/* up Facebook

Jan 10, 2015

கே.பி.யின் கதாநாயகிகள்: வீட்டின் கதவுகளை அசைத்தவர் - அழகு தெய்வானை

ஆண், பெண்ணுக்கு இடையிலான நேசமும் உறவும் மனிதகுலத்தின் வளர்ச்சிக்குத் தேவை. ஆனால் ஆதிகாலத்திலிருந்து ஆண்-பெண் உறவு என்பது சிக்கலாகவும், பேதங்கள் நிரம்பியதாகவுமே இருந்துவருகிறது. அந்தச் சிக்கல்களைக் குடும்பம் என்ற அமைப்பு மேலும் சிடுக்காக்கியது. ஆனால் குழந்தைகள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதற்கு குடும்பத்துக்கு நிகராக இதுவரை வேறு எந்த அமைப்பும் உருவாக்கப்படவில்லை. குடும்பம் என்ற அமைப்பால் அதிகம் பாதிக்கப்படுபவர்களாகவும் வேட்டையாடப்படுபவர்களாகவும் சரித்திரம் முழுக்கப் பெண்களே இருக்கின்றனர். நிலைப்பாடுகளை முன்வைத்து ஆண்கள் வெளியேறிவிடலாம். ஆனால் பெண்கள் வெளியேற முடியாத நிலையே இன்னமும் உள்ளது. வெளியேற முடியாத அந்தப் பெண்ணைப் பல நிறபேதங்களுடன் தமிழ் சினிமாவில் படைத்தவர் இயக்குநர் கே.பாலசந்தர்.
தடை தாண்டும் நாயகிகள்
தமிழ் சினிமாவில் பாலசந்தருக்கான இடம் எழுத்துலகில் ஜெயகாந்தன் மற்றும் அசோகமித்திரனின் இடத்துக்குச் சற்றே நெருங்கிவருவது. 20-ம் நூற்றாண்டின் மத்தியில்தான் இந்தியப் பெண்கள், கல்வி மற்றும் பொருளாதாரத் தேவைகளை முன்னிட்டு சம்பிரதாயமான தடைகளைத் தாண்டி வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். அவள் வீட்டைக் கடந்து தெருவையும் தாண்டி, பேருந்தில் ஏறி அலுவலகத்துக்குப் போகிறாள். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று இன்றைய சூழ்நிலையில் சாதாரணமாக ஒருவர் சொல்லிவிட முடியும். ஆனால் இதற்காக இந்தியாவின் முதல் தலைமுறைப் பெண்கள் சந்தித்த பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. வீட்டுக்கும் வெளிக்கும் இடையே பெண் நடத்திய போராட்டத்தை ஜெயகாந்தன் முதலான படைப்பாளிகள் கதைகளாகப் படைத்தார்கள். பாலசந்தர் அவர்களை நாயகிகளாக்கினார். 

பாலசந்தருக்கு முன்பு தமிழ் சினிமாவில் பெண்கள் வலிமையாக படைக்கப்பட்டதில்லையா? படைக்கப்பட்டிருக்கிறார்கள்தான். அன்பான அம்மாவாக, அருமை யான சித்தியாக, கொடுமைக்கார அத்தையாக, தியாக மனைவியாக, வஞ்சகமாக வீழ்த்தும் தாசியாக அவர்கள் ஆணாதிக்கச் சமூகத்தின் பார்வை கொண்டே படைக்கப் பட்டார்கள். பாலசந்தர் படங்களில்தான் தனித்துவம் கொண்டவர்களாக, தங்களது தரப்பை வெளிப்படுத்தும் தனி ஆளுமைகளாகப் பெண் கதாபாத்திரங்கள் உருவானார்கள். அவர்கள் தொடர்ந்து வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டுத் தப்பிக்க நினைப்பவர்கள் என்றாலும் சம்பிரதாயமாக மீண்டும் குடும்பத்தின் வலைக்குள் விழுபவர்கள்தான்.
வீழ்த்தும் குடும்பச் சூழல்
கே. பாலசந்தர் படைத்த நாயகிகள் சற்றே அதிகப்பிரசங்கிகள்தான். கதாபாத்திரத்தை மீறிய புத்திசாலித்தனத்தைக் காட்டுபவர்கள்தான். ஆனால் பெண்கள் முதலில் பேசத் தொடங்கிய காலகட்டத்தில், தன்னிறைவான வாழ்க்கையை நோக்கிப் பெண்கள் சிந்திக்கத் தொடங்கிய சமூகச் சூழலின் பின்னணியை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அவர்கள் இங்குள்ள வாழ்க்கையின் சகல நிறைகுறைகளோடும் இருப்பவர் கள்தான். அவர்கள்தான் கே. பாலசந்தரின் நாயகிகள்.

