/* up Facebook

Nov 15, 2014

‘The world before her’ - இது இந்தியாவின் ஆவணம்!


ஓர் ஆவணப்படம் உங்களை என்ன செய்துவிடும்?

‘The world before her’ என்ற ஆவணப் படத்தைப் பாருங்கள். அது உங்களை உணர்ச்சியூட்டும்; அதிர்ச்சியூட்டும்; அரசியல்படுத்தும்; பதற்றப்படுத்தும்; பயிற்றுவிக்கும்!

90 நிமிடப் படம்தான். ஆனால், அதில் இந்தியப் பெண்களின் இரு வேறு உலகங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நிஷா பகுஜா. மிக முக்கியமான இந்த ஆவணப்படம், திரைப்பட விழாக்களில் ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறது. இந்தி சினிமாவின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப், இந்தப் படத்தை இந்தியா முழுவதும் வெளியிட்டிருக்கிறார்.

மிஸ் இந்தியா அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்காகத் தயாராகிறார் ரூகி சிங் என்கிற பெண். இதற்காக, சிறு நகரம் ஒன்றில் இருந்து மும்பைக்கு வருகிறார். அங்கு பளபளக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பயிற்சியாளர்கள் அந்தப் பெண்ணைப் போட்டிக்குத் தயார் செய்கின்றனர். அவர் உள்பட 20 பெண்கள் அந்தப் பயிற்சியில் இருக்கின்றனர். கூச்சத்தைப் போக்கி, உடலை ஒரு விற்பனைப் பொருளாக மாற்றி, எப்படிக் கவர்ச்சிகரமாகச் சந்தைப்படுத்துவது என்பதைப் படிப்படியாக, பச்சையாகச் சொல்லித்தருகிறார்கள். அழகிப்போட்டியில் வெற்றிபெற்றால் கிடைக்கும் சினிமா வாய்ப்புகள், விளம்பர வருவாய், மாடலிங் பணம்… எனக் காத்திருக்கும் பொன்னுலகம் குறித்து அவர்களுக்கு நினைவூட்டப்படுகிறது. ”இது போட்டி நிறைந்த உலகம். இதில் பட்டை தீட்டப்பட்ட வைரத்துக்குத்தான் விலை அதிகம். நீங்கள் உங்களை விற்றுக்கொள்வதற்குத்தான் இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்” என்கிறார்கள் பயிற்சியாளர்கள்.ஒவ்வொரு பெண்ணின் உடலையும் முகம், கை, கால் எனத் தனித்தனியாகப் பிரித்து, ஒவ்வோர் அங்கமும் அழகின் இலக்கணத்துக்குள் இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படுகிறது. உதாரணமாக, பெண்ணின் முகம்… நெற்றி, புருவத்தில் இருந்து மேல் உதடு வரை, அதில் இருந்து கீழ்த் தாடை வரை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. மூன்றும் சம அளவு உள்ளதாக இருப்பதுதான் அழகாம். அப்படி இல்லாத பெண்களுக்கு சிகிச்சை மூலம் அவை சரிசெய்யப்படுகின்றன. இப்படி நினைத்துப் பார்க்க முடியாத பலவித சிகிச்சைகள்; பயிற்சிகள். சிரிப்பதற்குக்கூட பயிற்சி தரப்படுகிறது. தொழிற்சாலையில் ஒரு பொருளைத் தட்டித்தட்டி சரிசெய்வதைப்போல அந்தப் பெண்களின் உடல் பாகங்கள் செப்பனிடப்படுகின்றன.

இதே நேரத்தில் வேறு ஓர் இடத்தில் இன்னொரு பயிற்சி முகாம் நடக்கிறது. அது ‘விஷ்வ ஹிந்து பரிஷத்’ அமைப்பு நடத்தும் ‘துர்கா வாஹினி’ என்கிற இளம் பெண்களுக்கான இந்துத்துவப் பயிற்சி முகாம். 15 முதல் 20 வயது வரையிலான ஏராளமான பெண்கள் அந்த முகாமில் கலந்துகொள்கின்றனர். அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார் பிரச்சி திரிவேதி என்கிற பெண். ஆபத்து கால தற்காப்புக் கலையில் தொடங்கும் பயிற்சி, மெதுவாக மதவாத வெறியூட்டலாக மாறுகிறது. முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்த நாட்டின் எதிரிகள் என்று நேரடியாக அவர்களுக்குப் போதிக்கப்படுகிறது. ‘எனக்கு ஒரு முஸ்லிம் ஃப்ரெண்டுகூட இல்லை என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்’ என்கிறாள் ஒரு சிறுமி. ‘இந்தியாவுக்காக உயிரையும் தருவேன். காஷ்மீரைக் கேட்டால், தொண்டையை அறுப்பேன்’ என்பதுபோன்ற முழக்கங்கள் அவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன.

