/* up Facebook

Jan 21, 2015

தஸ்லீமா நஸ்ரின் எனும் கவி - யமுனா ராஜேந்திரன்


தஸ்லீமா நஸ்ரினின் எழுத்துக்கள் அதிகம் அறியப்பட்டதும், அவர் பற்றிய மதிப்பீடுகள் இந்திய அளவிலும் தமிழகச் சூழலிலும் அறிமுகமானதும் அவரது நாவல் ‘லஜ்ஜா’ (1993) மற்றும் அவரது வங்கமொழி சயசரிதையின் பகுதியான ‘பேசு’ ( 2003) அல்லது ‘பிரிவினை’ ஆகிய நூல்கள் ஏற்படுத்திய அரசியல் விவாதங்களின் அடிப்படையிலானது என்பதை நாம் ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது. ஆங்கிலத்தில் வெளியான நாவலான தஸ்லீமாவின் லஜ்ஜா, அவரது சுயசரிதத்தின் முதல் பாகமான ‘எனது பெண்பருவம்’, தேர்ந்தெடுகப்பட்ட அவரது கவிதைகளின் தொகுதியான ‘விளையாட்டு : மாற்றுச்சுற்று’ போன்ற மூன்று நூல்கள் தவிரவும் அவரது முழு எழுத்துக்களும் ஆங்கிலத்திலோ பிற மொழிகளிலோ மொழிபெயர்க்கப்பட்டு அதிகமாக அறியப்படவில்லை என்பதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.

ஆனந்த் புரஸ்க்கார் விருது பெற்ற அவரது எழுத்துக்கள் கூட நமக்கு ஆங்கிலம் வழியிலோ பிற வகையிலோ கிடைப்பதில்லை. தஸ்லீமாவின் எழுத்துக்கள் குறித்த இந்திய தமிழக இலக்கியவாதிகளின் மதிப்பீடுகள் அனைத்தும் அவரது லஜ்ஜா நாவலின் அடிப்படையில் அமைந்ததாகும். தஸ்லீமா குறித்த தென் ஆசிய அரசியல்வாதிகளின் மதிப்பீடுகள் ஸரியா சமகாலத்துக்குப் பொறுத்தமற்றது எனும் அவரது கடுமையான விமர்சனத்தின் பாற்பட்டு அமைவதாகும். லஜ்ஜா நாவல் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை வங்கத்தின் புகழ்வாய்ந்த படைப்பாளிகளான புத்ததேவ் தாஸ்குப்தா, மிருணாள் சென், அபர்னா சென், நபனிதா தேவ்சென் போன்றவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். லஜ்ஜா நாவல் பங்களாதேஷிலும் அதைத் தொடர்ந்து இலங்கையிலும் தடை செய்யப்பட்டது. இலங்கையின் பிரபல பெண்ணிலைவாதி குமாரி ஜெயவர்த்தனா இந்நாவல் மீதான தடை நீக்கப்பட வேண்டும் எனவும் குரல் கொடுத்திருக்கிறார்.

லஜ்ஜா நாவலையடுத்த தஸ்லீமா நஸ்ரின் மீதான இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொலை மிரட்டலைக் கண்டித்து உலகளவில் தஸ்லீமாவுக்கு ஆதரவாக ஸல்மான் ருஸ்டி, முல்க்ராஜ் ஆனந்த், குந்தர் கிராஸ், மரியா வர்கஸ் லோஸா, சுமித் சக்கவவர்த்தி ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள். தஸ்லீமா மீதான கொலை மிரட்டலைக் கண்டித்தாலும் கூட ஆஸ்கர் அலி என்ஜினியர் போன்ற இடதுசாரி இஸ்லாமியக் கோட்பாட்டாளர்கள் படைப்பாளி எனும் அளவில் தஸ்லீமாவின் விமர்சனப் பார்வையை நிராகரிக்கவே செய்கிறார்கள்.

தஸ்லீமாவின் படைப்பாளுமையில் முக்கிய இடம் பெறுகிற அவரது கவிதைகள் மதம் குறித்த பரபரப்பான விவாதங்களினிடையில் இலக்கிய வட்டாரங்களில் அதிகம் கவனம் பெறவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. தஸ்லீமாவின் உரைநடை நுட்பமானது அல்ல எனும் வங்க விமர்சகர்கள் கவிதைகளில் இவர் நுட்பத்துடன் தலை நிமிர்ந்து நிற்கிறார் என்கிறார்கள். வங்கமொழி விமர்சகர்களிடம் மட்டுமல்ல உலக அளவில் பெண்ணிலைவாதிகள் மத்தியில் அவர் அறியப்பட்டிருப்பதும் அவரது கவிதைகளின் மூலம் தான்.

அவரது கவிதைகள் முற்றிலும் அகவயமான கவிதைகள். ஓவியத்தில் மெக்சிக்கோ பெண் ஓவியர் பிரைடோ கலோவிடம் வெளிப்படும் தனித்த பெண் அனுபவம் சார்ந்த படைப்புகள் போலவே முற்றிலும் பெண் உடல் மற்றும் மனத்தின் தனிமை சார்ந்தவை தஸலீமாவின் கவிதைகள்.

கருத்தியல் ரீதியில் விஞ்ஞான தர்க்கத்திலும் மார்க்சியத்திலும் நம்பிக்கையுள்ளவராகத் தன்னைப் பிரகடனப்படுத்தும்நஸ்ரின் தஸ்லீமாவின் அனைத்து மதங்களின் பாலான வெறுப்நஸ்ரின்பு என்பது பெண் உடலுக்கு எதிரான மதங்களின்நஸ்ரின் அடிப்படை வெறுப்பு, அறுவறுப்பு, விலக்கம் போன்றவற்றின் மீதான கடுமையான கோபத்தின் பாற்பட்டதாகும்.

இஸ்லாமின் மீதான அவரது வெறுப்பு என்பது உடனடியில் அவர் வாழ நேர்ந்த பங்களாதேஷ் சமூகச் சூழலின் மேலான வெறுப்பாகும். இந்த வெறுப்பு இவருக்கு சம அளவில் எல்லா மதங்களின் மீதும், மதவாதிகளின் மீதும், மதப் புத்தகங்களின் மீதும் இருக்கிறது. இந்த நிலைபாட்டை அவர் பல சமயங்களில் தெளிவுபடுத்தியிருக்கிறார்

தஸ்லீமா நஸ்ரின் ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் மனித உரிமைகளுக்கான ஆய்வு மையத்தில் இஸ்லாமிய நாடுகளில் மதச்சார்பின்மை குறித்து ஆய்வு செய்திருக்கிறார். மையத்தின் இயக்குனராக பிரபல எழுத்தாளரும் இன யுத்தங்கள்நஸ்ரின் குறித்தும் மனித உரிமைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்திருப்பவருமான மைக்கேல் இக்னாடிப் செயல்பட்டு வருகிறார்.

