/* up Facebook

Dec 29, 2014

சமுதாய அமைப்பில் நீதியின் கண்முன் பெண்களின் நிலை : ஒரு கண்ணோட்டம் - - ஷர்மிலா ஜெயினுலாப்டீன்


சமுதாய அமைப்பிலே பெண் சுதந்திரம், பெண் சமத்துவம், பெண் விடுதலை என்ற சொற்றொடர்கள் பல்வேறு இடங்களிலும் பேசப்படுகின்றன. சமூகத்தில் பெண்கள் முக்கிய அங்கம் வகிப்பவர்கள். பெண்களுக்கான நீதி இன்றைய சமுதாயத்தில் அமையப் பெற்றுள்ளதா? இன்றைய நோக்கில் பெண்ணுக்குரிய உரிமைகள் அளிக்கப்பட்டனவா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய விடயமாகும்.
சீறிவந்த புலியையும் முறத்தினால் அடித்து விரட்டிய இனம் பெண்ணினம். வீரமங்கை வேலுநாச்சியார், ஜான்ஸிராணி வழிவந்த பெண்ணினம் என வீர முழக்கமிடும் சமுதாய கோஷத்தில் நீதியின் கண்முன் பெண்களுக்குச் சமுதாய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவா? என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.

காவிய நாயகியான கண்ணகி தனக்குத் துரோகமிழைத்து, தன்னை விட்டுப் பிரிந்து ஆடல் மாதுவிடம் சரச சல்லாபம் புரியச் சென்ற தன் கணவன் உயிரிழக்கக் காரணமானவன் பாண்டிய மன்னன் என அறிந்து, பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கிறாள்.
'தேரா மன்னா செப்புவதுடையேன்' என வீர முழக்கமிட்ட கண்ணகியின் கோபாக்கினி மதுரையை எரித்தும் அடங்கவில்லை. நீதிமுழக்கமிடும் பெண்ணவளைக் காவியச் சிலம்பில் இவ்வாறு காண்கிறோம்:

'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாதலும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துதலும்'
என்று நீதியின் தீர்ப்பில் ஆத்ம திருப்தியைக் காணச் செய்கிறார், காவிய ஆசிரியர் இளங்கோ.
சமுதாய அமைப்பில் பெண்ணின் பங்கு எனும் நோக்கில் ஆதிகாலத்தில் ஆண்-பெண் இருபாலாரும் சம அந்தஸ்துடையோராகக் காணப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

நிலப்பிரபுத்துவத் தொடக்க காலத்தில், பெண்கள் ஆண்களின் உடைமைப் பொருளாகக் கொள்ளப்பட்டனர். சமுதாயம் வளர வளர பெண் வீட்டுக்கே உரியவளானாள். சமுதாய அமைப்பில் சமயத் தாக்கமே பெண்களுக்கு இடப்பட்ட முதல் தளை. சமத்துவத்தில் சமயமானது பெரும் ஆதிக்கத்தைச் செலுத்தியது. மதக் கோட்பாடுகள் பெண் பின்தள்ளப்பட வழிகோலாய் அமைந்தன. மதங்களில் பெண்களின் கடமை தர்மமாக்கப்பட்டது. அடுத்து வந்த காலங்களில் முக்கியமாக வேதகாலத்தில் பெண்கள் கல்வி கற்றனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. பின்னர் புராண இதிகாச காலத்தில் பெண் தன் சகல உரிமைகளையும் இழந்த நிலையில் 'கணவனே கண்கண்ட தெய்வம்' என வாழவேண்டிய நிலையும், தர்மபத்தினியாக விளங்க வேண்டுமெனவும் கற்பொழுக்கம் பேணி நடக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டுச் சமுதாய அமைப்பில் பெண்விடுதலைக்காகக் குரலெழுப்பியவன் பாரதியாவான்.
'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' எனமுழக்கமிட்டான்.

