/* up Facebook

Dec 31, 2014

கவிதை மொழியாக்கமும் மொழிபெயர்ப்புக் கோட்பாட்டுப் பிரச்சினைகளும்: சில அனுபவக் குறிப்புகள் - லறீனா ஏ.ஹக்


“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச் 
செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” என்றும்,

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் - தமிழ்மொழியில் 
பெயர்த்தல் வேண்டும்!”  என்றும்

கூறினான், பாரதி. பிற மொழிகளில் இருக்கும் கலைச் செல்வங்களைத் தமிழில் பெயர்த்து வழங்கி, நம் தாய்மொழியை வளம்பெறச் செய்ய வேண்டும் என்று பாரதி கண்ட கனவு தற்போது நனவாகிக் கொண்டிருக்கின்றது எனலாம்.
மொழிபெயர்ப்பு என்றால் என்ன என்ற கேள்விக்குப் பல்வேறு அறிஞர்கள் பலவிதமான வரைவிலக்கணங்களைக் கூறியுள்ளனர். சுருக்கமாக, “மூலமொழியில் உள்ள ஒருதகவலை அல்லது விடயத்தை இலக்குமொழிக்கு மாற்றுகின்ற ஒருமொழியியல் நடவடிக்கையே மொழிபெயர்ப்பு” எனப்படுகின்றது. இது, இலக்கியமொழிபெயர்ப்பு, சட்டமொழிபெயர்ப்பு, அறிவியல் மொழிபெயர்ப்பு என பலவகைப்படும். 

மொழிபெயர்ப்பின் மூலம் ஒருமொழி செழுமையடைகின்றது. புதியசொற்கள், புதியகருத்தியல்கள், புதியகலாசாரம், புதியஅனுபவங்கள் என்பன மொழிபெயர்ப்பின் மூலம் மற்றொரு மொழிக்குள் வந்து சேர்கின்றன. அம்மொழிக்கு வளம்சேர்க்கின்றன.

கலை இலக்கியங்கள் தம்மளவில் தனித்துவம் வாய்ந்தவை. கலையைக் கலை அல்லாதவற்றில் இருந்து அடிப்படையில் வேறுபடுத்திக்காட்டும் கலையம்சத்தைத் தம்வசம் கொண்டவை. எனவேதான், பொதுவாக இலக்கிய மொழிபெயர்ப்பு, அதிலும் குறிப்பாகக் கவிதை மொழிபெயர்ப்பு மிகவும் சிக்கலானது எனப்படுகின்றது. காலத்துக்குக் காலம் அறிஞர்களிடையே கவிதை மொழிபெயர்ப்பு சாத்தியமா இல்லையா என்ற நீண்டபல விவாதங்களும் மாறுபட்ட கருத்தாக்கங்களும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கவிதை மொழிபெயர்ப்பின்போது கவித்துவம் இழக்கப்படுவதாகச் சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர், கவிதையின் உள்ளடக்கத்தை மொழிபெயர்க்க முடிந்தபோதிலும், அதன் வடிவஅழகு இழக்கப்படும் என்கின்றனர். மூலமொழியின் உருவ, உள்ளடக்கத்தை அப்படியே பிரதியீடு செய்யத்தக்க சாத்தியப்பாடு இலக்குமொழியிலும் இருந்தால் மட்டுமே கவிதை மொழிபெயர்ப்பு சாத்தியம் என்று வேறொரு சாரார் கருதுகின்றனர்.

பீட்டர் நிவ்மார்க் (1988:5), “ஒருமொழியில் எழுதப்பட்ட பிரதியை மற்றொரு மொழியில் பிரதியீடு செய்யும் கலையே மொழிபெயர்ப்பாகும்" என்கின்றார். கலை எனும்போது, “எல்லாக் கலைவடிவங்களுக்குரிய பொதுப்பண்புகளும் தனித்தனிக் கலைவடிவத்துக்கு உரிய சிறப்புப்பண்புகளும் உள்ளன. உதாரணமாக, நாவலும் சிறுகதையும் இலக்கியம் என்றவகையில் அவற்றுக்கே உரிய சில சிறப்புப்பண்புகளையும் கொண்டுள்ளன. இப்பண்புகள் உருவம், உள்ளடக்கம் இரண்டும் சார்ந்தவை ஆகும்…… ஆகவே, கலையம்சம் என்பது உருவம் மட்டுமின்றி உருவம், உள்ளடக்கம் இரண்டையும் குறிக்கும் என்பது தெளிவு” என்கிறார், பேராசிரியர் எம். ஏ.நுஃமான் (1984: 74-76)

எனவே, இந்தப் பின்னணியில் நாம் கவிதை எடுத்துக்கொண்டால், அதன் வடிவமும் (form) பொருளும் (meaning) ஒன்றுடனொன்று மிக நெருக்கமான தொடர்புடையனவாக இருக்கின்றன. ஒரு கவிதையில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தப்பாடுகளையும் காணமுடியும். காளமேகப் புலவரின் சிலேடைப் பாடல்கள் இதற்கு நல்ல உதாரணம். அவ்வாறே, நவீன கவிதைகளிலும்கூட மேலோட்டமான நேர் சொற்பொருளுக்கு அப்பால், ஆழமான அரசியல் விமர்சனம் அல்லது சமூக விமர்சனம் பொதிந்திருக்கும் ஏராளமான கவிதைகளை நாம் வாசித்திருப்போம். வகைமாதிரிக்கு, பேராசிரியர் எம். ஏ. நுஃமானின் “புத்தரின் படுகொலை”, ஆளியாளின் “மன்னம்பேரிகள்”, முல்லை முஸ்ரிஃபாவின், “நீ வரும் காலைப்பொழுது” முதலான பல்வேறு கவிதைகளைக் குறிப்பிடலாம். இத்தகைய ஒரு பிரதியை நாம் மொழிபெயர்க்கும்போது, அதன் கவித்துவ வீச்சுடன் கூடிய உள்ளடக்கம், கலையம்சம் பொருந்திய உருவ அமைதி ஆகிய அவ்விரண்டையும் இலக்குமொழியில் ஒருமித்துக் கொண்டுவருவது மிகவும் சிரமமானதாகும். இதனாலேயே ரோமன் ஜெகொப்ஸன், “கவிதை மொழிபெயர்க்கப்பட முடியாதது”என்கிறார் (1987:434). அதாவது, ஒரு கவிதை அதன் மூலமொழியில் இருந்து இலக்குமொழிக்கு மாற்றப்படும் போது, அது ஒரு புத்தாக்கமாகவே பரிணமிக்கிறது என்பதே இதன் உள்ளர்த்தமாகின்றது எனலாம்.

