/* up Facebook

Dec 18, 2014

என் மீது பர்தா ஏற்கனவே திணிக்கபட்டுள்ளது, ஆனால் என் நாக்கு நிர்வாணமான ஆயுதம்: - ஆர்த்தி வேந்தன்


இஸ்மாத் சௌகதாய் (Ismat Chughtai) மற்றும் கம்பளி போர்வை (Lihaaf)
ஒரு அறிமுகம்
இணையமும், தொழில்நுட்பமும் உலகை ஒரு சொடுக்கின் அசைவுக்குள் கொண்டுவந்துவிட்டாலும் கலாச்சார பெருமை மிக்கதாய் சொல்லப்படும் இந்த நிலத்தில் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் மதிய வேளையில் உலகமையமாய் மாறிவிட்ட ஒரு பெருநகரின் மூத்திர சந்துக்குள் கூட பெண்களின் பாலியல் குறித்து பெண்கள் பேசுவது ஆபாசமானதே (பாலியல் என்ற சொல்லே ஆபாசமானது!). முத்தமிட்டுக்கொள்வதைக் கூட தாங்கிக்கொள்ளாத முடியாத முத்தமிட்டுக் கொள்பவர்களை கொலை வெறியுடன் தாக்கும் கலாச்சார காவலர்கள் நிறம்பிய அவர்களுக்கு ஆதரவான அரசுகள் ஆட்சி பீடத்தில் இருக்கும் மண்னில் மனிதர்களுக்குள்ளான அன்பை வெளிப்படுத்தும் முத்தத்துக்கு கூட போராட்டம் நடத்தவேண்டிய நிலையில் தான் இஸ்மாத்தையும், லிகாப்பையும் பேச வேண்டியுள்ளது.

இந்திய துணை கண்டம் விடுதலை அடைவதற்கு முன், பண்பாட்டு கட்டுப்பாடுகள் நிறம்பிய இசுலாமிய சமுகத்தை சார்ந்த ஒரு பெண் பள்ளி, கல்லூரி கல்வியை அடைதல் என்பதும், எழுத்து என்பதை யோசிக்கவும் முடியாத ஒன்றாய் இருந்த காலத்தில் தோன்றிய சூறாவளி தான் இஸ்மாத் சௌகதாய். இன்றளவும் சௌகதாயின் ஆக்கங்கள் சர்ச்சையின் பேசு பொருளாக தான் இருக்கின்றன, காரணம் அவர் பெண்களை எழுதினார், பெண்களின் பாலியலை எழுதினார், பெண்களுக்காக எழுதினார் என்பதுமே. 2014ல் சமபால் ஈர்ப்பு உலகமையமாக்கலின், மேற்கின் நீட்சி என்று சொல்லி தடை போடும் சமுகத்துக்கு 1940ல் ஒரு நங்கை(லெஸ்பியன்) கதை எழுதப்பட்டதும் அது இதுநாள் வரை முக்கிய பேசு பொருளாய் இருப்பதும் தெரியாமல் இருப்பதில் வியப்பேதும் இல்லை தான். இஸ்மாத் எழுதிய கதைகளுள் கம்பளி போர்வை (லிஹாப்) மிகவும் பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட ஒன்று காரணம் அது இரண்டு பெண்களுக்குள்ளான காதலின் கதை. இந்த பிரதியை பால் சிறுபான்மையினரின் ஆக்கமாக எத்தனை தூரம் பார்க்கமுடியுமோ அதே அளவு அதை பெண்னிய கதையாடலாகவும் சொல்ல முடியம்.

நவாப் எனும் வயது கூடிய செவந்தன் ஒருவனுக்கு மனைவியாககும் பேகம் ஜானுக்கும் அவர்கள் வீட்டு வேலையாள் ரப்புக்கும் இடையேயான காதல் தான் கதை. பெயர் சொல்லாத பெண் ஒருவளின் பால்ய காலத்து நினைவுகளாக விரியும் கதை பெண்களின் சமபால் உறவு, பெண்கள் மீதான் அடக்குமுறை, ஆண்களின் சமபால் உறவு, நிராகரிக்கப்படும் பெண் பாலியல் என்று பல தளங்களில் பயணிக்கிறது.