'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். 
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் 
இளைப்பில்லை காண்'
என்று சமத்துவக் குரல் எழுப்பி,

'நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம். ஞான நல்லறம், வீரசுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.' என அறைகூவி, உயர்குடிப் பெண்ணின் பண்பினை உலகறியச் செய்தான். கற்பொழுக்கம் பெண்ணுக்கு மட்டுமே என்று பெண்களை அடக்கி ஒடுக்கிய பாரத சமுதாயத்தை நோக்கி,
'ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால், அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ? நாணமற்ற வார்த்தையன்றோ?' என முழங்கியதுடன்,

'கற்பு நிலையென்று சொல்லவந்தார் -இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்' எனவும் அடித்துக் கூறினான்.
'குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்கிறது வள்ளுவம்.

பொய்யா மொழிப் புலவனின் இக்கூற்றே பெண்பிள்ளை பிறந்தால் பொய்த்துவிடுகிறது. ஆண்குழந்தை பிறந்தால் மாத்திரமே 'மழலை இன்பம்' என்கின்றனர். பிறக்கும் சிசு பெண்ணாக இருந்துவிட்டாலோ, 'ஐயோ பெண்ணா?' என்று இழப்பு இழையோடிய ஆதங்கம் ஒலிக்கிறது.
பெண் பருவமடைந்தால், வெளி உலகிற் சென்று புழங்கக் கூடாது. அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டும். அன்னைக்கு அடுத்தபடி வீட்டிலிருந்து தந்தை, சகோதரர்களுக்குக் குற்றேவல் செய்யவேண்டும். இது சமுதாயம் பெண்ணுக்குப் போட்டுள்ள கால்கட்டு. 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு' என்ற கல்விக் கட்டுப்பாடுகள் இன்றும் நிலவிவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

சிலப்பதிகார நாயகி கண்ணகி, தனக்குத் துரோகமிழைத்த கணவனுக்கு அடங்கியொடுங்கிய மனைவியாகச் சித்திரிக்கப்படுகின்றாள். தேவ அடியாளாகிய மாதவி விலைமாதாக விமரிசிக்கப்படுகின்றாள். சீதா பிராட்டியின் கற்பொழுக்கம் தீக்குளித்து நிரூபிக்கப்படுகின்றது. கற்புக் கனல் தமயந்தி நடு இரவில் கானகத்தே தனித்து விடப்படுகின்றாள். கற்பின் நாயகி சந்திரமதியின் கற்பு சுடலையில் புடம்போடப்படுகிறது. கற்பின் செல்வி திரௌபதி அரசவையில் துகிலுரியப்பட்டு காட்சிப் பொருளாகின்றாள். இவ்வாறு காவியங்களில் பெண்ணுக்கு நடைபெற்ற சோதனைகளும் வேதனைகளும் எத்தனையெத்தனையோ!

பெண்ணடிமைவாதம் இவ்வாறு பல்வேறு பரிணாமங்களிலும் காணப்படுவதனை அவதானிக்கலாம். பெண் கற்பிழக்கக் காரணமாகும் ஆணுக்கு அளிக்கப்படும் தண்டனை என்ன? பெண் மாத்திரமே ஒழுக்கம் கெடுகிறாள், அவளே விபசாரி. இத்தகைய ஒருதலைப்பட்சமான சமுதாயக் கோட்பாடுகளால் பெண்களுக்காக நீதிக்குரல் எழுப்ப எத்தகைய சாத்திய நிலையும் இல்லை எனலாம்.