காதல், கலப்பு மணம், சம்பிரதாய மணம் என எல்லாத் திருமணங்களிலும் பெரும்பகுதியாக ருசிபேதமே வாடிக்கையாக இருக்கிறது. ஏதோ ஒரு பொருத்தமின்மை வாழ்க்கை முழுவதும் உணரப்படுகிறது. அனுசரணையான, அன்பான ஒரு பெண்ணுக்குக் குரூரமான, ஒடுக்கும் பண்புள்ளவன் கணவனாக அமைந்துவிடுகிறான். பண்பான ஒரு ஆண்மகனுக்கு வாய்ப்பவள் ராட்சசியாக இருக்கிறாள். அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாக இந்திய-தமிழ் சூழலில் எதிர்கொள்ளும் கதைகளை, நுட்பமான வேறுபாடுகளுடன் விதவிதமாகக் கையாண்டவர் கே. பாலச்சந்தர். நாயகிகளை மட்டுமல்ல, ஒரு காட்சியில் வந்து போகும் துணைப் பெண் கதாபாத்திரங்களையும் மறக்க முடியாமல் செய்தவர். மன்மத லீலையில் உடலின் நிலையாமை குறித்து சபல நாயகனுக்கு அறிவுறுத்தும் நர்ஸ் கதாபாத்திரம் குறுகிய நேரமே வந்தாலும் வலிமையானது.
புதிய பரிமாணம்
அலுவலகத்திலும், சமூக வெளியிலும் மிக நாகரிக மாகவும், பண்பானவர்களாகவும் இருந்துகொண்டே குடும்பத்துக்குள் குறிப்பாக மனைவியிடம் நுட்பமான குரூரங்களை வெளிப்படுத்தும் ஆண்களை அவர் படைத்தார். தமிழ்ப் படங்கள் வழக்கமாகப் படைத்த வில்லன்கள் அல்ல அந்த ஆண்கள். ‘அவர்கள்’ படத்தில் சாடிஸ்ட் ராமநாதனாக வரும் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் தமிழ்சினிமாவில் புதுமையானது. உணர்வுரீதியாகப் பெண்ணைக் குரூரம் செய்யும் ஆணை ரஜினிகாந்த் வழியாக அவர் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார். அவரது பெண் கதாபாத்திரங்கள் குடும்பச்சுமை, கணவனின் கொடுமைகள் மற்றும் மைனர்தனங்கள் என அத்தனை சுமைகளையும் தாங்குபவர்கள். எல்லாச் சுமைகளையும் தாங்கி அனைத்துத் தடைகளையும் உடைத்து ஒரு சுதந்திரமான, தன்னிறைவு மிக்க மகிழ்ச்சியை அவரது கதாபாத்திரங்கள் ஒருபோதும் அடைவதில்லை. பாலச்சந்தர் அவரது நாயகிகளுக்கு விடுதலையை அளித்ததில்லை. திரும்பவும் அவர்கள் குடும்பத்தின் சிலுவையைச் சுமப்பவர்களாகவே வீடுதிரும்புகிறார்கள். அதைத் தாண்டிப் புரட்சிகரமாகச் செயல்பட பாலசந்தர் தனது கதாநாயகிகளை அனுமதித்ததில்லை.
தற்காலிக இளைப்பாறல்
ஆனால் தனது பெண் கதாபாத்திரங்களுக்கு வீட்டிலிருந்து கொஞ்ச காலம் வெளியேறும் வாய்ப்பைத் தற்காலிக அரவணைப்பின் இளைப்பாறுதல்களை, பாலுறவு அல்லாத வெளி ஆண்களின் நட்பு வெளி சாத்தியங்களை அளித்ததுதான் கே. பாலசந்தர் செய்த பங்களிப்பு. அவரது காலம் மற்றும் சமூகச் சூழ்நிலைகள் சார்ந்து அதுவே அவரது சாதனையும்கூட. மூன்று முடிச்சு, மன்மத லீலை, சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள், அச்சமில்லை அச்சமில்லை என அத்தனை படங்களிலும் பெண்கள்தான் கதையின் சூத்திரதாரிகள். கே. பாலசந்தர் கையாண்ட சினிமாவின் உள்ளடக்கமும் அழகியலும் எவ்வளவோ மாறிவிட்டது. பாலசந்தர் காலத்திய கட்டுப்பெட்டித்தனங்களையும் தமிழ்ச் சமூகம் கைவிட்டு எத்தனையோ வகையில் முன்னேறிவிட்டது. 

