/* up Facebook

Nov 30, 2014

பெண் புனைவு கட்டமைப்பில் நாலடியார் : வரலாறு படைக்கப்போகும் இளைஞர்களுக்காக


"சமய கணக்கர் தம் நிறம் கேட்ட காதை" மணிமேகலையில் படித்த காதை. பரபக்கத்தை பேசுவதில் நிகழ்வு அமைந்தாலும் "தன் இல்லத்துக்கு புறத்தே கூட கேட்கக்கூடாத அளவுக்கு மென்மொழியை" பெண்மொழியாக்கிய தமிழ் சமூகத்தில் ஆன்றோர் நிறைந்த அவையில் அனைவரையும் எதிர்த்து வாதாடுவது மரபு கட்டமைப்பின் மாற்றம் நிகழ்ந்த சாதனை என்பதை மறுக்கவியலாது. அதே தளத்திலேயே கண்ணகி மொழியும் இயங்கியது. பௌத்தம், சமணம், பெண் கல்விக்கான நிகழ்வுகளிலும் மறுமொழி பேசும் நிகழ்வுகளிலும் வெகுசன மக்களிடையே புதிய சிந்தாந்தத்தை விதைத்தது மட்டுமின்றி அதனை செய்தும் காட்டியது.

"அணுவிரதம், குணவிரதம், சிகிச்சை விரதம்" போன்ற இல்லற அறக்கோட்டிபாட்டிலும் பெண்ணுக்கு சம உரிமையை பௌத்தம் வழங்கியே வந்துள்ளது. குறிப்பாக துறவறத்தைக் காட்டிலும் இல்லறத்தையே பெரும்பாலும் பேசி வந்துள்ளது. ஆனால் சமணம் விலங்குணர்வோடு நடத்தப்பெறும் குடும்ப வாழ்க்கையை வெறுத்தே பேசுகின்றது.

"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை" (குறள் : 47)

இல்வாழ்க்கைகுரிய சிறப்பை இத்தகைய முறையில் வெகுசனபடுத்தியது சமணமே.

"பறையன் மகனெனினும் காட்சியுடையான்
இறைவன் என் உணரற் பாற்று" (அருங்கலச் செப்பு - 37)

வேதகாலம் முதலாக கட்டிக்காத்து வரும் மனுவுக்கு எதிரான பஞ்சமரையும் தெய்வமாக்கும் நிலையும், சமணர்களின் அபய தர்மம் (அடைக்கால தர்மம்) சாத்திர தானம் (கல்வி தானம்) எனும் கொள்கையும் சமண இலக்கிய முழுமைக்கும் பேசப்பட்டாலும் செயல்படுத்தும் பாத்திர வார்ப்புகளாக பெண்களே முதன்மைபடுத்துவதை காணமுடிகிறது.

எல்லா சமயங்களும் வலியுறுத்தும் "துறவறம்" (வீடுபேறு) பற்றிய கொள்கையில் முரண்பாடுகளை முன்வைத்து முடிச்சுகளையும் அதுவே தளர்த்திக் கொள்கிறது. "தென் தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட சமணப் பள்ளிகள் இருந்தன. ஆண் துறவிகள் போல் பெண் துறவிகளும் ஆசிரியராக இருந்துள்ளனர். கனகவீரக் குரத்தியர் (மாணக்கர் மாணாக்கி) பட்டினிக் குரத்தியடிகள் எனக் கல்வெட்டுக்கள் குரத்தி எனும் பெயரோடு இவர்களைக் குறிக்கின்றன. பெண் துறவிகளிடத்தில் மாணக்கர்களும் பயின்ற செய்திகளைக் கழுகு மலைக் கல்வெட்டுக்களால் அறிகிறோம். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் குறிப்பாக (சமணமும் தமிழும், ப.4) என்ற மயிலை சினி வெங்கடசாமி அவர்களின் கூற்றின்படி "பெண் துறவிகள்" என்பதினை சமணம் மறுப்பு கொள்ளாத/ அங்கீகாரம் வழங்ககூடிய மதமாகவே வந்துள்ளது.

துறவு மேற்கொண்டு இறுதியில் உயர்நிலை எய்திய சிலப்பதிகாரத்துக் கவுந்தியடிகளும் 19-வது தீர்த்தங்கரரான மல்லிநாதரும் பெண்களே என்னும் நிலையில் சமணம் உணர்த்தும் முக்திக் கோட்பாட்டினை பாலின வேறுபாடற்றக் தன்மையினைக் காணமுடிகிறது. இந்நிலையினை அடித்தளமாகக் கொண்டு சமண இலக்கியத்தின் நீதி நூலான நாலடியாருக்குச் சென்றால் அங்கே முரண்பாடுகளும் அவிழ்க்கவியலாத முடிச்சுகளுமே காணப்படுகின்றன.

"பிறனில் விழையாமை" வள்ளுவம் பேசும் தளத்தில் "பிறர்மனை நயவாமை" பற்றி நாலடி பேசுகிறது. வள்ளுவத்தை விட கடுமையாகவே "இம்மை அலியாகி ஆடியுன் பார்" என அலிகளாக பிறந்து கூத்தடி உண்பார்கள் என கடும்மொழியிலேயே பேசுகிறது.

பெண்ணுக்கான உடல்மொழி, பெண்மொழி, பெண் புனைவு குறித்தன கருத்தாக்கங்களில் வெகுசன பண்பாட்டின் நிகழ்வுகளோடு சமரசம் செய்து கொள்வதில் முரண்பாடே காணப்படுகிறது. "பொதுமகளிர்" தொடர்பான பதிவுகளில் பிரதி காலத்தோடு நடையிட்டாலும் "கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம்", "தேற மொழிந்த மொழிகேட்டு", "ஏமாந்த போழ்தின்" என்னும் சொல்லாடல்கள் கடுமையான பதிவாகவே காணப்படுகிறது.

"பொதுமகளிர்" தவிர்த்து "கற்புடை மகளிர்" புனைவுக்குள் செல்லும்பொழுது "பெறுநசையால் பின்னிற்பா இன்மையே பேணும்" என "பெறுவதற்குரிய கற்பினையுடைய இந்திராணி போன்ற பெரிய புகழினையுடைய பெண்களே என்றாலும் (அவருள், தன்னைப்) பெறவேண்டும் என்னும் ஆசையால் விரும்பித் தன் பின்னே நிற்பவர் (ஒருவரும்) இல்லாதபடி செய்து கொள்ளும் குணத்தையுடையவளே நல்ல துணைவி" என புனைவு செய்வது அவளுடைய கற்புத்தன்மையை தானே சுய பரிசோதனை செய்து கொள்ளும் தன்மையற்றவளாகவும் தன் செயல் எப்பொழுது வேண்டுமானாலும் கணவனுக்கு மனபிறழ்வை தரக்கூடிய நன்மை உடையதாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலே அவள் வாழ்வு அமைந்திருப்பதையும் காட்டுகின்றது.

"வல்லாளாய் வாழுமூர் தற்புகழும் மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்"

இல்லம் அமையும் விதம் குறித்து பதிவு செய்யும் நாலடியார் எல்லா பக்கங்களிலும் நீர் ஒழுகும் தம்மையுடைய வீட்டில் இருந்தாலும் தான் வாழும் ஊரில் தன்னைக் கற்புடையள் என புகழ வேண்டும் எனக் கூறுகின்றது.

தான் வாழும் இல்லமும், தன் சுற்றமும் எத்தகைய நிலையில் இருந்தாலும் அதற்கான மேன்மை குறித்தும், சிறப்புறச் செய்யும் நிலை குறித்தும் பிரக்ஞை கொள்ளுபவள் கற்புடைய மகளிர் அல்ல. தான் கற்புடையவள் என எண்ணிக் கொண்டே/ சொல்லிக் கொண்டே இருந்தாலும் கற்புடையவள் அல்ல. ஊரார் அவளைக் கற்புடையவள் என கூற வேண்டும் அவளே கற்புடையவள். (எந்த பெண்ணை ஊரார் கற்புடையவள் என புகழ்ந்து பேசியிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்).

நாலடியாரின் பெண் பற்றிய புனைவு இப்படியிருக்க அவளது உடல் தொடர்பான பதிவுகளை பார்க்கும் பொழுது இன்னும் வியப்பாக உள்ளது. தலைவனும் தலைவியும் உடன்போக்கு செல்ல தீர்மானித்து அந்நிகழ்வை தலைவி தோழிக்குச் சொல்கிறாள். அப்பொழுது மெல்லிய இயல்புடைய பெண்ணே அரிய பாலைவனத்தில் கடந்த செல்ல உன்னால் இயலுமா? என பெண்களுக்கே உரிய குணத்துடன் தோழி கேட்க அதற்கு மறுமொழியாக தலைவி "பெற்றான் ஒருவன் பெருங்குதிரை; அந்நிலையே கற்றான் அய்தூரு மாறு" என கூறுகின்றாள். "குதிரையை வாங்கிய ஒருவனுக்கு அதன் மேல் ஏறிச் செல்வது என்பதும் தெரிந்த ஒன்றே என கூறுகின்றாள். இங்கே குதிரை என்பது பெண் உடலாகக் கொண்டு அணை மேல் ஏறி செல்லும் குதிரையோட்டியாக வர்ணித்திருப்பது பெண் உடல் குறித்து நாலடி கொண்டுள்ள கருத்தை அறிய முடிகிறது. (குதிரையின் செயல்பாடுகளை இன்னும் அனுகி ஒப்பிட்டு பார்த்து விளக்கம் தரத்தேவையில்லை என்றே நினைக்கின்றேன்)

மொழி பொதுவான கருவி என்றாலும் அதை பயன்படுத்தும் தளத்தில் அர்த்தப்படுத்தினால் மொழியாளரின் மன உணர்வும், உலகியலில் அவன்/அவள் கொண்ட புரிதலையும் உணர்ந்து கொள்ளமுடியும்.

"மடமொழி மாதர்" வர்ணனை இயல்பான ஒன்று. தலைவன் பிரிந்து சென்றான் என்பதனால் "தன்னை மட்டும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதிலிருந்து மாறுபட்டு தன் தாயையும் தாக்கும். எனவே என்தாயும் எப்படி பிழைப்போம் என தலைவி கூறுகின்றாள். "என்னை ஈன்ற யாயும் பிழைத்த தென்" என்னும் வரிகள் ஒரு பெண் மட்டும் அப்படிப்பட்டவள் அல்ல. பெண்கள் மொத்தமும் அப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள் என்பதை பறைசாற்றுகின்றது (தந்தை நிலை குறித்து குறிப்பிடாதது இயல்பா? வலிமையா?) இதற்கு உரைகாரர்கள் "யான் பிறந்தபொழுதே கொன்றிராத என்னைப் பெற்ற தாயும்" என எழுதியிருப்பது பெண் சிசுக் கொலை அந்த காலத்திலேயே இருந்திருக்குமோ? என்ற நிலைக்குத் தள்ளியிருப்பதைச் சற்றேத் தவிர்த்திருக்கலாம்.

"பிரிவுள்ளி மாலை பரிந்திட்டழுதாள்" என தலைவன் பிரிந்த பொழுது மாலை வந்தது தலைவியினுடைய செயலாக கூறியிருப்பதில் உள்ள சூட்சமம் "அழுதாள்" எனும் செயல் காம மிகுதியைக் காட்டுகிறதே தவிர. காதலை காட்டவில்லை என்பதும் கவனிக்கத் தக்கச் செயலாகும்.

தன் மொழியாக கூறிய நாலடியார் ஒரு பெண் மீது கொண்ட உணர்வையும் பதிவுசெய்யாமல் போகவில்லை. தலைவி, தலைவனுடன் உடன்போக்கு சென்றுவிட்டாள். அதனை கூறவந்த நற்றாய், முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும் இலக்கணம் யாதும் அறியேன்" என "உடம்பு முழுவதையும் முத்துமாலையை நேற்று அணிந்து கொண்ட பொழுது எனக்கு எதுவும் புரியவில்லை. இப்பொழுது தான் புரிந்தது அது உடன்போக்கு செல்வதற்கான குறி" என்று கூறுகின்றாள். "பூம்பாவை செய்த குறி" என நாலடியார் கூறுகிறது. ஒரு பெண் மற்றொரு பெண் மீது கொண்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முதப்படி என்றே கூறுலாம் (அந்த காலம் தொட்டே வீட்டில் இருக்கும் அணிகலன்களை அணிந்து கொண்டு உடன்போக்கு செல்வது என்பது கூடுதல் செய்தியாகும்).

நாலடியார் கூறும் இத்துனை உவமைகளும் இயல்பான பெண்ணுக்குரியதல்ல. "கற்புடை மகளிருக்கு" உரியது. இவர்களது உடல், மொழி, புனைவு பற்றிய பதிவுகள் இப்படி இருக்குமென்றால் மற்ற பதிவுகளை கேட்கத் தேவையில்லை. "சம சாங்கியம் பெண்டிரைக் கற்பழிக்க வேண்டுமென ஞானசம்பந்தர் இறைவனை நோக்கி பாடியிருப்பது" (ஏகாம்பரநாதன் கல்வெட்டில் சமணம் ப.98) என பாடியிருந்தும், சமணர்களை கழுவேற்றியும், மதக்கோட்பாட்டினை சிக்கலான நிகழ்வுகளுக்குள்ளாக்கியும் இருந்தாலும் சைவம் வென்றது. சமணத்தின் இத்தகைய தளர்த்த முடியாத, வெகுசனங்களோடு சமரசம் செய்து கொள்ளாத சில முரண்பாடுகளே அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் எனலாம்

வே. சிவக்குமார் -

நன்றி - தமிழ்நியுஸ்
...மேலும்

Nov 29, 2014

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலை முன்வைத்து ஒரு பிரதியியல் வாசிப்பு - பிரேம்


மாறுதல்களைக் கற்றறிதலும் கற்பித்தலும் 
பண்படுத்தும் அரசியலின் ஒரு வகைமை

இலக்கியங்களின் பல்வேறு செயல்பாடுகளில் ஒன்றாகக் கற்பித்தல் என்ற செயல்பாடு என்றும் இருந்துகொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான அறிவுருவாக்கத்திலும் அறிவுத்தேர்விலும் இலக்கியப் பிரதிகள் தெளிவான பங்கை அளிக்கின்றன. பல்வேறு அறிவுப் புலங்களுக்குள் எதனைத் தேர்ந்தெடுப்பது என்ற பகுத்தறிவு சார்ந்த கேள்வியை இலக்கியங்கள் நுண்தளத்தில் ஆய்வு செய்கின்றன. அழகியல், அறிவு, அறம் என்ற மும்மை உறவமைப்பில் அழகியல் என்பதில் தொடங்கி அறிவு குறித்த கேள்விகளை எழுப்பி  அவற்றிற்கு விளக்கங்கள் அளித்து அறம் குறித்த தேர்வுகளை நோக்கி ஒரு காலத்தின் மொழிப்புலத்தை இலக்கியம் நகர்த்துகிறது.

கருத்துருவ, கோட்பாட்டுச் சொல்லாடல்களும் கதையாடல்களும் இதனை அறிவுத்தளத்தில் தொடங்கி அறம், அழகியல் எனத் தம்மை விரிவுபடுத்திக் கொள்ளலாம். கலை-இலக்கியம் என்ற புனைவு சார்ந்த எடுத்துரைப்புகள் (Fictional Narratives) இதனைப் பன்மைத்தன்மை உடைய வடிவத்தில் நிகழ்த்திக்காட்டுவதன் மூலம் ஒற்றைத் தன்மை அற்ற கலப்பான கேள்விகளையும் அக்கேள்விகளுக்கான பல்வேறு பதில்கள் குறித்த தேர்வுகளையும் ஒரே தளத்தில் நிரவிக் காட்டுவனவாக செயல்படுகின்றன. செவ்வியல்-காப்பிய மரபுகள் அழகியல் என்பதில் தொடங்கி வாழ்வு, சமயம், அரசியல் சார்ந்த அனைத்து நெறிகளையும் பற்றிய சொல்லாடல் தொகுதிகளாகத் தம்மை அமைத்துக் கொள்கின்றன.

வரிமொழி மரபுகள் மட்டுமின்றி வாய்மொழி மரபுகள் மற்றும் நிகழ்கலை மரபுகள் அனைத்தும் ஒருவகையில் அறிவைப் பரப்புவனவாகவும் வாழ்வு குறித்த அனைத்துக் கூறுகளையும் பதிவுசெய்து வைப்பனவாகவும் பரப்புவனவாகவும் விளக்குவனவாகவும் செயல்படுகின்றன. அதனால்தான் இலக்கியம் என்பது அறிவுத்துறைகளில் ஒன்றாகவும் அறிவுருவாக்க முறைகளில் ஒன்றாகவும் தன்னை எப்போதும் வைத்துக்கொள்ள முடிகிறது.

நவீன கதைகூறல் முறைகளில் ஒன்றான நாவல்-நவீனம் என்ற கதை வடிவமும் தற்காலம் சார்ந்த பன்மைக் கேள்விகள் மற்றும் பன்மை பதில்கள் சார்ந்த மொழிக்கட்டமைவாகச் செயல்படுகிறது. மக்கள்மையத் தன்மை கொண்ட அரசியல் உருவாக்கிய கதைக்கூறல் என்ற வகையில் நாவல் தனிமனிதர் மற்றும் கூட்டமைவு (தனிமனிதர்-சமூக அமைப்பு, Individual-Social Structure) என்ற இருமைகளுக்கிடையிலான இயைபுகள், இணக்கமின்மைகள், முரண்கள் மற்றும் மோதல்களைப் பேசுவனவாக, விளக்குவனவாக அமைவது தவிர்க்க முடியாத ஒன்று. இதனை இன்னொரு வகையில் கூறுவதானால் நாவல் என்ற நவீன-நவீனத்துவ வடிவம் எப்போதுமே ஒரு முரண்பகுப்புச் செயல்பாடு (Critical and Analytical Function)கொண்டதாக முழுமையின்மைகளை எடுத்துரைப்பதாக (Deliberation of Incompleteness) அமைவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இந்த முரண்பகுப்பு மற்றும் முழுமையின்மை சார்ந்த எடுத்துரைப்பு ஒருவகையில் ஜனநாயகத்தின் அடிப்படைகளில் ஒன்றான கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அமைவது உண்டு. நவீன உளஅமைப்பை, நவீன அரசியல்-சமூக நடத்தையில்புகளை இந்தியச் சமூகங்களிடையே படிவிப்பதும் பழக்குவதும் அதனை நிறுவுவதும் மெய்ப்பிப்பதும் மிக மிகக் கடினமானச் செயல்பாடு. தமது எழுத்துக்கள் வழியாகப் பல்வேறு வகைகளில் இச்செயல்பாட்டில் பங்கெடுத்துக் கொள்வதையே அறிவார்த்த இந்திய இலக்கியப் படைப்பாளிகள் பலரும் தமது நவீன இலக்கியச் செயல்பாடாகக் கொண்டு இயங்கி வருகின்றனர்.

அவ்வகையில் சுந்தர ராமசாமி எழுதிய ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் தன்னளவில் நவீன உளவியல்பு மற்றும் நவீன வாழ்வியல் குறித்த ஆய்வு நாவலாகவும் நவீனகால மாறுதல் நிலையின் சிக்கல்கள் குறித்த விளக்கமுறை நாவலாகவும் (Demonstrative Novel) அமைந்துள்ளது. நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறுவதை மட்டும் செய்யாமல் அவை குறித்த கேள்விகள், விளக்கங்கள் மற்றும் முன்-பின் சூழல்கள் ஆகியவற்றையும் தொகுத்துரைப்பதன் மூலம் இந்நாவல் ஒரு பொருளுரைப்பு நாவலாகவும் (Interpretative Novel) மற்றொரு தளத்தில் கருத்துகள் குறித்த நாவலாகவும் (Novel of Ideas) அமைந்திருக்கிறது.

இந்திய மரபுகளால் உருவாக்கப்பட்ட சமூக மனிதர்கள் தம்மை நவீன தனிமனிதர்களாகவும், பொதுஅறம் பேணும் சமூக மனிதர்களாகவும் மாற்றிக் கொள்வதில் உள்ள இடர்கள், போதாமைகள், சிக்கல்கள், உள்வய எதிர்ப்புகள் பற்றிய ஆவணப்படுத்தலை குடும்பம் என்பதை மையமாகக் கொண்டு தொடங்கி புதிய மதிப்பீடுகள், தலைகீழாக்கங்கள் ஆகியவற்றை எதிர்கொள்வதில் பல்வேறு இந்திய நிறுவனங்களும் சமூகப் பண்பாட்டு துணை மற்றும் இணையமைப்புகள் எதிர்கொள்ளும் நிலைகள் பற்றியதாக விரித்துச் செல்கிறது இந்நாவல். இன்னொரு வகையில் இந்த நாவலை சாதியப் படிநிலை மற்றும் ஆண் மையத்தன்மை கொண்ட, உள் வன்முறைகள் நிறைந்த இந்தியச் சமூகஉளவியல் குறித்த கேள்விகளைக் கையாளும் ஒரு இனவரைவியல் நாவலாகவும் வாசிக்க இயலும். அதனைவிட இந்நாவல் தன் கட்டமைப்பின் மூலம் பிராமண சமூகத்தை நவீன-சனநாயகம் ஏற்கும் ஒரு மாறுதலுற்ற சமூகமாக, பன்மைகளின் இடத்தில் குடிமைப் பண்புடன் வாழ்வதற்கான உளவியல்பினைக் கற்ற சமூகமாக மாற்றுவாற்கான பயிற்சியினை அளிக்கும் நாவலாகத் தன்னை அமைத்துக் கொள்கிறது.

