/* up Facebook

Dec 8, 2014

திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை? சட்ட, சமூக, மருத்துவப் பார்வைசட்ட, சமூக, மருத்துவப் பார்வை

திருச்சியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையேயான மணமுறிவு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அவர்கள், அந்த வழக்குத் தொடர்பாக மட்டுமல்லாமல், வழக்குமன்றத்துக்குத் தொடர்ந்து வரும் இதே போன்ற பிரச்சினைகளுக்கும் சேர்த்து பயன்தரத்தக்க கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தைகளைப் பாரமாக தற்போதும் கருதுகின்றனர். மகளைத் திருமணம் செய்யப் போகும் ஆண் குறித்து முறையாக விசாரிக்காமல், திருமணம் என்ற பெயரில் பெண்களை வெளியேற்றுகின்றனர். பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் ஆண்மைக் குறைவு பிரதான காரணமாகச் சொல்லப்படுகின்றன. மண முறிவும் சமூகப் பிரச்சினைகளில் ஒன்றுதான். ஆண்மைக்குறைவு, பெண்ணுக்கு மலட்டுத்தன்மை இருப்பதால் பெரும்பாலான திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. சமூகத்துக்கு அஞ்சியும், குடும்பத்தில் மூத்தவர்களின் கட்டாயத்தின்பேரிலும், தகுதியின்மை, இயலாமையை மறைத்து திருமணங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்மைக் குறைபாடு உண்மையான காரணமாக இருந்தாலும் பலர், தங்களுக்கு வசதியாக வேறு காரணங்களைக் கூறி விவாகரத்துக் கோருவதும் அதிகரித்து வருகிறது.

திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டால் ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள், எய்ட்ஸ் மற்றும் எச்.அய்.வி. தொற்று உள்ளவர்கள் திருமணம் செய்வதைத் தடுக்க முடியும். இதுபோன்ற நபர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இது தொடர்பாக மருத்துவமனைகள், நீதிமன்றங்களில் இருந்து புள்ளி விவரங்களைச் சேகரித்து ஆய்வுசெய்ய வேண்டும். இப்பிரச்சினையில் மக்கள் நலன் கருதி, நீதிமன்றத்தின் சில கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்.

அதன்படி ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை போன்ற காரணங்களால் திருமணங்கள் தோல்வி அடைவது தெரியுமா? இதுபோன்ற திருமணங்களைத் தடுக்க ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணத்துக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்கப்படுமா?

ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மையைக் காரணமாக வைத்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவாகரத்து வழக்குகளை, தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 6 மாதம் அல்லது ஓர் ஆண்டில் முடிக்க ஏன் மத்திய அரசு உரிய சட்டத் திருத்தம் கொண்டுவரவில்லை?

ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மையை மறைத்து திருமணம் செய்து மோசடி செய்பவர்களுக்குத் தண்டனை வழங்கவும், பாதிக்கப்பட்ட வருக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு ஏன் விதிகள் கொண்டுவரவில்லை?

இப்பிரச்சினையைத் தடுக்க, மேற்கொண்ட பிற நடவடிக்கைகள் என்ன? ஆகிய நான்கு கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செப். 5-க்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி அந்த உத்தரவில் கூறியிருந்தார்.

இந்த உத்தரவை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டார். மதுரை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்டீஸ் திரு. என்.கிருபாகரன் அவர்கள்  வாழ்க்கை சம்பந்தமான வழக்கொன்றில் மிக அருமையான தீர்ப்பு ஒன்றினை சமூக நலம் சார்ந்த கண்ணோட்டத்தில் விஞ்ஞானப் பார்வையோடு வழங்கியுள்ளார்கள்.

திருமணங்களை ஏற்பாடு செய்யும் முன்பு நம் நாட்டுச் சமூக அமைப்பில் உள்ள பெரும்பாலான நடைமுறை என்ன? ஜாதி, மதம், அதற்குப் பாதுகாப்பான ஜோசியம் பார்த்தல் _- இவைகளைப்பற்றித்தான் கவலைப்பட்டு அதிக முக்கியத்துவம் கொடுத்து, (ஏராளமான வரதட்சணை என்று கொடும் சமூக நோய்க்கும் சத்தமில்லாமல் ஆளாகி) திருமணங்களை நடத்திக் கொள்ளுகின்றனர்.