பெண்உரிமை இயக்கங்கள்,மதச்சார்பற்ற உரிமை இயக்கங்கள் போனற அமைப்புகள் இணைந்து அடிப்படைவாத இஸ்லாமிய நாடுகளில் மாற்றம் கொணரமுடியும் எனக் கருதுகிறார் தஸ்லீமா நஸ்ரின்.

1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வங்காள தேசத்திலுள்ள மைமன்சிங் நகரத்தில் தஸ்லீமா பிறந்தார்.  குழந்தைப் பேறு நிபுணரான இவர் வங்காள சமூகத்தை அதிரச்சியுறச் செய்யும் முகமாக மூன்று முறை திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர். தென் ஆசியப் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பத்தி எழுத்துக்களில் எழுதி வந்த இவர் 1992 ஆம் ஆண்டு நபசித்ரா எனும் கட்டுரை தொகுதிக்காக மேற்கு வங்கத்தின் ஆனந்த் புரஸ்கார் இலக்கிய விருது பெற்றார்.

1993 ஆம் ஆண்டு வெளியான அவரது லஜ்ஜா நாவல் பிரசுரமானதைத் தொடர்ந்து அவருடைய எழுத்துலக வாழ்வு விவாதத்துக்குரியதாகவே இன்றளவும் இருந்து வருகிறது. இந்தியாவில் பாப்ரி மஜீத் இடிப்பை அடுத்து முஸ்லீம்கள் இந்துத்துவ அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதைப் போல அதனது எதிர்முனையில் இந்துக்கள் வங்காளதேச இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகியதை தஸ்லீமா தனது லஜ்ஜா நாவலில் ஆவணப்படுத்தியிருந்தார்.

பங்களாதேஷில் லஜ்ஜா நாவல் தடை செய்யப்பட்டது. 1994ஆம் ஆண்டு கல்கத்தா நியூ ஸ்டேட்ஸ்மன் பத்திரிக்கைக்கு அவர் அளித்த நேர்முகத்தில், இஸ்லாமிய மணமுறையான ஸரியா சமகாலத்துக்குப் பொறுத்தமற்றது என அவர் வெளியிட்ட விமர்சனம் அடிப்படைவாதிகளின் தண்டனை தலைக்கு விலை என விளைவுகளைத் தோற்றுவித்தது. அதனைத் தொடர்ந்து தஸ்லீமா நஸ்ரின் பங்களாதேஷில் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் அரசியல் அடைக்கலம் கோரியபோது மறுத்துரைக்கப்பட்டார்.

தனக்கு உயிராபத்து அதிகரித்து வந்ததையடுத்து தலைமறைவாயிருந்த தஸ்லீமா பங்களாதேசிலிருந்து வெளியேறி பேனா அமைப்பினர் அனுசரனையுடன் ஸ்வீடனில் அரசியல் அடைக்கலம் பெற்றார். நோர்வேயில் எழுத்துரிமை பற்றிய மாநாட்டில் ஸல்மான் ஸ்டியுடன் பங்கேற்றதின் மூலம் உலக அளவில் ஸல்மான் ருஸ்டியை அடுத்து பிரபலமான சரச்சைக்குரிய தென் ஆசிய எழுத்தாளராக ஆனார்.

1998 ஆம் ஆண்டு மறுபடியும் அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டது. 2,500 அமெரிக்க டாலர்கள் அடிப்படைவாதிகளால் அவரது தலைக்குப் பரிசாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு அவருக்கு ஐரோப்பாவின் உயரிய விருதான சகரோவ் மனித உரிமை விருது அளிக்கப்ப்ட்டது. அதே ஆண்டு ஐரோப்பிய நாடுகளின் வற்புறுத்தலையடுத்து பங்களா தேஷ் அனுமதித்ததின் பின் மரணமுற்றுக் கொண்டிருக்கும் அன்னையின் அந்திம காலத்தில் அவள் அருகிலிருக்க பங்களாதேஷ் திரும்பினார் தஸ்லீமா நஸ்ரின்.

1999 ஆம் அண்டு அவரது அன்னை மரணமுற்றார். சமவேளையில் தஸ்லீமா நஸ்ரினை ஆதரித்து எழுதியதற்காக சக எழுத்தாளர சம்சுர் ரகுமான் மீது கொலைத் தாக்குதல் இடம்பெற்றது. அடிப்படைவாதிகளின் கொலைப் பட்டியலில் நஸ்ரின் பெயர் அடுத்து இடம் பெற்றிருப்பதனையறிந்த தஸ்லீமா நஸ்ரின் உயிர் தப்பி மறுபடியும் ஸ்வீடன் திரும்பினார்.

2000 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் ஜெனீவா மனித உரிமை அறிக்கை பற்றி உரையாற்றியதைத் தொடர்ந்து அவருக்கு 2001 ஆம் ஆண்டு ஸ்வீடனில் அரசியல் அடைக்கலம்நஸ்ரின் அங்கீகரிக்கப்பட்டது. இக்காலகட்டத்தல் அவருடைய ‘பிரெஞ்சுக் காதலன்’எனும் நாவல் வெளியாகிறது.

2003 ஆம் ஆண்டு நவம்பரில் அவர் கல்கத்தா புத்தகக் கண்காட்சிக்காக இந்தியா வருகை தந்தபோது வங்கதேச அரசும் மேற்கு வங்க நீதிமன்றமும் அவரது ‘பேசு’ எனும் பெயரிலான சுயசரிதைப் புத்தகத்தைத் தடை செய்ததைத் தொடர்ந்து மீண்டுமொரு முறை அவரது எழுத்துக்கள் குறித்த வாதப்பிரதிவாதங்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் எழுந்தது.