சுயவிமர்சனம் மற்றும் தன்மதிப்பீடு என்பதன் மூலம் மாறுதல்கால நவீனத்தன்மையை ஒரு சமூகத்திற்குக் கற்பிக்கும் நாவலாக இது இயங்குகிறது. இதற்கு ஏற்ற வகையில் பன்மொழி, பன்மையான பண்பாடு, பன்மையான மதப் பின்னணிகள், பலசாதி வாழ்வியல் என்பவை இதில் கதைப்புலங்களாக அமைக்கப்படுகின்றன.  அத்துடன் பிரிடிஷ் ஆட்சி- இந்திய நாடு – சிற்றரசுகள்  என்னும் மூன்றடுக்கு அரசாட்சி நிலைத் தன்மையும் இதன் காலப்பின்னணியான 1937-39 என்பதும் இந்திய வாழ்தலின் தனிமனித-அரசியல் சிக்கல்ளைப் பற்றிப் பேச மிக விரிவான தளத்தைத் தரக்கூடியது. முரண் மற்றும் இணைகளின் தவிர்க்க முடியாத கூட்டிணைவுகளின் தளத்தில் இந்நாவலை அமைப்பதன் மூலம் கதைசொல்லும் குரலுக்குப் பன்மையான பகுத்துரைக்கும் தன்மையை இந்நாவல் வழங்குகிறது. இந்த பகுத்துரைக்கும் உரிமை மற்றும் வாய்ப்பினை இந்நாவலின் கதைசொல்லி மிக நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொள்வதன் வழியே இதனை ஒரு குடும்பக்கதை அல்லது  சிறுமிகள் மற்றும் சிறுவர்களைப்  பற்றிய கதை என்ற தளத்தில் இருந்து நவீன கோட்பாட்டுத் தேர்வுகள் குறித்த நாவலாக மாற்றியமைத்து விடுகிறார்.

இந்நாவலை வாசிப்பதற்கு முன்பிரதியாக ‘ஜே.ஜே: சிலகுறிப்புகள்’ நாவல் அமைகிறது என்பது எதேச்சையான உறவல்ல. கதைசொல்லியான பாலு மட்டுமின்றி அந்நாவலில் குறிப்பிடப்படும் எஸ்.ஆர்.எஸ், சம்பத், டாக்டர் கோவிந்த பிஷாரடி எனப் பல கதை உருவங்கள் இந்நாவலில்தான் விரிவாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். ஜே.ஜே: சில குறிப்புகளில் பாலு தன் குடும்பத்தோடு கோட்டயத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வந்தது ‘1939ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இரண்டாவது உலக மகாயுத்தம் அறிவிக்கப்பட்ட அன்றோ அதற்கு அடுத்த நாளோ’ என்று குறிப்பிட்டிருந்தேன்.  காலம் பற்றிய மயக்கம்!  இன்று அது இல்லை.” என இரண்டு கதைகளையும் சுந்தர ராமசாமி தன் முன்னுரை (அக்டோபர் 24,1998, நாகர்கோவில்) வழியே இணைத்து வைப்பதன் மூலம் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலும் கதைசொல்லுதலின் கதையாக (Metafiction) கதைசொல்லியின் கதையாக (Story of the Storyteller)  மாறுவதற்கான விளிம்பில் வைக்கப்படுகிறது. ஆனால் எழுத்துக்கலைஞர் (Writer), ஒரு குறிப்பிட்ட எழுத்தை உருவாக்குவர்  (Author),  கதைசொல்பவர் (Storyteller), கதைசொல்லும் நிலை (Narrator) என்னும் உறவமைப்புகளை  வரிசை மாற்றியதன் மூலம் இந்நாவல் தன்னை ஒரு விளக்கமுறை நாவலாக அமைத்துக்கொள்வதால் நடப்பியல் நாவல், எதார்த்தவியல் நாவல் (Realistic Novel)  என்பது பற்றிய தமிழின் இலக்கியக் கருத்தாக்கங்களின் பிழைபட்ட நிலைப்பாட்டை மாற்றி விளக்கி விடுகிறது.

முன்பொருமுறை அழகியநாயகி அம்மாள் எழுதிய ‘கவலை’ என்ற கதை, தங்கர்பச்சான் எழுதிய ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ என்ற சாதிய வாழ்வு சாரந்த ‘எதார்த்தவியல்’ நாவல் பற்றிய பேச்சின்போது  ‘தமிழின் எதார்த்த வகை எழுத்துக்கள் என்பவை அனைத்தும் கவலைகளின் கதைகளே’ என இடைக்குறிப்பாக எழுதியிருந்தேன். அவற்றுடன் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலையும் கவலைகளின் கதையாகக் குறிப்பிட்டு ‘லட்சுமி, ஆனந்தம், வள்ளி என்ற மூன்று பெண்களின் மூலம் குடும்பம்,சாதி,கலாச்சாரம் என்பவற்றின் பலிகேட்பு பற்றிய கதையாடல் இரண்டாம் தள வாசிப்பாக இந்நாவலில் உள்ளது. பெண்மைக்கும் இந்திய சாதிய, வன்கொடுமைக் கலாச்சாரத்திற்குமான முரணுறவு நினைவு கொள்ளப்படாமல்  இந்நாவலின் வாசிப்பு முழுமையடையாது’ (பிரேம்,2000:167) எனவும் குறிப்பிட்டிருந்தேன்.  இந்நாவலின் கதைசொல்லும் குரல் தன் வாசிப்பையும் இந்தக் கதையூடாக வைத்துச் செல்வதன் மூலம் இதனை நடப்பியல் என்ற தளத்தில் இருந்து பொருளுரைக்கும் நாவலாக மாற்றி விடுகிறது.

‘எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு அக்கா’ என்றான் பாலு. ‘என்ன குழப்பம்?’ ‘எனக்கு ஒண்ணும் தெரியலை. யாரைக் கேட்டாலும் மாத்தி மாத்தி சொல்றா. எது உண்மை, எது பொய்ன்னு எனக்குத் தெரியணம்’ என்றான் பாலு.  சுகன்யா பாலுவை அணைத்துக்கொண்டாள். ‘இதுதாண்டா பெரிய ஆசை பாலு. இதைவிடப் பெரிய ஆசை எதுவுமே இல்லை’ என்றாள் அவள். (ப.634)  என எது உண்மை எது பொய் என்பது பற்றிய கேள்வியை நினைவுபடுத்திச் செயல்படுவதால் இந்நாவலை ஒரு கல்விப்புல நாவலாக வாசிக்கலாம்.   ‘சமூகம் பெரிய பங்கை ஆற்ற முற்படும்போது அத்துடன் சேர்ந்து இரண்டு முன்னேற்றங்களும் ஜனங்கள் மத்தியில் உருவாக வேண்டும். ஒன்று ஜனநாயக உரிமைகள் வலுப்படுவது. மற்றொன்று  சமத்துவம் முக்கிய குறிக்கோள் ஆவது.’ (ப.561) என நவீன வாழ்வின் அடிப்படை அறத்தை நினைவூட்டுவதால் இதனை இலக்கியத்தின் அடிப்படையான செயலான  ‘நீதி உரைத்தலை’ச் செய்யும் ஒரு அறவியல் நாவலாகவும் வாசிக்கலாம். இது போன்ற வாசிப்புகள் பலவற்றிற்கு  இணக்கமாக கோட்பாட்டு அடிப்படையில் இந்நாவல் தன்னை வடிவமைத்துக் கொண்டிருப்பதற்கு இதன் உருவாக்க காலமான தொண்ணூறுகள் முதன்மையான காரணமாக அமைகிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். தலித்தியம் மற்றும் பெண்ணியம் என்ற இரு கோட்பாட்டுத் தளங்கள் தமிழின் அடிப்படை இலக்கியச் சொல்லாடல்களை மாற்றியமைத்ததுடன் புனைவு மற்றம் நினைவு சார்ந்த இயக்கங்களையும் மாற்றியமைத்தன. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலும் இந்த ‘மாறுதல்கால’ சொல்லாடலின் ஒரு பகுதியாகத் தன்னை அமைத்துக் கொள்வதன் மூலமும் பன்மொழி- பலபண்பாட்டு எடுத்துரைப்பின் வழியாகவும் பன்முக வாசிப்புக்கு உரியதாகத் தன்னை வைத்துக்கொள்கிறது. இந்த வாசிப்பிற்கு முன்பிரதிகளாக ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ (பங்க்ளா), சிவராமகரந்தின் ‘மரளி மண்ணிகே’ (கன்னடா) சந்துமேனோனின் ‘இந்துலேகா’ (மலையாளம்) ஆகிய நாவல்களை நான் எடுத்துக்கொள்கிறேன். இதற்கான காரணங்கள் மிக வெளிப்படையானவை: இந்த மூன்று நாவல்களும் இந்தியச் சமூகங்களில் பெண்களின் நிலை பற்றி ஆண்களால் எழுதப்பட்ட கதைகள்,  பெண்கள் தமக்கான இடத்தைப் பெறுவதற்கான நுண்ணிய போராட்டங்கள் பற்றியவை.  அத்துடன் குடும்பம், பண்பாடு, பெண்கள் நிலை பற்றிய நேரடிப் பேச்சுகளைக் கொண்டவை. தமிழில் இந்தச் சிக்கல்கள் பற்றியும் மாறுதல்களின் தேவை பற்றியும் எழுதப்பட்ட நாவல்கள் மிகுந்து காணப்பட்டாலும் அதற்கான கோட்பாட்டாக்கத்தை கதைக் கூற்றுக்குள் கொண்டுவந்து தன் அரசியல் இணைச்சொல்லாடலை ஒரு குடும்ப நாவலின் பகுதியாக வைத்துக்கொள்ளும் நாவல்கள் தமிழில் இல்லை. தோப்பில் முஹம்மது மீரானின் ‘சாய்வு நாற்காலி’ சாதி, குடும்பம், பெண்ணிலை, குடிமரபு, மதங்களின் அறிவழிக்கும் கொடுங்கோன்மை என்பன பற்றித் தீவிர தகர்ப்புகளைக் கொண்ட நாவல். ஆனால் அவை இணைத்தள வாசிப்பின் உள்பகுதியில் வைக்கப்பட்டு விட்டதால் நாடகக் குறியீட்டுத் தன்மை அதிகம் கொண்டதாக அந்நாவல் இறுக்கம் பெறுகிறது. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலோ சிக்கல்கள், ஒடுக்குமுறைகள், போதாமைகள் பற்றிய நிகழ்வுகளைச்  சித்திரிப்பது மட்டுமின்றி அவற்றைக் கோட்பாட்டாக்கம் செய்வதற்கான பேச்சையும் கொண்டிருக்கிறது.

‘முன்னெல்லாம் உங்களுக்கு சுகன்யாவை ரொம்பப் பிடிக்குமே அக்கா’ என்றாள் ஆனந்தம். ‘இப்பவும்தான். ஆனா அவ பேச்செல்லாம் இப்ப மாறிப்போச்சுடீ ஆனந்தம். உலகத்தைத் தூள்தூளாக்கிட்டுத்தான் ஒரு பக்கத்துல உட்காருவள் போலிருக்கே அவள்’ என்றால் லட்சுமி. (ப.489) மாறுதல் அடையும், எதிர்ப்பை வெளிப்படுத்தும் பெண்கள் பற்றிய பேச்சாக அமையும் இப்பகுதி சுகன்யா, வள்ளி, ரமணி, ஆனந்தம், லட்சுமி என்ற பெண்களை உள்ளடக்கியது. மாறுதல் குறித்து அச்சம் கொள்ளும் பெண்ணாக லட்சுமி,  மாறுதலை மென்மையாக உள்ளார்ந்து விரும்பும் பெண்ணாக ஆனந்தம். மாறுதலை, எதிர்ப்பைப் பரப்பும் பெண்ணாக சுகன்யா, மாறுதலுக்கு உள்ளாகும் பெண்ணாக வள்ளி, மாறுதலைக் கண்டு மயங்கி விடாத பெண்ணாக ரமணி விளக்கப்படுகின்றனர்.  இந்த உரையாடலின் பகுதிகள் மாறுதலுக்காக இந்தியப் பெண்கள் ஏங்கியிருப்பதையும் அதே சமயம் தயங்கி நிற்பதையும் புலப்படுத்துவதாக அமைகின்றன.

பெண்களுக்கான கல்வியின் தேவை, பெண்கள் தம் தனிஅடையாளத்தைப் பெறுவதற்கான போராட்டம் என்பவை பற்றி இப்பகுதி பேசுகிறது. ‘வள்ளி மேக்கப்பை கவனிக்கிறேளா அக்கா?  ‘அவளைப் பாக்கிறத்த கண்ணை மூடிக்க முடியுமா.  இப்ப அதுக்கு மனசு முழுக்க  சுகன்யாதான். அவ இன்னிக்கு செய்யறதை இது நாளைக்குக் காப்பியடிக்கும்’ என்றாள் லட்சுமி.  சுகன்யா வேறு ஒரு பண்பாட்டு-அறிவுப் பின்புலம் கொண்ட, மாற்றத்தை ஏற்று அதனை நடப்புக்குக் கொண்டுவரும் பெண். வள்ளி அதனை விரும்பி ஏற்கும் பெண்.  வள்ளியென்ற இந்தப் பாத்திரத்திற்கு நேரும் துயரமான ஒரு முடிவு இந்நாவலின் இரு துன்பியல் நிகழ்வுகளில் ஒன்றாக மனதைத் துளைக்கக் கூடியது.  தான் விரும்பிய வாழ்வை அடைய முடியாமல் மீண்டும் தன்னடையாளமற்ற அடிமை நிலைக்கு இப்பாத்திரம் தள்ளப்படும்போது மாறுதல்களை விரும்பும் இந்தியப் பெண்களின் துயர முடிவாக அது அடையாளப்படுத்தப்படுகிறது. ‘நீ அவக்கிட்ட பேசிப்பாரு தெரியும். ஆம்பிளைகளை உழவுல கெட்டி அடிக்கணுமாம்.  நாக்கூசாமச் சொல்றா’ என்றாள் லட்சுமி.  ‘கபடம் தெரியாம இருந்தா இந்தக் காலத்துல பொழைக்க முடியுமா அக்கா? வள்ளிக்கு உள்ளும் புறமும் ஒண்ணு உலகம் பூரா வெள்ளை’ என்றாள் ஆனந்தம். ‘அவளை ஓசைப்படாம தளியல்ல கொண்டுபோய் சேத்துரணம். அப்பா பாடு, அண்ணா பாடு. எனக்கெதுக்கு வேண்டாத தலைவலியெல்லாம்’ என்றாள் லட்சுமி. ‘அங்க போனா படிதாண்ட விடமாட்டாளே அக்கா. இங்கே பெண்களுக்குத் தனி காலேஜ் இருக்கே. அதுல சேத்துவிடுவோமே. டாக்டர் ஆனி ஜோசப் சர்க்கார் ஆஸ்பத்திரியில கொழலை மாட்டிண்டு நிக்கறத்தப் பாக்க ஆசையா இருக்கு அக்கா’ என்றாள் ஆனந்தம். அதெல்லாம் அவாளுக்கு சரி. நமக்கு ஒத்து வராது.’ என்றாள் லட்சுமி. ‘ஆண்கள் எந்தெந்தக் காரியங்களைச் செய்யறாளோ அத்தனைக் காரியங்களையும் பெண்களாலேயும் செய்ய முடியும்னு வள்ளி சொல்றா அக்கா’ என்றாள் ஆனந்தம். ‘பெண்கள் நாலு எழுத்துப் படிச்சு முன்னுக்கு வரணும் அக்கா’ என்றாள் ஆனந்தம்.  ‘வள்ளி ரொம்ப புத்திசாலி அக்கா’ என்றாள் ஆனந்தம். ‘அதோட நின்னா சரி. அதுக்குன்னு ஒரு முரட்டுத் தைரியம் இருக்கே. அத நினைச்சாத்தான் எனக்கு அடிவயத்தைக் கலக்கறது.’ என்றாள் லட்சுமி. ‘நீங்க கிழிக்கிற கோட்டைத் தாண்டி ஒரு அடி எடுத்து வைக்க மாட்டா அவ. நான் கேரண்டி’ என்றாள் ஆனந்தம். ‘தாண்டி எடுத்து வைக்கமாட்டா. அந்தக் கோட்டையே அழிச்சிட்டு மடமடன்னு நடந்து போயிடுவள்’ என்றாள் லட்சுமி. ஆனந்தம் சிரித்தாள். ‘நீ சிரிச்சா, கூடக் கொஞ்சம் எனக்கு வயத்தைக் கலக்கும்’ என்றாள் லட்சுமி. (பக்.489,490)

இந்த வகையான பெண்நிலை பேச்சுக்கள் இந்நாவலை இணைநிலை கோட்பாட்டாக்கம் கொண்டதாக மாற்றிவிடுகிறது. நிகழ்வுகள், நடப்புகள் என்பவற்றோடு தன்னளவிலேயே விளக்கங்கள், கோட்பாட்டாக்கங்கள், பன்மையான நிலைப்பாடுகள், மதிப்பீடுகள் என்பவற்றைக் கொண்டிருப்பதன் மூலமே இந்நாவல் எனது பார்வையில் கற்றல் மற்றும் கற்பித்தல் வகை எழுத்தாக (Novel of Pedagogy) பொருள்படுகிறது. தமிழின் மேல்நிலைச் சாதிய உளவியல்புகளை (இதனைப் பிராமண-வெள்ளாள மையம் கொண்டது என அடையாளப்படுத்தலாம்) நிலைமறுத்து மாறுதல்களை ஏற்க வலியுறுத்தும் இலக்கியச் சொல்லாடல் என்ற வகையிலேயே குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவல் தன் நவீனத் தன்மையை உறுதி செய்கிறது.  தன் காலப்பின்னணியாக கடந்தகாலத்தைக் கொண்டிருப்பதால் இது  வரலாற்று ஆவணத்தன்மை (Archival Narrative) கொள்வதும், இதில் விவரிக்கப்படும் காலம், இடம், பொருள்கள் என்பவை இப்போது முற்றிலும் மாறிவிட்டதால் தன் தோற்ற அளவில் பழம்பொருள் சித்தரிப்புத்தன்மை (Portrayal of Antique marker) கொள்வதும் நாவலின் வாசிப்பைப் பன்முகக் குறியியல் தன்மை கொண்டதாக வைத்துக் கொள்கிறது. இவற்றின்  பின்னணியில்தான் நான் இந்நாவலின் வாசிப்பை விளக்க முனைகிறேன்.

