/* up Facebook

Dec 21, 2014

எனது பார்வையில் என்.கே.ரகுநாதனின் ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி‘ - சி.புஷ்பராணி

அந்தக்  காலத்தில்    ஐய்யாமாரிடம்   [வெள்ளாளர்களிடம்]   எளியஞ்சாதிப்   பெண்கள்   ஏதாவது   உதவி  கேட்டுப் போவதாயிருந்தால் ,ஒரு   காவோலையை     இடையில்   செருகித்    தங்கள்   பாதச்சுவடுகளை   அழித்துக் கொண்டு தான்    போகவேண்டும்.    ஐய்யாமாரின்    வீட்டுப்  படலை   மட்டும்   அவர்கள்   சென்று    தங்கள்   உதவியைப்    பெற்றுக்கொண்டு    திரும்பவேண்டும்.   அவர்களின்    கால்  பதிவுகளிலேயே      அவ்வளவு    தீட்டு .  வள்ளியம்மை [கதைநாயகனின்    தாய் ]    காவோலையை    இழுத்துக்கொண்டு   இரண்டு   மூன்று   தடவைகள்        அப்படிப்  போயிருக்கின்றாள்.  ஆசிரியர்   விபரிக்கும்   இது   போன்ற   கொடுமைகள்    நிறைய    இதில்    வந்துகொண்டே  இருக்கின்றன .  தன்னோடு   படிக்கும்  ஆதிக்கசாதி    நண்பர்களைச்    சந்திக்கும் போதுகூடப்  படலையடியில்    நின்று   பேசிவிட்டு    வருவதையும்     ஆசிரியர்    விளக்குகின்றார்.    எங்கள்    ஊரிலும்  சிலர்   இப்படி   இருந்ததை     என்   சிறு   வயதில்    கவனித்திருக்கின்றேன்.    சிரித்துப்   பேசியே   வாசலில்    வைத்தே   அனுப்பி   விடுவார்கள் .   இதனால்தான்     ஊரவர்    பலரோடு     பழகாமல்     விலகியிருந்தோம்.     மணியன்காரர்களால்        கட்டப்பட்ட   பொதுக் கிணறுகளில்  கூடத்    தாழ்த்தப்பட்டவர்கள்     என்று   கணிக்கப்பட்டோர்     தண்ணீர்    அள்ளமுடியாமல்    ஆதிக்கசாதியினர்   வரும்வரை    காவல்   இருந்த   அநியாயத்தையும்    இந்நூலில்   காண்கின்றோம்.    பாடசாலையில் கூட தாழ்த்தப்பட்ட    சாதி   மாணவர்களுக்கு   என்று   தனி   வாங்குகள்!   இதில், ஆசிரியர்களில்    பலரும்   தடிப்புப்   பிடித்தவர்களாய்     இருந்ததை    ஆசியர்   விபரிக்கும்   இடங்கள்   எனக்கு   எந்த    ஆச்சரியத்தையும்     தரவில்லை .   முற்றும்   துறந்த   கன்னியாஸ்திரிகளே      சாதிவெறி   பிடித்து    அலைந்ததைப்    படிக்கும்   காலத்தில்   கண்டு   மனம்  வெறுத்தவள்    நான்.     இதையெல்லாம்    தாண்டி   ,”ரோட்டுக்குக்    குறுக்கே     அல்ல–சமூக   வளர்ச்சிப்   பாதைகளுக்குக்   குறுக்கே     பெரும்   தடைக்  கற்களாகப்     போட்டுக்கொண்டு   இருக்கின்றார்கள்  .  ஆனாலும்   மனிதன்   முன்னேறிக்  கொண்டேயிருக்கின்றான்.”என்று   மிக   அழகாக   ஆசியர்   குறிப்பிடுவதுபோல     ,ஒரு   பின்தங்கிய    கிராமமும்    அதைச்   சுற்றிய     அதே   மாதிரியான   கிராமங்களும்     ,அதைச்   சேர்ந்த   பின்தங்கிய வகுப்பினரும்    எப்படிப்  படிப்படியாகத்   தாங்கவொண்ணாத   சிரமங்களையும் ,  தடைபோட   வந்தவர்களையும்    கடந்து   பாய்ந்து    நம்பமுடியாத   அளவுக்குக்   கல்வியிலும்,   மேலாண்மைப்  பதவிகளிலும்     தம்மை   இணைத்து   முன்னேறினர்    என்பதை   ஆசியர்    விபரித்துக் கொண்டே  போவது  ….அந்நாளைய      சாதிகொடுமையின்     உச்சத்தையும்   ,  அதை   மீறிக்  கடக்க   அவர்கள்   பட்ட   கொடும்  பாடுகள்…….வேதனைகள்   அத்தனையும்    படிக்கும்    அனைவரையும்    அந்நாட்களுக்கே       இழுத்துச்   சென்று   அவற்றை   எம்முள்    பதிய   வைப்பது     உணர்வு  பூர்வமான      அவரின் அனுபவங்களின்      வெளிப்பாடாகும்.
