/* up Facebook

Jan 31, 2015

பிரகனாஸ்... - கீதா இளங்கோவன்


இன்று வாசித்த ஒரு செய்தி அதிர வைத்தது. 1971 லில் நடந்த பங்களாதேஷ் விடுதலைப் போரில், இரண்டு லட்சத்திலிருந்து நான்கு லட்சம் பெண்கள் பாகிஸ்தான் இராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்களாம்.

உலகெங்கிலும், இராணுவம் எதிரி நாட்டுப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதை ஒரு போர் உத்தியாகவே கையாளும் கொடுமை காலம்காலமா நடக்கிறது. இதன் பின்னணியில் காமம் தாண்டியும் பல விசயங்கள். பெண்ணை சொத்தாகக் கருதும் நிலப்பிரபுத்துவ மனப்பான்மையில் அவளை கையகப்படுத்தி, பலாத்காரத்தால் தமது வாரிசுகளை எதிரி நாட்டில் உருவாக்குவது, அதன் மூலம் எதிரி நாட்டு ஆண்களை அவமானப்படுத்துவது, போரின் வடுக்களை பெண்களை காலங்காலமாக சுமக்க செய்வது போன்றவை இந்த கொடூர மனப்பான்மையில் தொக்கி நிற்கின்றன.

பாதிக்கப்படும் பெண்களின் நிலையோ அவலத்தின் உச்சம். போரின் முடிவு எப்படி இருந்தாலும், மிச்ச வாழ்க்கையை இந்த பெண்கள் துயரத்தோடு கழிக்க வேண்டியுள்ளது. குடும்பத்தாலும், சுற்றத்தாலும் கைவிடப்பட்டு சொந்த நாட்டிலேயே அவமானச் சின்னமாக பார்க்கப்படுகிறார்கள். பலாத்காரத்தால் கருவுற்று, கலைக்க வழியில்லாமல், பிறக்கும் குழந்தையை வேண்டா வெறுப்பாக வளர்த்து, மனஉளைச்சலில் வாழ்நாளைக் கழிக்கின்றனர். தமக்கு இழக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு உலகெங்கும் இந்தப் பெண்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பான், போஸ்னியா, காங்கோ, சூடான் போன்ற பல நாடுகளை சுட்ட முடியும்.

பங்களாதேஷில் நடந்தது என்ன? விடுதலைப் போரை அடக்க வந்த பாகிஸ்தான் இராணுவத்தினர், அங்கு சித்ரவதை முகாம்களை அமைத்து, 9 மாதங்களில் ஏறத்தாழ நான்கு லட்சம் பெண்களை திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். தம் நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உதவி செய்தவர்கள், ஒன்று அறியாத வளரிளம் பருவ சிறுமிகள் எல்லோரும் இதில் அடங்குவர். இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் கர்ப்பமுற்று `போர் குழந்தைகளைப்’ பெற்றெடுத்தனர். கருக்கலைப்புகள் நடந்தன. பல பெண்கள் சித்ரவதை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டனர்.

போருக்கு பிறகு ஆட்சியமைத்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் அரசு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு `பிரகனாஸ்’ (Biraganas) – போர் வீராங்கனைகள் என்று பெயர் சூட்டி அவர்கள் மறுவாழ்வுக்கு திட்டமிட்டது. ஆனால், 1975-லில் முஜிபுர் கொலை செய்யப்பட்டவுடன், நடந்த இராணுவ ஆட்சி அதனை நிறுத்திவிட்டது.

பிரகனாஸ்-க்கு நீதி கேட்டு மனித உரிமை அமைப்புகளின் தொடர் போராட்டத்திற்கு தற்போது விடிவு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில், சர்வதேச போர் குற்ற தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில், `சொந்த நாட்டின் விடுதலைக்காக தமது சுய-மாண்பை தியாகம் செய்த `பிரகனாஸ்’ பெண்களுக்கு உரிய அங்கீகாரமளித்து, கௌரவப்படுத்தி, இழப்பீட்டுடன் அவர்கள் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்குமாறு’ கூறியது.

இதனையடுத்து, பிரகனாஸ் பெண்களை விடுதலைப் போராட்ட வீராங்கனைகளாக அங்கீகரித்து, அவர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் அரசு உதவிகளை வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் தற்போது பங்களாதேஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

43 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த அங்கீகாரம் ! நாலு லட்சத்தில் எத்தனை பெண்கள் உயிரோடு இருக்கிறார்களோ…. யார்யாரெல்லாம் சுவடில்லாமல் மறைந்தார்களோ….
...மேலும்

Jan 30, 2015

அம்ரிதா ப்ரீதம் - வெங்கட் சாமிநாதன்


(பஞ்சாபிக் கவி, கதாசிரியர் அம்ரிதா ப்ரீதம் அவர்களின் மறைவுக்குப் பின் எழுதிய அஞ்சலி)

தன் 86-ம் வயதில் (1919-2005) மறைந்த அம்ரிதா ப்ரீதம் பற்றி எழுதுவது சுவாரஸ்யமான அதே சமயம் சிக்கலான விஷயமும் கூட.  நிறைந்த புகழும் தன் வாழ்நாளிலேயே வெற்றியும் அடைந்தவர். இன்றைய பஞ்சாபி இலக்கியம் பற்றி நினைத்த மாத்திரத்திலேயே முதலில் முன்னிற்பது அவரது பெயராகத்தான் இருக்கும். அந்த பெயர் நமது பிரக்ஞையில் கொண்டு சேர்க்கும் நினைவுகள், பஞ்சாபின் இலக்கிய சரித்திரத்தையும், அரசியல் சரித்திரத்தையும், அந்த மண்ணின் பெண் பட்ட வேதனைகளையும், அதேசமயம் அந்தப் பெண் எல்லாவற்றையும் மீறி தலை நிமிர்ந்து நிற்பதையும் கொண்டு சேர்க்கும். அவரது கவிதையில் பஞ்சாபின் ஸூஃபி கவிஞர்களின், துறவிகளின் நிழல் படிந்திருப்பதையும் காணலாம். மார்க்சிய சமதர்மமும் வந்து போகும். எந்த தயக்கமுமற்ற, தன் தர்மங்களைத் தானே தீர்மானித்துக் கொண்ட ஒரு பெண்ணிய வாதியையும் காணலாம். அந்த பெண்ணி­யக் கவிஞர், தான் விரும்பிய ஆண்களையெல்லாம் மிகத் தீவிரமாக நேசித்தவர். அதே சமயம் எந்த ஆணுக்கும் கட்டுப்பட்டவரும் அல்லர். பெண்­ணியம் fashionable ஆன லேபில் ஆகும் முன்னரே பெண்ணிய வாழ்க்கை வாழ்ந்தவர். பெண்ணாக அதன் எல்லா அழகுகளோடும், வல்லமையோடும் வாழ்ந்தவர். தன் பெண்மையை வலியுறுத்தியவர்.

sv-ws-logo copyஇத்தகைய ஒரு பெண், ஒரு கவி, தீவிர நம்பிக்கையும் ஆசாரமும் கொண்ட ஒரு சீக்கிய மத பிரசாரகர் குடும்பத்தில், – கிராந்தி என்பார்கள், – பிறந்தவர் என்றால், அப்படியா, ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சொல்லலாம். அதெப்படி இருக்கமுடியும் என்றும் கேட்கலாம். இரண்டிற்கும்  அவர் எழுத்திலும், வாழ்க்கையிலும், தடயங்கள் காணமுடியும். குடும்பச் சூழலிருந்து மரபார்ந்த கவிதை எழுதத் தெரிகிறது. 16 வயதுப் பெண் என்ன கவிதை எழுதும்? அழகான பெண். கவர்ச்சியூட்டும் கண்கள். கவிதை எழுதுகிறாள்.தன் தந்தை கிராந்தியிடமிருந்து கற்றவற்றைத்தான். சீக்கிய குருக்கள் பற்றி.  பரபரப்பிற்கும் ரசித்துப்  பாராட்டும் பெரியவர்களுக்குக் கேட்பானேன்? கிராமத்திலிருந்து லாகூருக்கு வந்து அங்கு வியாபாரத்திலிருந்த ப்ரீதம் ஸிங்குக்கு மணம் செய்விக்கப்படுகிறார். பாகிஸ்தானாக பஞ்சாப் துண்டாடப்பட்டதும் டெல்லிக்கு குடி பெயர்கிறார்கள். புகழ் பெற்ற அம்ரிதாவுக்கு டெல்லி வானொலியில் வேலை கிடைக்கிறது. கவிதையும், தன்முனைப்புக்கொண்ட பெண்மையும் வாணிபத்துடன் நீடித்த உறவு கொள்ளமுடியவில்லை. அம்ரிதா விவாக ரத்துப் பெற்று பிரிந்து வாழ்கிறார் தன் மகனோடு.

லாகூரிலும் சரி, குடிபெயர்ந்து வந்த தில்லியிலும் சரி, பஞ்சாபி, எழுத்துலகில் அம்ரிதா ப்ரீதம் மிகவும் பேசப்பட்ட, கவியாகிறார். அவரது முதல் கவிதைத் தொகுப்பிற்குப் பெயர் ‘அம்ருத் லஹரே(ன்) .அம்ருத அலைகள். அம்ருத் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமும் கொள்ளலாம். பேசப்படுவதற்கு கேட்பானேன்? அதற்கு அவரது அழகும், பெண்­ணிய சுதந்திர சிந்தனைகளும், மாறி வரும் கவித்வ ஆளுமையும். அக்கவித்வ ஆளுமையில் அந்நாட்களில் மிகவும் பரபரப்பாகிக் கொண்டிருந்த இடது சாரி இயக்க சிந்தனைகள் அவரது சுதந்திர மனதுக்கு ஏற்ற ஒன்றாகத் தோன்றுகிறது. அப்போது நாட்டையே உலுக்கிய பிரிவினையும், பல லக்ஷக்கணக்கில் இடம் பெயர்ந்தும், உடமை இழந்தும், உயிர் இழந்தும் அலையாடப்பட்ட மக்கள் வேதனையும் அம்ரிதா ப்ரீதமின் உள்ளத்தையும் கவிதையையும் பாதித்தன. பஞ்சாப் வெட்டுண்டு போயிற்று, எங்கே போயிற்று, ஹிந்து, முஸ்லீம், சீக்கியர் எல்லோரையும் அன்பால் ஒன்றிணைத்து மதம் மீறிய ஆதர்ஸ்மாக விருந்த ஸூஃபி ஞானிகளின், கவிஞர்களின் பஞ்சாப்?  வேதனைப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மனம் பஞ்சாபின், கவித்வத்தின், ஸூஃபியிஸத்தின் பிரதிமையாகவே ஆகியிருந்த வாரிஸ் ஷா வை நோக்கி தன் வேதனையை எடுத்துச் செல்கிறது. ‘பார், அப்பாகிட்டே சொல்றேன் பாரு’ என்று அழுது கொண்டு அப்பாவிடம் செல்லும்  குழந்தையைப் போல, ‘அஜ் மை(ம்) ஆக்கா(ன்) வாரிஸ் ஷா நு’ ( ‘இன்று நான் வாரிஸ் ஷா விடம் சொல்வேன்’) என்ற கவிதையை எழுதுகிறார். ‘எழுந்து வா, உன் சமாதியிலிருந்து, வந்து பார், நீ அடுத்து என்ன காதல் கவிதை எழுதப் போகிறாய், இன்று எழுந்து வந்து பஞ்சாபைப் பார், சீனாப் நதி இரத்தவெள்ளமாக பிரவாஹித்துக் கொண்டிருக்கிறது, அது சடலங்கள் மிதக்கும் நதியாகிவிட்டது, இந்த வேதனைக்கு நீ என்ன ஆறுதல் தருவாய்” என்றவாறு அந்த கவிதை போகிறது. “சாதிகள் இல்லையடி பாப்பா’, “ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர் அல்லவோ” என்ற பாரதியை நோக்கி இன்றைய தமிழகமும் கதறக் கூடும். கதற வேண்டும். ஆனால் கதறவில்லை. சாதியை விட லாபம் தரும் அரசியல் நாம் இன்னும் காணவில்லை.

அது மாத்திரமல்ல. சுமார் ஆறு நூற்றாண்டுகளாக பஞ்சாபில் அதன் நாட்டுப்புற பாடல்களில், கதைகளில் வாழ்ந்து வரும், இன்று வரை தொடர்ந்து வரும் ஹீர் ரஞ்சா கதை, ஒரு முஸ்லீம் பெண்ணுக்கும், ஹிந்து ஆண்மகனுக்கும் இடையேயான காதல் கதை, கடைசியில் அது தோல்வியுற்று சோகத்தில் முடியும் கதை பஞ்சாப் கிராமீய வாழ்க்கையின் அடி நாதங்களில் ஒன்று. இக்கதையை எண்ணற்ற கவிகள் தம் கதைப் பாடல்களில் கையாண்டிருக்கிறார்கள். குரு நானக்கையும், கிரந்த சாகேப்பையும் சேர்த்து. அவற்றில் எல்லாம் சிகரம் போன்றது 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாரிஸ் ஷா என்னும் ஸுஃபி கவியின் கிஸ்ஸா  ஹீர் ரஞ்சா என்னும் கதைப்பாடல். அவர் பாடிய காலத்திய சமூக வாழ்க்கையும், அரசியல் கொந்தளிப்பும் அக்கதைப்பாடலின் பின்னணியாக ஒலித்துக் கொண்டிருக்கும் . மொகலாய அரசு முடிந்து விட்டது. பஞ்சாபில் அதை எதிர்த்த அரசியல் கொந்தளிப்புகள். இவை எல்லாம் வாரிஸ் ஷாவின் கதைப்பாடலில் பின்னிக் கிடக்கும். இக்கொந்தளிப்புகளினிடையே தான் ஹிந்து – முஸ்லீம் காதல் அரும்புகிறது. குரு நானக்கின் கைகளில் அது, நம் அகப் பாடல்கள் பக்தியுகக் கவிகளின் கடவுள் மேல் கொள்ளும் காதலாக பரிணாமம் பெறுவது போன்று, கடவுள் மேல் கொண்ட காதலின் உருக்கமாக மாறும். வாரிஸ் ஷாவின் அடியொற்றியே அம்ரிதா ப்ரீதமின் கவிதையும் நாற்பதுகளின்  அரசியல் கொந்தளிப்பும், மத மாச்சரியங்களும் மனிதனையும் நாட்டையும் ரணகளமாக்கிய வேதனையின் குரலாக வாரிஸ் ஷாவை அழைக்கிறது. தன் கவி வேதனையை, நாட்டின் வேதனை குரலாக மாற்றியது, அம்ரிதா ப்ரீதமின் பெரும் பாய்ச்சல். பஞ்சாபி இலக்கியத்தில் இக்கவிதை ஒரு சிறப்பான இடம் பெற்றது. அம்ரிதா ப்ரீதம் இக்கவிதைக்குப் பிறகு புகழின் உச்சிக்கே சென்றார். அம்ரிதா ப்ரீதமின் பெயர் சொல்ல அவர் முத்திரை பதிக்க இக் கவிதை ஒன்றே போதுமாகியது.

அக்காலம் இடது சாரிகளின் காலம். நாடகத்தில் Indian Peoples Theatre Association- ம் ஒவியத்தில் Progressive Painters -ம் தோன்றிய காலம். தில்லியோ, பஞ்சாபோ, அம்ரிதா ப்ரீதமோ தப்பவில்லை. அம்ரிதா ப்ரீதமின் சிந்தனைகளும் வளர்ச்சியும் அதற்கு ஏதுவாகவே இருந்தன. இடது சாரிகளின் ஆதரவு ஒரு அமைப்பின் ஆதரவு. உலக அமைப்பின் ஆதரவு. பிரசார ஆதரவு. ரஷ்யா, கிழக்கு ஐரோப்பா வெங்கும் புகழ் பரப்பும் ஆதரவு. தமிழ் நாட்டு முற்போக்கு பெறும் வசதிகள் போன்றது. சோவியத் லாண்ட் பரிசு, ரஷ்ய பிரயாணம், கிழக்கு ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு இத்யாதி. ஆனால், அம்ரிதா ப்ரீதமின் பிராபல்யத்துக்கும் புகழுக்கும், அவரது அழகு, இடது சாரி, கவித்வம் எல்லாமே உதவின. அதற்கும் மேல் அவரது சுதந்திர தாகம் கொண்ட வாழ்க்கை. அது தன் முனைப்புக்கொண்ட பெண்ணியம். தன் ஆளுமையிலிருந்து கிளர்ந்த பெண்­ணியம். சுதந்திரம். கோட்பாடாகப் பெற்றதல்ல.