இந்நாவலில் இடம்பெறும் இரு குடும்பங்களில் உள்ள நான்கு குழந்தைகள் குடும்ப உளவியல் அடிப்படையில் எதிர் இணைகளாக வைக்கப்படுவதன் மூலம் குழந்தைகள் சமூக மனிதர்களாக வளர்தலில் உள்ள சிக்கல்களும், சமூகவயப்பட்ட தனிமனிதர்களாக உருவாவதில் உள்ள இடையீடுகளும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. எஸ்.ஆர்.சீனிவாசஅய்யர்-லட்சுமி தம்பதிகளின் குழந்தைகளான ரமணி மற்றும் பாலு இருவரும் வறுமை என்பதை அறியாத, தம் குழந்தைகள் மீது மிகுந்த அக்கறை கொண்ட பெற்றோர்களை உடைய குழந்தைகள். இவர்களைக் கவனிக்கவும் பராமரிக்கவும் ஆனந்தம் மாமி, கௌரி என பாசமே உருவான இரு தன்னலம் கருதாத அப்பாவிப் பெண்கள். சாமு-சீதை தம்பதிகளின் குழந்தைகள் லச்சம் மற்றும் கோமு. வறுமையும் மனக்கசப்பும் கூடிய வீடு இவர்களுடையது. ஓயாத வெறுப்பும் பகையும் கொப்பளித்துக் கொண்டிருக்கும் குடும்பம். லச்சம், கோமு இவர்களின் துயரம் நிறைந்த வாழ்வைப் பார்வையாளர்களாக இருந்து கவனிக்கும் பாலு, ரமணி இருவருக்கும் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளும் வயது இல்லை. எஸ்.ஆர்.எஸ் தன் சித்தப்பா மகன் என்ற அக்கறையுடன் சாமுவைத் தன் கடையில் வேலைக்கு வைத்து உதவிகள் செய்தாலும் குடும்பத்தின் பட்டினியைப் போக்க முடியாத நிலை. சாமுவின் குடிப்பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கிறது. சீதை தன்  வாழ்வின் அனைத்துத் துன்பங்களுக்கும் கணவன் சாமுவே காரணம் என்ற கருத்தைக் கொண்டவள். சாமுவோ தன் மனைவி குழந்தைகள் குறித்து எந்த பொறுப்போ அக்கறையோ அற்ற வெறும் கசப்புணர்வும் வெறுப்பும் மட்டுமே கொண்ட ஒரு ஆண். வாழ்வு என்பது எந்த நம்பிக்கையும் தராத தண்டனையாகவே சாமுவுக்குத் தோன்றுகிறது. சாமு ‘திருவனந்தபுரம் ஊட்டுப்புரையில் வளர்ந்த அலவலாதி.’ அந்த ‘புருஷனுக்கும் பெஞ்சாதிக்கும் தரித்திரம்தான் தலையில எழுதிருக்கு. நிழலு மாதிரி தொரத்திகிட்டே இருக்கும்.’ அவர்களுக்கு ‘பாளம் பாளமா தங்கத்தைக் கொடுத்தாலும் மறுநா பாத்தா கரியாயிடும்.’ சாமுவுக்கும் அவர் மனைவிக்கும் இடையில் உள்ள உறவு வெறும் வன்மம் மட்டுமே கொண்ட ஒன்று. ‘அவள் பீறிட்டு அலறும்படி பின்னால் இருந்து அவளைத் தாக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றுவது’ என்பது இயல்பான ஒன்று. பின்னால் இருந்து என்பதில் உள்ள பயம் கலந்த வன்முறை கசப்பு நிறைந்த மணஉறவுகளின் குறியீடு. ‘கொன்னுடுவேன்’ என்று கையை ஓங்கும் சாமுவிடம் சீதை சொல்லும் பதில் ‘இப்படி சொல்லிண்டே இருக்கேளே தவிர செஞ்சு காட்ட மாட்டேங்கிறேளே.’ அவர் தன்னைக் கொல்லாமல் இருப்பதற்கும் சீதை சொல்லும் காரணம் ‘துன்பம் தீர விடமாட்டார்’ என்பது. இந்தக் கசப்பும் வெறுப்பும் கொண்ட குடும்பப் பின்னணியில் வளரும் லச்சம், கோமு இரு குழந்தைகளின் இருள் நிறைந்த எதிர்காலம் வாசிப்பின் ஒவ்வொரு தளத்திலும் நம்மை வந்து தாக்குவாதாக உள்ளது. லச்சம் மிகுந்த புத்திசாலித்தனமும் பல திறமைகளும் கொண்ட, பலவிதமான வேலைகளைச் செய்யக்கூடிய மிகையான ஆற்றல் உடைய ஒரு வளர்பருவச் சிறுவன். ஆனால் அவனுடைய வாழ்வு பாலியல் சுரண்டலுக்கு உட்பட்டு துயரத்தில் முடிகிறது. இந்த முடிவு குழந்தைகளின் வாழ்வு குறித்த பல அடிப்படை கேள்விகளை எழுப்பக் கூடியதாக உள்ளது. அவன் மீது கவிழும் வன்முறை முதலில் குடும்பத்தில் தொடங்குவது. ஆனால் அதைவிட சமூகத்தின் வெளியிடங்கள் அவனை நசிவுக்கு உட்படுத்துகின்றன. பரமேஸ்வரன் வைத்தியர் அவனைத் தன் பாலியல் முறைகேட்டிற்கு பயன்படுத்திக்கொள்வது என்ற நிகழ்வு இந்தியச் சமூகங்களில் ஆண்-பெண் குழந்தைகளின் மீது மிகக் கமுக்கமாய் நடைபெற்று வரும் வன்கொடுமைகள் மற்றும் சுரண்டல்கள் குறித்த பதிவாக அமைகிறது. (‘அந்தப் படுபாவி வைத்தியன் கூடத்தான் சதா கிடப்பு. இந்த ஊர்ல அந்தப் பாவி கெடுக்காத பிள்ளை கிடையாது.’ -ப.553).

வெளித்தெரியாத கொடுவன்முறையின் மற்றொரு எதிர்த்தளமாக அமைவது பாலுவின் மனச் சிக்கல்கள். பாலு வெளியுலகம் மறுக்கப்பட்ட ஒரு சிறுவன் (நவீனமடைய முனையும் ஒரு தனிமனிதன் ஆனால் வைதீக சமூகத்தின் அடைபட்ட உறுப்பினன்). இவனுடைய ஒவ்வொரு நாளும் வெளியுலகம் குறித்த எதிர்பார்ப்பில் கழிகிறது. தான் லச்சம் அண்ணன் போலச் சுதந்திரமாக ஊர் சுற்றி பல சாகசங்களைச் செய்து வாழ வேண்டும் என்பது அவனது எதிர்பார்ப்பு. ஆனால் தன் தந்தையின் கட்டுப்பாடுகள் அவனை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. அதே கட்டுப்பாடுகள் அவனது தமக்கை ரமணிக்கு பெரிய அளவில் துயரமாகத் தோன்றுவதில்லை. பாலு பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதில்தான் தனிமை உணர்வு சார்ந்த பல உளச்சிக்கல்கள் உருவாகின்றன. பாலு, லச்சம் இருவருக்குமே மற்ற சாதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உள்ளது போன்ற இயற்கைச்சுழல் மற்றும் உழைப்பு சார்ந்த வாழ்விடம் இரண்டும் இல்லாத நிலை பல வாழ்வியல் குறைபாடுகளை, உளவியல் சிக்கல்களை உருவாக்குகின்றன. பாலுவின் தந்தை எஸ்.ஆர்.எஸ் அவன்மீது கொண்ட அதிக அக்கறை மற்றும் எதிர்பார்ப்பு என்பதன் வழியாக அவனுக்கு அந்நியமாக ஆகிவிடுவதுடன் அச்சமூட்டும் ஒரு மனிதராக உருவம் கொண்டுவிடுகிறார். லச்சத்தின் தந்தை சாமு அவன் மீது அக்கறையோ அன்போ அற்றவராக அவனைக் கொடிய சொற்களாலும் வசைகளாலும் கொடுமைக்குள்ளாக்குகிறார். இரு தந்தைகளுமே மகன்களுக்கு அந்நியமாகி நிற்கின்றனர். இந்தியத் தந்தைகள் என்கிற பாத்திரம் கட்டுப்பாடு, அடக்குமுறை என்பவற்றின் உருவங்களாகச் செயல்படும் மரபான வன்முறை பற்றிய பல கேள்விகளை இப்பாத்திரங்கள் வழியாக இந்நாவல் முன்வைக்கிறது (இந்தக் கொடுந்தந்தை என்ற எதிர்ப்பார்வை நவீன முரண்படுத்தல்களில் ஒன்று, தொன்மைத்தன்மையோ நீண்ட மரபோ அற்றது, இதனை விரிவாக வேறுதளத்தில் நாம் ஆய்ந்தறிய வேண்டியுள்ளது). எஸ்.ஆர்.எஸ் கொடுந்தந்தை என்கிற நிலையில் தான் இருக்கக்கூடாது என்கிற தன்னினைவு கொண்டவர். ஆனால் ஒழுங்குபடுத்தல் மற்றும் முறைப்படுத்தல் என்பற்றின் மூலம் தன் குடும்பத்திற்குள் அச்சத்தை உருவாக்கும் ஒருவராகத் தோற்றம் தருகிறார் (இவர் தன் குடும்பத்தை நாகரிகப்படுத்தும் செயலை தன் வாழ்வின் முதல் கடமையாகக் கொண்டு செயல்படுபவர், பழமையின் ஒழுங்கற்ற தன்மைகொண்ட தன் மாமனாரின் ஒவ்வொரு செயலும் கூட இவருக்கு வெறுப்பையும் சீற்றத்தையும் ஏற்படுத்துகிறது). தன் பெண் குழந்தையான ரமணி பற்றிய பெருமை உணர்வு அவருக்கு இருக்கிறது. அவளின் படிப்பறிவுகுறித்த பெருமையாக அது வெளிப்படுகிறது. எஸ்.ஆர்.எஸ்  வாழ்வில் ஏற்படும் மூன்று நிகழ்வுகள் அவரைத் தன் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் நெருக்கமாக வெளிப்படுத்திக்கொள்ளும் முதல் வாய்ப்பினை வழங்குகின்றன. முதலாவது நிகழ்வு அவருடைய வியாபாரத் தொழிலை விட முடிவுசெய்வது. இரண்டாவது லச்சத்தின் துயரமான மரணம். மூன்றாவது நிகழ்வு ஆனந்தம் வீட்டை விட்டுச் செல்வது. இந்த நிகழ்வுகளுக்குப்பிறகு கோட்டயம் விட்டு தளியல் என்ற ஊருக்கு குடிபெயர்வது என்ற முடிவு எடுக்கப்பட்ட பின் அவர்களுக்கு ஒரு தெளிவு ஏற்படுகிறது. இந்தக் குடிபெயர்வுக்குப் பின் ‘தனிமைதான் பாலுவுக்குப் பெரிய பிரச்சினை என்று தோன்றுகிறது’ என்ற தெளிவும் ஒரு காரணமாக உள்ளது. இந்த மாற்றத்தை ஏற்கும் மனநிலை அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. ‘அடுக்களைக்குள் முதல் தடவையாக அவரைப் பார்ப்பது எல்லோருக்கும் வினோதமாக இருந்தது’ என்ற குறிப்பின் மூலம் வீடு என்ற சுவர்களால் ஆன விதிமுறைகளில் சிலவற்றை மாற்றிக்கொள்ள, இடைவெளிகளைக் குறைத்துக்கொள்ள எஸ்.ஆர்.எஸ் தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள முனைவது பதிவாகிறது. லச்சத்தின் மரணம் பாலுவிடம் மட்டுமின்றி ரமணி, லட்சுமி, எஸ்.ஆர்.எஸ் அனைவரிடமும் பலமாற்றங்களைக் கொண்டு வந்துவிடுகிறது. பாலுவைத் தனியே வெளியில் அனுப்ப முதல்முறையாக எஸ்.ஆர்.எஸ் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்கிறார். ரமணி வளர்ந்த பெண்ணைப்போல சமையல் செய்யப் பழகிக்கொள்கிறாள். பாலு தன் தந்தையிடம் அச்சம் இன்றி பேசத் தொடங்கிவிடுகிறான். லச்சத்தின் தங்கை கோமு  வீட்டுவேலை செய்து தன் வாழ்க்கையை நடத்த பயிற்சியெடுத்துக் கொள்கிறாள். குழந்தைகள் பெண்களாகவும் ஆண்களாவும் மாறத் தொடங்கி விடுகிறார்கள்.

பாலுவுக்கு மனம் சார்ந்த சிக்கல் என்பதெல்லாம் பெற்றோர்கள் தங்கள் மனச்சிக்கலை ஏற்றி உருவாக்கிக் காட்டிய தோற்றப்பிழை என்பது மெல்லத் தெளிவாகத் தொடங்குகிறது. எல்லா குழந்தைகளுமே இப்படி மிகையாக இருப்பவர்கள்தான் என்ற உண்மை இந்நாவலின் போக்கில் தெளிவுபடுத்தப்படுவதை நாம் குறிப்பாக பதிவு செய்யவேண்டும். சமூக ஒழுங்கு, இயல்பு நிலைகள் என்பவை வளர்ந்தவர்களின் விதிகளால் ஒருவகையில் நகர-அரசு விதிகளின் அடிப்படையில் குழந்தைகள் பெண்கள் என்பவர்களின் இருப்பை, வேறுபடும் தன்மைகளை மறுத்தும் மறந்தும் உருவாக்கப்பட்டவை என்பது குறித்த பதிவை இந்நாவல் செய்திருக்கிறது.

குழந்தைகளின் தனிப்பட்ட கற்பனை உலகம், அவர்களின் பாவனைகளால் நிகழ்த்தப்படும் மெய்யெனத் தோன்றும் நாடகங்கள், ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் உள்ளாகக் குழந்தைகளுக்கென தேங்கியிருக்கும் வேறுபட்ட அர்த்தங்கள் குறித்த சில நுட்பமான பதிவுகள் இந்நாவலில் இடம்பெற்றுள்ளன. பாலு, ரமணி, லச்சம் இவர்கள் கட்டும் வீடு, அவர்கள் ஈடுபடும் நாடகத்தன்மை கொண்ட விளையாட்டு, ரமணியிடம் லச்சம் காட்டும் உறவுமுறை கடந்த மன நெருக்கம், (ரமணியும் வந்திருந்தால் எவ்வளவோ குதூகலமாக இருந்திருக்கும். இனி அவளைத் தன்னிடம் அதிகம் நெருங்க விடமாட்டார்கள். இன்று அவள் தன் கையைத் தொட்டதே பெரியம்மாவுக்கு எவ்வளவு உறுத்தலாக இருந்தது.) பாலுவுக்கு லச்சம் சொல்லும் மிகையான சாகசக் கதைகள், தன் சாதனைகள் பற்றிய கற்பனை கலந்த விவரிப்புகள், (இந்த உலகத்தில் அவனுக்குத் தெரியாத விஷயம் இல்லை. உலகத்தின் சகல ரகசியமும் இருளும் நிறைந்த குகைகளில் கண்களை மூடியபடி துழாவாமல் போகிறவன் அவன்.) லச்சம் தன் வயதுக்கு மீறி அறிந்து கொள்ளும் பெரியவர்களின் உலகம்  எனப் பல அடுக்குகளில் குழந்தைகள் என்ற சிக்கலான மனநிலை விளக்கப்படுகிறது. லச்சம் இறந்த பிறகு அவன் வீடு முழுக்க மறைவாகச் சேமித்து வைத்திருந்த பொருள்கள் பற்றி விவரிப்பு உள்மன அடுக்குகள் குறித்த குறியீடுகளாக விளக்கம் பெறக்கூடியது.

குழந்தைகள் என்ற நிலை ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய ஒரு ‘நெகிழ்வு கொண்ட குறியீட்டுநிலை’ என்பதை நாம் நினைவு கொண்டால் குழந்தைமைநிலை குறித்த புனைவுகள் என்பது ஒரு சமூகம் தன்னைப் பற்றித் தானே உருவாக்கிக்கொள்வது என்பது புரியவரும். சமூகத்திற்குள் இருக்கும் அத்தனை நன்மை தீமைகளும் இணக்கங்களும் வன்முறைகளும் குழந்தைகளிடம் குறியீட்டு நிலையில் படிந்தும் வெளிப்பட்டும் இயங்குவதை பெரும்பாலான இலக்கிய, ஊடகச் சொல்லாடல்கள் ஏற்பது இல்லை என்பதுடன் அவற்றை மறைக்கவும் செய்கின்றன. சாதி, வர்க்கம், இனம், பால்நிலை ஆதிக்கம் என்பவற்றின் செயல்பாடுகளை, அவற்றின் வன்முறைகளை நுண் அளவிலும் குறியீட்டு வடிவிலும் தொடர்ந்து தேக்கி வைப்பதும் நிகழ்த்திக் காட்டுவதும் குழந்கைள் உலகமே. இதிலிருந்து விலகிச் செயல்படும் குழந்தைகள் மனத்திரிபு கொண்டவர்களாகவும் ஒவ்வாமைக்கு உட்பட்டவர்களாகவுமே அடையாளப்படுத்தப்படுவார்கள். இவர்களில் சிலரே கலகம் செய்கிறவர்களாக, மாற்றுக் கருத்தியல் கொண்டவார்களாக மாறக்கூடியவர்கள். பெரியவர்கள் என்ற நம் கற்பனையும் கூட பல நேரங்களில் நம்மிலிருந்து விலகி நின்று நம்மை அச்சுருத்தும் நிலையை அடையும். புராதனப் பொதுவுடைமை பற்றிய நவீன கனவுக்கும் குழந்தைமை நிலைக்கும் உள்ள உறவை இன்னும் விரிவாக நாம் விளங்கிக்கொள்ள கலகம் செய்யம் குழந்தைகளின் கதைகள் நமக்கு உதவக்கூடும்.

டாக்டர் கோவிந்த பிஷாரடியின் பிள்ளைகளான சுகன்யா, ஸ்ரீதரன் இருவரும் இப்படிப்பட்ட குழந்தைகளாக இருந்து வளர்ந்தவர்கள் என்கிற குறிப்புடன் பாலு பற்றிய நிகழ்வுகள் தொடர்ந்து அடுக்கப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்ரீதரன் லண்டனுக்குச் சென்ற பின் அடையும் மாற்றங்களும் சுகன்யா வீட்டில் இருந்தபடியே அடையும் மாற்றங்களும் அடிப்படையான இந்திய மரபுகளுக்கு மாற்றானவை. “ஒரு தடிமன் புத்தகத்தின் மேலட்டையை சுகன்யாவிடம் காட்டி, ‘இது யாருடைய படம் என்பது தெரிகிறதா?’ என்று கேட்டார். ‘கார்ல் மார்க்ஸ்’ என்றாள். ‘இவன் ஒரு நாஸ்திகன். இவன் புத்தகம் நம் வீட்டிற்குள் வரலாமா?’ என்று கேட்டார்” அவர்களுடைய தந்தை, இது அவருக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கும் ஒரு நிகழ்வு. இந்த அதிர்ச்சிதான் நவீன இந்தியக் குடும்பங்களுக்கான முதல் அதிர்ச்சி.

மரபான தந்தைகளுக்குத் தம் நவீன கால பிள்ளைகள் பற்றிய அச்சம் இந்தத் திருகலில்தான் தொடங்குகிறது. இந்த மாற்றம் பற்றிய அச்சம் நிறைந்த இந்திய உளவியலின் பல்வேறு வடிவ மாறுபாடுகள்தான் ஒழுக்கம், நீதி, தனிமனித மேன்மைகள் பற்றிய சொல்லாடல்களாக வெளிப்படுகின்றவை. மோதல்களுக்கும் முரண்பாடுகளுக்குமான அடிப்படைக் காரணங்கள் இந்த தளத்தில்தான் படிந்துள்ளன. “இவன் யூதன். நல்ல கண்ணியமான குடும்பத்தில் பிறந்தவன். தாயும் தகப்பனும் பக்திமான்கள். இவனும் நல்ல புத்திசாலி. நன்றாகப் படித்தான். ஆனால் அவனுடைய அப்பா செய்த பாவம். சிறு வயதிலேயே கெட்டுப்போய்விட்டான். மதம் கிடையாது. தெய்வம் கிடையாது. வசதியாக இருப்பவனெல்லாம் அயோக்கியன். தரித்திரம் பிடித்தவனெல்லாம் யோக்கியன் என்று பேச ஆரம்பித்துவிட்டான்.” என்று விளக்கம் அளிக்கும் பிஷாரடி தன் மகன் ஏற்றுக்கொண்ட கருத்தியல் குறித்த வெறுப்பையும் அச்சத்தையும் இப்படியாக வெளியிடுகிறார். ‘பகுத்தறிவாளர் மன்றத்தில் உறுப்பினராகிறேன்’ என்று குறிப்பிட்ட தன் மகனைப்பற்றி ஒரு மரபான தந்தையாக அவர் சொல்வது ‘எப்போது ஈஸ்வரன் இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டதோ அதன்பின் பாவம், புண்ணியம் ஒன்றும் கிடையாது.’ இந்த ஸ்ரீதரன் இப்போது ‘பழைய வாழ்க்கை முறையிலிருந்து எடுத்துக்கொள்ள ஒன்றுமேயில்லை என்ற முடிவுக்கு’ வந்திருப்பவன். அவனுக்கு இப்போது ‘மனதின் ஆரோக்கியமே அதன் சராசரித் தன்மையில்தான் இருக்கிறது.’ என்ற தெளிவும் வந்திருக்கிறது. ‘நம்ம மண்ணுலே ஒருத்தனுக்குக் கோபம் இல்லைன்னா அவன் மனுஷனே இல்லை.’ ‘உண்மையில் நியாயம் தர்மம் எல்லாம் ஆபத்தானதுதான்’ என புதிய மாற்றங்களுக்கான நியாயத்தைப் பேசும் செல்லப்பா மாற்றங்களின் மற்றொரு வடிவம்.