தஸ்லீமா நஸ்ரினின் சுயசரிதை நூல் வரிசையில் சிறுமியாயிருத்தல் எனும் முதல் பாகம் 1960-70 ஆண்டுகளில் வங்களா தேசத்தில் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கிறது. தஸ்லீமாவுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது நடந்த அனுபவங்களை அந்நூல் விவரிக்கிறது. இரண்டாம் பாகம் அடங்காத காற்று என்பதாகும். பிரிவினை அல்லது பேசு அவரது மூன்றாவது நூல். நான்காவது தொகுதி இருளில் என்பதாகும். வங்கதேசத்தில் அவரது தலைமறைவு காலம் குறித்தது அந்நூல். நான்கு நூல்கள் வெளியான சுழலில் அவர் எழுதத் திட்டமிட்ட அவரது ஐந்தாவது சுயசரித நூல் அவரது சமகாலப் புகலிட வாழ்க்கை அனுபவங்கள் குறித்ததாகும். நான் சுகமில்லை, நலமாயிறு என் பிரியநாடே என்பது அத்தொகுதியின் பெயர் எனவும் அவர் அறிவித்தார்.

தஸ்லீமா சுயசரிதத்தின் மூன்றாவது பாகமான பேசு அவருக்கு 25 வயதுமுதல் 29 வரையிலான வயதுகளில் ஏற்பட்ட இலக்கிய அரசியல் பாலுறவு அனுபவங்களைப் பதிவு செய்வதாக இருக்கிறது. அந்தப் புத்தகத்தில் தன்னுடனான உறவைத் தஸ்லீமா பதிவு செய்ததற்காக ஸம்சுல் ஹக் எனும் வங்கதேச எழுத்தாளர் 10 கோடி ருபாய்களை மானநஸ்டமாகக் கோரி தஸ்லீமா நஸ்ரின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஜலால் எனும் மேற்கு வங்க எழுத்தாளர் 11 கோடி ருபாய்கள் மானநஸ்டம் கோரி வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

ஸம்சுல் ஹக் தஸ்லீமாவுக்கு தூக்குத் தண்டணையளிக்கப்பட வேண்டுமெனவும் நஸ்ரின் கோரியிருக்கிறார். தகவல் தொழில்நுட்ப உலகத்தில் புத்தகத்தை தடைசெய்வது போன்ற அபத்தம் வேறொன்றும் இருக்கவியலாது எனத் தெரிவித்த தஸ்லீமா நஸ்ரின் தடை செயயப்பட்ட தனது வங்கமொழி சயசரித நூலின் இரண்டு பாகங்களையும் தனது சொந்த வலைத்தளத்தில் அவர் பிரசுரம் செய்தார்.

தஸ்லீமா நஸ்ரின் ஆண் மையவாத சமூகத்திற்கும் பெண் உடல்களின் மீதான மதவெறுப்பிற்கும் என்றென்றும் விரோதியாகவே இருப்பாரென்பது தவிரக்கவியலாதது என்பதை அவரது உறுதியான இலக்கிய அரசியல் நிலைபாடுகளைப் புரிந்தவர்கள் தெளிவாக அறியக்கூடியதொன்றாகும்.

II

தஸ்லீமாவின் அரசியல் கலாச்சாரம் மதம் தொடர்பான நிலைபாடுகள் தன்னளவில் தெளிவானது எனகிறார் அவர். குரானில் பிரச்சினையில்லை. அதன் மீதான வியாக்யானங்களில்தான் பிரச்சினையெனக் குறிப்பிடும் நஸ்ரின் இஸ்லாமிய சீர்திருத்தவாதிகளிடம் அவருக்கு உடன்பாடில்லை. வியாக்யானங்களில் தான் பிரச்சினையென்றால் வரலாறு கடந்தும் ஒரு பிரதியை ஏன் வியாக்யானப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் எனக் கேட்கிறார் அவர்.

எகிப்தைச் சேர்நத இஸ்லாமியக் கல்வியாளரான நாஸர் அபு ஸயாத் ஸரியாவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என மட்டுமே கோருகிறார். அது சாத்தியமில்லை என தஸ்லீமா குறிப்பிடுகிறார். ஸரியா சட்டமல்ல மாறாக பெண்ணுக்கு சம உரிமையையும் நீதியையும் தரும் சட்டமே தான் வேண்டுவது என்கிறார் அவர்.

கிறித்தவ இந்து இஸ்லாமிய மதப்பிரதிகளின் அடிப்படையிலான சட்டங்களைத் தான் நிராகரிக்கிறேன் என்கிறார் அவர். மனித உரிமைகள் என்பது பிரபஞ்சமயமானவை எனக் குறிப்பிடும் அவர் மனித உரிமை சம்பந்தமான இஸ்லாமியப் பிரகடனம் வேண்டும் என்பதையும் ஒப்புக் கொள்ளவில்லை. மனித உரிமைகள் அனைத்துக் கலாச்சாரங்களுக்கும் பொதுவானவை எனும் அவர் இஸ்லாமிய நாடான துருக்கியில் மதச்சார்பற்ற அரசு இருக்கிறது அதுமட்டுமன்று வங்கதேசத்தில் புரட்சி வாகை சூடியதன் பின் 1971ஆம் ஆண்டு மதச்சார்பற்ற அமைப்பே பிரகடனப்படுத்தப்பட்டது எனபதையும் சுட்டிக்காட்டுகிறார்.

மதமும் வெளிப்பாட்டுச் சுதந்திரமும் மதமும் மனித உரிமையும் மதமும் பெண் உரிமைகளும் மதமும் ஜனநாயகமும் மதமும் சுதந்திரமும் இணைந்து போகமுடியாது என அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் தஸ்லீமா நஸ்ரின்.

பிற மதத்தவரைக் கொல்லும் மதத்தை பெண்களை அடிமையாக வைத்திருக்கும் மதத்தை மக்களை அறியாமையில் ஆழ்த்தி வைத்திருக்கும் மதத்தைத் தான் ஒப்புக்கொள்ள முடியாது என்கிறார் அவர். கணவனுக்கு அடிமையாக இருத்தலையும் பெண்கல்வி மறுப்பையும் கொண்டிருக்கும் மதத்தை தான் விரும்பமுடியாது என்கிறார் அவர்.

மத்தியக் கிழக்கு நாடுகள் பின்தங்கியிருப்பதற்குகு அரசியல் பொருளியல் காரணங்கள் இருக்கிறது. அதே போது இஸ்லாம் மதமும் ஒரு காரணமாக இருக்கிறது. பொருளியல் சுபிட்சம் இருந்தாலும் பெண்கள் முனனேறாமல் இருக்கும் ஸவுதி அரேபியாவை இதற்கு உதாரணமாகக் காட்டுகிறார் அவர். இதற்கான காரணம் இஸ்லாமில் பெண் அடிமைத்தனம் இருப்பதுதான் என்கிறார் அவர்.