மணமக்களுக்கு மற்ற பொருத்தங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக,  அறிவியல் அடிப்படையில் ஆதாரப்பூர்வமானதாக இவை இல்லாத நிலையில் _- அறிவியல், உடலியல் - மருத்துவ ரீதியாக அவ்விருவருக்கும் மருத்துவப் பரிசோதனைச் சான்றுகளைப் பார்த்து ஒருவருக்கொருவர் உடல் ரீதியாகப் பொருத்தமானவர்களா என்று அறிந்து, திருமணங்களை ஏற்பாடு செய்தால், பின்னாள் அத்திருமணங்கள் - அந்தக் காரணங்களுக்காகத் தோல்வி அடையும் நிலை - வழக்குமன்றங்களுக்குச் செல்லும் அவசியம் ஒரு போதும் ஏற்படாது. தேவையற்ற மன உளைச்சல்கள் தானாகவே தீரும்.

ஜோதிடம் பார்ப்பது, மற்ற பொருத்தங்களை _ சடங்கு சம்பிரதாயங்கள் வழியில் பார்ப்பது _ அறிவியல் -_ பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் சரியானது _- உண்மையானது அல்ல.

மத்திய, மாநில அரசுகள் திருமணச் சட்டங்களில் இம்முயற்சியை ஒரு முன்நிபந்தனையாக்கிடும் வகையில் சட்டத் திருத்தத்தைக் கொணர மதுரை உயர் நீதிமன்றத்தில் (அது சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு பகுதிதான்) வழங்கப்பட்ட இத்தீர்ப்பு ஒரு முன்னோட்டமாக அமைய வேண்டும். மருத்துவர்கள் தவறான சான்றிதழ் தந்தால் கடும் தண்டனை என்றும்கூட _அச்சட்டத்தின் ஒரு பிரிவை முக்கியமாக இணைக்கலாம். அதன்மூலம் எப்போதாவது நிகழக் கூடிய தவறும்கூட நிகழ வாய்ப்பின்றித் தடுக்கலாம்!

உடல் நோய்களை மறைத்து, எப்படியாவது திருமணம் நடந்துவிட்டால்போதும் என்ற தவறான முயற்சிகள்தான் இப்படி இரு சாராருக்கும், பிறகு தீராத வேதனையையும் மாறாத துயரத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன என்பதைப் பல சுயமரியாதைத் திருமண மேடைகளிலும், பெண்கள் விடுதலை மாநாட்டிலும் சொற்பொழிவு ஆற்றும்போதும் நாம் இடைவிடாமல் வலியுறுத்தி வந்துள்ளோம் _- வருகிறோம்.

அது மட்டுமல்ல, சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின்மூலம் ஏற்பாடாகும் மணமக்கள் இருவருக்கும் இரத்தச் சோதனை, HIV சோதனை போன்றவைகளை நடத்திய பிறகே மணம் -ஏற்பாடுகள் தொடங்கி நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது.

இப்படி ஒரு சட்டத் திருத்தம் வந்து திருமண முறையில் நம் நாட்டில் மாறுதல் வந்தால் அதனால் அதிகம் பயன் பெறுவது முதலாவது மகளிரே ஆவர்; அடுத்து, பெற்றோர்கள் ஆவார்கள்; அவர்களின் நிம்மதி குலைக்கப்படாது, முதுமையில் வாழும் வசதியும் உத்தரவாதமும் அதனால் ஏற்படும். சமூகநல ஆர்வலர்களும், சமூகச் சீர்திருத்த அமைப்புகளும் இதற்காக ஒரு தனி இயக்கமே நடத்திட உடனடியாக முன் வருதல் அவசியம் - அவசரமுங்கூட என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நீதியரசர் என்.கிருபாகரன் அவர்களின் ஆலோசனையை வரவேற்றுள்ள, சிறுநீரகத் துறை மற்றும் ஆண் மலட்டுத் தன்மைத் துறை சிகிச்சைக்கான பேராசிரியரும், மருத்துவத் துறையின் மிக உயரிய விருதுகளான பி.சி.ராய் விருது, பத்மசிறீ விருதுகளையும் பெற்றுள்ள சிறந்த மருத்துவ நிபுணர் டாக்டர் அ.ராஜசேகரன் அவர்களைச் சந்தித்து அது குறித்துக் கருத்துக் கேட்டோம்.