இந்த மாறுதல்களுக்கான உடைப்புகளின் பின்னணியில் பாலுவைப் பற்றிய அவன் தந்தையின் பயம் வேறு ஒரு தளத்தை அடைவதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எஸ்.ஆர்.எஸ் மாற்றங்களை விரும்பக்கூடியவர்தான், ஆனால் அந்த மாற்றங்கள் தன் மேற்பார்வையில் நேர்க்கோட்டில் நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்பை உடையவர். “அவனுடைய ஒரு சில விஷயங்கள் அவர்மனதில் அதீத முக்கியத்துவம் பெற்றுவிட்டன. அவனைப் பற்றிய அவர் எதிர்பார்ப்பு, குழந்தைகளில் பரிபூர்ண குழந்தையாக அவன் இருக்க வேண்டும் என்ற ஆசை, சதா அவனைக் கண்காணிக்கும்படி அவரை ஆக்கிவிட்டது. பாலுமீது அவர் குறை கண்டு கோபப்பட்டபோது மற்றவர்கள் திரும்பத் திரும்ப என்ன சொன்னார்கள்? சிறு குழந்தைதானே அவன் என்பதுதான் அது. அவன் சிறுகுழந்தை என்பது அவருக்குத் தெரியாதா? குழந்தை என்பது பெரியவர்களின் சிறிய உருவம் என்றுதான் அவர் புரிந்து கொண்டிருந்தாரா? அவனை உருவாக்கப் பிரயோகித்து வந்த மேற்பார்வைகள் எல்லாமே அவனை உருக்குலைக்கத்தான் பயன்பட்டதா என்ற கேள்வி அவரை அரித்துக்கொண்டிருந்தது.” இந்தக் கேள்விக்குப்பின்  ‘மேற்பார்வை இல்லாத வெறும் பார்வை அது’ என அவர் நடத்தையில், பார்வையில் அடைந்த மாற்றமும் ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது (ப.505).  இந்த மேற்பார்வை மற்றும் மேற்பார்வையற்ற தன்மை குறித்த தொடர் நிகழ்வுகள்,  இவற்றால் குழந்தைகள் மற்றும் பெண்களின் இருப்பிலும் இயக்கத்திலும் ஏற்படும் பாதிப்புகள், உருமாற்றங்கள் குறித்து இந்நாவல் அடுக்கடுக்காக விவரித்துச் செல்கிறது. கதைசொல்லியின் கோட்பாட்டுப் பிரக்ஞை கொண்ட கதைமொழியின் காரணமாக ஒவ்வொரு பாத்திரமும் சிந்திப்பது பேசுவது அனைத்தும் விளக்கம் நிறைந்த வாக்குகளாக அமைகின்றன. குழந்தைகள் குறித்தான விளக்கங்களில் இந்த வாக்குகள் அதிகம் படிந்துள்ளன. “அவனைத் துன்புறுத்திக்கொண்டிருப்பது பயம். கற்பனையால் போஷிக்கப்பட்ட மனிதர்கள் சார்ந்த பயம். அவனுடைய மனிதர்கள் சாரந்த பயத்தின் மையத்தில் நீங்கள் இருக்கிறீரகள். உண்மையில் அவனுடைய பயமே நீங்கள்தான். நீங்கள் வேறு, பயம் வேறு என்று அவனுக்கு இல்லை. ஒன்றின் மறுபெயராக மற்றொன்று இருக்கிறது.”என்பன போன்று நீண்டு செல்லும் வாக்கியங்கள் ஒரு வகையில் நவீன சமூக-குடும்ப வெளியில் குழந்தைகள் குறித்த பொருட்படுத்தப்படாத தன்மைக்கும் உருவழித்த தன்மைக்கும் மாற்றான பேச்சுகளாக அமைகின்றவை. இது நவீன தனிமனித அடையாளங்களை ஒவ்வொரு தனி இருப்புக்கும் வழங்கும் மனிதஉரிமை சார்ந்த புரிதல்களால் இலக்கியத்திலும் பின் சமூகத்தளத்திலும் ஏற்பட்ட மாற்றத்தின் பதிவு.  குழந்தைகள் என்பவர்களும் கோட்பாட்டுத்தேர்வு உடையவர்கள் என்பதை “உன் இஷ்டப்படி நீ இரு என்று அப்பா என்னிடம் சொன்னால் சம்பத் மாமா மாதிரி ஜோரா இருப்பேன்.’ அவனைப் பொறுத்த வரையில் சம்பத் மாமா என்பது மிகச் சரியாகக் காரியங்கள் செய்யும் குணத்தின் குறியீடு.” (ப.448) என்ற வாக்கியங்கள் விளக்குகின்றன. அதே சமயம் குழந்தைகள் பற்றிய புரிதலில்தான் பெரியவர்கள் பற்றிய புரிதலும் தொடங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும்  இப்பகுதியை நினைவில் கொள்ள வேண்டும், “மனம் விட்டு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு எதுவும் தெரியும் என்று தயவு செய்து கற்பனை செய்து கொள்ளாதீர்கள். பாலு போல் நானும் ஒரு குழந்தை. ஒரு குழந்தையாகப் பாவித்து என்னிடம் சொல்லுங்கள்.”(ப.454) இந்த வகை சுட்டிக் காட்டுதலை தன் எடுத்துரைப்பின் உத்தியாக வெளிப்படையாக முன்வைக்கும் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் இதே வகையாகப் பெண்களைப் பற்றியும் பேசுகிறது, பெண்ணியத்தின் வரலாற்றுக் கேள்விகளை பண்பாட்டுத் தளத்தில் பொருத்தி பெண்களின் இருப்பு குறித்து பெண்களைக் கொண்டு பெண்வாக்குகளாகப் பேச வைக்கிறது.

இந்தியப் பெண்களின் இருப்பும் அடையாளமும் குடும்பம் சார்ந்தே அமைய வேண்டியவை, அவர்களுக்கென்று தனித்த கனவுகளும் நினைவுகளும் இருப்பதற்கான தேவை இல்லை என்ற பொதுநம்பிக்கையை நவீன இலக்கியச் சொல்லாடல்களும் ஒரு வகையில் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் கவனித்து வருகிறோம். குடும்பம், சாதி, சமயமரபுகள் என்பவற்றிற்குள் பெண்களின் நிலை பற்றிய கொடிய உண்மைகளைச் சொல்லும் ‘சாய்வு நாற்காலி’ போன்ற நாவல்கள் வரலாற்றில் இந்தியப் பெண்களின் இடம் பற்றியும் அவர்களின் மீதான நுண்மையும் பருண்மையுமான வன்முறைகளை பேசுவதற்கான மாதிரிகளை உருவாக்கித் தந்திருக்கின்றன. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலின் பதிவுகள் பெண்ணிய வாசிப்பிற்கான தளங்களைக் கொண்ட பெண்கள் பற்றிய பண்பாட்டுப் பகுப்புகளைக் கொண்டவை. பெண்களைப் பற்றிய பொதுவான மௌனங்களும் இருள்படுத்தல்களும் நீக்கப்பட்ட சொல்லாடலின் மூலம் இந்நாவல் பெண்களின் கருத்தியல் இடையீடுகளையும் அவர்களின் கனவுகள் மற்றும் தகர்வுகளையும் பதிவுசெய்கிறது. இந்நாவலில் இடம்பெறும் பெண்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கருத்தியலுக்கான வரைபடமாக அமைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றம் கொண்டுள்ளன.

லட்சுமி என்ற பாத்திரம் இந்நாவலில் கூடுதலான பக்கங்களில், அதிக விவரிப்புகளை எடுத்துக்கொண்ட ஒன்று. பாலு என்ற சிறுவனையும் அவனுடைய குடும்பத்தையும் மையப்படுத்தி இந்நாவல் திட்டமிடப்பட்டிருப்பதால் அவனுடைய தாய் என்ற வகையில் லட்சுமி பற்றி அதிகம் பேசப்படுவது இயல்பான ஒன்று. இந்த பாத்திரத்தை முன்வைத்து பெண்கள் சார்ந்த சில உளவியல் சிதைவுகளும் நசிவுகளும் சொல்லப்படுவது அதிக கவனத்திற்கு உரியது. லட்சுமியின் நினைவோட்டங்களாகக் கதைசொல்லப்படுவதன் மூலம் கதையின் கோணம் பெண்வயப் பார்வையில் அமைவதற்கான தளத்தை பல இடங்கள் அடைகின்றன (தாகூரின் காரே பைரே நாவலில் பிமலாவின் தன் பேச்சாக அமையும் பகுதிகள்  நினைவுக்கு வரும்). லட்சுமி ஒரு மனைவி என்ற வகையில் தன் ஆழ்மனக் காதல், ஏக்கங்கள், ஆசைகள் என்பவற்றை மெய்ப்பட வாழுவதற்கான நிலையில் இல்லை. இந்தியக் குடும்ப உறவில் காதல் மற்றும் சம நிலையிலான உணர்வு சார்ந்த பிணைப்புகள் என்பது இல்லாததும் தேவைப்படாததும் ஆகும். பல சமயங்களில் இவை தடைசெய்யப்பட்டதும் ஆக உள்ளது. லட்சுமி தன் கணவன் எஸ்.ஆர்.எஸ் மீது கொண்டிருப்பது ஒரு வித அச்சம். எந்த நேரத்தில் என்ன கடுமையான சொல் வருமோ என்ற அச்சம். ஒப்பீட்டு அளவில் தன் கணவன் பிற ஆண்கள் அளவுக்கு வன்முறை மற்றும் கொடுமையைச் செய்வதில்லை என்ற ஒரு ஆறுதல் மட்டும் லட்சுமிக்கு தன் கணவன் மீது ஒரு மரியாதையை உருவாக்கித் தருகிறது. மற்றபடி தன் கணவனிடம் இருந்து நெருக்கமோ காதலோ அவளுக்குக் கிடைப்பதும் இல்லை, அவள் தருவதும் இல்லை. லட்சுமியின் நீடித்த நோய் அவளை உடல் அளவிலும் மன அளவிலும் ஒதுங்கி இருக்க வைக்கிறது. அவளுடைய தொடர்நோய் திருமணம் நடந்து முதல் உறவுக்கும் முன் தொடங்கி வாழ்க்கை முழுதும் அவளைத் தொடர்ந்து வருகிறது. டாக்டர் பிஷாரடி அவளுடைய நிரந்தர மருத்துவராக இருக்கிறார் (வெளியிலிருந்து ஒரு ஆணின் வருகை வெரும் உடல் நோய்க்கான சிகிச்சை மட்டும் அல்ல). அதன் மூலம் அவளுக்கு வெளி உலகுடன் ஒரு தொடர்பு கிடைக்கிறது. ஆனந்தம் லட்சுமியைக் கவனித்துக் கொள்கிற ஒரு பெண், ஆனந்தத்தின் இளமையும் அவளுடைய ஆதரவற்ற நிலையும் லட்சுமியின் குடும்பத்திற்கு உழைப்பு என்ற வகையில் பயன்படும் அதேசமயம் ஒரு இருண்மையான பாலியல் படிமமாகவும் குறியீட்டுக் கருவியாகவும் பயன்படுகிறது. இதனை லட்சுமி மறைவாக அனுமதிக்கவும் செய்கிறாள். நேரடியான உடல் சார்ந்த பரிமாற்றங்கள் நிகழப்போவதில்லை என்னும் உறுதிப்பாடு இருப்பதால் தன் கண்காணிப்புக்கு உட்பட்ட நிலையில் தன்னுடைய கணவனின் மனக்கிளர்ச்சியின் மறைவான தளத்தில் ஆனந்தத்தின் இருப்பை லட்சுமி அனுமதிக்கிறாள்.

லட்சுமியின் நோய், அவளுடைய தொடர்ச்சியான அந்நியப்பட்டநிலை இந்தியக் குடும்ப உறவுகள் மற்றும் ஆண்மையக் குடும்ப அமைப்பின் கொடுமையை விளக்குவதற்கான உருவகமாக தொடர்ந்து செயல்படுகிறது. ‘கணவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? மனதை சதா அரித்துக்கொண்டிருக்கும்’ கேள்வி இது.  இதுதான் இந்தியப் பெண்கள் அனைவரையும்போல லட்சுமிக்கும்.  ‘ஒரு மனித ஜீவனுடன் கூடிவாழ்ந்ததால் மனம் தொகுத்து வைத்திருக்கும் ஊமைக்காயங்கள். வார்த்தைகள் மூலம் அந்தக் காயத்தை உணர வைக்க முடியுமா?’ இந்தியப் பெண்களின் கூடிவாழும் மரபான ஆச்சாரம் நிரம்பிய குடும்ப வாழ்க்கை பயமும் உடல் மற்றும் மனம் சார்ந்த ஊமைக் காயங்கள் மட்டுமே கொண்டது என்பது பற்றியும் அந்தக் கொடும்நிலை வார்த்தைகளில் வசப்படக்கூடியதில்லை என்பதையும் லட்சுமியின் மன ஓட்டங்கள் பூடகமாகப் பதிவு செய்து கொண்டே உள்ளன. ஆனால் அந்த அமைப்புக்கு வெளியே செல்வது குறித்த அச்சமும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.

ஆனந்தமும், வள்ளியும் தமக்கான மனம் விரும்பும், சமமான ஆண்உறவுகளைத் தேர்ந்தெடுக்க முயலும்போது லட்சமியால் அதனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அது உள்ளார்ந்த அச்சத்தால் நிகழ்கிற வெறுப்பு. லட்சுமி அச்சம் என்பதை தன் உள்ளார்ந்த அடையாளமாகக் கொண்ட பெண்மையின் குறியீடு. அவளுக்குத் தன் பிறந்த வீட்டை நினைத்தால் வருத்தமும் துயரமும் ஏற்படுகிறது. தன் புகுந்த வீட்டை நினைத்தால் பயமும் படபடப்பும் ஏற்படுகிறது. “கிரகப்பிரவேசம் முடிந்ததும் பர்ணசாலையிலிருந்து இராவணன் கோட்டைக்குப் போன மாதிரி இருந்தது. எல்லாம் சட்டம், திட்டம், யோசனை, ஒழுங்கு, குத்தல், குதர்க்கம் என்றிருக்கும். வீடு பின் கட்டு முன் கட்டு என்று இரண்டாகப் பிரிந்து கிடந்தது. இடையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத காட்டாறு ஓடுவதுபோல் இருக்கும். முன் கட்டுக்குப் பெண்வாடையே ஆகாது.” ஆண்களைப் பற்றிய பயம், ஆண்களின் சட்டமும் கொடும் நியதிகளும் உருவாக்கிப் பரப்பும் கண்காணிப்பும் தண்டனையும் தொடர் வன்முறைகளும் அமைதியாக நியாயப்படுத்தப்பட்ட ஒரு உலகம். இந்த ஆண்கள் “பகவான் மாதிரி. எல்லா இடத்திலும் இருப்பார்கள். எந்த இடத்திலும் இருக்கவும் மாட்டார்கள்”( ப.339). ஆண்கள் என்பவர்கள் கணவன், தந்தை, மகன், உடன் பிறந்தவர்கள் எப்படியிருந்தாலும் “அவர்களுடைய நினைப்புக்கும் தன் நினைப்புக்கும் நிறைய வித்தியாசம் இருப்பது சில நாட்களிலேயே தெரிந்து விட்டது” லட்சுமிக்கு. அதனால் “எதைச் செய்தாலும் அது சரியாக இருக்குமா என்று சந்தேகம் வந்தவண்ணம் இருக்கும்” ஒருத்தியாக லட்சுமி மாறிவிடுகிறாள். ஒரு தாயும்கூட தன் மகனிடம் பயம் கொண்ட உறவையே பேண வேண்டும் என்றால் இந்திய மரபில் அன்பின் இடம் எது என்ற கேள்வி தொடர்ச்சியாக இந்நாவலில் பதிவாகிக் கொண்டே இருக்கிறது. இதன் அடுத்த நகர்வுதான் சுகன்யா, வள்ளி போன்ற பெண்களின்  உருவாக்கம். “ஆண்கள் சார்ந்த வாழ்க்கை வேண்டவே வேண்டாம் என்று ஒருநாள் சுகன்யா சொன்னாள். சுகன்யா இதைச் சொன்னதும் வள்ளியின் மனம் அதிர்ந்தது.” வள்ளிக்கு “அந்த மன உலகத்திற்கான ஏக்கம் தன்னிடம் இருப்பது அவளுக்கு எப்படித் தெரிந்தது?” என்பது குறித்து வியப்பு ஏற்படுகிறது. இந்த ஏக்கம் பற்றிய கதையாக இந்த நாவலில் இடம் பெறும் பல பெண்களின் கதை அமைந்துள்ளது. ஆண்களைப் பற்றிய மரபான ஏற்புகள் உடைபட்ட  அவர்களின் “மனசு வகைப்படுத்தி வச்சிருக்கு இந்த ஆம்பிளைகளை. ஆண்கள் முரடர்கள், சாதுவான முரடர்கள், தந்திரமான முரடர்கள், சுயநலம் கொண்ட முரடர்கள், முரடர்களான முரடர்கள், சிரித்துக்கொண்டே இருக்கும் முரடர்கள்” (466). இந்த அறிவுத்தெளிவு அவர்களுக்குள் நிம்மதியின்மையை அமைதியின்மையை உருவாக்குகிறது. “பிறருடைய எண்ணங்கள்தான் என்னைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. என் உடல், மனம், உணர்ச்சி, உயிர் எதுவுமே என்னிடம் இல்லை. எதுவும் எனக்குச் சொந்தமும் இல்லை. எனக்குச் சொந்தமில்லாமல் பிறருக்குச் சொந்தமாக மட்டும்தான் நான் இருக்கிறேன்” (542) என்ற தன்னுணர்வு புதிய பெண் அடையாள உளவியலை உருவாக்க அடிப்படையாக அமைகிறது. இந்தப் பெண்அடையாளம் குறித்த சில வகைமைகளை நாம் இந்த நாவலிலிருந்து அடையாளம் காண முடிகிறது.

கோமதி லட்சுமியின் மூத்த தங்கை, ஒவ்வொரு நாளும் தேதியிட்டு அரைப்பக்கம் ஒரு பக்கம் என்று அன்று முடிகிற அளவுக்கு எழுதி பத்துப்பதினைந்து பக்கங்கள் சேரந்ததும் தன் அக்காவுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் மறுநாளே எழுதத் தொடங்கி விடும் ஒரு பெண். எழுத்து அவளுக்குத் தன் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு கருவி. “எனக்குத் தெரியாததெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்மென்று ரொம்ப ஆசை” என்னும் அவளுடைய விருப்பம் குடும்பத்தின் சுவர்களுக்குள் நசுங்கி விடுகிறது. கல்வியும் அறிவும் அவளுடைய விடுதலையின் தொடக்கமாக இருந்தும் அவை அவளுக்குத் தடைசெய்யப்படுகின்றன. சேவை செய்வதன் மூலம் தன் அடையாளத்தை மாற்றிக்கொள்ள முடியும் என்ற அவளுடைய மனத்தேர்வும் நடைமுறைப்படுத்த முடியாததாக இருக்கிறது. அவளுடைய மாறுதலுற்ற மனம், நடைமுறைகள் ‘கிறித்தவ மதத்தில் மாறிவிடுவாளோ என்ற’ சந்தேகத்தை அவளுடைய குடும்பத்தினருக்கு உருவாக்குகிறது. அவர்களுடைய குடும்பத்தினரோ அவளுடைய சினேகிதிகளை சாதியையும் மதத்தையும் சொல்லித் திட்டிக் கொண்டிருப்பவர்கள். அதே சமயம் நோய் என்றால் அவர்களிடம் ‘ஓடி ஓடிப்போய் இலவச வைத்தியம் பெற்றுக்கொள்ள எந்த கூச்சமும் படாதவர்கள்.’ தன்னை மாறுதல் கொண்ட ஒரு வாழ்வின் பாத்திரமாக மாற்றிக்கொள்ளும் முயற்சியிலும் ஏக்கத்திலும் இருப்பவள் கோமதி, ஆனால் திருமணம் என்பதைத் தவிர அவளுக்கு விதிக்கப்பட்டது வேறு எதுவும் இல்லை. கல்யாணமே வேண்டாம் என்று அவள் சொல்லும்போது அவளுடைய எண்ணங்களைப் புரிந்து கொள்வதாகச் சொல்லும் அவளுடைய அக்கா லட்சுமிக்கும் கூட கோபம்தான் உண்டாகிறது. இத்தனைக்கும் மணவாழ்வு என்பதே ஒரு நோயாக மாறி அவளை வாட்டிக்கொண்டிருக்கிறது, இருந்தும் மரபை உடைத்துச் செல்வதை நினைக்கும் பொழுதே பயமும் கோபமும்தான் அவளைப் போன்றவர்களுக்கு உருவாகிறது. கோமதி போன்றவர்களுக்கு விடுதலைக்கான ஆசை வாழ்வில் நீடித்த தண்டனையாக மாறிவிடும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளது. “என் கழுத்தில் தாலி கட்டுகிறவன் முட்டாளாகவோ முரடனாகவோ இருந்தால் நான் தற்கொலை செய்து கொண்டு விடுவேன்” என்பது அவளுடைய தீர்மானங்களில் ஒன்று, இந்த வகையான தேர்வுகளில் அவளுடைய போராட்டத்தின் தொடக்கம் படிந்திருக்கிறது, அது ஒரு நீடித்த போராட்டம், கண்ணுக்குப் புலப்படாத, ஆனால் பெண்களின் உயிரைப் பணயமாகக் கேட்கும் போராட்டம்.

வள்ளி, லட்சுமின் இரண்டாவது தங்கை இவளுடைய நடத்தைகள் மனவோட்டங்கள் அனைத்துமே அவளது சாதி மற்றும் குடும்பத்தின் மரபுக்கும் சட்டவிதிகளுக்கும் முரணாக அமைந்திருக்கின்றன. ஆனால் குடும்பம் மற்றம் சாதியின் கண்காணிப்புக்கும் தண்டனைக்கும் வெளியே சென்றுவிடும் ஆற்றலோ வலிமையோ அற்ற முதல்தலைமுறை பெண் அவள். ஸ்ரீதரனைத் தன் கருத்தியல் சார்ந்த தோழனாக, சமஉரிமையுடன் கூடிய வாழ்க்கைத் துணைவனாக தேர்ந்தெடுத்துக்கொண்ட போதும் சாதி என்பது அவளுடைய வாழ்க்கைத் தேர்வை உடைத்து, மூடுண்ட குடும்பம் என்ற ஒடுக்குதல் அமைப்புக்குள் அவளை முடக்கிப் போடுகிறது. பாசம் என்பதன் பெயரால் அவளுடைய தமக்கை லட்சுமி இந்த ஒடுக்குதலின் முதல் பொறுப்பாளியாக மாறிவிடுகிறாள்.

