/* up Facebook

Oct 20, 2014

‘விறலி விடு தூது!’ பெண்களைச் செதுக்கும் ஓர் அமைப்பு


குட்டிரேவதி... காத்திரமான தன் கவிதைகள் மூலம் கவனம் ஈர்ப்பவர்; தனித்துவமான எழுத்தின் மூலம் பெண்களின் உலகைப் பதிவுசெய்பவர்; 'மரியான்' படத்தில் பாடல்கள் எழுதியதன் மூலம், திரையுலகிலும் தடம் பதித்திருப்பவர்; தான் மட்டும் நுழைந்தால் போதாது... ஏராளமான பெண்களையும் திரையுலக படைப்பாளிகளாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 'விறலி விடு தூது’ எனும் அமைப்பையும் தொடங்கியிருப்பவர்.
''திரைத்துறையில் பி.ஆர்.ஓ. பணியிலிருக்கும் நண்பர் வாசுதேவன், அடிக்கடி போன் செய்து பல உதவிகளைக் கேட்பார். உதவி இயக்குநராக வேலை செய்வதற்கு நபர் வேண்டும்; இந்த இயக்குநருக்கு காதல் அல்லது த்ரில்லர் கதை ஏதும் இருக்கிறதா; இந்தக் கதைக்கு ஒன் லைனர் எழுதித்தர வேண்டும்... இப்படி பலவிதங்களில் கேட்டுக்கொண்டே இருப்பார்.

எப்போதும் கதைக்குப் பஞ்சம் இருப்பதான ஒரு தொனியையே இன்றைய சினிமாவில் பார்க்கிறோம். ஆனால், இலக்கியத்துறையில் இல்லாவிட்டாலும் திரைக்கதை வைத்திருக்கும் உதவி இயக்குநர்களும், அதற்கு ஒன் லைனர் எழுதித் தரக்கூடிய எழுத்தாளர்களும் நம் மத்தியில் நிறையவே இருக்கின்றனர். இவர்கள் சினிமாவின் தேவை, அதன் வடிவம் பற்றி நன்கு அறிந்தவர்களும்கூட. 'விறலி விடு தூது’ இதை முறைப்படுத்தும் ஓர் இடமாகவே இருக்கும். பெண்கள், பெண் படைப்பாளிகள் புனைவில் வல்லவர்களாக இருக்கின்றனர். அவர்களின் படைப்பாளுமையை முன்வைத்துதான் இந்த அமைப்பையே தொடங்கி இருக்கிறோம்.

விறலியர் என்றால், பாடும் வல்லமை உடைய பெண்கள் என்று அர்த்தம். இதை, கலை படைக்கும் பெண்கள் தொடர்பான ஒரு சொல்லாகப் பார்க்கிறேன். மேலும், தமிழ் இலக்கியம் காலங்காலமாக, கதை சொல்லல் மரபில் ஓங்கி இருந்தது. உதாரணமாக, சிலப்பதிகாரத்தைக் குறிப்பிடலாம். கதை சொல்லல் மரபையும் நவீன ஊடகமான சினிமாவையும் இணைக்கும் ஒரு சொல் இந்த அமைப்புக்குத் தேவைப்பட்டது. ஆகவே, இச்சொல்லைத் தேர்ந்தெடுத்தோம். எழுத்தாளர் தமயந்தி மற்றும் சில ஆண் எழுத்தாளர்கள் இதன் பின்னணியில் இருக்கின்றனர்!'' என்று தங்கள் அமைப்பு பற்றிப் பேசியவரிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்.

''இது, கதை மற்றும் திரைக்கதை துறையில் மட்டும் பெண் படைப்பாளிகளை உருவாக்குமா? திரைத்துறையின் மற்ற பிரிவுகளுக்கான பங்களிப்புகளும் உண்டா?''

''முதலில் கதை மற்றும் திரைக்கதை துறையில் மட்டும்தான் எங்கள் கவனம். காரணம், நிறைய மனிதர்களின் ஆற்றலையும், கோடிக்கணக்கில் பணத்தையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு படத்துக்கு, எதை கதையாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று பார்த்தால், பெரும்பாலும் அது இயல்பாகவே எந்த வகையிலும் சமூகத்தோடு ஒட்டாத, வெறுமனே தனிநபர் விருப்பங்களுக்கு உட்பட்ட கதைகளாகவே இருக்கும். சினிமா என்பது ஒரு கூட்டுருவாக்கம். எல்லோருக்கும் சமபங்கு பொறுப்பும், விளைவை அனுபவிக்கும் வாய்ப்பும் இருக்கின்றன. சினிமா என்றால், கதையைப் போலவே பணமும் ஒரு முதலீடு.

இளம்பெண்கள் சிலர், கதையை மட்டுமல்லாமல், அதன் திரைக்கதையையும் நேர்த்தியான வடிவில் உருவாக்கி வைத்திருக்கின்றனர். எப்படி தயாரிப்பாளரை அணுகுவது, அடுத்து என்ன செய்வது என்று வரும்போதுதான் ஏகப்பட்ட குளறுபடி. ஆக, முதலில் கதை மற்றும் திரைக்கதைதான் எங்கள் தேர்வு!''

''இந்த அமைப்பு மாற்று சினிமா முயற்சிகளை ஊக்குவிக்குமா?''

