/* up Facebook

Dec 15, 2014

அது என்னவாயிருக்கும் ?


 (என் நாட்குறிப்பின் சில பக்கங்களிலான கிறுக்கல்களே இவை)

எனக்கு இன்றும் நல்லா ஞாபகம் இருக்கின்றது சில விடயங்கள் குறித்து பத்திரிகைளில் வரும் போது அவற்றினை ஒளிந்திருந்து வாசித்திருக்கின்றேன். என்னுடைய இரகசிய வாசிப்புகளுக்கு நான் பயன்படுத்திய இடம் என் அறையின் கதவு மூலை என்பதும் இன்னும் ஞாபகத்திலிருக்கின்றது. சில நேரங்களும் இவை குறித்த எண்ணிலா கேள்விகள் என்னுள் எழுவதுண்டு. அம்மாவும் அப்பாவும் பெரும்பாலும் என்னுள் வினாக்கள் எழும் நேரங்களில் அலுவலகத்தில் இருப்பார்கள். வீட்டில் எங்களை வளர்த்த அக்காவிற்கு பதிலளிக்கும் அளவுக்கு அறிவு இருக்கவில்லை அல்லது என் அளவிற்கு இறங்கி பதில் சொல்வதற்கு அவவுக்கு தெரிந்திருக்கவில்லை அல்லது அவ சொன்னது எனக்கு புரிந்திருக்கவில்லையோ என்பது என் பருவ வயது நினைவு மீட்டல்களில் எனக்குள் நானே எடுத்துக்கொண்ட தீர்மானங்கள்….  ஆனால் அந்த இரகசிய விடயங்களான செக்ஸ், ஆண் - பெண் பாலின உறுப்புக்கள், கொண்டம் (ஆணுறை) போன்ற விடயங்கள் குறித்த கேள்விகள் மட்டும் பல ஆண்டுகள் என்னுடன் பயணித்துக்கொண்டுதானிருந்தன.

எல்லாரும் ஒன்றாயிருந்து படம் பார்க்கும் போது கிஸ் சீனோ அல்லது படுக்கையறை காட்சிகள் வரும் போதோ நானும் தம்பியும் கண்களை மூடிக்கொள்வம். அநேகமாக மூடிய கை இடைவெளியில் கள்ளத்தனமாக பார்த்துக்கொள்வேன். இடைக்கிடை “என்ன நீ இந்த முத்தல் விசயம் எல்லாம் பார்க்கின்றாய்….” என்று தம்பியையும் விரட்டிக்கொள்வன். அதற்கு “ ஏன் நீங்க கைக்குள்ளால பார்க்கலயா?” என்றோ “ஏன் அக்காச்சி பொய் சொல்றீங்க நான் பார்க்கலயே” என்றோ பதில் அளிப்பான்.

பள்ளியில் 9 ஆம் வகுப்பிற்கு வந்த நேரம் தான் நான் பெரிய பிள்ளையானன். எனக்கேதோ அப்போது தான் என் இரகசிய கேள்விகள் அதிகரித்ததோ என்றிருந்தது. எமக்கு “சுகாதாரமும் உடற்கல்வியும்” என்ட பாடம் ஒன்றிருந்தது. அதில 61 தொடக்கம் 73 ஆம் பக்கம் மட்டும் ஆம்பிள்ளை ,பொம்பளையல்ட வெற்றுடம்பு படங்கள், மார்பின் படம், பெரிய பிள்ளையாதல் பற்றிய விடயங்கள் குறித்த படங்கள் இருக்கும். அந்தப் பக்கங்கள சுகாதார ஆசியர் கூட வாசிக்காம தான் தாண்டிப்போனார். எங்கட நண்பிகள் குழுவுக்குள்ள சிலநேரம் அதில இருந்த படங்களை காட்டி பகிடி பண்ணிக்கொள்வம். ஆனா எங்க குழுவ தாண்டியோ அல்லது ஆசிரியரிடம் இது பற்றி பேசுமளவிற்கோ எனக்கு தைரியம் இருக்கல்ல. இதை தைரியம் என்டத விட கூச்சம் என்டும் சொல்லலாம். இந்தக் கூச்சம் நான் பள்ளியை விட்டு நிற்கும் வரை கூட என்னை விட்டுப் போகல. உயர்தரத்தில் “இனப்பெருக்கம்” பற்றி என் சக நண்பிகள் படித்த நேரம் அட கணிதப்பிரிவுலயும் இந்தப் பாடத்தை போட மாட்டார்களா என்று ஏங்கிய காலமது.