ஆனந்தம் ‘விதவை’ என்ற அடையாளத்துடன் பிறருக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்திருக்கும் பெண். இவள் செல்லப்பாவை தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்து, அவனுடைய அரசியல் செயல்பாட்டுக்காக அவனை நேசித்து அவனுடன் சேர்ந்து வாழவும் தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்கிறாள். இந்த சுதந்திரத்தை அவள் செயல்படுத்த முடிவதற்கு தோதாக அமைவது அவளுக்கு என்று குடும்பமோ உறவுகளோ இல்லாமல் இருப்பதுதான். அவளை மிகவும் நேசிப்பதாகச் சொல்லும் லட்சுமிக்கோ ஆனந்தத்தை ஆசிர்வதிக்க மனம் இல்லை. எஸ்.ஆர்.எஸ்  வள்ளி, ஆனந்தம் இருவருடைய சுதந்திரமான தேர்வுகளையும் மனதால் ஏற்றுக் கொள்கிற மாறுதலை மதிக்கும் அறிவு கொண்ட ஒரு ஆண். ஆனால் அதற்காக செயலில் எதையும் வெளிப்படுத்தும் ஆற்றலோ துணிவோ அற்ற முடங்கிப்போன ஒரு ஆண். அதற்கு மேல் போவதற்கான தயாரிப்பை அவருடைய கருத்தியல் தேர்வு அவருக்கு வழங்கவில்லை.

இந்தியப் பெண்களின் அடைபட்ட உளவியல் குறித்த மிக முக்கியமான ஒரு பதிவை சாவித்திரி என்ற பாத்திரத்தின் மூலம் இந்த நாவல் கையாளுகிறது. ‘டாக்டர் பிஷாரடியின் மனைவி சாவித்திரி நீண்ட காலமாக மன நோயாளியாக இருந்தாள்’ என்று தொடங்கும் விவரிப்பு ‘அவள் விரும்பினாலும் அவளால் பேச முடியாத’ நிலையைச் சொல்லித் தொடர்கிறது. நான்காவது தடவை கர்ப்பம் தரித்திருந்த காலத்தில் அவள் சொல்கிறாள் “குழந்தை இறந்து பிறக்கவேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை. இல்லையென்றால் நான் அதைக் கொல்ல வேண்டியிருக்கும்.” அதேபோல் சாவித்திரிக்கு குழந்தை பிறந்து சில நாட்களிலேயே இறந்தும் போயிற்று. பிஷாரடிக்கு அப்போது ஏற்பட்ட நிம்மதியைக் கூச்சத்துடன் பிறருக்குத் தெரியாமல் அவர் மறைத்துக் கொள்கிறார். சாவித்திரியின் கையில் குழந்தை பட்டபாட்டை நினைத்தாலே அவருக்கு வயிற்றைக் கலக்குகிறது. அசோகமித்திரனின் மானசரோவர் கதையில் வரும் மனச்சிதைவுகொண்ட மனைவி தன் கணவன் மீது கொண்ட வெறுப்பினால் தன் நோய்ப்பட்ட மகனைக் கொல்வதை இங்கு நினைவு படுத்திக்கொள்வது கூடுதலாகச் சில அர்த்தங்களைத் தரும்.

ஸ்ரீதரன், சுகன்யா, அப்புக்குட்டன் என்ற மூன்று பிள்ளைகளும் மூன்றுவித மனிதர்களாக வளர்வதில் சாவித்திரியின் மனச்சிதைவுற்ற நிலையும் ஒருவிதத்தில் காரணமாக அமைந்து விடுகிறது. ஒரு தாயாகத் தன் பணிகளைச் செய்ய மறுக்கும் அதே சாவித்திரிதான் தன் வளர்ந்த மகன் ஸ்ரீதரன் தந்தைக்கு எதிராகக் கலகம் செய்கிறபோது அதனை மகிழ்ச்சியுடன் ஊக்குவிக்கிறாள். குடும்பம், ஆண் பெண் உறவுகள் பற்றிய கடுமையான இந்தியச் சிக்கல்கள் பற்றிப் பேச இந்நாவலின் பெண்பாத்திரங்கள் திட்டமிடப்பட்ட, மாதிரி வடிவங்களாக அமைக்கப்பட்டிருப்பதற்கும் இந்நாவல் ஒரு கோட்பாட்டு விளக்கக் கதையாடலாக இருப்பதற்கும் உறவு உள்ளது. இதனை வாசிக்க கோட்பாடு சார்ந்த வாசிப்பு  தேவையாகிறது.

மாறுதல்கால நவீனநிலை பற்றிய கதைசொல்லலாக இந்நாவல் அமைந்திருக்கிறது என்பதைப் பின்புலமாகக் கொண்டு இந்நாவலின் ஆண் பாத்திரங்களின் செயல்பாடுகள் மற்றும் சொல்லாடல்களை நாம் வாசிக்கும்போது இவை கருத்தியல் மற்றும் கோட்பாட்டு மோதல்கள், முரண்கள், இசைவுகள் மற்றும் இணக்கங்கள் பற்றியவை என்பது புரியவரும். இந்திய சமய மரபு, தேசிய அரசியல், காந்திய நம்பிக்கைகள், (செல்லப்பா), பகுத்தறிவு மரபு, நவீனத்துவ மதிப்பீடுகள்(ஸ்ரீதரன்), மார்க்சியக் கோட்பாடு (கருநாகப்பள்ளி ஜோசப்), ஜனநாயக நம்பிக்கைகள் (எஸ்.ஆர்.எஸ், சம்பத்) எனப் பல கருத்துக்களின் உரையாடலை கலப்பதன் மூலம் இந்நாவல் மாறுதல்காலச் சொல்லாடலுக்கான தளத்தினை அமைக்கிறது. அதே சமயம் நுண் அரசியல், பருண்மை அரசியல் இரண்டுக்கும் இடையிலான நேர் முரண் உறவை செயல்பாடு என்பதற்கு முனையாத பாத்திரங்களின் வழியாகக் காட்சிப் படுத்துகிறது. ஆண் என்னும் அடையாள வன்முறையை மறுத்து மாறுதல் அடையத் தயங்கும் இந்திய நவீன ஆண்நிலை பற்றிய கேள்விகளையும் இந்நாவல் தடம் காட்டிச் செல்கிறது. இந்நாவலின் குழந்தைகள் நாளை என்னவாகத் தம்மை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றிய தெளிவாகாத புதிருடன் இந்நாவல் முடிவதன் மூலம் எதிர்கால அரசியல் பற்றிய முடிச்சுகளாக இந்நாலின் வாக்கியங்கள் இறுக்கமடைந்து நிற்கின்றன. தீண்டாமை என்ற மிக அடிப்படையான இந்தியச் சமூகஅரசியலின் இடம்பற்றிய இந்நாவலின் அமைதி தமிழ் கதைகளின் வாசிப்புகள் அனைத்தையும் மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்தி நிற்கிறது.

இந்நாவலை நவீன மாறுதல்கள் குறித்த கல்விப்புல கதையெனச் சொல்வதற்கான மேலும் ஒரு சான்றுடன் இக்கட்டுரையை முடிக்கலாம். “எனக்கு எந்த சக்தியும் இல்லை. எந்தத் திறனும் இல்லை. என்னைப் பொம்மையாக வைத்து எல்லாரும் விளையாடுகிறார்கள் என்றாள் வள்ளி. தன் முகத்தை ஸ்ரீதரன் நேராகப் பார்க்க முடியாதபடி பக்கவாட்டில் திரும்பி உட்கார்ந்து கொண்டாள்.

நீ பொம்மை இல்லை. உனக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் சக்திகளுக்கு அளவில்லை. வானத்தைத் தொடும் ஜூவாலையை உன் மனதிற்குள்ளிருந்து எழுப்ப முடியும். கனலைக் கரியாக்கும் சிறையிலிருந்து வெளியே வா. நமக்கென்றொரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கைக்கு ஈடுகொடுக்கும் போதுதான் நாம் யார் என்பது நமக்கே தெரியவரும். பிறர் பிடித்த பொம்மையாக இருப்பது கேவலம், அவமானம். அதைவிட மரணம் எவ்வளவோ மேல்’ என்றான் ஸ்ரீதரன்.” (ப.581)

குறிப்பு நூல்கள்:
சுந்தர ராமசாமி. குழந்தைகள் பெண்கள் ஆண்கள். நாகர்கோயில்: காலச்சுவடு,1998.
சிதைவுகளின் ஒழுங்கைமைவு: பின்நவீனத்துவப் பிரச்சினைப்பாடுகள். பெங்களூர்:காவ்யா,2000.

நன்றி - பன்மை
...மேலும்

Nov 28, 2014

இயற்கைப் பெண்ணும் பண்பாட்டு ஆணும் – இ.முத்தையா


தமிழ்ச் சூழலில் பெண், ஆண் உடல்களை அடிப்படையாகக் கொண்ட கருத்துருவாக்க வரலாற்றை வெளிப்படுத்தி விளக்குவதாக அமைகிறது இந்தக் கட்டுரைத் தொடர். பெண், ஆண் உடல்கள் தொடர்பான நாட்டுப்புற வழக்காறுகள் நிறையவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. உடலின் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையிலான உறுப்புகளைப்பற்றி பல்வேறு நம்பிக்கைகளும் அவை பற்றிய கதையாடல்களும் சடங்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

உடலை மாதிரி வடிவமாகக் கொண்டு மொழி அமைப்பு (உயிர், மெய்), சமூக அமைப்பு (முகத்தில், மார்பில், தொடையில், கணுக்காலில், உள்ளங்காலில் பிறந்த மக்கள் பிரிவினர்), அரசியல் வகைப்பாடு (வலங்கை-இடங்கை, வலதுசாரி-இடதுசாரி) போன்றவையும் உருவாக்கப்பட்டுள்ளன. ஓர் உடலுக்கும் இன்னொரு உடலுக்கும் இடையில் அதிகார உறவுகள் கட்டமைக்கப்பட்டு பெண், ஆண் உடல்கள் மேல்-கீழாக அமைக்கப்பட்டுள்ளன. இதைப்போன்று பெண், ஆண் உடல்கள் பற்றிய புரிதலில் ஏராளமான சிந்தனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்வைதம், துவைதம், சைவ சித்தாந்தம், சாங்கியம், தாந்திரிகம் போன்ற சிந்தனை வடிவங்களும் மருத்துவம் தொடர்பான அறிவாக்கமும் பெண், ஆண் உடல்களைப் பற்றிய புரிதலிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல் ஆதிமனிதர்களிலிருந்து இன்றைய சிந்தனையாளர்கள் வரை இயற்கையைப் பற்றிய புரிதலை பெண், ஆண் உடல்கள் பற்றிய புரிதலுக்கு அடிப்படை ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அல்லது பெண்-ஆண் உடல்களைப் பற்றிய புரிதலை இயற்கையைப் புரிந்து கொள்வதற்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இயற்கைக்கு எதிர்வான செயற்கையைப் புரிந்து கொள்வதற்கும் பெண், ஆண் உடல்கள் பற்றிய புரிதலே பயன்பட்டிருக்கின்றன. (தொல்காப்பியம் பண்பாட்டைக் குறிப்பதற்குச் செயற்கை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது: ‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல், செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்’) இயற்கை-பண்பாடு, அகம்-புறம், நிலம்-திணை, காடு-நாடு, காதல்-வீரம் ஆகிய கருத்துருவ எதிh;வுகள் பெண், ஆண் உடல்கள் பற்றிய புரிதலின் அடிப்படையிலேயே தமிழ்ச் சூழலில் உருவாக்கப்பட்டுள்ளன.

அரசு என்ற அமைப்பும் (முடியாட்சி, மக்களாட்சி இரண்டும்) அதன் வரலாறும் பெண்மையை விளிம்புநிலைப்படுத்தி ஆண்மைப் பண்புகளை அடித்தளமாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. குடும்பம், சாதி, கிளை (கூட்டம், வகையறா, கரை போன்றவையும்) சமயம், நாடு (கள்ளர் நாடு, நாட்டார் நாடு, கவுண்டர் நாடு, வேளாளர் நாடு போன்றவை) ஆகியவை ஆண்களின் அதிகார உடல்களாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. வர்க்க முரண்பாடுகளும் போராட்டங்களும் ஆண் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகளாகவும் போராட்டங்களாகவுமே பார்க்கப்பட்டுள்ளன. சமூகம், பண்பாடு பற்றிய சிந்தனைகளும், ஆய்வுகளும் ஆணின் அனுபவம், உணர்வு சார்ந்தே கட்டமைக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட புரிதலில் 19,20-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சூழலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன.  குறிப்பாக ஆறுமுக நாவலர், அயோத்திதாசர், சிங்காரவேலர், எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை, மறைமலை அடிகள், ஈ.வெ.ரா.பெரியார், வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தேவநேயப் பாவாணர், மு.அருணாச்சலம், நா.வானமாமலை, கோ.கேசவன் ஆகியோருடைய ஆய்வுகள் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.  இந்தக் காலகட்டத்துப் பெண் ஆய்வாளர்கள் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்படாமையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்ட ஆண் ஆய்வாளர்களின் ஆய்வுகள் பற்றிய திறனாய்வுகள் நிறைய வெளிவந்துள்ளன. ஆனால் இந்தக் கட்டுரைத் தொடரில் தமிழ்ச் சூழலில் பெண், ஆண் உடல்கள் பற்றிய கருத்துருவாக்க வரலாற்றின் பின்புலத்தில் (நாட்டுப்புற வழக்காறுகளிலிருந்து தொடங்கி) இவர்களுடைய ஆய்வுகளில் பெண்ணைப் பற்றியும், ஆணைப் பற்றியுமான புரிதல்கள் வெளிப்பட்டுள்ள முறை சுட்டிக்காட்டப்பட்டு விளக்கப்படுகின்றது. மக்கள், சமூகம், சமயம், தத்துவம், சமூக மாற்றம், வளர்ச்சி போன்ற பொதுவான சொற்களிலும் அவை தொடர்பான விளக்கங்களிலும் பெண், ஆண் பற்றிய மேற்குறிப்பிட்ட ஆய்வாளர்களின் புரிதல்களும் கருத்துருவங்களும் பதிவாகியுள்ளதையும் வெளிப்படுவதையும் விளக்குவனவாக அமைகின்றன இக்கட்டுரைகள்.

நன்றி - பன்மை
...மேலும்

Nov 27, 2014

ஆண்மையவாதப் பொய்மைகளும் கருத்தியல் வன்கொடுமைகளும்-பிரேம்


பெண்ணியம், பெண் அடையாளம், பெண்மொழி, பெண்ணெழுத்து, பெண்ணரசியல், பெண்ணிலை அறிவு என்பவை பற்றிய நெடிய உரையாடல்களும் கோட்பாட்டு மோதல்களும் கருத்தியல் போராட்டங்களும் உலக அளவில் நிகழ்ந்து அடுத்த கட்ட நிலையை அடைந்துள்ளன. புதுப்பிக்கப்பட்ட அறிவுருவாக்கம், தத்துவம், பகுப்பாய்வு முறைகள், பொருளுரைப்பு முறைகள் அனைத்திலும் தற்போது பெண்ணிய மறுபார்வைகள் மறுக்க முடியாத   பகுதிகளாக மாறியுள்ளன.

 அரசியல், பொருளியல், சமூகவியல், உளவியல் என அனைத்து வகையான மனிதவியல் புலங்களும் தற்போது பெண்ணிய-பெண்ணிலைக் கேள்விகளை மறுத்தோ மறந்தோ இயங்குவதில்லை, இயங்க அனுமதிக்கப்படுவதில்லை. கலை-இலக்கிய கோட்பாட்டுத் துறைகளும்கூட பெண்ணிய-பெண்ணிலைக் கேள்விகளால் “சிதைவாக்கம்” செய்யப்பட்டு ஆண்மைய-ஆண்முதல்வாத கொடுங்கோன்மைக்கு எதிரான சொல்லாடல் செயல்பாடுகளாக மாற்றமடைந்துவிட்டன.  தன்னைத்தானே மையப்படுத்திக் கொண்டு, தன்னால் உருவாக்கப்பட்ட “பொருள் சுமக்கும் உயிர்ப் பொருளாகவும்” தனது வரையறைக்கும் விளக்கத்திற்கும் உட்பட்ட தன்னிலை அற்ற புனைவு உடலாகவும்    பெண்மை-பெண்ணிலை என்பதை வைத்திருந்த ஆணாதிக்க, ஆண்மைய அறிவுப் புலங்கள் அனைத்தும் தற்பொழுது தகர்க்கப்பட்டு விட்டன.

 விடுதலைக் கருத்தியல்களின் ஆற்றல் மிக்க தொடக்கமாக அமைந்த மார்க்ஸியமும் அதன் விரிவாக அமைந்த பிற கருத்தமைவுச் செயல்திட்டங்களும் பெண்ணியக் கேள்விகள் மற்றும் “மறுப்பாய்வுகள்” வழியாக மறு உருவாக்கம் செய்யப்பட்ட பின்பே தற்காலத் தன்மை கொண்டதாக மாற முடிந்தது.

பாலினப் பார்வையும், பாலரசியல் நோக்கும் அற்ற பாலினச் சமத்துவத்தை ஏற்காத எந்த ஒரு கருத்தியல் – கோட்பாட்டு அணுகு முறையும், அறிவாய்வு முறையும் தற்காலத் தன்மை அற்ற பழமை வழிபாட்டு நோயாக மட்டுமே எஞ்சியிருக்கும். வர்க்க விடுதலை, இன விடுதலை, சாதி ஒழிப்பு,  ஏகாதிபத்திய எதிர்ப்பு என அனைத்து வகையான விடுதலைக் கருத்தியலுக்குள்ளும் பெண்ணியத்தின் கோட்பாட்டு, பகுப்பாய்வு முறைகள் செறிவான வழிகாட்டு நெறிகளாக உள்வயப்படவில்லை யெனில் அவையும் ஆண் மேலாதிக்க பெருங்கதையாடல்களாவே இருக்கும் என்ற புரிதல் உருவாகி விட்டது. சூழலியல்,  அதிகார மையங்களின் தகர்ப்பு, அடையாள அரசியல், உடல் அரசியல் என்பவற்றில் பன்மைத் தன்மை கொண்ட பெண்ணிய இயங்கியலே முன்னகர்த்தும் சக்தியாக அமைந்துள்ளது.

பெண்கள் மீதான வன்முறைகள், பெண்மை மீதான கருத்தியல்-பண்பாட்டு அடக்கு முறைகள், பெண்மை பற்றிய பகுத்தறிவற்ற கீழிறக்கம் என்பவை இந்தப் பெருந்தகர்ப்பு பற்றியும், மறு கட்டமைப்பு பற்றியுமான அறிவின்மையால் தொடர்கிற அறிவுமறுப்புக் கொடுங்கோன்மைகளே தவிர வேறில்லை. இந்தக் கொடுங்கோன்மைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிரான நெடிய போராட்டத்தைக் கருத்தியல் தளத்திலும் சமூக-அரசியல் தளத்திலும் தொடர்ந்து முன்னெடுப்பதே பெண்ணியச் செயல்பாடுகளாகவும், பெண்ணிய இயக்கங்களாகவும் இருந்து வருகின்றன.

மொழிச் செயல்பாடுகளிலும், குறியீட்டுச் செயல்பாடுகளிலும் உள்ளீடான தலைகீழாக்கத்தையும், உடைப்பையும் உருவாக்குவது பெண்ணிய அரசியலின் மிக முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று. அதனைக் கலை, இலக்கிய, ஊடக மொழிகள் வழியாக  நிகழ்த்த பெண்கள் தம் இருப்பை, தமக்கான இடப்பகிர்வை அவற்றில் பெற்றாக வேண்டும். ஆணாதிக்க மொழி, ஆண்மையக் குறியமைவு போல வரலாற்றால் உறுதி செய்யப்பட்ட வன்முறைகளை வழிமொழிந்து தமக்கான கருத்தியலைப் பெண்கள் உருவாக்கிக் கொள்ள முடியாது. ஒவ்வொன்றையும் எதிர்த்தாக வேண்டும், ஒவ்வொன்றையும் மறுபார்வைக்கு உள்ளாக்க வேண்டும், ஒவ்வொன்றையும் உடைத்து மறுகட்டமைப்பு செய்தாக வேண்டும், ஒவ்வொன்றையும் சிதைவாக்கம் செய்து புதிய பொருளுருவாக்கத்தை நிகழ்த்தவேண்டும், ஒவ்வொன்றின் மையத்தையும் பிளந்து புனைவுகளை வெளிக் கொணரவேண்டும், தம் மீது சுமத்தப்பட்ட வரையறைகளை உடைத்து நொறுக்கவேண்டும், தம் அனுமதியின்றி தம்முள் நிறைக்கப்பட்ட அடையாளங்களை வெளியேற்ற வேண்டும், இன்னும் பல தளங்களில் பெண்கள் தாம் இந்த உலகில் இருக்கிறோம் என்பதைப் புலப்படுத்துவதற்கே வன்மையான ஊடுறுவலைச் செய்தாக வேண்டும். ஒருவகையில் ஆண்வயமான மனிதக் கட்டமைப்புகள் அனைத்தையும் தலை கீழாக்கம் செய்யும் சிக்கலான, கடினமான போராட்ட  வாழ்நிலை இது.