கு.ப.ரா.  குறிப்பிடும் போது, “மொழிபெயர்ப்பே ஒரு முறையில் கடினமான இலக்கிய வேலை; அது முதல் நூல் எழுதுவதைக் காட்டிலும் அதிகமான தொல்லை கொடுப்பது. சீமை ஓட்டைப் பிரித்துவிட்டு, கீற்று வேயும் வேலை போன்றது. ஒரு கட்டுக்கோப்பை ஏற்றுவதில் எப்பொழுதுமே பூரண வெற்றிகொள்ள முடியாது. அடிக்கு அடி நிர்ப்பந்தம், எல்லைக்கோட்டைத் தாண்டினால் மொழிபெயர்ப்பில்லை, வியாக்கியானம்” என்கிறார் (மொழிபெயர்ப்புக் கலை, 2005:18).

இதேவேளை, ஜேம்ஸ் ஹோம்ஸ் இவ்வாறு கூறுகின்றார்: “ஒரு குறித்த கவிதை, வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களால், வெவ்வேறு விதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவற்றுள் எந்த ஒரு கவிதை மொழிபெயர்ப்பும் மூலப்படைப்பை முற்றிலும் ஒத்ததாக ஒருபோதும் அமையமாட்டாது. கவிதை உட்பட, எந்த ஒரு பிரதியும் பலவிதமாய்ப் பொருள்கொள்ளப்படுதலால், சாத்தியமான மொழிபெயர்ப்புக்கள் பல எழலாம்” (James S Holmes, 1994:50-51). இக்கூற்றுக்கு எடுத்துக்காட்டாக, நம்நாட்டுக் கவிதை மொழிபெயர்ப்பாளர்கள் இருவரின் ஒரே கவிதைக்கான இரு மொழிபெயர்ப்புக்களின் சில அடிகளைப் பார்ப்போம்:

மஹ்மூத் தர்வீஷ் எனும் பலஸ்தீனக் கவிஞரின் “கைக்குட்டைகள்” எனும் கவிதையை பேராசிரியர் எம். ஏ. நுஃமான் இப்படி மொழிபெயர்க்கிறார்:
கைக்குட்டைகள்
உயிர்த்தியாகிகளின் கல்லறை போன்றது உன் மௌனம்
அது பெருகிச் செல்கிறது, 
பரவிச் செல்கிறது.
ஒரு பறவைபோல் உனது கைகள் என் மார்பின்மேல்
எவ்வாறு தங்கியிருந்தன என்பதை
இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
அன்பே,
மின்னலின் உழைப்புபற்றி வருந்தாதே
இருள் கவிந்த அடிவானங்களுக்கு அதை விட்டுவிடு
வேறு எண்ணங்களுக்கு உன்னைப் பயிற்று:
குருதி தோய்ந்த முத்தங்கள் பற்றிய எண்ணங்கள்,
வறட்சியான நாட்கள்,
மரணம், எனது மரணம், மற்றும்
எல்லா மரணத் துயரங்களுக்கும் உன்னைப் பயிற்று. (1966)

இனி நாம், பண்ணாமத்துக் கவிராயரின் மொழிபெயர்ப்பைப் பார்ப்போம்: 

கைக்குட்டைகள்

“தியாகிகளின்
கல்லறை போன்றது
உன்மௌனம்.

உன் கரங்கள்
என் மார்பில்
பறவையாய்ச்
சிறகடித்துக் கொண்டதை
இப்போது
நினைக்கின்றேன்.

காதலி,
மின்னலின் பிரசவம் பற்றிக்
கவலைப்படாதே.
மங்கலாய்த் தெரியும்
அடிவானத்திடம் 
அதனை விட்டு விடு

வேறு நினைவுகளுக்காய்,
இரத்தந் தோய்ந்த முத்தங்கள்…
வரண்ட நாட்கள்…
என் மரணம்…
சோகத்தால் உண்டாகும் வேதனை
போன்ற
வேறு நினைவுகளுக்காய்
உன்னைப்
பயிற்றிக்கொள். (1993)

உண்மையில், ஒரு குறிப்பிட்ட மொழிப் பிரதியில் உள்ளார்ந்து காணப்படும் உணர்வுநிலையை, அதன் கலாசாரப் பின்புலத்தை, அது உணர்த்தி நிற்கும் அரசியலை, அம்மொழி சார்ந்த குறியீட்டுப் படிமங்களை அல்லது உவம உருவகங்களை எல்லாம் கவிதைக்கே உரிய அழகியல் அம்சங்கள் கெடாத வகையில், மற்றொரு மொழிக்குக் கொண்டுவருதல் என்பது மிகப் பெரும் சவால்தான் என்பதில் ஐயமில்லை. எனவேதான், 'கவிதை மொழிபெயர்ப்பு' என்ற சொல்லாடலைவிட 'கவிதை மொழியாக்கம்' என்பது அதிகப் பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது. 

ஒரு குறித்த மக்கள் குழுமத்தின் வாழ்வுமுறையை அடியொட்டி எழும் கலாசார வெளிப்பாடாகவே ஒரு படைப்பாக்கம் உருப்பெறுகின்றது. அவ்வாறு உருவாக்கம் பெறும் மூல மொழியின் தனிச்சிறப்பு வாய்ந்த கூறுகளே அவ் அந்த மொழிக்குச் சிறப்பும் தனித்தன்மையும் வழங்குவன. அம்மொழியில் வழங்கும் சொல், அதன் உச்சரிப்பு, தொனி, தொடர்புபடுத்தப்படும் விதம் என்பன அவ்வந்த மொழிக்கு வாலாயமானவையாகவே இருக்கும்.

