/* up Facebook

Dec 19, 2014

ஈழ எதிர்ப்பு, சாதிய மனநிலை கொண்டது - குட்டி ரேவதி


“மின்னுக்கு எல்லாம் பின்னே மழை” குட்டி ரேவதி நேர்காணல் புத்தகத்திலிருந்து இரண்டு கேள்விகளும் பதில்களும்

அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி, சோனியாகாந்தி போன்றவர்கள் இன்னொரு ஆணாகத் தானே செயல்படுகிறார்கள். இந்த நிலை இப்பிடி இருக்கும் போது பெண்ணியக் கருத்தாங்கள் அதிகாரத்திற்கு நகரும் போது மற்றொரு அடக்குமுறைக்குத் தானே ஆளாக நேரும்?

இந்தியாவைப் பொறுத்தவரை எல்லா பிரச்சனைகளையும், எல்லா சமூகநிலைகளையும் ஆண், பெண் பிரச்சனைகள் என்று பார்க்க முடியாது. ஆண் பெண் பால்களின் பிரச்சனைகளாக இதைப் பார்க்கும் போது நாம் அரசியல் நீதி நோக்கி நகர முடியாது. ஒட்டு மொத்த சமூகம் ஆணையும் பெண்ணையும் மேல்கீழாக வைத்திருக்கிறது. ஆனால் இங்கு ஆண்களுக்கும் படிநிலை இருக்கிறது. ஆதிக்கச்சாதி ஆணுக்குக் கீழ் தான் ஒடுக்கப்பட்ட ஆண் வருகிறான். இங்கு இருவருக்கும் ஒரே மாதிரியான நீதி கிடையாது. நீங்கள் அதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவது அதிகாரத்தை நோக்கி நகர்கிற பெண்கள் சென்று சேருகிற அமைப்பு, ஒரு பார்ப்பனிய ஆணுக்காக வடிவமைக்கப்பட்ட அமைப்பு. அந்த நாற்காலி, அதன் படிமுறை, அங்கு செயல்படுத்தப்படுகிற நீதி அதன் குரல் இவற்றையெல்லாம் அவர்கள் மாற்றியமைக்க முடியாது.

தொடக்கத்தில், ஈழம் என்பதை ஆதரிக்கிற அல்லது எதிர்க்கிற தமிழ்த்தேசியவாதிகள் எல்லாரும், ஒரு முழுமையான கடப்பாடு உடையவர்கள் என நினைத்தேன். இப்பொழுது பார்த்தால் ஈழ எதிர்ப்பு என்பதே சாதிய மனநிலை கொண்டதாக இருக்கிறது. ஈழப் போராட்டத்தின் முற்பகுதி சைவவேளாளர்களால தான் நடத்தப்பட்டிருக்கிறது. விடுதலைப் போராட்டம் மற்ற சாதிக்கு கைமாறியவுடன் அவர்கள் மாறிவிட்டார்கள்.
அம்பெத்கர் சொல்லியிருக்கிறார் ’அரசியல் கட்டுமானம் அமைப்பு ஒரு பொழுதும் மனிதனுக்கு நீதியை வழங்காது. சமூக இயக்கம் தான் நீதி வழங்குவதற்கான எல்லா வேலைகளையும் செய்யும்’ என்று சொன்னார். அவருக்கும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் மீது நம்பிக்கைகள் இல்லை. இதைத் துல்லியமாக பின்பற்றியவர் பெரியார். ’அவருக்கு அரசியல் நோக்கி நகர வேண்டும்’ என்கிற நிர்பந்தம் எல்லாம் கொடுக்கும்போது அதைப் புறக்கணித்தார். அண்ணாவின் நகர்வுகள் அரசியல் கட்சியாக உருவெடுக்கும் போது அதைத் தெளிவாகச் சொன்னார். அவர் சொன்னது தானே இறுதியில் நடந்தது. அதைப் போல் நான் சிவகாமியுடன் பெண்கள் இலக்கியப் பேரவையுடன் வேலை செய்யும் போது ஏற்பட்ட அனுபவம் முக்கியமானது. சமூக இயக்கமாக இருக்கும் போது எங்களுக்கு இடையில் செயல்பாடுகளுக்கான வேகத்தை பார்க்க முடியும். களத்தில் நிற்க முடியும்.
ஆனால் அரசியல் இயக்கமாக மாறும் போது, அதே ஒருங்கிணைவு சிதறுண்டு போகும். பெண்களுக்கு இடையில் கடுமையான பாகுபாடு தோன்றியது. ’இயக்கத்தில் இருந்த சைவ வேளாளப் பெண்கள் எல்லாம் தலித் பெண்களை தலைமையாக வைத்து தலித் பெண்களுடன் வேலை செய்ய மாட்டோம்’ என்று சொல்லிவிட்டார்கள். இது தான் எதார்த்தம். அப்படி இருக்கும் பொழுது எப்படி ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆண் பெண் என்று பார்க்க முடியும்? கூடங்குளத்துக்கு எதிராகப் போராடியவர்களும் அரசியல் கட்சியாக மாறும்போது நடந்தது இதுதான். இந்தப் பாடத்தை அரசியல் கட்சியாக மாறுவதற்கான அவர்களிடம் சொன்னேன்.

