/* up Facebook

Nov 2, 2014

பெண் சிசுக்கொலை: தொடரும் அவலம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரத்தில் பெண் சிசுக்கொலை உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது. அதற்கு முடிவுகட்டத் திட்டமிட்டு, ஜெர்மனியைச் சேர்ந்த பாதிரியார் பிரான்ஸ் சேவியர் டிர்ன்பெர்ஜர் 1987-ல் கருமாத்தூர் அருகே அழகுசிறை கிராமத்தில் கிளரீசியன் கருணை இல்லத்தைத் தொடங்கினார். இவர் ஜெர்மனியில் ராணுவ வீரராக இருந்து, பின்னர் அருட்தந்தையாக மாறியவர். 1969-ல் கிறித்துவ மதத்தைப் பரப்புவதற்காகத் தனி ஆளாக இந்தியா வந்தவர். ‘பிறப்பது இறப்பதற்கே’ என்ற தலைப்பில் ‘இந்தியா டுடே’யில் வந்த பெண் சிசுக்கொலை பற்றிய கட்டுரையைப் படித்ததுமே இப்படியொரு இல்லத்தைத் தொடங்கினார்.

முதல் கட்டமாக அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குத் தன் சபையினருடன் சென்றவர், “அம்மா தயவு செய்து பெண் சிசுக்களைக் கொல்லாதீங்க. நீங்க வளர்க்கணும்னு கட்டாயம் இல்லை. உசிரோடு மட்டும் தந்திடுங்க. நாங்க வளர்த்துக்கிறோம்” என்று கெஞ்சினார். சிசுக்களைக் கொல்ல முடிவெடுத்த பலர், அரை மனதுடன் குழந்தையை அவரிடம் கொடுத்தனர். காலப்போக்கில் நிறைய பேர் அவரிடம் தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளை ஒப்படைத்தார்கள். பெண் சிசுக் கொலை படிப்படியாகக் குறைந்தது. பெண் சிசுக்கொலையைத் தடுப்பதற்காக தமிழகத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இல்லம் இப்போது எப்படி இருக்கிறது? வாருங்கள், அழகுசிறைக்குச் செல்வோம். 

அழகிய கல் கட்டிடத்தின் முகப்பில் பாதிரியார் பிரான்ஸ் சேவியர் கையில் குழந்தையுடன் சிலையாக நிற்கிறார். கட்டிடத்திற்குள் தேவ மாதா, குழந்தை ஏசுவைக் கையில் ஏந்தி நிற்கிறார். மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிற அந்த இல்லத்தில், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகள் முதல் வளர்ந்த குழந்தைகள்வரை 34 குழந்தைகள் இருக்கிறார்கள். பெரும்பாலானவை பெண் குழந்தைகள். கன்னித்தாயாக மாறி அவர்களுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தார்கள் சில கன்னியாஸ்திரிகள். ஒரு காலத்தில் குழந்தைகளை வளர்த்து, அங்கீகரிக்கப்பட்ட தத்துக்கொடுப்பு மையங்களுக்கு அனுப்பிய மையம் இது. இப்போது இந்த மையத்தையே தத்துக்கொடுப்பு மையமாக அரசு தரம் உயர்த்தியிருக்கிறது. ஆனாலும், இத்தனை குழந்தைகள் எப்படி என்று காப்பகத்தின் நிர்வாகியான அருட்தந்தை மகிழ்ச்சிமன்னனிடம் கேட்டோம்.
“கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள். அனாதை குழந்தைகள் அதிகரிப்பதற்கு முன்பு அறியாமையும் வறுமையும் காரணமாக இருந்தது. இப்போது ஒழுக்கக்கேடும் நாகரிகமும் இருக்கிறது. முறையற்ற உறவு மற்றும் விடலைப் பருவத் தவறுகளால் பிறந்து, சமூகத்துக்குப் பயந்து தூக்கி வீசப்படும் குழந்தைகளின் எண்ணிக்கைதான் இப்போது அதிகம். அதேபோல, வறுமை காரணமாகச் சில பெற்றோர் தங்கள் பெண் குழ்ந்தைகளை கையளித்துச் செல்கிறார்கள். மிகச் சிலர் ஊனம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள்” என்கிறார்.
கன்னித்தாய்கள்!
ஒரு வீட்டில் இரட்டைக் குழந்தை பிறந்துவிட்டாலே, சமாளிப்பது கஷ்டம். இங்கே இத்தனை குழந்தைகளை எந்த முகச் சுளிப்பும் இல்லாமல் கவனித்துக் கொள்கிறார்கள். “எங்களுக்கு உதவியாக மரியாளின் அன்புப்பணி சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் இருக்கிறார்கள். இந்த மையம் தொடங்கப்பட்ட நாள் முதல், அவர்கள்தான் குழந்தைகளை அன்புடன் பராமரிக்கிறார்கள். அவர்களிலேயே நர்சிங் படித்தவர்களும் இருப்பதால், குழந்தைகளை நலமாக வளர்ப்பது எளிதாக இருக்கிறது.