மேலும், குடும்பம் என்ற கோயிலில் திருமணம் என்ற பந்தத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்தினை நோக்குவோம். மனைவியை இழந்த கணவன் தன் அந்தஸ்தினை இழப்பதில்லை. 'பெண்சாதி செத்தால் புதுமாப்பிள்ளை' என்பதற்கொப்ப விரைவிலேயே மறுமணம் புரிகின்றான். அவனுக்கு அவதூறு, இழுக்கு எதுவும் இல்லை. இதே சமுதாயம் கணவனை இழந்த மனைவிக்கு அமங்கலி, துக்கிரி, வாழாவெட்டி, பூ-பொட்டிழந்தவள் என்பன போன்ற இழிசொற்களுக்காளாக்கி, சமூகத்தில் நடைபெறும் எந்தவொரு சுபகாரியத்துக்கும் அப்பெண்ணை அழைக்காது ஒதுக்கிவைக்கிறது. கணவனை இழந்த பெண்ணை சமூகம் ஏன் இத்தகைய வக்கிரசிந்தனையுடன் நோக்குகிறது? உரிய காலத்தில் திருமணம் நடைபெறாவிட்டால் பழிச்சொல், கணவனால் கைவிடப்பட்டால் வாழாவெட்டி மணமுடித்துப் பிள்ளைப் பேறில்லாவிட்டால் மலடி, கணவனை இழந்தால் விதவை இப்படி எத்தனையெத்தனையோ. அத்துடன், பெண் தன் கணவனுடன் வாழ விரும்பாது விவாகரத்துக் கோரி நின்றால் அவள் சார்ந்துள்ளவர்களின் அனுமதியைப் பெற வேண்டிய நிர்ப்பந்தம். மொத்தத்தில் பெண்ணின் ஆசாபாசங்கள் அனைத்தும் கணவனையும் பிள்ளைகளையும் சார்ந்தே இருக்க வேண்டுமென சமுதாயம் கட்டுப்படுத்துகின்றது. இதனால், பெண்ணானவள் தன்னலம் மறந்து சுய உரிமையின்றி வாழவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

18ஆம் 19 ஆம் நூற்றாண்டளவில் இந்திய சமுதாயத்தில் மாமியார் கொடுமை, சீதனப் பிரச்சினை, உடன்கட்டையேறுதல் போன்ற அநீதிகள் பெண்ணின்மீது சுமத்தப்பட்டன. இவற்றில் சீதனப் பிரச்சினை இலங்கையிலும் வேரூன்றியது. சீதனக் கொடுமையினால் இடைநடுவில் முறிந்துவிடும் திருமண பந்தங்கள் ஏராளம் ஏராளம். அதனால், குடும்ப வாழ்வில் ஈடுபடச் சென்ற பல பெண்களுக்கு கணவன், மாமியார்களால் பல துன்பங்கள் இழைக்கப்பட்டன. மேலும் கணவன் இறந்துவிட்டால் அவனது சிதையிலேயே மனைவியையும் வைத்துத் தீமூட்டும் கொடூர செயலும் இந்தியாவில் இருந்துவந்தது. அடுத்தடுத்து வந்த சட்டங்கள் இதனை அழித்தொழிக்க ஏதுவாயின.

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு முதலீடு செய்யப்படுவதில்லை. அடக்கியொடுக்கப்பட்ட இனமாகவே பெண்ணினம் கருதப்படுகின்றது. பிள்ளைகளை உற்பத்தி செய்யும் இயந்திரமாகவே பெண் கணிக்கப்படுகின்றாள். கணவனைக் கவனித்தல், சமையல், பிள்ளை வளர்ப்பு என்ற சிறு வட்டத்திற்குள் ஒடுக்கப்படுகின்றாள். இந்தக் கட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து பெண்ணானவள் ஆத்மபூர்வமாக நாட்டின் முன்னேற்றத்தில் பங்குகொள்ள வேண்டும். இவ்வகையில், பெண்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும். சில மாற்றங்கள் சட்டபூர்வமாக ஏற்பட வேண்டும். இவை இன்றைய அறிவியலாளர் வாதமாகும்.

ஒரு நாட்டில் ஏற்படும் பல்வேறு அபிவிருத்திகளிலும் முயற்சிகளிலும் பெண்களின் பங்கு கணக்கிலெடுக்கப்படுவதில்லை. சமைத்தல், குடும்பத்தைப் பராமரித்தல் போன்ற பெரும் தொழில்கள், சேவைகள் என்றே கணக்கிடப்படுகின்றன. இந்த மனப்பான்மை நீங்கி பெண்ணின் பெரும் சக்திக்கு மதிப்புக்கொடுக்கப்பட வேண்டும். இவையே இன்றைய பெண்ணிலைவாதக் கருத்துக்களாகும்.

பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி பேரறிஞர் லெனினின் கூற்று இங்கு கோடிட்டுக்காட்டத்தக்கது. 'வீட்டு வேலைகள் பெண்களுடைய ஆக்கத் திறமைகளையோ ஆளுமையையோ வளர்ப்பதில்லை. மாறாக, அவளை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி வீடு எனும் குறுகிய எல்லைக்குள் அடக்கி வைக்கின்றன. அற்ப வீட்டு வேலை நசுக்குகின்றது. கழுத்தை நெரிக்கின்றது. சோர்வை ஏற்படுத்துகின்றது. சமையலறையுடனும் குழந்தை வளர்ப்புடனும் அவளைத் தளையிடுகின்றது. இந்த நச்சரிக்கும் வீட்டு வேலைகளுக்கெதிராக ஒரு முழு மூச்சான போராட்டம் எங்கு, எப்பொழுது தொடங்கப்படுகினறதோ அங்குதான், அப்பொழுதுதான் மாதர்களின் மெய்யான விடுதலை தொடங்கும்.' பேரறிஞர் லெனினின் பெண்ணுரிமைக்கான குரல் பெண்ணினத்தின்மீது சமுதாயம் விதித்திருக்கும் பாரம்.

பெண் தொழில் அசமத்துவ நிலை, வாழ்க்கைத் தரம் குறைப்பு, சமூக அடக்குமுறை, அடிப்படை உரிமை இழப்பு, உணவும்கூட பாலடிப்படையில் பகிரப்படல், கல்விச் சமமின்மை, இல்லமில்லாத இல்லக்கிழத்தியாகப் பெண்ணினம் வாழல், சுகாதார வசதிக்குறைவு, பெண்களுக்கான பொழுதுபோக்கு வசதிகள் குறைவு, பெண் தொழிலாளி நலவுரிமை காக்கப்படுவதிலுள்ள குறைபாடு, காப்பகங்களிலுள்ள சௌகரியக் குறைவு, சமூக அமைப்பின் இறுக்கம் என பெண்ணின் உரிமைகள் நசுக்கப்படும் வழிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

எமது நாட்டின் மலையகப் பகுதிகளில் இத்தகைய சீர்கேடுகள் பெண்களைப் பொறுத்தவரையில் பெருமளவினதாய்க் காணலாம். பெண் தொழிலாளிகளுக்குக் குறைந்த வேதனம், கல்வி வசதிக் குறைவு, சுகாதார சௌகரியக் குறைவு, பெண்களின் உடல்நலம் பேணப்படாமை போன்றன பற்றி ஆழமாகக் குறிப்பிடலாம்.

மேலும், இன்றைய நிலையில் இலங்கைப் பெண்களுக்கு அரசு இழைக்கும் அநீதிக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாக சுதந்திர வர்த்தக வலய வேலைத்திட்ட அமைப்பு முறைகளையும் ஆடைத் தொழிற்சாலைகளையும் காட்டலாம். அந்நியச் செலாவணியை அள்ளித்தரும் ஒன்றியமாக சுதந்திர வர்த்தக வலயம் அமைகின்றது. ஆயிரமாயிரம் பெண்கள் இங்கு தொழில் செய்கின்றனர். அளவுகடந்த தொழிற்பாட்டினால் வெகுவிரைவில் கண்பார்வை இழக்கின்றனர். உடலும் உள்ளமும் துவள்கின்றனர். வேலைத்தளத்தில் பெண்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுகின்றது. அவளது சோர்ந்த உடலும் அபிலாஷைகள் நொறுங்கிய அவளது இதயமுமே அபிவிருத்தியின் பயன்பேறாக அவளுக்குக் கிடைக்க, அந்நியச் செலாவணி தொடர்ந்து அரசுக்குக் கிடைக்கின்றது. இது பெண் சமூகத்துக்கு அரசு இழைக்கும் தொழில் ரீதியான அநீதியாகும்.

நீதியின் கண்முன் பெண்களின் நிலையை ஆராயுமிடத்து, பெண்களின் தொழிற்சங்க ஈடுபாட்டுக்குத் தடையாக நிற்கும் கலாசாரப் பண்புகளை நோக்குவோம்.

