/* up Facebook

Oct 30, 2014

பால் நிலை சமத்துவத்தை நோக்கிய செயல்வாதப் பயணம்! - மீரா பாரதி

 

கிழக்கிலங்கையில் இருந்து பால் நிலை சமத்துவத்தை நோக்கி செயல்வாதப் பயணம் ஒன்றை மூன்றாவது கண் நண்பர்கள் கடந்த பத்தாண்டுகளாக முன்னெடுத்து வருகின்றனர். இப் பயணத்தில் பெறப்பட்ட அனுபவங்களினதும் கற்றல்களினதும் தொகுப்பாக பால்நிலை சமத்துவதை நோக்கிய ஆண்களின் பயணம் என்ற தலைப்பில் மூன்றாவது கண் வெளியீடாக வந்திருக்கின்றது. இந்த நூலின் முன்னுரையில் கலாநிதி சி.ஜெயசங்கர் குறிப்பிடுவதுபோல் இந்தப் பயணமானது எங்களுக்கு ஒரு வாழ்க்கை நெறியாக இருந்துள்ளது. வழமையாகத் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் நூல்களிலும் கட்டுரைகளிலும் மட்டும் எழுதிவிட்டு நடைமுறையில் வீட்டுக்குள் குடும்பத்திற்குள் அதற்கு எதிரான செயற்பாடுகளை கருத்துக்களை முன்வைப்பவர்களாகவே ஆண்கள் இருந்திருக்கின்றனர். இப்பொழுதும் இருக்கின்றனர். இதற்கு மாறாக தாம் என்ன எழுதுகின்றோமோ உரையாடுகின்றோமோ அதைப் பல்வேறு வழிகளில் தமது வாழ்விலும் நண்பர்கள் வாழ்விலும் நடைமுறைப்படுத்த மூன்றாவது கண் நண்பர்கள் முயன்றுள்ளனர். இவ்வாறான ஒரு முயற்சியில் தாம் பெற்ற அனுபவங்களை கதை, கவிதை, கட்டுரை, மற்றும் அரங்கு எனப் பல்வேறு படைப்புகளாக வடித்துள்ளனர்.

ஜெயசங்கர் அவர்கள் தனது முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “மனித சமூகங்கள் எதிர் கொள்ளும் இனம் மதம் மொழி வர்க்கம் சாதி என்கின்ற எந்தவகையான முரணப்பாடுகளிலும் போராட்டங்களிலும் அதன் இரு பக்கங்களிலும் ஆண்களின் இருப்பும் இயக்கமுமே இருந்து வருகின்றது. ஒடுக்குபவர்களாகவும் ஒடுக்கப்படுபவர்களாகவும் ஆண்களே தோற்றம் கொண்டிருப்பர். இதில் பெண்களது இடமும் குரலும் ஓரங்கட்டப்பட்டதாகவும் மௌனிக்கப்பட்டதாகவும் அல்லது பாதிக்கப்பட்டவராக காட்டப்படுவதன் ஊடாக ஆண்களின் தரப்புக்கு வலு சேர்ப்பவையாக வனையப்பட்டிருக்கும்.” இருப்பினும் “ஒடுக்கும் தரப்புள்ளும் ஒடுக்கப்படும் தரப்புள்ளும் பால்நிலை அடிப்படையில் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பெண்களது இடம் பால்நிலை சமத்துவத்துக்கான முன்னெடுப்புக்களில் வெளிப்படையாக நேரடியாக அவர்களது குரலாக வெளிப்படுகின்றது.” என்கின்றார். இந்த உண்மையானது சமூகத்தில் குறிப்பாக கடந்த கால ஈழப் போராட்டத்தில் பெரும்பாலும் உணரப்படவோ புரிந்து கொள்ளப்படவோ இல்லை. ஆகவே இதைப் புரிந்து கொள்வதற்கு நமது ஆண்மைய சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதையே மூன்றாவது கண் நண்பர்கள் ஒரு செயல் வடிவமாக வாழ்வு முறையாக முன்னெடுக்கின்றனர்.