ஆண் நிலை அழிப்பும், ஆண்மையத் தகர்ப்பும் இந்தச் செயல்பாடுகளூடாக நிகழவே செய்யும். ஆண்மையம் அற்ற ஆணாதிக்கமற்ற ஆண் தன்னிலையைக் கட்டமைப்பதன் வழியாகவே ஆண் நிலை என்பது தன்னை அறிவு வழி அமைந்த சமூகத் தன்னிலையாக உருவாக்கிக் கொள்ள இயலும்.  இந்தக் கட்டுமானத் தலை கீழாக்கம் பற்றிய அறிவைப் பெறாதவர்கள் இன்றைக்கான நவீன அரசியல், மனித உரிமைச் செயல்பாடுகள், ஜனநாயக மதிப்பீடுகள் பற்றிப் பேசுவதற்குரிய தகுதியைப் பெறமுடியாது. நவீன தேசம், நவீன அரசு, நவீனப் பொருளியல், தொழில் நுட்பம், ஊடகப் பொறியியல் என்பவை உருவாக்கித் தந்த  வசதிகளை, மனித உரிமைப் பாதுகாப்புகளைப் பெற்றுக் கொண்டு அவற்றின்வழி கிடைக்கும் வாழ்வியல் இன்பங்களை நுகர்ந்த  போதும் இவர்கள் மரபான அதிகாரக் கருத்தியல்,  சமத்துவம் மறுக்கும் மதஅதிகார உளவியல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

 நவீன அரசியலமைப்பு அடிப்படையில் அமைந்த எந்த ஒரு அரசியல் செயலும் பெண்ணிய உரிமைகளை மறுத்து இயங்க முடியாது என்பது உலகமயமான மனித உரிமை- குடியுரிமை அரசியலால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அரசியல் நெறிகள், குடிமைச் சட்டங்கள், பொருளாதார, சமூகத் திட்டமிடுதல்கள் என அனைத்தும் பெண்ணிய-பெண்ணிலை நிபந்தனைகளை நிறைவு செய்யாமல் இனிச் செயல்பட முடியாது.  சட்டம்,  நீதி, அரசியல் மதிப்பீடுகள், வழிகாட்டு நெறிகள்  அனைத்திலும் பெண்ணிய-பெண்ணிலைக் கருத்தியல், அறிதல் முறைகள் தமது நெடிய போராட்டங்களின் வழியாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன.

பத்தாண்டுகள் முன்புவரை ஒரு அலுவலகக் கட்டிட வரைபடத்தில் பெண்களுக்கான வேலையிடம், ஓய்விடம், சுகாதாரப் பகுதி என்பவை இடம் பெறுவதில்லை. தற்போது பெண்களுக்கான முறையான புழங்கும் வெளியில்லாமல் எந்தக் கட்டிட அமைப்பும் இருக்க முடியாது. அப்படி அமைந்தால் அது சட்ட விதிப்படி அனுமதி பெறத் தகுதியற்றது.  உலகமயமாக்கலின் பின் உள்ள திட்டமிடல்களில் பெண்ணிலை இதுபோன்ற “பருண்மை  இடங்களைப்” பெறுவதற்கே பெரும் போராட்டங்களை நிகழ்த்தியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் பொது வெளிகளில் கருப்பின மக்கள் தமக்கான இடத்தைப் பெற நிகழ்த்தியதை விடக்  கடினமானதும், தமது சம வாழ்வுரிமைகளுக்காக  இந்திய ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றும் நிகழ்த்தி வரும் போராட்டத்தை விடச் சிக்கலானதுமான போராட்டம் இது.

தற்போதுள்ள உலகமயமான நவீன தேசங்களின் அரசியலில் பெண்ணிய-பெண்ணிலைக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும் பெண்ணிய அரசியலை நீக்கி வைத்து அவை இயங்கமுடியாத நிலையை பெண்ணியப் போராட்டங்களே உருவாக்கின.

மதங்கள், பண்பாட்டு மரபுகள், வழக்காற்று முறைகள், குடும்ப விதிமுறைகள் என்பவை இந்தச் சமஉரிமை அரசியல் நெறிகளை ஏற்க முடியாத நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றன. இவற்றின் தொடர் வன்முறைகள் பெண்களை மேலும் மேலும் அடிமைப்படுத்த, அழுத்தி நசுக்க  புதிய புதிய தந்திர வடிவங்களை எடுத்து வருகின்றன.  பெண்ணிய-பெண்ணிலைக்   கோட்பாடுகளும், சொல்லாடல் செயல்பாடுகளும், பெண்ணிய இயக்கங்களும் இவற்றைத் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்துவதால் பெண்ணியம் என்ற அடையாளத்தையே முழுமையாக அழித்துவிட வேண்டும் என்ற கொடுவெறியைப் பாலின அதிகார அமைப்புகள் தமக்குள் நிறைத்து வைத்துக்கொண்டுள்ளன.

ஆணாதிக்க உளவியல் கொண்ட தனிமனிதர்களும், ஆண்மையக் கருத்தியல் கொண்ட கலாச்சார, குடிமை மரபுகளும் நவீன அமைப்பின் உள்ளிருந்தபடி மிகுந்த வன்மம் கொண்டு பழிதீர்க்கும் செயல் திட்டங்களைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றன. குடிமைச் சமூகத்தில், மரபுத் தளங்களில் ஆண்மைய- ஆணாதிக்க வன்கருத்துக்கள் தம் அதிகாரத்தைத் காப்பாற்றிக் கொள்ள அறிவு மறுப்பு உத்திகளைத் தொடர்ந்து கையாளுகின்றன. திரைப்படம், தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள், பொதுப் பேச்சுக்கள் என அனைத்திலும் இந்த ஆண்மைய அறிவு மறுப்பு தொடர்ந்து செயல் படுத்தப்படுகிறது. பக்தி, சமயம், சடங்குகள், புராதனப் புனிதவாதம் என்பவற்றை நுண்வடிவிலும், உருப் பெருகிய வடிவிலும் பரப்பியபடி பெண்ணிலை -பெண்ணுடல் மீதான தன் வன்கொடுமைகளை நிகழ்த்திவருகின்றன ஆணாதிக்க அமைப்புகள்.

தற்போது நிகழ்த்தப்படும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பெண்ணுரிமைப் போராட்டத்திற்கு எதிரான, பெண்கள் பெறமுயலும் தன்னடையாளத்திற்கு எதிரான ஆணாதிக்க உளவியலின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளன.

வீடுகள், வேலையிடங்கள், பொதுஇடங்கள், நிறுவனங்கள், மதவழிபாட்டுத் தளங்கள், கல்வி நிறுவனங்கள், ஊடகத் தொழிற்கூடங்கள் என எல்லா இடங்களிலும் பெண்களின் உடல் மீதும் தன்மதிப்பு மீதுமான வன்கொடுமை எந்த நொடியிலும் நிகழலாம் என்ற நிலை பெண்களை அச்சுறுத்தியபடி உள்ளது. தீண்டாமைக்கு எதிரான எதிர்ப்பும் போராட்டமும் நிலைகொள்ளும் இடங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட பெண்கள் மீதான வன்கொடுமைகள், உடல் சிதைக்கும் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கும் பிற பொதுவெளிகளில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் உடல், உளநிலை வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருப்பது ஒரேவகை ஆண் உளவியல்தான், அடங்க மறுக்கும்,  தன்னடையாளம் கோரும் பகுதியினர்  மீது தாக்குதல் தொடுக்கும் வன்மம். மற்றொரு தளத்தில் உடல் மீதான வன்முறையைவிட உளவியல் வகையில், குறியீட்டு நிலையில், மொழி வடிவில், காட்சி பிம்ப வடிவில் நிகழ்த்தப்படும் வன்முறைகளின் அளவும்,  விகிதமும் மிக மிக அதிகமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகப் பெண்கள் தினத்தன்று பெருநகரங்களில்  சில ஆண்கள் கூட்டம் பெண்களை வலிந்து தீண்டியும், உடலை அவமதித்தும், இழிவான சைகைகளைச் செய்தும் தம் வெறிச்செயலில் பெருமை கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.  டெல்லியில் வேறு எந்த நாளைவிடவும் உலகப்பெண்கள் தினத்தன்று பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகள், குற்றச் செயல்கள் பல மடங்கு அதிகமாகப் பதிவாகிறது, பதிவாகாத குற்றங்கள், வன்கொடுமைகள் இதைவிட அதிகமாக இருக்கும்.  எண் பலகையில் வண்ணத்தைப் பூசி மறைத்த இருசக்கர வாகனங்களில் வந்து வன்முறையை நிகழ்த்திவிட்டு மறைந்த ஒரு கூட்டத்தை நான் நேரில் கண்டு செயலற்று நின்றிருக்கிறேன். மாணவிகள் பலர் பெண்கள் தினத்தன்று தம் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் பற்றிச் சொல்லிக் குமுறியதைக் கேட்டிருக்கிறேன். பெண் விடுதலை, பாலினச் சமத்துவம் பற்றிய வெறுப்பு, வன்மம் இந்த இளைஞர்களை வெறிகொண்டவர்களாக மாற்றுகிறது. டெல்லியில் ஒரு மாணவி வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்த துயர நிகழ்ச்சிக்குப் பின் நடந்த சில கண்டன ஊர்வலங்களிலேயே பெண்கள் மீதான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

பெண்கள் இனிப் பொது வெளியில் புழங்காமல் இருப்பதும், ஆண்களுக்கான இடங்களில் தட்டுப்படாமல் பதுங்கி வாழ்வதும்தான் தப்பிப்பதற்கான வழி என்ற மனநிலை உருவாக்கப்படுப்படுகிறது. குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், பணியிடப் பெண்கள் பாதுகாப்புச் சட்டம், திருத்தப்பட்ட பாலின வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்  போன்ற பெண்ணுரிமைச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த பின் ஆண்களின் வன்மம் அதிகமாகியுள்ளது எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆணாதிக்க உளநோய் கொண்டவர்கள் பெண்கள் மீதான தம் வன்முறைகளையும், சித்திரவதை முறைகளையும் புதிய வடிவங்களில் நிகழ்த்தத் தொடங்கியுள்ளனர்.

இதே வகையான ஆண்நோய் வன்கொடுமைகள் கலை, இலக்கியம், அரசியல், சமூக இயக்கங்கள், அறிவுத் துறைகள் என்ற கருத்தியல் புலங்களில் செயல்படும் பெண்கள்மீது மதிப்பிடுதல் என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது. இந்த ஆண்நோய் வன் கொடுமைகள் குறியீட்டுச் சடங்குகளாக, உளவியல் தாக்குதல்களாக, மொழி வன்முறைகளாக, ஒழுக்கவியல் அச்சுறுத்தல்களாக வெளிப்படுகின்றன. தாம் நிகழ்த்தும் வன்முறையை “அறச்சீற்றம்”  என்று சொல்லும் அளவுக்கு ஆண்மைய உளநோயால் பீடிக்கப்பட்டவர்கள் தம்மைப் பண்பாட்டுக் காவலர்களாகவும், மரபின் போதகர்களாகவும்  கற்பிதம் செய்து கொள்கின்றனர்.

மற்றொரு தளத்தில் அறிவுத்துறைகள், கோட்பாட்டு உரையாடல்கள், கருத்தியல் ஆய்வு முறைகள், கலை-இலக்கிய பகுப்பாய்வுகள் என்பவை தற்போது பெண்ணியத்தை, பெண்ணிலை அறிவுருவாக்கத்தை மறுத்து இயங்காத  நிலை உருவாகி உள்ளது. இதுவரை தன்னை மையமாகவும் முதன்மையாகவும்  வைத்து, தனக்குத்தானே அளித்துக் கொண்ட இறைமை நிலையில் திளைத்துக் கொண்டிருந்த ஆண்மைய அழகியல், ஆணாதிக்க கலை இலக்கியக் கோட்பாடுகள் அனைத்தும் இன்று நொறுக்கப்பட்டு விட்டன.

இன்று   ஆண்மையச் சொல்லாடலோ, ஆணாதிக்க மொழிபோ தன்னை உறுதிப்படுத்தி, தன்னை நியாயப்படுத்திப் பேசவேண்டும் என்றால் ஒரு நூற்றாண்டு அறிவுப் போராட்டங்கள் பற்றிய அறியாமையில் அழுந்தியவைகளாக இருக்க வேண்டும். அல்லது, அந்த அறியாமையை வெட்கம் கெட்டுக் கொண்டாடிக் கொள்ளும் மனத்திரிபு கொண்டவைகளாக இருக்க வேண்டும். பேரிலக்கியங்கள், செவ்வியல் படைப்புகள், காலம் கடந்து நிற்கும் காவியங்கள் என்ற பொய்க் கதைகளை, ஆணாதிக்கக் கட்டுக் கதைகளை பெண்ணிய வாசிப்புகள் உடைத்து நொறுக்கி புதிய கதைக் கலைப்புகளை, மொழிச் செயல்பாடுகளை உருவாக்கியுள்ளன.

இதுவரை ஆண்மைய அறிவைக் கொண்டாடி மகிழ்ந்து, தன்னுறுதியில் திளைத்த கலை, இலக்கியம் சார்ந்த தனிமனிதர்கள் இந்த நிலைத்தகர்ப்பு விளைவுக்கு எதிராகத் தம்மை அணிதிரட்டிக் கொள்ள பெண்ணியத்தை எதிர்த்தல், பெண்ணிலைப் பார்வைகளை இழித்துரைத்தல், பெண்ணிலைக் கருத்தியல்களை திரித்துக் குழப்புதல் போன்ற செயல் உத்திகளைக் கையாள்வார்கள். இதற்கு அவர்கள் இலக்கியச் செம்மைவாதம், உயர் கலைத்தன்மை போன்ற காலம் கடந்த கருத்தாக்கங்களைத் துணையாகக் கொண்டு தம்மை அறிவுத்துறை சார்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வார்கள். இவர்கள் பேசும் தத்துவம், அழகியல், பொதுஅறம், கலை-இலக்கியக் கோட்பாடுகள், ஒழுக்கவியல் அனைத்துக்குள்ளும் ஆண்மைய, அதிகாரப் புனிதவாத வன்முறை உறைந்து கிடக்கிறது.

தமிழில் இந்த அதிகாரப் புனிதவாதமும், மாறுதல் மறுக்கும் ஆண்மையவாதமும் பெருமைக்குரிய அடையாளங்களாக இருந்துவருகின்றன. இந்திய மொழிகள் பலவற்றின் கலை-இலக்கிய, அறிவியக்கப் புலங்களில் வெட்கப்படத் தக்கவையாக மாறிவிட்ட  ஆண்மைய, ஆணாதிக்கப் பேச்சுக்கள் தமிழில் இலக்கியம், அழகியல், சமூக மதிப்பீடுகள் என்ற பெயரில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்ற அடையாளம் கொண்ட பல ஆண்களால் பெருமையுடன் முன் வைக்கப்படுகின்றன. ஒழுக்கவியல், பண்பாட்டுப் புனிதம் என்ற  பெயரில் ஆண்நோய் புலம்பல்களும்  பெண்ணிலை மீது ஏவப்படும் மொழி வன்முறைகளும் தமிழில் மிகுந்த மகிழ்வுடன் கொண்டாடப்படுகின்றன. இந்த அறிவழிப்புத் தன்மை கொண்ட ஆண்மைய- ஆணாதிக்க கருத்தியல் செயல்களுக்கு எதிரான செயல்பாடுகள், சொல்லாடல்கள் தமிழில் விளிம்பு நிலையில்தான் உள்ளன.

பெண்ணாக இருந்து எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும், எதைப் பேசவேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதை வரையறை செய்து தருவதற்கான அதிகாரம் தமக்கு இருப்பதாக நம்பும் ஆண்மையவாதக் கும்பல் கலைஞர்கள், கவிஞர்கள், அறிவுஜீவிகள், தமிழின் வரலாற்று நாயகர்கள் எனப் பெருங்கதையாடல் உருவங்களாகத் தம்மை நிறுவிக்கொண்டு செய்கிற வன்முறைகளை இலக்கிய தவம் என்று துதிபாடும் பெருங்கூட்டம் ஒன்று தமிழில் இருக்கிறது.

உண்மையான பெண்ணியம் என்றால் என்ன? எது சரியான பெண்ணியம்? பெண்ணியம் பீரிடாமல் எப்படி எழுதுவது?  என்று பெண்ணியச் செயல் பாட்டாளர்களுக்கு ஞானோபதேசம் செய்து உய்விக்க இந்த ஆண்மையவாதக் கூட்டத்திலிருந்து குருமார்கள் தோன்றியபடி இருக்கிறார்கள். இவர்கள் பெண்ணியத்திற்கும், பெண்ணிலைச் சொல்லாடல் செயல்பாடுகளுக்கும் எதிரான போராளிகளாக மாறித் தலைமையேற்றுச் செல்ல முன்வரும் போது, இந்த வீர மரபை தமிழின் ஒரு பெருங் கூட்டம் பெருமையுடன் திமிர் பொங்க முன்னெடுத்துச் செல்லக் காத்துக் கிடக்கிறது.

பெண்ணிலை மீதான பலவகையான வன்கொடுமைச் செயல்பாடுகளின் ஒரு குறியீட்டு வடிவமாக, ஒரு அடையாளத் தாக்குதலாக, மொழி வன்முறையாக அமைந்திருப்பதுதான் ஆண் எழுத்தாளர் ஜெயமோகன் பெண் எழுத்தாளர்கள் அல்லது பெண் கவிஞர்கள் பற்றித் தெரிவித்து, ஆய்வறிவோ அரசியல் புரிதலோ அற்ற ஆண்நோய்க் கும்பலின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள சில கருத்துக்கள்.

இவற்றைக் கருத்துக்கள் என்பதைவிட பெண்ணாக இருந்து, பெண்ணிலை அடையாளத்துடன் கலை-இலக்கியத் தளத்தில் செயல்பட்டு வரும் பெண்களை நோக்கி வைக்கப்பட்டுள்ள இழித்துரைக்கும் சைகைமொழி என்றுதான் கொள்ள வேண்டும்.

இவற்றை மேம்போக்காகப் பார்த்தால் பெண்ணெழுத்தின் இலக்கியத்தன்மை பற்றி மதிப்பிட்டுக் கூறப்பட்டுள்ள ஒரு மாற்றுக் கருத்து போலத் தோற்றம் தரக்கூடும். பெண்கள் சிறப்பாக எழுதவேண்டும் என்றும், அதிகம் கற்று அறிவுத் தெளிவு பெற்று நீடூழி வாழ வேண்டும் என்றும் அக்கறை கொண்ட பெருமகனார் ஒருவரின் ஆதங்கம் போன்று தோன்றலாம். ஜெயமோகன் தன் வசையை-இழிவுறுத்தும் சைகையை நியாயப்படுத்த மேலும் மேலும் பயன்படுத்தும் மகா வாக்கியங்கள் அவரை பண்பாட்டு பிதாமகனாகப் போற்றவேண்டும் என்ற பெரும் மயக்கத்தைக்கூட தோற்றுவிக்கலாம்.  ஆனால் இதன் குறியியல், அரசியல் பொருளாக்கம் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது, தற்கால அறிவுப் புலத்திற்கு, நவீன அரசியல், பொதுக்கள நெறிகளுக்கு முற்றிலும் எதிரான தற்புனித வன்முறை நிறைந்தது.

இதனைப் பொதுக்களத்தில் பதிவு செய்து, ஆண்மைய, ஆண்நோய்க் கருத்தியலை மறுஉருவாக்கம் செய்ய ஜெயமோகனுக்கு “எழுதும் ஒருவர்” என்ற அடையாளம் பயன்பட்டிருக்கிறது. பல ஆயிரம் பக்கங்கள் எழுதி வாசகர்களுக்கு அளித்திருப்பதாகப் பெருமையுடன் குறிப்பிடும் ஒருவர் தன் எழுத்தைப் பெண் அரசியலுக்கு எதிராகப் பயன்படுத்தி இருக்கும் முறை நவீன-பின்நவீன அறிவுமுறைக்கு ஏற்றதா அல்லது பெண்ணியத்திற்குப் பிறகான நவீன இலக்கியப் புலத்திற்கு உகந்ததா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு முன் அது தற்கால குடிமை நெறிகள், அறிவுத்துறை மதிப்பீடுகளுக்கு ஏற்றதா?  பெண்களுக்கு எதிரான பலவகையான வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களின் நியதிகளுக்கு உட்பட்டதா?  உடன் பணிபுரியும், உடன்வாழும், உடன் பயணம் செய்யும் பெண்களிடம் நடந்து கொள்ளும் முறை பற்றிய நடத்தை விதிகளையாவது ஜெயமோகன் மற்றும் அவரின் திருத்தொண்டர்கள் பின்பற்றுகிறார்களா என்பதை நீக்குப்போக்கு இன்றி பேசியாகவேண்டும்.