இஸ்லாம் பெண்களுக்குச் சார்பானது என விவாதிக்கும் லைலா அஹ்மது, பாதிமா மெர்னிசி போன்ற மத்தியக் கிழக்கு இஸ்லாமியப் பெண்நிலைவாதிகளின் வாதங்களை தஸ்லீமா நஸ்ரின் நிராகரிக்கிறார். தாராளவாத இஸ்லாமியர்களும் மேற்கத்திய அறிவுஜீகளும் இவர்களை விதந்தோதுவதில் தனக்கு உடன்பாடு இல்லை எனக் குறிப்பிடும் தஸ்லீமா குரானை சாதகமாக அவர்கள் வியாக்யானப்படுத்தகிறார்கள் ஆனால் குரான் ஆண் உயர்ந்தவன் என்கிறது. பெண்கள் தாழ்ந்து போகவேண்டும் என்கிறது. கணவன் மனைவியை அடிக்கலாம் என்கிறது. சொத்துக்கள் சமபந்தமாகப் பெண் ஆணுக்குச் சமமில்லை என்கிறது. பெண் வழக்குமன்றத்தில் தரும் வாக்கு மூலம் ஆண் சொல்வதற்கு பாதிப் பெறுமானமே பெறும் என்கிறது. குரானில் ஒரு ஆண் நான்கு மனைவிகள் வைத்துக் கொள்ளலாம் என இருக்கிறது. இது பெண் உரிமை என்று ஒப்புக்கொள்வது சாத்தியமில்லை. சாதகமான வியாக்யானங்கள் என்பது சாத்தியமில்லை. சமப்ந்தப்பட்ட பெண்ணிலைவாதிகள் குரான் 1,400 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டதென்றும் அதில் விளக்கப்பட்டுள்ள நடைமுறைகள் அந்தக் காலத்திற்கு உரியதெனவும் தெரவிக்கிறார்கள். எனில் நாங்கள் ஏன் அதனைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்கும் தஸ்லீமா இன்றைக்கு அந்நடைமுறைகள் பொறுத்தமானது அல்ல என்கிறார்.

‘லஜ்ஜா நாவலில் நான் இந்து அடிப்படைவாதிகளை ஆதரித்து நிற்கிறேன் எனபதில் உண்மையில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லப்படட இந்துக்களை மனிதஜீவிகள் எனும் அளவில் நான் ஆதரித்து நிற்கிறேன். இந்து அடிப்படைவாதிகளை நான் ஆதரிக்கவில்லை. இந்துமதம் கிறித்தவம் யூதமதம் இஸ்லாம் என அனைத்து மதங்களின் மனித விரோதத்தை நான் விமர்சிக்கிறேன். இந்து அடிப்படைவாதிகள் அவர்களது நோக்கத்திற்காக எனது நூலைப் பாவிக்கிறார்கள். எழுத்தாளர்கள் தமது தேர்வை எழுதுகிறார்கள். பிறர் அதனைத் தம் நோக்கங்களுக்கு உபயோகித்தால் அதற்கு எழுத்தாளர்கள் ஒன்றும் செய்ய இயலாது’ என்கிறார் தஸ்லீமா நஸ்ரின்

‘இஸ்லாமிய நாடுகளில் அடிப்படைவாதம் புதிய வீறுடன் எழந்திருப்பதற்கான காரணங்கள் சிக்கலானவை. இஸ்லாமிய நாடுகளில் நவீன அரசு வடிவம் பொய்த்துப் போயிருப்பது பிரதான காரணமாக இருக்கலாம். இந்த நாட்டுத் தலைவர்கள் தமது மககளைக் கைவிட்டு விட்டார்கள். ஜனத்தொகை அதிகரித்திருக்கிறது. போதிய வேலை வாய்ப்புக்கள் இல்லை. போதிய வீட்டு வசதிகளோ சுகாதார வசதிகளோ இல்லை. போக்குவரத்து வசதிகள் இல்லை. மனித உரிமை மீறல்கள் மலிந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை சித்திரவதை செய்கிறார்கள். எதிரிகளைக் கொல்கிறார்கள். அடிப்படைவாதிகள் இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் தமது அதிகாரத்திற்கானதாகப் பாhவிக்கிறார்கள். இஸ்லாமிய மதம் சாராத அனைத்து கருத்தியல்களும் தோற்றுப் போய்விட்டதென அடிப்படைவாதிகள் சொல்கிறார்கள். கம்யூனிசம், சோசலிசம், முதலாளித்துவம் என அனைத்து மேற்கத்தியக் கருத்தியல்களும் தோற்றுப் போய்விட்டன என்கிறார்கள். தமது கலாச்சாரத்திற்கு திரும்பிப் போவதற்கான காலம் வந்துவிட்டது என இதனை அடிப்படைவாதிகள் சொல்கிறார்கள். தமது வேர்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய தருணம் இது எனவும் தமது மதத்துக்கு இஸ்லாமுக்குப் பின்திரும்பிப் போகவேண்டும் என இவர்கள் சொல்கிறார்கள். இஸ்லாமிய மதமின்றி அனைத்தும் தோல்வியுறும் என இவர்கள் சொல்கிறார்கள். விரக்தியுற்றவர்கள் கனவுமயமானவர்கள் குருட்டு நம்பிநஸ்ரின்க்கையில் வீழ்கிறார்கள். இவர்களில் பழைய கம்யூனிஸ்ட்டுகளையும் நீங்கள் காணலாம்’ எனச் சொல்கிறார் தஸ்லீமா நஸ்ரின்.

‘மேற்கத்தியர்கள் கம்யூனிஸ எதிர்ப்புக் காரணங்களுக்காகவும் தமது பொருளியல் அரசியல் நலன்களுக்காவும் அடிப்படைவாத அரசுகளை ஊழல் மலிந்த மத்தியக் கிழக்கு அரசுகளை இஸ்லாமிய அரசுகளை ஆதரிக்கிறார்கள். மதச்சார்பற்ற தன்மை வளர்வதன் மூலமே அடிப்படைவாதம் என்பது கட்டுப்படுத்த முடியும். அடிப்படைவாதிகள் தனிநபர் உரிமைக்கு எதிரானவர்கள். குழு விசுவாசத்துக்கும் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் அவர்கள் தனிமனிதனைக் கீழப்படுத்திவிடுவார்கள். வெறுப்பையும் வன்முறையையும் விதைப்பார்கள். பெண்களை உழைக்க அனுமதிக்க மாட்டார்கள். ஜனத்தொகையில் ஐம்பது சதவீதமானவர்கள் செயலிழக்கச் செய்யப்பட்டவர்கள் எனில் எவ்வாறு வளர்ச்சி என்பது சாத்தியமாகும்’ என்கிறார் நஸ்ரின்.