ஒரு சிறு உதாரணம், ஷேக்ஸ்பியரின் மெக்பத் நாடகத்தில் இரண்டாம் காட்சியில் ஓரிடம். மன்னன் டங்கனின் (Duncan) பாசறை முன்னால் போர்வீரன் ஒருவன் உடம்பில் குருதிவழிய வந்து நிற்கிறான். இரத்தம் வழிய வந்து நிற்றல், என்ன கெட்ட செய்தியோ என்ற எரிச்சல் உணர்வின் வெளிப்பாடு என இருபொருள்படுமாறு ஷேக்ஸ்பியரின் வரி அமைகிறது. மன்னன் தன்னருகில் இருப்பவர்களிடம் கேட்கிறான், “What bloody man is that?”.  இதனை, இரத்தம் தோய வந்து நிற்கும் இவன் யார்?” என்றும், “யாவன் அந்தக் குருதியான்?” என்றும் சில மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்துள்ளனர். ஆங்கிலத்தைப் பொறுத்தவரையில், பிளடி ஃபூல், பிளடி ஃபெல்லோ முதலான சொற்களில் அமைந்துள்ள bloody என்ற சொல் நேரடியாக இங்கே இரத்தத்தைக் குறிப்பதாக அமைவதில்லை. அவ்வாறே, ஓ! ஹெவன்ஸ்! என்பதை “ஓ! வானங்களே!” என்றோ, “ஓ! சுவர்க்கங்களே!” என்றோ மொழிபெயர்ப்பது பொருத்தமாய் இராது.

மொழிபெயர்ப்பில் உள்ள அடிப்படையானதும் பிரதானமானதுமான சவால், இரண்டு மொழிகளும் சார்ந்துள்ள கலாசாரங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை நிரப்புவதுதான். இந்தச் சவால் மொழியாக்க முயற்சிகளில் இருந்துகொண்டேதான் இருக்கும். இந்த இடைவெளியை இட்டு நிரப்புவதற்கான சவாலை எதிர்கொள்ளும் ஒரு மொழிபெயர்ப்பாளர் பொருத்தமான “சமனிகளைக்” கண்டறிதலின் மூலம் இப்பிரச்சினையை எதிர்கொள்கின்றார்.

மொழிபெயர்ப்புக் கோட்பாட்டுச் சர்ச்சைகளில் Faithfulness எனும் உண்மையாய்/விசுவாசமாய் இருத்தல் என்ற அம்சம் தொன்றுதொட்டுப் பேசப்பட்டு வருகின்றது. ஒரு மொழிபெயர்ப்பாளன் மூலநூல் பிரதிக்கும் அதன் மொழிநடைக்கும் விசுவாசத்தோடு இயங்கவேண்டுமா, இலக்குமொழியில் உருவாக்கப்படும் பிரதிக்கும் அதன் மொழிநடைக்கும் ஏற்ப இயங்கவேண்டுமா என்ற அடிப்படையில் இந்த சர்ச்சை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது எனலாம். இரண்டு விதமான கருத்துநிலைகளையும் ஆதரிக்கக்கூடிய மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கவே செய்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், வங்கம்-தமிழ் ஆகிய இருமொழிகளுக்கிடையிலான மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டுவரும் திரு. சு. கிருஷ்ணமூர்த்தி, “மொழிபெயர்ப்பு என்பது எப்போதுமே நூறுவிழுக்காட்டை எட்டமுடியாத ஒன்று. ஆனால், எந்த அளவுக்கு நூறுவிழுக்காட்டை நெருங்கியுள்ளோம் என்பதில்தான் வெற்றி. ஆகவே, ஒரு மொழிபெயர்ப்பாளன் மூலஆசிரியனுக்கு உண்மையானவராக இருக்கவேண்டும் என்பது என்கருத்தாகும்” (மொழிபெயர்ப்புக் கலை, 2005:153) என்கின்றார்.

அதேவேளை, மொழிபெயர்ப்புக்கான 2002 ஆம்ஆண்டு சாகித்திய அகாடெமி விருதுபெற்ற திரு. எச். பாலசுப்ரமணியன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “ஒரு மொழிபெயர்ப்பாளன் மூலநூல் ஆசிரியனுக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்பதைவிட, வாசகனுக்குத்தான் உண்மையாக இருக்கவேண்டும். ஒருபடைப்பைப் படைத்து முடித்தபிறகு படைப்பாளியினுடைய வேலை முடிந்துவிடுகிறது. அதற்குப்பின் அதைப்பொருட்படுத்துவது வாசகன்தான். வாசிப்புச் செயற்பாங்கில்தான் அர்த்தம் உருவாகிறது. எனவே, மொழியாக்கம் செய்பவனின் கடமை என்பது, மூலஆசிரியனுக்கு விசுவாசமாய் இருப்பதைவிட, வாசகனின் புரிதலுக்குத் துணைசெய்யவேண்டும் என்பதில்தான் அதிகம் இருக்கிறது. அப்படிச் செயல்படும்போது அதில் சிலமாற்றங்களை – மொழிநடையில் அல்லது சொல்லாடல்களில் அல்லது வெளிப்படுத்துவதில்- இலக்குமொழிக்கு ஏற்ப சிறிதளவு மாற்றங்களைச் செய்யசுதந்திரம் எடுத்துக்கொள்வதில் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன்.” (மொழிபெயர்ப்புக் கலை, 2005:153) என்கின்றார்.

உமர்கையாமின்,

“A Book of Verse

A flask of Wine”என்ற ருபைய்யாத் அடிகளை,

“கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மது உண்டு” 


என்று தமிழாக்கம் செய்த கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் வழிமுறை, இலக்கு வாசகப்பிரதிக்கு அதிகவிசுவாசம் உடையதாய் மொழிபெயர்ப்பு அமைந்துள்ளமைக்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.  அவ்வாறே,


There was a young lady in Niger

Who smiled as she rode on a tiger

They returned from the ride

With lady inside

And the smile on the face of the tiger என்பதை,


புன்சிரிப்புப் பூத்தபடி வீரி

போகின்றாள் புலிமிசை சவாரி

பெண் அதனின் பேழ்வயிற்றுள்

புக்கிருந்தாள் மீள்கையில் அப்

புன்சிரிப்போ புலி முகத்தில் ஏறி


என்ற ஈழத்தின் மஹாகவி ருத்திரமூர்த்தியின் “லிமரிக்” எனப்படும் குறும்பா மொழியாக்கம் விதந்துரைக்கத்தக்கது. “மொழிபெயர்ப்பானது இலக்குமொழியில் சுயமாகப் படைக்கப்பட்டது போலத் தற்புதுமையுடன் தோற்றமளிக்க வேண்டும்” (நுஃமான்,எம்.ஏ., 1997:104) என்ற பேராசிரியர் எம். ஏ. நுஃமானின் கூற்று இங்கு கவனிக்கத்தக்கது.

