/* up Facebook

Dec 12, 2014

ஆரஞ்சு புரட்சி: தட்டிக் கேட்போம் துணிச்சலுடன்


நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரையுள்ள 16 நாட்களும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நாட்களாக சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தக் குறுகிய காலகட்டத்தில் எப்படியெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கையே 'ஆரஞ்சு யுவர் நெய்பர்ஹுட்' (orange your neighbourhood).

“வீடு, தெரு, பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டுக்கு அருகே உள்ள கடை என எந்த இடத்தில் வேண்டுமானாலும் அனுமதி பெற்று ஆரஞ்சு நிறக்கொடியை ஏற்றுங்கள். அல்லது ஆரஞ்சு நிற விளக்குகளை ஒளிரச் செய்யுங்கள். அதுவும் சாத்தியமில்லை என்றால், ஆரஞ்சு நிறக்கைப்பட்டையை அணிவியுங்கள். இது என்ன, ஏன்? என்ற கேள்விகள் எழும்போது சர்வதேச அளவில் பெண்கள் சந்திக்கும் வன்கொடுமைகளை முன்வைத்து அவற்றைத் தடுப்பதற்காகவே இந்தப் பிரச்சாரம் எனத் தெரிவியுங்கள்” என்கிறது நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு.

இந்தக் கருத்தாக்கத்தை ஏற்று நியூயார்க் நகரின் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கின் மேற்கூரை நவம்பர் 25 அன்று ஆரஞ்சு விளக்குகளால் ஒளிரவிடப்பட்டது. இன்னும் பல இடங்களில் இந்தப் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. பாலியல் வன்முறைகள், குடும்ப நபர்களாலேயே வன்முறைக்கு ஆளாக்கப்படுதல், பணியிடத்தில் பாலியல் அத்துமீறல்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள் என உலகம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலிலேயே வசிக்கின்றனர். பொருளாதாரத்தில் வளர்ச்சி, கல்வியறிவில் வளர்ச்சி இதெல்லாம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்துகிறதா என்றால், பதில் உவக்கும்படியாக இருப்பதில்லை.

ஏன் இந்தப் புரட்சி?

பெண்கள் படிக்கிறார்கள், ஆணுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் வேலை பார்க்கிறார்கள், பொருளாதாரச் சுதந்திரம் பெற்றிருக்கிறார்கள் அப்புறம் இன்னும் ஏன் இதுபோன்ற ஆரஞ்சுப் புரட்சி எனச் சிலர் கேட்கலாம். பெங்களூரில் பள்ளிக்குச் சென்ற 6 வயது குழந்தை, கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதும், ஊடகத் துறையில் பணியாற்றிய பெண், தன் உயர் அதிகாரியால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதும் இங்கே நடந்துகொண்டுதானே இருக்கிறது? இவற்றைத் தடுக்கவே இந்த ஆரஞ்சுப் புரட்சி. இத்தகைய புரட்சிகள் வெடிக்கப் பெரும் படை தேவையில்லை, ஒரு சிறு பொறிபோதும்.

தடைபோடும் தயக்கம்

பேருந்துகளிலும், ரயில்களிலும், கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளிலும் வெறித்துப் பார்க்கும் பார்வைகளையும், இடித்துப் பார்க்கும் உரசல்களையும் வெளியே சொன்னால் அவமானம் என நினைக்கும் பெண்கள், சிறு முறைப்பில்கூடத் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டத் தயங்குவார்கள். வேறு பேருந்தையோ வேறு பாதையையோ தேர்ந்தெடுக்கிறவர்களும் உண்டு. ஒரு பெண் பேருந்தில் நிம்மதியாகப் பயணம் செய்யக்கூட இங்கே வாய்ப்பில்லை. பாதுகாப்பான பேருந்து பயணத்துக்காக அவள் சாகசம் புரிந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமானால், எத்தகைய சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

சில மணித்துளிகளில் முடிவடைந்து விடுகிற பயணத்தில் குறுக்கிடுகிற சிக்கல்களே மலைக்க வைக்கின்றன என்றால் ஒரு பெண் வாழ்நாள் முழுவதும் எத்தனையெத்தனை சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது? பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொது இடங்கள், வீடு உட்பட எந்த இடத்திலும் அவளுக்குப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் பெறுவதிலும், ஆண் - பெண் சமநிலை கொண்ட சமூகத்தை நோக்கி நகர்வதிலுமே ஆரஞ்சுப் புரட்சியின் நோக்கம் அடங்கியிருக்கிறது.

இந்த ஆரஞ்சுப் புரட்சி மூலம் ஒரே நாளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தகர்த்தெறிய முடியாது என்றாலும் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் குறைந்தபட்சம் குரலையாவது உயர்த்த வேண்டும். பேருந்துகளில், பொது இடங்களில் சீண்டல்களுக்கு உள்ளாகும்போது ஒடுங்கிப் போகாமல், உரத்துக் குரல் கொடுக்க வேண்டும். பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்கு வரத்து வாகனங்களில் பயணிக்கும்போது பாலியல் சீண்டல்களுக்கு ஆளானால் 1091 என்ற வுமன் ஹெல்ப்லைனையும் தொடர்பு கொள்ளலாம்.

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் வெறும் பார்வையாளர்களாக இருந்தாலும்கூட நமக்கு எதிரான அத்துமீறல்களை முதலில் நாம்தான் தட்டிக்கேட்க வேண்டும். அப்படித் தட்டிக்கேட்பதுதான் ஆரஞ்சுப் புரட்சியின் நோக்கமும்.
நன்றி - தி ஹிந்து

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்