/* up Facebook

Nov 14, 2014

பெண்ணுக்கு எதிரானதா சட்டம்? - எஸ்.வி. வேணுகோபாலன்


பெங்களூரு மாநகரில் கடந்த சில மாதங்களாகப் பிஞ்சுப் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு இரையாகித் துடிப்பது குறித்த செய்திகள் ஒருபக்கம் நம்மை உலுக்கிக் கொண்டிருக்கையில், வயதான பெண்களும் காமுகர்களின் வேட்டைக்குத் தப்ப முடியவில்லை என்பதும் இன்னொரு பக்கம் அதிர்ச்சி தருகிறது.

இந்தப் பின்னணியில் 2010-ல் நடந்த ஒரு பாலியல் வன்முறை மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பும், நீதியரசர்களின் குறிப்புகளும் நாம் எந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்புகின்றன.

65 வயதான பெண்மணியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கொலையும் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த அச்சே லால் என்பவருக்குக் கீழமை நீதிமன்றம் கடுங்காவல் தண்டனை அளித்திருந்தது. தனது தாய் என்று அழைத்து வந்த பெண்ணிடம் அந்த மனிதன் இப்படி மோசமாக நடந்து கொண்டிருந்தான் என்பதையும் குறிப்பிட்டிருந்தது அந்த நீதிமன்றம். மேல் முறையீடு செய்திருந்த அவரை, இரண்டு குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்திருக்கும் டெல்லி உயர் நீதி மன்றம் சொல்லியிருக்கும் கருத்துகள் நெஞ்சை அலைவுறச் செய்கின்றன.

“இறந்திருக்கும் பெண்மணிக்கு எப்போதோ மாதவிடாய் சுழற்சி முற்றுப் பெற்றிருக்கும் வயது ஆகியிருந்தது. எனவே அவர் விருப்பத்திற்கு மாறாகவேகூட, அச்சே லால் அவரோடு உறவுகொள்ள முயன்றிருந்தாலும், அது பாலியல் வன்முறை ஆகாது. தவிரவும் இந்தப் பாலியல் உறவு நிகழ்கையில் அந்தப் பெண்மணியும் மது அருந்தியிருந்தார் என்கிறது பிரேதப் பரிசோதனை அறிக்கை.

அவரது பிறப்புறுப்பில் காயங்கள் இருந்தாலும், அது பலாத்காரம் ஆகாது. அவரது விருப்பத்துக்கு எதிராக நடந்த உறவு என்பதற்கு வேறு சான்றுகளோ, உடலில் வேறெங்கும் காயங்களோ இருக்கவில்லை. அதனால் அவர் தடுக்கப் போராடியதாகக் கொள்ள முடியாது' என்று சொல்லியிருக்கும் நீதிபதிகள், ‘இந்தச் செய்கை அந்தப் பெண்மணியின் மரணத்துக்கு வழிவகுத்துவிடும் என்பதை அச்சே லால் அறிய மாட்டார். அவருக்கு அப்படி ஒரு நோக்கமும் இருந்திருக்கவில்லை. எனவே கொலை குற்றச்சாட்டில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட வேண்டியவரே” என்றும் சொன்னதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வன்முறையின் வரையறை என்ன?

அச்சே லால் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் சொன்ன நியாயம் தங்களுக்கு உடன்பாடானது என்று சொல்லியிருக்கும் நீதிபதிகள், மூர்க்கமான பாலியல் உறவில் அச்சே லால் ஈடுபாடிருந்தாலும் அதை பலாத்காரம் என்ற கணக்கில் சேர்க்க முடியாது என்று சொல்லியிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.

பாலியல் வன்முறை போன்ற கொடுமைகளை கிட்டத்தட்ட மறு வரையறை செய்யும் அளவுக்கு அச்சுறுத்தும் இந்த விவரிப்புகள் ஏற்கெனவே பெருகிவரும் குற்றங் களுக்கு வரவேற்புக் கம்பளம் விரிப்பதாக இருக்கிறது.

65 வயது பெண்மணிக்கு மாத விடாய் சுழற்சி நின்றுவிட்டது என்று அவருக்கு எதிரான பாலியல் தாக்குதலைச் செய்தவரைத் தப்பவிட்டால், பூப்பெய்தாத பிஞ்சுக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைச் செய்தவர்களும் இதே தர்க்கத்தை முன்வைத்துத் தாங்களும் குற்றவாளிகள் அல்ல என்று வாதாட மாட்டார்களா?

பாதிப்புக்குப் பதில் இல்லையா?

பெண்ணுடலை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்கிற அடிப்படைப் பிரச்சினையின் இன்னொரு பரிமாணமாகவே நீதிபதிகளின் இந்தப் பேச்சு தெரிகிறது. மாதவிடாய் சுழற்சி தொடங்காத நிலையிலும் சரி, அது முற்றுப்பெற்ற நிலையிலும் சரி பாலியல் உறவுக்கு முயற்சி செய்யும் ஆண் குறிப்பிட்ட பெண்ணுக்கு எதிராக எத்தனை மூர்க்கமான செய்கையில் ஈடுபடுகிறார் என்பதை நீதிமன்றம் எப்படி வேகமாகக் கடந்து போய்விடுகிறது? மூர்க்கமான செய்கைதான், ஆனாலும் அது குற்றம் ஆகாது என்றால், அது இறந்துபோன பெண்மணிக்கு மரணத்துக்குப் பிறகும் நேரும் அவமதிப்பின்றி வேறென்ன?

பொதுவெளியில் ஆண்களும் பெண்களும் இயல்பாகப் பேசு வதையும், இளைஞர்கள் காதல் கொள்வதையும், திருமணம் செய்யாது இணைந்து வாழ்வோரையும் படுகேவலமாகக் கொச்சை செய்து, கூச்சல் எழுப்பி, அத்துமீறல் செய்து வன்முறையில் ஈடுபடும் பண்பாட்டுக் காவலர்கள் இப்போது எங்கே ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

உண்மையில் ஒரு குற்றத்தைச் செய்யாதவர் எவரையும், குற்றங்கள் நிரூபிக்கப்படாத யாரையும் எந்த நீதிமன்றமும் விடுதலை செய்வதை ஒருவரும் இங்கே எதிர்க்கப் போவதில்லை. ஆனால், “அவர் அப்படித்தான் செய்தார், ஆனாலும் அவர் குற்றவாளி ஆக மாட்டார்” என்பதுபோன்ற ஒரு தீர்ப்பு நெஞ்சை எத்தனை உலுக்கிப் போடுகிறது!

பெண் குழந்தைகளை இனி என்ன சொல்லி வளர்ப்பது? அவர்களுக்கு என்ன பாதுகாப்பை உறுதிப்படுத்துவது? பாதிக்கப்படும் பெண்களுக்கு என்ன நியாயம் வழங்குவது?

- எஸ்.வி. வேணுகோபாலன், 
எழுத்தாளர், 
தொடர்புக்கு: sv.venu@gmail.com

நன்றி திஹிண்டு

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்