நம் இலக்கியத்தில், நாற்பது ஐம்பது, அறுபது(இன்னா நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது. ஹநுமான் சாலீஸா இத்யாதி) என்று பாடல் வகைகள் இருப்பது போல, பாராமா என்றொரு வகை உண்டு. பன்னிரண்டு மாதம் என்று பொருள். ஒவ்வொரு மாதமாக, பன்னிரண்டு மாதங்களும், மாறும் பருவங்களுக்கு ஏற்ப தனித்திருக்கும் காதலி அல்லது மனைவி தன் பிரிவின் உணர்வுகளை, ஏக்கத்தைச்  சொல்வதாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் மாறும் பருவத்திற்கேற்ப அவள் உணர்வுகளும் மாறும். இது சம்பிரதாயமான காதல் பாட்டு. ஸூஃபி கவிஞர்களின்  பாராமா-வில் காதல் பக்தி உணர்வாக மாறும். அம்ரிதா பாடும் பாராமா எப்படியிருக்கும்? சம்பிரதாயம் பற்றியெல்லாம் தான் அவருக்குக் கவலை இல்லையே. அவர் வழி புரட்சிதான். தான் விரும்பி ஏங்கிய காதல்களை, ஏக்கங்களை எல்லாம் கொட்டி அவர் எழுதிய கவிதைத் தொகுப்பு சுனேரே அவருக்கு 1956-ல் சாகித்திய அகாடமி பரிசைத் தந்தது. (சாகித்ய அகாடமியில் தானும் ஒரு தேர்வாளராக இருந்து கொண்டு தானே தன் புத்தகத்தைப் பரிசுக்குத் தேர்ந்து கொண்டார் என்று குஷ்வந்த் ஸிங் குற்றம் சாட்டியுள்ளார். இப்படியான சமாசாரம் தமிழ் மரபு சார்ந்தது என்றாலும், பரிசு பெற்ற புத்தகத்தின் தகுதி என்னவோ தமிழ் மரபு சார்ந்தது இல்லை என்று மனம் சமாதானம் கொள்ளலாம்) தன் சொந்த ஏக்கங்களை, தனி மனித வேதனையை மனித குல ஏக்கங்களாக மாற்ற முடிந்திருக்கிறது அவரால். அவரது தனிப்பட்ட மார்க்ஸிஸம், நாட்டுப்புற பாடல்களின் உள்ளார்ந்த தாக்கம், எல்லாம் அவரது கவித்வத்திற்கு தனிச்சிறப்பைத் தந்தன. இளம் வயதில் க்ராந்தியான தந்தையிடம் கற்றதும், புல்லே ஷா, வாரிஸ் ஷா பாடல்களின் தாக்கம் எல்லாம் அவரது கவித்வத்தின் இரத்த நாடி. மத விரோதங்களும், ஒன்றிணைந்த கலாச்சாரமாக, ஸுஃபியும், இஸ்லாமும், ஹிந்துமதமும் பிளவுபட்டு நாடும் மக்களும், மொழியும் சிதறிப் போனதும் இரு பக்கமும் வாழ்க்கை சின்னபின்னமாகிப்போனதும் ஆன trauma-வே அம்ரிதா வின் பெரும்பாலான எழுத்துக்களுக்கு காரணமாயிற்று. அவ்வளவு சமீபத்திய, சுயமாய் அனுபவித்த சோகம் படைப்பாக சாதாரணமாக மாறுவதில்லை. காலமும் தூரமும் தேவை என்பார்கள். எதிர்பார்ப்பதுமில்லை. ஆனால், மாறியுள்ளது. அம்ரிதா ப்ரீதம் கவித்வத்தில். அது விதி விலக்கானது என்று தான் சொல்லவேண்டும். லம்மியான் வதா(ன்)(  நீண்ட பயணங்கள்- 1948) ஸர்கி வெலே ( விடியும் நேரம் -1952) என்று தொடங்கி அது நீண்டு செல்கிறது. ஆரம்ப கால கவிதைகள் அவருக்கு சீக்கிய சமுதாயத்திலேயே நிறைந்த புகழைத் தந்தது. ஆனால், எல்லோர் முன்னிலையிலும் சிகரெட் பிடிக்கும், பேச்சிலும்,எழுத்திலும் வாழ்க்கையிலும் கட்டுக்கடங்காதவரை என்ன செய்யமுடியும்? அம்ரிதா ப்ரீதமே ஒரு கவிதையில் சொல்கிறார். ‘என் வேதனைகளையெல்லாம் புகைத்துத் தள்ளுகிறேன். அதிலிருந்து விழும் சாம்பல் துகள்கள் கவிதைகளாகிவிடுகின்றன.” இந்த வரிகளை அவரது வாழ்க்கைக்கும் கவிதைக்குமான ஒர் உருவகமாக (metaphor) வே பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.(வேதனைகள் என்று அவர் சொன்னது அவரது தனிப்பட்ட வேதனைகளை மாத்திரம் அல்ல. அவை விஸ்வரூபம் பெற்று பெண்ணின், மனிதனின் வேதனைகளாகின்றன.) ஓஷோவை அவர் மிகவும் மதித்தார். அதை ஒரு கவிதையாகவே எழுதியுமுள்ளார். ஹிந்தியில் அவர் தன் பாணியில் வாசிக்க கேட்ட ஞாபகத்தில் சொல்கிறேன், ‘உயிர் பெற்ற சப்தம் கவியாகிறது. என்று ஆரம்பித்து அடுத்தடுத்த கட்டங்களில் வளர்ச்சி பெற்ற அந்த ஜீவன் கடைசியில் பெறும் ரூபம் ஓஷோ’ என்று அர்த்தத்தில் அந்த கவிதை இருக்கும். அவர் கவிதை வாசிக்கும் பாணி கவிதைக்கு ஒரு சப்த ரூபம் கொடுக்கும். ஆனால் அதை அவர் கட்டுரைப் பேச்சு  வாசகங்களுக்கும் அதே பாணியைக் கையாளும் போது, நமது தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் anchor களின் அறுவை தான் நினைவுக்கு வந்து வெறுப்பேற்றும். விஷயம் தெரிந்த பஞ்சாபி, உருது இலக்கியக்காரர்கள், அம்ரிதா ப்ரீதமின் சிறுகதை, நாவல்களை அதிகம் பொருட்படுத்துவதில்லை. இருப்பினும் அவரது ஒரு நாவல் (பிஞ்சர்) திரைப்படமாகியுள்ளது.

நிறைய எழுதினார் அம்ரிதா. கவிதைகளாகவும், வசன நூல்களாகவும். தன் இச்சையாக தன் வாழ்வை பூரணமாக வாழ்ந்தவர். பெற்றதும், பெற ஏங்கியதும் எல்லாமாகத் தான். கொடுத்தது, ஏங்க வைத்ததும் தான். தயக்கமில்லாமல் தன்னை வெளிக்காட்டிக் கொண்டவர் தான். அவர் பேச விரும்பாது மௌனம் சாதித்த உலகமும் உண்டு. ஒரு காவிய பரப்பிற்கு எழுதி விஸ்தரிக்கவேண்டிய அவரது வாழ்க்கையை எழுத வந்தவர் அதை ரசீதி டிக்கட் என்ற தலைப்பில் எழுதினார் . ரசீதி டிக்கட்டில்(1976) தன் பிறப்பிலிருந்து ஆரம்ப வருடங்களையும், தன் பெற்றோரையும் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தவர், உடனே தில்லிக்குத் தாவுகிறார். இம்ரோஸு”டனான வாழ்க்கைக்கு வந்துவிடுகிறார். இடைப்பட்ட காலம் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள், மாயமாகி விடுகின்றன. அந்த மண வாழ்க்கை பற்றிப் பேச அவர் விரும்பவில்லை. ஆனால் மற்ற பஞ்சாபி, உருது இலக்கியக்காரர்களுடனான தன் உறவுகள் பற்றிப் பேச அவர் தயங்கவில்லை. அந்த அளவுக்கு வெளிப்படையாய், சொல்ல நினைத்தவற்றைத் தயங்காது சொன்னவர் அவர். மிகுந்த பரபரப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய படைப்பு அது. மராத்தியில் ஹம்ஸா வாடேகர் என்ற நாடக, சினிமா நடிகையின் சுயசரிதம் நினைவுக்கு வருகிறது. அதற்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. மார்க்கஸ் அரேலியஸ், ரூஸோ, காந்தி, என்று அது நீளும்.தன் இச்சையாக, தனக்கு தான் விதித்துக் கொண்ட தர்மங்களுக்கேற்பவே வாழும் இவ்வழகிய கவியைக் காதலித்தவர் அனேகம். தாம் அம்ரிதாவுடன் நெருக்கமாக இருப்பதாக சொல்லிக்கொண்டவரும் சொல்லிக்கொளவதில் பெருமைப்பட்டவர்களும் உண்டு. இதுபற்றியெல்லாம் அம்ரிதா கவலைப்பட்டவர் இல்லை. இப்பரபரப்பும் அவருக்கு வேண்டித்தான் இருந்தது போலும். உலகம் அறிந்தது, அவர் மிகவும் ஆசைப்பட்டது ஏங்கியது, ஷாஹிர் லூதியானவிக்காக. அவரை வீட்டுக்கு அழைத்து வந்து உபசரித்தது தான் மிச்சம். மனிதர் குடித்துவிட்டு நினைவிழந்து போக பொழுது அப்படியே கழிந்தது என்று செய்தி. அம்ரிதாவின் மகனே அம்மாவிடம் கேட்டானாம். “அம்மா, எல்லோரும் நான் ஷாஹிர் லூதியானவிக்குப் பிறந்தவன் என்கிறார்களே?” என்று. “அது தான் நான் ஆசைப்பட்டதும், மகனே” என்றாராம் அம்ருதா.  இம்ரோஸ் என்னும் பெயர் கொண்ட தாடி மழித்துக்கொண்ட சீக்கிய ஓவியருடன் தான் அவர் வாழ்ந்தார். அம்ரித்துக்காக, தன்னை அவரது நிழலாக்கிக் கொண்டு வாழ்ந்தவர் இம்ரோஸ். அம்ரித்தின் கடைசி மூச்சு வரை. வீட்டில் உபசரணை. அம்ரித்தின் புத்தகங்களுக்கு அட்டைப்பட ஓவியங்கள். மரணத்திற்கு முன் படுக்கையாகக் கிடந்த காலம் முழுதும் நர்ஸ் சேவை. அதிர்ஷ்டகாரர் தான் அம்ரிதா. அந்த இம்ரோசுடனான வாழ்க்கையை கொண்டாடும் முகமாக அவர் காகஸ் த்தெ கேன்வஸ்  (காகிதமும் கான்வஸ”ம்) என்னும் கவிதைத் தொகுப்பு, 1980 லோ என்னவோ ஞானபீட பரிசு பெற்றது, வாழ்க்கை பற்றிய அவரது சிந்தனைகளும், கற்பனைப் பார்வையும் (romanticism) கலந்த கவிதைகள் அடங்கியது. அவரது பிற்கால கவித்வ ஆளுமையைச் சொல்லும் அது. அவரை விட சிறந்த கவித்வம் கொண்டவர்கள் என்று ப்ர்ப்ஜோத் கௌர் போன்றவர்களை, ஒரே சீரான கவித்வமும், வாழ்க்கையும் கொண்டவர்களை சிலர் சொல்லக்கூடும். ஆனால், தன் வாழ்க்கையிலும், எழுத்திலும் வாழும் விதியை தானே விதித்துக் கொண்டவர், ஒரு colourful person ஆன அம்ரிதா சுவாரசியமும் ஈர்ப்பும் கொண்டவர். பஞ்சாபின் கவிதை பாரம்பரியத்தின் பிரகாசமான பிரதிநிதி அவர். அரசுகளும், இலக்கிய நிறுவங்களும், சமூகமும் தரக்கூடிய எல்லா பரிசுகளையும் செல்வத்தையும் செல்வாககையும் பெற்றவர்.

ஐயோவாவின் கவர்னர், ஒர் அம்மையார், அம்ரிதா ப்ரீதமைச் சந்திக்கும் தன் விருப்பத்தை, ‘தன் இச்சைப்படி வாழ்ந்த எழுதிய பெணமணியைச் சந்திக்க விரும்புகிறேன் ‘ என்றாராம். அஜ் மை(ம்) வாரிஸ் ஷா நு ஆக்கா(ன்)  என்னும்  சக்தியும் சோகமும்  நிறைந்த சொற்களை காலாதீத குரலாக்கும் வல்லமை எல்லோருக்கும் இருப்பதில்லை. சிகரெட் சாம்பல் துகள்களும் கவிதைகளாகும் அவர் விரல் நுனியிலிருந்து விழுந்தால்.

நன்றி: காலச்சுவடு,  எனி இந்தியன்
...மேலும்

Jan 29, 2015

இப்போ இளம்பெண்களையும் தாக்குது ஃபைப்ராய்டு!


ஃபைப்ராய்டு எனப்படுகிற கர்ப்பப்பையில் வரும் கட்டியானது, சமீப காலம் வரை நடுத்தர மற்றும் அதற்கடுத்த வயதுப் பெண்களை மட்டுமே தாக்கிக்  கொண்டிருந்தது. நோய்கள் தாக்கும் வயது குறைந்து வருவதை அடுத்து, ஃபைப்ராய்டு கட்டியும், இப்போது இளம் பெண்களுக்கும் வருகிறது. சரியான  நேரத்துக் கண்டுபிடிப்பும் சிகிச்சையும் மட்டுமே பாதிப்பு பெரிதாகாமல் தடுக்கும் ஒரே வழி’’ என்கிறார்  மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

‘‘கர்ப்பப்பையில் வருகிற ஒருவித தசைக் கட்டியே ஃபைப்ராய்டு. இதில் 3 வகைகள் உள்ளன. Submucosal fibroids என்பது கர்ப்பப்பையின் உள்புற  குழிவுப் பகுதியில் ஏற்படுவது. Subserosal fibroids என்பது கர்ப்பப்பையின் வெளியில் வளர்வது. Intramural fibroids என்பது கர்ப்பப்பையின் தசைச்  சுவர் இடுக்கில் வளர்வது.

காரணங்கள்
ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாவதே இதற்கு முக்கிய காரணம். பருமனுக்கும் இதற்கும் நெருங்கிய தொடர்புண்டு. உடலின் அதிகப்படியான கொழுப்பிலிருந்தும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். அதன் விளைவாக ஃபைப்ராய்டு வரலாம்.
அசைவ உணவுகளை அதிகம் உண்கிற பெண்களுக்கும் வரலாம். பால் முதல் அசைவ உணவுகள் வரை அனைத்தையும் கொடுக்கும் விலங்குகளுக்கு இன்று ஹார்மோன் ஊசிகள் போடுவது சகஜமாகி விட்டது. அவற்றை உண்ணுவோருக்கும் அந்த ஹார்மோன்களின் தாக்கம் நிச்சயம் இருக்கும்.
பரம்பரையாகவும் இது தாக்கலாம். பாட்டி, அம்மா, சித்தி வழியில் அந்தக் குடும்பத்துப் பெண்ணுக்கு வரலாம்.

அறிகுறிகள்
மாதவிலக்கு நாட்களில் அளவுக்கு அதிக ரத்தப் போக்கு. நிறைய நாட்கள் நீடிப்பது. மாதவிலக்கே வராமல் இருப்பது. மாதவிலக்கு நாட்களில் உருண்டு, புரண்டு அழுது துடிக்கிற அளவுக்கு வலி. 5 மாதக் கர்ப்பம் மாதிரி வயிறு பெருத்துக் காணப்படுவது. மலச்சிக்கல் மற்றும் முதுகு, கால்களில் கடுமையான வலி.

பாதிப்புகள்
ஃபைப்ராய்டு கட்டிகள், குழந்தையின்மைக்குக் காரணமாகலாம். Submucosal fibroids வகையிலான ஃபைப்ராய்டு, கருவானது பதிந்து, வளர்வதைத் தடுக்கக்கூடியது. எனவே இந்த வகைக் கட்டிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், கருத்தரிப்பதற்கு முன்பே இவற்றை அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மிக அரிதாக இந்தக் கட்டிகள், சினைக் குழாய்களையும் பாதிக்கலாம்.

பரிசோதனைகள்
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கட்டியின் இருப்பிடம் மற்றும் அளவு கண்டு பிடிக்கப்படும். 

தீர்வுகள்
மாதவிலக்கின் போது கடுமையான வலியோ, அதீத ரத்தப் போக்கோ இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக மருத்துவரைப் பார்த்து ஃபைப்ராய்டு சோதனையை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான பெண்கள் ஆரம்பத்திலேயே வராமல், வயிறு பெருத்து, தொப்பை விழுந்த மாதிரித் தோற்றம் வந்த பிறகு, அதற்கான காரணம் அறிய வேண்டி தான் மருத்துவரை சந்திக்கிறார்கள். மற்ற அறிகுறிகளைக் கேட்டு, சோதனை செய்கிற போது, அவர்களது ஃபைப்ராய்டு கட்டி பெரிதாக வளர்ந்திருக்கும்.

4 அல்லது 5 செ.மீ. அளவுள்ள கட்டிகள் என்றால் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலமே சரி செய்து விடலாம். அதன் மூலம் கர்ப்பப்பையையும் பாதுகாக்கலாம். அதுவே கட்டி வளர்ந்து பெரிதாகி விட்டால் (சில பெண்களுக்கு 15 செ.மீ. அளவுக்குக் கூட வளர்வதைப் பார்க்கலாம்) சிகிச்சையளிப்பது சிரமம். கர்ப்பப்பையும் பாதிக்கப்படும்.

இந்தப் பிரச்னையை குணப்படுத்த மருந்துகள் கிடையாது. GnRH analogues என்கிற ஒரு ஊசி போடப்படும். அதை மாதம் ஒரு முறை என 3 மாதங்களுக்குப் போட வேண்டும். அதுவும் கட்டியைக் கரைக்காது. தற்காலிகமாகச் சுருக்கும். மறுபடி கட்டி வளரும். அதனால், அறிகுறிகளை உணர்ந்து சீக்கிரமே சோதித்து, எளிய சிகிச்சையில் சரி செய்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்...’’
...மேலும்

Jan 28, 2015

தண்டனையைவிட மன்னிப்புக்கே அதிக வலிமைதெருவில் நடந்து சென்ற 25 வயதுப் பெண்ணை ராணுவ வீரர்கள் இழுத்துச் சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள். அந்தக் கொடூர நிகழ்வைக் கேள்விப்பட்ட அந்தப் பெண்ணின் தாய் நிலைகுலைந்து போனார். குற்றவாளிகளைச் சும்மா விடக்கூடாது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்படுவது போலவே அந்தத் தாய்க்கும் ஏற்பட்டது. முதலில் மகளை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். பிறகு ராணுவ வீரர்களிடம் சென்றார்.