ஆனந்த விகடன் வார இதழில் (4-6-2014) கேள்வி பதில் பகுதியில் ஆண் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்  அளித்த “இளம் படைப்பாளிகள்”  பட்டியலில் இருந்து தொடங்குகிறது இந்தப் பிரச்சினை. நாஞ்சில்நாடன் சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள ஒரு ஆண் எழுத்தாளர் என்ற வகையில் அந்த ஊடகம்  தனது  பக்கங்களில் சிலவற்றை அவருக்கு ஒதுக்கித் தந்திருக்கிறது. அவர் ஒரு நல்ல கதைசொல்லி என்பதை மீறி அவருடைய நாவல் ஒன்று திரைப்படமாகக்கப்பட்டுள்ளது, மேலும் ஒரு திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியிருக்கிறார் எனச் சில கனரக ஊடகத் தகுதிகளும் உள்ளன என்பதைக் கவனத்தில் கொண்டே அவருக்கு அந்தப் பக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

“இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?”  என்ற எளிமையான கேள்விக்கு அவர் முன்பின் யோசித்து, பின்விளைவுகள் பற்றிய ஒரு தெளிவுடன் தன் தேர்வில் இருந்து ஒரு பெயர்ப் பட்டியலை அளிக்கிறார். “இளையவர்களை மட்டுமே கருத்தில் கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன்” என்ற நேர்மையான ஒரு குறிப்பையும் தந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நம்பிக்கை தரக்கூடிய எழுத்தாளர் என்றால் என்ன பொருள்? யாருக்கு என்ன நம்பிக்கையைத் தர வேண்டும்? நம்பத்தகாத, நம்பிக்கை தராத எழுத்தாளர்கள் யார்? நாஞ்சில்நாடனுக்கு நம்பிக்கை தரக்கூடியவர்களா அல்லது கேள்வி கேட்ட வாசகருக்கு (பெண் பெயரில் இக்கேள்வி அமைந்திருப்பதாக ஆவணம் சொல்கிறது) நம்பிக்கை தரக்கூடியவர்களா?  எனப் பல “சட்டச் சிக்கல்கள்” இதில் இருந்தாலும் பதில் ஒன்றுதான், சில எழுத்தாளர்களின் பெயர்கள். அவர்கள் தமிழில் எழுதக்கூடியவர்களாக இருக்கவேண்டும், சில நூல்களை வெளியிட்டிருக்க வேண்டும்.

இது போன்ற பெயர்ப்பட்டியல்கள் சிறுபத்திரிகைகளில் அவ்வப்பொழுது வெளியாவது வழக்கமானதுதான். பங்காளிகள், தாய்மாமன்கள், மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் எனத் திருமண அழைப்பிதழ்களில் இடம்பெறுவது போன்று ஆசாபாசங்களுக்கும், சாதிசனம், பரம்பரை வழக்கம் எனச் சிலவகை விதிகளுக்கும் உட்பட்டதாக ஒரு பெயர்ப்பட்டியல் அமைவதை யாராலும் தடுக்க முடியாது. பெயர் விடுபட்டுப் போனவர்கள் உரிய சான்றுகளுடன் வந்து கடைசித் தேதிக்குள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளும் வசதி சிறுபத்திரிகைகளில் சில சமயம் அளிக்கப்படும். அந்தப்பட்டியல்கள் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துவதில்லை. தமிழக அரசு உருவாக்கியுள்ள தன்னாட்சி மண்டலங்களான “தாஜ்மாக்” கடைகளின் உட்பகுதிகளில் ஆன்றோர் பெருமக்கள் கூடி அந்த தாவாக்களை தீர்த்துக் கொள்வது வழக்கம். சில அலைபேசி அழைப்புகளில் அதற்கான உச்சி மாநாடுகள் நடத்தப்பட்டு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படலாம். இதெல்லாம் சிறுபத்திரிகை ஆண்மரபு சார்ந்தவை.

ஆனால் ஆனந்த விகடன் பத்திரிகையில் அஞ்சல்தலை அளவிலான படத்துடன் பெயர் இடம் பெறுவது,  நம்பிக்கை தரக்கூடிய எழுத்தாளர் என்ற அடைமொழியுடன் இடம் பெறுவது  விளையாட்டான விஷயம் இல்லைதான். எழுதுபவர்களைவிட அவர்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உடன் வேலை செய்பவர்களுக்கு நிச்சயம் இது மகிழ்ச்சியைத் தந்திருக்கும். அதன் தொடர்ச்சியான ஒரு எளிய மகிழ்ச்சியைத்தான் பட்டியலில் இடம்பெற்ற எழுத்தாளர்களும் அடைந்திருப்பார்கள். இந்தப் பட்டியலில் இடம் பெறாதவர்கள் நிச்சயம் தமது அடுத்த தொகுதியை வெளியிடும் போது நாஞ்சில் நாடனுக்கு அனுப்பி “அவர் நாண நன்நயம்” செய்துவிட சூளுரை செய்து கொண்டிருக்கக்கூடும்.  இதுவரை நடந்தவை பிள்ளை விளையாட்டுக்களாக இருக்கலாம். ஆனால் ஜெயமோகன் தன் ஆண்மரபு “ஆய்வின்” வழி நிகழ்த்திய பாலின வன்தாக்குதல் எழுதுபவர்களை வெட்கப்படுத்தி வேதனையுறவைத்துவிட்டது.

”இது ஒரு இலக்கியக் கருத்துரைப்புதானே, பாலின வன்தாக்குதலாக எப்படி இருக்கமுடியும்” என்ற கேள்வி ஒரு சிலருக்கு எழக்கூடும். “இலக்கியமே இல்லாத தமிழை உய்விக்க தன் வாழ்க்கையைத் தந்துவிட்டு “பல ஆயிரம் பக்கங்களை” அளித்துள்ள ஒரு எழுத்தாளர் இந்தப் “பெண்களை” அவமதித்தால் என்ன குடியா முழுகிப்போகும்?  இதற்காக ஜெயமோகனைக் கண்டித்து “இந்தப் பெண்கள்” அறிக்கை வெளியிட்டால் அவரது அத்வைத மனம் புண்பட்டு அடுத்த நாவல் வெளிவருவது தடைபடாதா?” எனக் கதைபக்தி கொண்ட கடுந்தொண்டர்கள் தர்மாவேசம் கொள்ளக்கூடும். ஆனால் நவீன இலக்கியம் உணர்ந்த எவருக்கும் அவருடைய வாசகங்கள் எவ்வளவு வன்மம் நிறைந்தவை, எந்த அளவு பாலின ஒதுக்குதல் கொண்டவை என்பது புரியவரும்.

நாஞ்சில்நாடன் அளித்த இளம் படைப்பாளிகள் பட்டியலைப் பற்றிக் குறிப்பிடும் ஜெயமோகன் “அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள்” நடப்பதாக தகவல் தருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் பதிவு செய்துள்ள கருத்துக்கள் சில:

“தமிழில் எழுத வந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில் அறிமுகம் செய்வது உற்சாகமளிக்கிறது”. “அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் சென்றடைய” முடியும். “சங்ககால நூல்களெல்லாம் அப்படிப்பட்ட பட்டியல்களே. ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், பன்னிரு திருமுறைகள் என்பவை எல்லாம் பட்டியல்களே.” “பட்டியல் என்பது ஒரு ரசிகன் அல்லது திறனாய்வாளன்  தன் ரசனையின் அல்லது ஆய்வின்  அடிப்படையில் முன் வைக்கும் ஒரு தேர்வு. அதற்கான காரணங்களை அவன்  சொல்லலாம். சொல்லாமலும் விடலாம்”… “இப்பட்டியல் முக்கியமானதாக ஆவது  நாஞ்சில்நாடன்  என்ற ஆளுமையால் தான்.”… “நாஞ்சில் நாடனின் இப்பட்டியலில் எல்லா வகை படைப்பாளிகளும் இடம் பெற்றுள்ளனர். ஒரு குறிப்பிட்ட நோக்கு மேலோங்கிவிடக் கூடாது என அவர் கவனம் எடுத்திருப்பது  தெரிகிறது. ஆனால் எனக்கு இலக்கியத்தில் பந்திப்பாய் விரிப்பதில் நம்பிக்கை இல்லை. அது ஒரு வகையில் தரமான படைப்பாளிகளை  அவமதிப்பது என நினைக்கிறேன். நான் மிகச் சிறிய பட்டியலையே எப்போதும் போடுவேன்”…. என்றெல்லாம் சொல்லிச் செல்லும் அவர் தான் எதனைச்  சொல்ல அந்தப் பத்தியை எழுதினாரோ அந்தப் பகுதிக்கு வருகிறார்:

“பட்டியலில் உள்ள ஆண் படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக எழுதக் கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம்  எதிர்பார்க்கிறேன். ”

“ஆனால் பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.”

“இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலம்கெட்ட காலத்திலே?’  என்று ஜகா வாங்கிவிடுவார்கள்.”

நாஞ்சில்நாடன் அளித்த பட்டியலில் 28 பெயர்கள் உள்ளன, 27 பெயர்கள் படத்துடன் உள்ளன. அதில் 17 ஆண் படைப்பாளர்கள், 11 பெண் படைப்பாளர்கள். (சுகிர்தராணி, லீனா மணிமேகலை, குட்டி ரேவதி, உமா மகேஸ்வரி, தமிழ்நதி, ச.விசயலட்சுமி, மீனா, அ.வெண்ணிலா, சந்திரா, தி.பரமேசுவரி, சக்திஜோதி) “ஆண்படைப்பாளிகள் அனைவரும் சிறப்பாக எழுதக்கூடியவர்கள்” எனத் தெளிவாக, உறுதியாகக் கூறும் ஜெயமோகன் “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள்.” என அடிப்படை இல்லாத தகவலுடன் அவமதிப்புத் தாக்குதல் தொடுக்கிறார். இப்படி ஒரு தாக்குதலை இலக்கிய ஆய்வு, அல்லது ரசனை என்று எந்த குருமரபு இவருக்குச் சொல்லித்தந்தது.

ஜெயமோகன் தனது தாக்குதலை பொத்தம் பொதுவாக பெண் படைப்பாளிகள் மீது தொடுக்கவில்லை என்று காட்ட “பெண்களில் உமா மகேஸ்வரி என் நோக்கில் முதன்மையான படைப்பாளி. அதன்பின் சந்திரா. விடுபட்ட பெண்படைப்பாளிகள் என்றால் நான் ஏழெட்டு பேரைச் சொல்ல முடியும்.  ஆழியாள், பகீமா ஜகான், அனார் போல.” என்று மேலும் ஒரு பட்டியலை முன் வைக்கிறார்.  “பட்டியல் என்பது ஒரு ரசிகன் அல்லது திறனாய்வாளன்  தன் ரசனையின் அல்லது ஆய்வின்  அடிப்படையில் முன் வைக்கும் ஒரு தேர்வு.” என்று சொல்லிவிட்டு “பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.” என்று பெரும் “தத்துவக்” கேள்வியைக் கேட்கிறார்.

பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள் என்ற ஆண் திமிர் கொண்ட அடைமொழிக்கு தமிழ்-இந்தியப் பின்புலத்தில் என்னவெல்லாம் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம்   என வலியுறுத்தும் இந்தச் சைகைமொழி மிக இழிவான ஒரு தாக்குதல்.

இந்தப்பட்டியலில் இருப்பவர்கள் மீது பெயர் குறிப்பிட்டு செய்யப்படும் வக்கிரமான ஏச்சு. எழுதும் பெண்கள் எழுத்தைத் தவிர பல வகை உத்திகளைச் செய்துதான் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற இழிவான பொய் பெண் படைப்பாளர்களின் குடும்பங்கள், பணியிடங்களில் என்ன வகை செய்தியைக் கொண்டு சேர்க்கும் என்பதும், அது பெண் படைப்பாளர்களின் எழுத்துக்கான வெளியை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்பதும் தெரியாத அறிவீனம் எப்படி இலக்கியம் பற்றிய கருத்துரை வழங்கும் உரிமையை எடுத்துக் கொள்ளமுடியும்.

இந்தப் பட்டியலில் உள்ள பெண்-ஆண் படைப்பாளர்கள் அனைவருமே ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை, தொகுதிகளை அளித்தவர்கள்தான், தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருப்பவர்கள்.     “தான் சொல்லும்படி” எழுதவில்லை என்பதால் எழுத்து சாராத பலவகை  “உத்திகளைக்” கையாண்டுதான் பெண் படைப்பாளர்கள் ஊடகங்களில் இடம் பிடித்திருக்க முடியும் என்று  சொல்வதும், அதனைத் தன் வாசகர்களுக்கு ஒரு வக்கிர வதந்தியாகக் கொண்டு செல்வதும் ஊடகங்களால் உருப்பெருக்கப்பட்டு ஊடகங்களின் ஒப்பந்தக்காரராகச் செயல்பட்டு வரும் ஜெயமோகனுக்கு இலக்கியத் தவமாக எப்படித் தோன்றுகிறது.

இந்தப் பெண் படைப்பாளர்கள் உண்மையான “ஊடகப் பிம்பங்களாக” உருவாகி இருந்தால் அவர்களைப் “பெயர் சொல்லி” அவமதிக்க, ஆபாசச் சைகை செய்ய இவருக்கு வாய்ப்பு ஏற்பட்டு இருக்காது.  இவரே சொல்கிறார் “நாஞ்சில்நாடன் அவரது பட்டியலில் அதிகமாக அறியப்படாதவர்கள் என்ற விதியையும் அளவு கோலாகக் கொண்டாரோ என்றும் படுகிறது”. அதிகம் அறியப்படாதவர்கள், அதிகாரம் இல்லாதவர்கள், எழுதும் பெண்கள் என்ற கீழ்நிலை நோக்குதான் இவர்களைப் பெயர் சொல்லி அவமதிக்கும் அளவுக்கு ஜெயமோகனுக்கு தவவலிமையைத் தந்திருக்கிறது.

இந்தக் கொடுமைக்கிடையில் “விடுபட்ட பெண்படைப்பாளிகள் என்றால் நான் ஏழெட்டு பேரைச் சொல்லமுடியும்.” என்ற இலக்கிய நேர்மை செறிந்த அறிவிப்பு வேறு. இதன் மூலம் விடுபட்டவர்கள் உண்மையான உயர்ந்த பெண் படைப்பாளிகள் அவர்கள்தான் “சொல்லும்படி” எழுதக்கூடியவர்கள் என்ற குறிப்பைத் தருகிறார் ஜெயமோகன். அப்படியென்றால் “தமிழில் கிருத்திகாவுக்குப்பின் பெண்கள் எழுதிய எந்த இலக்கியப் படைப்பில் அவர்கள் முக்கியமான வாசக அனுபவத்தை அடைந்தனர் என்று எண்ணிப் பார்க்கட்டும். பெண்கள் எழுதிய எந்தப் படைப்பு சென்ற முப்பதாண்டு காலத்தில் தமிழில் பேசப்பட்டது என்பதை கணக்கிடட்டும்.” என்று முப்பதாண்டுகளாக எழுதப்பட்ட பெண்ணெழுத்துக்களை இவரால் மறுத்தொதுக்க முடிகிறது. இனவரைவியல், சிறுமரபு எழுத்துக்களைத் தந்துள்ள பாமா, சிவகாமி, சு.தமிழ்ச்செல்வி என்ற படைப்பாளர்கள் கடந்த இருபதாண்டு கால அளவில் தமிழில் குறிப்பிடத் தகுந்த பங்காற்றியிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு வழியாக பாமா, சிவகாமி, சல்மா ஆகியோரின் நாவல்கள் இந்திய இலக்கிய மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. “பெண்களை எழுத வேண்டாமென்று சொல்லவில்லை. நேர்மாறாக ‘எழுதுங்கள், தயவுசெய்து எழுதுங்கள்!’ என்றுதான் சொல்கிறேன். ‘மகத்தான ஆக்கங்களுடன் எழுந்து வாருங்கள்!’ என்கிறேன்.” என்று  வெற்று அறிக்கை வெளியிடும் முன் இவர்களுடைய எழுத்துக்களைப் படித்துவிட்டு பேசியிருக்க வேண்டும். சு.தமிழ்ச்செல்வி எழுதிய இனவரைவியல் கதைகளான  மாணிக்கம் (2002), அளம் (2002),  கீதாரி (2003), கற்றாழை (2005), ஆறுகாட்டுத்துறை (2006) போன்ற  நாவல்கள்  தற்கால இலக்கிய மாணவர்களுக்கு ஜெயமோகன் எழுத்துக்களை விட மதிப்பு மிக்கவையாக இருக்க முடியும். ஜெயமோகன் ஒருவகைக் கதையைச் சொல்கிறார் சு.தமிழ்ச்செல்வி  வேறுவகைக்  கதையைச் சொல்கிறார்.  இலக்கியம் வகைமைகளைக் கொண்டது, அனைத்து வகையான வெளிப்பாடுகளுக்கும் களம் அமைப்பது. “மகத்தான ஆக்கங்கள்” என்ற மதிப்பீடுகள் கருத்தியல் வன்முறைகள்.  அனைவருக்கும் பொதுவான இலக்கியம் என்பதெல்லாம் ஏமாற்றுக் கூச்சல்கள், அவரவர்  தேர்ந்து கொண்ட அரசியல் கருத்தமைவே அழகியலுக்கும், இலக்கிய அமைப்பு முறைக்கும் அலகுகளாக அமைகின்றன. வாசிப்பும், எழுத்தும் அரசியல் தன்னுருவாக்கத்தின் உத்திகள்.  தமிழ் போன்ற ஒரு பல்குடிச் சமூகத்தில் எழுத்தின் வகைமைக்கு சாத்தியங்கள் அதிகம்.

“ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக(த்) தங்களை முன் வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது.”  பெண்களாகத்  தங்களை முன் வைப்பது என்பதற்கு “இந்திய தரிசன”  மரபில்  என்ன     அர்த்தம்?  ஆண்மையம் உடைத்த பெண்ணாக, தன்னுரிமை கொண்ட பெண்ணாக  ஒருவர் தன்னை முன் வைப்பது என்பதே படைப்பூக்கம் கொண்ட ஒரு செயல்தான். பெண்ணாக இருந்து பேசுதல் என்பதே ஆண் மேலாதிக்க அமைப்பில் ஒரு கலகம்தான். அது அன்றி பெண்ணாகத் தங்களை முன் வைப்பதால் எங்கு இடம் கிடைக்கிறது? என்ன இடம் கிடைக்கிறது? எழுதினால் எழுதுபவர் என்ற பெயரைத் தவிர வேறு என்ன கிடைத்துவிடப் போகிறது? ஆண்கள் எழுதியும் பெண்கள் எழுதாமலும் என்ன இடத்தைப் பெறுகிறார்கள்?  அதிகாரம் கொண்ட ஒரு ஆணாக இருந்து எழுதுதல் வரலாற்றுக் கடமையாகவும்,  தன்னுரிமை கொண்ட ஒரு பெண்ணாக இருந்து எழுதுதல் அந்த வரலாற்றை உடைப்பதாகவும் பொருள்படும் ஒரு சமூகத்தில் பெண்ணெழுத்தின் இடம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய புரிதலின்றித் தன் வன்மத்தை மட்டுமே வெளிப்படுத்தி யிருக்கிறார் ஜெயமோகன்.

இந்தப் பட்டியலில் உள்ள ஆண் படைப்பாளிகளைப் பெண் படைப்பாளிகளுடன் எதிர் முரண்படுத்தி, விலக்கி அடையாளப்படுத்தி பெருமை  செய்வதாக நினைத்து அவர்களுக்கு அவமானத்தைக் கொண்டு வந்து  சேர்த்திருக்கிறார் ஜெயமோகன்.  பெண் படைப்பாளர்களை இழிவுபடுத்தி, வதந்திகளால் அவமானப்படுத்தி தங்களை நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு இந்தப் பட்டியலில் உள்ள ஆண் படைப்பாளர்கள் இருப்பார்கள் என்று தோன்றவில்லை. அந்த அளவுக்கு  ஆண் திமிரும், ஆண்மையவாத அறிவீனமும் கொண்டவர்களாக அவர்களும் இருப்பார்களேயானால் “பரந்தும் கெடட்டும் இந்தத் தமிழ் படைபாளர்கள்” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஜெயமோகன் தொடுத்த அவமதிப்புத் தாக்குதலை எதிர்த்துப் பெண் படைப்பாளர்களும் ஊடகவியலாளர்களும் பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் குரல் கொடுக்கத் தொடங்கிய பின் ஜெயமோகனிடம் இருந்து வெளிப்பட்ட வாசகங்கள், வாக்கியங்கள் அவருடைய ஆண்மையவாத, ஆண் முதன்மைவாத அறியாமையை மேலும் மேலும் புலப்படுத்துவதாகவும், தன் வாசகர்களைத் திட்டமிட்டுக் குழப்புவதாகவுமே உள்ளன.

“ஒருவர் தான் கொண்டிருக்கும் இலக்கிய மதிப்பீடுகளுக்கே விசுவாசமாக இருக்க வேண்டும். அவ்வடிப்படையிலேயே என் இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்து வருகிறேன்.” என்று தன் வாசகர்களுக்குச் சொல்லும் ஜெயமோகன் பெண்ணிய-பெண்ணிலை எழுத்தை எழுதும் பெண்கள் தாங்கள் கொண்டுள்ள இலக்கிய மதிப்பீடுகளுக்கு விசுவாசமாக இருக்க முடியும் என்பதையும் அது முற்றிலும் வேறுபட்ட கூறுகளால் அமைத்திருக்க முடியும் என்பதையும் முழுமையாக மறைத்து விடுகிறார். “இலக்கியம் என்னும் அமைப்பு மீதான பெரும் ஈடுபாடு, அர்ப்பணம்… நல்ல வாசகர்கள் அந்தரங்கமாக உணர்வார்கள்… அதை(க்) காலம் மதிப்பிடட்டும்…” என்றெல்லாம் மறைமொழிச் சொல்லாடலை முன்வைத்து தன் வாசகர்களிடம் தற்காலம் பற்றிய நினைவழிப்பை உருவாக்குகிறார். காலத்தின் மதிப்பீட்டுக்குத் தன்னை ஒப்படைக்கும் ஜெயமோகன் பெண் படைப்பாளர்களையும் காலத்தின் மதிப்பீட்டுக்கு விட்டு விட்டு ஜனநாயகப் பண்பாடு அறிந்த ஒருவராகத் தன்னை  வைத்துக் கொண்டிருக்கலாம்தானே?