இலங்கையைப் பொறுத்தவரையில், ஆங்கிலத்தில் இருந்தும் சிங்களத்தில் இருந்தும் மொழியாக்கக் கவிதைகள் தமிழுக்கு வந்தடைந்துள்ளன. நவாலியூர் நடராசன், பேராசிரியர் சி. சிவசேகரம், பேராசிரியர். எம்.ஏ. நுஃமான், க. யேசுராசா, பண்ணாமத்துக் கவிராயர், அல் அஸுமத், கவிஞர் ஏ. இக்பால், கெக்கிராவை ஸுலைஹா, எம்.கே.எம். ஷகீப், ரிஷான் ஷெரீஃப் முதலான பலர் கவிதை மொழியாக்கத்தில் பங்களிப்புச் செய்தவர்களாவர். அரபு மொழியில் இருந்து சில கவிதைகளை ஏ.சி.ஏ. மஸாஹிர் மொழிபெயர்த்துள்ளார். இவ்வாறு ஆங்கில – சிங்கள - அரபு மொழிகளில் இருந்து மொழியாக்கம் வழியே தமிழுக்குக் கவிதைகள் வந்துசேர்ந்து, நமது தாய்த் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்து வருகின்றன. அவ்வாறே, சமூகங்களுக்கிடையில் கலாசாரப் பரிவர்த்தனைக்கான பாலமாகவும் அவை தொழிற்பட்டு வருகின்றன. பன்மொழிச் சூழலில் இடம்பெறும் இத்தகைய இலக்கியப் பரிவர்த்தனைகள், சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றுவதால், மொழியாக்கம் தொடர்பான சவால்களை வெற்றிகொண்டு அப்பணியில் அதிக முனைப்புக் காட்டுவது காலத்தின் தேவையாகும்.

இங்கு நாம் மற்றோர் அம்சம் குறித்தும் கவனம் செலுத்தவேண்டி இருக்கின்றது. அதாவது, இலக்கிய மொழியாக்கம் ஒன்றை மேற்கொள்ளும்போது, மூலமொழிக் கலாசாரத்தின் தனித்துவக் கூறுகளை இலக்குமொழி வாசகன் அறிந்து இன்புறும் வகையில், அது இன்ன கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் மொழிபெயர்ப்பே என்பதை உணர்த்தும் அந்நியத்தன்மை அதாவது, foreignness பேணப்பட வேண்டுமா, அல்லது, இலக்குமொழி வாசகன் அதனைத் தன் மொழியில் சுயமாய் எழுந்த படைப்புபோல் உணரச் செய்யும் வகையில் மொழியாக்கத்தின் இயல்புத்தன்மை அதாவது naturalness பாதுகாக்கப்பட வேண்டுமா என்ற இருமுனைப்பட்ட கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததே.

எடுத்துக்காட்டாக, ஆபிரிக்கப் பழங்குடி மக்கள் தமது விருந்தினரை வரவேற்குமுகமாக “கொக்கோ நட்” எனும் கொக்கோ விதையை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வை ஒரு சிங்கள மொழிபெயர்ப்பாளர் தமது வாசகருக்குப் புரியும் வகையில், “வெற்றிலை வழங்கி வணங்கி வரவேற்றனர்” என்றோ, ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாளர், மஞ்சளும் குங்குமமும் வழங்கிப் பன்னீர் தெளித்து வரவேற்றனர்” என்றோ மொழிபெயர்ப்பதாய்க் கொள்வோம். இது, இலக்கு வாகசருக்குப் பிரதியை மிக நெருங்கவைக்கும் நோக்கில், இயல்புத்தன்மையோடு மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாய் உணரப்படலாம். ஆனால், மொழிபெயர்ப்பு என்பது, ஒரு குறித்த கலாசாரத்தை மற்றொரு கலாசாரத்தைப் பின்புலமாய்க் கொண்டுள்ள மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் ஊடகம், ஒரு கலாசாரப் பாலம் என்ற கருத்தியல் இங்கு மீறப்பட்டுள்ளது. இது, இரண்டு வகையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

1. மூலமொழிக் கலாசாரக் கூறுகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை இலக்கு மொழி வாசகர்கள் இழக்கின்றனர்.

2. தமது விருந்தினரை வரவேற்கும் அதேவகையான  சம்பிரதாயம் மாற்றமின்றி அப்படியே  ஆபிரிக்க ஆதிக்குடிகள் மத்தியிலும் வழங்கிவருகின்றது என்ற பிழையான முடிவுக்கு அவர்கள்  வரநேர்கின்றது.

இந்நிலையில், ஒரு மொழிபெயர்ப்பாளர் எந்தக் கோட்பாட்டைச் சார்ந்து நிற்க வேண்டும் என்ற முக்கியமான கேள்வி எழுகின்றது. மூலப் படைப்பின் உள்ளடக்கத்தைத் தருவதில் வழுக்களோ திரிபுகளோ நேர்ந்துவிடாமலும், மொழியமைப்பு சார்ந்த நடையியல் அம்சங்களில் இலக்கு வாசகனை நெருங்கி, மூலப் படைப்பின் கருத்தைத் துல்லியமாகத் தருவதாகவும், மிக நுணுக்கமான ஒரு சமநிலை பேணப்படுவதே இங்கு மிக இன்றியமையாததாகும் எனலாம்.

ஆண்ட்ரே லெஃபிவெரே சுட்டிக்காட்டுவது போல, ஒரு மூலப் படைப்பு என்பது வெற்றிடத்தில் இருந்து தோன்றுவதில்லை. மாறாக, தான் சார்ந்த சமூக கலாசாரப் பின்புலங்களின் செல்வாக்குக்கு உட்பட்டே பிறக்கின்றது. வித்தியாசமான கருத்தியல்களின் சங்கமத்தை நாம் அதில் காணலாம். எனவே, ஒரு மூலமொழிப் படைப்பை வாசிக்கும் மொழிபெயர்ப்பாளன், அதன் பின்னணியில் உள்ள கருத்தியலை, அரசியலைப் புரிந்துகொள்வது அவசியமாகின்றது.