1) தாய்மையின் பொறுப்புக்கள், வேலை நேரத்தின் பின்னரேயே கூட்டங்கள் நிகழுகின்றமை, நாள் முழுதும் வேலை செய்யும் அவள் குழந்தையிடம் இருந்து பிரிகிறாள். உணவு தயாரித்தல், வீட்டு வேலை செய்தல் போன்ற பளுக்களும் அவளைத் திக்குமுக்காடச் செய்கின்றன.
2.) குடும்பம் என்ற வட்டமும் அதற்குள் சென்ற கணவன், பிள்ளைகள், முதியோரைக் கவனிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அவளை ஆட்டிப் படைக்கின்றன.
3) வீட்டுக்குரியவள் வெளியே ஊதியத்திற்காக மாத்திரமே செல்லலாம். அதற்கு மிஞ்சி படி தாண்டக்கூடாது என்ற கருத்தியல் நிலவுகின்றமை.
இத்தகைய நிலைப்பாடுகளே பெண்களின் தொழிற்சங்க ஈடுபாடுகளுக்கு ஒருங்கிசைவு பெறுவதற்குத் தடைக்கல்லாக அமைகின்றன.

மேலும், இலங்கையைப் பொறுத்தவரை கல்வி முன்னேற்றத்தை ஏற்படுத்திய பேரறிஞர் சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் தான் நிறுவிய சேர். பொன். இராமநாதன் இந்துக் கல்லூரியிலே விதித்திருந்த சில கற்கை விதிமுறைகள் கூட குறுகிய வட்டத்திற்குட்பட்டதாயிருந்தது. உதாரணமாக, இக்கல்லூரியிற் கற்கும் பெண்கள் எல்லாவகையிலும் சிறந்த இந்துக்களாக வளர வேண்டுமென்ற நோக்கங்களையும் சமயக் கல்விக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டமையும் குறிப்பிடலாம். 1920 களில் அளிக்கப்பட்ட சர்வ சன வாக்குரிமையில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டமையினை சேர். பொன்னம்பலம் இராமநாதன் எதிர்த்தார். பெண்கள் வாக்குரிமை பெறுவதனால் குடும்ப அமைதி குறையும் என வாதிட்டமை, கல்விகற்ற அறிஞர்கள்கூட பெண்களின் உரிமைகளுக்குத் தடைக்கல்லாக இருந்தனர் என்பதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும்.

எனவே, இவற்றுக்கெல்லாம் தீர்வுகாண வேண்டுமெனில் பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் பெண்கள் முன்வரவேண்டும். வீரப்பெண்ணும் தீரப்பெண்ணும் பாரதிகண்ட புதுமைப் பெண்ணும் தமிழ் இலக்கியத்துடன் நின்றுவிட்டனரா? யுத்தங்களுக்கு வீரஉணர்வுடன் மறப்பண்புடன் தன் ஒரே மகனை அனுப்பிவைத்த பெண்ணும், போர்க்களத்தில் மார்புக் காயம் கண்டு மகிழ்ந்த தமிழ்த்தாயும், வழக்குரைத்து தன் கணவன் குற்றவாளியல்ல என்று நிரூபித்த கண்ணகியும் ஏட்டை அலங்கரிக்கும் பெண்களாகவே உள்ளனர். சமுதாயப் பெண்கள் அச்சம் கொண்டவர்களாக, மடமை பொருந்தியவர்களாக, நாணமுடையவர்களாக, அநீதிகளைக் கண்டு வாய்மூடி மௌனிகளாகக் கண்ணீர் சிந்தும் பதுமைகளாகவே இருக்கின்றனர்.