''மாற்று சினிமா முயற்சிகளை, வணிக சினிமாவின் தளத்தில் உருவாக்குவது என்பதுதான் எங்கள் நோக்கம். சமகாலத்திய அறங்களையும் அரசியல்களையும் கலைப்படைப்பாக்க முடியும். இதற்கு முதலீடு செய்ய, தயாரிப்பாளர்கள் முன்வருவதில்லை என்பதால் அவை மாற்று சினிமா என்று சொல்லப்படுகிறதோ என்கிற சந்தேகமும் தோன்றுகிறது. முதலீடு செய்யும் பணம் திரும்பக் கிடைப்பதற்கான அத்தனை அக்கறைகளையும் நேர்மைகளையும் நாம் கொள்ளவேண்டுமெனில், சரியான சமகாலத்துக்குத் தேவையான ஒரு நவீன கதையைப் படைப்பாக்குவதுதான் சரியாக இருக்கும்!''
''பெண் திரைக்கதை ஆசிரியர்கள் உருவானால் மட்டும் திரைத்துறையில் பெண்களின் நிலையில் மாற்றங்கள் வந்துவிடுமா?''

''உறுதியாக! பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும், படைப்பில் எப்படி வைக்க வேண்டும் என்பதற்கான முன்னறிவோ பட்டறிவோ இன்றைய ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு கிஞ்சிற்றும் இல்லை. திராவிட இயக்கத்தின் காலத்தில் உருவான படைப்புகளில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளில்கூட பெண்களின் ஆளுமையை முதன்மைப்படுத்தியிருப்பார்கள். இந்தச் சிறிய அளவு முற்போக்குத்தனம்கூட இன்றைய படைப்பாளிகளில் பலரிடமும் இல்லை. இலக்கியவெளியிலிருந்து சினிமாவுக்கு நகர்ந்த எழுத்தாளர்கள்கூட, சினிமாவின் பிரபல வெளிச்சத்தின் கூச்சத்தில் எப்படி காணாமல் போனார்கள், அதன் மாயக்கட்டங்களின் காய்களாகிப் போனார்கள், அதிகாரச் சுவைக்கு எப்படி இரையாகிப் போனார்கள் என்பது நாம் நன்கு அறிந்ததுதானே!

ஆக, எல்லா இடங்களிலும் மாற்றம் தேவைப்படுகிறது. இதைப் பெண்களால்தான் சாத்தியப்படுத்த முடியும். ஏனெனில், பெண்களுக்கு எதுவுமே சுலபமாகக் கிடைப்பதில்லை. ஒவ்வொரு முயற்சியும் முழுமையடைய கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. வாய்ப்பின், உழைப்பின், முயற்சியின் அருமை உணர்ந்தவர்கள் பெண்கள்!''

''ஏற்கெனவே, பெண் என்கிற அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஊடக வெளிச்சத்தைப் பெறுகிறார்கள்... பெண் படைப்பாளிகள் தரமான படைப்புகளை உருவாக்குவதில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். இந்நிலையில், திரைத்துறையிலும் தரமற்ற படைப்புகளைக் கொண்டுவந்துவிடுவார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்தால்?''

''பெண்களின் ஆளுமை மீது வன்மம் கொண்டு அமிலம் வீசும் பொதுச்சமூக மனம்தான் சில படைப்பாளிகளிடமும் இருக்கிறது. இயக்குநர்கள் பலரும், ’பெண் உதவி இயக்குநர்கள், பெண் உதவி எழுத்தாளர்கள் இருந்தால் சொல்லுங்கள். பெண்களைத்தான் பணியில் வைத்துக்கொள்ள விரும்புகிறோம். கலைநுட்பத்தையும், நேர்மையையும், உழைப்பையும் அவர்களால் முழுமையாக வழங்கமுடியும்' என்று என்னிடம் கேட்கிறார்கள். எனவே. மேற்சொன்ன குற்றச்சாட்டைப் புறக்கணித்து அவசியமான பணிகளைத் தொடர்வோம்!''

''திராவிட இயக்க சினிமா காலகட்டத்தில் வந்த நவீன சிந்தனைகளைக்கூட, இப்போதைய சினிமாவில் காண முடிவதில்லை. இந்நிலையில் பெண் திரைக்கதை ஆசிரியர்கள் உருவானால் மட்டும் உள்ளடக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுமா?''

''அப்போது இயக்கத்தில் இருந்தவர்கள் சினிமாவில் பணியாற்றியதால், திரை ஊடகத்தைப் பொது ஊடகம் ஆக்கி, மக்கள் முன் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் சமூக மாற்றுச் சிந்தனைகளையும் கலைப்படைப்பாக்கிக் கொடுத்தார்கள். இப்போது சினிமாவில் வேலை செய்யும் நவீன எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு, இயக்கம் என்றால் என்னவென்றே தெரியாது. தனிமனித பிம்பங்களைப் பேணும் அச்சத்துடனும், சுய நலத்துடனும்தான் இயங்குகிறார்கள். திராவிட இயக்கத்துக்கு இருந்த தேவையைவிட இன்று, மக்கள் இயக்கத்துக்கான தேவையும் அதைக் கலைப்படைப்புகளில் ஈடுபடுத்தும் மதிநுட்பமும் அதிகமாகத் தேவைப்படுவதை உணர்கிறேன். அதேசமயம், இன்றைய 'மக்கள் இயக்கங்களில்’ செயல்படுபவர்களும் சினிமாவின் கலை முக்கியத்துவத்தை உணராமல் இருப்பதும் ஒரு கெடுவாய்ப்பு. இந்தச் சமநிலை குலைவைச் சரிசெய்ய, 'விறலி விடு தூது' உழைக்கும்.''

-சுகுணா திவாகர், படம்: ஜெ.வேங்கடராஜ்

நன்றி - விகடன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்