இனி நாம் சில கவிதை மொழியாக்கங்கள் குறித்து நோக்குவோம்:

සිනාමලීගේ කතාව

කුරුඳු වත්තේ කොමසාරිස් බංගලාවේ

බේබි බලාගන්න වැඩට කොළඹ ගියා සිනාමලී

තොලේ සිනා කිරි විසිරි ඇස් සිරි සිරි නිල්ල වැදී

මූන පුරා මල් පිපිරී කොළඹ ගියා සිනාමලීஎன்ற கவிதையின் தமிழாக்கம் இப்படி அமைகிறது:


கறுவாக் காட்டிலுள்ள
‘பெரியவரின்’ பங்களாவில்
பிள்ளை பார்க்க ஆயாவாய்
கொழும்புக்குப் போனாய், நீ.

இதழினிலே புன்முறுவல்
இருவிழியில் பளபளப்பு
முகமலரில் விகசிப்பு
கொழும்புக்கு நீ போனாய்.

எனினும், மூலமொழியான சிங்களக் கவிதையில் குதியாட்டம் போடும் கவித்துவ உயிர்ப்பைத் தமிழில் முழுமையாய்க் கொண்டு வந்திருப்பதாய் உணர முடியவில்லை. இதனையே நாம் translation loss அதாவது, மொழிபெயர்ப்பில் இழப்பு என்கின்றோம். ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளரைப் பொறுத்தளவில், மொழிபெயர்ப்பின் போதான இழப்பினைக் குறைப்பதற்கான முன்னெடுப்புக்களில் உச்சபட்ச கரிசனை காட்டுவார். உண்மையில், மொழிபெயர்ப்பின் போதான இழப்பினைத் தவிர்ப்பதற்கு எந்த விதமான இயற்கை வழிமுறையும் இல்லை என்றே கூறவேண்டும். அத்தகைய இக்கட்டான நிலையைத் தவிர்த்தலோ, முற்றாகத் தீர்த்தலோ சாத்தியமில்லை. இதுபற்றி ஹேர்வேயும் ஹிக்கின்ஸும் குறிப்பிடுகையில்,

“மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ளும் மொழிபெயர்ப்பு இழப்பினை முற்றுமுழுதாக இல்லாமல் ஆக்குவதல்ல. மாறாக, மூல மொழியில் இருந்து இலக்குமொழிக்குப் பரிமாற்றத்தக்க மிக இன்றியமையாத கூறுகள் எவை, அவற்றைப் பரிமாற்றுகையில் எத்தகைய அம்சங்களை இழப்பது ஏற்புடையதாக அமையும் என்பதைத் துல்லியமாகத் தீர்மானிப்பதன் மூலம், மொழிபெயர்ப்பு இழப்பினை அதிகபட்சம் குறைப்பதே ஆகும்” (Hervey & Higgins 1992:24) என்று வலியுறுத்துவது இங்கு நோக்கத்தக்கது. 

තුන් අවුරුද්දකට පස්සේ ගෙදර ආවේ
කළු රෙද්දක් පොරවාගෙන අඬන ළමෙක් උස්සාගෙන
නංගියේ නුඹ ගමෙන් ගියේ
මල් බරවී මිණිමුතුවී පේරාදෙණිය වගේ
නංගියේ නුඹ ගමට ආවේ ජරාවාසවී ඇලවී
අනුරාධපුරේ වගේ
          ‹පරාක්‍රම කොඩිතුවක්කූ›
மூன்றாண்டு சென்றதன்பின்
கருஞ்சேலை ஒன்றணிந்து
வீட்டுக்கு நீ வந்தாய் – அழும்
சிசுவொன்றை உடன்சுமந்து

பெண்ணே நீ ஊரிருந்து
போகையிலே பூத்துக் குலுங்குகின்ற
பேராதனை போலிருந்தாய்!
ஊர்திரும்பி வருகையிலோ;
சிதைந்தழிந்து போயிருக்கும்
அனுர(ராத)புரம் போலுள்ளாய்! 


பராக்கிரம கொடிதுவக்கு
பராக்கிரம கொடிதுவக்கு இந்தக் கவிதையில், சினமன் கார்டன் என்ற கறுவாக்காடு, பேராதனை, அனுராதபுரம் முதலான இடப்பெயர்கள் தம்மளவில் வெறும் ஊர்களை மட்டுமே குறிக்காமல், முறையே, “மேல்தட்டு மக்கள் வசிக்குமிடம்”, இயற்கை வளம் கொஞ்சும் பிரதேசம், சிதைந்து அழிந்துபோய் புனருத்தாரனம் செய்ய முடியாத புராதனகால இடிபாடுகள் கொண்ட பிரதேசம் முதலான அர்த்தப்பாடுகளைக் கொண்டுள்ளன. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்மீதான பரிதாப உணர்வு வெளிப்பாடு கொண்ட இக்கவிதையில், இன்னொரு சுவாரசியமான விடயமும் உள்ளார்ந்து தொக்கி நிற்கின்றது. அதாவது, ஓர் அழகிய இளம் “பெண்” முதலில் வளம் கொழிக்கும் பூமிக்கும், பின் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டு குழந்தை பெற்றதும், இனி ஒருபோதும் புனரமைக்கப்பட முடியாத இடிந்த புராதனக் கட்டிடங்கள் நிறைந்த நகரத்துக்கும் உவமிக்கப்படுகின்றாள். இங்கு, பெண் என்பவள் பெண்ணுடம்பாகப் பார்க்கப்பட்டும் படைக்கப்பட்டும் இருப்பதன் பின்னணியில் உள்ள கருத்தியல் சார்பு எத்தகையதாக இருக்க முடியும் என்பதற்கு பெரிய ஆராய்ச்சி எதுவும் அவசியமில்லை. பராக்கிரம கொடிதுவக்கு ஓர் ஆண் கவிஞர் என்பதைப் புரிந்துகொள்வதே போதுமானது. இங்கு, அய்யப்பப் பணிக்கரின் கேள்வி முக்கியமானது. ‘இலக்கியப் பிரதி தனது மேற்பிரதியுடன் உட்பிரதி ஒன்றையும் கொண்டிருக்கும். மொழிபெயர்க்கையில் இந்த உட்பிரதி தானாகக் கொண்டுவரப்பட்டு விடுமா?’ என்று கேட்கின்றார், அவர்.