சமூக இயக்கமாக இருக்கும் வரைக்கும் வேகமும் வீரியமும் நோக்கமும் தொலைநோக்கமும் ரொம்ப சரியான பாதையில் இருக்கும். அரசியல் இயக்கத்துக்கு போகும் போது அதனுடைய ஒட்டுமொத்த கட்டுமானமும் ஒரு பார்பனிய ஆணுக்கான கட்டுமானம் மட்டுமே. ஒட்டு மொத்தமான இந்தியாவில் இருக்கும் கடைக் கோடி மனிதனையும் இதே நிலையில் வைக்கவே விரும்புகிறான். ’அவன் செய்தால் குற்றம் இல்லை ஆனால் தாழ்த்தப்பட்டவன் குற்றம் செய்தால் குற்றம் மரணதண்டனை வரை கொடுக்க வேண்டும்’ என்பது வரைக்கும் ஏற்றத் தாழ்வுகளால் தீர்மானிக்கப்பட்ட அமைப்பு. பாலியல் வன்புணர்வு செய்தாலோ அல்லது அவளைக் கொன்றாலோ அவனுக்கு அது பெரிய விடயம் இல்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட ஆணோ பெண்ணோ குற்றம் செய்யும் போது அவ்வமைப்பு தண்டனை வழங்கும். கடவுள் என்பது அவனுக்காக இல்லை. அது சார்ந்த பாவம் புண்ணியம் எல்லாம் நமக்கு கற்றுக்கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை.

உண்மையில் பார்ப்பனர்களுக்கு கடவுளோ, கோயில்களோ, கருவறைகளோ கிடையாது. அதைக்காட்டி நம்மை, நம் மக்களை மந்தைகளாக நகர்த்துவற்கான சாதனம் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். அரசியல் முறை என்பது பார்ப்பனிய ஆணுடைய பிரதிநிதித்துவம்(Representation). கடுமையான ஒடுக்குமுறைக்கான வடிவம் அது. இதில் பெண்கள் எந்த உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் செயல்படுத்த வேண்டியது அந்த பார்ப்பனிய ஆணின் வேண்டுகோளைத் தான். இவர்கள் எதை இந்த சமூகத்தில் முன்வைக்கிறார்களோ? அப்படித்தான் இருக்க முடியும். இன்னும் சொல்லப்போனால் மாயாவதியும் ஒரு பார்பனிய ஆணைப் போல தான் நடந்து கொள்ள முடியும். இத்தகைய பார்ப்பனிய இந்துத்துவ அரசியல் கட்டமைப்புகளிலிருந்து, கன்ஷிராமிடமோ அம்பெத்கரிடமோ கற்றுக்கொண்டிருந்த தலித்திய சிந்தனைகளை முன்வைக்க முடியாது.

