/* up Facebook

Oct 22, 2014

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்!


தமிழ் எழுத்துலகில் பல முத்திரைகளைப் பதித்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

களத்திற்கே நேரடியாகச் சென்று, தன்னுடைய கதை மாந்தர்களைப் படைப்புகளில் கொண்டு வந்தவர் என்ற பெருமைக்கு உரியவர், தமிழ் எழுத்துலகில் பல முத்திரைகளைப் பதித்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.
தூத்துக்குடியில் பல காலம் தங்கியிருந்து, உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை நேரடியாகக் கண்டு, அதை வைத்து எழுதப்பட்ட  ‘கரிப்பு மணிகள்’ நாவல் இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்று.

1925 ஆம் ஆண்டு முசிறியில் பிறந்தவர். தனது 15 வயதில், மின் பொறியாளர் கிருஷ்ணனை மணந்தார். 80க்கும் மேற்பட்ட படைப்புகளைத் தமிழ் இலக்கியத்துக்குத் தந்துள்ளார். இவரது கடைசிக்காலம் துயரம் மிகுந்ததாக அமைந்தது. கணவர் கிருஷ்ணன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, 90வது வயதில் 2002 ஆம் ஆண்டு காலமானார். இவர்களுக்கு குழந்தை இல்லை. 

உடல் நிலை பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், ஆதரவற்றோர்-முதியோருக்கான ‘விஷ்ராந்தி’ இல்லத்தில் தங்கியிருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக, ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜம் கிருஷ்ணன், நேற்று காலமானார்.
கடைசிக் காலத்தில் தனக்கு மருத்துவ சிகிச்சை வழங்கிய ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தனது உடலை தானமாக வழங்குவதாக விருப்பம் தெரிவித்து இருந்தார் ராஜம் கிருஷ்ணன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழகத்தின் முன்னோடி பெண் எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான ராஜம் கிருஷ்ணன் காலமான செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதனை அடைகிறது. அவருக்கு புகழலஞ்சலி செலுத்துகிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. 

திருச்சி மாவட்டம் முசிறியில், சாத்திர சம்பிரதாயங்களில் பிடிப்பு மிக்க குடும்பத்தில் 1925ம் ஆண்டு பிறந்தவரான ராஜம், பெண்கள் வயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்துவைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, தமது 15வது வயதிலேயே கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். தொடர்ந்து பள்ளி சென்று படிக்கவும் அனுமதிக்கப்படவில்லை. ஆயினும் ராஜத்தின் வாசிப்பு தாகத்தைப் புரிந்துகொண்டு அங்கீகரித்த மின் பொறியாளரான கிருஷ்ணன் கதைப் புத்தகங்கள் வாங்கித்தருவது, எழுதுவதற்கு ஊக்குவிப்பது என்று ஒத்துழைத்தார். அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ராஜம், 16வது வயதிலேயே எழுதத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுகதை, நாவல், கட்டுரை என மூவகை எழுத்திலும் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை வளர்த்துக்கொண்டார் ராஜம் கிருஷ்ணன். பள்ளி சென்று முறையாகப் படித்திராத அவரது படைப்புகள் பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளத் தக்கவையாக அமைந்திருந்தன. நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் கடைசிக் கட்டத்தில் வளர்ந்து, விடுதலை பெற்ற இந்தியாவின் வளர்ச்சிப் போக்குகளோடு இணைந்து பயணித்த அவர், தம் சம காலத்தின் அரசியல், சமுதாய நிலைமைகளை உற்றுக் கவனித்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் தம் எழுத்துகளில் பதிவு செய்தார்.

குறிப்பாகப் பெண்ணடிமைத் தனத்திற்கும், உழைப்புச் சுரண்டலுக்கும் எதிரான ஆவேசம் அவரது எழுத்துகளில் உயிர்ப்புடன் வெளிப்பட்டது. படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்கு வாழும் மக்களோடு நெருங்கிப் பழகி உண்மை நிலைமைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டு, அந்த உணர்வையும், அவர்களது உண்மையான முன்னேற்றத்திற்கான லட்சியத்தையும் தம் எழுத்து வழியாகக் கொண்டுவந்தவர் ராஜம். எழுத்தோடு நின்றுவிடாமல் பலரது உரிமைப் போராட்டங்களுக்கும் தோள் கொடுத்தவர்.

சாகித்திய அகாதமி விருது, நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன் சர்வதேச விருது, கலைமகள் விருது, சோவியத் லாண்ட் நேரு விருது, திரு.வி.க. விருது உள்ளிட்ட பல விருதுகள் அவரைத் தேடி வந்தன. ஒரு விபத்தைத் தொடர்ந்து உடல் நிலையிலும் கடுமையான சோதனைகளுக்கு உள்ளானார். எனினும் மக்கள் மீதான அவரது நேசமும் சமுதாய மாற்றத்திற்கான தாகமும் கொஞ்சமும் மங்கியதில்லை.

கலை இலக்கியம் மக்களுக்காகவே என்ற கோட்பாட்டை உயர்த்திப் பிடித்து அதற்குத் தம்மையே ஒரு எடுத்துக்காட்டாகவும் வைத்துக்கொண்ட ராஜம் கிருஷ்ணன், சமத்துவ சமுதாய இலக்கை நோக்கி நடைபோடும் படைப்பாளிகளுக்கும் களப்போராளிகளுக்கும் ஒரு உந்துசக்தியாக என்றென்றும் திகழ்ந்திருப்பார்" என்று கூறியுள்ளார்.
நன்றி - விகடன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்