                 அதேவேளை ,   ஆசிரியர்    பல   இடங்களில்    குழப்போ  குழப்பென்று    எம்மைத்    தடுமாற   வைக்கின்றார்.     ஊர்கள்  பற்றி   விபரிக்கும்   போதும்  , ஊருப்பட்ட   மனிதர்களின்      பெயர்களைக்    குறிப்பிடும்போதும்      அவை   எம்  மனதில்   தங்க   மறுக்கின்றன,.    யார்  , எவர்கள்   என்ற  பெரும்   குழப்பம்      இடியப்பச்   சிக்கல் போல   எம்மைக்  கொஞ்சம்  —இல்லையில்லை  நிறைய    உலைய வைக்கின்றன.     கதாநாயகனின்   பெயரையே      பல  இடங்களில்    இராசன் …ரவி ..ரவீந்திரன்     என்று    குழப்பி   யூகிக்கும்    நிலைக்கு   எம்மைத்   தள்ளுகின்றார்.   இந்தத்    தன் வரலாற்றில்,     சில   இடங்களில்     முதலில்   வந்தது…    திரும்பவும்    வந்து   எரிச்சலையூட்டுகின்றது.  ரவியின்   படிக்கும்    காலங்களையும்       தெளிவில்லாமல்     ….தலை   கீழாக   என்று   ஆசிரியர்    தானும்   குழம்பி    எம்மையும்    புரியாத  நிலைக்குத்    தள்ளுகின்றார்.
        அந்தக்   காலத்தில்    சேட்டுப்   போடாமலேயே     ஆண்பிள்ளைகள்    பாடசாலைப்    படிப்பை   முடித்தனர்    என்பதும்   எனக்குப்  புதிதாக   இருக்கின்றது.    அந்தக்   காலப்   பார்ப்பனர்களின்    குருகுலத்தில்      தங்கிப்   படித்தோர்    மேற்சட்டை     போடாமல்   படித்தது   பற்றிக்   கேள்விப்பட்டிருக்கின்றேன்.      இதில்   ரவி   எஸ்.எஸ்.சி   படிக்கும்போதுதான்    ஜெபமாலை    என்ற   மாணவன்     முதலில்   ஷேர்ட்   அணிந்ததாகவும் ,அதன்   பின்   எல்லா   மாணவர்களும்   ஷேர்ட்  போட    ஆரம்பித்ததாகவும்     கூறும்   ஆசியர்   ,ஷேர்ட்   அணியும்   நாகரீகத்தைக்     கத்தோலிக்கரே      தொடக்கி   வைத்தனர்    என்பதையும்    ஒப்புக்  கொள்கின்றார். இதில்  பருத்தித்துறையை     மையமாக   வைத்தே    அனைத்து   ஊர்களும்    வருகின்றன.  ரவி   பிறந்த   ஊரான   வராத்துப்பளை ,     சந்தாதோட்டம்   ,ரங்கா வத்தை ,     உத்திராவத்தை,    கொத்தியாவத்தை,     பறையதெரு,    கோணந்தீவு ,   அல்வாய்     என்பன   குறிப்பிடத்தக்கவை .   இந்த   ஊர்களின்   பனை  வளங்கள்  பற்றியும்     பெருமை பொங்கப்  பல  இடங்களில்     வர்ணிக்கப்படுகின்றது.     மூடல்பெட்டிகள்,  கருப்பட்டி  காய்ச்சி   விற்றல்   போன்றவற்றால்     பனைவளம்    பெண்களால்   கொண்டாடப்பட்டிருக்கின்றது. இதில்   பறைய தெரு    பின்னாட்களில்     ,”தும்பளை”   என்று   அழைக்கப்பட்டது.    தாய்   “பெலகேயா   [மார்க்ஸிம்  கார்க்கி ]   மகன்   பாவெல்   ….முறையே   வள்ளியம்மை.,ரவி    இருவரையும்   ஒன்றுபடுத்திப்    பார்ப்பது     இரசிக்க   வைக்கின்றது.  ‘தாய்”பெலகேயா     என்  அம்மாவையும்     நினைப்பூட்ட வைத்தாள் .   அந்நாட்களில்   இயக்கத்தவர்   பலரை   உணவுகொடுத்து   உபசரித்து   மகிழ்ந்தவள்    என்   அன்னையும்தான்.