அரசியல் பாத்திரத்தினுடைய கொள்கலன் அதிகம் இல்லை. அது சிறிய டம்ளர் போல இருக்கும். அரசியல் இயக்கத்தின் வழியாக செய்ய நினைக்கிற சமூக மாற்றங்களை, சமூக நீதிகளை முன்வைக்கவே முடியாது. இந்தியாவில் சமீபத்தில் வந்த அரசியல் கட்டுமானங்கள் எல்லாம் முதலாளித்துவம்(Capitalism) சார்ந்தது. பிரதமரோ, அமைச்சர்களோ,  குடியரசுத்தலைவர்களோ யாராக இருந்தாலும் அவர்கள் எல்லாம் வெறும் பொம்மைகள் தான். முதலாளிகளால் இயக்கப்படுகிற தோல்பாவைகள் அவர்கள். அடித்தட்டில் இருக்கிற சமூக இயக்கங்களைக் கட்டமைப்பதற்காக இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கிறபொழுது உண்டாகிற உற்சாகம் நம்பிக்கை தருகிறது. அரசியல் இயக்கங்களால், மன உளைச்சல் தான் ஏற்படும். எந்தப் புகழ் வெளிச்சமும் இல்லாமல் பொது ஊடகங்களுடன் குறுக்கிடாமல் மனிதர்கள் ஆங்காங்கே உதிரிகளாக, படைகளாக குழுக்களாக, கூட்டமாக வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தான் இந்தியாவை மீண்டும் நிலை நிறுத்தப் போகிறார்கள் என்று நம்புகிறேன்.
ஈழ ஆதரவு எதிர்ப்பு விடயத்தையும் தமிழ் தேசியத்தையும் எப்படி பார்க்கிறீர்கள். தமிழ்த்தேசியம் பேசுபவர்களும் தலித்துகளும் எத்தகைய நிலையில் இருக்கிறார்கள்?

தொடக்கத்தில், ஈழம் என்பதை ஆதரிக்கிற அல்லது எதிர்க்கிற தமிழ்த்தேசியவாதிகள் எல்லாரும், ஒரு முழுமையான கடப்பாடு உடையவர்கள் என நினைத்தேன். இப்பொழுது பார்த்தால் ஈழ எதிர்ப்பு என்பதே சாதிய மனநிலை கொண்டதாக இருக்கிறது. ஈழப் போராட்டத்தின் முற்பகுதி சைவவேளாளர்களால தான் நடத்தப்பட்டிருக்கிறது. விடுதலைப் போராட்டம் மற்ற சாதிக்கு கைமாறியவுடன் அவர்கள் மாறிவிட்டார்கள். தங்கள் அரசியலையும் மாற்றிக்கொண்டார்கள். இந்த இடத்தில் நாம் வெகுதூரம் சிக்கல் நிறைந்த இடத்திற்கு வந்துவிட்டோம். ஈழ விடுதலைப்போராட்டத்தின் தோல்வியே சைவ வேளாளர்களின் சூழ்ச்சி என்று தான் பார்க்கிறேன். வரலாறு முழுக்க சைவ வேளாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் அவர்கள் நிரம்பவும் அதிகாரம் மிக்க சமூகம். எப்பொழுதெல்லாம் பார்ப்பனியத்திற்கு எதிராகவொரு இயக்கம் கட்டமைக்கப்படுகிறதோ அந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள். பார்ப்பனியத்திற்கு எதிராக இருப்பதாக சொல்லிக்கொண்டு இன்னொரு பார்ப்பனியத்தை உருவாக்குகியவர்கள், இவர்கள். சைவ வேளாளர்கள் அரசியல் பண்பாட்டு விடயங்களில் தமிழ்நாட்டில் அதிகம் சிதைவுகளை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களைப் பெரியார் அழகாக ’ஒன்றரை பார்ப்பான்’ என்று சொல்லியிருக்கிறார். இதைத் தான் ஈழவிடயத்தில் பார்க்க முடியும். இன்றும், இன்னும் ஈழ ஆதரவாளர்களாக சைவ வேளாளர்கள் இருந்தால் அவர்களை கடுமையாக சந்தேகிப்பேன். அவர்களின் ஆதாயம் என்ன என்பதை புரிந்து வைத்திருக்கிறார்கள்? அதையும் தாண்டி சில பேர் இருக்கலாம், விதிவிலக்காக.

