/* up Facebook

Dec 26, 2014

'காதலின் முத்தம்' சாதியை ஒழிக்குமா? - இராமியா


பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பிறகு ஆர்.எஸ்.எஸ் போன்ற அக்கட்சியின் துணை அமைப்புகள், பிற்போக்கான பழைமைக் கருத்துகளை மக்களிடையே வளர்க்க முனைந்து உள்ளன. இவர்களுக்கு எதிரிகள் என்று சொல்லிக் கொள்வோர், இக்காவிக் கும்பலினர் காதலை எதிர்ப்பதாகவும், இவ்வெதிர்ப்பைத் தாங்கள் எதிர்ப்பதாகவும் கூறிக் கொண்டு 'காதலின் முத்தம்' (kiss of love) என்ற நிகழ்வுகளை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். அதாவது பொது இடங்களில் காதலர்கள் கட்டிப் பிடித்துக் கொண்டும், முத்தம் கொடுத்துக் கொண்டும் காவிக் கும்பலுக்குத் தங்கள் எதிர்ப்பபைத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

kiss of loveகொச்சி நகரில் 2.11.2014 அன்று அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்று நடந்த போது, இரு குழுக்களிடையே நடந்த மோதலில் கைகலப்பு நேர, அதைக் கலைக்கும் நோக்குடன் காவல் துறையினர் தடியடி நடத்தி உள்ளனர். 'காதலின் முத்தம்' நிகழ்ச்சி அமைப்பாளர்கள் 80 பேர்களைக் கைது செய்து, பின் விடுவித்து உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக 8.11.2014 அன்று புது தில்லியில் 'காதலின் முத்தம்' நிகழ்வை நடத்தி உள்ளனர். இந்நிகழ்விற்கு விளம்பரம் ஏதும் செய்யவில்லை என்றும், சிரமம் எடுத்துக் கொண்டு ஆட்களைச் சேர்க்கவில்லை என்றும், பேஸ்புக்கில் மட்டுமே பதிவு செய்ததாகவும், இப்பதிவைக் கண்டு இரண்டே நாட்கள் அவகாசத்தில் பெருவாரியான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இருப்பதாகவும், இது தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும் ரித்விக் அகர்வால் (Ritwick Agarwal) எனும் தில்லிப் பல்கலைக் கழக மாணவர் கூறினார். இவர்கள் இந்நிகழ்வை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு முன்பாக நடத்துவதற்காக ஒன்று சேர்ந்து சென்ற போது, காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிகழ்வு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், எந்த ஒரு ஆணோ பெண்ணோ சாதி, மதம் மற்றும் பிற வேற்றுமைகளைக் கடந்து, தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்து எடுக்கும் உரிமை உண்டு என்பதைக் காட்டவே இந்நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன என்றும் இந்நிகழ்வின் அமைப்பாளர்கள் கூறினர்.

ஆனால் பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத், இந்நிகழ்வுகளை நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள், நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் என்றும் இவர்கள் உடல் சுகத்தை மட்டுமே பெரிதாக நினைப்பவர்கள் என்றும் கூறி உள்ளது.

'காதலின் முத்தம்' அமைப்பாளர்கள் பொது இடங்களில் காதலர்கள் கட்டிப் பிடித்துக் கொள்ளும், முத்தம் கொடுத்துக் கொள்ளும் பண்பாட்டை வளர்ப்பதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதன் மூலம் சாதி, மத வேறுபாடுகளைக் களையப் போவதாகவும், காவிக் கும்பலினர் பெண்கள் மீது தொடுக்கும் பண்பாட்டு ஒடுக்கு முறையை முன்னெடுக்க முடியாமல் தடுக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.

முதலாவதாக, பொது இடங்களில் கட்டிப் பிடித்துக் கொள்வதன் மூலமும், முத்தம் கொடுத்துக் கொள்வதன் மூலமும் சாதி மத வேறுபாடுகளை எப்படி ஒழிக்க முடியும்? சாதி மத வேறுபாடுகள் இவற்றிலா குடி கொண்டு உள்ளன? நிச்சயமாக இல்லை.

அனைத்து வகுப்பு மக்களிடமும் அனைத்து நிலையிலான அறிவும் திறமையும் அமைந்து இருக்கையில், உயர்நிலைகளில் உயர்சாதிக் கும்பலையும், கீழ் நிலைகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களையும் தேர்ந்து எடுக்கும் (திறமைசாலிகளைத் தேர்ந்து எடுக்கச் சற்றும் திறனற்ற) பொதுப் போட்டி முறையில் தான் சாதி மத வேறுபாட்டுக் கொடுமைகளின் வேர்கள் இறுக்கமாகப் பிடித்து உள்ளன. அரசுத் துறை, தனியார் துறைகளில் அனைத்து நிலை வேலைகளிலும், எரி பொருள், எரி வாயு போன்ற அரசினால் வழங்கப்படும் முகவர் பணிகளிலும், இன்னும் சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மத சிறுபான்மையினர், முற்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு, மக்கள் தொகையில் அவரவர் விகிதத்திகு ஏற்ப, பங்கிட்டுக் கொடுக்கும் விகிதாச்சாரப் பங்கீட்டு முறையை அமல் படுத்தினால், சாதி மதக் கொடுமைகளின் ஆணி வேர் அறுபட்டுப் போய்விடும். ஒரு வகுப்பு மக்கள் இன்னொரு வகுப்பு மக்களைச் சுரண்டும் கொடுமைகள் முடிவுக்கு வந்து விடும். அந்தந்த வகுப்பில் உள்ள அறிவுத் திறன் மிக்கோர் உயர்நிலைப் பணிகளிலும், அந்தந்த வகுப்பில் உள்ள அறிவுத் திறன் குறைந்தோர் கீழ் நிலைப் பணிகளிலும் அமரும் சூழ்நிலை ஏற்படும். இன்று நடப்பது போல, அறிவுத் திறன் குறைந்து இருந்தாலும் உயர்சாதிக் கும்பலினர் உயர்நிலைப் பணிகளிலும், அறிவுத் திறன் மிகுந்து இருந்தாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கீழ்நிலைப் பணிகளிலும் இருக்கும் கேவலமான நிலைமை மாறி விடும்.