இலக்கணம், வாக்கியக் கட்டமைப்பு முறை, மரபுத் தொடர் அல்லது மொழி மரபு எனும் அம்சங்களில் மொழிகளுக்கிடையில் வேறுபாடு இருக்கும். மொழிபெயர்ப்புச் செயற்பாட்டின்போது அவை பற்றிய புரிதல் மிக முக்கியமானது. இல்லாதபட்சத்தில், மொழிபெயர்ப்பு செம்மையானதாக அமையாது. மேற்படி கவிதையில், “நங்கி” என்ற சொல் நேரடியாக உணர்த்தி நிற்கும் பொருள் தங்கை, தங்கச்சி என்பதுதான். என்றாலும், பொதுவாக சிங்களச் சமூக வழக்கில், ஓர் ஆண் அறிமுகமான/அறிமுகமற்ற பெண்ணையோ, மைத்துனியையோ, காதலியையோகூட “நங்கி” என்று அழைக்கும் மரபு உண்டு. மறுதலையாக “அய்யா” என்பது நேர்ப்பொருளில் அண்ணனைக் குறித்தாலும், காதலனை, மச்சினனை, பிற ஆடவரை சிங்களப் பெண்கள் அய்யா என்றே அழைக்கின்றனர். இதுபற்றிய தெளிவு இல்லாது இருந்திருந்தால், “நங்கி” என்ற சொல்லுக்கு, “பெண்ணே!” என்ற சொல்லைச் சமனியாகப் பெற்றிருக்க முடியாமல் போய் இருக்கும்.

அவ்வாறே, ரஸிகா தேவிகா பெரேராவின் Heart Breaking Destiny என்ற இன்னோர் ஆங்கிலக் கவிதையில், தாயால் கைவிடப்பட்டபின், மறுமணம் செய்துகொண்ட தந்தையும் தம்மைவிட்டுத் தூரமாகிவிட்டதற்குக் காரணம் தேடும் சிறுபெண் கேட்கிறாள்:

“Is the step-mother the reason?

If she is the reason, I do not hate her

……………………………………………………………………..

‘He is now not mine’, ‘she is not mine’

they gave birth to us according to an act

this is the truth, you have to believe that!”

இதனை மொழிபெயர்க்கும் போது,

“சிற்றன்னைதானோ இந்த

விரிசலின் வேர்க்கால்?

என்றாலும் அவரை வெறுத்திடல் அரிது”

………………………………………………………………….

எந்தையும் தாயும்

எனக்குரியர் அல்லர்

வெறுமனே ஓர்

உறவின் பிணைப்பே- எங்கள்

பிறப்புக்குப் புள்ளியிட்டது,

நிதர்சனம் இதுவே,

அமைதிகொள் மனமே!”

‘He is now not mine’, ‘she is not mine’ என்று மூலமொழியில் தனித்தனியே இடம்பெற்றாலும், தமிழில் அதனை நேர்பொருளாக, “அவர் எனக்குரியவர் அல்ல” என்று இருமுறை எழுதுவதால், தாய், தந்தை என்ற அர்த்தம் கிடைக்கப்பெறாது. எனவேதான், “எந்தையும் தாயும் எனக்குரியர் அல்லர்” என்று மொழியாக்கம் செய்ததன் மூலம், மூலத்தின் கருத்தைச் சிதைக்காமல் இலக்குமொழியில் கொண்டுவர முடிந்தது.

ළමාවිය என்ற சிங்களக் கவிதையில் ஓரிடம்,

වැලි වලින් බත් උයා
හැම දෙනට බෙදා දුන්
සමනලු හඹා ගිය
සොඳුරු සමනල් දිවිය

'අ'යනු 'ආ'යනු බැරිව
වේවැලෙන් බැට කෑව
හැංගිමුත්තන් ඔට්ටු
දඟකෙරූ ඒ යුගය  

என்ற வரிகளிடையே வரும், 'අ'යනු'ආ'යනු என்ற வரியை மொழிபெயர்க்கும்போது, மூலமொழியின் அரிச்சுவடி பற்றி இலக்குமொழி வாசகன் தெரிந்துகொள்ளும் வகையில், அயனு ஆயனு என்று மொழிபெயர்ப்பதா, அல்லது இலக்குமொழி வாசகனின் இலகுவான புரிதல் கருதி, இயல்புத்தன்மை கெடாத வகையில் ஆனா, ஆவன்னா என்று மொழிபெயர்ப்பதா என்ற சிக்கல் எழுவது தவிர்க்க முடியாததாகின்றது. இந்நிலையில், இலக்குமொழி சார்ந்த தெரிவுக்கே இடமளிக்க வேண்டியதாயிற்று.

மற்றொரு ஆங்கிலக் கவிதை மொழியாக்கத்தைப் பார்ப்போம்:

எனது சுயம்
நான்
என் பெயரை மாற்றிக்கொண்டு விட்டேன்
மற்றுமோர் “எண்பத்தி மூன்று”
பற்றியதான அச்சத்தில்
நான் இப்போது நானாக இல்லை.
என் பங்குக்குச் செயலாற்றிச்
சந்தடியின்றி இருக்கின்றேன்
எனையறிந்த ஒருவரை
சந்திக்க அஞ்சி வாழ்கிறேன், நான்.

எனது பொட்டை நானே அழித்தேன்;
தாலியைக்கூட கழற்றி வைத்தேன்.
சேலையணிந்திடும் பாணியை மாற்றினேன்
எனது பேச்சையும் கூட
மாற்றிக்கொண்டு விட்டேன்.

“பிறர்” பற்றி நான் பயப்படுகின்றேன்
ஓம், என் இனத்தவரைக்கூட
என்னால் நம்பமுடியவில்லை
நான்
கப்பம் கட்டுதல் வேண்டும்
அன்றேல் சுடப்படக்கூடும்
மதில் மேல் இருப்பது
சாத்தியமற்றுப்போய்...
ஒன்றில் ஆதரவாய்
அன்றேல் எதிர்ப்பாய்..
மட்டுமே இருத்தல் இயலும்
வாழ்க்கை பொருளற்று
வெறுமையான போதிலும்,
நான் பாசாங்கு செய்தாக வேண்டும்

நான் யாராக இருக்கக்கூடும் என்பதை
சிலவேளை மறந்துபோய் விடுகின்றேன்
ஆனால்,
எனது சுயம்
என்னையே அச்சுறுத்துகிறது.