“நேற்று உங்கள் வன்முறைக்கு ஆளான பெண்ணின் அம்மா நான். மிக உயர்வாக நினைத்த உங்களிடம் இருந்து இதுபோன்ற செயல்களை எதிர்பார்க்கவில்லை” என்றார்.

தவறு செய்த ராணுவ வீரர்கள் தலை கவிழ்ந்தனர். அவரிடம் தங்கள் செயலை மன்னிக்கும்படி கேட்டனர். யாரும் எளிதாகச் செய்துவிட முடியாத இப்படி ஒரு காரியத்தைச் செய்தவர் நீமா நமடாமு. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜனநாயகக் குடியரசு காங்கோவில் வசிக்கிறார்.

1996-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்ற போர்களில் இதுவரை 60 லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் 4 லட்சம் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்குப் பலியாகிறார்கள். இவ்வளவு மோசமான சூழ்நிலை நிலவும் ஒரு நாட்டில் அமைதிக்காகவும் பெண்களின் உரிமைகளுக்காகவும் நீமா தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்.

போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பழங்குடி இனத்தில் பிறந்தார் நீமா. ஆண் குழந்தைகள் பிறந்தால் விழாபோல் கொண்டாடுவார்கள். பெண் குழந்தை என்றால் எந்தவித ஆரவாரமும் இருக்காது. இரண்டு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார் நீமா. ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதால் அவருடைய தந்தை வேறு திருமணம் செய்துகொண்டார். ஆனால் அம்மாவுக்கு நீமா மேல் அளவுக்கு அதிகமான அன்பு. பிறர் உதவி தேவைப்படும் தன் மகள், பிறருக்கு உதவுவதுபோல் ஒரு நிலையை எட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். பள்ளியில் சேர்த்து, மூன்று ஆண்டுகள் வரை முதுகில் தூக்கிச் சென்று படிக்க வைத்தார். பிறகு நகருக்குச் சென்று படிப்பைத் தொடர்ந்த நீமா, தன் நாட்டில் நிலவும் சூழ்நிலைகளையும் பெண்களின் நிலைமைகளையும் புரிந்துகொண்டார்.

பொதுப் பணியில் ஆர்வம்

பள்ளியில் படிக்கும்போதே வாரத்துக்கு ஒருமுறை வானொலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் நடத்தத் தொடங்கினார். உயர் கல்வியை காங்கோ தேசியப் பல்கலைக்கழகத்தில் படித்தார். அப்போது புருண்டி, ருவாண்டா போன்ற நாடுகளிலும் காங்கோவில் நடைபெற்ற மாநாடுகளிலும் பங்குபெற்றார் நீமா. பட்டம் பெற்ற இரண்டாவது பழங்குடிப் பெண் என்ற சிறப்புடன் வெளிவந்த நீமா, பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்காண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்தார்.

பெண்களே ஹீரோ

பெண்ணுரிமை, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகப் போராடினார். பெண்களுக்குக் கல்வியும் சுய சம்பாத்தியமும் அவசியம் என்பதை உணர்ந்தார். பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டார். வானொலி நிலையத்தை ஏற்படுத்தினார். மீடியா ட்ரெயினிங் சென்டர் ஆரம்பித்தார். அது பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கல்வி, பயிற்சி, சுயதொழில் போன்ற பல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும் மையமாக இருந்து வருகிறது.

காங்கோவில் எந்தப் பகுதியில் இருந்தும் இங்கே தொடர்புகொண்டு தங்களின் பிரச்சினைகளைப் பெண்கள் சொல்லலாம். அவர்களின் பிரச்சினைகளைக் களைவதற்கும் நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்துவதற்கும் நீமாவின் ‘மமன் ஷுஜா’ என்ற திட்டம் உதவுகிறது. அதாவது பெண்களை ஹீரோக்களாக மாற்றும் திட்டம் இது. ஆன்லைனில் இந்தப் பெண்களின் கதைகள் வெளியிடப்பட்டு, உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகியவற்றைச் சமூக மாற்றத்துக்குப் பயன்படுத்தி வரும் அமைப்பாக இவை இருக்கின்றன.

அந்த நேரத்தில்தான் நீமாவின் மகள் பாதிக்கப்பட்டார். ஓர் இரவு முழுவதும் நிம்மதியைத் தொலைத்தார். நீண்ட மனப் போராட்டத்துக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தார். மன்னிப்பு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தார்.

“இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுகிறவர்களுக்குத் தண்டனை அளித்தால் எல்லாம் சரியாகிவிடுமா? வேறு ஒருவன் வேறு ஒரு பெண் மீது வன்முறை நிகழ்த்திக்கொண்டுதான் இருப்பான். இது இவர்களின் தவறல்ல, இந்த அமைப்பின் தவறு. அமைப்புதான் ஆணி வேர். அதைச் சரி செய்தால் பிறகு எல்லாமே சரியாகும் என்று எனக்குத் தோன்றியது. என் முடிவு சரிதான் என்பது குற்றவாளிகளைக் கண்டபோதே புரிந்துவிட்டது.

தண்டனையைவிட மன்னிப்புக்கு அதிக வலிமை இருக்கிறது. அன்பால் எதையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை அவர்கள் மன்னிப்பு கேட்டபோது எனக்கு வந்தது. நரகத்திலிருந்துதான் சொர்க்கத்தை உருவாக்க வேண்டும் என்பது புரிந்தது. கல்வி மூலம்தான் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியும். கல்வி இருந்தால் அமைதியை விரும்புவார்கள், பெண்களை மதிப்பார்கள். அதற்கான முயற்சிகளில்தான் எங்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது” என்கிறார் நீமா.

உலகின் மோசமான நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வந்த காங்கோவில் மனித உரிமைகளும் பெண்கள் உரிமைகளும் மீட்கப்பட்டு வருவதற்கும் அமைதிக்கான முயற்சிகளுக்கும் நீமாவும் அவரது இயக்கங்களும்தான் காரணம். உலக நாடுகளின் பல அதிபர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், சமூகப் போராளிகள், ஹாலிவுட் பிரமுகர்கள் எல்லோரும் நீமாவின் இயக்கத்துக்கு ஆதரவும் நிதியும் அளித்து வருகிறார்கள்.

“காங்கோவை என் அம்மாவைப் போல நேசித்து வருகிறேன். உலக நாடுகளில் காங்கோவுக்கு மரியாதை கிடைக்க வேண்டும். அதற்காகவே நாங்கள் போராடி வருகிறோம். சமூகத்தில் ஒரு சிறு சலனத்தை ஏற்படுத்துவது என் நோக்கமல்ல. மிகப் பெரிய முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என்றே நினைக்கிறேன். செயல்படுகிறேன்” என்று சொல்லும் நீமா, தன் போராட்டம் ஆண்களுக்கு எதிரானதல்ல, சமூக அமைப்புக்கு எதிரானது என்று அழுத்தமாகச் சொல்கிறார்.​

நன்றி - திஹிந்து


...மேலும்

Jan 27, 2015

அழுகைகள் நிரந்தரமில்லை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு - வெலிகம ரிம்ஸா முஹம்மத்


ஈழநாதம், தினமுரசு பத்திரிகைகளில் ஒப்புநோக்காளராக, உதவி ஆசிரியராக, பிரதேச செய்தியாசிரியராக பணிபுரிந்தவர் அலெக்ஸ் பரந்தாமன். எண்பதுகளின் பிற்பகுதிகளில் இருந்து எழுதத் தொடங்கி இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கிறார். கவிதை, சிறுகதை, நேர்காணல், பத்தி எழுத்துக்கள், கட்டுரைகள் போன்றவற்றை பத்திரிகைகள் ஊடாக களப்படுத்தி வந்துள்ளார். ஜீவநதி வெளியீட்டகத்தின் 38 ஆவது தொகுப்பாக வெளிவந்துள்ளது அலெக்ஸ் பரந்தாமனின் கன்னிச் சிறுகதைத் தொகுப்பு. 58 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் 10 சிறுகதைகள் இடம் பிடித்துள்ளன.

அனலெனவாகிய நினைவுகள் (பக்கம் 01) என்ற முதல் சிறுகதை போரின் கோரத் தாண்டவத்தால் மக்கள் படும் அல்லலை சித்திரித்துக் காட்டுகின்றதெனலாம். பிள்ளைகளுடன் கொட்டிலுக்குள் வறுமை வாழ்வு கழிக்கும் சிறியதொரு குடும்பத்தின் சோக நிகழ்வுகள் இக்கதை மூலம் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றது. அதில் வயதான ஒரு மாமாவின் பாத்திரமும் உள்ளடக்கப்ட்டிருக்கின்றது. அவர் முணுமுணுக்கும் வார்த்தைகள் இதுதான்..

'அவன் ஆமி வாறதைப் பார்த்தால் எல்லோரையும் புடிச்சிடுவாங்கள் போலக்கிடக்கு. புடிச்சு எல்லோரையும் சுட்டுவிட்டாங்கள் என்றால் உபத்திரவமில்லை...'

திடீரென ஷெல் வெடிக்கும் சத்தம் கேட்கின்றது. எவ்விடத்தில் விழுந்து யார் யார் இறந்து கிடக்கின்றார்களோ என்ற பரபரப்பு இந்த நூலை வாசிக்கும் வாசகர்களிடத்திலும் ஒட்டிக்கொள்கின்றது. போய்ப் பார்த்தால் மாமா உடல் கருகி இறந்து போயிருப்பதாக கதை நிறைவடைகின்றது. சொந்தங்களை இழந்து தனியாளாக நிர்க்கதியாய் நிற்பதை விட, எல்லோரும் ஒரே நேரத்தில் இறந்தால் பரவாயில்லை என்ற மாமாவின் கூற்று அந்த நிலைமையில் இருப்பவர்களைப் பொறுத்தளவில் நியாயமே. யாருமற்ற அநாதைகளாக இருப்பதைப் பார்க்கிலும் குடும்பத்தோடு இறந்து போனால் பரவாயில்லை என்று எண்ணும் பாங்கு யுத்தத்தின் கோரத்தை தெட்டத் தெளிவாக்கியிருக்கின்றது.

நாயுண்ணிகள் (பக்கம் 09) என்ற சிறுகதையும் போரின் போது இருந்த வாழ்க்கை முறையை யதார்த்தமாய்ச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. தேவகி என்ற பெண் மூன்று பிள்ளைகள் இருந்த போதும் மூத்த பிள்ளை இயக்கத்தில் சேர்ந்துவிட்டதால் இரு பிள்ளைகளுடன் கணவனின் துணையில்லாமல் சீவியம் நடத்தி வருகின்றாள். கணவன் அவளை விட்டுப் பிரிந்து வேறொரு பெண்ணைத் திருமணமுடித்து இருப்பதுவும், அவளது மூத்த மகள் இயக்கத்தில் சேர்ந்து அவளைவிட்டுச் சென்றதாலும் தேவகி வாழ்க்கை கண்ணீரிலே கழிகின்றது. இரு பிள்ளைகளை கிடங்குக்குள் இருத்திவிட்டு யோசித்துக்கொண்டிருக்கின்றாள். இடம்பெயர்ந்து வரும்போது இரண்டு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களுடன்தான் அவள் வந்திருந்தாள். இப்படி காலம் கழிந்து கொண்டிருக்கையில் அவளது தூரத்து உறவுப் பெண் தன் இரு பிள்ளைகளுடன் அங்கு வந்து சேர்கின்றாள். அவள் தேவகியிடம் இவ்வாறானதொரு யோசனையை முன்வைக்கிறாள்.

'தேவகி அக்கா! நாங்கள் ஒண்டாய் சமைச்சு சாப்பிடுவமே? விறகுச் செலவு மிச்சம். கறி, புளிகளை நான் வேண்டித் தாறேன். நீங்கள் அரிசிச் சாமான்களை வேண்டிப் போடுங்கோவன்...'

இந்த யோசனை தேவகிக்கும் சரியாகவே பட்டது. ஆனால் காலப்போக்கில் அனைத்து செலவுகளும் தேவகியின் தலையில் வந்து விழுகின்றது. தேவகியும் இரு பிள்ளைகளும் பசியாறிக்கொண்டிருந்த உணவு, உறவுப் பெண்ணுக்கும் அவளது இரு பிள்ளைகளுக்கும் என அதிகமாக செலவழிந்தது. அதாவது ஆறு பேரின் சாப்பாட்டுச் செலவையும் தேவகியின் தலையில் ஏற்றிவிடுகின்றாள் உறவுக்காரப் பெண். இரண்டு மாதங்களுக்குப் போதுமான உணவு விரைவில் தீர்ந்து போகின்றது. ஒருநாள் சமைப்பதற்கு எதுவுமின்றி தேவகி கவலையுடன் படுத்திருக்க அந்த உறவுக்காரப் பெண்மணி வந்து 'இன்னும் சமைக்கவில்லையா?' என்று அதிகாரத் தொனியுடன் கேட்கின்றாள். 'இல்லை' என்று வெடுக்கென தேவகி பதில் சொல்லி சமைப்பதற்கு எதுவுமில்லை என்ற காரணத்தையும் கூறுகின்றாள்.'இல்லை என்றால் நேரத்துடன் சொல்லியிருக்கலாம் தானே?' என்று அவள் அதட்டி பதில் சொல்ல, தேவகிக்கும் கோபம் தலைக்கேறுகின்றது. 
ஷஏன் உனக்குத் தெரியாதா? ஒரு வீட்டுக்குள்ள ஒரே பானைக்குள்ள சோறு காய்ச்சிச் சாப்பிடுறாய். இருக்கிறது இல்லாதது தெரிய வேணும் தானே| என்கின்றாள் தேவகி.

கோபமுற்ற உறவுப் பெண் தான் இருப்பது தேவகிக்கு பிடிக்கவில்லை என்று வீண் புரளியைக் கிளப்பிக்கொண்டு வேறொரு வீட்டில் போய்த் தஞ்சமடைகின்றாள். அவள் சாப்பாட்டுக்கு வழி இருந்தபோது தேவகியுடன் இருந்துவிட்டு, உணவு தீர்ந்ததும் வேறொரு வீட்டுக்கு சென்றுவிடுகின்றாள். நாயோடு ஒட்டிக்கொண்டிருக்கும் உண்ணிகள் நாய் இறந்த பின் கழன்று விடுவதைப் போல அவளும் கழன்று போய்விட்டதாக கதை நகர்கின்றது.

சமூக மாறுதல்கள் (பக்கம் 51) என்ற சிறுகதையானது சாதி வெறிகளை அடியோடு ஒ(அ)ழிக்க பாடுபடும் ஒரு கதைக் கருவாக மலர்ந்துள்ளது. இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் சாதி வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. மனித சாதி என்ற ஒன்றிலிருந்து வேறுபட்டு அதற்குள்ளேயே உயர் சாதி, தாழ்ந்த சாதி என்று பல கோத்திரங்கள், குலங்கள் உருவாகியிருக்கின்றன. ஐந்தறிவு கொண்ட யானைக்குக் கூட மதம் பிடித்தால் சீக்கிரம் அடங்கிவிடும். ஆனால் ஆறறிவு கொண்ட மனிதன்தான் மதவெறி பிடித்து மனித இனத்தையே கொன்றுவிடுகின்ற அளவுக்கு போய்விடுகின்றான்.
கோயில் பணிகளில் ஈடுபட்டுள்ள குருக்களின் மகனை 'பயிற்சிக்காக' அழைத்துப் போகின்றார்கள். குருக்கள் அவனைத் தேடாத இடமில்லை. ஆனாலும் மகனைப் பற்றிய செய்திகள் எதுவுமில்லாமலேயே காலம் கடந்து போகின்றது. ஒரு நாள் குருக்கள் வழக்கம் போல பூசைக்கான ஆயத்த மணியை அடித்துவிட்டு திரும்பும்போது அவரது மகன் அங்கு நிற்பதைக் காண்கின்றார். அவரது கண்களில் நீர் ததும்புகின்றது. ஓடிச்சென்று மகனைக் கட்டிக் கொள்கின்றார். சிறுவர்களுக்கு கடலை, மோதகம் என்பவற்றை அள்ளி வழங்கிவிட்டு மகனை வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார். மாலை வேளையில் கோயிலின் தர்மகர்த்தா குருக்களின் வீட்டுக்கு வருகின்றார். அவர் குருக்களிடம் மகனைப் பற்றி விசாரித்துவிட்டு அடுத்ததாக என்ன செய்ய உத்தேசம் என்கின்றார். அதற்கு குருக்கள் ஷஆசாரசுத்தி| செய்துவிட்டு கோயில் பணிகளில் தனக்கு உதவியாக மகனை வைத்துக்கொள்வதாகக் கூறுகின்றார். அதைக்கேட்டு சினமடைந்த தர்மகர்த்தா ஷபயிற்சிக்கு| அழைத்துப்போன மகனுக்கு சைவ உணவுகளைத்தான் சாப்பிடக் கொடுத்திருப்பார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? எனவே அவனை கோயிலுக்குள் விட முடியாது என்கின்றார்.

தடுப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காரணத்துக்காக தன்னை ஏற்றுக் கொள்கின்றார்கள் இல்லை என்பதை அறிந்த அவரது மகன், பயணப் பொதியுடன் தாய் தந்தையை சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து விடைபெறுகின்றான். அதைத் தடுக்க திராணியற்று இருவரும் கண்கலங்கி நிற்கின்றனர். கொஞ்ச காலத்துக்குப் பிறகு மகன் பற்றிய செய்தி ஒன்று கிடைக்கின்றது. குருக்களின் மனைவி அதை அறிந்து அழுகின்றார். அதை கண்ணுற்ற குருக்கள் அவளை இப்படி சமாதானம் செய்கின்றார்.

