/* up Facebook

Dec 2, 2014

அருந்ததி ராயும் அவரது தகுதிகளும் - யமுனா ராஜேந்திரன்


அருந்ததிராய் பற்றிய எதிர்மறையான விமர்சனத்தைத் தமிழகத்தில் துவங்கி வைத்தவர் இந்துஞான மரபின் புத்திரரும் ஜெய்ஹிந்த் தேசபக்தருமான ஜெயமோகன். அவரது கலாச்சார அரசியலுக்கு இலக்கியமுலாம் பூசுவது அவரது விமர்சன அடிப்படை. தென்னாசிய இலக்கியமும் தெரியாத இன்று மாறிவந்திருக்கும் மேற்கத்திய இலக்கிய விமர்சன அடிப்படைகளும் தெரியாத அசட்டுத்தனமான பார்வை அவருடையது, இந்தப் பார்வையை வேறுவேறு நீள அகலங்களில் தமிழக இலக்கியவாதிகள் பலர் முன்வைத்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

அருந்ததி ராய் தகுதிக்கு அதிகமாக அல்லது அளவுக்கு அதிகமாக மேற்குலகில் குறிப்பாக ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படுகிறார் என்று ஒரு கருத்தைப் பெண் எழுத்தாளர்களும் முன்வைக்கிறார்கள் என்பதனை ஜெயமோகனின் அவதூறுக்கு எதிராகப் பெண் எழுத்தாளர்களும் பிற எழுத்தாளர்களும் கலைஞர்களும் வெளியிட்ட அறிக்கையில் என்னால் காணக் கூடியதாக இருந்தது.

அருந்ததி போராளி அல்ல, வெறும் ஊடகப்பிரமை மட்டுமே’ என்று (ஜெயமோகன்) சொல்கிறார். புக்கர் பரிசுபெற்ற அருந்ததிராயின் நாவல் ஆழமற்றதும் இந்திய வாசகர்களுக்கு ஏமாற்றமளித்ததும் என்கிறார். அது ஒரு படைப்பினை விமர்சனம் செய்யும் உரிமையின்பாற்பட்டது. ஆனால், அருந்ததி ராய் என்ற பெண்மீது, அந்த ‘ஊடகப் பிரமை’மீது ஜெயமோகன் கொண்டிருந்த காழ்ப்புணர்வானது ‘எனது இந்தியா’ (ஜூலை 02, 2012) என்ற கட்டுரையில் மிகக் கேவலமாக வெளிப்பட்டிருக்கிறது. “அடிப்படையான வரலாற்றுணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததி போன்ற குருவிமண்டைகள் ஊடகங்களில் இன்று பெறும் அதீத முக்கியத்துவம் மிகமிக ஆச்சரியமானது” என்கிறார் ஜெயமோகன். அருந்ததிராயின் நாவல்மீது அவர் மேலைத்தேய ஊடகங்களால் அளவுக்குமீறித் தூக்கிப்பிடிக்கப்படுகிறார் என்ற விமர்சனத்தின்மீது எங்களிற் சிலருக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், ஒருவரை அவரது தோற்றத்தினை முன்வைத்து இகழும் அற்பத்தனத்தை எக்காரணங்கொண்டும் மன்னிக்கமுடியாது. நொண்டி என்றும் குரூபி என்றும் குருவிமண்டை என்றும் சல்லிக்குரல்கள் என்றும் சகமனிதரை வசைபாடுவது அருவருப்பின் உச்சம்.

இந்த அறிக்கையை எவர் எழுதினார் எவரெவர் இறுதி செய்தார்கள் யார் யாருக்கெல்லாம் இவ்வாறான கருத்துக்கள் இருக்கின்றன என்பதற்கு அப்பால் இத்தகைய கருத்துள்ள தமிழகப் பெண்எழுத்தாளர்களும் பிற எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் என்பதனையும் அருந்ததிராய் பற்றிய கருத்தில் ஜெயமோகனுடன் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் அவர்கள் உடன்படுகிறார்கள் என்பதனையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியது. அந்த அறிக்கை மையப்படுத்தியிருந்த விஷயம் பெண்ணின் உடலரசியல் பற்றியதும் ஜெயமோகனின் அவதூறுகளும் பற்றியதும்தான் என்றாலும் அவ்வறிக்கை வேறு பல உடன்பாடான, முரண்பாடான கூறுகளையும் கொண்டுதான் இருந்தது.

