/* up Facebook

Nov 4, 2014

இந்திரா: பெண் சக்தியின் எழுச்சிஇந்திரா காந்தியைப் பற்றி இரண்டு விதமாகச் சொல்வார்கள்: ஒன்று, நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியவர். இரண்டு, துணிச்சல் மிகுந்த பெண்மணி. இந்த இரண்டு எதிர்நிலைகளையும் தாண்டி, இந்திரா காந்தியைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தைச் சமகால வரலாறு நமக்கு ஏற்படுத்துகிறது.

நேருவை விமர்சித்தவர்கள்கூட, துணிச்சலாக முடி வெடுப்பவர் என்று இந்திராவைப் பாராட்டியிருக் கிறார்கள். முற்போக்கான, அதிரடியான பல நடவடிக் கைகளை அவர் எடுத்ததுதான் இதற்குக் காரணம். மன்னர் மானியத்தை ஒழித்தது அதன் முதல் படி. 14 தனியார் வங்கிகளை அரசுடைமையாக்கியது பெரும் பாய்ச்சல். நிலக்கரி, இரும்பு, தாமிரம், எண்ணெய் சுத்திகரிப்பு, காப்பீடு ஆகிய தொழில்களை அரசுடைமையாக்கினார்.

எல்லாவற்றையும் தனி யாருக்குத் தாரைவார்க்க பாஜக, காங்கிரஸ் இரண்டுமே துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இந்திராவின் அப்போதைய நடவடிக்கைகள் அசாதாரணமானவை. நேற்றைய மன்மோகன் சிங்கோ இன்றைய மோடியோ ஒரு துரும்பைக்கூட அரசுடமை யாக்க முடியாத நிலைதான் இன்று.

வசந்த காலம்

அது மட்டுமா, இந்திராவின் காலம் ஐந்தாண்டுத் திட்டங்களின் வசந்த காலம். மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களை முழுமையாக அமல்படுத்தினார். அவற்றில் இரண்டு இலக்குகளை எட்டியது. அரிசி, கோதுமை போன்ற உணவுத் தானியங்களை இறக்குமதி செய்த நாட்டை ஏற்றுமதி செய்யும் நாடாகத் தன்னிறைவு காணச் செய்தது இந்திராவின் சாதனைகளுள் ஒன்று. ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் ஊதியம் வழங்க சம வேலை, சம ஊதியச் சட்டத்தை நிறை வேற்றியது பெண்ணுரிமைகளுக்கான பயணத்தில் ஒரு மைல்கல்.

இந்தியா-பாகிஸ்தான் பகைமை உச்சத்தைத் தொடுவதற்குக் காரணமாக இருந்தது அப்போது நடந்த போர். அந்தப் போரில் கிடைத்த வெற்றி, இந்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்குப் பேருதவி புரிந்தது. அதன் காரணமாகத்தான் மாற்றுப் பாசறை யிலிருந்த வாஜ்பாய், இந்திராவை “துர்கா தேவி” என்று உணர்ச்சி மேலிட வர்ணித்தார்.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிய மறுத்து, சோவியத் யூனியனுடன் 20 ஆண்டு கால நட்புறவு ஒப்பந்தம் செய்துகொண்டார். பொக்ரானில் முதல் அணுகுண்டை வெடித்து அமெரிக்காவை அதிர்ச் சிக்குள்ளாக்கினார். இவற்றின் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவின் இரும்புப் பெண்மணியாக உருவெடுத்தார் இந்திரா. இதெல்லாம் சர்வாதிகாரப் போக்குக்கு அவரை இட்டுச்சென்றதுதான் துரதிர்ஷ்டம்.

காங்கிரஸ் கட்சியின் பழமைவாதத் தலைவர்களை இந்திரா ஓரங்கட்டினார். அதிகாரங்களை மைய அரசில் அதுவும் பிரதமர் அலுவலகத்தில் குவியச் செய்தார். அரசில் எந்தப் பதவியிலும் இல்லாத அவருடைய மகன் சஞ்சய் காந்தி, தனி அதிகார மையமாக உருவெடுத்ததை ஆதரித்தார். மாநிலங்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் யாரும் தனிச் செல்வாக்கு பெற்றுவிடாமல் மறைமுகமாகத் தடுத்து

வந்தார். இதனால் கட்சி அமைப்புரீதியாகப் பலவீனம் அடையத் தொடங்கியது. தன் சொல்லைக் கேட்பவர் களையும் தன்னைப் புகழ்பவர்களையும் அருகில் வைத்துக்கொண்டார். இந்தியாவின் முழு அதிகாரம் படைத்த சக்ரவர்த்தினியாகத் திகழ்ந்தார்.