'அவன் கலியாணம் கட்டியிருக்கிறது நமக்கு உடுப்பு வெளுத்துத் தாற கட்டாடியின்ற மகள் என்டதும் எனக்குத் தெரியும். அந்தப் பிள்ளைக்கும் எங்கட மகனுக்குரிய பிரச்சின போலத்தானாம். அந்தப் பிள்ளை கம்பசில படித்துக்கொண்டிருந்தவளாம். அனாவசியமான சிலரது செயற்பாடுகளால அந்தப் பிள்ளையும் தடுப்பில இருந்துவிட்டு வந்திருக்கிறாள். தடுப்பில இருந்த ஒரு காரணத்துக்காக அவளின்ர சமூகத்துல அவளை ஒருத்தரும் கலியாணம் கட்ட மறுக்கினம். அதால அவளும் எங்கட மகளும் கலந்து பேசி ஒரு முடிவெடுத்திரிக்கினம் பொலக்கிடக்கு. இது என்னைப் பொறுத்தளவில நல்லதொரு முடிவு. இதை நான் வரவேற்கிறேன். இனி அவர்களிலிருந்து ஒரு பதிய தலைமுறை உருவாகட்டும். அப்பதான் தீட்டுக்களும் மறையும். இந்த சமூகமும் திருந்தும்...'

இவ்வாறு சமூக அக்கறை கொண்ட யதார்த்த விடயங்களை கதைகளாக்கியிருக்கின்றார் கதாசிரியர் அலெக்ஸ் பரந்தாமன் அவர்கள். கன்னித் தொகுப்பு என்று கூற முடியாத அளவுக்கு கதைகள் மிகவும் தத்ரூபமாகவும் காத்திரமாகவும் அமைந்திருக்கின்றன. சமூக அக்கறையுடன் கூடிய அவரது இலக்கிய முயற்சி தொடர்ச்சியாக செயற்படுவதற்காக வாழ்த்துகின்றேன்!!!

நூல் - அழுகைகள் நிரந்தரமில்லை
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - அலெக்ஸ் பரந்தாமன்
வெளியீடு - ஜீவநதி பதிப்பகம்
விலை - 250 ரூபாய்
...மேலும்

Jan 24, 2015

கருப்பையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு ஆலோசனை


மாதவிலக்காவது, அதைத் தொடர்ந்து திருமணமாகி குழந்தை பெறுவது என இந்த இரண்டுமே கருப்பையின் மாபெரும் வேலைகள் என்பது பெரும்பாலான பெண் களின் நினைப்பு. அதனால்தான் முன்பெல்லாம் கர்ப்பப் பையில் சின்ன பிரச்னை என்றால்கூட சர்வசாதாரணமாக அறுவை சிகிச்சையில் அதை வெட்டி எறிந்து விட்டு வேறு வேலையைப் பார்க்கிற மனோபாவம் அவர்களிடம் இருந்தது.

விஞ்ஞானமும், மருத்துவமும் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில் கருப்பையை அகற்றாமலேயே பிரச்சினைகளை மட்டும் குணப்படுத்த முடியும். கருப்பையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கான அதை நீக்காமல் செய்யக்கூடிய தீர்வுகள் பற்றியும், தவிர்க்க முடியாமல் கருப்பை அறுவை சிகிச்சை  செய்கிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். கருப்பையில் உண்டாகிற அனேகப் பிரச்சினைகளை இன்று கர்ப்பப்பையை அகற்றாமலேயே சரிசெய்ய முடியும்.

உதாரணத்துக்கு ஃபைப்ராயிடு கட்டி என்றால் அதை மட்டும் நீக்கும் சிகிச்சைகள் வந்து விட்டன. அதீத ரத்தப் போக்கு தொடர்பான  பிரச்சினைகளுக்கும் பிரத்யேக ஊசிகள், மெரீனா என்கிற கருத்தடைச் சாதனம் போன்றவை உதவும்.  ஹார்மோன் கோளாறு காரணமாக உண்டாகிற அளவுக்கதிக ரத்தப் போக்கை சரி செய்ய, கருப் பையின் உள்ளே உள்ள சவ்வுப் பகுதியை பொசுக்கி, அதை மெலிதாக்கும் எண்டோமெட்ரியல் அப்லேஷன் சிகிச்சை பலனளிக்கும். கர்ப்பப் பையில் கட்டியோ, சதையோ இருந்தாலும் ஹிஸ்ட்ரோஸ்கோப் மூலம் சரி செய்து விட முடியும்.

இவற்றையெல்லாம் மீறி, கருப்பையில் வேறு ஏதேனும் பெரிய பிரச்சினைகள் இருந்து, கருப்பையை நீக்குவது மட்டுமே தீர்வு என்கிற நிலையில்,  லேப்ராஸ்கோப்பி முறையில் அதை நீக்குவது தான் பாதுகாப்பானது. ஓப்பன் சர்ஜரி என்கிற வயிற்றைக் கிழித்துச் செய்கிற அறுவை சிகிச்சை  செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையிலும் இரண்டு வகைகள் உள்ளன.

ஒன்று  டிஎல்ஹெச் எனப்படுகிற டோட்டல் லேப்ராஸ் கோப்பிக் ஹிஸ்ட்டரெக்டமி.  இதில் முழுக்க முழுக்க லேப்ராஸ் கோப்பிக் முறையில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப் படும். இன்னொன்று எல்ஏவிஹெச் எனப்படுகிற லேப்ராஸ் கோப்பிக் அசிஸ்ட் டெட் வெஜைனல் ஹிஸ்ட்ட ரெக்டமி. இதில் பாதி அறுவை சிகிச்சை லேப்ராஸ்கோப்பி முறை யிலும், மீதி பிறப்புறுப்பின் வழியேவும் செய்யப்படும்.

முதல் வகையில் இடுப்பெலும்புத் தசைகள் பாதிக்கப்படாது. பின்னாளில் ஏற்படுகிற சிறுநீர் கசிவு, சிறுநீரை அடக்க முடியாத நிலை, அடி இறக்கம் போன்றவை இதில் இருக் காது. இரண்டாவது வகையில் இந்தப் பிரச்சினைகளைத் தவிர்ப்பது சிரமம்.கருப்பையை அகற்றச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்தினால், அதற்கு முன் உங்கள் சினைப்பையை ஸ்கேன் செய்து பார்த்து, அவற்றின் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

...மேலும்

Jan 23, 2015

எது தமிழ்த் திருமணம்? மூடச் சடங்கில் முக்கியச் சடங்கு - சு.அறிவுக்கரசு


திருமணச் சடங்குகளிலேயே பெரும் மூடச் சடங்கு மணமகளுக்குத் தாலி கட்டுதல் ஆகும். ஒருத்தி ஒருவனுக்கு உரியவளாகி விட்டாள் என்பதை எடுத்துக்காட்டும் சடங்காம். தாலி எனும் சொல் திருமணச் சின்னத்தைக் குறிக்கும் சொல். ஆக 11ஆம் நூற்றாண்டில்தான் பயன்படுத்தப்பட்டது.

கடவுள் எனப்படும் முருகன் செய்துகொண்ட ஒரு திருமணத்தில் தாலி கட்டியதாகக் குறிப்பு உள்ளது. அவனே செய்துகொண்ட இன்னொரு திருமணத்தில் (வள்ளி திருமணம்) இத்தகைய குறிப்பில்லை.

இக்கடவுளின் தந்தைக் கடவுள் செய்து கொண்ட (சிவன்) திருமணத்திலும்கூட இக்குறிப்பில்லை. தெய்வயானை என்பாளை முருகன் திருமணம் செய்துகொண்ட நிகழ்ச்சியை,

மங்கல நாணை மணிக்களம் ஆர்த்து  நங்கை முடிக்கோர் நறுந்தொடை சூழ்ந்தான் என்று கந்த புராணம் கூறுகிறது. மங்கல நாண் அணிவித்தானாம். அத்துடன் மலரையும் அவளின் கூந்தலில் சூட்டினானாம்.

திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு மலர் சூடுவதுதான், அவள் திருமணம் ஆனவள் என்பதற்கான அடையாளம் என்பதாக அகநானூற்றுக் காலத்திலிருந்தே வரும் பழக்கம். ஒன்றுக்கு இரண்டாக அடையாளம் இருக்கட்டுமே என்றானோ, கடவுள்? ஒன்றுக்கு இரண்டாக மனைவியைக் கொண்டவன் ஆயிற்றே!

தொங்குதல் எனும் பொருள் கொண்டது நாலுதல் எனும் சொல். நாலுதல் தாலுதலாகி அதுவும் சுருங்கி தாலி என்றாகியது என விளக்கம் தருகின்றார்கள் தமிழ் படித்தோர். தால், தாலம் என்பன பனைமரத்தின் பெயர்கள்.

பனங்குருத்தோலையால் செய்யப்பட்ட நகைகள் சிறுவர் சிறுமியர்க்கு அணிவிப்பது வழக்கம். தாலிக் கொழுந்தைத் தடங் கழுத்தில் பூண்டு என்று கண்ணனை வருணிக்கிறார் பெரியாழ்வார்.

திருமால் எனும் கடவுளின் ஆயுதங்கள் எனப்படும் சங்கு, சக்கரம், வில், வாள், கதை ஆகிய அய்ந்தையும் சிறு வடிவில் செய்து ஆண் குழந்தைக்கு அய்ந்து மாதம் வயதாகும்போது அணிவிக்கும் பழக்கம் இருந்தது. இதனை அய்ம்படைத் தாலி என்றனர்.

அய்ம்படைச் சதங்கை சாத்தி என்று பெரிய புராணத்தில் குறிப்பிடப்படுகிறது. தாலி அய்ம்படைத் தழுவு மார்பிடை என்று கம்பராமாயணம் பாடுகிறது. அய்ம்படை மார்பிற் காணேன் என்ற பரஞ்சோதி எழுதிய திருவிளையாடல் புராணம் கூறும்.

புறநானூற்றில்கூட (பாடல் 77) தார்பூண்டு தாலி களைந்தன்றுமிலனே பால்விட்டு அயினியும் இன்று அயின்றனனே எனக் கூறி, தலையானங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இளம் பருவத்திலேயே பகைவரை வென்றதைப் பாடுகிறது.

புலியுடன் சண்டை செய்து கொன்று அதன் பல்லைக் கொண்டு அணிசெய்து அதனைப் புலிப்பல் தாலி என்றனர். புறநானூறு (374). இதனை புலிப்பல் தாலிப் புலம்பு மணிச் சிறார் எனப் பாடுகிறது. இதனையே சிறுமியரும் அணிந்ததை அகநானூறு (பாடல் 7) இவ்வாறு பாடுகிறது.

புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல் என்று!

மறங்கொள் வயப்புலி வாய்பிளந்துபெற்ற
மாலை வெண் பற்றாலி _ என்று இதனைச் சிலப்பதிகாரமும் பாடுகிறது.
இதுதவிர, பின் தாலி எனவும் ஒன்றுண்டு என சிலப்பதிகாரம் கூறுகிறது.

முதுகை மறைக்கும் அளவுக்கு முத்தாரத்தில் நவ ரத்தினங்கள் கோத்துச் செய்யப்படும் அணி பின்தாலி எனப்பட்டது. தாலி என்றால் தொங்குவது எனும் பொருளில்தான் இந்தப் பெயர். இவ்வாறே முன்பக்கம் தொங்கும் அணி சின்மணித்தாலி எனப்பட்டது.

ஆமைத்தாலி என்பதை அக்குவடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்தசயனன் தளர்நடை நடலானே எனப் பெரியாழ்வார் பாசுரத்தில் குறிப்பிடப்-படுகிறது. இதுவும் சிறுவர்கள் கழுத்தில் அணியும் நகை என்கிறார்கள்.

இவற்றால், தாலி என்பது மணமகன் மணமகளை மனைவியாக ஏற்றுக் கொண்டதன் அடையாளச் சின்னமாக அறியப்பட்டது என்பது சரியில்லை. தொங்கும் அணிகளைக் குறிக்கும் சொல்லாகத்தான் பயன்படுத்தப்-பட்டது.

சின்னம் இழையே

அகநானூற்றில் வரும் (பாடல் 86) மணமகளுக்குக் குளிப்பாட்டிய முதிய மகளிர்பற்றிப் பாடும்போது வாலிழை மகளிர் நால்வர்கூடி என வருகிறது. பாடல் 136இல் மழைபட்டன்ன மணன்மலிபந்தக்/இழையணி சிறப்பின் பெயர் வியர்ப்பாற்றி என வரும் வரிகளால் இழை அணிவிக்கப்பட்டது என உணரலாம்.

இந்த இழை வெறும் நூல் இழை மட்டுமே. இவர்கள் கூறும் தாலி கோக்கப்படாத வெறும் இழைதான் அணிவிக்கப்பட்டதாகக் கருதலாம்.

ஈகையரிய இழையணி மகளிரொடு
சாயின்றென்ப ஆய்கோயில்

என வரும் புறநானூற்றுப் பாடலில் (127) எல்லாப் பொருளையும் வாரி வழங்கிய ஆய் மன்னனின் மகளிர் ஓர் இழையை மட்டுமே அணிந்திருந்த காரணத்தால் ஒளி குறைந்து காணப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. தகதகக்கும் தங்கநகை இன்மையால் ஒளி குறையத்தானே செய்யும்?

கரிகால் பெருவளத்தான் இறந்தபோது அவனின் உரிமை மகளிர் அணிமணிகளைக் களைந்தனர் என்றாலும் இழையையும் களைந்துவிட்டனர் என்று புறநானூறு பாடல் 224இல் புலவர் கருங்குழலாதனார் பாடியுள்ளார். கணவனை இழந்தோர் கழற்ற வேண்டியது இழை எனப் பொருள்படுகிறது. தாலி அல்ல என்பதை உணரலாம்.

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் வந்து திருமணம் செய்துகொண்ட காட்சியைக் காட்டும் சிலப்பதிகாரம்கூட தாலி கட்டிய காட்சியைக் காட்டவில்லை. கோவலன் கொலை செய்யப்பட்டதை அறிந்த கண்ணகி தாலியை அகற்றினாள் எனப் பாடவும் இல்லை. வளையல்களை உடைத்தாள் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தாலி மங்கல மகளிர் இழக்கக் கூடாத ஒன்று எனும் பொருளில் கந்தபுராணம் மட்டுமே முதலில் கூறியுள்ளது. திருப்பாற்கடலை (உலக வரைபடத்தில் அப்படியொரு கடல் இருக்காது _ புராணப் புளுகில் இதுவும் ஒன்று) தேவரும் அசுரரும் கடைந்தபோது எழுந்த ஆலகால விஷத்தைச் சிவன் உண்டதால் பிரம்மன், திருமால் முதலிய தேவர்களின் உயிரைக் காப்பாற்றினான் என்றும் அதன்மூலம் தேவர்களின் மனைவியரின் தாலிகளைக் காப்பாற்றினான் என்றும் பாடல் உள்ளது.

செற்றால முயிரனைத்தும் உண்டிடவே
நிமிர்ந்தெழலும் சிந்தை மேற்கொள்
பற்றாலங்கது நுகர்ந்து நான்முகனே
முதலோர் தம்பாவை மார்கள்
பொற்றாலி தனையளித்தோன் புகழ்போற்றி

என்பது பாடல். இதனால்தான் இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லை என்கிற சொல்லடை உண்டானதுவோ?

ராம காதையைப் பாடிய கம்பன் இறந்தபோது பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருப்ப நாமடந்தை நூலிழந்த நாள் என்று ஒட்டக்கூத்தர் எனும் புலவர் பாடியதாகப் பாடல் ஒன்று உண்டு. கொண்டவன் இறந்தால் மகளிர் இழக்க வேண்டியது இழை என்றுதான் இப்பாடலும் குறிக்கிறது.

மாறாக, அபிதான சிந்தாமணி கூறுகிறது. திருமணத்தில் கொண்டோன் தெய்வம் வாழ்த்தித் தன் தேச சம்ரட்சணார்த்தம் தன் சந்ததியின் விருத்தியின் பொருட்டும் கொண்ட மனைவியின் கழுத்தில் தேவரிஷிகள் புரோகிதர் முதலியோர் சாட்சியாகக் கட்டும் அடையாளமாம்.

இதற்குத் தாலி என்பது முற்கால, தற்கால வழக்கம். இந்தத் தாலியைச் செல்வமுள்ளோர் பொன் முதலியவற்றாலும் மற்றவற்றாலும் செய்து அணிவர். செல்வமில்லா ஏழைகள் மரத்தாலும் ஓலையாலும் செய்து அணிவர்.

இதனைத் தாலபத்திரம் என்னும் ஓலையால் பலர் அணிதல் பற்றியே இதற்குத் தாலி என்று காரணப் பெயர் உண்டாயிற்று. மரத்தாலியும் உண்டாயிற்று போலும்.

இது வடநாட்டில் தற்காலம் சில கீழ் ஜாதியாரிடம் நடைபெறுகிறது. இதன் உரு, தேசங்கள் தோறும் ஜாதிகள்தோறும் வேறுபடுகிறது. இத்தாலி, பலவற்றால் செய்யப்படும் என்பதை ஸ்வர்ணேன ரஜதேனை வாதாம் ரேணதா ருஜைரபிஅதலா தால பத்ரேவா பவுஞ்ச சதுஸ்ரகம் எனும் ஸ்ரீஉத்தர காரண வாக்கியத்தால் அறிக. இதனைப் பதினாறு இழைகள் கொண்ட சூத்திரத்தில் கோக்க வேண்டும் என்பது. (பக்கம் 1234)

ஊருக்கு ஊர் வேறுபட்டும் ஜாதிக்கு ஜாதி மாறுபட்டும் காட்சியளிக்கும் தாலி பலவகைப்படும். 1. பெருந்தாலி, 2. சிறுதாலி, 3. தொங்குத்தாலி, 4. பொட்டுத்தாலி, 5. சங்குத்தாலி, 6. ரசத்தாலி, 7. தொப்புத்தாலி, 8. உருண்டைத்தாலி, 9. கருந்தாலி, 10. ஜாகாத்தாலி, 11. இருதாலி, 12. தாலிகட்டி எனப் பட்டியல் நீளும். இதன்னியில், காதுகளில் அணியும் தோடுகூட மங்கல அணியாகக் கருதப்பட்ட நிலையும் இருந்தது. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் இயற்றிய மதுரைக் கலம்பகத்தில்,

நம்பா நினக்குஓலம் முறையோ எனக்கால
நஞ்சுண்டு பித்துண்டு நாம்தேவர் என்பார்
தம்பாவையர்க்கு அன்று காதோலை பாலித்த
தயவாளர்... என்று பாடிப் போகிறார்.