இத் தொகுப்பில் முன்னுரை உட்பட பன்னிரெண்டு படைப்புகள் வெளிவந்துள்ளன. ச. ஸ் ரீபன், செ.ஜோன்சன், மோ. குகதாஸ், ஜோ.கருணேந்திரா ஆகியோரின் கவிதைகள் பாடல்கள் பின்வரும் தலைப்புகளில் வெளிவந்துள்ளன.

ஏய்!

வேண்டாம் வேண்டாம்

ஆதிக்க சிந்தனையை அகற்றுவோம்.

உன் விடுதலைக்காய் –

ஓயுமா?

நியாயக் கும்மி

இக் கவிதைகளின் கவித்துவம் தொடர்பாக நான் கருத்துக் கூறுவது பொருத்தமானதல்ல. ஆனால் இவை பால் நிலை சமத்துவம், ஆண்களின் அதிகாரம், சமூகத்தின் நியாயமின்மைகள், பெண்களில் நிலை மற்றும் விடுதலை என்பன தொடர்பாக குரல் கொடுக்கின்றார்கள். இதனுடாக தமது கோவத்தை வெளிப்படுத்துகின்றார்கள். பெண் விடுதலைக்கான உரிமைக்கான சமத்துவத்திற்கான ஆண்களின் குரல்களாக தமது பங்களிப்பாக இவை ஒலிக்கின்றன.

ஓவியர் நிர்மலவாசனுடனான சந்திப்பு என்ற தலைப்பில் கி.கலைமகள் அவருடன் மேற்கொண்ட நேர்காணல் ஒன்று உள்ளது. இதில் ஒரு பெண் ஓவியருக்கும் தனக்குமான வேறுபாட்டை கூறுகின்றார் நிர்மலவாசன். “நானும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஓவியங்கள் வரைகின்றேன். ஆனால் அவை பெண்கள், தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக, வரைகின்ற ஓவியங்களைப் போல ஆழத்திற்கு செல்வதில்லை என உணர்கின்றேன். இதற்கான காரணம் அவர்கள் அடி வாங்குவதைப் பார்த்து நான் வரைகின்றேன். அவர்கள் தாம் வாங்கிய அடியின் வலியை உணர்ந்து ஓவியம் வரைகின்றார்கள். இதுதான் அந்த இடைவெளி” என்கின்றார். ஆகவே பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை பெண்கள் உணர்வதுபோல் வெளிப்படுத்துவதுபோல் ஆண்களால் உணரவோ வெளிப்படுத்துவோ முடியாது. இது மிகவும் கஸ்டமான காரியம் என்கின்றார்.

எனது ஓவியங்களில் பொதுவாக ஆண்கள் விரும்புகின்ற மெல்லிய வெள்ளை நிறமுடைய “அழகான” பெண்கள் இருக்க மாட்டார்கள் என்கின்றார் நிர்மலவாசன். நான் வரைகின்ற ஓவியங்களில் உள்ள பெண்கள் பாதிக்கப்பட்ட முகங்களுடனையே இருப்பார்கள். இவை சாதாரண அம்மாக்களின் முகங்கள். சமூகத்தில் பிரதான ஊடகங்களில் கவனிக்கப்படாத புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலை பெண்களின் முகங்களையே வரைகின்றேன். இவர் ஒரு ஓவியராக மட்டுமல்ல ஆணாகவும் ஆசிரியராகவும் பால்நிலை சமத்துவத்திற்கான செயல்வாதத்தை தன் வாழ்வில் முன்னெடுப்பவராகவும் இருக்கின்றார். இச் செயற்பாடு பல மாற்றங்களை என்னிலும் என்னைச் சுற்றியிருப்பவர்களிலும் ஏற்படுத்துகின்றது. பெண்ணிலைவாதம் என்பது வெறுமனே கலைப் படைப்புகளில் மட்டும் வருவதில்லை. மேலும் அது வெறுமனே ஒரு வார்த்தை மட்டுமல்ல மாறாக வாழ்க்கை என்கின்றார்.

