/* up Facebook

Jan 31, 2015

பிரகனாஸ்... - கீதா இளங்கோவன்


இன்று வாசித்த ஒரு செய்தி அதிர வைத்தது. 1971 லில் நடந்த பங்களாதேஷ் விடுதலைப் போரில், இரண்டு லட்சத்திலிருந்து நான்கு லட்சம் பெண்கள் பாகிஸ்தான் இராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்களாம்.

உலகெங்கிலும், இராணுவம் எதிரி நாட்டுப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதை ஒரு போர் உத்தியாகவே கையாளும் கொடுமை காலம்காலமா நடக்கிறது. இதன் பின்னணியில் காமம் தாண்டியும் பல விசயங்கள். பெண்ணை சொத்தாகக் கருதும் நிலப்பிரபுத்துவ மனப்பான்மையில் அவளை கையகப்படுத்தி, பலாத்காரத்தால் தமது வாரிசுகளை எதிரி நாட்டில் உருவாக்குவது, அதன் மூலம் எதிரி நாட்டு ஆண்களை அவமானப்படுத்துவது, போரின் வடுக்களை பெண்களை காலங்காலமாக சுமக்க செய்வது போன்றவை இந்த கொடூர மனப்பான்மையில் தொக்கி நிற்கின்றன.

பாதிக்கப்படும் பெண்களின் நிலையோ அவலத்தின் உச்சம். போரின் முடிவு எப்படி இருந்தாலும், மிச்ச வாழ்க்கையை இந்த பெண்கள் துயரத்தோடு கழிக்க வேண்டியுள்ளது. குடும்பத்தாலும், சுற்றத்தாலும் கைவிடப்பட்டு சொந்த நாட்டிலேயே அவமானச் சின்னமாக பார்க்கப்படுகிறார்கள். பலாத்காரத்தால் கருவுற்று, கலைக்க வழியில்லாமல், பிறக்கும் குழந்தையை வேண்டா வெறுப்பாக வளர்த்து, மனஉளைச்சலில் வாழ்நாளைக் கழிக்கின்றனர். தமக்கு இழக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு உலகெங்கும் இந்தப் பெண்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பான், போஸ்னியா, காங்கோ, சூடான் போன்ற பல நாடுகளை சுட்ட முடியும்.

பங்களாதேஷில் நடந்தது என்ன? விடுதலைப் போரை அடக்க வந்த பாகிஸ்தான் இராணுவத்தினர், அங்கு சித்ரவதை முகாம்களை அமைத்து, 9 மாதங்களில் ஏறத்தாழ நான்கு லட்சம் பெண்களை திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். தம் நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உதவி செய்தவர்கள், ஒன்று அறியாத வளரிளம் பருவ சிறுமிகள் எல்லோரும் இதில் அடங்குவர். இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் கர்ப்பமுற்று `போர் குழந்தைகளைப்’ பெற்றெடுத்தனர். கருக்கலைப்புகள் நடந்தன. பல பெண்கள் சித்ரவதை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டனர்.

போருக்கு பிறகு ஆட்சியமைத்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் அரசு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு `பிரகனாஸ்’ (Biraganas) – போர் வீராங்கனைகள் என்று பெயர் சூட்டி அவர்கள் மறுவாழ்வுக்கு திட்டமிட்டது. ஆனால், 1975-லில் முஜிபுர் கொலை செய்யப்பட்டவுடன், நடந்த இராணுவ ஆட்சி அதனை நிறுத்திவிட்டது.

பிரகனாஸ்-க்கு நீதி கேட்டு மனித உரிமை அமைப்புகளின் தொடர் போராட்டத்திற்கு தற்போது விடிவு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில், சர்வதேச போர் குற்ற தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில், `சொந்த நாட்டின் விடுதலைக்காக தமது சுய-மாண்பை தியாகம் செய்த `பிரகனாஸ்’ பெண்களுக்கு உரிய அங்கீகாரமளித்து, கௌரவப்படுத்தி, இழப்பீட்டுடன் அவர்கள் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்குமாறு’ கூறியது.

இதனையடுத்து, பிரகனாஸ் பெண்களை விடுதலைப் போராட்ட வீராங்கனைகளாக அங்கீகரித்து, அவர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் அரசு உதவிகளை வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் தற்போது பங்களாதேஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

43 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த அங்கீகாரம் ! நாலு லட்சத்தில் எத்தனை பெண்கள் உயிரோடு இருக்கிறார்களோ…. யார்யாரெல்லாம் சுவடில்லாமல் மறைந்தார்களோ….

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்