எனவே மலர் அணிந்தும், இழை அணிந்தும், வளை அணிந்தும், தோடு அணிந்தும் தாம் மணமானவர் என்பதை மகளிர் உணர்த்தி இறுதியில் தாலியை அணிந்து அதனை இசகுபிசகான இடத்தில் தொங்கவிட்டு அதைத் துருவிப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற நிலைக்குக் கொண்டு வந்துள்ளதைக் கவனிக்க வேண்டும்.

இந்த நிலை தமிழ் மகளிர்க்கு மட்டுமே! தமிழ்நாட்டு மகளிர்க்கு மட்டுமே! வடநாட்டுப் பெண்கள் தாலி அணி-வதில்லை.

அவர்கட்குத் தாலி கட்டுவ-தில்லை. நெற்றிக் குங்குமம் மட்டுமே அடையாளம். பார்த்தாலே தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

திருமணம் செய்துகொள்ளும் வரை அவர்கள் பொட்டு வைப்பதில்லை. வடநாட்டில் இல்லாதது தமிழ்நாட்டில் மட்டும் எப்படி வந்தது? தமிழர் திருமணத்தில் மட்டும் எப்படிப் புகுந்தது?

நன்றி - உண்மை
...மேலும்

Jan 22, 2015

கொந்தளிக்கும் திருநங்கைகள்! இயக்குநர் ஷங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

 ‘ஐ’ திரைப்படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன என்று கொதித்தெழுந்திருக்கும் திருநங்கைகள், சமூக வலைதளங்கள் மூலம் தங்களின் பலமான எதிர்ப்பைக் காட்டி வந்தனர். இந்நிலையில், இன்று (19ஆம் தேதி) படத்தின் இயக்குநர் ஷங்கர் வீட்டுக்கு முன்பாக மறியல் நடத்தத் திட்டமிட்டனர். ஆனால், அந்தப் பக்கமே யாரும் நுழைய முடியாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படவே... தணிக்கை குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய திருநங்கைகள், தணிக்கைக் குழுத் தலைவர் பக்ரிசாமியிடம் தங்களின் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்ட திருநங்கைகள் சிலரிடம் பேசியதிலிருந்து...

லிவிங் ஸ்மைல் வித்யா 
காஞ்சனா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மாதிரியான நிறைய படங்கள் திருநங்கைகளை பெருமைப்படுத்துற அதேவேளையில, ஐ படம் மூலமா ஷங்கர் கேவலப்படுத்தியிருக்கிறது வேதனையா இருக்கு. வக்கிர சிந்தனையை விதைச்சிருக்கிற ஷங்கரை வன்மையா கண்டிக்கிறோம். இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்டைலிஷ் என திருநங்கையை காட்டும்போது, நடிகர் விக்ரம் முகம் சுளிக்கிறது... 'ஊரோரம் புளியமரம் 'பாடலை பாடுறதெல்லாம் அறுவருப்போட உச்சம்.

பருத்தி வீரன் படம் வந்த புதுசுல என்னைப் பாத்து ஒரு சின்னப்பையன், 'ஊரோரம் புளியமரம்' பாடலை பாடிட்டு, தண்ணி பாக்கெட்டை தூங்கி எரிஞ்சப்ப என் மனசு துடியா துடிச்சது. அந்த பையனுக்கு இந்த மாதிரி திருநங்கைகளை இழிவுப்படுத்தச் சொல்லி அவனோட கல்வித் திட்டம் சொல்லிக் கொடுத்துச்சா... பெத்தவங்க சொல்லிக் கொடுத்தாங்களா... இல்லையே. திரைப்பட காட்சிதானே காரணம். இன்னிக்கு திருநங்கைகள் எவ்வளவோ துறைகள்ல சாதிச்சிட்டு வர்றாங்க. பெரும்பாலான திருநங்கைகள், பெத்தவங்களால வீட்டைவிட்டு துரத்தப்பட்ட நிலையில, ரோடு ரோடா அநாதையா சுத்தி, எப்படியாவது உழைச்சு முன்னுக்கு வரணும்னு நினைக்கிறாங்க... வந்துட்டும் இருக்கிறாங்க. இந்த நிலையில, திரைப்படங்கள் மூலமா மேலும் மேலும் அசிங்கப்படுத்துறீங்களே இது நியாயமா?
இந்தக் கேள்வி ஷங்கருக்கு மட்டுமில்ல... இதே எண்ணத்தோட திரைப்படத்துறையில இருக்கிற எல்லாருக்குமேதான். இனி எதிர்காலத்துல யாருமே இந்த மாதிரியான காட்சிகளை திரைப்படத்துல வைக்ககூடாதுனுதான் இந்தப் போராட்டம்.

நான் இந்த படத்தை தியேட்டர்ல பாத்தப்ப, ஆடியன்ஸ் எல்லாரும் கைகொட்டி சிரிச்சப்ப, என்னோட மனசு எவ்ளோ வலிச்சிருக்கும்னு ஷங்கருக்கு தெரியுமா? தியேட்டரைவிட்டு வெளியில வரும்போது யாராவது கை கொட்டி சிரிச்சுருவாங்களோனு எவ்வளவு பயந்தேன்னு அவருக்கு தெரியுமா? என்னைப் போல பெத்தவங்களே ஏத்துக்கிட்ட திருநங்கைகள் நிறைய பேர் இருக்காங்க. அப்படியிருக்க அவங்களோட பெத்தவங்க இந்த படத்தைப் பாத்தா அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு தெரியுமா?

'ஐ' படத்துல நாய் இருக்குறதால, 'இந்தப் படத்தில் எந்த மிருகமும் துன்புறுத்தப்படவில்லை'னு டைட்டில் கார்டு போடுறாங்க. எங்கள துன்புறுத்துறது மட்டும் சரியா ஷங்கர் சார்? 'பேராண்மை' படத்துல ஒரு சாதிப் பேரை குறிக்குற இடத்துல பீப் சத்தம் கொடுத்து, அதை தடை பண்ணின தணிக்கைத்துறை, ஒரு சாதியின் மேல் காட்டுகிற அக்கறையை, ஏன் எங்களைப் போன்ற மனிதர்கள் மேல காட்டல? 

நிறைவா சொல்லிக்கிறது... ஷங்கர்  எங்ககிட்ட பொதுமன்னிப்பு கேட்கணும். எதிர்காலத்துல இந்த மாதிரி நிகழாம இருக்க, தணிக்கை துறை மீது வழக்கு தொடர முடிவெடுத்திருக்கோம்.

கிரேஸ் பானு
அரக்கோணத்துல இன்ஜினீயரிங் காலேஜுல படிக்கிறேன். ஐ படத்துல திருநங்கைகளை காமப் பிசாசுகளா காட்டியிருக்குறது மனசுக்கு வேதனையை கொடுக்குது. நாங்களும் மனிதர்கள்தானே எங்களுக்கு காதல் வரவே கூடாதா? இந்த படத்தைப் பாத்துட்டு வெளிய வந்த பிறகு, 'ஏய் காமப்பிசாசு'னு யாராவது காரித்துப்புறதுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கே. எங்களுக்கு எந்த வகையில பாதுகாப்பு கொடுக்கப் போறீங்க. மக்கள் பலரும் கொஞ்சம் கொஞ்சமா எங்களை ஏத்துக்கிட்டு வர்ற இந்தச் சூழல்ல, ஒரு சினிமா எங்களை திரும்பவும் துவைச்சு காயப்போடறத எப்படி ஏத்துக்க முடியும்?

எங்களை தூக்கி வெச்சு கொண்டாடுங்கனு கேட்கல. எங்கள கேவலப்படுத்தாதீங்கனுதான் கேக்குறோம். கொஞ்சம் கொஞ்சமா நாங்க முன்னுக்கு வந்துட்டு இருக்கோம். இந்த முன்னேற்றத்தை தொடரவிடுங்க. லஞ்சம், ஊழல், பெண் கொடுமைகளுக்கு எதிர்ப்புனு சினிமா எடுக்கிறதுல மட்டும் முற்போக்கு காட்டுற நீங்க... எங்க விஷயத்துல மட்டும் பிற்போக்காவே இருக்கீங்களே. உங்களோட கீழ்த்தரமான இந்த சிந்தனைகளால மறுபடியும் எங்களை பின்னுக்குத் தள்ளிவிடாதீங்க... ப்ளீஸ்!
-பொன்.விமலா
...மேலும்

Jan 21, 2015

தஸ்லீமா நஸ்ரின் எனும் கவி - யமுனா ராஜேந்திரன்


தஸ்லீமா நஸ்ரினின் எழுத்துக்கள் அதிகம் அறியப்பட்டதும், அவர் பற்றிய மதிப்பீடுகள் இந்திய அளவிலும் தமிழகச் சூழலிலும் அறிமுகமானதும் அவரது நாவல் ‘லஜ்ஜா’ (1993) மற்றும் அவரது வங்கமொழி சயசரிதையின் பகுதியான ‘பேசு’ ( 2003) அல்லது ‘பிரிவினை’ ஆகிய நூல்கள் ஏற்படுத்திய அரசியல் விவாதங்களின் அடிப்படையிலானது என்பதை நாம் ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது. ஆங்கிலத்தில் வெளியான நாவலான தஸ்லீமாவின் லஜ்ஜா, அவரது சுயசரிதத்தின் முதல் பாகமான ‘எனது பெண்பருவம்’, தேர்ந்தெடுகப்பட்ட அவரது கவிதைகளின் தொகுதியான ‘விளையாட்டு : மாற்றுச்சுற்று’ போன்ற மூன்று நூல்கள் தவிரவும் அவரது முழு எழுத்துக்களும் ஆங்கிலத்திலோ பிற மொழிகளிலோ மொழிபெயர்க்கப்பட்டு அதிகமாக அறியப்படவில்லை என்பதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.

ஆனந்த் புரஸ்க்கார் விருது பெற்ற அவரது எழுத்துக்கள் கூட நமக்கு ஆங்கிலம் வழியிலோ பிற வகையிலோ கிடைப்பதில்லை. தஸ்லீமாவின் எழுத்துக்கள் குறித்த இந்திய தமிழக இலக்கியவாதிகளின் மதிப்பீடுகள் அனைத்தும் அவரது லஜ்ஜா நாவலின் அடிப்படையில் அமைந்ததாகும். தஸ்லீமா குறித்த தென் ஆசிய அரசியல்வாதிகளின் மதிப்பீடுகள் ஸரியா சமகாலத்துக்குப் பொறுத்தமற்றது எனும் அவரது கடுமையான விமர்சனத்தின் பாற்பட்டு அமைவதாகும். லஜ்ஜா நாவல் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை வங்கத்தின் புகழ்வாய்ந்த படைப்பாளிகளான புத்ததேவ் தாஸ்குப்தா, மிருணாள் சென், அபர்னா சென், நபனிதா தேவ்சென் போன்றவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். லஜ்ஜா நாவல் பங்களாதேஷிலும் அதைத் தொடர்ந்து இலங்கையிலும் தடை செய்யப்பட்டது. இலங்கையின் பிரபல பெண்ணிலைவாதி குமாரி ஜெயவர்த்தனா இந்நாவல் மீதான தடை நீக்கப்பட வேண்டும் எனவும் குரல் கொடுத்திருக்கிறார்.

லஜ்ஜா நாவலையடுத்த தஸ்லீமா நஸ்ரின் மீதான இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொலை மிரட்டலைக் கண்டித்து உலகளவில் தஸ்லீமாவுக்கு ஆதரவாக ஸல்மான் ருஸ்டி, முல்க்ராஜ் ஆனந்த், குந்தர் கிராஸ், மரியா வர்கஸ் லோஸா, சுமித் சக்கவவர்த்தி ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள். தஸ்லீமா மீதான கொலை மிரட்டலைக் கண்டித்தாலும் கூட ஆஸ்கர் அலி என்ஜினியர் போன்ற இடதுசாரி இஸ்லாமியக் கோட்பாட்டாளர்கள் படைப்பாளி எனும் அளவில் தஸ்லீமாவின் விமர்சனப் பார்வையை நிராகரிக்கவே செய்கிறார்கள்.

தஸ்லீமாவின் படைப்பாளுமையில் முக்கிய இடம் பெறுகிற அவரது கவிதைகள் மதம் குறித்த பரபரப்பான விவாதங்களினிடையில் இலக்கிய வட்டாரங்களில் அதிகம் கவனம் பெறவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. தஸ்லீமாவின் உரைநடை நுட்பமானது அல்ல எனும் வங்க விமர்சகர்கள் கவிதைகளில் இவர் நுட்பத்துடன் தலை நிமிர்ந்து நிற்கிறார் என்கிறார்கள். வங்கமொழி விமர்சகர்களிடம் மட்டுமல்ல உலக அளவில் பெண்ணிலைவாதிகள் மத்தியில் அவர் அறியப்பட்டிருப்பதும் அவரது கவிதைகளின் மூலம் தான்.

அவரது கவிதைகள் முற்றிலும் அகவயமான கவிதைகள். ஓவியத்தில் மெக்சிக்கோ பெண் ஓவியர் பிரைடோ கலோவிடம் வெளிப்படும் தனித்த பெண் அனுபவம் சார்ந்த படைப்புகள் போலவே முற்றிலும் பெண் உடல் மற்றும் மனத்தின் தனிமை சார்ந்தவை தஸலீமாவின் கவிதைகள்.

கருத்தியல் ரீதியில் விஞ்ஞான தர்க்கத்திலும் மார்க்சியத்திலும் நம்பிக்கையுள்ளவராகத் தன்னைப் பிரகடனப்படுத்தும்நஸ்ரின் தஸ்லீமாவின் அனைத்து மதங்களின் பாலான வெறுப்நஸ்ரின்பு என்பது பெண் உடலுக்கு எதிரான மதங்களின்நஸ்ரின் அடிப்படை வெறுப்பு, அறுவறுப்பு, விலக்கம் போன்றவற்றின் மீதான கடுமையான கோபத்தின் பாற்பட்டதாகும்.

இஸ்லாமின் மீதான அவரது வெறுப்பு என்பது உடனடியில் அவர் வாழ நேர்ந்த பங்களாதேஷ் சமூகச் சூழலின் மேலான வெறுப்பாகும். இந்த வெறுப்பு இவருக்கு சம அளவில் எல்லா மதங்களின் மீதும், மதவாதிகளின் மீதும், மதப் புத்தகங்களின் மீதும் இருக்கிறது. இந்த நிலைபாட்டை அவர் பல சமயங்களில் தெளிவுபடுத்தியிருக்கிறார்

தஸ்லீமா நஸ்ரின் ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் மனித உரிமைகளுக்கான ஆய்வு மையத்தில் இஸ்லாமிய நாடுகளில் மதச்சார்பின்மை குறித்து ஆய்வு செய்திருக்கிறார். மையத்தின் இயக்குனராக பிரபல எழுத்தாளரும் இன யுத்தங்கள்நஸ்ரின் குறித்தும் மனித உரிமைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்திருப்பவருமான மைக்கேல் இக்னாடிப் செயல்பட்டு வருகிறார்.

பெண்உரிமை இயக்கங்கள்,மதச்சார்பற்ற உரிமை இயக்கங்கள் போனற அமைப்புகள் இணைந்து அடிப்படைவாத இஸ்லாமிய நாடுகளில் மாற்றம் கொணரமுடியும் எனக் கருதுகிறார் தஸ்லீமா நஸ்ரின்.

1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வங்காள தேசத்திலுள்ள மைமன்சிங் நகரத்தில் தஸ்லீமா பிறந்தார்.  குழந்தைப் பேறு நிபுணரான இவர் வங்காள சமூகத்தை அதிரச்சியுறச் செய்யும் முகமாக மூன்று முறை திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர். தென் ஆசியப் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பத்தி எழுத்துக்களில் எழுதி வந்த இவர் 1992 ஆம் ஆண்டு நபசித்ரா எனும் கட்டுரை தொகுதிக்காக மேற்கு வங்கத்தின் ஆனந்த் புரஸ்கார் இலக்கிய விருது பெற்றார்.

1993 ஆம் ஆண்டு வெளியான அவரது லஜ்ஜா நாவல் பிரசுரமானதைத் தொடர்ந்து அவருடைய எழுத்துலக வாழ்வு விவாதத்துக்குரியதாகவே இன்றளவும் இருந்து வருகிறது. இந்தியாவில் பாப்ரி மஜீத் இடிப்பை அடுத்து முஸ்லீம்கள் இந்துத்துவ அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதைப் போல அதனது எதிர்முனையில் இந்துக்கள் வங்காளதேச இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகியதை தஸ்லீமா தனது லஜ்ஜா நாவலில் ஆவணப்படுத்தியிருந்தார்.