தான் முன்பு வைத்த அதே வசையையும் அவமதிப்பின் வன்முறையையும் மீண்டும் அழுத்தமாக முன்வைக்கும் ஜெயமோகனின் குரல் இது “பெண் எழுத்தாளர்களைப் பற்றிய என் கருத்தும் இத்தகையதே. அது புதியதும் அல்ல. அவர்கள் அடைந்துள்ள ஊடக முக்கியத்துவம் மிகச் செயற்கையானது. வெறும் ஊடக உத்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இன்று ஊடகங்கள் அதிகமாக பெண்களை முன்னிறுத்த விழைகிறார்கள். காரணம் ஊடகங்களை அதிகம் பார்க்கும் பெண்கள் அவர்களை(க்) காண விழைகிறார்கள். ஆகவே பெண்கள் அதிக விளம்பரத்தை அடைகிறார்கள்.”  (இதனை வாசிக்கும்  தொடக்க கட்ட இலக்கிய, பண்பாட்டியல் மாணவர் ஒருவருக்குக்கூட எத்தனை அபத்தமான, அடிப்படையற்ற கருத்து இது என்பது புரிந்துவிடும்.)

பெண் எழுத்தாளர்கள் என்று ஆரம்பித்து இந்த ஆண் எழுத்தாளர் தொலைக்காட்சித் திரை நோக்கி தன் வாக்கியத்தை இழுத்துச் செல்வதை கவனிக்க வேண்டும். ஊடகங்களால் உருவாகி ஊடகங்களால் தன்னை உருப்பெருக்கிக் கொண்ட ஒரு ஆண் எழுத்தாளர் அதில் இயற்கையான முறை, செயற்கையான முறை ஏதோ உள்ளதாக ஒரு கண்டுபிடிப்பை முன் வைக்கிறார்.

பெண் எழுத்தாளர்களை ஊடகத்தை அதிகம் பார்க்கும் பெண்கள் காண விழைகிறார்களாம்.  ஊடகங்கள் பெண்களை அதிகமாக முன்னிறுத்த விழைகிறார்களாம். பெண்களை ஊடகங்கள் முன்னிறுத்தும் முறைக்கெதிரான பெண்ணியப் போராட்டம் இந்திய அளவில் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. பெண்களைக் காட்சிப் பொருளாக, நுகர்வுப் பண்டமாக, மூளைச் செயல்பாடற்ற இயந்திரங்களாக, ஆண்விதிகளை பேராசையுடன் பின்பற்றும் அடிமைகளாக காட்சிப்படுத்துவதற்கு எதிரான பெண்ணியக் குரல்கள் எழுத்தாகிக் கொண்டுள்ளன. ஊடகங்களை அதிகம் பார்க்கும் பெண்கள்  பெண் எழுத்தாளர்களைக் காண விழைகிறார்களா?  என்ன உளறல் இது!  பெண்கள் அதிக விளம்பரத்தை அடைகிறார்களா? விளம்பரப் பொருள்களாக விளம்பர இயந்திரங்களாக மாற்றப்படுகிறார்களா? என்ன சொல்கிறோம் என்பது தெரியாமல் எதையெதையோ எழுதிவிட்டு “நல்ல வாசகர்கள் அந்தரங்கமாக உணர்வார்கள்…” என்ற ஆன்மிக அடக்கம் காட்டுகிறார் ஜெயமோகன்.  அவருடைய செய்கைக்கு அவரிடம் இருந்தே ஒரு வாசகத்தை அடையாளமாகக் காட்டலாம் “வழக்கம்போல. எந்த ஒருவிஷயத்திலும்  ‘ஈடுபாடு, அர்ப்பணம், அந்தரங்கம்  என்ற  நிலைபாட்டை எடுத்துவிட்டு அதீத எம்பிக்குதித்தல்களை நிகழ்த்துவதுதான் நம்முடைய மரபாக மாறிவிட்டிருக்கிறது. புரிந்துகொள்ளும் முயற்சியோ அதற்கான கூரோ (கூறோ) பெரும்பாலும் காணக்கிடைப்பதில்லை.”

“பெண்களில் சிலர் மிதமிஞ்சிய கூச்சல்கள், அரசியல் கோஷங்கள் போன்றவற்றின் மூலம் ஊடகங்களில் தங்களை(ப்) பெண்களாக முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என புகழப்படுகிறார்கள், அனைத்து வகையான நிறுவன அங்கீகாரங்களையும் பெறுகிறார்கள். ஆனால் எதுவுமே எழுதுவதில்லை.” என்று சொல்லும் ஜெயமோகன் எங்கிருந்து இந்தத் தகவலை, தரவைப் பெற்றார் என்பதை அவரது வாசகர்களுக்குச் சொல்லியாக வேண்டும்.  பெண்களாகத் தங்களை முன் வைப்பதும், கூச்சல்களால், அரசியல் கோஷங்களால் கவனத்தைப் பெறுவதும் பெண்ணியப் போராட்டத்தின் ஒரு பகுதிதான். அதற்கு தயங்க வேண்டிய தேவை பெண்ணியலாளர்களுக்கு இல்லை. இவர்களைத் தமிழில் யார் புகழ்கிறார்கள்? பெண்ணியலாளர்களை அச்சுறுத்துவது, மிரட்டல் விடுவது, தனிப்பட்ட வாழ்க்கையில் குற்றமுனைப்புடன் ஊடுறுவி வலிகளை ஏற்படுத்துவது எனப் பெண்ணியத் தன்னிலை கொண்டவர்கள் மேலான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தபடியுள்ளன.

 தமிழில் பெண்ணிய, பெண்ணரசியல் தளத்தில் செயல்படும் பெண்கள் மிகக்குறைவு என்பதை நாம் அறிவோம். இதனை மீறிச் செயல்படும் பெண்களைப் பற்றித்தான் ஜெயமோகன் இந்த அறிவார்த்த அடிப்படையற்ற வசையை வைக்கிறார் “அவர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் எனப் புகழப்படுகிறார்கள், அனைத்து வகையான நிறுவன அங்கீகாரங்களையும் பெறுகிறார்கள்.” உண்மையில் பெண்ணெழுத்தும் பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்ச் சமூகத்தில் பெற வேண்டிய விகிதத்தில் கவனத்தைப் பெறுவது இல்லை. திரைத்துறையினர், ஊடக பூதங்கள் தவிர இங்குப் பொது நினைவில் யாரும் இருப்பதில்லை என்பதை திரைப்படப்புகழ் ஜெயமோகன் அறிய வேண்டும். “ஆனால் எதுவுமே எழுதுவதில்லை” எனப் பெண் படைப்பாளிகளைப் பற்றி இவர் குறிப்பிடுவது வலிந்து புகுத்தப்படும் பொய்யல்லவா? கதைகள், கட்டுரைகள், கவிதைகள், தொகுதிகள் எனத் தொடர்ந்து பெண் படைப்பாளிகள் தந்து கொண்டிருக்கிறார்கள்.

“இவர்கள் எழுத வந்தபோது ‘எழுதட்டும் பார்ப்போம்’ என்ற எண்ணம் இருந்தது சூழலில். நானும் அதைத்தான் சொன்னேன். இன்று இவர்களெல்லாம் சமூக ஆளுமைகளாக ஆகி சிம்மாசனங்களை அடைந்துவிட்டார்கள்.”

எழுதட்டும் பார்ப்போம் என்று விட்டார்களாம் இவர்கள். யார் இவர்கள்?  இருந்து பார்த்து தீர்ப்புச் சொல்ல இவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? சமூக ஆளுமைகளாகப் பெண்கள் மாறினால் மதிப்பளித்து இடம் கொடுங்கள்.  உங்களுக்கு மட்டுமே சிம்மாசனம் என்று எந்த வரலாறும் எழுதப்படவில்லை. “பொதுவாக எழுதச் சோம்பல்படுபவர்களின் ஊடகமாக உள்ளது இன்றைய புதுக்கவிதை. இந்தப் பெண்கள் கவிதை என்றபேரில் பத்துப்பதினைந்து வரிகளை மேலோட்டமாக எழுதி மடித்து மடித்து பிரசுரிக்கிறார்கள். அவை வெறும் சக்கையாக உள்ளன. வெற்றுப்புலம்பல்கள், அதிர்ச்சி மதிப்புக்கான தடாலடி வரிகள், சில்லறைப் பெண்ணிய கோஷங்கள்.”  என்று கூறும் ஜெயமோகன் கவனிக்க வேண்டும்.

பக்திப் பாடல்கள் தொடங்கி பாரதியின் “நல்லதோர் வீணை செய்தே நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ” வரை புலம்பல்கள்தான், “கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும் காதலித்து வேதனையில வாடவேண்டும்” என்ற ஆண்தமிழ் அழுகைகள் பண்பாட்டுத் தொன்மங்களாகி உள்ள ஒரு சமூகத்தில் பெண்கள் புலம்பினால் “வெற்றுப் புலம்பல்” ஆண்கள் புலம்பினால் காவியத்துயரம்.

அதிர்ச்சி மதிப்பு, தடாலடி வரிகள் இவையெல்லாம் ஆண்களின் எழுத்துக்களில் அதிகம் உள்ளவைதான். அது என்ன சில்லரை பெண்ணிய கோஷங்கள்? பெண்ணியம் என்றாலே சில்லரைத் தனம் என்று சொல்லும் ஒரு கூட்டத்தின் சில்லரைத் தனமான மதிப்பீடு இது. அறிவின்மையைக் கொண்டாடி, சாமியார்களை, ஆசிரம அதிபர்களைத் தொழுதுகொண்டு கிடக்கும் ஒரு சமூகத்திற்கு பெண்ணிய கோஷங்கள், தலித்திய கோஷங்கள், சமத்துவ அரசியலுக்கான கோஷங்கள் இன்னும் அதிகம் தேவையானவையே. அது உங்களுக்குத் தொந்தரவாக இருந்தால் எங்கானது இல்லை என ஒதுங்கிப் போகக் கற்றுக் கொள்ளுங்கள். “சோம்பல்படுபவர்களின் ஊடகமாக உள்ளது இன்றைய புதுக்கவிதை” என்பதை   ஜெயமோகன் கொண்டாடும் எல்லா ஆண் கவிஞர்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம்.

“இத்தனை பெண்கள் எழுதுகிறீர்களே தமிழில் உங்களால் ஏன் ஒரு நல்ல படைப்பை உருவாக்க முடியவில்லை என்ற வினாவை ஓரு விமர்சகனாக நான் எழுப்புகிறேன்.” ஜெயமோகன் நவீன பொருளில் விமர்சகர் அல்லர். அவர் கருத்துக்கூறுபவர்,  காலத்தின் பின்தங்கிப்போன தன் நம்பிக்கைகளின் அடிப்படையில் கருத்துக் கூறிக் கொண்டிருப்பவர். அவருடைய வாசகர்களின் அறியாமை, தேடுதலின்மை போன்றவையே அவரது முதலீடு. அதிக பக்கங்களில் தான் சொல்ல நினைப்பவைகளை திரும்பத் திரும்ப அவர் சொல்லும் போது  அறிவியக்கங்கள் பற்றிய அக்கரையற்ற சிலர் வியந்து விதிர் விதித்து தண்டனிட்டு நீங்கள் ஒரு சிந்தனையாளர், விமர்சகர் என்கிறார்கள். அவரும் அதனை நம்பி  அண்டசராசரங்களை அளவிட்டு விடை சொல்லுகிறார். நல்ல படைப்பு என்பது என்ன? அனைவருக்குமான பொதுவான படைப்பு என ஏதும் உள்ளதா என்பதைப் பற்றியெல்லாம் தமிழில் நிறைய பேசப்பட்டுள்ளது. இனியும் பேசலாம். அதற்கு முன் ஜெயமோகன் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான், அவர் சொல்பவை அவருடைய கருத்து மட்டுமே.

ஏன் ஒரு நல்ல படைப்பை அவரால் வாசிக்க முடியவில்லை என்று  கேட்டால் அவருக்கு கோபம் வரலாம். மராத்தியில் எழுதப்படும் ஒடுக்கப்பட்டோர் கதையும், ஆப்பிரிக்க மொழிகளில் எழுதப்படும்  பெண்வழிக் கதைகளும் தற்போது உலக இலக்கியங்கள். அதே தளத்தில்தான் அராபிய ஆண்வழிக் கதைகளும் வாசிக்கப்படுகின்றன. மகாஸ்வேதா தேவியின் மக்கள் போராட்டம் பற்றிய கதைகள் பின்காலனிய, அடித்தள மக்கள் வரலாற்று வாசிப்பில்  மதிப்பு பெறுகின்றன. இதில் நல்ல படைப்பு, குள்ள படைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. உங்கள் அரசியல்தான் உங்கள் அழகியல், அதிலிருந்து உருவாவது உங்கள் அறம். அர்ப்பணம், அந்தரங்கம், தவம் என்ற பூச்சாண்டிகளுக்குப் பயந்து எழுத்தைக் கைவிடும் அளவுக்கோ ஊடகங்களை உதறிவிடும் அளவுக்கோ இன்றைய பெண்ணியம் அறிந்த பெண்கள் இல்லை என்பதுதான் ஜெயமோகன் மற்றும் அவரது பக்தர் குழாமுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த ஆண்மையவாதக் கூட்டத்திற்குப் பெண்ணாக இருந்து எழுதுபவர்கள், செயல்பாட்டாளர்கள், மாற்றுச் சிந்தனையாளர்கள் எவராக இருந்தாலும் “இந்தப் பெண்கள்தான்”.  ஆண்களின் கூட்டுப் புனைவால் உருவாக்கப்பட்ட ஆணாக இருத்தலின்  மூலம் மட்டுமே வரலாறு, மரபு, வழக்காறு என்ற அடையாளங்களுடன் அதிகாரத்தை, அடக்குதலுக்கான உரிமையை, மேலாதிக்கத் தன்னடையாளத்தைப் பெற்றுக் கொண்ட இவர்களுக்கு மொழி, இலக்கியம், பண்பாடு, ஊடகம் அனைத்தும் ஆண்களின் களம். அதில் பெண்கள் ஒரு சிறு அளவில் இடம்பெற வேண்டுமானாலும் கடுமையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும், சோதனைகளைத் தாங்கி மேலெழ வேண்டும்,  இலக்கியத்தை ஒரு தவமாக மேற்கொள்ள வேண்டும், பிறகு இவர்களின் ஆசியையும் அனுமதியையும் பெற்று இலக்கிய முக்தியடைய வேண்டும்.

எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் என்ற குழுவினர் இணைந்து வெளியிட்ட “ஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக் கூட்டறிக்கை”  ஒன்று பெண்ணியம் இணையத்தளத்தில் வெளியாகி இருந்தது. அந்த அறிக்கைக்கு பதில் அளிப்பதாக மீண்டும் ஜெயமோகன் செய்திருந்த பதிவின் தலைப்பு  “பெண்களின் அறிக்கை”. மீண்டும் ஜெயமோகன் வசையையே தொடர்கிறார் “பெண்களின் எழுத்து பற்றிய என்னுடைய விரிவான  கருத்துக்களுக்கு(ப்) பதிலாக(ப்) பெண் எழுத்தாளர்கள் என(ச்) சிலர் எழுதிய கூட்டறிக்கை ஒன்றை வாசித்தேன். அவர்களில் நாலைந்து பேரை மட்டுமே நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவர்கள் பெரிதாக ஏதும் எழுதவில்லை என்பது என் எண்ணம்.” இந்த  வாசகம் முழுமையான வன்முறைத் தாக்குதல், இலக்கிய நடத்தை விதிகளுக்கு மாறான வக்கிரம் என்பது கூடப் புரியாத நிலையில் ஜெயமோகன் இருப்பதை நினைத்து வருத்தப்படுவதா, இல்லை இவர்கள்தான் தமிழின் இலக்கிய ஆளுமைகள் என்றால் நாசமாய் போகட்டும் தமிழும் இலக்கியமும் என்று ஆத்திரப்படுவதா என்று புரியவில்லை. ஏனெனில் ஜெயமோகன் “இலக்கியம் என்பது இத்தகைய நாலாந்தர அரசியல் வசை நடவடிக்கை மூலம்” நிகழ்வதில்லை என்று சொல்லிவிட்டு அதனையே மிகக்காத்திரமாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். இலக்கியம் “அர்ப்பணிப்பின், தவத்தின் விளைவாக நிகழ்வது” என அபத்த நாடக வசனம் எழுதிவிட்டு அவர் பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார். அவரது இணையப் பக்கங்களில் வெளிவந்த பல வாசகங்களைக் குறிப்பிட்டே அந்த அறிக்கை கண்டித்திருக்கிறது. ஆனால் ஜெயமோகன்  “சமகால இலக்கியத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியைப் பற்றி ஓர் அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் காழ்ப்பரசியல் சார்ந்த அபத்தமான அக்கப்போர்களில் இருந்து திரட்டிக்கொண்ட வெறும் வசையை மட்டுமே முன்வைக்கக்கூடிய இத்தகைய ஓர் எதிர்வினையை உண்மையில் நான் எதிர்பார்க்கவில்லை.” அந்த அறிக்கையில் உள்ள அபத்தமான அக்கப்போர்கள் எல்லாம் அவருடைய பக்கங்களில் இருந்து திரட்டப்பட்டவைகள் தான்.  சமகால இலக்கியம் சார்ந்த அரசியல் பற்றிய ஓர் அடிப்படைப்  புரிதல்கூட இல்லாமல் இவர் செய்துள்ள வசைக்கு எதிர்வினை இப்படித்தான் இருக்க முடியும்.

 “எழுத்தாளர் என்பவர் எந்த ஒரு எதிர்வினையையும் அறிவுத்தளத்தில்தான் நிகழ்த்த வேண்டும்.” என்று கூறும் ஜெயமோகன் அறிவுப்பூர்வமாக அருளியிருக்கும் வாக்கு இது “இந்தப்பெண் படைப்பாளிகள் எதையாவது வாசிக்கிறார்களா? எதையாவது தெரிந்துகொள்கிறார்களா? எந்த இலக்கியப் படைப்பைப் பற்றியாவது எழுதியிருக்கிறார்களா? அதைத்தான் கேட்கிறேன். ஒரு விமர்சகனாக. மிக மரியாதையான சொற்களில், எந்தத் தனிப்பட்ட எழுத்தாளர் பெயரையும் சுட்டாமல் அதை முன்வைக்கிறேன்.” எவ்வளவு பெரிய பொய் இது. பட்டியலில் உள்ள பெண் படைப்பாளிகள் பெயரைக் குறிப்பிட்டு வசையும் வன்முறையும் தொடுத்த இவர் மிக மரியாதையான சொற்களில் தன் கருத்தை முன்வைக்கிறாராம் “பட்டியலில் உள்ள ……. பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப் பிம்பங்களாக ஆனவர்கள்.” பெயர் குறிப்பிடாமல் அதோ அவர்கள் எனக் கைகாட்டிச் சொல்லிவிட்டதால் இவர் எழுதுவது தவத்தின் பயனாக மாறிவிடுகிறது.

இதற்கு நடுவில் அவருடைய வாசகர் திருக்கூட்டம் பெண் படைப்பாளர்கள், பெண்ணியலாளர்கள் பற்றிய அழுகிய, ஆபாச வாக்கியங்களை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை அவர் கொண்டாட்டத்துடன் கண்டு களித்துக்கொண்டிருக்கிறார். தன் வாசகர்களின் வெறிநோய்க்கு இவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஜெயமோகன் இலக்கிய மதிப்பீடு என்ற பெயரில் அரசியல் சார்ந்த, இடதுசாரி எழுத்துக்கள் மீது வைக்கும் கருத்துக்கள் பல்கிப் பெருகியுள்ள தற்கால இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றிய அறியாமையின்  வெளிப்பாடுகள். தமிழின் பெண் படைப்பாளிகள் மீது வைக்கும் வசைகளும்  வன்முறை சைகைகளும் தற்காலப் பெண்ணிய அரசியலுக்குப் பின் நேர்ந்த ஆண்வெறி நோயின் வெளிப்பாடுகள்.

தற்பொழுது நாம் செய்ய வேண்டியதெல்லாம் கருத்தியல் சார்ந்து, அரசியல் சார்ந்து இயங்குவதற்கான பொறுப்பினை ஏற்று இதுபோன்ற அடிப்படை தகர்ந்த இலக்கிய, கோட்பாட்டு புலம்பல் குழுக்களின் தர்க்கமின்மையை, அறியாமையை, அறிவுத் திரிபை ஒவ்வொரு கட்டத்திலும் புலப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.  தன்னுரிமை கொண்ட பெண்ணாக இருத்தலையே போராட்டமாக மேற்கொள்ள வேண்டிய ஒரு சமூகத்தில் ஆணாக இருத்தலின் நெடிய வரலாற்று வன்முறையை அறிக்கையிட்டாக வேண்டும்.  ஆணழிந்த களத்தின் இலக்கியத்தை, அரசியலை, அழகியலைக் கொண்டாடப் பயிலவேண்டும்.

நன்றி - பன்மை
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்