பதின்ம வயதை கடந்து கொஞ்சம் கொஞ்மாக என் சுற்றுவட்டங்கள் அகலத் தொடங்கின பிறகு தான் எனக்குள் இருந்த வெட்கங்களும் தொலையத் தொடங்கின. பள்ளி வரை வெறும் பெண் நண்பிகளுடன் மட்டும் நின்றிருந்த என் நட்பு வட்டத்தில் பின்னரான பல்கலைக்கழக வாழ்வில் ஆண் நண்பர்களும் இணையத் தொடங்கினாங்க. ஒன்றாக இருந்து படிக்கும் போது சில நேரங்களில் இரட்டை அர்த்தமான பேச்சுக்கள் அடிபடும். அந்த நேரங்கள்ல பாடத்தை படிக்கிற மாதிரி மூஞ்ச வச்சுக்கொண்டு காதை தீட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பன். ஏதாவது கசமுசா சொற்கள் கேட்டுவிட்டால் அது பற்றி தான் என் சிந்தனை ஓட்டங்கள் இருக்கும். என் இரகசிய வாசிப்புக்களுடன் இவற்றினை ஒப்பீடு செய்யவும் தொடங்கும் மனம். ஆனால் வெளிப்படையாக அந்தப் பேச்சுக்களுள் கலந்துகொள்ளவோ என் கேள்விகளை பதில்களால் நிரப்பிக்கொள்ளவோ என்னால் முடிந்திருக்கவில்லை. ஏதோவொரு திரை எனக்குள்ளேயே விழுந்து விடும். என் அந்த மூன்று நாட்களில் பல்கலைக்கழகம் போகாமல் இருந்து யாராவது “ஏன் வரல?” என்டு கேட்டால் கூட “எனக்கு மாதவிடாய் வந்துட்டு. வயிற்று வலியால வரல” என்டு சொல்லக் கூட என்னால் முடியல. அதற்கு காய்ச்சல், தலையிடி, வயிற்றோட்டம் என்று வராத பல நோய்களை இட்டு நிரப்பிக்கொள்வன். ஏன் என் மாதவிடாய் நாட்களில் பெரும்பாலும் என் உளவியலிலும் மாற்றங்கள் இருக்கும். எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழுவேன். யாராவது கேட்டால் “சின்னப் பிரச்சினை ஒன்டு அதான் கோபமா இருக்கன்” என்டு இல்லாத கோபங்களை இணைத்துக்கொள்வன்.

இப்படி இருக்கும் போது தான் விடுதி வாழ்க்கைக்குள் வரவேண்டியதொரு நிர்ப்பந்தம். வேறு பொழுது போக்குகள் இல்லாத இடம். என் நல்ல காலம் விடுதிக்கருகில் நூலகம் இருப்பது. சாண்டில்யன், கல்கி, ராஜேஷ்குமார் என இருந்திருந்த என் நூல் பட்டியல் நீளத்தொடங்கியது. பல ஆங்கில எழுத்துக்களை வாசிக்க தொடங்கினேன். முற்போக்கு சிந்தனைகளை அவை விதைக்க தொடங்கின. பாலியல் கல்வி என்பது வேறேதோ உலகத்து விடயமல்ல மனித செயற்பாடுகளுக்கு இன்றியமையாததொன்று என்ற புரிதல் என்னுள் ஏற்படத்தொடங்கின. இதன் தாக்கம் என் மாதவிடாய் நாட்களை என் சக பல்கலைக்கழக ஆண் நண்பர்களுக்கு கூட தெரிவிக்குமளவிற்கும் கொண்டு வந்தது. இப்போதெல்லாம் “மாதவிடாய்” என்பது என் தவறல்ல மறைக்கப்படுவதற்கு அது எனக்குள் ஏற்படுகின்ற உடலியல் மாற்றம் என்கின்ற தெளிவு எனக்கு உருவாகியுள்ளது. 

இந்த நேரத்தில தான் கடந்த 4 நாட்களாக இளம் வயது பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார பயிற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையில் பங்குகொள்ள சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. என் இரகசிய கேள்விகளுக்கான விடைகள் இன்று நிரப்பப்பட்டிருக்கின்றன. முதல் நாள் பங்குபற்றியவர்களிடம் இருந்த ஒருவித தயக்கம் கூட முடிவிற்கு வந்திருந்தது. காலை முதல் மாலை வரையான பயிற்சிகள் முடிந்த பின்னும் நாம் அனைவரும் ஆண் - பெண் வேறுபாடின்றி குழுவாக விடியற்காலை வரை கூட கலந்துரையாடியமை இதற்கு நல்லதொரு உதாரணம். இம்முறை என்னுடைய பிறந்த நாளிற்கான பரிசாக இந்த நண்பர்களில் பலர் கொண்டமும் (Condom) , கர்ப்பத்தடை மாத்திரையும் தான் தந்தார்கள். இதனை நான் அவமானமாகவோ அல்லது ஏதோ தொடக்கூடாத பொருளாகவோ கருதவில்லை. இன்று இதை எழுதுவதால் விமர்சனத்திற்குள்ளாகும் என் சுயம் குறித்தும் எனக்கு அக்கறையில்லை. இந்த 25 வயதிற்கு  பின்னர் எனக்கு கிடைத்திருக்கின்ற பாலியல் குறித்த தெளிவு பதின்ம வயதிலேயே ஏனையவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என்னளவிலான வாதம் … இத்தகைய பாலியல் கல்வியினூடாக  பாலியல் வன்முறைகள், இளவயது கர்ப்பம்,  துஷ்பிரயோகங்கள் தடுப்படுவதுடன்  பாலியல் தொழிலாளிகள் குறித்த எம் பார்வை மாற்றமடைய கூடும் எனவும் நான் கருதுகின்றேன்.

என் நாட்குறிப்பு பக்கம்  - 01 
( கேஷாயினியின் நாட்குறிப்பிலிருந்து )

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்