/* up Facebook

Nov 8, 2014

வீரப்பெண் இரோம் ஷர்மிளா!


இன்று நவம்பர் 5. இது, 14 ஆண்டுகளுக்கு முன் மணிப்பூரின் வீரப்பெண்  இரோம் ஷர்மிளா, உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நாள்! 

தனியொரு ஆளாய் நான் என்ன செய்துவிட முடியும்?’ என்று நினைக்காமல், ‘என்னால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்வேன்; அதில் உறுதியாய் இருப்பேன்!’ என்று கடந்த 14 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து, தான் கொண்ட கொள்கையில் இன்று வரை உறுதியுடன் இருக்கிறார் இரோம் சர்மிளா!

(மணிப்பூர் மாநிலம்) இம்பாலில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ள மாலோம் பகுதியில், (14 வருடங்களுக்கு முன்), ஒரு அதிகாலை நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர் 10 பேர். திடீரென்று அச்சுறுத்தும் சத்தத்துடன் பச்சை நிற வண்டி அங்கு வந்து நிற்க, அதிலிருந்த அஸ்ஸாம் ரைஃபில்ஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள், துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த 10 பேரும் அதில் அநியாயமாகப் பலியாயினர். அப்போது மனித உரிமைக்கான அமைப்பான ‘ஹியூமன் ரைட்ஸ் அலர்ட்ட்’ல் தற்காலிகமாக பணியாற்றிக் கொண்டிருந்த இரோம் ஷர்மிளா, சம்பவம் நடந்த நவம்பர் 2 அன்று சாகெபுரோயில் உள்நாட்டு சமாதானம் குறித்து நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு, சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். ஊரெங்கிலும் அதே பேச்சு. மறுநாள் நவம்பர் 3 தினசரிகளில் சம்பவத்தின் படங்களையும், விபரங்களையும் படித்து வேதனையும் கோபமும் இரண்டு மடங்கானது ஷர்மிளாவுக்கு.

இந்த அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், இதற்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தார். தனது மரியாதைக்குரிய காந்தியடிகள்தான் அவர் மனக்கண்ணில் தோன்றினார்.
நவம்பர் 4, சம்பவம் நடந்த மலோமிக்குக் கிளம்பினார் ஷர்மிளா. செல்லும் வழியெங்கும் எதிர்ப்பாளர்களை பிடிப்பதற்காக ராணுவத்தினரும், தடைச்சட்டம் இருந்ததால் காவலர்களும் நிறைந்திருந்தனர். அவ்வழி செல்வது ஆபத்தானது என்று மக்கள் அவரைத் தடுத்தனர். வீட்டிற்கே திரும்பிவிட்டார். மதியம் அம்மா சக்திதேவியின் கட்டாயத்தின் பேரில் கொஞ்சம் உணவு உண்டார். அம்மா கடையிலிருந்து வாங்கி வந்திருந்த இனிப்பு பலகாரங்களை கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். பின்னர், ‘இனி எப்போதும் நான் உணவு உட்கொள்ளப் போவதில்லை!’ என்று அவர் சொல்ல, அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘நம்முடைய மண்ணிற்காக நான் சிலவற்றை செய்யப் போகிறேன். அதற்கு உன்னுடைய ஆசீர்வாதம் வேண்டும்!’ என்று தாயிடம் சொல்லிச் சென்ற ஷர்மிளா, அப்பாவி மக்கள் 10 பேரை ராணுவம் கொலை செய்த அதே இடத்திற்கு சென்று, அங்கு நவம்பர் 5, 2000ல் தன் உண்ணாவிரத்தை (உணவு மற்றும் நீர் உண்ணா போராட்டத்தை) ஆரம்பித்தபோது, அவருக்கு வயது 28. ‘ஆயுதப்படைக்கு அளித்துள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை இந்த மண்ணிலிருந்து திரும்பப் பெறும் வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வேன்!’ என்ற ஷர்மிளாவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருக, பல மகளிர் அமைப்புகள் அவரோடு சேர்ந்து கொண்டன. அரசாங்கம் பல விதங்களில் அவருடைய குடும்பத்தினரைப் பயமுறுத்தி போராட்டத்தை கைவிடுமாறு ஷர்மிளாவை நெருக்கியது. ஆனால் அவர் எதற்கும் மசியவில்லை. ஷர்மிளவுக்கு ஆதரவும், அரசுக்கு எதிர்ப்பும் அதிகரித்துக் கொண்டே போக, அவரை உடனடியாக கைது செய்தது அரசாங்கம். அப்போதும் அவர் உண்ணாவிரதத்தை கைவிடாமல் இருந்ததால், சிறையிலேயே இறந்து
விடுவார் என்று நவம்பர் 21 அன்று அவரை விடுதலை செய்தனர்.