ஆனால் 'காதலின் முத்தம்' அமைப்பாளர்கள் இதைப் பற்றி இம்மி அளவும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

'காதலின் முத்தம்' அமைப்பாளர்கள் கூறும் இரண்டாவது கருத்தும் விசித்திரமாகவே உள்ளது. இவர்கள் காவிக் கும்பலினரின் பெண்கள் மீதான பண்பாட்டு ஒடுக்கு முறையை எதிர்க்கிறார்களாம். காவிக் கும்பலினர் பெண்கள் மீதான பண்பாட்டு ஒடுக்குமுறைத் தாக்குதலை இன்னும் தொடங்கவே இல்லை. அரசியல் பொருளாதார நடவடிக்கைகளில் தங்களை அசைக்க முடியாதபடி வலுப்படுத்திக் கொள்வது தான் அவர்களுடைய முதல் நோக்கம். ஆகவே 'காதலின் முத்தம்' அமைப்பாளர்கள் உண்மையில் காவிக் கும்பலை எதிர்ப்பவர்கள் என்றால் அவர்கள் அரசியல், பொருளாதார நடவடிக்கைகளில் வலுவடையா வண்ணம் செயல்பட வேண்டும்.

பெண்கள் மீதான பண்பாட்டு ஒடுக்குமுறைத் தாக்குதலைப் பற்றி ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை விட உயர்சாதிப் பெண்கள் தான் அதிகமாகக் கவலைப்பட வேண்டும். மனு அநீதி வெளிப்படையாகக் கோலோச்சிய காலத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்புப் பெண்கள் உழைப்பது இழிவாகக் கருதப்பட்டது. உழைப்பு என்பதையே ஒட்டு மொத்தமாக இழிவாகக் கருதப்பட்ட நிலையில், பெண்களின் உழைப்பு இழிவாகக் கருதப்பட்டதில் கூடுதல் ஒடுக்கு முறையின் சுமை உணரும் அளவில் இல்லாமல் இருந்தது.

ஆனால் உயர்சாதிப் பெண்களின் பிரச்சினை அப்படி இல்லை. அவர்கள் எப்போதும் தந்தை, சகோதரன், மகன் என ஆண்களைச் சார்ந்து தான் இருக்க வேண்டும் எனக் கட்டாயப் படுத்தப்பட்டதில் இருந்து, கைம்மை நோன்பு, உடன் கட்டை ஏறல் போன்ற கொடுமைகள் வரையிலும், உயர்சாதிப் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் மிகவும் கொடூரமானவை.

இப்போது ஆட்சியைப் பிடித்து உள்ள காவிக் கும்பலினர், அவர்களுடைய திட்டப்படி சமூக, பொருளாதார நடவடிக்கைகளில் அசைக்க முடியாதபடி வலுப்படுத்திக் கொண்டால், அதன் பிறகு பெண்கள் மீது தங்கள் பார்வையைச் செலுத்துவர். அப்பொழுது பண்பாடு என்ற பெயரில், பழைய கொடுமைகள் எல்லாம் பெண்கள் மீது புகுத்தப்படும். அதற்கு இரண்டு மூன்று தலைமுறைகள் பிடிக்கலாம். ஆனால் அவர்கள் முதல் வெற்றியைக் கண்டால், அவர்களுடைய அடுத்த இலக்கு பெண்கள் மீதான பண்பாட்டு ஒடுக்கு முறையாகத் தான் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

ஆகவே உயர்சாதிப் பெண்களும், பெண்கள் விடுதலை மீது அக்கறை கொண்ட மற்றவர்களும், காவிக் கும்பலினர் அரசியல், பொருளாதார, சமூக முனைகளில் வலுப் பெறாமல் பார்த்துக் கொள்வது முக்கியமான கடமையாகும்.

பெண்கள் ஒடுக்கப்படக் கூடாது என்பதை விட கீழ் வருணத்தாரை / சாதியினரை ஒடுக்கி வைத்துக் கொள்வது தான் முக்கியம் என்று நினைத்தாலும், "பெண்கள் மீதான ஒடுக்கு முறை நம் தலைமுறையில் இல்லையே! அடுத்த தலைமுறைப் பெண்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன?" என்று நினைத்தாலும் உயர்சாதிப் பெண்கள் காவிக் கும்பலினரை எதிர்க்காமல் இருந்து விடலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களாகிய நமக்கு, காவிக் கும்பலினர் மட்டும் அல்ல; பார்ப்பனர்கள் ஊடுருவி உள்ள காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளையும், இந்திய அரசியல் களத்தை விட்டு விரட்டி அடிப்பது தான் சரியான தீர்வாகும்.

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.11.2014 இதழில் வெளி வந்துள்ளது)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்