         என்னைக்   கவர்ந்த     ஆசியரின்   வரிகள்   சிலவற்றை    இங்கு   தருகின்றேன்.   கணியன் பூங்குன்றனார்    என்ற   புலவர்   பெருமகன்   ,’யாதும்    ஊரே   யாவரும்    கேளிர்   “என்று   திருவாய்    மலர்ந்தருளி    இருக்கின்றார்.     “ஒன்றே   குலம்    ஒருவனே  தேவன்  “என்ற    முதுமொழி    புராண – இதிகாச  காலத்தில்   இருந்தே   கூறப்பட்டு   வருகின்றது.    நேற்றைய    பாரதி   ,”சாதிகள்   இல்லையடி   பாப்பா  “என்று  குழந்தைகளுக்குச்    சொல்வதுபோல்   சொல்கின்றார்.     சாதியமைப்பு    இருந்ததால்தான்     இப்படியெல்லாம்    பாடியிருக்கின்றார்கள்.   இவைகளை   ஆழ்ந்து   நோக்கும்போது     நம்  தமிழர்   மத்தியில்     ஆதி   காலத்தில்  இருந்தே    சாதிப்  பிரிவுகள்   இருந்ததை   யூகிக்க   முடிகின்றது.   நம்   தமிழர்  மத்தியில்      அவர்களின்   பெரும் பேறான       இந்துத்துவப்   பங்களிப்பினால்      இந்தச்   சாதிமுறை     வலுப்பெற்றிருக்கின்றது    என்றுதான்   கருதவேண்டியிருக்கின்றது என்று    கூறும்   ஆசிரியர்    ‘முற்காலத்தில்   சாதியமைப்பு   ஆனையிறவுக்    கடலுக்கு   அப்பால்   மட்டுமே    இருந்தது.    இப்போது  இங்கிலாந்து,   ஜெர்மனி ,பிரான்ஸ் ,  கனடா   என்று     உலக   நாடெல்லாம்   பரவியிருக்கின்றது.’ வேறு  ஒருவர்   பேசியதையும்    குறிப்பிடுகின்றார்.
            மிசனரிமார்,      1800ல்    இலங்கையில்    கால்  பதித்ததும்    ,தாழ்த்தப்பட்டோரின்    கல்வி   முன்னேற்றத்துக்கு   வலுச்   சேர்த்ததையும்  ஆசிரியர்    மறக்கவில்லை.  அந்நாட்களில்   உறவினர்களின்   வீடுகளில்   தங்கியே   பலர்   படித்து   முன்னேறியிருக்கின்றனர்  . என்   தங்கையொருவரின்     கணவரும்  அவர்  சகோதரிகளும்    எம்.சி  .சுப்ரமணியத்தின் வீட்டில்    தங்கிப்   படித்தது பற்றியும்    கேள்விப்   பட்டிருக்கின்றேன். இன்றைய   நாட்களில்   இத்தகைய   உறவுப்பாலம்     தகர்ந்து   சுக்கு  நூறாகிக்   கொண்டிருப்பதை   அவதானிக்கின்றோம். நடைமுறைச்   சாத்தியத்துக்கு   அவையெல்லாம்   இன்று   கனவாகிவிட்டன.