‘மேற்குக் கிழக்குக் கலாச்சார மோதல் என சாமுவேல் ஹன்டிங்டன் சொல்வதை ஒப்ப முடியாது. இது கிழக்கு மேற்குப் பிரச்சினையல்ல. கிறித்தவத்திற்கும் இஸ்லாமுக்கும் உள்ள பிரச்சினையல்ல. மரபுக்கும் புத்தாக்கத்திற்கும் இடையிலான பிரச்சினையே இது. நவீனத்துவத்திற்கும் அதற்கு எதிரானதற்கும் இடையிலான பிரச்சினையே இது. மதச்சார்பற்ற தன்மைக்கும் அடிப்படைவாதத்திற்கும் இடையிலான பிரச்சினை இது. தர்க்கமற்ற குருட்டு நம்பிக்கைக்கும் தர்க்கபூர்வமாகத் தேடிச் செல்லும் மனத்திற்கும் இடையிலான பிரச்சினை. சுதந்திரத்தை நம்புபவர்களுக்கும் சுதந்திரத்தை நம்பாதவர்களுக்கும் இடையிலான பிரச்சினை இது‘.

‘இதில் சில இஸ்லாமியர்கள் நவீன வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள். கிழக்கத்திய அறிவாளிகளில் பலர் கிழக்கத்தியக் கலாச்சாரம் என இஸ்லாமிய வழிமுறையைத்நஸ்ரின் தாங்கிப் பிடிக்கிறார்கள். சடங்குகள் மேற்கத்திய பெண்களுக்கு துன்பமெனில் கிழக்கத்தியப் பெண்களுக்கும் அப்படித்தான். படிப்பு மேற்கத்தியப் பெண்களுக்கு நல்லதெனில் கிழக்கித்தியப் பெண்களுக்கும் அப்படித்தான். இஸ்லாமியப் பெண்களிடம் படிப்பறிவின்மை அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு உடனடியில் மதச்சார்பற்ற நவீனக் கல்வியென்பது முக்கியம். இந்நிலையே அவர்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தைத் தரும். இறுதியில் அவர்கள் தம்மைத் தாமே விடுவித்துக்கொள்ள அக்கல்வி பயன்படும்‘ என இஸ்லாமிய சமூகங்களில் பெண்ணுரிமை குறித்து அவர் கவனம் செலுத்துகிறார்.

III

தஸ்லீமாவினது சுயசரிதையின் மூன்றாம் பகுதியான ‘பிரிவினை’ எனும் நூல் 2003 ஆம் அண்டு நவம்பரில் கல்கத்தாவில் தடைசெய்யப்பட்டதையடுத்து நக்ஸலைட் கவிதைகளைத் தொகுத்த இலக்கிய விமர்சகரான சுமந்தா பானர்ஜி சொல்கிறபடி ‘தற்போது புத்தகங்கள் தொடர்பான சர்ச்சைகள் அறிவுஜீவிகள் தொடர்பானது என்பது மாறி புத்தகங்களின் பக்கங்களைக் கூடப் புரட்டாமல் அரசியல் செய்பவர்களின் கையிலும் தெரு ஆர்ப்பாட்டக்காரர்களின் கையிலும் மத அடிப்படைவாதிகளின் கையிலும் அதனது தலைவிதி தீர்மானிக்கப்படக் கூடியதாகவிருக்கிறது’. ஸல்மான் ருஸ்டியின் ‘சாத்தானின் பாடல்கள்’ நூலை வாசிக்காமலேயே தடை கோரிய பாராளுமன்ற உறுப்பினர் ஸையத் ஸஹாபுதின் மாதிரி புத்தகத்தையே வாசிக்காத மௌல்வி ஒருவர் பத்தாயிரம் மதநம்பிக்கையாளர்கள் கூடியிருக்கிற தொழுகையொன்றில் தஸ்லீமாவின் சுயசரிதையை தடைவிதிக்கக் கோருவதோடு ‘அதனது ஆசிரியரின் மீது கரி அல்லது தார் அல்லது கறுப்புமை பூசி அவமானப்படுத்துங்கள்’ என வேணடுகோள் விடுப்பது மட்டுமல்ல புத்தக ஆசிரியருக்குச் செருப்பு மாலை அணிவிக்கவும் கோருகிறார்.

புத்தகத்தின் மீதான தடையை அடிப்படைவாதிகளும் தஸ்லீமாவினது சக எழுத்தாளர்களும் சமகாலத்தில் கோரியிருப்பதுதான் விநோதமானது. தந்தைவழிச் சமூகத்தின் அடிப்படை வேர்களே இரண்டு தடை கோருதல்களிலும் இருக்கிறது என தஸ்லீமா சொல்வதுதான் உண்மை. அடிப்படைவாதிகளின் கோபம் தஸ்லீமா ஒரு பெண்ணாக இருந்து விமர்சிக்கிறார் என்பதுதான். இலக்கியவாதிகளின் கோபம் பாலுறவு சம்பந்தமான பெண்கள் தொடர்பான அவர்களது இரட்டைநிலை குறித்ததாகும்.

பிரபல வங்க நாவலாசிரியரான சுனில் கங்கோபாத்யாவின் அறிக்கையே அதனைத் தெளிவுபடுத்துகிறது. தஸ்லீமாவின் எழுத்துக்களால் இனி எழுத்தாளர்களின் குடும்பங்களில் பிரச்சினை வரப்போகிறது என அவர் விவாதிக்கிறார். வேதனையென்னவெனில் ஒரு எழுத்தாளர் சக எழுத்தாளரது புத்தகத்தைத் தடை செய்யக் கோருகிறார் என்பதுதான். அது மட்டுமல்ல தன்னை என்ன விலை கொடுத்தும் காப்பாற்றிக் கொள்ள அவர் நினைப்பதுதான்.

தஸ்லீமாவின் நூல் தீர்க்கதரிசியின் மீதும் இஸ்லாமின் மீதும் அவதூறு கூறுகிறது என ஸம்சுல் ஹக் எனும் தாராளவாத எழுத்தாளர் வங்க தேசத்தை ஆளும் அரசியல்வாதிகளிடம் காட்டிக் கொடுத்திருப்பதுதான்நஸ்ரின் அதைவிடவும் துயரமானதுதாகும்.