திருமணமாகாத பெண் வீட்டில் இருக்கும் சமூக அவலத்தை நீக்குவதற்கும், பொருளாதார சுமையை குறைப்பதற்கும் பேகம் ஜானை நவாபுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர் அவளின் பெற்றோர். நவாபுக்கும் பேகம் ஜானுக்கும் இடையே பெரிதளவில் இருக்கும் வயது வித்தியாசம் பொருட்டாக அவர்களுக்கு தெரிவதில்லை. பேகம் குடும்பத்திற்கு இந்த திருமனம் அவர்களின் பொருளாதாரத்தை சிறிது உயர்த்தி பிடிப்பதற்கான ஒரு சிறந்த வழி.

கதையில் நவாபை பற்றிய அறிமுகம் சிறிதளவே வந்தாலும் நவாபின் சுயத்தையும் அக்காலத்தின் சூழலையும் தெளிவாக பிரதிபலிக்கிறது.

நவாபுக்கு ஒரு ‘வினோதமான’ பொழுதுபோக்கு உள்ளதாக கதையில் வரும். அந்த வினோத பொழுதுபோக்கு சம பாலினத்தின் மீது இருந்த ஈர்ப்பு. இள வயது அழகான ஆண்களுடன் மட்டுமே அவரது நேரத்தை கழித்தார். ஆம அவர் நம்பி (gay) இருப்பினும் அவருக்கு ஊரில் நல்ல பெயரும் மரியாதையும் இருந்தது. ஏனென்றால் அவருக்கு பாலியல் தொழிலாளிகளுடன் தொடர்பில் இல்லை. தனது சம பாலீன ஈர்ப்பை மறைப்பதற்கும், தன் ஆண்மையை நிரூபிப்பதற்கும், சமூக அந்தஸ்த்தை நிலை நிறுத்துவதற்கும் ஒரு பெண் தேவைப்படுகிறது அது தான் பேகமுடனான திருமணம்.

சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பேகம் திருமண வாழ்க்கையை வாழ தொடங்குகிறாள். ஆனால் நவாபுயின் சம பாலீர்ப்பு காதல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. மனைவியின் வாழ்க்கை, கனவுகள், விருப்பங்கள், இருப்பை கூட முழுமையாக நிராகரித்துவிட்டவனாக தான் வாழ்கிறான் நவாப். அவனை பொருத்த வரை தன் நம்பி அடையாளத்தை மறைக்கும் ஒரு போர்வை தான் பேகம்.