          ஆசிரியர்   குறிப்பிடுவதுபோல     அவலப்  பயணம்   செய்து  கல்லூரிப்படிப்பு    வரை  ரவியும்   , அவர் போன்றவர்களும்    பட்ட  துன்பங்கள்    கண்முன்னே   விரிகின்றன.   கையில்   மைக்கூடு   ஏந்தி   ,இன்னோர்   கையில்    புத்தகங்கள்    சுமந்து     நீண்ட   நெடுந்தூரம்   கால்   நடையாக …அவர்கள்    கடந்த   ஒவ்வொரு    பயணமும்   துன்பம்   நிறைந்தவையே.   படித்து    முன்னேற   வேண்டும்  என்ற  தீராத   வெறிதான்   அவர்களுக்குள்    கொழுந்து   விட்டெரிந்தது.        படிப்பை   முடித்தபின்     ஆசிரியப்  பயிற்சி     பெறுவதற்கே  ரவி   போன்றோர்   போராட வேண்டியிருந்தது . ஒன்றில்   மத   அடிப்படை   அல்லது    சாதி   அடிப்படை  என்று   இவையெல்லாம்   தாண்டி   இவர்கள்   தலை  நிமிர்ந்ததைப்     படிக்கும்   எமக்கே    மூச்சுத்   திணறுவதுபோல்   இருக்கின்றது.  படிக்கும்   காலமெல்லாம்  நடை…நடை   என்றே  இவர்களின்     வாழ்நாள்   கழிந்திருக்கின்றது.
            அந்த   நிலை    இன்று   இல்லாவிடினும்   சாதி  என்ற   பூதம்   எம்மவர்   மத்தியில்   வேரூன்றி   இருப்பதை    யாரும்  மறுக்காதீர்கள் . அது   மாற்று   மருந்தில்லாத   கொடும்   வியாதி போல்   எம்மவர்   எங்கு   சென்றாலும்   காவப்படுகின்றது. அப்போதெல்லாம்   தேவை   வரும்போதுதான்     பிறப்புப்    பதிவு    தெரிய   வரும்.       பெயர்   பதிவு   செய்யும்      அன்றைய  விதானைமார்     சாதிவெறி    மிகுந்த    வெள்ளாளர்களே.      தாழ்த்தப்பட்டோருக்குப்     பிறக்கும்    குழந்தைகளுக்குப்     பெற்றோர்    எத்துணை    அருமையான    பெயர்களைக்    கொடுத்தாலும்      அவர்கள்   வேண்டுமென்றே    கந்தன்,   பூதன்  ,  கட்டையன்,   பூதி . மாதி   என்று    தம்      தடிப்பு   மிகுந்த   சாதித்தடிப்புடன்    என்றே   பதிவார்கள்.    இராசன்   என்கின்ற   ரவிக்குப்   பள்ளித்   தேவைக்குப்    பிறப்புப்பத்திரம்  எடுக்கப் போன போதுதான்  ,’கணபதி’  என்று   பதியப்பட்டிருப்பது     தெரியவருகின்றது.   பின் இந்தப்  பெயரோடு     அவன்   பட்ட   கண்ணீர்க்   கதையும், அவன்    பெயரை   மாற்ற   அவன்   தாய்  பட்ட  சிரமங்களும்    ஏராளம்.  சாதிவெறியின்    உச்சகட்டம்   பார்த்து   எம்மைக்   கோபம் பிடித்தாட்டுகின்றது.
          ஈற்றில்   கிறிஸ்தவ    மதத்துக்கு   மாறியே     ரவி    ஆசிரியப்  பயிற்சிக்    கல்லூரியில்   சேரமுடிந்தது.  அங்கு   கூட ,ஒடுக்கும் சாதியினரால் ஏற்பட்ட    அவமானங்களையும் , அதனால்   உண்டான    மன   உளைச்சல்களையும்   ஆசிரியர்   அழுத்தமாகப் பதிவிட்டிருக்கின்றார் . அது  மட்டுமல்ல    பெயர்   மாற்றிய  பிறகு கூட   ‘தந்தையின்   தொழில்’  என்ற   பகுதியில்    வேண்டுமென்றே  கள்   இறக்குதல்  ,மேளமடித்தல்,   முடி  வெட்டுதல்    என்று    பிறப்புச்சான்றிதழ் பதிவோர்     எழுதிவிடுவதால்    பின்னாட்களில்        ரவி   போன்றோர்       வேலை  தேடுவதற்கும்    சிரமப்படவேண்டியிருந்தது.
           கோவில்களுக்குள்        சென்று   வழிபடுவது    தடை   செய்யப்பட்டிருந்ததால்    ,’சிங்கள   வைரவர்’   என்ற   கோவிலை   உருவாக்கி    ரவியின்   சமூகத்தினர்    வழிபட்டிருக்கின்றனர். ஆனால்   ‘நளவர்கள் தான்  சிங்களவர்’ என்று    ஏன்   குறிப்பிட ப்படுகின்றது      என்பது   எனக்குப்   புரியவில்லை.   இது   நம்பக்கூடியதாய்    எனக்குப்   படவில்லை.