‘தென் ஆசியச் சமூகங்களில் எவரும் பாலுறவு பற்றி வெளிப்படையாகப் பேசவிரும்புவதில்லை. குறிப்பாகப் பெண்கள் பாலுறவு பற்றி எழுதுவதில்லை. தஸ்லீமா நஸ்ரின் நுட்பமான எழுத்தாளர் இல்லை. ஆனால், நேர்மையான எழுத்து அவருடையது. ஒருபோதும் விரசமாக அவரது எழுத்து இருந்ததில்லை. ஆபாசத்தின் பெயரில் இந்நூலைத் தடை செய்திருப்பது முற்றிலும் அபத்தமானதாகும்’ என்கிறார் வங்க இலக்கிய விமர்சகரான நிலஞ்சனா ராய்.

‘இந்தியத்நஸ்ரின் துணைக்கண்டம் மதத்தினால் பிரிக்கப்பட்டது. வங்காளதேசம் மொழியினால் பிளவுண்டது. ஜின்னா உருதுமட்டுமே ஆட்சி மொழி என அடம் பிடித்ததின் விளைவே வங்காள தேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிய நேர்ந்ததற்கான அடிப்படைக் காரணம். பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்துபோது என்ன நடந்தது எனும் பிரிவினை குறித்த வரலாற்று ஆவணமாக தஸ்லீமா நஸ்ரினின் புத்தகம் இருக்கிறது. பாலுறவு மத அடிப்படைவாதம் குறித்த பிற விவாதங்கள் எழுந்ததையடுத்து இந்து நூலின் வரலாற்று முக்கியத்துவம் பின்தள்ளப்பட்டுவிட்டது’ எனத் தெரிவித்திருக்கிறார் சமூக சேவகரான முகர்ஜி. நாவலாசிரியர் நபனீதாதேவ் சென் ‘இந்நூல் தடைசெய்யப்பட்டிருப்பது அபத்தமான நடவடிக்கை’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

IV

தஸ்லீமா தன் மீதான ஒழுக்கவாத விமர்சனங்களுக்கு அவர் இவ்வாறாகப் பதிலிறுக்கிறார் : ‘நான் பெண்களின் உரிமைகளைப் பேசுகிறேன். சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் என் மீது கோபம் கொள்கிறார்கள். எனது கோபம் எனது குருட்டுத்தனம் எனது சந்தோசம் எனது கண்ணீர், எனது தோல்விகள் எனது வெற்றிகள் எனது பார்வை என நான் வளர்ந்ததன் பதிவு எனது சயசரிதம்‘ என்கிறார் நஸ்ரின்.

‘எழுதும் போது எழுதியதின் பின்விளைவு தொடர்பான பயம் வந்துவிட நான் அனுமதிப்பதில்லை. உண்மைக்கு எந்த விலையும் கொடுக்க நான் தயார். ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். மறுபடியும் கொடுக்கத் தலைப்பட்டிருக்கிறேன். மரபுரீதியான சமூகங்களில் பெண்களின் உடலையும் சிந்தனைகளையும் ஆண்கள் கட்டுப்படுத்தி வந்திருப்பதான நீண்ட வரலாறு உள்ளது. அந்தச் சமூகங்கள் தாய்மையை மகிமைப்படுத்தி வந்துள்ளதோடு அதனைச் சுற்றி கற்பு எனும் கருத்தாக்கத்தையும் கெட்டிப்படுத்தின. பல்லாயிரமாண்டுகளாகப் பெண்கள் இந்தக் கண்ணோட்டங்களின் கைதிகளாக இருந்து வந்திருக்கின்றனர். ஒரு ஆண் பல பெண்களோடு உறவு கொண்டிருக்கவும் அதனைப் பற்றிப் பேசவும் முடிந்தது. ஒரு பெண் தனது பாலியல்பு குறித்தோ பாலுறவு குறித்தோ பேசத் தலைப்பட்டால் அவள் உடனடியாகப் போக்கிரியாகக் கேவலமானவளாக ஓழக்கம் கெட்டவளாகப் பட்டஞ்சூட்டப்டுகிறாள். வரலாற்றில் எப்போதல்லாம் பெண் ஆண் மையச் சமூகத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறாளோ, எப்போதெல்லாம் தன் உரிமைக்காக் குரல் கொடுக்கிறாளோ அப்போதெல்லாம் அவள் வீழச்சியடைந்த பெண் எனக் குறிப்பிடுகிறார்கள். எனது ஒரு புத்தகத்தில் ‘என்னை வீழச்சியடைந்த பெண்’ எனக் குறிப்பிடுவதைத் நான் நேசிக்கிறேன் என எழுதியிருந்தேன். சமூகத்தின் பார்வையில் நான் வீழ்ந்தவளாக இருப்பது எனக்குச் சந்தோசம். ஒரு பெண் தன்னளவில் பரிசுத்தமாக இருப்பதற்கான முதல்படி சமூகத்தின் பார்வையில் அவள் வீழந்தவளாகக் கருதப்பபடுவதுதான். இதுவரை எனக்குக் கிடைத்த எல்லா விருதுகளை விடவும் நான் வீழ்ந்தபெண் எனச் சொல்லப்படுவதைத்தான் எனக்குக் கிடைத்த மிக உயரந்த விருதாகக் கருதுகிறேன். ஓரு பெண்ணாகவும் ஒரு எழுத்தாளராகவும் எனது நீண்ட போராட்டத்தின் பேறு என இதனையே நான் கருதுகிறேன்’ என்கிறார் அவர்.

