/* up Facebook

Oct 10, 2014

பள்ளிப்பராயத்தில் மாணவர்கள் வழிதவறுவதை தடுக்கவேண்டும்


பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் பாடசாலை மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. இவ்வாறு பாடசாலை மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதனை தடுக்கவேண்டுமானால் தமது பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதிகூடிய கவனம் செலுத்தவேண்டியது இன்றியமையாததாகும்.

கடந்த மூன்றாம் திகதி மஹரகம றோயல் கல்லூரி கேட்போர் கூடத்தில் சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஒன்றில் கல்வி நடவடிக்கைகளை தொடர்வது குறித்து அறிவுறுத்தும் கருத்தரங்கு இடம் பெற்றிருந்தது. சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் நடத்தைகள் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு சிறுவர் தினத்தையொட்டியதாக இந்த நிகழ்வு இடம் பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தராமல் இருந்தால் அது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவேண்டும். மாணவர்களுடன் பெற்றோரும் வகுப்பு ஆசிரியர்களும் புரிந்துணர்வுடன் இருப்பதன் ஊடாக அவர்கள் நெறிதவறி பயணிப்பதை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்திருந்தார்.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் தொடர்பில் பாடசாலைகளுக்கு பெரும் பங்கு உள்ளது. பாடசாலைகளுக்கு மாணவ, மாணவியர் திடீரென வருகை தராது விடும்போது பாடசாலைகள் அது தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும். முதலாவது பாட வேளையில் இது தொடர்பில் ஆராய நேரம் ஒதுக்கப்படல் வேண்டும். வருகை தராத மாணவர்கள் தொடர்பில் அவர்களின் பெற்றோருடன் தொடர்பு கொண்டு காரணம் அறியவேண்டும். இதற்கு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மத்தியில் சிறந்த புரிந்துணர்வு அவசியமாகும். இன்று நாம் வாழும் உலகம் தொழில்நுட்ப வசதிகளினால் நிரம்பிவழிகின்றது. முகப்புத்தகம், இன்டர்நெட் ஊடாக நட்பு வட்டங்களை ஏற்படுத்திக் கொள்ளும் மாணவ, மாணவியர்கள் பாடசாலைக்கு வருவதாக கூறி பெற்றோரிடம் விடைபெற்றுக்கொண்டு உல்லாசங்களில் ஈடுபடுகின்றனர். இப்படியான பல சம்பவங்களை பொலிஸார் கண்டுபிடித்து மாணவர்களை எச்சரித்துள்ளனர். சிலருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்றும் வெள்ளவத்தைப் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு மாணவர்கள் வழிதவறிப்போவதனை தடுப்பதற்கு பாடசாலை ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்குமிடையில் தொடர்புகள் காணப்படுதல் அவசியமாகும். இவ்வாறு இருதரப்பினருக்குமிடையில் தொடர்பாடல் இருக்குமானால் மாணவர்கள் தவறான வழியில் செல்வதை தடுக்க முடியும்.
கடந்தவாரம், கண்டி நகரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் ஒன்றுக்குள் வைத்து பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வேன்சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். கண்டியிலுள்ள பிரபல மகளிர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவியே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த சாரதியை கைது செய்த பொலிஸார் விசாரணையை மேற்கொண்டபோது குறித்த மாணவிக்கும் வேன் சாரதிக்கும் இடையில் 2011 ஆம் ஆண்டுக்காலப்பகுதி முதல் காதல் தொடர்பு இருந்ததாகவும் இவர்கள் இருவரும் பல முறை உடலுறவில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேபோல் கடந்த வருடம் கொட்டாஞ்சேனைப்பகுதியிலுள்ள மகளிர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் இரு மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். வேன் ஒன்றில் மாணவிகளை அழைத்து சென்ற இளைஞன் ஒருவர் வத்தளைப்பகுதியில் உள்ள வீடொன்றிற்கு அவர்களை அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து மாணவிகளை மயக்கிய பின்னர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவமும் மாணவிகள் காதல் வயப்பட்டே இடம் பெற்றுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் 11வயது, 14வயது மாணவிகள் கடற்படையினரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 11வயது மாணவிக்கு இனிப்பு வழங்கி கடற்படை வீரர் ஒருவர் பல நாட்களாக பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாடசாலை செல்வதாக கூறி சென்ற இந்த மாணவியை கடற்படை வீரர் ஒருவர் ஆசை வார்த்தைபேசி இனிப்புக்களை வழங்கி இவ்வாறான துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். 15 தினங்கள் வரையில் பாடசாலைக்கு செல்லாத குறித்த சிறுமி இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்தது.

ஏழ்மைக்குடும்பத்தில் பிறந்த இந்த சிறுமி பாடசாலைக்கு செல்லாமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோதே இவ்வாறான துஷ்பிரயோகம் நடைபெற்றமை வெளிச்சத்திற்கு வந்திருந்தது. தற்போதும் இது தொடர்பான வழக்கு விசாரணை இடம் பெற்று வருகின்றது.

இவ்வாறாக பாடசாலை செல்லும் மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பல சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் வழிதவறி செல்லும் பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. ஒருபக்கம் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு மாணவிகள் உட்படுத்தப்படுவதுடன் மறுபக்கம் போதைவஸ்து போன்ற பாவனைகளிலும் மாணவர்கள் ஈடுபடுகின்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

மாணவர்கள் வழிதவறி செல்வதனை தடுக்கவேண்டுமானால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் புரிந்துணர்வுகளை வளர்க்கவேண்டும். அதேபோல் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமிடையில் தொடர்பாடல்கள் அதிகரிக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் போதைவஸ்து பாவனைகள் தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்குகள் நடத்தப்படுவதுடன் விழிப்பூட்டும் செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமானதாகும்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு மஹரகம றோயல் கல்லூரி கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதைப் போன்று நாடு தழுவிய ரீதியில் விழிப்புணர்வுகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் போன்றோர் மாணவர்கள் வழிதவறிச் செல்வதை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து தெரியப்படுத்த வேண்டும்.

வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர் கூறியதைப் போன்று பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தராதவிடத்து அது தொடர்பில் ஆசிரியர்கள் மிகுந்த அவதானம் செலுத்தவேண்டும். இவ்வாறு அவதானம் செலுத்தப்படும் போது மாணவர்கள் வழிதவறிச் செல்வதை தடுப்பது இலகுவானதாக அமையும்.

யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியிலும் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியிலும் மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு பல நாட்கள் உட்படுத்தப்பட்டமைக்கு ஆசிரியர்களின் கவனக்குறைவே காரணமாக அமைந்திருக்கின்றது. ஒரு மாணவி 15 தினங்கள் பாடசாலைக்கு வரவில்லையென்றால் அது குறித்து குறித்த வகுப்பு ஆசிரியர் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். அவ்வாறு உடனடியாக கவனம் செலுத்தாமையினாலேயே குறித்த சிறுமி பல நாட்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டநிலை ஏற்பட்டிருந்தது.

எனவே பாடசாலை செல்லும் மாணவ, மாணவிகள் விடயத்தில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் உரிய கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் விழிப்புணர்வுகளையும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலமே பள்ளிப்பராயத்தில் மாணவ, மாணவிகள் வழிதவறிச் செல்வதை தடுக்க முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்