பங்களாதேஷில் லஜ்ஜா நாவல் தடை செய்யப்பட்டது. 1994ஆம் ஆண்டு கல்கத்தா நியூ ஸ்டேட்ஸ்மன் பத்திரிக்கைக்கு அவர் அளித்த நேர்முகத்தில், இஸ்லாமிய மணமுறையான ஸரியா சமகாலத்துக்குப் பொறுத்தமற்றது என அவர் வெளியிட்ட விமர்சனம் அடிப்படைவாதிகளின் தண்டனை தலைக்கு விலை என விளைவுகளைத் தோற்றுவித்தது. அதனைத் தொடர்ந்து தஸ்லீமா நஸ்ரின் பங்களாதேஷில் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் அரசியல் அடைக்கலம் கோரியபோது மறுத்துரைக்கப்பட்டார்.

தனக்கு உயிராபத்து அதிகரித்து வந்ததையடுத்து தலைமறைவாயிருந்த தஸ்லீமா பங்களாதேசிலிருந்து வெளியேறி பேனா அமைப்பினர் அனுசரனையுடன் ஸ்வீடனில் அரசியல் அடைக்கலம் பெற்றார். நோர்வேயில் எழுத்துரிமை பற்றிய மாநாட்டில் ஸல்மான் ஸ்டியுடன் பங்கேற்றதின் மூலம் உலக அளவில் ஸல்மான் ருஸ்டியை அடுத்து பிரபலமான சரச்சைக்குரிய தென் ஆசிய எழுத்தாளராக ஆனார்.

1998 ஆம் ஆண்டு மறுபடியும் அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டது. 2,500 அமெரிக்க டாலர்கள் அடிப்படைவாதிகளால் அவரது தலைக்குப் பரிசாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு அவருக்கு ஐரோப்பாவின் உயரிய விருதான சகரோவ் மனித உரிமை விருது அளிக்கப்ப்ட்டது. அதே ஆண்டு ஐரோப்பிய நாடுகளின் வற்புறுத்தலையடுத்து பங்களா தேஷ் அனுமதித்ததின் பின் மரணமுற்றுக் கொண்டிருக்கும் அன்னையின் அந்திம காலத்தில் அவள் அருகிலிருக்க பங்களாதேஷ் திரும்பினார் தஸ்லீமா நஸ்ரின்.

1999 ஆம் அண்டு அவரது அன்னை மரணமுற்றார். சமவேளையில் தஸ்லீமா நஸ்ரினை ஆதரித்து எழுதியதற்காக சக எழுத்தாளர சம்சுர் ரகுமான் மீது கொலைத் தாக்குதல் இடம்பெற்றது. அடிப்படைவாதிகளின் கொலைப் பட்டியலில் நஸ்ரின் பெயர் அடுத்து இடம் பெற்றிருப்பதனையறிந்த தஸ்லீமா நஸ்ரின் உயிர் தப்பி மறுபடியும் ஸ்வீடன் திரும்பினார்.

2000 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் ஜெனீவா மனித உரிமை அறிக்கை பற்றி உரையாற்றியதைத் தொடர்ந்து அவருக்கு 2001 ஆம் ஆண்டு ஸ்வீடனில் அரசியல் அடைக்கலம்நஸ்ரின் அங்கீகரிக்கப்பட்டது. இக்காலகட்டத்தல் அவருடைய ‘பிரெஞ்சுக் காதலன்’எனும் நாவல் வெளியாகிறது.

2003 ஆம் ஆண்டு நவம்பரில் அவர் கல்கத்தா புத்தகக் கண்காட்சிக்காக இந்தியா வருகை தந்தபோது வங்கதேச அரசும் மேற்கு வங்க நீதிமன்றமும் அவரது ‘பேசு’ எனும் பெயரிலான சுயசரிதைப் புத்தகத்தைத் தடை செய்ததைத் தொடர்ந்து மீண்டுமொரு முறை அவரது எழுத்துக்கள் குறித்த வாதப்பிரதிவாதங்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் எழுந்தது.

தஸ்லீமா நஸ்ரினின் சுயசரிதை நூல் வரிசையில் சிறுமியாயிருத்தல் எனும் முதல் பாகம் 1960-70 ஆண்டுகளில் வங்களா தேசத்தில் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கிறது. தஸ்லீமாவுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது நடந்த அனுபவங்களை அந்நூல் விவரிக்கிறது. இரண்டாம் பாகம் அடங்காத காற்று என்பதாகும். பிரிவினை அல்லது பேசு அவரது மூன்றாவது நூல். நான்காவது தொகுதி இருளில் என்பதாகும். வங்கதேசத்தில் அவரது தலைமறைவு காலம் குறித்தது அந்நூல். நான்கு நூல்கள் வெளியான சுழலில் அவர் எழுதத் திட்டமிட்ட அவரது ஐந்தாவது சுயசரித நூல் அவரது சமகாலப் புகலிட வாழ்க்கை அனுபவங்கள் குறித்ததாகும். நான் சுகமில்லை, நலமாயிறு என் பிரியநாடே என்பது அத்தொகுதியின் பெயர் எனவும் அவர் அறிவித்தார்.

தஸ்லீமா சுயசரிதத்தின் மூன்றாவது பாகமான பேசு அவருக்கு 25 வயதுமுதல் 29 வரையிலான வயதுகளில் ஏற்பட்ட இலக்கிய அரசியல் பாலுறவு அனுபவங்களைப் பதிவு செய்வதாக இருக்கிறது. அந்தப் புத்தகத்தில் தன்னுடனான உறவைத் தஸ்லீமா பதிவு செய்ததற்காக ஸம்சுல் ஹக் எனும் வங்கதேச எழுத்தாளர் 10 கோடி ருபாய்களை மானநஸ்டமாகக் கோரி தஸ்லீமா நஸ்ரின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஜலால் எனும் மேற்கு வங்க எழுத்தாளர் 11 கோடி ருபாய்கள் மானநஸ்டம் கோரி வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

ஸம்சுல் ஹக் தஸ்லீமாவுக்கு தூக்குத் தண்டணையளிக்கப்பட வேண்டுமெனவும் நஸ்ரின் கோரியிருக்கிறார். தகவல் தொழில்நுட்ப உலகத்தில் புத்தகத்தை தடைசெய்வது போன்ற அபத்தம் வேறொன்றும் இருக்கவியலாது எனத் தெரிவித்த தஸ்லீமா நஸ்ரின் தடை செயயப்பட்ட தனது வங்கமொழி சயசரித நூலின் இரண்டு பாகங்களையும் தனது சொந்த வலைத்தளத்தில் அவர் பிரசுரம் செய்தார்.

தஸ்லீமா நஸ்ரின் ஆண் மையவாத சமூகத்திற்கும் பெண் உடல்களின் மீதான மதவெறுப்பிற்கும் என்றென்றும் விரோதியாகவே இருப்பாரென்பது தவிரக்கவியலாதது என்பதை அவரது உறுதியான இலக்கிய அரசியல் நிலைபாடுகளைப் புரிந்தவர்கள் தெளிவாக அறியக்கூடியதொன்றாகும்.

II

தஸ்லீமாவின் அரசியல் கலாச்சாரம் மதம் தொடர்பான நிலைபாடுகள் தன்னளவில் தெளிவானது எனகிறார் அவர். குரானில் பிரச்சினையில்லை. அதன் மீதான வியாக்யானங்களில்தான் பிரச்சினையெனக் குறிப்பிடும் நஸ்ரின் இஸ்லாமிய சீர்திருத்தவாதிகளிடம் அவருக்கு உடன்பாடில்லை. வியாக்யானங்களில் தான் பிரச்சினையென்றால் வரலாறு கடந்தும் ஒரு பிரதியை ஏன் வியாக்யானப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் எனக் கேட்கிறார் அவர்.

எகிப்தைச் சேர்நத இஸ்லாமியக் கல்வியாளரான நாஸர் அபு ஸயாத் ஸரியாவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என மட்டுமே கோருகிறார். அது சாத்தியமில்லை என தஸ்லீமா குறிப்பிடுகிறார். ஸரியா சட்டமல்ல மாறாக பெண்ணுக்கு சம உரிமையையும் நீதியையும் தரும் சட்டமே தான் வேண்டுவது என்கிறார் அவர்.

கிறித்தவ இந்து இஸ்லாமிய மதப்பிரதிகளின் அடிப்படையிலான சட்டங்களைத் தான் நிராகரிக்கிறேன் என்கிறார் அவர். மனித உரிமைகள் என்பது பிரபஞ்சமயமானவை எனக் குறிப்பிடும் அவர் மனித உரிமை சம்பந்தமான இஸ்லாமியப் பிரகடனம் வேண்டும் என்பதையும் ஒப்புக் கொள்ளவில்லை. மனித உரிமைகள் அனைத்துக் கலாச்சாரங்களுக்கும் பொதுவானவை எனும் அவர் இஸ்லாமிய நாடான துருக்கியில் மதச்சார்பற்ற அரசு இருக்கிறது அதுமட்டுமன்று வங்கதேசத்தில் புரட்சி வாகை சூடியதன் பின் 1971ஆம் ஆண்டு மதச்சார்பற்ற அமைப்பே பிரகடனப்படுத்தப்பட்டது எனபதையும் சுட்டிக்காட்டுகிறார்.

மதமும் வெளிப்பாட்டுச் சுதந்திரமும் மதமும் மனித உரிமையும் மதமும் பெண் உரிமைகளும் மதமும் ஜனநாயகமும் மதமும் சுதந்திரமும் இணைந்து போகமுடியாது என அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் தஸ்லீமா நஸ்ரின்.

பிற மதத்தவரைக் கொல்லும் மதத்தை பெண்களை அடிமையாக வைத்திருக்கும் மதத்தை மக்களை அறியாமையில் ஆழ்த்தி வைத்திருக்கும் மதத்தைத் தான் ஒப்புக்கொள்ள முடியாது என்கிறார் அவர். கணவனுக்கு அடிமையாக இருத்தலையும் பெண்கல்வி மறுப்பையும் கொண்டிருக்கும் மதத்தை தான் விரும்பமுடியாது என்கிறார் அவர்.

மத்தியக் கிழக்கு நாடுகள் பின்தங்கியிருப்பதற்குகு அரசியல் பொருளியல் காரணங்கள் இருக்கிறது. அதே போது இஸ்லாம் மதமும் ஒரு காரணமாக இருக்கிறது. பொருளியல் சுபிட்சம் இருந்தாலும் பெண்கள் முனனேறாமல் இருக்கும் ஸவுதி அரேபியாவை இதற்கு உதாரணமாகக் காட்டுகிறார் அவர். இதற்கான காரணம் இஸ்லாமில் பெண் அடிமைத்தனம் இருப்பதுதான் என்கிறார் அவர்.

இஸ்லாம் பெண்களுக்குச் சார்பானது என விவாதிக்கும் லைலா அஹ்மது, பாதிமா மெர்னிசி போன்ற மத்தியக் கிழக்கு இஸ்லாமியப் பெண்நிலைவாதிகளின் வாதங்களை தஸ்லீமா நஸ்ரின் நிராகரிக்கிறார். தாராளவாத இஸ்லாமியர்களும் மேற்கத்திய அறிவுஜீகளும் இவர்களை விதந்தோதுவதில் தனக்கு உடன்பாடு இல்லை எனக் குறிப்பிடும் தஸ்லீமா குரானை சாதகமாக அவர்கள் வியாக்யானப்படுத்தகிறார்கள் ஆனால் குரான் ஆண் உயர்ந்தவன் என்கிறது. பெண்கள் தாழ்ந்து போகவேண்டும் என்கிறது. கணவன் மனைவியை அடிக்கலாம் என்கிறது. சொத்துக்கள் சமபந்தமாகப் பெண் ஆணுக்குச் சமமில்லை என்கிறது. பெண் வழக்குமன்றத்தில் தரும் வாக்கு மூலம் ஆண் சொல்வதற்கு பாதிப் பெறுமானமே பெறும் என்கிறது. குரானில் ஒரு ஆண் நான்கு மனைவிகள் வைத்துக் கொள்ளலாம் என இருக்கிறது. இது பெண் உரிமை என்று ஒப்புக்கொள்வது சாத்தியமில்லை. சாதகமான வியாக்யானங்கள் என்பது சாத்தியமில்லை. சமப்ந்தப்பட்ட பெண்ணிலைவாதிகள் குரான் 1,400 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டதென்றும் அதில் விளக்கப்பட்டுள்ள நடைமுறைகள் அந்தக் காலத்திற்கு உரியதெனவும் தெரவிக்கிறார்கள். எனில் நாங்கள் ஏன் அதனைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்கும் தஸ்லீமா இன்றைக்கு அந்நடைமுறைகள் பொறுத்தமானது அல்ல என்கிறார்.

‘லஜ்ஜா நாவலில் நான் இந்து அடிப்படைவாதிகளை ஆதரித்து நிற்கிறேன் எனபதில் உண்மையில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லப்படட இந்துக்களை மனிதஜீவிகள் எனும் அளவில் நான் ஆதரித்து நிற்கிறேன். இந்து அடிப்படைவாதிகளை நான் ஆதரிக்கவில்லை. இந்துமதம் கிறித்தவம் யூதமதம் இஸ்லாம் என அனைத்து மதங்களின் மனித விரோதத்தை நான் விமர்சிக்கிறேன். இந்து அடிப்படைவாதிகள் அவர்களது நோக்கத்திற்காக எனது நூலைப் பாவிக்கிறார்கள். எழுத்தாளர்கள் தமது தேர்வை எழுதுகிறார்கள். பிறர் அதனைத் தம் நோக்கங்களுக்கு உபயோகித்தால் அதற்கு எழுத்தாளர்கள் ஒன்றும் செய்ய இயலாது’ என்கிறார் தஸ்லீமா நஸ்ரின்

‘இஸ்லாமிய நாடுகளில் அடிப்படைவாதம் புதிய வீறுடன் எழந்திருப்பதற்கான காரணங்கள் சிக்கலானவை. இஸ்லாமிய நாடுகளில் நவீன அரசு வடிவம் பொய்த்துப் போயிருப்பது பிரதான காரணமாக இருக்கலாம். இந்த நாட்டுத் தலைவர்கள் தமது மககளைக் கைவிட்டு விட்டார்கள். ஜனத்தொகை அதிகரித்திருக்கிறது. போதிய வேலை வாய்ப்புக்கள் இல்லை. போதிய வீட்டு வசதிகளோ சுகாதார வசதிகளோ இல்லை. போக்குவரத்து வசதிகள் இல்லை. மனித உரிமை மீறல்கள் மலிந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை சித்திரவதை செய்கிறார்கள். எதிரிகளைக் கொல்கிறார்கள். அடிப்படைவாதிகள் இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் தமது அதிகாரத்திற்கானதாகப் பாhவிக்கிறார்கள். இஸ்லாமிய மதம் சாராத அனைத்து கருத்தியல்களும் தோற்றுப் போய்விட்டதென அடிப்படைவாதிகள் சொல்கிறார்கள். கம்யூனிசம், சோசலிசம், முதலாளித்துவம் என அனைத்து மேற்கத்தியக் கருத்தியல்களும் தோற்றுப் போய்விட்டன என்கிறார்கள். தமது கலாச்சாரத்திற்கு திரும்பிப் போவதற்கான காலம் வந்துவிட்டது என இதனை அடிப்படைவாதிகள் சொல்கிறார்கள். தமது வேர்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய தருணம் இது எனவும் தமது மதத்துக்கு இஸ்லாமுக்குப் பின்திரும்பிப் போகவேண்டும் என இவர்கள் சொல்கிறார்கள். இஸ்லாமிய மதமின்றி அனைத்தும் தோல்வியுறும் என இவர்கள் சொல்கிறார்கள். விரக்தியுற்றவர்கள் கனவுமயமானவர்கள் குருட்டு நம்பிநஸ்ரின்க்கையில் வீழ்கிறார்கள். இவர்களில் பழைய கம்யூனிஸ்ட்டுகளையும் நீங்கள் காணலாம்’ எனச் சொல்கிறார் தஸ்லீமா நஸ்ரின்.

‘மேற்கத்தியர்கள் கம்யூனிஸ எதிர்ப்புக் காரணங்களுக்காகவும் தமது பொருளியல் அரசியல் நலன்களுக்காவும் அடிப்படைவாத அரசுகளை ஊழல் மலிந்த மத்தியக் கிழக்கு அரசுகளை இஸ்லாமிய அரசுகளை ஆதரிக்கிறார்கள். மதச்சார்பற்ற தன்மை வளர்வதன் மூலமே அடிப்படைவாதம் என்பது கட்டுப்படுத்த முடியும். அடிப்படைவாதிகள் தனிநபர் உரிமைக்கு எதிரானவர்கள். குழு விசுவாசத்துக்கும் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் அவர்கள் தனிமனிதனைக் கீழப்படுத்திவிடுவார்கள். வெறுப்பையும் வன்முறையையும் விதைப்பார்கள். பெண்களை உழைக்க அனுமதிக்க மாட்டார்கள். ஜனத்தொகையில் ஐம்பது சதவீதமானவர்கள் செயலிழக்கச் செய்யப்பட்டவர்கள் எனில் எவ்வாறு வளர்ச்சி என்பது சாத்தியமாகும்’ என்கிறார் நஸ்ரின்.

‘மேற்குக் கிழக்குக் கலாச்சார மோதல் என சாமுவேல் ஹன்டிங்டன் சொல்வதை ஒப்ப முடியாது. இது கிழக்கு மேற்குப் பிரச்சினையல்ல. கிறித்தவத்திற்கும் இஸ்லாமுக்கும் உள்ள பிரச்சினையல்ல. மரபுக்கும் புத்தாக்கத்திற்கும் இடையிலான பிரச்சினையே இது. நவீனத்துவத்திற்கும் அதற்கு எதிரானதற்கும் இடையிலான பிரச்சினையே இது. மதச்சார்பற்ற தன்மைக்கும் அடிப்படைவாதத்திற்கும் இடையிலான பிரச்சினை இது. தர்க்கமற்ற குருட்டு நம்பிக்கைக்கும் தர்க்கபூர்வமாகத் தேடிச் செல்லும் மனத்திற்கும் இடையிலான பிரச்சினை. சுதந்திரத்தை நம்புபவர்களுக்கும் சுதந்திரத்தை நம்பாதவர்களுக்கும் இடையிலான பிரச்சினை இது‘.