ரோஸ் அசேரப்பா ஆங்கிலத்தில் எழுதிய இந்தக் கவிதை பலவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாய்க் கருதுகின்றேன்.

இக்கவிதையின் ஆரம்பத்தில் இடம்பெறும் “எண்பத்து மூன்று” என்பது, வெறுமனே ஓர் இலக்கம்தானா, அல்லது போகிற போக்கில் ஓர் ஆண்டை மட்டும் குறிப்பிட்டுச்செல்லும் வெற்றுச் சொல்லா என்ற கேள்வி மிகவும் முக்கியமானது. இலங்கையின் இனத்துவ அரசியல் வரலாற்றைப் பொறுத்த வரையில், “எண்பத்து மூன்று” என்ற சொல் அடையாளப்படுத்திநிற்கும் பயங்கரமான உணர்வுநிலை எத்தகையது என்பது இலங்கையரான இலக்குமொழி வாசகருக்கு மிக எளிதில் புரியும். அத்துடன், கவிதை தொடர்ந்து சொல்லப்போகும் செய்தி குறித்த கவனக்குவிப்பையும் விரைவில் ஈர்த்துவிடுவதாகவும் இச்சொல் அமைந்துவிடுகின்றது. எனவே, மொழிபெயர்ப்பின்போது, அடிக்குறிப்புக்கள் கொடுத்து அதையிட்டு சிரமப்படும் தேவை எதுவும்  ஏற்படவில்லை.

இக்கவிதையின் அடிநாதமாய் உள்ள அடையாள அரசியல், வெறுமனே சமூக, அரசியல் அடையாளத்தைப் பற்றி மட்டுமே பேசாமல், பெண்ணின் அடையாளம் பற்றியும் பேசுகின்றது. இலக்குமொழியான தமிழில், பொட்டு, தாலி என்பதையெல்லாம் எந்த அடிக்குறிப்பும் இல்லாமலேயே புரிந்துகொள்ள முடியும் என்றநிலையில், மூல மொழியான ஆங்கிலத்திலும் தாலி, பொட்டு முதலான கலாசார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் சொற்கள் அவ்வாறே பயன்படுத்தப்பட்டிருப்பது இக்கவிதையின் சிறப்பு. ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்டுள்ள இந்தக் கவிதை, ஒரு சமூகத்தின் இருப்பையும் சிறப்பையும் நிர்ணயிப்பவள் பெண்தான் என்பதையும், ஒரு சமூகத்தின் மீதான போர் அல்லது அழிப்பு நடவடிக்கையின்போது, அதிகம் பாதிப்புக்கு உள்ளாகுபவளும் அதிகமதிகம் பழிவாங்கப்படுபவளும் பெண்தான் என்பதையும் உள்ளார்ந்து உணர்த்தமுனைகின்றது எனலாம். அதுமட்டுமல்ல, இங்கு பெண்ணின் இருப்பு சார்ந்த அச்சுறுத்தலின் ஊடே, அவள் சார்ந்த சமூகத்தின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதன் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது.

இக்கவிதையின் ஓரிடத்தில்,

“I’m afraid of “others”

Yes, my own I trust not”

என்று இடம்பெறுகின்றது. அதனை,

““பிறர்” பற்றி நான் பயப்படுகின்றேன்
ஓம், என் இனத்தவரைக்கூட
என்னால் நம்பமுடியவில்லை” 


என்று தமிழாக்கம் செய்யும் போது “யெஸ்” என்பதற்குப் பதிலாக “ஓம்” என்ற பேச்சுவழக்குச் சொல்லைத் தெரிவு செய்ததன் மூலம், அதற்குப் பிரதேசரீதியான  அடையாள அழுத்தமொன்று கிடைப்பதாய் உணர்ந்தேன். மொழிபெயர்ப்பாளரின் தெரிவு பற்றிய புரிதல் இதனை எளிதாக்கியது எனலாம்.  

“ஒரு கவிதை உணர்த்தி நிற்கும் பல்வேறு அர்த்தப்பாடுகளில் ஏதேனும் ஒன்றை குவிமையப்படுத்தலாம். மூலக் கவிதையின் அடிகளின் அளவை அப்படியே இலக்கு மொழியிலும் கொண்டுவர வேண்டும் என்பதற்கப்பால், மூலக்கவிதையின் நேரடி மொழிபெயர்ப்பைவிட்டும் விலகி அக்கவிதையின் பின்னணி, ஓட்டம், உணர்வு, ரிதம் என்பவற்றைப் பிரதிபலிக்கும் விதத்தில் மொழிமாற்றம் செய்யலாம்.” என்ற Anne E. Rodda (1981:149) யின் கருத்து இங்கு நோக்கத்தக்கது.

இறுதியாக, மொனிக்கா ருவன் பத்திரன எழுதிய “லெச்சமீகெ சித்துவில்லக்” (லட்சுமியின் எண்ணம்) எனும் சிங்களக் கவிதை மொழியாக்கம் குறித்து நோக்குவோம்.

සීතල මීදුම අතරින් - පියවර මනිමින් එනවා
වතුයායී කඳුමුදුනේ - දළු නෙළමින් ඇවිදිනවා
කඳු රවුමේ යන ගමනේ - වතුමායිම හමුවෙනවා
මාය්ම ළඟ තේ පඳුරෙදි - දෑත දෙපය නවතිනවා
දළු සුළඟට සැලෙනාවිට - මහේ ඇසිපිය සෙලවෙනවා
පිණිබිඳු බිම වැටෙනාවිට - නෙත කඳුළෙලි වෙහිරෙනවා

என்று தொடரும் கவிதையின் மொழியாக்கம் இப்படி அமைகிறது:

பனிக்குளிரில் பல்லெல்லாம்
கிடுகிடுக்கும்; உடம்பெல்லாம்
வெடவெடக்கும்; படியேறி
நடப்பேன் நான் தோட்டத்திலே.
மலைமுகட்டில் கொழுந்தெடுக்க
சுத்துமலை சுத்தி வர
தோட்டக்காட்டு எல்லைவரும்;
எல்லையிலே நிற்குமந்த
தேயிலைப் பத்தை வரும்
பத்தையினைக் காண்கையிலே
கைகாலில் உதறல் வரும்
எளங்குருத்து அசைகையிலே
எமையிரண்டும் படபடக்கும்
பனித்துளிகள் கொட்டுகையில்
கணுக்குள்ள தண்ணிவரும்
சுத்தியுள்ள புல்வெளியே!
புல்மொளச்ச நல்மண்ணே!
அன்றொருநா ஒம்மடியில்
நானொளிச்ச புள்ளையெங்கே?
வருஷங்கள் பத்திரண்டு
ஆகிவிட்டதென் மகனே,
தலைதூக்கி இனி மெதுவா
எந்திரிச்சி வா ராசா 
ஒத்தையடிப் பாதையிலே
சுத்துவழி நீ நடந்து
உச்சிமலை போறதுக்கு
எம்பின்னே வா மவனே!