இன்னொரு விஷயம், குழந்தைகளை இங்கேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் நினைப்பதில்லை. அது அந்தக் குழந்தைகளின் உணர்வுகளையும் உறவுகளையும் கொன்றுவிடும். பெற்றவர்கள் இல்லை என்றாலும் அப்பா, அம்மான்னு கூப்பிடவாவது ஒரு உறவு வேண்டுமே என்று தத்துக் கொடுத்து விடுகிறோம். அடுத்த தலைமுறை ஆரம்பிக்கும்போது உண்மையாகவே, அவர்களுக்கென ஒரு குடும்பம் உருவாக இது வழி செய்கிறது. தத்துக்கொடுப்பது என்ற வார்த்தை சிறியதாக இருக்கலாம், ஆனால் அது சட்டப்படி நடக்க வேண்டிய நீண்ட செயல்முறை.
இதுவரையில் நாங்கள் தத்துக்கொடுத்த எல்லாக் குழந்தைகளுக்கும் இறைவன் நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார். அதேபோல எந்தப் பெற்றோரும் இந்தக் குழந்தை எங்களுக்குப் பிடிக்கவில்லை என்று திரும்பக் கொண்டுவந்து கொடுத்ததும் கிடையாது. இந்தப் புனிதமான காரியத்தை, புனிதமாகவே செய்வதால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எங்களுக்கு நல்ல பெயர் இருக்கிறது” என்கிறார் மகிழ்ச்சி மன்னன். 

தொடரும் கருக்கலைப்பு
“பெண் சிசுக்கொலை ஒழிந்துவிட்டதா?” இதுதான் நாம் கடைசியாக கேட்ட கேள்வி. “பெண் சிசுக்கொலை ரொம்ப ரொம்ப குறைந்துவிட்டது. இதற்கு விழிப்புணர்வும் கல்வியும் ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் ஸ்கேன் வசதி. ஆணா பெண்ணா என்று தெரிந்து கொள்ளும் வசதியை பெண் சிசுவை அழிப்பவர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடந்த 2012-ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் தினமும் சராசரியாக 2000 குழந்தைகள் கருக்கலைப்பு செய்யப்படுவதாகவும், ஆண்டுதோறும் அது அதிகரித்துவருவதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வடமாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் நிலை பரவாயில்லை என்றாலும், இந்தக் கருக்கலைப்பில் விடலைப் பருவப் பெண்களின் பங்கு அதிகமிருப்பது கவலை தருகிறது. 

9, 10-ம் வகுப்பு படிக்கிற பிள்ளைகள்கூட குழந்தைகளைப் பெற்று எங்களிடம் தூக்கி வந்து கொடுத்திருக்கிறார்கள். வருடத்திற்கு 35 குழந்தைகள் கருணை இல்லத்திற்கு வருகின்றன என்றால் அதில் 18 முதல் 20 பேர் இவ்வாறு பிறந்தவர்கள் தான். விழிப்புணர்வால் மட்டுமே இதைக் குறைக்க முடியும் என்று உணர்ந்தோம். எனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளையும், கல்லூரி மாணவிகளையும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் அனுமதியுடன் இங்கே அழைத்து வருகிறோம். 

‘ஐயோ பாவம்’ என்று சொல்ல வைப்பதற்காக அல்ல. ‘இவை எல்லாம் உங்கள் வயதுப் பெண்களால், அனாதை என்று முத்திரை குத்தி, தூக்கி வீசப்பட்ட குழந்தைகள். சிறு வயதில் செய்கிற தவறால் ஒரு தவறும் செய்யாத இந்தக் குழந்தைகளின் நிலையை எடுத்துச் சொல்லி அறிவுறுத்துகிறோம். இந்தப் பிரச்சாரத்தை மதுரை வட்டாரத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவிகளிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஃபாதர் பிரான்ஸ் சேவியர் இருந்தால், இப்போது இதைத் தான் செய்திருப்பார்” என்கிறார் பாதிரியார் 
நன்றி - த ஹிந்து 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்