நெருக்கடி நிலை

தேர்தல் முறைகேடு வழக்கில் தோல்வியுற்ற பிறகு, பிரதமர் பதவியிலிருந்து இந்திரா விலக வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தத் தொடங்கியதால், அவர்களை ஒடுக்க, உள்நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பதாகப் பிரகடனம் செய்தார். மக்களுடைய சிவில் உரிமைகளைத் தற்காலிகமாக ரத்து செய்தார். அரசை எதிர்த்துப் போராட்டம், பொதுக் கூட்டம் நடத்தத் தடை விதித்தார்.

பத்திரிகைத் தணிக்கையைக் கொண்டுவந்தார். எதிர்க் கட்சித் தலைவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார். அதே வேளையில், மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக, இருபது அம்சத் திட்டம் கொண்டுவந்தார். தேர்தல் வழக்குகளிலிருந்து பிரதமருக்கு விலக்களிக்கும் அவசரச் சட்டத்தையும் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

நெருக்கடி நிலை அறிவிப்பைத் தானாகவே விலக்கிக் கொண்டு, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலைச் சந்தித்துத் தோல்வி கண்டார். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, சாமர்த்தியமாகச் செயல்பட்டு அந்தத் தலைவர்களின் பதவி ஆசையைப் பயன்படுத்தி அந்தக் கட்சியை உடைத்தார். பிறகு நடந்த பொதுத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றினார்.

அக்டோபர் 31, 1984

பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளக் கட்சியின் செல்வாக்கைக் குறைக்கவும் சீக்கியர்களிடையே செல்வாக்கு பெறவும் அவர் ஆதரித்த பிந்தரன் வாலே, காலிஸ்தான் கோரிக்கையில் தீவிரமடைந்து தீவிரவாதிகளுடன் பொற்கோயிலில் ஒளிந்துகொண்டார். அவர்களை வெளியேற்ற ராணுவத்தைக் கொண்டு எடுத்த நீலநட்சத்திர நடவடிக்கையால் சீக்கியர்களின் அதிருப்திக்கு இந்திரா காந்தி காரணமானார். அதன் விளைவுதான், 1984 அக்டோபர் 31-ல் அவருடைய சீக்கிய மெய்க்காவலர்களாலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டது.

நெருக்கடி நிலையை மட்டுமே காரணம் காட்டி நிராகரித்துவிட முடியாத ஆளுமை இந்திரா காந்தி. ஒரு கட்டத்துக்குப் பிறகு, தான் உருவாக்கிய கூண்டில் தானே அடைபட்டுக்கொண்டதுதான் அவரைப் பற்றி உருவான எதிர்மறை சித்திரத்துக்குக் காரணம். எல்லாவற்றையும் தாண்டி, இந்தியர்கள் அவரைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்வதற்குச் சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.

நோஞ்சான் குழந்தையாக ஆங்கிலேயர் விட்டுச்சென்ற இந்தியாவைப் புவியரசியலில் முக்கிய சக்தியாக இடம்பெறச் செய்தவர் இந்திரா காந்திதான். அது மட்டுமல்லாமல், அரசியலிலும் பொது வெளியிலும் பெண்கள் முக்கிய சக்தியாக இடம்பெற ஆரம்பித்ததும் அவர் காலத்துக்குப் பிறகுதான். காலம்காலமாகப் பெண்ணுரிமைகளுக்காகக் குரல்கொடுத்தவர்களால் ஏற்பட்ட மாற்றத்தைவிட இது மிகவும் அதிகம்.

இந்திரா காந்தி, முன்னாள் பிரதமர், பெண் சக்தி, ஆரி

நன்றி - தி ஹிந்து

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்