ஓரு கூட்டறிக்கை அப்படி இருப்பது தவிர்க்கமுடியாதது. அந்தத் தருணத்தில் குறிப்பிட்ட அறிக்கையில் கையொப்பமிட்ட ஒருவனாக நான் இப்பிரச்சினையை எழுப்பியிருந்தால் அறிக்கையின் பிரதான நோக்கத்தைக் கொஞ்சமேனும் திசைதிருப்பியிருக்கும் என்பதால் எந்தவிதமான ஆட்சேபனையும் இன்றி அந்த அறிக்கையின் பொதுத்தொனியில் இணைந்துகொண்டேன்.

அருந்ததி ராயின் எழுத்துக்களை வோர்ட்ஸ்வொர்த், ஈ.எம்.போஸ்ட்டர், ராஜாராவ், அமிதவ்கோஷ், சல்மான் ருஷ்டி போன்ற தொழில்முறை அல்லது புரொபஷனல் ஆங்கிலமொழி இலக்கிய எழுத்தாளர்களுடன் ஒப்பிட்டு அவரது இலக்கியத் தகுதிகளை மறுக்கிற போக்கை இப்போது பரவலாகக் காணமுடிகிறது. மட்டுமன்று, ஒரேயொரு நாவலை எழுதிவிட்டு இவ்வளவு பெரிய கவனத்தை அல்லது அதிகாரத்தை எவ்வாறு அவர் பெற்றார் என்கிற கேள்விகளும் எழுப்பப்படுகிறது. இந்த வகையான ஒப்பீடுகள் மற்றும் கேள்விகள் அருந்ததிராயைத் தொடர்ந்து கவனித்து வாசித்து வந்திருப்பவர்களுக்கு அடிப்படையிலேயே பிழையானது என்பது புரியும்.

அருந்ததிராய் இதுவரையிலும் இரண்டு திரைக்கதைகள் எழுதியிருக்கிறார். ஒரு தொலைக் காட்சித் தொடர் எழுதியிருக்கிறார். ஓரேயொரு நாவல் எழுதியிருக்கிறார். இவையே அவரது புனைவெழுத்து. பிற அவரது எழுத்துக்கள் அனைத்தும் முதலாளித்துவம், பழங்குடி மக்கள் உரிமைகள், சூழலியல், காஷ்மீர், அணுஆயுதம், நக்சலைட் எழுச்சி, சாதி எதிர்ப்புப் போராட்டம், அமெரிக்க ராணுவத் தலையீடுகள் குறித்ததாகும். இப்பிரச்சினைகள் குறித்து ஆங்கிலத்தில் மட்டும் அவரது 20 நூல்கள் வெளியாகியிருக்கின்றன. அவரது காட் ஆப் ஸ்மால் திங்ஸ் நாவல் உள்பட இந்த நூல்கள் அனைத்தும் உலக மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் பெற்று வெளியாகியிருக்கின்றன.

இதுவன்றி அவரது ஆளுமையின் மிகமுக்கியமான பரிமாணம் அவர் உலகெங்கிலும் இந்தியாவிலும் அதிகம் பயணம் செய்கிற ஒரு சளையாத செயல்பாட்டாளர். அவரது செயல் அனுபவங்களே அவரது புனைவல்லாத 20 நூல்களாக வெளிப்பட்டிருக்கின்றன. இந்தப் பரிமாணம் ஆங்கில மொழியில் முன்னர் எழுதிய அல்லது இன்று எழுதுகிற எந்தத் தென்னாசிய எழுத்தாளருக்கும் இல்லாதது. மேற்கில் புகழ்பெற்ற இந்திய வம்சாவழிப் பெண் கோட்பாட்டாளரான காயத்ரி ஸ்பீவக் உள்பட, தென்னாசியப் புனைவெழுத்தாளர்களான அம்ரிதா ப்ரீதம், அமிதவ் கோஷ், சல்மான் ருஷ்டி மற்றும் மைக்கேல் ஒன்டாஜி என பிற எவருக்கும் இல்லாத பரிமாணமாகும் இது. இதுவே உலகெங்கிலும் இன்று அருந்ததிராய் பெற்றிருக்கும் முக்கியத்துவத்திற்கான பிரதான காரணமாக இருக்கிறது.