இதையே இந்தியவிடுதலைப் போராட்டத்திற்கும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஈழ எதிர்ப்பாளர்கள் ஆதரவாளர்கள் என்று பார்த்தால் தெளிவான வரையறை இருக்கிறது. கடுமையாக எதிர்ப்பவர்களுக்கு சைவ வேளாளர்களுடைய இணைப்பு இருக்கும் இல்லையென்றால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியில் வந்து அவர்களின் மேல் சாட்டுகிற குற்றம் தனிப்பட்ட நலன்கள்(Personal Interest) சார்ந்து இருக்கும். தன்னனுபவத்தை வைத்து குறை கூறுவது, ’ஓர் இயக்கத்தை எப்படி பார்க்கவேண்டும்?’ என்று அறிந்து கொள்ளாதவர்களின் கூற்று.  காலந்தோறும் தமிழ்த்தேசியம் ஒரு நுணுகியவடிவத்தை எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருக்கிற மாதிரியே இருக்கிறது. இன்று தமிழ்த்தேசியத்தை ஆதரித்தாலும் அதற்குள்ளும் விமர்சனம் வைத்துக்கொண்டு தான் இருக்கிறோம். தலித்துகளுக்கு தமிழ்த்தேசியத்தை எதிர்கொள்வதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பதை தமிழ்த்தேசியவாதிகள் உணர்ந்து கொள்வதில்லை. அதை உணர்ந்து ஒரு தளத்தில் இணைக்கவே முடியவில்லை. தமிழ்த்தேசிய இயக்கங்கள் நதி மாதிரி கிளையாகப் பிரிந்து நுணுகி நுணுகி போய்க்கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து இதை ஒரு தளத்தில் வைத்து பேசிக்கொண்டிருக்கும் ஒரே தலைவர் திருமாவளவன். அம்பேத்கரை அவர் அறிந்து வைத்திருப்பதுதான் காரணம்.

அவர் அரசியல் விடயங்கள் சார்ந்து நிறைய சமரசங்களை (Compromise) மேற்கொண்டிருக்கிறார். அதற்கு அப்பாற்பட்டு சிந்தனை ரீதியாக தமிழ்த்தேசியத்தையும் தலித் சிந்தனைகளையும் ஒரே தளத்தில் வைத்துப் பேச இயலக்கூடிய சிந்தனையாளர் திருமாவளவன் தான். அவருடைய அரசியல் தோல்வி, தனிப்பட்ட பின்னடைவு ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒற்றுமைப்படுத்தி திரட்ட(Convince) முடியவில்லை. இன்று தமிழ்த்தேசியம் எதிர் பார்பாபனீயம்(Anti Brahmninical) எதிர் தலித்தியம்(Anti Dalit) என்பது மாதிரிதான் இருக்கிறது. இதுவும் கூடத் தான் பெண்களுக்கு எதிரான பண்பாட்டைப் பேசும் மாண்பையும் தருகிறது. தலித் சமூகத்திலிருந்து வருகிற ஆணிடம் பெண்களை அபாண்டமாக, அவதூறாகப் பேசுகிற சமூகத் தன்மை இல்லை. அப்படி பேசுகிறவர்கள் விதிவிலக்காக(Exceptional) ஆக இருக்கும் இல்லையென்றால் பார்ப்பனிய தன்மையை உள்வாங்கியவர்களாக இருப்பார்கள். ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான சமூக அழுத்தத்திற்கு உள்ளாவதால் ஆண் பெண் வேறுபாடு தலித் சமூகத்தில் மிகக்குறைவு. கொஞ்சம் சாதிய அதிகாரத்தில் இருந்து வெளிவந்த எல்லா இடைச் சாதி சமூகங்கங்களுக்கும் கடுமையான உளவியல் பிரச்சனை இருக்கிறது. அவர்கள் அதிகாரமிக்க சாதிகளுடனும் தங்கள் பெண்களுடனும் முரண்படுவது உண்மையில் கேலிக்குரியது. பல நேரங்களில் அது அபத்த நகைச்சுவைகாகத் தான் இருக்கிறது. ஆனால் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் பழங்குடித்தன்மையிலான ஒற்றுமை தலித் சமூகத்தில் இருக்கும்.

தமிழ்த்தேசியத்தில் இருக்கும் அடிப்படையான பிரச்சனையே தலித் சமூகத்தின் இவ் வாழ்வியல் மாண்பை புரிந்து கொள்ளாதது தான். அதற்குக் கடுமையான இடைவெளிகளும் சிக்கல்களும் இருக்கிறது. நாம் பேசுகிற தமிழ்த்தேசிய விடயங்களுக்கு இதுபின்னடைவுதான்.

நன்றி - எனில்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்