         சாதி   வெறிக்  கொடுமையினால்     மார்க்சிசக் ,கம்யூனிஸ்ட்   கட்சிகளின்மேல்    ஈர்ப்பு   ,அதனால்    ஏற்பட்ட   தொழிற்சங்கப்    போராட்டங்கள் ,   ஆலயப்  பிரவேசங்கள்   ,மக்களை   விழிப்புற      வைக்கும்   நாடகங்கள்   போடுதல்   விபரிக்கப்படுகின்றன .இதில்   இவர்   ஞாபகத்திறன்      வெளிப்பட்டபோதும்   ,பல  இடங்களில்   சுவைபடாமல்     ,தெளிவின்றி   வருவதும்    ஒரு  குறையே.   சின்ன   வேலைகள்   தேடுவதற்கே   …..அதில்   கால்   ஊன்றி  நிலைபெறவே     தடுமாறிய    ஒரு   சமூகம்    இன்று   டாக்டர் ,  எஞ்சினியர்    என்று    தலை   நிமிர்ந்து   நிற்பதே   பெரும்   மகிழ்ச்சிக்குரியதாகும்.   பருத்தித்துறையில்   இருந்து      யாழ் – பலாலி   வீதியில்  பரவியிருக்கும் இவர்கள் அப்பகுதியில்  ‘சன்மார்க்க  ஐக்கிய   வாலிபர்  சங்கம் ‘என்ற   ஒரு   சங்கக்   கட்டிடத்தை   நிறுவினதையும்  அறிகின்றோம் .  இடங்களுக்கே    போய்    ஒவ்வொரு   காட்சியையும்    உள்வாங்குவதுபோல்     எம்  முன்னே   காட்சிகள்    விரிகின்றன.
              சாதிக்    கொடுமைகளை   எதிர்த்து   முன்னேறி    வாழுபவர்கள்  மத்தியிலும்   சாதிப்பாகுபாடும்,  ஒருவித  பார்ப்பனியமும்    இருப்பதை   நான்   கவனித்திருக்கின்றேன்.    ஆசிரியரே   ஓரிடத்தில்   இதைக்   குறிப்பிடுகின்றார்,    கவனித்துப்   பாருங்கள்.  ,’கலிகை  என்ற   இடத்தில்  இருந்து   பெண்கள்   குறுக்குக்  கட்டுடன்   கற்கோவளத்துக்கு    வந்து  மீன்  வாங்கித்  தலையில்   சுமந்து   விற்பர்  .இவர்கள்   பின்  தள்ளப்பட்ட     நளவர்   சமூகத்தினர்’ என்று   அவரை   அறியாமலே    ஆதிக்கசாதியினரின்   கருத்தை    வெளியிடுகின்றார்.   என்   ஞாபகத்தில்   இருக்கும்  ஒன்றையும்   இங்கு   குறிப்பிட    விரும்புகின்றேன்.   1975ம்   ஆண்டுப்பகுதியில்    இயக்கவேலையாக    நானும்   சிலரும்    பலாலி   வீதியில்   வசித்த   எமது   இயக்கத்  தோழர்   வீட்டுக்குப்   போயிருந்தோம்.தோழரின்   அம்மாவும்   எம்முடன்   பேச்சில்   கலந்துகொண்டார் .பேச்சின் இடையில்   அவர்கள்   வீட்டுக்குக்   கொஞ்சம்   தள்ளி   வசிப்பவர்   ஒருவரின்   பெயரும்   வந்தது.  அப்போது   நான்  ,’அவர்   உங்கள்   சொந்தமா ‘ என்று   கேட்டுவிட்டேன்.   அந்த   அம்மா   சன்னதம்   வந்ததுபோல்  கத்தி   ,’அவங்களை   நாங்கள்   படியிலும்   ஏத்தமாட்டம்  …அவங்கடை  வீட்டில்   நாங்கள்   செம்பு-தண்ணி   எடுக்கமாட்டம்.’ என   என் மீது   கோபப்பட்டார்.   இதற்கு   என்ன   சொல்வதாம்…  எங்கேயும்  . ..எல்லோரிடமும்   ஊன்றிவிட்ட   இந்த    அநாகரிகம்    என்றுதான்    ஒழியப்  போகின்றதோ?

நன்றி : ஆக்காட்டி கார்த்திகை -மார்கழி 2014

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்