இங்கிலாந்திலிருந்து வரும் ‘பிராஸ்பெக்ட்’ டிசம்பர் மாத இதழின் அட்டைப்படக் கட்டுரை இந்திய சாதி அமைப்பின் குரூரம் பற்றிய அருந்ததிராயின் கட்டுரையைக் கொண்டிருக்கிறது. உலகநிதி மூலதனம் பற்றியும் பொருளாதாரச் சந்தை பற்றியும் எழுதிவரும் ‘எகனாமிஸ்ட்‘ இதழின் கடந்த ஆறுமாத கால இதழ்களில் குறைநத பட்சம் ஆறு அல்லது ஏழு கட்டுரைகள் இந்திய சாதிய ஒடுக்குமுறை பற்றிப் பேசுகிறது. சூழுலியல் பிரக்ஞை, பழங்குடி மக்கள் உரிமை, சிறுபான்மையின மக்கள் ஒதுக்கப்படுவதற்கு எதிரான உணர்வு, முதலாளித்துவ எதிர்ப்பு என்பன உலக அளவில் உருவாகி வந்திருக்கிற புதிய பிரக்ஞை. இதனைத் தனது எழுத்துக்களில பேசுகிறார் ராய்.

ராய் புக்க ர் பரிசு பெறுவதற்கு முன்பாக எலக்ட்ரிக் மூன் திரைக்கதாசிரியராகவும். பன்டிட்குயின் படத்தில் பூலான் தேவியைக் கேட்காமல் பாலியல் பலாத்காரக் காட்சியை இயக்குனர் சேகர்கபூர் விஸ்தாரமாக எடுத்தது தவறு என்ற எழுதிய விமர்சனத்தினாலும் மேற்கில் பரவலாக அறியப்பட்டவர். இந்த இரு படங்களையும் இங்கிலாந்தின் சேனல் நான்கு தொலைக்காட்சியே தயாரித்தது. இந்தத் தொலைக்காட்சியே இலங்கையின் கொளைக்களம் ஆவணப்படத்தையும் தயாரித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலக்கியக் காரணங்கள் அல்லாது அருந்ததிராயை ஜெயமோகன் வசைபாடக் காரணம் காஷ்மீர் மற்றும் நக்சலைட் பிரச்சினைகளில் ராய் மேற்கொண்டிருக்கும் நிலைப்பாடுதான். ஜெயமோகனுக்கு எதிரான அறிக்கையில் கையொப்பமிட்ட சில பெண் எழுத்தாளர்களும் பிற எழுத்தாளர்களும் குறிப்பிடுகிற மாதிரி ராய் மேற்கத்திய ஊடகங்களால் அளவுக்கு அதிகமாகத் தூக்கிப்பிடிக்கப்படுகிறார் என்பதில் எந்த உண்மையுமில்லை. அவர் மேற்கிலும் அமெரிக்காவிலும் பெற்றிருக்கிற முககியத்துவத்தினை அவர் மிகச்சரியான காரணங்களுக்காகவே பெற்றிருக்கிறார். இன்னும் ராய் உடலரசியல் பற்றி மட்டுமே பேசுகிறவர் அல்ல. சாதியம், சூழலியல், முதலாளித்துவம், பழங்குடி மக்கள் உரிமை என அவரது அக்கறைகள் பரந்து விரிந்தது.

இறுதியாக, ராயினது காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ் நாவலின் இலக்கியத் தகுதி பற்றியும் ஜெயமோகனது அபத்தம் பற்றியும் இரு கட்டுரைகளை நான் ஏலவே எழுதியிருக்கிறேன். கூறியது கூறலைத் தவிர்ப்பதற்காக இதே தளத்தில் இருக்கும் அதனது சுட்டிகளைக் கிழே தந்திருக்கிறேன்.

*

1.அருந்ததி ராய் எனும் ஆளுமை

http://yamunarajendran.com/?p=110

2.அருந்ததி ராயின் சின்ன விஷயங்களின் கடவுள்

http://yamunarajendran.com/?p=1228

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்