வெளியே வந்த போதிலும் ஷர்மிளா உண்ணாவிரதத்தைத் தொடர, அதனை எதிர்ப்பார்க்காத அரசு, மீண்டும் அவரைக் கைது செய்து பலவந்தமாக உணவு கொடுத்து உண்ணாவிரதத்தை முறியடிக்க முயன்றது. ஷர்மிளா தங்கியிருந்த அறையிலேயே சமைக்கவும் செய்தார்கள், வாசனையால் தூண்டுப்பட்டு அவர் உணவு உட்கொள்வார் என்று. ஆனால் ஒவ்வொரு முறையும் தன்னை சோதித்தவர்களை வென்று கொண்டே இருந்தார் ஷர்மிளா. நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகிக் கொண்டே செல்ல, தன் லட்சியத்தை அடைவதற்கு முன்னர் இறந்துவிடக்கூடாது என்பதற்காக, மூக்கு வழியாக இரைப்பைக்கு குழாயைச் சொருகி அதன் வழியே திரவ உணவினை உட்செலுத்த அனுமதித்தார் ஷர்மிளா. உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி என்று அவர் கைது செய்யப்படுவது, பின்னர் வெளிவருவது என்றே தொடர்ந்தது.

உண்ணாவிரதம் ஆண்டுக் கணக்கில் நீண்டதால் ஷர்மிளாவின் உள்ளுறுப்புகள் பலமிழந்தன. உடல் மிகவும் தளர்ந்துவிட்டது. மாதவிலக்கு நின்றுவிட்டது. உதட்டில் தண்ணீர் படக்கூடாது என்பதற்காக பஞ்சின் மூலம் தான் பற்கள் சுத்தம் செய்யப்படுகிறது. தலை முடி சீவுவதில்லை, செருப்பு அணிவதில்லை, கண்ணாடி பார்ப்பதில்லை. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வரும் தன் உடல் நிலை கண்டு வருந்தும் நண்பர்களிடம் ஷர்மிளா சொல்வது ஒன்றுதான்...

‘நாமெல்லாம் ஒரு நாள் சாகப்போகிறவர்கள் தானே!’ ஷர்மிளாவுக்கு இப்போது இரவும் பகலும் துணையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது... அவர் அண்ணன் சிங்ஜித். மகளைப் பார்க்க மனபலம் இல்லாமல் ஷர்மிளாவின் அம்மா சக்திதேவி அவரை விட்டு விலகியேயிருக்க, தன் லட்சியத்தை அடையாமல் அம்மாவைப் பார்க்க மாட்டேன் என்று ஷர்மிளாவும் உறுதியாக இருக்கிறார். ஷர்மிளா உண்ணாவிரதத்தை ஆரம்பித்து இந்த நவம்பர் 5 வரை 14 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், மணிப்பூரில் இன்னும் இரணுவத்தின் சிறப்பு அதிகாரம் தடைசெய்யப்பட்ட பாடில்லை. தடைசெய்யும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று உறுதியுடன் இருக்கிறாள் இரோம் சர்மிளா.

‘சிறையில் இருக்கும் ஷர்மிளாவுக்கு ஏதாவது நடந்துவிட்டால் நான் அந்த உண்ணாவிரத்தை தொடர்வேன்!’ என்கிறாள், 13 வயதுச் சிறுமி ஜென்னி. இவர் ஷர்மிளாவின் அக்கா பிஜோயந்தியின் மகள்!


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்