நீதியரசர் என்-.கிருபாகரன் அவர்களின் சமுதாயச் சிந்தனைக்கும், அணுகுமுறைக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

நம் சமுதாயத்தில் திருமணம் என்ற பெயரால் ஆண், பெண் இணைவதும், திருமணமாகி சில மாதங்கள், ஆண்டுகள் கழித்தும் குழந்தையின்மைக்கு பெண்களைக் காரணம் காட்டிக் குறை சொல்லுவதும், வெளியில் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் புகுந்த வீட்டின் நிலைகுறையாமல், எந்த உடலுறவும் என்றுமே நிகழவில்லை என்பதை மறைமுகமாகத் தெரிவிப்பதும் பெண்ணின் பெற்றோர் இருவரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதும் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது.

குழந்தையின்மைக்கு ஆண்மைக் குறைவும் காரணம்

குழந்தையின்மைக்கு ஆண்மைக் குறைவும் காரணம் என அறிய வாய்ப்புண்டு. திருமணத்திற்கு முன்பே இத்தகைய குறைபாடுகள் உள்ள ஆண்களை நாம் ஏன் அடையாளம் காண முடியாது? ஓர் அப்பாவிப் பெண்ணின் இல்லற வாழ்க்கையை இருளச் செய்யவா திருமணம்? என நீதியரசர் சாடியுள்ளார்.

இது ஒரு Avoidable Human Tragedy என்று குறிப்பிட்டுள்ளார்.

புரட்சிகரமான இத்தகைய கருத்திற்கு நாட்டின் பல பகுதியிலிருந்தும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அவர்களுள் சிலர் சமூகச் சிந்தனையாளர்கள் -_ வழக்குரைஞர்கள் _ மருத்துவர்கள்.

சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஆண்மைக் குறைவு காரணமாக 2009_இல் 88ஆகவும், 2013_இல் 715ஆக உயர்ந்துள்ளதாகவும், மன வேதனையைப் பகிர்ந்துள்ள நீதியரசர் என்.கிருபாகரன் திருமணத்திற்கு முன்பே ஆணும், பெண்ணும் ஏன் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளக் கூடாது? என்று கேட்கிறார்.

பெண்களுக்கு மருத்துவச் சோதனை தேவையில்லை

பெண்களுக்கு சோதனை தேவையில்லை. காரணம் 715 வழக்குகளில் பெண்கள் சார்ந்த காரணம் பல இருக்க வாய்ப்பில்லை என்பதாலும் பெண்கள் பரிசோதனையில், உள் உறுப்புச் சோதனை செய்ய இயலாது என்பதாலும் Vaginismus / Frigidity / Imperforate Hymenபோன்றவை எளிதாகச் சரி செய்யமுடியும் என்பதாலும், உடலுறவில் பெண்களின் பங்கு முழுமையாகத் தேவையில்லை என்பதாலும், ஆண்மையின்மை (Male Sexual Impotency)  பற்றியே ஆராய்வோம்.

ஆணின் உடல் வளமும், உறுப்புகளின் வளர்ச்சியும் சரியாக இருந்தும் மனநிலை சார்ந்த காரணங்களால் சிலர் ஆண்மை உணர்வற்றவராக உள்ளனர். ஆண்மைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிரபலங்களின் செய்திகள் தினமும் பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளன.Potency Test என்ற மருத்துவப் பரிசோதனை எவ்வாறு நடைபெறுகிறது என்றால் Impotence / Erectile / Ejaculatory DysFunctions. Male Infertility- இவை முற்றிலும் வேறுபட்டவை. சிலருக்கு ஆண்மையில்லாமலும், விந்தணுக்கள் சரியான அளவிலும், சிலருக்கு ஆண்மையிருந்தும் விந்தணு சார்ந்த பிரச்சினைகளும் உண்டு.

விவாகரத்து (Divorce) ஆண்மையின்மை காரணத்தால், விவாகரத்து வழக்குத் தொடரலாம். ஆனால், விந்தணு இல்லாமை (InFertility)  காரணத்தால் விவாகரத்துக் கோர, சட்டத்தில் இடமில்லை.

Premarital Counseling மற்றும் Potency Testing எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்றால், ஆண்மைப் பரிசோதனை, மற்ற உடல் உறுப்புகளுக்கான பரிசோதனை மாதிரி அல்ல.

நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டால் நடக்கச் சொல்கிறோம். சுவாசம் பாதிக்கப்பட்டால் மூச்சினை இழுத்து விடச் சொல்கிறோம். அவ்வாறே கண், காது, நாக்கு போன்ற அனைத்து உறுப்புகளின் செயல்களைச் சோதிக்கிறோம். உடலுறவுக்கு உட்படுத்தி ஆண்மையைச் சோதிக்க முடியுமா? எனவே, உடல் மற்றும் உறுப்பு சார்ந்த பரிசோதனையை மட்டுமே செய்ய முடியும்.