இந்த கதையில் ஆண்கள் ஓரினசேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாக பார்க்கப்படவில்லை ஆனால் இதை முற்போக்கு சிந்தனையின் அடையாளமாக கருதமுடியாது. ஆண் ஓரின சேர்கைகயை உண்மையில் ஏற்க கூடிய சமூகமாக இருந்திருந்தால் நவாப் சமூக அந்தஸ்த்திற்காக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவசியம் இல்லை. ஆனால் நவாப் திருமணத்திற்கு அவனின் இயலாமை மட்டும் காரணமில்லை. பெண் என்பவள் பாலியில் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு பொருட்டாக மட்டும் தான் கருதபடுகிறாள், அவளுக்கு என்று தனிப்பட்ட விருப்பங்கள் இல்லை/இருக்க கூடாது என்று சமூகம் நம்புகிறது. அதனால் தான் தன் சுயத்தை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் நவாபுக்கு எந்த ஒரு குற்ற உணர்வும் ஏற்படவில்லை. மேலும் திருமணம் முடிந்தவுடன் நவாப் மற்ற பொருட்களுடன் பேகம் ஜானை பொருத்தினான் எனும் வரியில் வரும்’’பொருத்தினான்’ என்ற வார்த்தை திருமணம் என்ற கட்டமைப்பில் பெண்கள் எவ்வாறு பொருளாக மாற்றபடுகிறார்கள் என்பதை மிக வெளிப்படையாக காட்டுகிறது.
காலங்கள் மாறினாலும் சமூகத்தில் வெரூன்றி இருக்கும் ஆணாதிக்க சிந்தனை இன்னும் மாறவில்லை என்பதை சொல்ல எந்த விஞ்ஞான ஆராய்ச்சியும் தேவையில்லை. சமீபத்தில் பெங்களூரில் நடந்த சம்பவம் ஒன்று இந்த இந்த கதையின் நவாப் பகுதியுடன் மிகவும் பொருந்திப்போவதை காண முடியும். கணவன் தன் மீது எந்த ஆர்வமும் காட்டவில்லை, நடவடிக்கைகள் ‘வித்தியாசமாக’ இருந்ததால் சந்தேகம் கொண்ட மனைவி வீட்டில் காமிரா பொருத்தியுள்ளார். அதன் மூலமாக தன் கணவர் தன்பால் ஈர்ப்பாளர் என்று தெரிய வந்துள்ளது. ஆதாரத்துடன் புகார் அளித்ததால் கணவர் 377 சட்டபிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் பாதிக்கப்பட்டவர்களே ஆனால் பெண் தளத்தில் இருந்து நாம் இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் , ஒரு பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்காக அவர் கைது செய்யபடவில்லை. அவர் ஒரின சேர்க்கையில் ஈடுபட்டதால் தான் கைது செய்யபட்டுள்ளார். சமபால் விருப்பதினரை பொருத்தவரை திருமணம், குடும்பம். சமூகம் அழுத்தம் என்பது ஆண், பெண் இருவருக்கும் ஒன்று தான். இந்த அழுத்தங்கள் காரணமாகவே எதிர்பால் திருமணம், குடும்பம் எனும் சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். ஆனால் பெண்கள் இரட்டை ஒடுக்குமுறைக்கு ஆளாக்கபடுகிறார்கள். நம் சமுகத்தில் ஒரு ஆண் தன் மனைவிக்கு பாலியல் உறவை நிராகரித்து விட்டு தனக்கு விருப்பமான பாலியல் உறவை வெளியே தேடி கொள்வது சாத்தியம். ஆனால் பெண்ணுக்கு தன் கணவனிடம் பாலியல் உறவை மறுப்பது என்பது நடக்காத ஒன்று, தனக்கு விருப்பமான பாலியல் தேவையை அடைவது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று.

பெண்ணின் மகத்தான கடமை கணவனின் பாலியல் ஆசையை நி்றைவேற்றுவது மட்டும்தான் என்ற ஆணாதிக்க சிந்தனையை பெண்களும் உள்வாங்கி உள்ளனர் என்பது தான் வருத்தத்துக்குரியது. அதனால் தான் ஓரினசேர்க்கை ஆணை திருமணம் செய்த பெண்கள் சிலர் தங்களின் கணவரை ஈர்க்க முடியவில்லை என்பதை அவர்களின் பிரச்சனையாக எண்ணிக்கொண்டு, கனவன்களை ஈர்க்க மருத்துவர்களிடம் நஞ்சம் அடைகிறார்கள்.

நவாபை ஈர்பதற்கான தன் எல்லா முயற்சிகளும் வீணாகி போனதால் சுயமரியாதை இழந்ததாக உணரும் பேகம். அழகாக ஆடை அணிவதை நிறுத்திக் கொள்கிறாள்.மன ஆறுதலுக்காக வாசிப்பின் மீது கவணம் செலுத்த தொடங்குகிறாள். ஆனால் காதல் கதைகளும் அதீத உணர்வுகளை கொண்ட கவிதைகளும் அவளுக்கு மறுக்கபட்ட அன்பை நினைவூட்டுகின்றன. தூக்கத்தையும், மன நிம்மதியையும் தொலைத்து மேலும் தனிமையாக உணர்கிறாள்.

ஆனால் இஸ்மாத் பேகமை கதை முழுவதும் தனிமையில் விடவில்லை. தன் வீட்டில் பணிப்புறியும் ரப்பு என்ற பெண்ணிடம் உறவு கொள்கிறாள். ஆனால் அவர்கள் உறவை எந்த குறிப்பிட்ட பாலியல் வார்த்தையை கொண்டும் ஆசிரியர் விளக்கவில்லை. பேகம் ,ரப்பு இருவருக்கும் உள்ள உறவை ஒரு புகைப்பட தொகுப்பை போல் நமக்கு விவரிக்கிறார். ‘’ரப்புக்கு வீட்டில் எந்த வேலையும் இல்லை. பேகமுக்கு தலை, கை, கால் மற்றும் மற்ற பாகங்களை மசாஜ் செய்வது மட்டும்தான்’’ எனும் வரிகள் போதுமானதாக இருக்கிறது.