“பெண்ணிலைவாதச் சிந்தனைகள் என்னுள் வந்த விதம்” என தனது அனுபவத்தை துரை. கௌரிஸ்வரன் கூற, “பால்நிலைச் சமத்துவம் நோக்கிய எனது பயணம்” என தனது மாற்றத்திற்கான பயண அனுபவம் பற்றி ஜோ. கருணேந்திரா பதிவு செய்ய, “ஆளுமை கொண்ட ஆண்கள் பால்நிலை சமத்துவத்தை உள்வாங்கி வாழ்பவர்கள்” என சி. ஜெயசங்கர் வாழ்வியலுடன் இணைத்து நிறைவு செய்கின்ற மூன்று கட்டுரைகள் உள்ளன.men for 5

மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக போராட வேண்டியிருக்கின்றது. ஆகவே உலக வரலாறானது போராட்டங்களின் வரலாறாகவே இருக்கின்றது என்கின்றார் துரை. கௌரிஸ்வரன். பதின்மங்களின் இறுதியில் சமூக மாற்றம் போராட்டம் தொடர்பான சிந்தனைகளில் ஆர்வம் வந்தது. மார்க்சிய வழியிலான வர்க்க விடுதலையே மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான வழி என உறுதியாக நம்பிய காலங்கள் அவை. இந்த நேரத்தில் தான் பாரம்பரிய கூத்துருவாக்கம் மற்றும் கூத்து மீளுருவாக்கம் போன்ற ஆய்வுகளிலும் செயற்பாடுகளிலும் உதவியாளராக செயற்படும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதுவே என்னிடம் பெண்ணிய சிந்தனைகள் வேரூண்ட காரணமாகின. மானுட விடுதலையில் பெண்ணிய சிந்தனைகளினது முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டேன். மேலும் வன்முறையற்ற வழிகளில் அனைவரையும் இணைத்துப் பால் நிலை சமத்துவத்தையும் சமூக விடுதலையையும் அடைவதற்கான வழியை பெண்ணிய சிந்தனைகள் காட்டுகின்றன.

men for 6பால்நிலை சமத்துவம் என்பது வாழ்வில் நடைமுறைப்படுத்தப்பட ஆண்களை வன்முறையற்றவர்களாகவும் பால் நிலை அசமத்துவம் தொடர்பான புரிதல் உள்ளவர்களாகவும் மாற்றவேண்டும். இந்த செயற்பாட்டை பாடசாலை சிறுவர்களிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் வன்முறையற்ற அப்பாக்கள் எதிர்காலத்தில் உருவாவார்கள். இதை முன்னெடுக்க பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக அரங்கச் செயற்பாடுகளைப் பயன்படுத்தினோம். அதேவேளை அரங்கில் பங்குபற்றுகின்றவர்கள் இந்த மாற்றங்களை தமக்குள்ளும் கொண்டுவருவதுடன் தமது வாழ்விலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அடிப்படையான நோக்கமாக இருந்தது. ஆண்களின் இந்தக் குரல்கள் ஆதிக்க குரல்கள் அல்ல மாறாக ஆதரவுக் குரல்களே என்பதில் நாம் தெளிவாக இருந்தோம் என்கின்றார் துரை. கௌரிஸ்வரன்.

