1926ல் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார் கிருஷ்ணம்மாள். சிறு வயதிலேயே சமூகத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு சிந்திக்க ஆரம்பித்தார். அவரது அம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, கடினமான பணிகளைச் செய்ய வேண்டியிருப்பதையும் கண்டார். ‘படிப்பே வாழ்க்கையை உயர்த்தும்’ என்ற எண்ணத்தில், ஏழ்மை நிலையிலும் உறுதியாகப் படிக்க ஆரம்பித்தார் கிருஷ்ணம்மாள் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடர்ந்து, காந்தியின் சர்வோதயா சங்கத்தில் இணைந்தார்.
அங்கேதான் சங்கரலிங்கம் ஜகன்னாதனின் அறிமுகம் கிடைத்தது. ஜகன்னாதன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்... படித்தவர். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றுக் கொண்டிருந்தவர். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்டு, சிறை சென்ற வரும் கூட. கிருஷ்ணம்மாளும் காந்தி, மார்டின் லூதர் கிங் போன்றவர்களைச் சந்தித்தார். கிருஷ்ணம்மாளுக்கும் ஜகன்னாதனுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டிருந்தது. இருவரும் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு திருமணம் செய்துகொள்வதென்று முடிவெடுத்
திருந்தனர்.
நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்குவதன் மூலம் காந்திய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று கிருஷ்ணம்மாளும் ஜகன்னாதனும் நம்பினார்கள். அதற்காகப் பல வழிகளில் உழைக்கவும் ஆரம்பித்தனர். அப்போது வினோபா பாவேயின் பூமி தான இயக்கத்தில் சேர்ந்தார் ஜகன்னாதன். நிலம் இருப்பவர்கள் தங்களின் நிலத்தில் ஆறில் ஒரு பகுதியை இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டி இருவரும் உழைத்தனர். அமைதியான வழியில் நிலங்களை மீட்டு, ஏழைகளுக்கு வழங்க ஆரம்பித்தனர்.
அரைப்படி நெல்லைக் கூலியாகக் கேட்டதற்காக, 42 தலித் மக்கள் கீழவெண்மணியில் தீக்கிரையாக்கப்பட்டனர். அந்த நிகழ்ச்சி கிருஷ்ணம்மாளை மிகவும் பாதித்தது. ‘உழுபவனின் உரிமை இயக்கம்’ தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலம் 13 ஆயிரத்து 500 பெண்களுக்கு நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. மண் குடிசைகளை மாற்றி 2 ஆயிரத்து 500 வீடுகள் கட்டித் தரப்பட்டிருக்கின்றன. பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் பல்வேறு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இறால் பண்ணைகளுக்கு எதிராகவும் இத்தம்பதி நெடுங்காலமாகப் போராடினர். மதுவிலக்குப் போராட்டங்களையும் நடத்தினர். இருவரும் இணைந்து 7 இயக்கங்களை ஆரம்பித்து, திறம்படச் செயல்படுத்தினார்கள். கிருஷ்ணம்மாள் மற்றும் ஜகன்னாதனின் சேவைகளைப் பாராட்டி, இந்தியாவிலும் உலக நாடுகளிலும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பத்மஸ்ரீ, மாற்று நோபல் பரிசு போன்றவையும் அடங்கும். தங்களுக்குக் கிடைத்த பரிசுத் தொகை அனைத்தையும் சமூகத்துக்கே செலவழித்தார்கள். 100 வயதில் ஜகன்னாதன் மறைந்தார். 88 வயதிலும் போராட்டங்களை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கிறார் அனைவராலும் அன்புடன் ‘அம்மா’ என்று அழைக்கப்படும் கிருஷ்ணம்மாள்!
நன்றி - தினகரன்
0 comments:
Post a Comment