பெண்ணுரிமை, பெண்ணுக்குச் சமசந்தர்ப்பம் என்பன போன்ற தத்துவங்களில் பல விடயங்கள் அடங்கியுள்ளன. சமுதாயத்தின் பல்வேறு அம்சங்கள் இதில் தொக்கியுள்ளன. பல பெண்களுக்கு எப்படித் தாம் அடிமைப்பட்டுவிட்டோம் என்பது தெரியவில்லையோ, அதேபோல பல ஆண்களுக்கும் தாம் அவர்களை அடிமைப்படுத்துகிறோம் என்பது தெரியவில்லை. பண்பாடு, வழிவழிவந்த பரம்பரைக் கோட்பாடு என்ற போர்வையில் இவ் ஆண்டான் - அடிமைநிலை தொடர்கிறது. இதனால் ஆண் வர்க்கத்திற்கு சலுகைகள் அதிகம். தட்டிக்கேட்க ஆளின்றி இச்சமுதாயப் போக்கு தொடர்கிறது. ஆகவே, பெண்ணினத்தைத் தட்டியெழுப்பி அவர்களின் துன்பகரமான வாழ்க்கை முறைகளை உணர்த்த வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும்.

இன்றைய நிலையில் சமுதாய அமைப்பிலே பெண்ணின் உரிமைக்காகக் குரல் எழுப்பும் பல இயக்கங்கள் உருவாகி வருகின்றன. இன்றைய பெண் சுதந்திர இயக்கத்தின் முக்கிய கோரிக்கைகளை வழிமைப்படுத்தினால் அவை சமசந்தர்ப்பம், அரசியல், பொருளாதார சமூகப் பிரச்சினைகளில் ஆணுக்குரிய பங்கு பெண்ணுக்கும் தரப்படவேண்டும் எனத் தொடருகின்றன. சமுதாயக் கோப்பு ஒன்று எப்படி பழம்பெரும் பண்பாடு என்ற அடிப்படையில் பெண்களின் நியாயமான கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் நிராகரித்து பெண்களைப் பின்நின்று இயங்கும் சக்தியாக வைத்திருப்பதைப் பெண்கள் அறிந்து, அதற்கு மாற்றங்காண விழைய வேண்டும். கதைகளும் கட்டுரைகளும் மாத இதழ்களும் பெண்களைக் கவர்ச்சிச் சின்னமாக உபயோகித்து ஒரு விற்பனைப் பண்டமாக வைத்து வியாபாரம் செய்வது நிறுத்தப்பட வேண்டும். குடும்பம் என்ற சமூக அமைப்பில் பெண்ணும் வேலைக்குப் போவதால் ஏற்படும் பிரச்சினைகளையும் ஒழுங்கீனங்களையும் பெண்ணொருத்தியே தாங்கவேண்டிய அநீதி அகற்றப்பட வேண்டும். ஆண்கள் கைகொடுத்துதவி வீட்டுவேலை, பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றில் தாமும் சமபங்கு ஏற்கவேண்டும் என்ற மனப்பான்மை அவர்களிடத்தில் தோன்ற வேண்டும்.

பெண்ணுரிமைப் போராட்டம் நடாத்தும் நிறுவனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எமது நாட்டைப் பொறுத்தமட்டில், பால் சமத்துவ நிலைக்கு சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தைக் கோடிட்டுக் காட்டலாம். இதில், மனித உரிமை பற்றிக் கூறும் ஒரு கூற்று சமுதாயத்தில் பெண்களுக்கான கல்வியின் முக்கியத்துவத்தையும் ஆணித்தரமாக வலியுறுத்தி நிற்கின்றது. அதாவது, மனித உரிமைப் பிரகடனத்தின் தலைப்பு வாசகம் உறுப்புரை இரண்டில், 'பின்வரும் மனித உரிமைப் பிரகடனத்தால் வழங்கப்படும் உரிமைகளும் சலுகைகளும் கடப்பாடுகளும் சகலருக்கும் பால், இனம், சமயம், பிராந்தியம் ஆகிய எல்லைகளுக்கப்பால் உரியதாகும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 20 ஆம் நூற்றாண்டளவில் இலத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்களில் பெண்கள் பங்கு பற்றியும் இங்கு மேற்கோள் காட்டத்தக்கது. இவற்றுடன் இன்றைய நிலையில் இளைஞர் இயக்கத்தில் பெண்கள் பிரிவு தோன்றி, பெண்களின் சம அந்தஸ்து, கல்வியறிவு பற்றி அறைகூவல் விடுக்கிறது.