இந்த சமூகம் எதிர்பார்க்கின்ற ஒரு ஆணாக நான் வளர்வதற்கான சகல வாய்ப்புகளும் அதிகாரங்களும் எனக்கு கிடைத்தன என்கின்றார் ஜோ. கருணேந்திரா. எனக்கும் அது பெருமையாக இருந்தது. அதேவேளை எனக்கு கலை மீது இருந்த ஆர்வமும் என்னிடமிருந்த கலைத்துவ ஆற்றலும் மூன்றாவது கண் நண்பர்களுடன் இணைந்து செயற்பட வைத்தது. இந்த இணைவானது என்னில் பெரிய மாற்றத்தை உருவாக்க அடித்தளமிட்டது. சமூகம் எதிர்பார்க்கின்ற ஒரு ஆணாக வளர்வது என்பது பெண்களுக்கு எதிரானது என்பதைப் புரிந்து கொண்டேன். ஆகவே பால் நிலை சமத்துவத்தை சமூகத்தில் நிலைநாட்ட பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் செயற்பட வேண்டும் என்பதை உணர்தேன். இதற்கான மாற்றத்தை முதலில் என்னிலிருந்து ஆரம்பித்தேன். எனது குடும்பத்தில் ஆரம்பித்தேன். அதாவது வீட்டு வேலைகளில் பங்கெடுத்தேன். ஆனால் எனது இந்த மாற்றம் ஆரம்பத்தில் குடும்பத்தில் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் தொடர்ச்சியான எனது செயற்பாடும் அதற்கான விளக்கமும் இறுதியில குடும்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாறான ஆண்களின் செயல்வாதம் முதன் முதலாக இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உருவானது. இதற்கு மேலும் பங்களிக்கும் வகையில் “நியாயக் கும்மி” என்ற தலைப்பில் கும்மிப் பாடல்களை எழுதினேன். இவ்வாறு பல்வேறு வழிகளில் பால் நிலை சமத்துவத்தை நோக்கிய புரிந்துணர்வை வளர்க்க, செயற்பட என்னிடமும் சக ஆண்களிடமும் சிந்தனை மற்றும் வாழ்வியல் மாற்றங்களையும் உருவாக்கும் பயணத்தில் இருக்கின்றேன் என்கின்றார் ஜோ. கருணேந்திரா.

பால்நிலை சமத்துவத்தை உள்வாங்கி ஆண்கள் வாழ்வது பால்நிலை சமத்துவத்திற்கான பங்களிப்பாகும். ஆனால் இது மட்டுமல்ல அதன் நோக்கம். மேலும் இது ஆண் மற்றும் ஆண்மை பற்றிய புனைவுகளிலிருந்து ஆண்களை விடுவிக்கும் என்கின்றார் காலாநிதி சி. ஜெயசங்கர். இப் புனைவுகள் உண்மைக்குப் புறம்பானவை மட்டுமல்ல ஆண் பெண் இருவரையும் பலவீனப்படுத்துபவை. ஆண்மை என்பது ஆதிக்கம் கட்டுப்படுத்துதல் சுரண்டுதல் மற்றும் வன்முறை என்ற இயல்புகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் இணைந்து பகிர்தல் என்ற இயல்புக்கு இடம் இல்லை. ஆகவே ஆண்மை பெண்மை என்ற சமூக கட்டுமானம் மற்றும் புனைவுகளிலிருந்து நம்மை விடுவிக்கும் போதே பால் நிலை சமத்துவத்தையும் இணைந்து பகிரும் வாழ்தலையும் நோக்கி நாம் நகரலாம் என்கின்றார்.

பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான ஆண்களின் செயல்வாதம் என்ற செயற்பாடு 2004ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் கருவேப்பங்கேணியில் ஆரம்பமானது என செ. ஜோன்சன் குறிப்பிடுகின்றார். இச் செயற்பாடானாது ஆண்களினதும் சமூகத்தினதும் ஆதிக்கம் கட்டுப்பாடு அடக்குமுறை என்பவற்றிலிருந்து பெண்கள் மீள்வதை நோக்கமாகக் கொண்டது. இவை கலந்துரையாடல் அரங்கம் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தனது கட்டுரையில் இறுதியாக பல பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பெண்களை ஆண்களைப் போல வளர்தெடுக்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். இது உடன்பாடான ஒரு கூற்றல்ல. ஏனெனில் இந்த சமூகத்தில் ஆண் எவ்வாறு வளர்க்கப்படுகின்றார் என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. இது தொடர்பாக ஏற்கனவே சி. ஜெயசங்கர் ஆண் தன்மையின் பண்புகள் தொடர்பாகவும் அதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையில் ஆண் பெண் என்ற பால் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒவ்வொருவரும் சுயமாக தமது ஆற்றல் இயல்பு மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப வளர்வதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும். இதுவே ஆரோக்கியமான வளர்ச்சியையும் பால்நிலை சமத்துவத்தையும் உருவாக்கும்.

மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்கள் வட்டத்தின் பத்தாண்டுகள் நடைபெற்ற பால்நிலை சமத்துவம் நோக்கிய செயல்வாதப் பயணம் புகைப்படங்களினுடாக பதியப்பட்ட ஒரு கட்டுரையும் உள்ளது. இப் பயணமானது எவ்வாறு ஒரு கலந்துரையாடலாக ஆரம்பித்து அதிலிருந்து அரங்க வெளிப்பாடாகவும் வீதி நாடகமாகவும் ஓவியப் பற்றரையாகவும் வளர்ந்து பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக ஆண்களின் செயல்வாதமாக இயங்கியதைக் குறிப்பிடுகின்றார்கள். இதன் அடுத்தகட்டமாக சமத்துவத்திற்கான ஆண்களின் குரல் என மாற்றமடைந்து வளர்ச்சி பெற்றுள்ளது என்கின்றனர்.

இறுதியாக கமலா வாசுகியின் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருதலை நோக்கிய எமது பாதையை நாமே வடிவமைப்போம் என்ற கட்டுரை உள்ளது. இதை தனது முதுகலை மானிப்பட்டத்திற்காக ஆங்கிலத்தில் அவர் எழுதியுள்ளார். இதனை ஜோ. கருணேந்திரா அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இது முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களைத் சேர்ந்த ஆண்களுக்கான பயிற்சிப்பட்டறைக்கான கற்கைத் திட்டமாக எழுதப்பட்டுள்ளது. அதாவது ஆண்களைப் பிரச்சனையின் பங்காளிகளாகப் பார்க்காமல் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான பங்காளிகளாக கருதி இக் கலந்துரையாடல்கள், பயிற்சிகள், செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கோருகின்றது.

thinakural eaulaity sexஇலங்கையில் வீட்டு வன்முறைகளுக்கு எதிரான சட்டம் நிறைவேற்றபட்ட போதும், இவை ஒரு சமூகப் பிரச்சனையாகப் பார்க்கப்படுவதில்லை என்கின்றார் வாசுகி. மாறாக இவை கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே இன்றும் பார்க்கப்படுகின்றன. ஆகவே ஒருபுறம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வீடுகளுக்குள் இன்னும் குறையவில்லை. அதேவேளை வடக்கு கிழக்கில் வாழ்கின்ற பெண்கள் போரினால் ஏற்பட்ட வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறு இரட்டை வன்முறைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். மறுபுறம் ஆண்கள் தம்மளவில் பொதுவெளில் ஆயுததாரிகளாலும் அதிகாரத்திலுள்ளவர்களாலும் வன்முறைகளை எதிர்கொண்டபோதும் வீட்டினுள் நடைபெறும் வன்முறைகளின் காரணக் கர்த்தாக்களாக அவர்களே இருக்கின்றனர். இந்தப் புரிந்துணர்வின் அடிப்படையில் ஆண்களுக்கு வன்முறைகளினால் ஏற்படும் வலியை புரியவைப்பதற்காக மிகவும் கவனமாக உருவாக்கப்பட்ட கற்கை நெறி இது.

இப் பயிற்சியானது வன்முறைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் முகம் கொடுக்கும் அதிகபட்சம் இருபது ஆண்களைக் கொண்ட ஒரு குழுவிற்கான மூன்று நாள் பயிற்சிப் பட்டறையாக செயற்படுத்தக் கூடியது. பங்குபற்றுகின்ற ஆண்கள் பிரச்னைகளை தாமே அடையாளங் காணவும் அதற்கான தீர்வுகளையும் தாமே கண்டறியக் கூடியவகையில் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான ஆண்களின், அதாவது தமது, வன்முறைகளையும் மற்றும் பெண்களது உரிமைகளையும் புரிந்து கொள்ளச் செய்வதே இதன் பிரதான நோக்கமாகும். மேலும் வன்முறைக்கான காரணிகளான அதிகாரம், அரசியல் மற்றும் வர்க்க, இன, மத, சாதி, பால் வேறுபாடுகள் என்பவற்றை அடையாளங் காணுதல் என்பது இன்னுமொரு நோக்கமாகும். இதன் மூலம் ஒரே நபர் அதிகாரம் உள்ளவராக ஒரு வெளியிலும் அதிகாரம் அற்றவராக இன்னுமொரு வெளியிலும் இருக்கின்றார் என்பதைப் புரிந்து கொள்வது. இவ்வாறான ஒரு சூழலை எவ்வாறு வன்முறையற்று நேர்மறையாக எதிர்கொள்வது என்பதை அறிவதற்கும் கற்பதற்கும் அனுபவத்தினுடாக உணர்வதற்கும் இப் பயிற்சி பயன்படுகின்றது. இப் பயிற்சி நெறியானது பால்நிலை சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் காத்திரமான குறிப்பான பங்களிப்பை ஆற்றும் என நம்பலாம்.