‘இருவரும் ஒப்புக்கொண்டு மூடிய கதவின்பின் நடக்கும் விசயங்கள் நிச்சயமாகவே மறைத்து வைக்கப்பட வேண்டியவைதான். அந்த பொதுவான இடைக்காலத் தடை வாழ்க்கை வரலாற்றுக்குப் பொருந்தாது. எனது சுயசரிதையிலுள்ள எல்லாச் சம்பவமும் நிகழ்வுகளும் விபத்துக்களும் என் வாழ்வில் நிகழந்தவைதான். அவைதான் அடிப்படையில் நான் இன்று எவ்வாறு இருக்கிறேனோ அதற்கு என்னை இட்டு வந்திருக்கிறது. எல்லா மதிப்பீடுகள், அப்பிராயங்கள், கலாச்சாரங்கள், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள் போன்றவற்றினூடேதான் நான் வளர்ந்து வந்திருக்கிறேன். இது பிறரின் கண்களுக்கு என்னையே நான் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறேன் எனத் தோன்றும். நான் என்னைப் பற்றித்தான் என் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். பிறரது வாழ்க்கை குறித்து நான் எழுதவில்லை. பிற்பாடு தம்மை அவமானப்படுததும் என நினைக்கிற இந்த நடவடிக்கைகளில் இவர்கள் ஏன் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் எனது கேள்வி. இதுவன்றி இவர்களோடான உறவுகளை நான் எழுதமாட்டேன் என இவர்களில் எவருக்கும் நான் உறுதிமொழியளிக்கவும் இல்லை. எனது சுயவரலாறு ஒரு இளம்பெண்ணாக எவ்வாறு எனது உறவுகள் என்னைப் பாதித்தன, என்னை வளர்த்தன என்று சொல்லும் பதிவுதான். ‘தந்தை வழி சமூகத்தின் மதிப்பிடுகளால் எவ்வாறு நான் தீpய்ந்து போகாமல் இந்தப் பெண் எவ்வாறு அதிலிருந்து மீண்டாள்’ என்பதைப் பதிவதுதான் எனது நோக்கம். ‘எவ்வாறாக அவள் உருக்கைப் போல ஆனாள் என்பதன் பதிவுதான் என் சுயவரலாறு’ என மேலும் தனது பாலுறவை எழதுவது தொடர்பான நிலைபாட்டை விளக்குகிறார் நஸ்ரின்.

‘எனக்கு நேர்ந்த இலக்கிய அனுபவம், பாலுறவு அனுபவம் போன்றவற்றை நான் எழுதியிருக்கிறேன். பல்வேறு காலகட்டங்களில் என்னைச் சூழ இருந்த நண்பர்கள் பற்றி நான் எழுதியிருக்கிறேன். எனது நூலில் அவர்களை மனிதஜீவிகளாக நான் முன் வைத்திருக்கிறேன். யாருடையதாவது குணச்சித்திரத்தை நான் அவமானப்படுத்திவிட்டதாக நினைத்தால் அது என்னை நானே அவமானப் படுத்திக்கொண்டுவிட்டேன் என்றுதான் அர்த்தம். எனது நினவுகளைப் பதிந்ததின் நோக்கம் என்னை உத்தமப் பிறவியாக, நல்லவளாக, சன்யாசி போல, பெண்கடவுளாகச் சித்தரிப்பது அல்ல. எனது நோக்கம் அழகையும் அழகல்லாததையும் அதனிடையில் எனக்கு என்ன நேர்ந்தது என்கிற நிகழ்வுகளையும் பதிவு செய்வதுதான். வங்களாதேசத்தில் ஒரு பெண் திருமணம் மீறிய பாலுறவு வைத்திருப்பதை பல்வேறு ஆண்களுடன் உறவு வைத்திருப்பதை இச்சமூகம் விரும்புவதில்லை. ஆண்கள் திருமணத்திற்கு வெளியில் பாலுறவு வைத்துக் கொள்வதைப் பிரச்சினையாக்குவதில்லை. நிகழ்வுகள் காண்பிப்பதெல்லாம் ஆணிணுடைய பல பாலுறவுகள் வெளிப்படுமானால் அது அவமானத்துக்குரியது எனச் சமூகம் கருதுவது வெளிப்படையாகியிருக்கிறது. சொல்லப் போனால் இது முக்கியமான வளர்ச்சி என்றுதான் சொல்வேன். எனது புத்தகம் தடை செய்யப்பட்டதற்கான காரணம் சில அறிவுஜீகள் அரசின் மீது அழுத்தம் கொடுத்தார்கள் என்பதுதான். அவர்களது தர்க்கம் அடிப்படைவாதிகளின் தர்க்கத்தையொத்தே இருக்கிறது. நான் எழுதியிருக்கிற விசயத்திற்கு முனனோடியாக உலக இலக்கியத்தில் நிறைய உதாரணங்கள் இருக்கிறது. உலகில் ஒளியையும் இனிமையையும் மட்டுமே கொண்ட இலக்கியம் எங்காவது இருக்கிறதா?? அப்படியாகச் சிந்தனையைக் கட்டுப்படுத்தும் பிரதேசம் இருக்குமானால் அறிவுஜீகளின் கருத்துக்கள் அங்கே ஏன் பொருட்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும்?’ எனக் கேட்கிறார் நஸ்ரின்.

V

இலக்கியத்தில் ஆபாசம் என்பதும் குறித்து அவர் தனது மதிப்பீடுகளை முன்வைக்கிறார் : ‘ஆபாசம் என்பது ஒருவர் அதனை எவ்வாறு நோக்குகிறார் என்பதனைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும். என்னளவில் நிர்வாணமோ பாலுறவோ ஆபாசமானதல்ல. மறுதலையாக ஒரு படித்த கணவான் என்று சொல்லிக் கொள்கிறவன் பொய் சொல்வதையும், வசவு வார்த்தைகள் வீசுவதையும், அர்த்தமற்று பெண்ணை வன்முறைக்கு உட்படுத்துவதையும்தான் நான் ஆபாசம் என்கிறேன். வானத்திலிருந்து கொண்டு மக்களை நோக்கி ஆப்கானிஸ்தானில் குண்டு போடுவதுதான் ஆபாசம். அதிகாரத்தின் வன்முறையைக் காட்டிலும் அனைத்து விதத்திலும் கட்டற்றமுறையில் அழகு கொண்டது பாலுறவில் விளையும் காதல். எனது புத்தகம் தடை செய்யப்பட்டதைக் கேள்வியுற்றபோது நான் ஆச்சர்யமுற்றேன். ஆச்சர்யம் என்னவெனில் இந்தத் தடையைக் கோருகிறவர்கள் தாராளவாதிகள், முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள் எனத் தங்களைக் கோரிக்கொள்வதுதான். இயல்பில் இவர்கள் எனது நண்பர்கள். ஆச்சர்யம் யாதெனில் ஒரு எழத்தாளராக இருக்கிறாவர் சக எழுத்தாளரது புத்தகத்தின் தடையைக் கோருகிறார் என்பதுதான்’ எனத் தனது சன எழுத்தாளர்கள் குறித்து ஆச்சர்யம் தெரிவிக்கிறார் நஸ்ரின்.