‘இதில் சில இஸ்லாமியர்கள் நவீன வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள். கிழக்கத்திய அறிவாளிகளில் பலர் கிழக்கத்தியக் கலாச்சாரம் என இஸ்லாமிய வழிமுறையைத்நஸ்ரின் தாங்கிப் பிடிக்கிறார்கள். சடங்குகள் மேற்கத்திய பெண்களுக்கு துன்பமெனில் கிழக்கத்தியப் பெண்களுக்கும் அப்படித்தான். படிப்பு மேற்கத்தியப் பெண்களுக்கு நல்லதெனில் கிழக்கித்தியப் பெண்களுக்கும் அப்படித்தான். இஸ்லாமியப் பெண்களிடம் படிப்பறிவின்மை அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு உடனடியில் மதச்சார்பற்ற நவீனக் கல்வியென்பது முக்கியம். இந்நிலையே அவர்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தைத் தரும். இறுதியில் அவர்கள் தம்மைத் தாமே விடுவித்துக்கொள்ள அக்கல்வி பயன்படும்‘ என இஸ்லாமிய சமூகங்களில் பெண்ணுரிமை குறித்து அவர் கவனம் செலுத்துகிறார்.

III

தஸ்லீமாவினது சுயசரிதையின் மூன்றாம் பகுதியான ‘பிரிவினை’ எனும் நூல் 2003 ஆம் அண்டு நவம்பரில் கல்கத்தாவில் தடைசெய்யப்பட்டதையடுத்து நக்ஸலைட் கவிதைகளைத் தொகுத்த இலக்கிய விமர்சகரான சுமந்தா பானர்ஜி சொல்கிறபடி ‘தற்போது புத்தகங்கள் தொடர்பான சர்ச்சைகள் அறிவுஜீவிகள் தொடர்பானது என்பது மாறி புத்தகங்களின் பக்கங்களைக் கூடப் புரட்டாமல் அரசியல் செய்பவர்களின் கையிலும் தெரு ஆர்ப்பாட்டக்காரர்களின் கையிலும் மத அடிப்படைவாதிகளின் கையிலும் அதனது தலைவிதி தீர்மானிக்கப்படக் கூடியதாகவிருக்கிறது’. ஸல்மான் ருஸ்டியின் ‘சாத்தானின் பாடல்கள்’ நூலை வாசிக்காமலேயே தடை கோரிய பாராளுமன்ற உறுப்பினர் ஸையத் ஸஹாபுதின் மாதிரி புத்தகத்தையே வாசிக்காத மௌல்வி ஒருவர் பத்தாயிரம் மதநம்பிக்கையாளர்கள் கூடியிருக்கிற தொழுகையொன்றில் தஸ்லீமாவின் சுயசரிதையை தடைவிதிக்கக் கோருவதோடு ‘அதனது ஆசிரியரின் மீது கரி அல்லது தார் அல்லது கறுப்புமை பூசி அவமானப்படுத்துங்கள்’ என வேணடுகோள் விடுப்பது மட்டுமல்ல புத்தக ஆசிரியருக்குச் செருப்பு மாலை அணிவிக்கவும் கோருகிறார்.

புத்தகத்தின் மீதான தடையை அடிப்படைவாதிகளும் தஸ்லீமாவினது சக எழுத்தாளர்களும் சமகாலத்தில் கோரியிருப்பதுதான் விநோதமானது. தந்தைவழிச் சமூகத்தின் அடிப்படை வேர்களே இரண்டு தடை கோருதல்களிலும் இருக்கிறது என தஸ்லீமா சொல்வதுதான் உண்மை. அடிப்படைவாதிகளின் கோபம் தஸ்லீமா ஒரு பெண்ணாக இருந்து விமர்சிக்கிறார் என்பதுதான். இலக்கியவாதிகளின் கோபம் பாலுறவு சம்பந்தமான பெண்கள் தொடர்பான அவர்களது இரட்டைநிலை குறித்ததாகும்.

பிரபல வங்க நாவலாசிரியரான சுனில் கங்கோபாத்யாவின் அறிக்கையே அதனைத் தெளிவுபடுத்துகிறது. தஸ்லீமாவின் எழுத்துக்களால் இனி எழுத்தாளர்களின் குடும்பங்களில் பிரச்சினை வரப்போகிறது என அவர் விவாதிக்கிறார். வேதனையென்னவெனில் ஒரு எழுத்தாளர் சக எழுத்தாளரது புத்தகத்தைத் தடை செய்யக் கோருகிறார் என்பதுதான். அது மட்டுமல்ல தன்னை என்ன விலை கொடுத்தும் காப்பாற்றிக் கொள்ள அவர் நினைப்பதுதான்.

தஸ்லீமாவின் நூல் தீர்க்கதரிசியின் மீதும் இஸ்லாமின் மீதும் அவதூறு கூறுகிறது என ஸம்சுல் ஹக் எனும் தாராளவாத எழுத்தாளர் வங்க தேசத்தை ஆளும் அரசியல்வாதிகளிடம் காட்டிக் கொடுத்திருப்பதுதான்நஸ்ரின் அதைவிடவும் துயரமானதுதாகும்.

‘தென் ஆசியச் சமூகங்களில் எவரும் பாலுறவு பற்றி வெளிப்படையாகப் பேசவிரும்புவதில்லை. குறிப்பாகப் பெண்கள் பாலுறவு பற்றி எழுதுவதில்லை. தஸ்லீமா நஸ்ரின் நுட்பமான எழுத்தாளர் இல்லை. ஆனால், நேர்மையான எழுத்து அவருடையது. ஒருபோதும் விரசமாக அவரது எழுத்து இருந்ததில்லை. ஆபாசத்தின் பெயரில் இந்நூலைத் தடை செய்திருப்பது முற்றிலும் அபத்தமானதாகும்’ என்கிறார் வங்க இலக்கிய விமர்சகரான நிலஞ்சனா ராய்.

‘இந்தியத்நஸ்ரின் துணைக்கண்டம் மதத்தினால் பிரிக்கப்பட்டது. வங்காளதேசம் மொழியினால் பிளவுண்டது. ஜின்னா உருதுமட்டுமே ஆட்சி மொழி என அடம் பிடித்ததின் விளைவே வங்காள தேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிய நேர்ந்ததற்கான அடிப்படைக் காரணம். பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்துபோது என்ன நடந்தது எனும் பிரிவினை குறித்த வரலாற்று ஆவணமாக தஸ்லீமா நஸ்ரினின் புத்தகம் இருக்கிறது. பாலுறவு மத அடிப்படைவாதம் குறித்த பிற விவாதங்கள் எழுந்ததையடுத்து இந்து நூலின் வரலாற்று முக்கியத்துவம் பின்தள்ளப்பட்டுவிட்டது’ எனத் தெரிவித்திருக்கிறார் சமூக சேவகரான முகர்ஜி. நாவலாசிரியர் நபனீதாதேவ் சென் ‘இந்நூல் தடைசெய்யப்பட்டிருப்பது அபத்தமான நடவடிக்கை’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

IV

தஸ்லீமா தன் மீதான ஒழுக்கவாத விமர்சனங்களுக்கு அவர் இவ்வாறாகப் பதிலிறுக்கிறார் : ‘நான் பெண்களின் உரிமைகளைப் பேசுகிறேன். சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் என் மீது கோபம் கொள்கிறார்கள். எனது கோபம் எனது குருட்டுத்தனம் எனது சந்தோசம் எனது கண்ணீர், எனது தோல்விகள் எனது வெற்றிகள் எனது பார்வை என நான் வளர்ந்ததன் பதிவு எனது சயசரிதம்‘ என்கிறார் நஸ்ரின்.

‘எழுதும் போது எழுதியதின் பின்விளைவு தொடர்பான பயம் வந்துவிட நான் அனுமதிப்பதில்லை. உண்மைக்கு எந்த விலையும் கொடுக்க நான் தயார். ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். மறுபடியும் கொடுக்கத் தலைப்பட்டிருக்கிறேன். மரபுரீதியான சமூகங்களில் பெண்களின் உடலையும் சிந்தனைகளையும் ஆண்கள் கட்டுப்படுத்தி வந்திருப்பதான நீண்ட வரலாறு உள்ளது. அந்தச் சமூகங்கள் தாய்மையை மகிமைப்படுத்தி வந்துள்ளதோடு அதனைச் சுற்றி கற்பு எனும் கருத்தாக்கத்தையும் கெட்டிப்படுத்தின. பல்லாயிரமாண்டுகளாகப் பெண்கள் இந்தக் கண்ணோட்டங்களின் கைதிகளாக இருந்து வந்திருக்கின்றனர். ஒரு ஆண் பல பெண்களோடு உறவு கொண்டிருக்கவும் அதனைப் பற்றிப் பேசவும் முடிந்தது. ஒரு பெண் தனது பாலியல்பு குறித்தோ பாலுறவு குறித்தோ பேசத் தலைப்பட்டால் அவள் உடனடியாகப் போக்கிரியாகக் கேவலமானவளாக ஓழக்கம் கெட்டவளாகப் பட்டஞ்சூட்டப்டுகிறாள். வரலாற்றில் எப்போதல்லாம் பெண் ஆண் மையச் சமூகத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறாளோ, எப்போதெல்லாம் தன் உரிமைக்காக் குரல் கொடுக்கிறாளோ அப்போதெல்லாம் அவள் வீழச்சியடைந்த பெண் எனக் குறிப்பிடுகிறார்கள். எனது ஒரு புத்தகத்தில் ‘என்னை வீழச்சியடைந்த பெண்’ எனக் குறிப்பிடுவதைத் நான் நேசிக்கிறேன் என எழுதியிருந்தேன். சமூகத்தின் பார்வையில் நான் வீழ்ந்தவளாக இருப்பது எனக்குச் சந்தோசம். ஒரு பெண் தன்னளவில் பரிசுத்தமாக இருப்பதற்கான முதல்படி சமூகத்தின் பார்வையில் அவள் வீழந்தவளாகக் கருதப்பபடுவதுதான். இதுவரை எனக்குக் கிடைத்த எல்லா விருதுகளை விடவும் நான் வீழ்ந்தபெண் எனச் சொல்லப்படுவதைத்தான் எனக்குக் கிடைத்த மிக உயரந்த விருதாகக் கருதுகிறேன். ஓரு பெண்ணாகவும் ஒரு எழுத்தாளராகவும் எனது நீண்ட போராட்டத்தின் பேறு என இதனையே நான் கருதுகிறேன்’ என்கிறார் அவர்.

‘இருவரும் ஒப்புக்கொண்டு மூடிய கதவின்பின் நடக்கும் விசயங்கள் நிச்சயமாகவே மறைத்து வைக்கப்பட வேண்டியவைதான். அந்த பொதுவான இடைக்காலத் தடை வாழ்க்கை வரலாற்றுக்குப் பொருந்தாது. எனது சுயசரிதையிலுள்ள எல்லாச் சம்பவமும் நிகழ்வுகளும் விபத்துக்களும் என் வாழ்வில் நிகழந்தவைதான். அவைதான் அடிப்படையில் நான் இன்று எவ்வாறு இருக்கிறேனோ அதற்கு என்னை இட்டு வந்திருக்கிறது. எல்லா மதிப்பீடுகள், அப்பிராயங்கள், கலாச்சாரங்கள், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள் போன்றவற்றினூடேதான் நான் வளர்ந்து வந்திருக்கிறேன். இது பிறரின் கண்களுக்கு என்னையே நான் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறேன் எனத் தோன்றும். நான் என்னைப் பற்றித்தான் என் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். பிறரது வாழ்க்கை குறித்து நான் எழுதவில்லை. பிற்பாடு தம்மை அவமானப்படுததும் என நினைக்கிற இந்த நடவடிக்கைகளில் இவர்கள் ஏன் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் எனது கேள்வி. இதுவன்றி இவர்களோடான உறவுகளை நான் எழுதமாட்டேன் என இவர்களில் எவருக்கும் நான் உறுதிமொழியளிக்கவும் இல்லை. எனது சுயவரலாறு ஒரு இளம்பெண்ணாக எவ்வாறு எனது உறவுகள் என்னைப் பாதித்தன, என்னை வளர்த்தன என்று சொல்லும் பதிவுதான். ‘தந்தை வழி சமூகத்தின் மதிப்பிடுகளால் எவ்வாறு நான் தீpய்ந்து போகாமல் இந்தப் பெண் எவ்வாறு அதிலிருந்து மீண்டாள்’ என்பதைப் பதிவதுதான் எனது நோக்கம். ‘எவ்வாறாக அவள் உருக்கைப் போல ஆனாள் என்பதன் பதிவுதான் என் சுயவரலாறு’ என மேலும் தனது பாலுறவை எழதுவது தொடர்பான நிலைபாட்டை விளக்குகிறார் நஸ்ரின்.

‘எனக்கு நேர்ந்த இலக்கிய அனுபவம், பாலுறவு அனுபவம் போன்றவற்றை நான் எழுதியிருக்கிறேன். பல்வேறு காலகட்டங்களில் என்னைச் சூழ இருந்த நண்பர்கள் பற்றி நான் எழுதியிருக்கிறேன். எனது நூலில் அவர்களை மனிதஜீவிகளாக நான் முன் வைத்திருக்கிறேன். யாருடையதாவது குணச்சித்திரத்தை நான் அவமானப்படுத்திவிட்டதாக நினைத்தால் அது என்னை நானே அவமானப் படுத்திக்கொண்டுவிட்டேன் என்றுதான் அர்த்தம். எனது நினவுகளைப் பதிந்ததின் நோக்கம் என்னை உத்தமப் பிறவியாக, நல்லவளாக, சன்யாசி போல, பெண்கடவுளாகச் சித்தரிப்பது அல்ல. எனது நோக்கம் அழகையும் அழகல்லாததையும் அதனிடையில் எனக்கு என்ன நேர்ந்தது என்கிற நிகழ்வுகளையும் பதிவு செய்வதுதான். வங்களாதேசத்தில் ஒரு பெண் திருமணம் மீறிய பாலுறவு வைத்திருப்பதை பல்வேறு ஆண்களுடன் உறவு வைத்திருப்பதை இச்சமூகம் விரும்புவதில்லை. ஆண்கள் திருமணத்திற்கு வெளியில் பாலுறவு வைத்துக் கொள்வதைப் பிரச்சினையாக்குவதில்லை. நிகழ்வுகள் காண்பிப்பதெல்லாம் ஆணிணுடைய பல பாலுறவுகள் வெளிப்படுமானால் அது அவமானத்துக்குரியது எனச் சமூகம் கருதுவது வெளிப்படையாகியிருக்கிறது. சொல்லப் போனால் இது முக்கியமான வளர்ச்சி என்றுதான் சொல்வேன். எனது புத்தகம் தடை செய்யப்பட்டதற்கான காரணம் சில அறிவுஜீகள் அரசின் மீது அழுத்தம் கொடுத்தார்கள் என்பதுதான். அவர்களது தர்க்கம் அடிப்படைவாதிகளின் தர்க்கத்தையொத்தே இருக்கிறது. நான் எழுதியிருக்கிற விசயத்திற்கு முனனோடியாக உலக இலக்கியத்தில் நிறைய உதாரணங்கள் இருக்கிறது. உலகில் ஒளியையும் இனிமையையும் மட்டுமே கொண்ட இலக்கியம் எங்காவது இருக்கிறதா?? அப்படியாகச் சிந்தனையைக் கட்டுப்படுத்தும் பிரதேசம் இருக்குமானால் அறிவுஜீகளின் கருத்துக்கள் அங்கே ஏன் பொருட்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும்?’ எனக் கேட்கிறார் நஸ்ரின்.

V

இலக்கியத்தில் ஆபாசம் என்பதும் குறித்து அவர் தனது மதிப்பீடுகளை முன்வைக்கிறார் : ‘ஆபாசம் என்பது ஒருவர் அதனை எவ்வாறு நோக்குகிறார் என்பதனைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும். என்னளவில் நிர்வாணமோ பாலுறவோ ஆபாசமானதல்ல. மறுதலையாக ஒரு படித்த கணவான் என்று சொல்லிக் கொள்கிறவன் பொய் சொல்வதையும், வசவு வார்த்தைகள் வீசுவதையும், அர்த்தமற்று பெண்ணை வன்முறைக்கு உட்படுத்துவதையும்தான் நான் ஆபாசம் என்கிறேன். வானத்திலிருந்து கொண்டு மக்களை நோக்கி ஆப்கானிஸ்தானில் குண்டு போடுவதுதான் ஆபாசம். அதிகாரத்தின் வன்முறையைக் காட்டிலும் அனைத்து விதத்திலும் கட்டற்றமுறையில் அழகு கொண்டது பாலுறவில் விளையும் காதல். எனது புத்தகம் தடை செய்யப்பட்டதைக் கேள்வியுற்றபோது நான் ஆச்சர்யமுற்றேன். ஆச்சர்யம் என்னவெனில் இந்தத் தடையைக் கோருகிறவர்கள் தாராளவாதிகள், முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள் எனத் தங்களைக் கோரிக்கொள்வதுதான். இயல்பில் இவர்கள் எனது நண்பர்கள். ஆச்சர்யம் யாதெனில் ஒரு எழத்தாளராக இருக்கிறாவர் சக எழுத்தாளரது புத்தகத்தின் தடையைக் கோருகிறார் என்பதுதான்’ எனத் தனது சன எழுத்தாளர்கள் குறித்து ஆச்சர்யம் தெரிவிக்கிறார் நஸ்ரின்.