என்று நீள்கிறது கவிதை. இங்கு, மலையகத் தோட்டத் தொழிலாளிப் பெண்ணொருத்தியின் மனக்குமுறலைப் பேச்சுமொழியில் இலகுவாக மொழியாக்கம் செய்ய முடிந்திருப்பதன் காரணம் இலக்குமொழி சார்ந்த சமூகத் தளத்தினைப் பின்புலமாகக் கொண்டு மூலமொழிக் கவிதை அமைந்திருப்பதே ஆகும். இதே கவிதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுமாயின், இந்த இயல்பான பேச்சுவழக்கினைக் கையாள்வது மிகப்பெரும் சவாலாய் அமையும் என்பதில் ஐயமில்லை.

எனவே, இலக்கியம் அதிலும், கவிதை என்பது மொழியின் உன்னதம்; உணர்வு வெளிப்பட்டின் உச்சம். அதனை ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்குக் கொண்டு செல்லும்போது, வடிவம், மொழிநடை என்பனவற்றுக்கெல்லாம் அப்பால், அதன் உயிர்நாடியான உணர்வுநிலை அல்லது அதன் உணர்ச்சி அனுபவம் மிக நுணுக்கமாக இலக்குமொழியில் வார்க்கப்படுகின்றதா என்பதே மிக முக்கியமானது. இதன்போது, மூலமொழிப் பிரதி திரிபடையாமலும் வாசகன் பிரதியில் இருந்து முழுமையானதோர் அந்நியத்தன்மையை உணராமலும் சமநிலை பேணுவது மொழிபெயர்ப்பாளரின் கடமை என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா நிலையிலும் மொழிபெயர்ப்புச் சமனியைக் கண்டடையும் முழு முயற்சியில் வெற்றியடையும் பட்சத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளர் இக்கடமையைச் செவ்வனே செய்துமுடிப்பது சாத்தியமாகிறது எனலாம்.

குறிப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள சினாமலீயின் கதை, மனம் சிதைத்த விதி, எனது சுயம், லட்சுமியின் எண்ணம் முதலான மொழியாக்கக் கவிதைகள் “மௌனத்தின் ஓசைகள் எனும் என்னுடைய மொழியாக்கக் கவிதைத் தொகுதியில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.
 ~ ஆக்கம்: லறீனா அப்துல் ஹக் ~ 
*கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற சர்வதேச இலக்கிய மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

உசாத்துணைகள்:

சிவசண்முகம், சி., தயாளன், வே. (1989) மொழிபெயர்ப்பியல், சிவகங்கை: அகரம்

அரணமுறுவல், ந., அமரந்த்தா (தொகு) (2005) மொழிபெயர்ப்புக்கலை – இன்று, சென்னை: பாவைபப்ளிகேஷன்ஸ்.

சிவகாமி, ச., (2004), மொழிபெயர்ப்புத்தமிழ்,சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

கு.ப.ரா., (1947) இரட்டை மனிதன் (மொழிபெயர்ப்பு), காரைக்குடி: நவயுகம்.

நுஃமான், எம்.ஏ., (1997) “தமிழ் மொழிபெயர்ப்பில் சிங்கள இலக்கியம்”, பேராசிரியர் சி. தில்லைநாதன் மணிவிழா மலர், பேராதனை.

நுஃமான், எம்.ஏ., (1984), மார்க்ஸியமும்இலக்கியத்திறனாய்வும், சிவகங்கை: அகரம்.

நுஃமான், எம்.ஏ., (2008), மஹ்மூத்தர்வீஷ் கவிதைகள் (மொழியாக்கக் கவிதைகள்), சென்னை: அடையாளம்.

பண்ணாமத்துக்கவிராயர், (1996) காற்றின் மௌனம் (மொழியாக்கக் கவிதைகள்), கொழும்பு: மலையக வெளியீட்டகம்.

லறீனாஏ. ஹக், (2008), மௌனத்தின்ஓசைகள் (மொழியாக்கக்கவிதைகள்), கெலிஒயா: திளினஅச்சகம்.

Catford, J.C. (1965) A Linguistic Theory of Translation, London: Oxford University Press

Holmes, J. (ed.), (1970) The Nature of Translation: Essays on the Theories and Practice of Literary Translation, The Hague & Paris: Mouton.

Anne E. Rodda, (1981) “Translating for Music: The German Art Song” , Translation Spectrum: Essays in Theory and Practice, New York: State Univercity.

Lefevere, Andre, (2004), Translation, Rewriting and the Manupulation of Literature Fame, Shangai: Shanghai Foreign Language Education Press.

Lawrence Venuti (Ed), (2000), The Translation Studies Reader, London & New York: Rourtledge.

Mona Baker,(1992), In Other Words: A Course book on Translation, London & New York: Rourtledge. 

New Mark, Peter, (1988), A textbook of translation, London & New York: Prentice Hall.

Valarmathi, M., (Ed) (1999) On Translation, Chennai: International Institute of Tamil Studies.

The Concept of Faithfulness in Poetic Translation [Online]. Available from:

http://www.ouargla-univ.dz/pagesweb/PressUniversitaire/doc/06%20El%20Athar/T05/T0524.pdf

Canadian Center of Science and Education (2012) Manipulation in Poetry Translation  [Online]. Available from:

http://ccsenet.org/journal/index.php/ass/article/view/15990  

Hossein Vahid Dastjerdi, Haadi Hakimshafaaii, Zahra Jannesaari, Translation of Poetry: Towards a Practical Model for Translation Analysis and Assessment of Poetic Discourse, Journal of Language & Translation 9-1, March 2008, [Online]. Available from:

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்