அத்தனை ஒடுக்குமுறைகளையும் மீறி பேகம் தன்னுடைய பாலியல் தேவையை நிறைவேற்றி கொள்வதன் மூலம் உணவை போல் பெண்களுக்கும் செக்ஸ் அடிப்படை தேவை என்பதை முன் வைக்கிறார் ஆசிரியர். நவாப்பின் ஓரிசேர்கையை பெரிதாக பொருட்படுத்தாத சமூகம் பேகம், ரப்புவின் ஓரின சேர்க்கையை கேலி கூத்தாக பார்க்கிறது. இங்குடன் கதை தன்னை நிறைவு செய்துக் கொள்கிறது.

இக்கதை வெளிவந்தவுடன் ஆபாச மொழியை பயன்படுத்தியதற்காக இஸ்மாத மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் இஸ்மாத வென்றது உண்மையில் கதையின் இலக்கிய சிறப்பு. பாலியல் உறவை பற்றிய அதீத வெளிப்பாடுகள் இருந்தாலும் எந்த ஒரு குறிப்பிட்ட வார்த்தைதையும் ஆபாசம் என்று நீதிபதியால் சொல்ல முடியவில்லை. இந்த வழக்கின் குறுக்கு விசாரனை மிகவும் அற்புதமானது அதை பதிவிடுவது தான் இஸ்மாத்தின் எழுத்து ஆழுமைக்கான சரியான விளக்கமாய் இருக்கும்.

இஸ்மாத்தின் வழக்கறிஞர்: இந்த கதையில் எது ஆபாசமாக உள்ளது?

வழக்கிட்டவர்: அவள் காதலர்களை சேர்த்துக் கொண்டாள்

இஸ்மாத்தின் வழக்கறிஞர் : காதலர்களா (ஆஷிக்)? சேர்த்துக்கொண்டாளா?

வழக்கிட்டவர்: தயக்கத்துடன் காதலர்கள் (ஆஷிக்)

இஸ்மாத்தின் வழக்கறிஞர் : மதிப்புமிக்க நீதிபதி அவர்களே, ஆஷிக் என்ற வார்த்தை மகத்தான கவிஞர்களால் பயன்படுத்தபட்டது, தெய்வீகமான வார்த்தையாக சான்றோர்களால் கருதபட்ட ஒன்று.

வழக்கிட்டவர்: ஆனால் பெண்கள் காதலர்களை தேடுவது சரியான விடயமல்ல

இஸ்மாத்தின் வழக்கறிஞர் : ஏன்?

வழக்கிட்டவர்: ஏனென்றால்…. ஏனென்றால் இது மரியாதையான பெண்களுக்கு உகந்தது அல்ல

இஸ்மாத்: என் மீது வழக்கு தொடர்ந்தவர் மரியாதைக்குரிய பெண்கள் தான் காதலர்களை தேட மாட்டார்கள் என்கிறார். அப்படியானால் மரியாதையற்ற பெண்கள் பண்ணலாம் தானே?

வழக்கிட்டவர்: ஹ்ம்ம் இல்லை..இல்லை. அதை குறிப்பிடுவது ஆபாசம் அல்ல, ஆனால் மரியாதைக்குரிய குடும்பத்தில் இருந்து படித்த ஒரு பெண் இந்த பெண்களை பற்றி எழுதுவது கண்டனத்துக்குரியது

இஸ்மாத்தின் வழக்கறிஞர் : எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் கண்டித்து கொள்ளுங்கள். ஆனால் சட்டத்தில் இதற்கு இடமுண்டா?

வழக்கு முடிந்தது.

இந்த கட்டுரையும் முடிவடைகிறது!

நன்றி - எனில்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்