‘இந்தியப் பண்பாட்டைக் கட்டிக்காக்க வேண்டும். நவீன மேற்கத்திய நாகரிகங்கள் நமது பண்பாட்டை அழித்துவருகின்றன. நாம் பழமைக்குத் திரும்ப வேண்டும்’ என்று அவர்களுக்கு மீண்டும் மீண்டும் போதிக்கப்படுகின்றன.

பயிற்சியாளர் திரிவேதியிடம் படத்தின் இயக்குநர், ”நீங்கள் நம்பும் இந்தக் கொள்கைக்காக, கொலையும் செய்வீர்களா?” என்று கேட்கிறார். ”அந்தச் சூழ்நிலையில் கொலை செய்வது அவசியம் என்றால் நிச்சயம் செய்வேன்” என்று உறுதியாகச் சொல்லும் திரிவேதி, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பெண் சாமியார் பிரக்யா சிங்தான் தன் ரோல்மாடல் என்கிறார். ”உங்கள் கொள்கைக்கு யாரால் ஆபத்து வரக்கூடும் என்று நினைக்கிறீர்கள்?” என்று கேட்பதற்கு, ”முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள்” என்று பதில் வருகிறது.

முந்தைய மிஸ் இந்தியா பயிற்சி முகாமில் இறுதிப் போட்டி நடக்கிறது. எங்கும் ஒளிவெள்ளம். முடிவு அறிவிக்கப்படுகிறது. மூன்று வெற்றியாளர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கின்றனர். அவர்கள் மீது வண்ணக் காகிதத் துகள்கள் கொட்டப்படுகின்றன. மற்றவர்கள் மேடையின் பின்னே மங்கிய ஒளியின் கீழ் கண்ணீருடன் வெளியேறுகின்றனர்.

துர்கா வாஹினி பயிற்சி முகாமின் நிறைவு நாள். பயிற்சியாளர் திரிவேதி, காவித் துப்பட்டாவை தான் அணிந்திருப்பதைப்போல உடலின் குறுக்காக அணிந்துகொள்ள சிறுமிகளுக்குக் கற்றுத்தருகிறார். ‘மிஸ் இந்தியா போட்டியில் கட்டியிருப்பார்களே… அதுபோல’ என்று சொல்லித்தருகிறார். அந்தச் சின்னஞ்சிறுமிகள் ‘நான்தான் மிஸ் இந்தியா’ என்று சிரிப்புடன் சொல்லியபடியே அதை அணிந்துகொள்கின்றனர்.

உலகமயமாக்கலும் மதவெறியும் பெண்களை எப்படிப் பயன்படுத்திக்கொள்கின்றன என்பதை, இருவேறு உலகங்களின் உண்மைகளைக்கொண்டு, சான்றுகளுடன் நிறுவியிருக்கிறார் இயக்குநர். இந்த ஆவணப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் உண்மையானது;  சித்திரிக்கப்பட்டது அல்ல. துர்கா வாஹினி பயிற்சி முகாமில், இதுவரை யாரும் அனுமதிக்கப்பட்டது இல்லை; இதுதான் முதல் முறை. தனக்குக் கிடைத்த வாய்ப்பைக்கொண்டு மிக நேர்த்தியாக, அரசியல்ரீதியாக, சரியான பக்கத்தில் இருந்து காட்சிகளைத் தொகுத்திருக்கிறார் இயக்குநர் நிஷா. இந்தப் படத்துக்காகக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேல் அவர் செலவிட்டிருக்கிறார். கனடாவில் வசிக்கும் இந்தியரான நிஷாவுக்கு, இது மூன்றாவது  ஆவணப்படம்.

பொதுவாக, ஆவணப்படத்துக்கு உண்டான சோர்வுத்தன்மை எதுவும் இதில் இல்லை. சொல்லப்போனால், ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பார்ப்பைக் கூட்டுகிறார். பல இடங்களில் அவலமான ‘டார்க் ஹ்யூமர்’ சிரிக்கவைக்கிறது.

உலகமயமாக்கல், நுகர்வுக் கலாசாரம், பெண்ணியம், மத அடிப்படைவாதம் என இந்த ஆவணப்படம் பல பரிமாணங்களைத் தொட்டுச் செல்லும் அதே நேரம், அந்தப் பெண்களின் மீது பரிதாபத்தையும் கோருகிறது. அவர்கள், இந்த ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பின் பலியாடுகள் என்பதை உணர்த்துகிறது. மிஸ் இந்தியா போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பது அந்தப் பெண்ணின் பிறவி ஆசையும் அல்ல; இந்து மதவெறியும் இஸ்லாமிய வெறுப்பும் அந்தப் பெண்ணின் பிறவிக் குணமும் அல்ல. இரண்டும் அவர்களின் மீது திணிக்கப்பட்டவை.

இது, வெறும் ஆவணப்படம் அல்ல; இந்தியா குறித்த ஆவணம்!

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்