அனைத்து மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர் -உடலுறவு கொள்ள இயலாமைக்கான காரணங்கள் பல உண்டு. எனவே, மருத்துவப் பரிசோதனை ஒரு முன்னோட்டமே தவிர முழுமையானதல்ல.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களால் இவை சார்ந்த விவாகரத்து வழக்குகளில் குடும்ப நல நீதிமன்றம் விரைவில் முடிவு தெரிவிக்க வேண்டும் (Fast Track Family Courts). புதிய சிந்தனையும், புதிய சட்ட வடிவும் மேற்கொள்ளும் பணியும் தொடர வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகும்.

என்னுடைய 40 ஆண்டுகால மருத்துவ அனுபவத்தில், அதிலும் குறிப்பாக ஆண்_வயது வந்த ஆண் _ உடல் ரீதியாகவும், உடலுறவு ரீதியாகவும் முழுமை பெற்ற ஆண் _ ஆண்மையின்மை ஆகியவை சம்பந்தப்பட்ட ஆண் மலட்டுத்தன்மைத் துறையில் (Andrology) எனக்கிருக்கும் அனுபவத்தில், இந்த 40 ஆண்டுக்காலத்தில், சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான ஆண்மைக் குறைவுள்ள ஆண்களையும், இனவிருத்தி அணுக்கள் குறைவாக இருப்பதால் திருமணமாகி குழந்தையில்லாத ஆண்களையும் நான் சந்தித்து இருக்கின்றேன். சிகிச்சையும் அளித்திருக்கின்றேன்.

ஆண்மைக் குறைப்பாட்டுக்கு நவீன சிகிச்சை முறைகள்

இக்குறைப்பாட்டைப் போக்க சென்னையில் மார்க் (Marc - Madras Andrology Research Centre) என்ற பெயரில் பல ஆண்டுகளாக நான் நடத்திவரும் நிறுவனத்தில், குறையுள்ள ஆண்கள், குழந்தையில்லாத ஆண்கள், பிறப்பிலேயே குறையுள்ள ஆண்கள், இனவிருத்தி அணுக்கள் குறைவாக உள்ள ஆண்கள், இப்படிப் பலதரப்பட்ட பிரச்சினைகளையுடைய ஆண்களுக்கு, தகுந்த சிகிச்சைகளை அளித்து வருகிறேன்.

பாலியல் கல்வி அவசியம்

நம் சமுதாயத்தில் திருமணத்திற்காக மூடத்தனமாக ஜாதகம், ஜோதிடம் பார்ப்பதை விட்டுவிட்டு, மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை பார்ப்பதே முக்கியமாகும். குறிப்பாக, நம் மக்களிடம் பாலியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக பள்ளிக் கல்வியிலேயே மாணவ_மாணவியர்களுக்கு பாலியல் கல்வியைப் படிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுநீரகத் துறை மற்றும் ஆண் மலட்டுத்தன்மைத் துறைப் பேராசிரியர் மருத்துவ நிபுணர் டாக்டர் அ.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

சட்டம், மருத்துவம், சமூகத்துறைகளில் பணியாற்றும் இந்த அறிஞர் பெருமக்களின் கருத்துகள் சமுதாயத்தின் பிணி நீக்க வல்லது என்பதை அனைவரும் புரிந்து செயல்பட முன்வர வேண்டும். திருமணத்திற்குமுன் ஜோதிடம் என்ற பெயரில் கண்டகண்ட பொருத்தங்களைப் பார்ப்பதை விடுத்து, மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
- வே.சிறீதர்


திருமணத்திற்கு முன்பு மட்டுமல்ல, பின்பும்கூட ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆண், பெண் இருவருமே முழு உடல் பரிசோதனை செய்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது இல்லறத்திற்கு வலு சேர்க்கும். இதனால் கணவனுக்குத் தெரிந்துவிடும் என்று மனைவியோ, மனைவிக்கு தெரிந்துவிடும் என்று கணவனோ அச்சப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் நோயை வளர்த்து உயிரைப் பறிகொடுக்கும் நிலையும் தடுக்கப்படும்.

-      கவிஞர் சல்மா
0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்