பால் நிலை சமத்துவத்தை நோக்கிய செயல்வாதப் பயணத்தில் பிரதான முன்னெடுப்பாளர்களாக ஓவியரும் பெண்ணிநிலைவாத செயற்பாட்டாளருமான கமலா வாசுகியும் கலாநிதி சி.ஜெயசங்கரும் இருக்கின்றனர். இவர்கள் நமது நண்பர்களாக இருப்பது நமக்கு மகிழ்ச்சியும் பெருமையுமே. கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களை 1988ம் ஆண்டு குழந்தை சண்முகலிங்கம் மற்றும் பேராசிரியர் மௌனகுரு அவர்களும் வழிநடாத்திய அரங்கப்பயிற்சிப் பட்டறையில் சந்தித்தேன். பின் அவரும் நானும் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரே ஆண்டில் கல்வி கற்றறோம். நமது முதலாம் வருடம் முடிந்தவுடன் படுகொலை செய்யப்பட்ட செல்வி தற்கொலை செய்து கொண்ட சிவரமணி மற்றும் பல நண்பர்களுடன் இணைந்து பகிடிவதைக்கு (ராக்கிங்கு) எதிரான குழுவை உருவாக்கினோம். இதனுடாக புதிய மாணவர்களை பகிடிவதை (ராக்கிங்) இல்லாது வரவேற்க முயற்சித்தோம். கமலா வாசிகி அவர்கள் நாம் பல்கலைக்கழகத்தில் கற்றபோது சிரேஸ்ட மாணவராக இருந்தவர். ஆனால் இவருடனான பழக்கம் கொழும்பில் விபவியில் இவர் இணைப்பாளராக இணைந்தபோது ஏற்பட்டது.

இந்த நூலை வாசித்து முடித்தபோது ஒரு ஆணாக வன்முறையாளராக வன்முறைக்கு உட்பட்டவராக இந்தப் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என உணர்ந்தேன். புலம் பெயராது இலங்கையில் இருந்து இவர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கலாமே என ஏங்கினேன். அதேவேளை இனிவரப் போகின்ற எனது பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம் என்ற நூல் மட்டுமல்ல பிரக்ஞை ஒரு அறிமுகம் என்ற நூலும் மற்றும் பிரக்ஞையை எவ்வாறு மனிதர்களில் வளர்ப்பது என்ற எனது அக்கறையும் கூட எவ்வாறு மனிதர்கள் வன்முறையற்றவர்களாக வாழ்வது என்பதும் முரண்பாடுகளை எவ்வாறு ஆரோக்கியமாகத் தீர்ப்பது என்பதையும் நோக்கமாக கொண்டது. நாம் வேறு வேறு நாடுகளில் சூழல்களில் வாழ்ந்தபோதும் நமது நோக்கங்கள் சிந்தனைகள் ஒரே அலை வரிசையில் இருக்கின்றன என்பது மனதுக்கு மகிழ்வாக இருக்கின்றது. நாமும் இவர்களுடன் இணைந்து பயணிப்போமாக….


மீராபாரதி
தொடர்புகளுக்கு மூன்றாவது கண் – http://thirdeye2005.blogspot.ca/

எனது தொடர்புகளுக்கு. meerabharathy@gmail.com

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்