புத்தகம் சம்பந்தமாக வங்கதேசத்திலும் மேற்கு வங்கத்திலும் ஒரே வகையிலான ஆட்சேபங்களே எழுந்திருக்கிறது. ‘அறவியல் குறித்தும் தங்களது தகுதி குறித்தும் இவ்வளவு அக்கறையை இவர்கள் கொண்டிருப்பாரகளானால் ரகசியத்தில் ஏன் இதனை இவர்கள் செய்கிறார்கள்?’ என்க் கேட்கிறார் நஸ்ரின்.

‘வங்கதேச எழுத்தாளர் ஹம்ஸல் ஹக் என்னைத் துக்கிலிட வேண்டும் எனக் கோரியிருக்கிறார். அடிப்படைவாதிகளிடமிருந்து இந்த இவரது கோரிக்கை எவ்வகையில் வேறுபடுகிறது என எனக்குத் தெரியவில்லை’ எனவும் கேட்கிறார் நஸ்ரின்.

‘என் சுயவரலாற்றைப் பற்றி நான் எழுதும் போது அடிப்படைவாதிகள் பற்றி நான் எழுத வேண்டியிருப்பது பற்றி எனக்குக் கவலையில்லை. எனது சுயவரலாற்று நூலில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி விமர்சிக்கிறேன் என்பதால்தான் இத்தனை விவகாரங்கள் எழுந்திருக்கிறது. மதம் சம்பந்தமானதை நான் தணிக்கைக்கு உட்படுத்திவிட்டால் பிற்பாடு அது என் வாழ்வைத் தணிக்கைக்கு உட்படுத்த அனுமதித்ததைப் போலத்தான். இஸ்லாம் மட்டுமல்ல எந்த மதமும் பெண்களுக்கு சுதந்திரத்தைக் கொடுக்கும் என நான் நம்பவில்லை. நான் இஸ்லாமிய சமூகத்தினுள் வாழ்வதனால் நான் இஸ்லாமிய சமூகத்தைப் பற்றி எழுதுகிறேன் அவ்வளவுதான்’ என்கிறார் நஸ்ரின்.

கல்கத்தா நகர் பற்றிய அவரது விவரணை இவ்வாறாக அமைகிறது : ‘கல்கத்தா நகரில் இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு வீடுகள் தவதில்லை. இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித்தனிப் பிரதேசங்களிலேயே வாழ்கின்றனர். வங்காள தேசத்தில் இப்படியில்லை. ஒரே கட்டிடத் தொகுதியின் மாடிகளில் அடுத்தடுத்து இஸ்லாமியர்களும் இந்துக்களும் கிறித்தவர்களும் அங்கு வாழ்கின்றனர். வங்காள தேசத்தில் இந்துக்கள் இஸ்லாமியப் பண்டிகைககள் குறித்தும் இஸ்லாமியர்கள் இந்துக்களின பண்டிகைகள் குறித்தும் அறிந்து வைத்திருப்பர். கல்கத்தாவில் இஸ்லாமியர்கள் இந்துப் பண்டிகைகள் குறித்து அறிந்த அளவில் இந்துக்கள் இஸ்லாமியப் பண்டிகைகள் குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. வங்காளதேசத்தில் எவரும் சேரிகளில் வாழ்வதில்லை. இந்துக்களும் இஸ்லாமியர்களும் அருகருகே வாழ்கிறார்கள்‘ எனக் குறிப்பிடுகிறார் தஸ்லீமா நஸ்ரின்.

VI

தஸ்லீமா பெண் எனும் அளவில் அவரது ஸ்திதி குறித்த கேள்விக்கான பதில்களை அடிப்படையில் தனது உடலை அறிவது அதன் வழி தன்னையும் தான் சார்ந்திருக்கும் சகமனிதரையும் தொடர்ந்து சமூகத்தையும் அறிவது என்னும் வகையில் கவிதைக்குள் தேடிச் செல்கிறார்.

தஸ்லீமாவின் கவிதைகளில் சமூக அனுபவம் கவிதையாகியிருப்பது என்பது மிகவும் சொற்பம். அவருடைய பெரும்பாலான கவிதைகள் பாலுறவு அனுபவம் சார்ந்தவை. பாலுறவில் இடம் பெறும் வன்முறை, சந்தோஷம், ஆசை, தனிமை சார்ந்தவை. ஆண் பெண் உறவின் ரகசியமான தருணங்களையும் அதனுள் இடம் பெறும் குளிர் போலும் உறைந்த வன்முறையின் தடங்களையும் மிக நுணுக்கமாக தஸ்லீமா அறிந்து சொல்லியிருக்கிறார்.

தஸ்லீமாவின் கவிதைகளை ஒரு சேரப் படித்துப் பார்ப்பவர்கள் அவரது கவிதைகளில் தொனிக்கும் தனிமைத் துயரையும், உலக அளவில் இந்துமதம், கிறித்தவம், யூதமதம், இஸ்லாம் போன்ற மதங்கள்நஸ்ரின் அனைத்திற்கும் பொதுவாக இருக்கும் பெண் உடலுக்கு எதிரான அவைகளது குரூரமான வன்முறை குறித்த விமர்சனத்தை மதங்கள் கடந்து பெண்ணின் பொது அனுபவமாக அவர் காண்பதையும் காணமுடியும். அவரது கவிதைகளின் விசேஷ குணமாக இதனையே நாம் சொல்லலாம்.

மதம், தந்தைவழிச் சமூகம், பெண்களின் ஒடுக்கப்பட்ட பாலுறவு போன்றவற்றுக்கு இடையிலான தர்க்கபூர்வமான உறவைக் காணும் தஸ்லீமாவின் சிந்தனையமைப்பு இதனாலேயே மிகப் பெரிய கொந்தளிப்பை இந்தியத் துணைக்கண்ட நாடுகளில் ஏற்படுத்துகிறது. தன்னளவில் இவ்வகையான எந்தவித எதிர்ப்பும் தடைகளும் தன்னை எழுதுவதனின்று தடுத்துவிடப் போவதில்லை என்பதில் தஸ்லீமா நஸ்ரின் உறுதியாகவிருக்கிறார்.

தஸ்லீமா நஸ்ரின் தனது கவிதைகளில் பெண் உடலை இயற்கையின் வாசிப்புக்கு உரியதாக உணர்கிறார். அவரைப் பொறுத்து பெண் உடலின் கொண்டாட்டம் என்பதும் விமோசனம் என்பதும் பெண்ணிண் முழுமையான ஆளுமையின் விமோசனத்தினின்று பிரிக்க முடியாததாகும். தஸ்லீமா நஸ்ரின் கவிதைகளின் தனித்துவமும் விசேஷமும் இதுவே என்று தோன்றுகிறது.

...மேலும்

Jan 16, 2015

புரட்சியாளரும், கோட்பாட்டாளரும், தியாகியுமான ரோசா லுக்சம்பர்க்கை நினைவுகூர்தல்

96 வருடங்களுக்கு முன்பு பெர்லினில்: ரோசா லுக்சம்பர்க் கொல்லப்பட்ட தினம் இன்று.

96 வருடங்களுக்கு முன்பு, 15 ஜனவரி 1919ஆம் ஆண்டு, சோஷலிஸ்ட் அமைச்சர் குஸ்தவ் நோஸ்கேவின் தலைமையிலான வலதுசாரிப் படையினரால் ரோசா லுக்சம்பர்க் கைது செய்யப்பட்டு, விசாரனைக்குட்படுத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.  ரோசா லுக்சமபர்க்கின் சிந்தனையும் வாழ்வும் இன்றளவிலும் போற்றப்படுகின்றன.

ருஷிய போலந்தின் ஒரு நடுத்தர யூதக் குடும்பத்தில் 1873ஆம் ஆண்டு பிறந்த ரோசா லுக்சம்பர்க் மேற்படிப்பு முடித்தவுடன் சுவிட்ஜர்லாந்திற்கு குடியேறினார்.  ஜூரிச் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். மாணவியாக இருக்கும்பொழுதே, 1897ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் வழங்கப்படுவதற்கு முன்பே ரோசா, லியோ ஜொகிச்செஸ், அடால்ஃப் வார்ஸாவ்ஸ்கி மற்றும் யூலியன் மார்ச்லாவ்ஸ்கி ஆகியோருடன் இணைந்து போலந்து இராஜ்ஜியத்தின் சமூக ஜனநாயகம் என்னும் அமைப்பை உருவாக்கினார் (Social Democracy of the Kingdom of Poland (SDKP, later SDKPiL).

அதன் தொடர்ச்சியாக, அவர் பெர்லினுக்கு சென்றார். அங்கு அவர் அப்போதைய காலகட்டத்தில் உலகிலேயே மிகவும் வலிமை வாய்ந்த சோஷலிச அமைப்பான ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் (SPD) இணைந்தார். பொருளாதாரம், தேசியம், ஏகாதிபத்தியம், போர், சோஷலிசம் மற்றும் ஜனநாயகம் பற்றிய தனது எழுத்துக்கள் மூலம் எஸ்.பி.டியின் இடதுசாரிப் பிரிவில் தீப்பொறி பறக்கும் பேச்சாளராக, பத்திரிகையாளராக, கோட்பாட்டாளராக முக்கியத்துவம் பெற்றார்.

எஸ்.பி.டி கட்சிப் பள்ளியில் லுக்சம்பர்க் போதித்தார், கட்சி சஞ்சிகையில் எழுதினார். மேலும், 1914ஆம் வருடத்திற்கு முன்பான சோஷலிஸ்ட் அகிலத்திலும் போலந்து மற்றும் ஜெர்மனிக்கான பிரதிநிதியாக கலந்துகொண்டு உரையாற்றினார். 1905ஆம் ஆண்டில் தன் சொந்த மண்ணில் புரட்சி வெடித்தபோது, ரோசா வார்சாவிற்குத் திரும்பினார், தன்னுடைய புரட்சிகர செயல்பாடுகளுக்காக ஜெர்மனிக்கு நாடுகடத்தப்படும் முன்னர் சிறைவாசத்திற்குள்ளானார்.

1914கை தொடர்ந்த வருடங்களில், நெருங்கிவரும் ஏகாதிபத்திய நெருக்கட்டி குறித்தும், பேரழிவை வழங்கப்போகும் போர்கள் குறித்து தொடர்ந்து எச்சரித்தவண்னம் இருந்தார். தமக்குள்ளாகவே ஒருவருக்கெதிராக ஒருவர் ஆயுதமேந்த மாட்டோம் என்று முழுங்குமாறு ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

1914 ஆகஸ்ட் மாதத்தில் போர் வெடித்தபோது, போருக்கெதிராக நீண்டகாலம் குரல் கொடுத்து வந்தவர்களும், எல்லாவகையிலும் போர் எதிர்ப்பையே வலியுறுத்துவோம் என்று சொல்லி வந்த ஐரோப்பிய சோஷலிசக் கட்சியானது உடைந்தது. மேலும், போரில் அது தத்தமது அரசாங்கத்தை ஆதரிக்கவும் செய்தது. ரீஷ்டாகில் போர் வரவுக்கு ஆதரவாக எஸ்.பி.டி கட்சி ஓட்டு போட்டபோது (அதன் மூலம் கெய்சர் அரசாங்கத்திற்கும், போருக்கும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்) தன் வாழ்நாளிலேயே ரோசாலுக்சம்பர்க்கிற்கு முதன்முதலாக தற்கொலை எண்ணம் மேலோங்கியது.

ஜெர்மன் சோஷலிஸ்டுகள் சிலருடன் இணைந்து போர் எதிர்ப்புக்கான சோஷலிஸக் குழுவை நிறுவினார் ரோசா. ரோமானிய புரட்சிகர அடிமையின் பெயரை நினைவூட்டும் வகையில் அக்குழுவிற்கு ‘ஸ்பார்ட்டக்கஸ் லீக்’ என்று பெயர் சூட்டப்பட்டது. அவருடைய போர் எதிர்ப்பு செயல்பாடுகளால் வெகு விரைவிலேயே கைது செய்யப்பட்டார். நான்கு வருடப் போரின் பெரும்பாலான நாட்களை ரோசா கெய்சர் சிறையிலேயே கழித்தார். சிறையிலிருந்தபடியே, இரகசிய அமைப்பான ஸ்பார்ட்டகஸ் லீகை வழிநடத்தியபடி, போர் எதிர்ப்புக்கான ‘யுனியுஸ் துண்டறிக்கை’ மற்றும் இதர படைப்புகளையும் எழுதினார். அவருடைய சொந்தக் கட்சியான எஸ்.பி.டியே அவரை கைவிட்டது. அத்தோடு ரோசாவையும், இதர போர் எதிர்ப்பு செயல்பாட்டாளர்களையும் வெளியேற்றியது.

1918ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் மாலுமிகள் கிளர்ச்சி வெடித்து, ஜெர்மனியின் நவம்பர் புரட்சி தொடங்கியது.  கெய்சர் பதவியிறக்கப்பட்டார், தொழிலாளர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் மன்றம் உருவாக்கப்பட்டு, எஸ்.பி.டியின் தலைமையிலான ஒரு புதிய அரசாங்கம் ஜெர்மனியின் அதிகாரத்தைக் கைப்பற்றியது. சிறையிலிருந்து ரோசா லுக்சம்பர்க் விடுவிக்கப்பட்டார்.  பெர்லினுக்குத் திரும்பிய அவர் புத்தாண்டு தினத்திற்கு முந்தைய இரவில், தம் சோஷலிஸ்ட் கூட்டாளிகளுடன் இணைந்து ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை (KPD) உருவாக்கினார்.

1919, ஜனவரி 5ஆம் தேதியன்று, எஸ்.பி.டி அரசாங்கத்திற்கும் (ஃப்ரெட்ரிக் எபர்ட் மற்றும் பிலிப் ஷிடெமன் தலைமையிலான) அதிதீவிர சோஷலிஸ்ட் கட்சிகளான சுதந்திர சமூக ஜனநாயகக் கட்சி (USPD) மற்றும் கே.பி.டி கட்சியினருக்கும் இடையே மோதல்கள் எழுந்தன. நவம்பர் புரட்சியின்போது பணியமர்த்தப்பட்ட யு.எஸ்.பிடியின் உறுப்பினரான, பெர்லினின் முதன்மை காவலதிகாரி எமில் எயிக்கார்னை அரசாங்கம் பதவியிறக்கியதே அம்மோதலுக்கான காரணம். அதனை எதிர்க்கும் வகையில், யு.எஸ்.பி.டி, கே.பி.டி மற்றும் புரட்சிகர மேலாளர் பிரதிநிதிகளின் கூட்டணியான ‘புரட்சிகர கமிட்டி’யின் தலைமையில் நகரெங்கும் வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் வெடித்தன.

புரட்சிகர கமிட்டியின் தலைவர்கள் விவாதத்தித்துக்கொண்டும், தயங்கிக்கொண்டும், பிளவுபட்டுக் கொண்டும் இருந்த வேளையில் மத்திய பெர்லினின் முக்கிய கட்டிடங்கள் மற்றும் நாளிதழ் வெளியாகும் மாவட்டங்களை ஆயுதமேந்திய தொழிலாளர்களும், இராணுவ வீரர்களும் ஆக்கிரமித்தனர். அதேவேளை, அரசாங்கமோ ‘சுதந்திர காவலர்கள்’ (Freikorps – பிற்போக்கு அதிகாரிகளின் தலைமையிலான இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்) எனும் படைப்பிரிவைக் கொண்டு அரசாங்கம் முன்னேறியது. ‘புரட்சியின் வேட்டையன்’ என்று தன்னைத்தானே அழைத்துக்கொண்ட இராணுவ மந்திரியான குஸ்தவ் நோஸ்கே அவர்களை நகரத்திற்கு வெளியே படையமர்த்தினார்.

அரசாங்கம் அழைத்தது போல் ‘ஸ்பார்ட்டகஸ் எழுச்சி’யானது, சுதந்திர காவலர்களின் காட்டுமிராண்டி நடவடிக்கைகளைக் கொண்டு எண்ணற்ற ஆயுதமேந்திய புரட்சியாளர்கள் மற்றும் சிவில் தொழிலாளர்களை கொன்று குவித்ததன் மூலம் ஒடுக்கப்பட்டது. முன்னணி கம்யூனிஸ்டுகள், இடதுசாரி சோஷலிஸ்டுகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வேட்டையாடப்பட்டனர்.

15 ஜனவரி அன்று ரோசா லுக்சம்பர்க்கும், கே.பி.டியின் சக தலைவருமான கார்ல் லீப்னெஹ்ட்டும் பெர்லினின் மத்திய வர்க்கப் புறநகர் பகுதியில் இருந்த ஒருவீட்டிலிருந்து கார்டே-கவாலெரி-ஷியுட்ஜென் பிரிவு சுதந்திர காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டனர். விசாரனைக்காக அவர்கள் ஹோட்டல் ஏடெனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். பெர்லினின் டியெர்கார்ட்டென் என்னும் இடத்தில் அவர்களது உடல்கள் வீசியெறியப்பட்டன.கொலைகாரர்களுக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படவில்லை.

1919ஆம் ஆண்டிலிருந்து (நாஜிகளின் ஆட்சி காலத்தில் கல்லறைகள் நாசப்படுத்தப்பட்டிருந்த காலம் தவிர)  ரோசா லுக்சம்பர்க் மற்றும் லீப்னெஹ்ட்டின் நினைவு நாளன்று ஃப்ரீட்ரிக்ஃபெல்டே கல்லறையில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி அப்புரட்சியாளர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.


ரோசா லுக்சம்பர்க்கின் படைப்புகள் மற்றும் கடிதங்கள் ஆகியவை மார்க்சிஸ்ட் இணைய காப்பகத்தில் at: http://marxists.org/archive/luxemburg/index.htm இலவசமாக படிக்கக் கிடைக்கின்றன.
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்