புத்தகம் சம்பந்தமாக வங்கதேசத்திலும் மேற்கு வங்கத்திலும் ஒரே வகையிலான ஆட்சேபங்களே எழுந்திருக்கிறது. ‘அறவியல் குறித்தும் தங்களது தகுதி குறித்தும் இவ்வளவு அக்கறையை இவர்கள் கொண்டிருப்பாரகளானால் ரகசியத்தில் ஏன் இதனை இவர்கள் செய்கிறார்கள்?’ என்க் கேட்கிறார் நஸ்ரின்.

‘வங்கதேச எழுத்தாளர் ஹம்ஸல் ஹக் என்னைத் துக்கிலிட வேண்டும் எனக் கோரியிருக்கிறார். அடிப்படைவாதிகளிடமிருந்து இந்த இவரது கோரிக்கை எவ்வகையில் வேறுபடுகிறது என எனக்குத் தெரியவில்லை’ எனவும் கேட்கிறார் நஸ்ரின்.

‘என் சுயவரலாற்றைப் பற்றி நான் எழுதும் போது அடிப்படைவாதிகள் பற்றி நான் எழுத வேண்டியிருப்பது பற்றி எனக்குக் கவலையில்லை. எனது சுயவரலாற்று நூலில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி விமர்சிக்கிறேன் என்பதால்தான் இத்தனை விவகாரங்கள் எழுந்திருக்கிறது. மதம் சம்பந்தமானதை நான் தணிக்கைக்கு உட்படுத்திவிட்டால் பிற்பாடு அது என் வாழ்வைத் தணிக்கைக்கு உட்படுத்த அனுமதித்ததைப் போலத்தான். இஸ்லாம் மட்டுமல்ல எந்த மதமும் பெண்களுக்கு சுதந்திரத்தைக் கொடுக்கும் என நான் நம்பவில்லை. நான் இஸ்லாமிய சமூகத்தினுள் வாழ்வதனால் நான் இஸ்லாமிய சமூகத்தைப் பற்றி எழுதுகிறேன் அவ்வளவுதான்’ என்கிறார் நஸ்ரின்.

கல்கத்தா நகர் பற்றிய அவரது விவரணை இவ்வாறாக அமைகிறது : ‘கல்கத்தா நகரில் இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு வீடுகள் தவதில்லை. இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித்தனிப் பிரதேசங்களிலேயே வாழ்கின்றனர். வங்காள தேசத்தில் இப்படியில்லை. ஒரே கட்டிடத் தொகுதியின் மாடிகளில் அடுத்தடுத்து இஸ்லாமியர்களும் இந்துக்களும் கிறித்தவர்களும் அங்கு வாழ்கின்றனர். வங்காள தேசத்தில் இந்துக்கள் இஸ்லாமியப் பண்டிகைககள் குறித்தும் இஸ்லாமியர்கள் இந்துக்களின பண்டிகைகள் குறித்தும் அறிந்து வைத்திருப்பர். கல்கத்தாவில் இஸ்லாமியர்கள் இந்துப் பண்டிகைகள் குறித்து அறிந்த அளவில் இந்துக்கள் இஸ்லாமியப் பண்டிகைகள் குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. வங்காளதேசத்தில் எவரும் சேரிகளில் வாழ்வதில்லை. இந்துக்களும் இஸ்லாமியர்களும் அருகருகே வாழ்கிறார்கள்‘ எனக் குறிப்பிடுகிறார் தஸ்லீமா நஸ்ரின்.

VI

தஸ்லீமா பெண் எனும் அளவில் அவரது ஸ்திதி குறித்த கேள்விக்கான பதில்களை அடிப்படையில் தனது உடலை அறிவது அதன் வழி தன்னையும் தான் சார்ந்திருக்கும் சகமனிதரையும் தொடர்ந்து சமூகத்தையும் அறிவது என்னும் வகையில் கவிதைக்குள் தேடிச் செல்கிறார்.

தஸ்லீமாவின் கவிதைகளில் சமூக அனுபவம் கவிதையாகியிருப்பது என்பது மிகவும் சொற்பம். அவருடைய பெரும்பாலான கவிதைகள் பாலுறவு அனுபவம் சார்ந்தவை. பாலுறவில் இடம் பெறும் வன்முறை, சந்தோஷம், ஆசை, தனிமை சார்ந்தவை. ஆண் பெண் உறவின் ரகசியமான தருணங்களையும் அதனுள் இடம் பெறும் குளிர் போலும் உறைந்த வன்முறையின் தடங்களையும் மிக நுணுக்கமாக தஸ்லீமா அறிந்து சொல்லியிருக்கிறார்.

தஸ்லீமாவின் கவிதைகளை ஒரு சேரப் படித்துப் பார்ப்பவர்கள் அவரது கவிதைகளில் தொனிக்கும் தனிமைத் துயரையும், உலக அளவில் இந்துமதம், கிறித்தவம், யூதமதம், இஸ்லாம் போன்ற மதங்கள்நஸ்ரின் அனைத்திற்கும் பொதுவாக இருக்கும் பெண் உடலுக்கு எதிரான அவைகளது குரூரமான வன்முறை குறித்த விமர்சனத்தை மதங்கள் கடந்து பெண்ணின் பொது அனுபவமாக அவர் காண்பதையும் காணமுடியும். அவரது கவிதைகளின் விசேஷ குணமாக இதனையே நாம் சொல்லலாம்.

மதம், தந்தைவழிச் சமூகம், பெண்களின் ஒடுக்கப்பட்ட பாலுறவு போன்றவற்றுக்கு இடையிலான தர்க்கபூர்வமான உறவைக் காணும் தஸ்லீமாவின் சிந்தனையமைப்பு இதனாலேயே மிகப் பெரிய கொந்தளிப்பை இந்தியத் துணைக்கண்ட நாடுகளில் ஏற்படுத்துகிறது. தன்னளவில் இவ்வகையான எந்தவித எதிர்ப்பும் தடைகளும் தன்னை எழுதுவதனின்று தடுத்துவிடப் போவதில்லை என்பதில் தஸ்லீமா நஸ்ரின் உறுதியாகவிருக்கிறார்.

தஸ்லீமா நஸ்ரின் தனது கவிதைகளில் பெண் உடலை இயற்கையின் வாசிப்புக்கு உரியதாக உணர்கிறார். அவரைப் பொறுத்து பெண் உடலின் கொண்டாட்டம் என்பதும் விமோசனம் என்பதும் பெண்ணிண் முழுமையான ஆளுமையின் விமோசனத்தினின்று பிரிக்க முடியாததாகும். தஸ்லீமா நஸ்ரின் கவிதைகளின் தனித்துவமும் விசேஷமும் இதுவே என்று தோன்றுகிறது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்