இலங்கைப் பெண்களின் தொழிற்சங்க ஈடுபாடுகள் பெண்களின் உரிமைக்காக நியாயப் போராட்டங்கள் நிகழ்த்துகின்றன. இன்றைய அறிவியல் உலகமானது பல்வேறு விதங்களில் பெண் நீதிக்காகக் கோஷம் இடுகின்றது. இன்றைய அறிவியல் உலகமானது 'உணர்ச்சிபூர்வமாகவோ, புத்திநிலையிலோ ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு இல்லை. கருத்தரிப்பதும் பிரசவிப்பதும் சிசுவுக்கு அத்தியாவசியமாகிய முதன் முதல் உணவை- தன் முலைப்பாலை- ஊட்டுவதும் பெண்ணின் சிறப்புப் பணிகள். இதனை ஆண் சாதிக்க முடியாது. 'அந்த வேலையை நீ சிறப்புறச் செய்ய வேண்டும் என்று அவளை நிர்ப்பந்திக்க ஆண்மகன் தயங்கவில்லை' எனக் கூறுகிறது. பாலடிப்படையில் அமைந்த இந்த வேறுபாடே வேலைப்பாகுபாட்டுக்கு அனுகூலமாக வாய்த்தது. இதன் அடிப்படையில் ஒரு கருத்தியலே தோன்றியது. இதனடிப்படையிலேயே பெண்ணிலைவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இக்கருத்தியலைக் கருவாகக் கொண்டு தோற்றம் பெற்ற லிபரல் (விடுதலைப்) பெண்ணிலைவாதம் பெண்ணுக்கு அரசியல், பொருளாதாரத் துறைகளில் சம உரிமை அளிக்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறது.
தீவிரப் பெண்விடுதலைவாதம், ஆணின் உடற்பலம், ஆதிக்க வெறி, பலாத்காரம், வல்லுறவு ஆற்றல் போன்ற ஆண்வர்க்கப் பண்புகளால் பெண் அடிமையாக்கப்படுகின்றாள் என்று கூறுகின்றது.

சோஷலிசப் பெண்விடுதலைவாதம், மாக்ஸியவாதிகள் பெண்விடுதலையைத் தள்ளிப்போடுவது அவர்களது ஆண் ஆதிக்கத்தையே புலப்படுத்துகின்றது என்கிறது.

இன்றைய கலைவடிவங்களில்கூட பெண்ணடிமை பரவலாகக் காணப்படுகின்றது. சிறுகதை, நாவல், திரைப்படம், தொலைக்காட்சி போன்ற வெகுசன தொடர்புசாதனங்களில் பெண்ணடிமைத்தனத்தைக் கருப்பொருளாகக்கொண்ட கதையமைப்புகளை, காட்சிகளைத் தவிர்க்க வேண்டும். திரைப்படங்களை நோக்குமிடத்து தாலி பாக்கியம், கணவனே கண்கண்ட தெய்வம், மக்களைப் பெற்ற மகராசி, மாமியார் மெச்சிய மருமகள் போன்ற பெண்ணடிமை சாயல் கொண்ட படங்கள் தடுக்கப்படவேண்டும். பெண்ணுக்கு சகல துறைகளிலும் நீதியும் சமவாய்ப்பும் அளிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுப்பின், அது மேலைநாட்டு நாகரிகப் பண்பு என ஆப்பு வைக்கும் அக்கிரமக்காரர்களின் கோஷம் அடக்கப்பட வேண்டும்.

நடுநிலை நின்று பெண் நீதி உரிமை பற்றி இயம்புமிடத்து, பெண் உரிமையற்ற இரண்டாம்பட்ச புத்திஜீவி என்பன போன்ற கருத்தியல்கள் அகற்றப்பட வேண்டும். இவை தேசங்களையும் நாடுகளையும் மொழிகளையும் பண்பாடுகளையும் கடந்த ஒரு சர்வதேசக் கருத்தியலாக மாறவேண்டும் என்ற கருத்தைத் தெளியலாம்.

வாழ்க பெண்சமத்துவம்!
ஒழிக பெண்ணடிமை!

நன்றி: நீதிமுரசு 1995 (இலங்கை சட்டக் கல்லூரி ஆண்டுமலர்)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்