இன்று பெண் குழந்தைகள் எல்லோரும் கல்வி பெறுவது கூடுமானவரை சாத்தியமாகியுள்ளது. ஆண்களுக்கு இணையாக சம்பாதிப்பதும் பணிபுரிவதும் அரசியலில் பங்குபெறுவதும் நிகழ்ந்துள்ளன. பொதுவெளிகளில் அவர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக வரும் தமிழ் சினிமாக்களில் நினைவுகூரத்தக்க அளவுக்கு ஒரு பெண் கதாபாத்திரமாவது படைக்கப்பட்டுள்ளதா?

மென்பொருள் துறை தொடங்கி எழுத்து, கலைத்துறை வரை சாதித்த தமிழ்ப் பெண்களைப் பிரதிபலிக்கும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெண் கதாபாத்திரத்தைத் தமிழ் சினிமா படைத்துள்ளதா? பாலிவுட்டில் குயின், கஹானி, ஹீரோயின், சாத் கோன் மாஃப், மேரி கோம் போன்ற படங்கள் பெண்ணை மையப்பாத்திரமாக கொண்டு எடுக்கப்பட்டு குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றுள்ளன. தமிழ் படங்களைப் பொருத்தவரை பெண்கள் ஆண்களின் இச்சைக்குரியவர்களாக, கேலிக்குரியவர்களாக, ஆதிக்கத்துக்குரியவர்களாக, பாலியல் தேவையை நிறைவு செய்யும் பொம்மை களாகவே குறுக்கப்பட்டுள்ளனர். இந்த வெற்றிடத்தில் இருந்துதான் இயக்குநர் கே.பாலசந்தரின் பெண் கதாபாத்திரங்கள் எத்தனை வலிமையுடன் இருந்தார்கள் என்பதை ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. அவரது பங்களிப்பையும்.

கே. பாலசந்தர் தனது பெண் கதாபாத்திரங்களை நேசித்தார். மரியாதை செய்தார். அவர்களைப் போஷித்தார். அவர்களை வளர்த்தார். அவர்களுக்குப் பேசும் வாய்ப்பை அளித்தார். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் முற்றத்தில் திரைத்துறையினர் இருந்ததுபோக ஐம்பது வயதுப் பெண்கள் அத்தனைப் பேர் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்ததன் காரணம் நமக்குப் புரியும். வேறு எந்த இயக்குநருக்கும் கிடைக்காத மரியாதை அது. 

நன்றி - த ஹிந்து 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்