங்களை விமர்சித்ததைப் புத்திஜீகள் அறிவார்கள்.

2013ம் ஆண்டு பங்குனி 20-22 திகதிகளில்; பர்மாவில் முஸ்லிம் மக்களுக்கெதிராக புத்தமத இனவெறியர்கள் நடத்திய வெறியாட்டத்தில் 20 முஸ்லிம் மக்கள் இறந்தார்கள். 60க்கும்மேல் படுகாயமடைந்தார்கள்.பல்லாயிரக்கணக்கானோர் வீடுவாசல்களையிழந்தார்கள். ஆனாலும் சமாதான தேவதையாக மேற்கத்திய அரசுகளால் முடிசூடப்பட்டு நோபல் பரிசும் பெற்ற பர்மியத் தலைவி, ஆன் சான் சு கியு,இந்தக் கொடுமைகளுக்கெதிராக வாய்திறக்கவேயில்லை!.

மேற்கத்திய மனித உரிமை ஸ்தாபனங்கள் பர்மியத்தலைவியின் ‘மவுனத்திற்கெதிராகக் குரலெழுப்பினார்கள். ‘அடுத்த வருடத்தில்(2014) பர்மாவின் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் புத்த மதத்தினரின் ஆதரவுதேவையென்பதால் அவர் மவுனமாகவிருக்கிருக்கிறார்’ என்ற வதந்தி அடிபட்டது. சமாதானமும் மனித உரிமையும் ஒரு நாட்டு மக்கள் அத்தனைபேருக்கும் உரிமையானது. அது ஆதிக்கவெறியின் தேவைகளால்; மறைக்கப் படுகிறதா?

1983ம் ஆண்டு இலங்கையில் யு.என்.பி அரசு,இனஅழிப்பு வெறியுடன் தமிழர்களைக் கொழும்பு தெருக்களில,உயிருடன் எரித்தபோது,லண்டன் வாழ் தமிழர்கள் நாம், வானதிரக் கதறி பிரித்தானிய அரசிடம் முறையிட்டோம்.

அது நடந்து சில மாதங்களில்; அன்றைய இலங்கை அரசின் தலைவர்களிலொருத்தராகவிருந்த,அமைச்சர் அத்துலக் முதலி லண்டனுக்கு,மார்க்கிரட் தச்சரின் அரசிடம் ‘உதவி’ கேட்க வந்திருந்தார்.அதைத் தொடர்ந்து, ‘தமிழர்களை அடக்க’,இலங்கையில் அதிரடிப்படை உருவானது. தமிழர்களின் நிலை அடுப்பிலிருந்து தவறி நெருப்பில் விழுந்த கதையானது.
இலங்கையின் கிழக்குப்பகுதியில், தமிழ் இளைஞர்கள் அதிரடிப்படையால்பிடிக்கப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவங்களும் (1985-86) உண்டு.அதைத்தொடர்ந்த பல அழிவு நிகழ்வுகள் எழுத்திலடங்காதவை.

பிரித்தானிய புத்திஜீவி கேட்டதுபோல், ‘ஏன் சிலவற்றை மட்டும் தூக்கிப்பிடித்து முதன்மை கொடுக்கிறோம்’?

உலகில் எந்தவொரு மனிதனும் வைத்திருக்கும் பெரிய செல்வம் அவனது நேர்மையுணர்வும்,மனிதத்துக்குப்போராடும் தார்மீக உந்துதலுமாகும்.அவை எப்போதும் எங்கேயும் ஒருசிலரிடமாவது தர்ம ஒளியாக எரிந்துகொண்டிருக்கும்.அந்த சத்திய ஒளியை அணையாமல்வளர்ப்பது மனித உரிமைவாதிகளின் அளப்பரிய கடமையாகும்.
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்